“பெரும்பான்மை” அபிப்பிராயம் தலைவரைக் கட்டுப்படுத்துமா?
பொதுவாக ‘கலந்தாலோசனை’ என்று மொழிபெயர்க்கப்படும் ‘ஷூறா’ முக்கியமானவொரு குர்ஆனிய எண்ணக்கருவாகும். முஸ்லிம்கள் தமது சமூக விவகாரங்களை ஒழுங்குசெய்யும் வேளை, கட்டாயமாகப் பின்பற்ற வேண்டியவொரு குர்ஆனியக் கட்டளை அது. எனினும் இன்று அது ஏறக்குறைய கைவிடப்பட்டுவிட்டவொரு நடைமுறையாகி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அல்லது குறைந்த பட்சம், மிகக் கேலிக்குரியவொன்றாக உருச்சிதைக்கப்பட்டிருக்கிறது.
முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் மன்னர்களும் “ஜனாதிபதிகளும்” அவர்தம் குடும்பங்களும் ஷூறாவின் ஆன்மாவிற்கு எதிராக, எந்தவொரு பெரிய எதிர்ப்பும் இன்றி, பல பத்தாண்டுகளைக் கடந்து ஆட்சியை தொடர்ந்து கொண்டிருப்பது இதற்கு மிக அவலமானதொரு எடுத்துக்காட்டாகும்.
அடுத்ததாக, ‘ஷூறாவிலிருந்து பிறக்கும் “பெரும்பான்மை” அபிப்பிராயம் தலைவரைக் கட்டுப்படுத்தாது; வேண்டுமெனில் அவர் அதனை எடுத்துக் கொள்ளலாம், அல்லது தனது சொந்த அபிப்பிராயத்தையோ அல்லது “சிறுபான்மை” அபிப்பிராயத்தையோ நடைமுறைப்படுத்தலாம்’ என்பதே மிகப் பெரும்பாலானோரின் புரிதலாகவுள்ளது. பெரும்பான்மையான செந்நெறிக்கால இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் கருத்தாகவும் இதுவே இருந்து வந்துள்ளது என்பதை நம்மால் மறுக்க முடியாது. எனினும் திருக்குர்ஆனின் முழுமொத்தப் பார்வையிலும், நபிகளாரின் பரவலான முன்னுதாரணங்களின் ஒளியிலும், ஷூறாவின் இலக்குகளை (மகாஸித்) முன்னிறுத்தியும் பார்க்கின் இவ்வபிப்பிராயம் தாக்குப் பிடித்து நிற்பது கடினம் என்றே தெரிகிறது.
உஹதுப் போர்ச் சூழல் தோன்றிய போது, மதீனா நகருக்கு உள்ளேயே நின்று கொரில்லா முறையில் போரிடுவதே பொருத்தமானது என்று நபியவர்கள் கருதினார்கள். ஆனால், நபித்தோழர்களிடம் கலந்தாலோசித்த போது, பெரும்பான்மை அபிப்பிராயம் அதற்கு எதிராக இருந்தது. நகருக்கு வெளியே சென்று மரபு முறையில் போரிடுவதையே பெரும்பான்மை நபித்தோழர்கள் விரும்பினர். அதற்குக் கட்டுப்பட்ட நபியவர்கள் உடனே தனது இல்லத்திற்குச் சென்று போருடை உடுத்தி வெளிப்பட்டார்கள்.
ஷூறா பற்றி இன்று பெரும்பாலானோர் கருதுவதே உண்மையாக இருந்திருப்பின், நபியவர்கள் ஒருவேளை தனக்குப் பொருத்தமானதென்று தோன்றிய முடிவையே செயற்படுத்தி இருப்பார்கள். ‘உஹது யுத்தம்’ வரலாற்றில் ‘மதீனா யுத்தம்’ என்று அறியப்பட்டிருக்க நேர்ந்திருக்கும். ஆனால் நபியவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இதில் நமக்குப் படிப்பினை உண்டு. இதையொத்த உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்ல முடியும்.
ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கையெழுத்திடுவதை பெரும்பாலான நபித்தோழர்கள் எதிர்த்த போதும், அதனை மீறி நபிகளார் உடன்படிக்கையை நிறைவேற்றினார்கள். ‘இது நாம் கூறவரும் கருத்துக்கு எதிராக அமையாதா?’ என்றொரு கேள்வி பிறக்கக் கூடும். அவ்வாறு அமையாது. தோழர்களின் எதிர்ப்புக்கு நபியவர்கள் அளித்த மறுமொழியை நீங்கள் உற்றுக் கவனிப்பீர்களாயின், அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு (வஹீ) இணங்கவே நபியவர்களின் அந்நடவடிக்கை அமைந்திருந்தது என்பது நன்கு புலப்படும்.
அல்லாஹ்வும் நபியும் குறித்தவொரு விவகாரத்தில் திடமாகத் தீர்மானித்துவிட்ட பிறகு, அதில் கலந்தாலோசனைக்கோ இரண்டாம் அபிப்பிராயத்துக்கோ கொஞ்சமும் இடமில்லை என்பதை திருக்குர்ஆன் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இவ்விவகாரத்தில் நபியவர்கள் கலந்தாலோசனைக்கே செல்லவில்லை. உடன்படிக்கை ஷரத்துகளை அறியவந்த நபித்தோழர்கள், தாமாக முன்வந்தே தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். எனவே, நாம் கூற வரும் கருத்தை ஹுதைபிய்யா விவகாரம் மறுப்பதாக அமையாது.
அண்ணலாரைத் தவிர மற்றவர்கள் என்று வரும்போது, வஹீ எனும் பேச்சுக்கே இடமில்லாததால் நாம் எடுத்துப் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல் எதுவென்பதில் சந்தேகம் தோன்றிட நியாயமில்லை.
சாராம்சத்தில் ஷூறா பற்றிய குர்ஆனியப் பார்வை இதுதான்:
‘சமூக விவகாரங்களைக் கூட்டாகக் கலந்தாலோசித்து, அதிலிருந்து கண்டடையப்படும் பிரதான அபிப்பிராயத்திற்கு அமைவாகத் தீர்மானம் எடுத்துவிட்ட பிறகு, தயக்கம் எதுவுமின்றி அல்லாஹ்வின் மீது பரிபூரண பொறுப்புச் சாட்டியவர்களாக செயலில் இறங்கிவிட வேண்டும். விளைவுகளை அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும். வெற்றியோ பின்னடைவோ அதனைப் பொருந்திக் கொள்ளவும் அவ்வனுபவத்திலிருந்து பாடம் படித்துக் கொள்ளவும் வேண்டும்.’
உஹதுக்குப் பின்னால் அவ்வனுபவத்தின் படிப்பினையை முஸ்லிம்களின் மனதில் நன்கு நிறுவுவதற்காக இறைவன் அருளிய சூறா ஆல இம்றானின் வசனங்கள் இதையே வலியுறுத்தி நிற்கின்றன. இதில் பொதிந்திருக்கும் இறைவனின் பேரறிவைக் கவனியுங்கள்.
மேலே வரையறுத்தவாறு கலந்தாலோசனை முடிவு எடுக்கும்போது, பிரத்யேகமாக தலைவர் மீது மட்டும் அன்றி, அனைவரின் மீதும் பொறுப்பு ஏற்படுகிறது. தம்முடைய பங்கேற்புடன் எடுக்கப்பட்டவொரு தீர்மானத்தை செயற்படுத்துவதில் அனைவரின் உள்ளங்களும் திடமாக ஒன்றிணைகின்றன. விளைவுகளுக்கு அனைவரும் கூட்டாகப் பொறுப்பாகிறார்கள். ஒருவரையொருவர் குறை கூறவோ, செயற்திட்டத்தில் மனமொன்றாமல் போகவோ உள்ள வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன.
* எல்லா விவகாரங்களிலும் கலந்தாலோசிக்க வேண்டுமா? அல்லது, குறிப்பிட்ட சில விவகாரங்களில் மட்டும் கலந்தாலோசித்தால் போதுமா?
* சமூக அங்கத்தினர் அனைவரிடமும் கலந்தாலோசிக்க வேண்டுமா? அல்லது, குறிப்பிட்ட சிலரிடம் கலந்தாலோசித்தால் போதுமா?
* அல்லது, சிலவற்றில் முன்னதையும் வேறு சிலவற்றில் பின்னதையும் நடைமுறைப்படுத்த வேண்டுமா? இதற்கான அளவுகோல் என்ன?
இவை போன்றவற்றை இறைவனும் அவனது திருத்தூதரும் நமது சிந்தனைக்கும் சிறந்த தெரிவுக்குமே விட்டுவிட்டார்கள். திருக்குர்ஆன் எப்போதும் வரையறைகளை மட்டுமே வகுத்துத் தரும்; விளக்கங்களை முஸ்லிம்களின் சிறந்த தெரிவுக்கு விட்டுவிடும் என்ற அதன் அடிப்படை இயல்புடன் இது கனகச்சிதமாகப் பொருந்துகிறது.
இஸ்லாத்தில் தலைவரைத் தேர்ந்தெடுத்த கையோடு, தீர்மானங்கள் எடுக்கும் செயல்முறையைப் பொறுத்தவரை மக்களின் அதிகாரம் முற்றிலுமாகக் குறுக்கப்பட்டு விடுவதில்லை. வஹீயின் அதிகாரத்திற்கு உட்பட்ட விவகாரங்களில் மட்டுமே கலந்தாலோசனைக்கோ பெரும்பான்மை அபிப்பிராயத்திற்கோ இடமிருப்பதில்லை. தீர்மானம் எடுக்கும் செயல்முறையில் மக்களையும் ஈடுபடுத்துவதன் ஊடாக, அறுதிச் செயல்திட்டத்தில் மக்களின் மனம் ஒன்றச் செய்யப்படுகிறது.
தம்மை உள்ளடக்கி, தமது கருத்துக்களை உள்ளீடாகக் கொண்டு எடுக்கப்பட்டவொரு முடிவு என்பதாக ஒரு பொறுப்புணர்வும், அதை ஊக்கத்துடன் செயல்படுத்தி வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்ற ஆரோக்கியமான சூழலும் இதில் ஏற்படுத்தப்படுகின்றது. ஒருவேளை, விளைவுகள் பாதகமாக அமைந்துபோகும் சந்தர்ப்பங்களில், ஒருவர் மற்றவர் மீது குறைபட்டுக் கொள்ளும் நிலை இதன் மூலம் வெகுவாகத் தவிர்க்கப்படுகிறது.
இதுவெல்லாம் ஷூறாவை இறைவன் கடமையாக்கியுள்ளதற்கான அடிப்படை நோக்கங்கள் (மகாஸித்) என்பதை இதனோடு தொடர்புடைய திருக்குர்ஆன் வசனங்களையும் நபிவாழ்வின் முன்மாதிரிகளையும் தொகுத்துப் பார்க்கும் போது நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
இதன் மறுதலையாக, கலந்தாலோசனை செய்துவிட்டு அதில் தெரிவிக்கப்படும் அபிப்பிராயத்திற்கு நேரெதிரான முடிவை தலைவர் செயல்படுத்துவாராயின், அது அவருக்கும் மக்களுக்கும் இடையிலான உறவை தீவிரமாகப் பாதிக்காதா? பாரதூரமான விளைவுகளுக்கு வழிகோலாதா? பிறகு, கலந்தாலோசனை கடமையாக்கப்பட்டதற்கு அர்த்தம் தான் என்ன?
இறையாணைகளின் விடயத்தில் மட்டும் தான் இஸ்லாம் கேள்விக்கிடமற்ற கீழ்ப்படிதலை கோருகிறது. மற்றனைத்து விவகாரங்களிலும் அறிவு ரீதியாகவும், தர்க்க ரீதியிலும் உரையாடி, முரண்பட்டு, மெருகேறி இறுதியில் பெரும்பான்மை உடன்பாடு காணும் தீர்மானத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டுமென்றே கோருகிறது.
எடுக்கப்பட்ட முடிவை செயல்படுத்தும் விடயத்தில் இஸ்லாம் அனைவரின் மீதும் பொறுப்புணர்வை சுமத்த நாடுகிறது. தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்ட பிறகு, விளைவுகளை அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டிவிட்டு செயலில் இறங்கிவிடவே அது நம்மைக் கோருகிறது. விளைவுகள் சாதகமாக இருந்தாலும் சரி, பாதகமாக இருந்தாலும் சரி – ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு முடங்கிவிடாமல், கிடைத்த அனுபவத்திலிருந்து படிப்பினை பெற்றுக் கொண்டு முன்னகர்ந்து செல்லப் பணிக்கிறது.
ஒரு தலைவர் ஷூறாவின் அபிப்பிராயத்தை கொஞ்சமும் பொருட்படுத்தாது தனிச்சையாக தொடர்ந்து நடந்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நம்மில் பெரும்பாலானோர் கொண்டுள்ள கருத்தின்படி பார்த்தால், இப்போது மக்களின் முன்னாள் உள்ள தெரிவு என்ன? அமைதியாக அவரின் எதேச்சதிகாரத்துக்கு கீழ்ப்படிந்து போவது மட்டும் தான் சாத்தியம் என்றாகிறது. நிலைமை முற்றிலும் கைமீறிச் சென்று, தலைவர் மிகத் தெளிவான இறையாணைகளுக்கு மாறுசெய்யும்போது மட்டும் தான், மிகுந்த பலாத்காரத்தை பிரயோகித்து அவரைப் பொறுப்பிலிருந்து இறக்க முடியும் என்ற நிலைமை தோன்றும்.
ஆனால், கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ள நிலைப்பாட்டின் அடிப்படையில் பார்ப்பீர்களாயின், அப்படியொரு விரும்பத்தகாத சூழலே உருவாக முடியாத வகையில் ஆரம்பத்திலேயே அதன் வாசல் அடைக்கப்பட்டு விடுகிறது. ஷூறாவின் அடிப்படையிலேயே தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதன் பிறகான விவகாரங்களும் ஷூறாவின் அடிப்படையிலேயே நடத்திச் செல்லப்பட வேண்டும். குர்ஆன் மீது ஒரு முழுமொத்தப் பார்வை பார்ப்பீர்களாயின் நீங்கள் இந்த முடிவையே கண்டடைவீர்கள்.
அதே போல், வஹீ சம்பந்தப்பட்ட விடயங்கள் நீங்கலாக, நபிகளாரின் நடத்தை முன்மாதிரியும் இதையே வெளிப்படுத்தி நிற்கின்றது. ஒருவகையில் பார்த்தால், இஸ்லாம் எனும் தீனின் பாதுகாப்பையும் கூட அல்லாஹ் ஷூறாவுடன் பிணைத்து வைத்திருக்கிறான் என்று நம்மால் கூற முடியும்.
இதனை இமாம் ஹுசைனின் ஷஹாதத் பற்றிய கட்டுரையில் மௌலானா மௌதூதி திறம்பட விளக்கியிருக்கிறார். அதாவது, ஷூறா உயிரோடிருக்கும் நிலையில் தீயவர் ஒருவர் ஆட்சிக்கு வந்து விட்டாலும் கூட அவரால் தீனுக்கு பெரிதாக ஒன்றும் தீங்கிழைத்து விட முடியாது. ஏனெனில், அவரது தீய முயற்சிகளின் ஒவ்வொரு எட்டிலும் அவர் ஷூறாவின் முட்டுக்கட்டையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், ஷூறாவை செயலற்றுப் போகச் செய்துவிட்டால் அந்தத் தீய ஆட்சியாளரை தடுத்து நிறுத்தும் வழி எதையும் நீங்கள் காண மாட்டீர்கள். நிலைமை முற்றிலும் கைமீறிச் சென்ற பிறகு ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டே அவரை பொறுப்பிலிருந்து அகற்றுவது சாத்தியமாகும். அத்தகைய கிளர்ச்சியினால் சமூகத்திற்கு விளையக்கூடிய பாதகங்களை கருத்தில் கொண்டு, வேறுவழியின்றி அமைதியாகப் பணிந்து போக வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக வேண்டி வரும். இவ்வாறு தான் ஃகிலாஃபத் மன்னராட்சியாக உருமாற்றப்பட்டு இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தலைவர் என்பவர் சகலகலா பராக்கிரம நாயகராக இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. இருந்தால் மகிழ்ச்சிதான். பொதுவாக அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே அதனை எதிர்பார்க்க முடியும். ஆனால், இஸ்லாமிய வாழ்வொழுங்கு அதனை நிர்பந்தமான முறையில் சார்ந்திருப்பதில்லை. ஏனெனில், ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல் ஒவ்வொரு முக்கிய விவகாரமும் கலந்துரையாடப்பட்டு பெரும்பான்மை உடன்பாட்டுடனே செயலுக்கு வரும். ‘ஒரு மனித நாடகத்திற்கு’ அங்கு இடமிருக்காது.
எனவே என்னைப் பொறுத்த வரை பிரச்சினை தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இல்லை. மாறாக, ஷூறாவின் உண்மைப் பொருள் மறக்கடிக்கப் பட்டிருப்பதில் தான் இருக்கிறது. தலைவரைத் தேர்ந்தெடுத்துவிட்ட பிறகு அனைத்தையும் அவர் பார்த்துக் கொள்வார் என்பது போன்ற எதிர்பார்ப்பு நாம் ஏற்கனவே விளக்கிய ஷூறா ஒழுங்குடன் பொருந்துவதல்ல.
தலைவருக்கு இருக்க வேண்டிய சிறப்புத் தகுதிகளை நான் முற்றாக மறுக்க வில்லை. தலைவரின் மீது இயல்பு மீறிய வகையில் சார்பு வைப்பதையே சரியானதல்ல என்று தெளிவு படுத்தினேன். இதுவும் கூட ஷூறா பற்றிய சரியான புரிதல் இல்லாமையிலிருந்தே முகிழ்க்கிறது என்று கூட நம்மால் வாதிட முடியும்.
மனிதப் பலவீனங்களால் தோன்றுவதற்கு வாய்ப்புள்ள பிரச்சினைகளை எந்தவொரு அமைப்பொழுங்கினாலும் முற்றாகத் தவிர்த்து விட முடியாது. எனினும் அத்தகைய தருணங்களிலும் கூட, பாதகமான விளைவுகள் பாரதூரமனவையாக மாறி விடாமலிருக்க என்ன வகையான பொறிமுறைகளை அது கொண்டிருகிறது என்பதே இங்கு முக்கியம். “பெரும்பான்மை அபிப்பிராயம் தலைவரைக் கட்டுப்படுத்தும்” என்ற விடயமே அதனளவில் தீய தலைவர்களுக்கு முன்னால் ஒவ்வொரு எட்டிலும் முட்டுக் கட்டைகளை இடும்.
ஏனெனில், ஷூறாவில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலானோரை அநீதியான முறையில் தலைவர் தன் பக்கம் இழுத்துக் கொள்வதென்பது அவ்வளவு எளிதானவொரு காரியமல்ல. அப்படிச் செய்ய முயலுவாரெனில், அவர் விரைவிலேயே அம்பலப்பட்டுப் போவார். அதையும் மீறி அவ்வாறு செய்ய முடிகிறது எனில், அதன் பொருள் அடிப்படையிலேயே சமூகத்திலும் ஷூறாவின் உறுப்பினர்களிடத்திலும் வேறு ஏதோ பெரிய பிரச்சினை இருக்கிறது என்பதாகும். அது என்னவென்று இனம் கண்டு அதனைத் தீர்க்க முயற்சிப்பதே நம் முன்னுள்ள ஒரே வழியாக இருக்கும்.
ஷூறாவின் செயற்பாடுகள் மக்களின் பார்வையை விட்டு முற்றிலும் மறைந்ததாக இருத்தலாகாது. தலைவரும் பிற பொறுப்புகளை வகிப்போரும் இறைவனுக்கு பதில் கூறக் கடமைப்பட்டிருப்பது போன்றே மக்களுக்கும் பதில் கூறக் கடமைப்பட்டவர்கள் என்பது தான் இஸ்லாமிய நோக்கு. எனவே, மக்களும் ஷூறாவின் செயற்பாடுகளை உற்றுக் கவனித்து வருவார்கள். ஷூறாவினுள் ஆரோக்கியமற்ற சூழல் மோசமடையும் பட்சத்தில் மக்கள் அதில் தலையிட்டு சரி செய்ய வேண்டும். அவசியம் எழுந்தால், தலைவரை அகற்றிவிட்டு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதாகவும் அது அமையலாம்.
அடுத்தது, அனைத்தும் இறைவனின் பிரசன்னத்தில் நடந்து கொண்டிருக்கிறது; அவசியம் ஏற்படுகையில் அவனுடைய தலையீடு கண்டிப்பான முறையில் ஏற்படும் என்கிற “தக்வா” உணர்வைத் தான் இஸ்லாம் இதற்கான அருமருந்தாக முன்வைக்கிறது. இஸ்லாம் மற்ற மதச்சார்பு சித்தாங்களைப் போல் இறைவனின் பாத்திரத்தை மறுமைக்கென்று மட்டும் ஒதுக்கி வைத்து விடவில்லை. மதச்சார்பற்ற சித்தங்களிலோ இறைவனுக்கு எந்தவொரு பாத்திரமும் இல்லை. இது விரிவாகத் தனியே கலந்துரையாட வேண்டிய ஒரு விடயம்.
“ஒருவேளை தவறான நபர்கள் ஷூறா உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால், இஸ்லாமிய அமைப்பு மற்றொரு கோமாளி பாராளுமன்ற அமைப்பாக மாறிவிடாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?” என்று கேட்கப்படுகிறது. ஷூறா உறுப்பினர்கள் சரியாகத் தேர்ந்தடுக்கப் படாமைக்கான காரணம் என்னவென்று அறிந்து சரி செய்வதே இப்பிரச்சினைக்குத் தீர்வாகும். அது கட்டுரையில் விளக்கப்பட்டிருக்கும் ஷூறாவின் தன்மையை எந்த விதத்திலும் கேள்விக்குட்படுத்தாது.
அதே போல், மிகப் பெரும்பான்மை ஷூறா உறுப்பினர்களும் “தவறாக” தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றால் அது சமூகத்தின் சீரழிந்த ஆரோக்கிய நிலையைத்தான் குறிக்கிறது. அதற்கான மூல காரணம் எதுவென்று இனம் கண்டு அதனைச் சரிசெய்ய முயற்சிப்பதே அதற்குப் பொருத்தமாக இருக்கும்.
“பெரும்பான்மை அபிப்பிராயம் எப்போதும் சரியாகவே இருக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை அல்லவா?!” என்று சிலர் கேள்வியெழுப்ப முயலுகிறார்கள். ‘தலைவரின் கருத்து மட்டும் எப்போதும் சரியாகவே இருக்கும்’ என்பதற்கும் தான் உத்தரவாதம் இல்லை, அல்லவா?! எனவே, இது சரியானவொரு வாதமில்லை. இதனைக் கருத்தில் கொண்டுதான், இஸ்லாம் “ஷூறாவிலிருந்து பிறக்கும் பெரும்பான்மை அபிப்பிராயம் தலைவரைக் கட்டுப்படுத்தும்” என்கிறது.
ஷூறாவில் கண்டடையப்படும் முடிவு பிழையாகிப் போகும் பட்சத்தில், ஒருவர் மற்றவரைக் குறைகூறி, பிளவுபட்டுப் போவதற்கான சூழலை இதன் மூலம் இஸ்லாம் வெகுவாகக் குறைக்கிறது. எடுக்கப்பட்ட முடிவின் விடயத்தில் அனைவருக்கும் பங்குள்ளது என்றொரு பொறுப்புணர்வு இதில் உருவாக்கப்படுகின்றது. யாரும் தனிச்சையாக நடந்து கொண்டார்கள் என்ற பேச்சுக்கே இதில் இடமில்லாமல் செய்யப்படுகின்றது. எவ்வகையில் பார்த்தாலும், இதுவே சரியான இஸ்லாமிய நிலைப்பாடாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது.
இறைவனே நன்கறிந்தவன்!