காணொளிகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

86 ஆண்டுகள் தண்டனை: சிறையில் வதைப்படும் Dr.ஆஃபியா

Loading

ஆஃபியா சித்தீக் எனும் பெண் டாக்டருக்கு 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, உலகின் மிகக் கொடூரமான சிறைகளில் ஒன்றான FMC கார்ஸ்வெல் சிறையில் அவர் வாடிக்கொண்டிருக்கிறார். Prisoner 650, Grey Lady, தேசத்தின் மகள் என அவருக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. ஆஃபியாவுக்கும், அவருடைய பிள்ளைகளுக்கும், குடும்பத்தினருக்கும் நேர்ந்த கொடூரத்தை வார்த்தைகளைக் கொண்டு நம்மால் விளக்க முடியாது.

Dr.ஆஃபியா யார், அவர் எப்படி சிறை சென்றார், அவரை சிறைவைத்திருப்பது யார், என்ன காரணம் அதற்குச் சொல்லப்படுகிறது என இங்கு பார்ப்போம்.

ஆஃபியா சித்தீக் பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்டவர். தனது மேற்படிப்பைத் தொடர்வதற்காக 18ஆம் வயதில் அமெரிக்கா சென்றார். MIT என்ற கல்வி நிறுவனத்தில் 1995ஆம் ஆண்டு உயிரியல் படிப்பை நிறைவு செய்த ஆஃபியா, பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 2001ஆம் ஆண்டு நரம்பியல் அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றார். அதே வருடன் நடந்த செப்டம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து அவர் தன் சொந்த நாட்டுக்கே திரும்பினார்.

நிறைய ஆய்வுக் கட்டுரைகள் எழுதியது, இஸ்லாமிய அழைப்பாளராகச் செயல்பட்டது என மிகவும் துடிதுடிப்போடும், அறிவார்ந்தும் செயல்பட்டு வந்தவர் ஆஃபியா. 1995ல் அவர் அமெரிக்காவில் இருக்கும்போதே திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் அவருக்கு இருந்திருக்கின்றன.

2003ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஆஃபியாவும் அவரின் பிள்ளைகளும் பயணம் செய்துகொண்டிருந்தபோது, பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்து அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். அவர் ஒரு அல்காயிதா தீவிரவாதி என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தான் ஒரு மிகப்பெரும் தொகையை இதற்காக வாங்கிக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. ஆஃபியா பிடிபட்ட சமயத்தில் அவருடன் இருந்த மூத்த மகன் அஹ்மதுக்கு வயது வெறும் 5. மகள் மரியமுக்கு 3. 6 மாத ஆண் குழந்தையாக சுலைமான் இருந்திருக்கிறார்.

ஆஃபியாவைக் கடத்திய பிறகு, மூத்த மகனை சிறுவர்களுக்கான சிறையில் அடைத்துவிடுகிறார்கள். அவனது பெயரை அலீ என்று மாற்றிவிடுகிறார்கள். அங்கு அவர் சித்திரவதையை அனுபவிக்கிறார். மகள் மரியமை ஒரு அமெரிக்கத் தம்பதிக்குத் தத்துக்கொடுத்து விடுகிறார்கள். கைக்குழந்தையாக இருந்த சுலைமானின் கதி என்னவென்று இன்றுவரை தெரியவில்லை. அவர் அப்போதே கொல்லப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அஹ்மது, மரியம் ஆகிய பிள்ளைகளை பல வருடங்கள் கழித்து ஆஃபியாவின் குடும்பம் மிகவும் கடுமையாகப் போராடி மீட்டது. இன்றைக்கு பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

2003ல் ஆஃபியா கடத்தப்பட்ட பிறகு அவர் எங்கே இருக்கிறார், அவரின் பிள்ளைகளெல்லாம் எங்கே இருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது. பலரும் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே கருதினார்கள். 2008ல்தான் அவர் ஆஃப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்காவினுடைய பாக்ரம் தளம் போன்ற இடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வெளியானது.

பாக்ரம் தளத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த முஆஸம் பெக், பத்திரிகையாளர் யுவானி ரிட்லீ போன்றோர் இதை வெளியுலகுக்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் பெரும் போராட்டங்கள் நடந்தன. குறிப்பாக, பாகிஸ்தானில் அவை பல்லாயிரணக்கனோரைக் கொண்டு நடத்தப்பட்டன. அந்த நாட்டில் ஆஃபியா மிகப் பரவலாக அறியப்படுபவராக ஆனார். ‘பாகிஸ்தானின் மகள்’ என்று மக்கள் அவருக்குப் பெயரிட்டார்கள். அவர் சிறை வைக்கப்பட்டதை ஆதரிப்பவர்கள் ‘லேடி அல்காயிதா’ என்றார்கள்.

சரியாக 2003 முதல் 2008 வரை (5 வருடங்கள்) பாக்ராம் போன்ற இடங்களில் அவர் இருந்தார். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது குறித்து ஆஃபியாவின் வழக்கறிஞர் க்ளைவ் ஸ்டஃபோர்ட், சகோதரி பவுஜியா சித்தீகி போன்றோர் விளக்கியிருக்கிறார்கள்.

2008ல் அமெரிக்க அதிகாரிகள் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். ஆஃபியாவுக்கு போதை தரும் மருந்துகளைக் கொடுத்து, அவரின் பையில் சில சர்ச்சைக்குரிய ஆவணங்களை, பொருட்களை வைத்து ஆஃப்கானிஸ்தானின் கஸ்னி பகுதிக்கு அனுப்பி வைத்துவிடுகிறார்கள். அங்கே மீண்டும் அவரை சிறை பிடிப்பது போல ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. பிறகு அவரை அமெரிக்காவுக்கே கொண்டு சென்றுவிடுகிறார்கள்.

பாலியல் வன்முறை, நிர்வாணமாக நிற்கவைப்பது, மனநிலையைக் குலைக்கும் ஊசிகளை செலுத்துவது, கடுமையாகத் தாக்குவது என சொல்லொண்ணா கொடுமைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆட்பட்டு, பலவீனப்பட்டிருந்தார் ஆஃபியா. அப்படி நிலைக்குலைந்திருந்த சமயம் (2008) தன்னை விசாரிக்க வந்த அமெரிக்க அதிகாரிகளின் துப்பாக்கியை எடுத்து அவர்களையே சுட்டுக்கொல்ல முயன்றார் என்று குற்றம்சாட்டப்படுகிறது. இது நம்பும்படியாக இருக்கிறதா? ஆனால் இதுதான் இன்று அவர் சிறையில் இருப்பதற்கான முதன்மைக் குற்றச்சாட்டு. வினோதம் என்னவென்றால், எந்த அதிகாரிக்கும் எவ்வித காயங்களும் இல்லை. சொல்லப்போனால் குறைந்தபட்ச தடயவியல் ஆதாரங்கள்கூட இல்லை. ஆனால், அமெரிக்கர்கள் ஆஃபியா சுட்டதாகச் சொல்லும் நாளன்று அவரை பலமுறை சுட்டு அவருக்கு பலத்த காயத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதனால் அவர் மரணத்தின் விழும்புக்கே சென்று மீண்டார். அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் 2010ல் அவருக்கு 86 வருடங்கள் சிறை தண்டனை விதித்தது அமெரிக்க நீதிமன்றம்.

ஆஃபியா மீது சுமத்தப்படும் பல குற்றச்சாட்டுகளை அடிப்படையற்றது என்று அவரின் குடும்பத்தாரும், மனித உரிமை ஆர்வலர்களும் மறுக்கிறார்கள். தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு அல்காயிதா தீவிரவாதிகளுடன் தொடர்புடையவரை அவர் திருமணம் புரிந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை சகோதரி ஃபவுஜியா மறுக்கிறார். ஆஃபியா விவாகரத்துச் செய்யும் processல் இருந்தது உண்மை என்றும், விவாகரத்துக்குரிய காலமே முடியாத நிலையில் அவர் இன்னொருவரை மணந்ததாகச் சொல்வது வடிகட்டிய பொய் என்றும் சாடுகிறார். பாகிஸ்தான் குடிமகளை அமெரிக்கா தண்டிக்க முடியாது என்றும், இது சர்வதேச சட்டங்களுக்கே விரோதமானது என்றும் கூறுகிறார்.

இப்போது ஆஃபியா அடைத்து வைக்கப்பட்டிருக்கும் FMC கார்ஸ்வெல் சிறை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கிறது. அது பெண்களுக்கென்று பிரத்யேகமாக இருக்கின்ற சிறைச்சாலை. அதில் பலவிதமான சித்திரவதைகளை சிறைவாசிகள் அனுபவிக்கின்றனர். குறிப்பாக, பெண்கள் மீதான பாலியல் வன்முறை அங்கே ஒரு கலாச்சாரமாகவே இருப்பதாக அங்கு சிறைவாசம் அனுபவித்தவர்கள் சொல்கிறார்கள்.

ஆஃபியா ஏற்கனவே மிகப் பெரிய சோதனைகளை, சித்திரவதைகளை, கொடுமைகளை அனுபவித்துவிட்டார். இனியும் அவரின் துயரம் தொடரக்கூடாது என்பதே நம் விருப்பம். அவர் சிறையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள். அவர்களுடன் நாமும்!

Related posts

Leave a Comment