தேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன?
“மனிதர்களே! நாம் உங்களை ஒரே ஆண், பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும்பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அவனை அதிகம் அஞ்சுபவர்தாம். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் நுட்பமாகத் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.” (49:13)
குலம் குலமாகப் பிரிந்து அற்ப காரணங்களுக்காக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த, குறுகிய சிந்தனையில் அடைபட்டுக் கிடந்த அன்றைய அரேபியர்களை விளித்து உரையாடிய இந்த இறைவசனம் அவர்களிடையே பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. அவர்களின் வாழ்க்கையை அடியோடு மாற்றியது. இணைக்கவே முடியாது எனக் கருதப்பட்டிருந்த கோத்திரங்களை, மக்களை ஓரணியில் ஒன்றுபடுத்திக் காட்டியது. அவர்களைப் பிரித்துக் கொண்டிருந்த, அவர்களிடையே பகைமையைத் தீயை மூட்டிக்கொண்டிருந்த எல்லா வகையான தடைகளையும் ஒன்றுமில்லாமல் அடித்து நொறுக்கியது.
இக்கருத்தியலைக் கொண்டுதான் அவர்கள் உலகம் முழுவதும் சென்றார்கள். இப்படியொரு கருத்தியலை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்கள் இஸ்லாம் எனும் சங்கமத்தில் அவர்களுடன் இரண்டறக் கலந்தார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கான அடிப்படையான காரணங்களில் ஒன்று, மானிட சமத்துவத்தை வலியுறுத்தும், மனிதர்களை அனைத்துவகையான அடிமைத்தளைகளிலிருந்தும் விடுவிக்கும் அதன் கருத்தியலும் ஆகும்.
பிறப்பினாலோ பிராந்தியத்தினாலோ நிறத்தினாலோ மொழியினாலோ யாரும் உயர்ந்தவராக ஆகிவிட முடியாது என்பதையும் அது இறையச்சம், நல்லொழுக்கம், நற்செயல்கள் ஆகியவற்றின் மூலம் அடையப்பட வேண்டிய உன்னத நிலை என்பதையும் தெளிவுபடுத்தி அதற்கான சரியான வழிமுறைகளையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது இஸ்லாம். மக்கா வெற்றிகொள்ளப்பட்ட பிறகு கஅபாவில் முதன் முதலாக பாங்கு—தொழுகைக்கான அழைப்பு— சொல்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபித்தோழர் பிலால் அன்றைய அரபியர்களால் அடிமை இனமாகக் கருதப்பட்ட கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பது எவ்வளவு மகத்தான பாய்ச்சல்!
இஸ்லாம் உள்ளங்களுக்கு மத்தியில் இணைப்பை ஏற்படுத்துகிறது. அதுதான் அதன் இயல்பு. ஒரு சமூகத்தில் இஸ்லாம் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கான அடையாளங்களில் ஒன்று, அவர்களின் உள்ளங்களிடையே காணப்படும் இணைப்பாகும். அது மனித உள்ளத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது. பகைமையையும் குரோதத்தையும் மூட்டும் வெளிப்படையான, அந்தரங்கமான காரணிகளுக்கு எதிராக கடுமையான தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது. இஸ்லாத்தைக் கொண்டே தவிர மனிதச் சமூகத்திற்கு மத்தியில் வலுவான ஓர் இணைப்பை, ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது.
இஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை. அது மானிட சமத்துவத்தை வலியுறுத்தும் உலகளாவிய மார்க்கம். நாடு, இனம், மொழி என எந்த வரையறையும் அதனைக் கட்டுப்படுத்தாது.
முஸ்லிம்களிடம் தேசிய உணர்வோ இன உணர்வோ இருப்பதில்லை என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். சில முஸ்லிம்கள் இதனால் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி தங்களின் தேசிய உணர்வையும் இன உணர்வையும் வலிந்து நிரூபிக்க முனைகிறார்கள். சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று இஸ்லாத்தின் மூலாதாரங்களிலிருந்தே அவற்றுக்கான ஆதாரங்களைக் காட்ட முயல்கிறார்கள்.
உண்மையான முஸ்லிம்களிடம் இனவெறியோ மொழிவெறியோ தேசியவெறியோ நிச்சயம் இருக்காது. இது அவர்கள் பெருமைகொள்ளத்தக்க சிறப்பம்சமே அன்றி கூனிக்குறுக வேண்டிய குற்றச் செயல் அல்ல. இஸ்லாம் மனித நேயத்தை, மானிட சமத்துவத்தையே வலியுறுத்துகிறது. மானிட சமத்துவத்திற்கு எதிராக தேசிய உணர்வையும் இன உணர்வையும் பிரச்சாரம் செய்பவர்கள்தாம் கூனிக்குறுக வேண்டும். அவர்கள்தாம் குற்றவாளிகள்.
அது மானிட சமத்துவத்திற்கு எதிராக இன உணர்வையோ மொழியுணர்வையோ தேசிய உணர்வையோ முன்னெடுப்பவர்களை மனித சமூகத்தின் விரோதிகளாகக் காண்கிறது. மனிதர்கள் அனைவரும் ஒரு தாய்தந்தையின் வழிவந்தவர்கள் எனப் பிரகடனம் செய்த இஸ்லாம் உயர்வு-தாழ்வு பாராட்டப்படுவதற்காக, ஆதிக்கம் செலுத்துவதற்காக மனிதர்களால் உருவாக்கப்பட்ட அத்தனை வரையறைகளையும் ஒன்றுமில்லாமல் தவிடுபொடியாக்கியது. பிறப்பின் அடிப்படையிலோ பிராந்தியத்தின் அடிப்படையிலோ இனத்தின் அடிப்படையிலோ அவர்களிடையே எந்த உயர்வு தாழ்வும் இல்லை. அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களாவர். அவர்களைக் கூறுபோடும் எந்த ஒன்றையும் அது அனுமதிப்பதில்லை.
இஸ்லாம்தான் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற முழக்கங்களை முதலில் முன்வைத்து செயல்படுத்திக் காட்டியது. இஸ்லாத்தின் பரவலால்தான் இவற்றின் அர்த்தங்களை மக்கள் உணர ஆரம்பித்தார்கள். அதற்கு முன்புவரை இவை வெறும் கனவுகளாக மட்டுமே இருந்தன. அது தன்னுடைய விடுதலை இறையியலைக் கொண்டு மனிதர்களை அனைத்துவகையான அடிமைத்தளைகளிலிருந்தும் மீட்டது. படைத்துப் பராமரிக்கும் இறைவன் ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் அடிபணியக்கூடாது, வேறு யாரையும் வணங்கக்கூடாது என்ற எண்ணத்தை தன்னைப் பின்பற்றுவோரின் உள்ளத்தில் மிக ஆழமாகப் பாய்ச்சியது.
இஸ்லாம் கூறும் இந்த உலகளாவியப் பார்வை மனித சமூகத்திற்கு வழங்கப்பட்ட மாபெரும் அருட்கொடை. இப்பார்வையைக் கொண்டே மனித சமூகத்தை ஒன்றிணைக்க முடியும். மானிட சமத்துவமும் சகோதரத்துவமுமே அதன் அடிப்படை. இஸ்லாத்தின் இப்பார்வை மனித சமூகத்திற்கு நன்மையளிக்கக்கூடியது. அது நிரந்தரமானது. தேசிய, இன உணர்வுகளோ தற்காலிகமானவை; அதிகாரவெறி கொண்ட ஆட்சியாளர்களால் அரசியல்வாதிகளால் வெறியர்களால் ஊட்டி வளர்க்கப்படுபவை; மனிதர்களிடையே வெறுப்பையும் சண்டையையும் ஏற்படுத்தக்கூடியவை. காலத்திற்கேற்ப, தேவைக்கேற்ப மாறுபடக்கூடியவை. உலகில் நடைபெற்ற பெரும்பாலான சண்டைகளுக்குப் பின்னால் இந்த தேசியவாதமும் இனவாதமுமே காரணங்களாக அமைந்திருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இஸ்லாம் உருவாக்கும் சகோதரத்துவத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பொதுவானது, மற்றொன்று குறிப்பானது. மனிதர்கள் அனைவரும் ஒரு தாய்தந்தையிலிருந்து வந்தவர்கள் என்ற அடிப்படையில் அது அவர்கள் அனைவருக்கும் மத்தியில் பொதுவான சகோதரத்துவத் தொடர்பை ஏற்படுத்துகிறது. அவர்களிடையே பகைமையை ஏற்படுத்தும் குறுங்குழு வாதங்கள் அனைத்தையும் தடைசெய்கிறது. மற்றொன்று, ஓரிறைவனை ஏற்றுக்கொண்ட, அவனுடைய மார்க்கத்தின்படி தம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் கொள்கைரீதியான சகோதரத்துவத்தை ஏற்படுத்துகிறது. முந்தையதைவிட பிந்தையது மிக நெருக்கமானது என்றாலும் ஒன்று மற்றொன்றுக்கு எதிரானது அல்ல. நம்பிக்கையாளர்களிடையே கொள்கைரீதியான சகோதரத்துவத்தைப் பேணுவது மற்ற மனிதர்களுடன் பொதுவான சகோதரத்துவ உணர்வைப் பேணுவதற்கு ஒருபோதும் தடையாக அமையாது.
இஸ்லாத்தின் இந்த தனித்தன்மை அதன் எதிரிகளை அச்சத்தில் ஆழ்த்துவது வியப்புக்குரிய ஒன்றல்ல. அவர்கள் அதன் சிறப்பம்சங்களைக் கண்டு அஞ்சவே செய்வார்கள். அவர்களின் கூடாரம் காலியாவதை அவர்கள் விரும்புவார்களா? அதனால்தான் அவர்கள் மனித சமூகத்திற்கு அருட்கொடையாக அமைந்த அதன் இந்த தனித்தன்மையை மனித சமூகத்திற்கு ஏற்பட்ட பேராபத்து போன்று சித்தரிக்க முயல்கிறார்கள். அதற்கு எதிராக தங்களின் மூர்க்கமான தர்க்கங்கள் அனைத்தையும் முன்வைக்கிறார்கள். ஆனாலும் உண்மை அனைத்தையும் தாண்டி மனித உள்ளத்தில் ஊருவியே தீரும். அதுதானே அதன் இயல்பு.
எனில் இயல்பான மொழியுணர்வு, இனவுணர்வு போன்றவற்றை இஸ்லாம் மறுக்கிறதா? அவற்றில் என்ன பிரச்சினை? அவற்றைத் துறக்கச் சொல்கிறதா? தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை போன்றவற்றில் இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? இது போன்றவற்றைக் கையாள்வதற்கு அது கூறும் வழிமுறைகள் என்ன? இவை பற்றி அடுத்தடுத்த பகுதிகளில் காண்போம்.
(தொடரும்)
மாஷா அல்லாஹ். நன்றாக எழுதி இருக்கிறீர்கள். மிகவும் தேவையான ஒரு பதிவு. இப்போதே Share செய்கிறேன்.
“முஸ்லிம்களிடம் தேசிய உணர்வோ இன உணர்வோ இருப்பதில்லை என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். சில முஸ்லிம்கள் இதனால் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி தங்களின் தேசிய உணர்வையும் இன உணர்வையும் வலிந்து நிரூபிக்க முனைகிறார்கள். சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று இஸ்லாத்தின் மூலாதாரங்களிலிருந்தே அவற்றுக்கான ஆதாரங்களைக் காட்ட முயல்கிறார்கள்.
உண்மையான முஸ்லிம்களிடம் இனவெறியோ மொழிவெறியோ தேசியவெறியோ நிச்சயம் இருக்காது. இது அவர்கள் பெருமைகொள்ளத்தக்க சிறப்பம்சமே அன்றி கூனிக்குறுக வேண்டிய குற்றச் செயல் அல்ல.”
இதையே மொழியை மையமாக வைத்து நான் ஓரிரு தினங்களுக்கு முன் ஒரு கேள்வி எழுப்பி முகநூலில் பதிவுசெய்திருந்தேன்.