sundar sarukkai seermaiநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

அறிவியல் என்றால் என்ன? – சில குறிப்புகள் (3)

Loading

மெய்யியல் விவாதங்களும், அது சார்ந்த கூட்டு வாசிப்பும் தமிழ்ச் சூழலில் சற்று குறைவுதான். அப்படி நடந்தாலும் அவை தொடர் செயல்பாடாக அமைவதில்லை. ஓராண்டுக்கு முன் க்ளப் ஹவுஸில் ஹைடெக்கர் தத்துவத்தின் அறிமுக நூலை எழுத்தாளர் அபிலாஷ் உள்ளிட்ட சில நண்பர்கள் சேர்ந்து ஒரு மாதத்தில் வாசித்து முடித்தோம். அது மிகவும் சுவாரசியமான அனுபவமாக அமைந்தது. அப்படியான சூழல் அமைந்ததற்கு அப்போதிருந்த ஊரடங்கு ஒரு காரணம்.

அதன் பிறகு ஹைடெக்கரின் ‘இருத்தலும் காலமும்’ என்ற நூலை வாசிக்கத் தொடங்கினோம். ஆனால், தொடர முடியவில்லை. உண்மையைச் சொன்னால், தத்துவ நூல்களை கதைகள் போல் இலகுவாக நம்மால் வாசிக்க முடியாது. அதன் ஒரு பக்கத்தைப் புரிந்துகொண்டு அதிலுள்ள கருத்துகளை அசைபோடவே அதிக அவகாசம் தேவைப்படும்.

மீண்டும் அந்தக் கூட்டு வாசிப்பு நிகழ்வு ஏற்பாடானால் அறிவியல் என்றால் என்ன? நூலின் மூன்றாம், நான்காம் அத்தியாயங்களைப் பரிந்துரைப்பேன். அவை தமிழில் வாசிக்க எளிமையாக இருப்பதோடு, ஆழமான பார்வையையும் வழங்குகின்றன. அறிவியலின் தர்க்கம், மெய்மை குறித்து நூலாசிரியர் விரிவாக அலசியிருக்கிறார்.

கண்டுபிடிப்புகளையும் தொழில்நுட்பங்களையும் எண்ணி மெய்சிலிர்க்கும் அளவில்தான் அறிவியல் சார்ந்த பொது விவாதங்கள் சுருங்கியிருக்கின்றன. வெளி, காலம் குறித்தெல்லாம் அறிவியல் என்ன கருத்தாக்கத்தைக் கொண்டுள்ளது என்பது விவாதிக்கப்படுவதில்லை. என்னுடன் கல்லூரியில் அறிவியல் படித்த மாணவர்கள்கூட அதைத் தத்துவார்த்தமாகப் புரிந்துகொள்ள முயற்சித்ததில்லை.

சக நண்பர்களிடம் பாடம் குறித்து உரையாடும்போது, மரபு இயற்பியலுக்கும் குவாண்டம் இயற்பியலுக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு என்ன என்று கேட்பேன். யாரும் தத்துவார்த்தமான பதிலைத் தந்ததில்லை. பாடநூலில் உள்ள மேலோட்டமான ஒற்றை வரி துணுக்குகளைச் சொல்வார்கள். ஹைசென்பர்க்கின் ’உறுதிப்படுத்த முடியாத கொள்கை’ (uncertainty principle) குறித்துப் பேசி அறிவியலை ஒரு தத்துவார்த்த உரையாடலாக மாற்ற முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் தேர்வு, மதிப்பெண்கள், ப்ராஜக்ட் என்பனவற்றிலேயே அவர்களின் முழு கவனமும் இருக்கும். இது வியப்புக்குரிய விஷயமில்லைதான்.

அறிவியலை கிரேக்க மெய்யியலாளர்கள் தொட்டு தற்காலம் வரையில் ஒரு தத்துவ வரலாற்றுத் தொடர்ச்சியாகப் படிப்பது அவசியமான ஒன்று. அப்போதுதான் அறிவியலை சற்று முறையாகப் படித்துத் தெளிவுபெற முடியும். ஆனால் கல்லூரிகளில் இப்படியான முறைசார் அணுகுமுறை இருப்பதில்லை என்பது கண்கூடு. கல்லூரிப் பேராசிரியர்களும் இப்படியான உரையாடலை நிகழ்த்துவதில்லை. இச்சூழலில், பேரா. சுந்தர் சருக்கையின் இந்நூல் ஒரு தமிழில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்திருப்பது நம் நல்ல நேரம். இந்நூலை வாசிப்பவர்கள் தமக்குத் தெரிந்த அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இதை அறிமுகம் செய்து வைக்க வேண்டும்.

தத்துவம் மற்றும் மெய்மை (reality) பற்றி கற்கும் ஆர்வமுள்ளவர்களை ‘அறிவியலும் ஏரணமும்’ (Logic) என்ற இந்நூலின் மூன்றாம், நான்காம் அத்தியாயங்கள் மிகவும் கவரும் என்று நினைக்கிறேன். மரபு இயற்பியலுக்கும் குவாண்டம் இயற்பியலுக்கும் இடையிலான வேறுபாட்டினூடாக அறிவியல் தர்க்கமுறையை மட்டும் சார்ந்துள்ளதா அல்லது அதைத் தாண்டிய ஒன்றா என்பது பற்றி இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது.

மேற்கத்திய தத்துவத்தில் வெளி, காலம் குறித்த புரிதல்களும் கருத்துகளும் பலவாறு இருந்துள்ளன. அந்தக் காலகட்டத்தில் ஐசக் நியூட்டனின் பார்வையே அறிவியலில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. வெளியை தனித்த சுதந்திரமாக இருக்கும் ஒன்றாக அவர் கருதியதால்தான் உலகத்தில் உள்ள பொருட்களைப் பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதாவது, பார்வையாளனைச் சாராத தனித்துவமான வெளி உள்ளது என்பது அவரின் பார்வை. தத்துவம் ஒருபக்கம் இயங்கிக்கொண்டிருக்க, அவர் தனித்துச் செயல்பட்டதாகவே தோன்றுகிறது. அவர் தர்க்கங்களினூடாக இந்த வெளியை நிரூபிக்க முயற்சித்திருந்தால் நியூட்டனின் இயந்திரவியல் பார்வை செல்வாக்கு பெற்றிருக்க நீண்ட காலம் ஆகியிருக்கலாம்.

பொருட்களின் வகைமையை வைத்து வார்த்தைகளின் வழியாக புலன் சார்ந்த அனுபவமாக மட்டும் வெளியை, காலத்தை அவர் கருதவில்லை. ஆரம்பத்திலேயே மரபு இயற்பியல் தனித்துவமான வெளியை ஒப்புக்கொண்டுவிட்டது. மேலும் கணித ரீதியாக புரிந்துகொள்ள முயற்சித்தது. இந்த இடம்தான் அறிவியல் தனித்து இயங்கக் காரணமாகி இருக்கக்கூடும்.

கணிதம் ஒருவிதத்தில் தர்க்க ரீதியானதே. Formal லாஜிக் என்ற வகையைச் சேர்ந்தது. அறிவியலானது மெய்மையை தர்க்க ரீதியாக அணுகுவதாகச் சொல்லிவிட முடியாது. கணிதம் மெய்நிகர் உலகத்தை உருவாக்கி வைத்துள்ளது. மூன்று பரிமாணங்கள் கொண்ட வெளியை கணித ரீதியாக அணுகும்போது, குறிப்பிட்ட எல்லைவரை புலனுணர்விற்கு உட்பட்டு அனுபவ ரீதியாக நாம் புரிந்துகொள்ள முடியும். நான்காம் பரிமாணமான காலத்தை தனித்த ஒரு பகுதியாகப் புரிந்துகொள்ள முடியும். மேற்கொண்டு ஐந்து, ஆறு பரிமாணங்கள் இருப்பதாக அறிவியல் கருதுகோள்கள் சொல்கின்றன. இதனை நாம் அனுபவ ரீதியாக உணர முடியாது. மேலும் கணிதமும் பரிமாணங்களை உணராது என்பதுதான்.

a3 முப்பரிமாணத்தைக் குறிக்கிறது. a4-ஐ காலத்தோடு இணைத்து புரிந்துகொள்ளலாம். ஆனால், a5 என்பது எதைக் குறிக்கிறது? ஐந்தாம் பரிமாணத்தை கணிதம் உணர முடியுமா? அதை நம்மாலும் உணர முடியாது. ஆகவே, கணிதம் குறியீட்டு மொழியைக் கையாள்கிறது. மரபு இயற்பியலில் பார்வையாளனைச் சாராத தனித்த வெளி, காலம் உண்டு என்ற கருத்திற்கு மாறான பார்வையை பரிசோதனைகள் மூலமாகவும், கணித சமன்பாடுகள் மூலமாகவும் கண்டறிந்ததே குவாண்டம் இயற்பியலுக்கு இட்டுச் சென்றுள்ளது. அதற்கு Neil Bohr, Maxwell, Heisenberg, Einstein போன்ற விஞ்ஞானிகள் பெரும் பங்காற்றியுள்ளார்கள். புலன் உணர முடியாத, பார்வையாளனைச் சாராத, தனித்துவமான வெளி இல்லை என்ற கருத்தே நவீன இயற்பியலுக்குப் பெரும் திறப்பாக அமைந்தது. என் புரிதல் சரியாக இருக்கும் பட்சத்தில், கணித ரீதியாக மெய்மையை அறிய முடியும் என்று சொன்ன இம்மானுவல் கான்ட்டின் கருத்துகள் சரி.

ஒரு பொருளின் இருப்பு, அதன் இயல்பு, அதன் மெய் நிலை குறித்த ஐயமே தத்துவார்த்தமான தர்க்கமுறைக்கு இட்டுச் செல்லும். சொல்லப்போனால் நம் சிந்தனைமுறையே தர்க்கத்தின் அடிப்படையிலானதுதான். அறிவியல் கிரேக்க தர்க்கமுறைகளிலிருந்து புதுப் பரிமாணமாகப் பிரிந்து தன்னை வடிவமைத்துக்கொண்டுள்ளது. இந்தப் புதுப்பரிமாணமே அறிவியலின் வரையறை என்ற வகையில் வேறொரு அம்சத்தை அடைகிறது. உலகம், இயற்கை, வெளி, காலம் பற்றிய நம் பார்வையை மாற்றியமைக்கிறது. தனக்கென ஒரு கதையை வைத்திருக்கிறது. ஈ, எறும்பு, யானை, மலை முதல் அணுக்கள், அண்டம் வரையிலான அறிவியலின் புதுக் கதையே நம்மை வியப்புக்குள்ளாக்குகிறது.

ஒட்டுமொத்த அறிவியல் வளர்ச்சியும் கண்டுபிடிப்புகளும், ஆரம்பகால தத்துவ – தர்க்கமுறைகளும் கணிதத்தால் ஆனவை அன்று. அதாவது, தர்க்கத்தின் மூலமாக மட்டுமே கண்டுபிடிப்புகள் நிகழவில்லை. கண்டுபிடிப்புகள் ஓர் ஆய்வுக்கூடத்தில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதை சுவாரஸ்யமான தரவுகளைக் கொண்டு நூலாசிரியர் இந்த அத்தியாயத்தில் நமக்கு உணர்த்துகிறார். கண்டுபிடிப்புகள் ஆய்வாளரின் கனவின் மூலமாகவும் வெளிப்பட்டிருக்கிறது, தற்செயலாகவும் நிகழ்ந்திருக்கிறது. கனவின் மூலமாகக் கண்ட காட்சிக்கும், தர்க்கத்திற்கும் சம்மந்தம் இருக்க முடியுமா? கணிதத்தோடு தொடர்புப்படுத்த முடியுமா?

எதிர்பாராத விதமாகவும், தற்செயலாகவும் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. உதாரணமாக, பரிசோதனையின் போது சற்றும் எதிர்பாராத விதமாகவே X Ray-யினைக் கண்டுபிடித்திருக்கிறார் இயற்பியலாளர் Wilhelm Rontgen. இதன் பின்னணியில் தர்க்கங்கள் இருக்க முடியுமா? அதாவது, தான் ஒரு விஷயத்தைப் பார்த்து, அதை நம்பி இன்னதுதான் என்று உறுதிசெய்த பிறகு தர்க்கத்திற்கு அங்கு என்ன வேலை இருக்க முடியும்? இதுபோன்ற தற்செயலாக நடக்கும் நிகழ்வுகளும், உள்ளுணர்வின் மூலமாகப் பெறப்பட்ட அறிவும் பெறுகிற படைப்பூக்கமுமே அறிவியலில் எளிதில் விளங்காத விஷயங்களாக உள்ளன.

அறிவியலானது ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டது என்றால், ஓர் அறிவியல் விஞ்ஞானி தான் பெற்ற உள்ளுணர்வு அனுபவத்திற்கான ஆதாரத்தை எங்கு தேடுவார்? யாரிடம் காட்ட முடியும்? அவை தேடலின் தொடர்ச்சியின் விளைவாக வந்தவையா? தனக்குள் ஏற்கனவே இருந்த ஒன்றா? அது கணநேரத்தில் அமையும் அனுபவமா? அறிவியல் கண்டடைதல்கள் தங்களுக்கு எப்படி சாத்தியமாயின என்பது விஞ்ஞானிக்கே வியப்பான விஷயமாக இருக்கும்.

What is God? என்ற நூலில் ஜேக்கப் நீடில்மென் ஜென் ஞானியைச் சந்தித்த நிகழ்ச்சியைப் பகிர்ந்திருப்பார். ஜென் தத்துவ ஞானியான டி.டி. சுசுக்கியிடம் நீடில்மென் ”சுயம் என்றால் என்ன?” என்று கேட்பார். அதற்கு அவர் ”அதைக் கேட்பது யார்?” என்பார். உறுதியாக “நான்தான் கேட்கிறேன்” என்று நீடில்மென் பதில் சொல்வார். ”அப்படியானால், எங்கே என்னிடம் காட்டு பார்க்கிறேன்” என்பார் சுசுக்கி.

சுயத்தைக் காட்ட முடியாது! இதை தர்க்கமுறைக்குள் கொண்டுவர முடியாது. மெய்மை குறித்த ஐயமும் இப்படியான புதிர்களுக்குள் நம்மைக் கொண்டுசெல்லும். வெளி, காலம் என்பவை உண்மையானவையா? அதாவது, அனுபவபூர்வமாக உணர்வது வெளியின் நிதர்சனத்தைத்தானா? பிளேட்டோ, அரிஸ்டாட்டில் தொடங்கி வெளி, காலம் குறித்த புரிதல்கள் என்னவாக இருந்துள்ளன? அவற்றிலிருந்து நவீன அறிவியல் எந்த அளவிற்கு வேறுபடுகிறது என்பது பற்றி விரிவான விளக்கங்கள் நான்காம் அத்தியாயத்தில் உள்ளன. நீங்களும் வாசியுங்கள்.

(இந்தக் கட்டுரையின் முந்தைய பகுதி)

Related posts

Leave a Comment