குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

மேற்கத்திய அழகியலும் இஸ்லாமிய அழகியலும்: சிறு ஒப்பீடு

Loading

மேற்கும் கிழக்கும் அழகு குறித்த தமது கண்ணோட்டத்தில் ஒன்றுக்கொன்று வேறுபடக்கூடியவை. மேற்குலகைப் பொறுத்தமட்டில் அழகு என்பது வெளிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாக முன்வைக்கப்பட்டது. அதேசமயம், கிழக்குலகோ அழகை மறைத்தும் பாதுகாத்தும் வந்திருக்கிறது.

நவீனத்துக்கு முந்தைய காலத்தில் முஸ்லிம் உலகுக்குப் பயணம் மேற்கொண்ட ஐரோப்பியர்களின் பயணக்குறிப்புகளிலும், ஐரோப்பாவுக்குப் பயணம் செய்த ஈரானியர்களின் குறிப்புகளிலும் இது பிரதிபலிக்கிறது. ஐரோப்பியக் காலனியவாதிகள் கவனம் குவிக்கும் புள்ளியாக ஆகிப்போன ஹிஜாப் என்பது முஸ்லிம் அடையாளக் குறியீடாகவும் முஸ்லிம் ஒடுக்குமுறையின் குறியீடாகவும் பார்க்கப்பட்டது. அதேவேளை, இஸ்லாமியச் சட்டவியலில் 20ம் நூற்றாண்டுவரை ஹிஜாப் மிகக் குறைந்த அளவிலேயே முக்கியத்துவம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபோலவே, ஈரானிய பயணக்குறிப்புகளில் மேற்கத்திய முகஒப்பனையும் ஆடையும் பாலுணர்வை வெளிப்படுத்தும் விதமும் மையமான இடத்தைப் பெற்றிருந்தன. ஏனெனில் அழகை வெளிக்காட்டுவதை இவ்வுலகை விட மறுஉலக வாழ்க்கைக்கு ஏற்ற ஒன்றாகவும், இங்கு அது மறைக்கப்பட வேண்டிய ஒன்றெனவும் ஈரானியர்கள் கருதினர். சையித் குதுப் போன்றோரின் நவீன ஆக்கங்களிலும் இதேபோன்ற அவதானங்களைக் காணலாம்.

அழகை மறைப்பது குறித்த இஸ்லாமிய அணுகுமுறை என்பது உடல் அழகையும் பொதுவெளியில் அதன்பால் தனிக்கவனம் குவிக்கச் செய்யக்கூடிய ஆடை, அணிகலன்கள், முகஒப்பனை போன்றவற்றையும் மறைக்க வலியுறுத்துவது தெரிகிறது. அதேசமயம், நயமான உடை, மருதாணி இடுதல், ஆண்கள் நறுமணம் பூசுதல், இள நிறங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை சில ஃபிக்ஹு பிரதிகளில் பரிந்துரைக்கப்படுகின்றன.

பாரம்பரியமான மேற்கத்தியக் கலையிலும் கட்டடக் கலையிலும் இருக்கின்ற கண்கவரக்கூடிய, அழகை அப்படியே வெளிக்காட்டும் போக்கு திகைப்பூட்டக்கூடியது (வாடிகன் இதற்கோர் மிகச் சிறந்த உதாரணம்).

ஆனால், மரபார்ந்த இஸ்லாமியக் கலையைப் பொறுத்தவரை இது சிக்கலுக்குரியது. மனித உருக்களையும் விலங்குகளையும் சித்தரிப்பது, உயரமாக மினாரா கட்டுவது, படாடோபமாகப் பள்ளிவாசல் கட்டுவது குறித்த எச்சரிக்கைகளை தொடக்க கால இஸ்லாமியப் பிரதிகளில் காண்கிறோம். எனினும் ஷாம் பிரதேசத்தையும் (சிரியா, லெபனான் ஆகிய பகுதிகள்) கிழக்கு ஐரோப்பாவையும் வெற்றிகொண்டவுடன் குவிமாடம் போன்ற பல வைதீகக் கூறுகள் முஸ்லிம்களால் சுவீகரிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. பிற்காலத்தில் ஓவியங்களுக்குப் பதிலாக எழுத்துமுறை அலங்கரிக்கப்பட்டது. உருவப்படங்கள் இருக்கும் வீடுகளில் வானவர்கள் நுழையமாட்டார்கள் என்று நபிமொழி சொல்வதால் உருவப்படங்கள் சுவர்களுக்குப் பதில் புத்தகங்களில் வைக்கப்பட்டன.

இதேபோன்ற இருமையையே இசையிலும் பார்க்கலாம். மேற்குலகின் களியாட்டத்துடனான செவ்வியல் இசையும் நாடகமும், கிழக்குலகின் அமைதியான அல்லது பெரும்பாலும் சாதாரணமான மனித உச்சாடனங்களும் கவிதைகளும் நமக்கு இதையே உணர்த்துகின்றன.

இஸ்லாமிய அழகியல் (பாரம்பரிய ஜப்பானிய அழகியலைப் போல) எளிமையையும் தூய்மையையும் ஒழுங்கையும் அதன் சாராம்சமாகக் கொண்டுள்ளது எனக் கருதுகிறேன். இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் (தீனுல் ஃபித்ரா) என்ற வகையில் குறிப்பிட்ட வகையான குறியீடுகளையோ கருவிகளையோ நபியவர்கள் (ஸல்) அறிமுகப்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ரோம் தொடங்கி யமன், ஆப்பிரிக்கா வரையுள்ள வெவ்வேறு பாணியிலான ஆடைகளை அவர்கள் அணிந்திருக்கிறார்கள். கோதிய (Gothic) கலை வடிவங்களாயினும் புது யுக (New age) கலை வடிவங்களாயினும் எந்தவொரு குறிப்பிட்ட பாணியோடும் நாம் தேங்கிவிடக் கூடாது என்பதற்காகவே நபிகளார் ஒருவேளை இவ்வாறு வழிகாட்டியிருக்கக் கூடும்.

ஆனால் இன்று ’இஸ்லாமிய அழகியல்’ குறித்த நம்முடைய கருத்து குழப்பமானதாகவும் தன்முரண்பாடானதாகவும் ஆகியிருப்பதாகத் தெரிகிறது. தோப், அபாயா, காபா ஆகியவற்றில் எளிமையைக் கடைபிடிக்க முனையும் நாம் இஸ்தான்புல், இஸ்ஃபஹான் போன்றவற்றில் ஆடம்பரத்தை விரும்புகிறோம். வட தெஹ்ரான் பார்ப்பதற்கு பாரிஸைக் காட்டிலும் பகட்டான பாரிஸாக மாறியிருப்பதைப் பார்க்க நேர்ந்தால் 19ம் நூற்றாண்டு பயணிகளுக்கு மாரடைப்பே வந்துவிடும். அதுபோலவே, இன்றைய மக்காவையும் மதினாவையும்  நபித்தோழர்களால் இனங்கண்டுகொள்ளவே முடியாது; இன்றைய முஸ்லிம் உலகில் காணப்படும் அழகான பள்ளிவாசல்களையும், அதேவேளை இருளடைந்த இதயங்களையும் கண்டு அவர்களால் திகைக்காமலும் இருக்க முடியாது.

மூலம்: Western aesthetics and Islamic aesthetics

தமிழில்: நாகூர் ரிஸ்வான்.

Related posts

Leave a Comment