வஹீதுத்தீன் கான் சொல்வது சமாதானமா, சரணாகதியா?
சுருக்கமான அறிமுகம்
இந்தியாவின் முதுபெரும் இஸ்லாமிய அறிஞரான மௌலானா வஹீதுத்தீன் கான் (91) உருது மொழியில் சற்றேறக்குறைய 200-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். ஆங்கிலத்தில் 26 நூல்கள் எழுதியுள்ளார். இவர் இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் 1925-இல் பிறந்தவர். மத்ரஸா கல்வியை மட்டும் கற்று, உருது முஸ்லிம்களைச் சுற்றியே தனது ஆரம்பகட்ட இஸ்லாமிய பணிகளை முன்னெடுத்தார்.
பின்னாளில் ஆங்கிலம் பயின்று, மேலைத் தத்துவங்களையும் சிந்தனை முறைகளையும் வாசிக்கத் தொடங்கினார். பிறகு, 1970இல் ‘இஸ்லாமிய அழைப்பு மையம்’ எனும் அமைப்பை புதுடெல்லியில் நிறுவி, நவீன ஊடகங்களின் வழியே இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொண்டார். இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், ஜமாஅத்தே இஸ்லாமியில் மௌலானா அவர்கள் செயல்பட்டு வந்தது பற்றி பலரும் பேசுவதுண்டு. ஆனால் அவர் ஜமாஅத்தே இஸ்லாமி மட்டுமின்றி தப்லீக் ஜமாஅத், ஜம்இய்யத்துல் உலமா ஆகிவற்றிலும் செயல்பட்டுள்ளார் என்பது கவனம் கொள்ளத்தக்கது.
வஹீதுத்தீன் கானின் தொடக்க கால தஃவா செயல்பாடுகளையும் இன்றைக்கு அவர் கொண்டுள்ள நிலைப்பாட்டையும் ஒப்பிடுகையில், பெரிய அளவுக்கு மாற்றமில்லை என நேர்காணல் ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அவரது அழைப்புத் தொனி ஆரம்பத்தில் முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தியதாக இருந்து, பிறகு முழு மானுடம் என்கிற ரீதியில் பரிணமித்துள்ளது என்பதை அவரது அர்-ரிஸாலா உருது இதழை தொடர்ச்சியாக அவதானிப்பவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இன்று உலக அளவில் பிரசித்திபெற்ற அறிஞராய் வஹீதுத்தீன் கான் திகழ்கிறார். “நவீன உலகை உருவாக்கியது இஸ்லாம்” எனும் வஹீதுத்தீன் கானின் நூல் அரபு மொழியில் பிரபல்யமான ஒன்றாக இருக்கிறது.
2000ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கியது. கடந்த 2015ஆம் ஆண்டு, ஹசன் இப்னு அலீ அமைதி விருது மௌலானா வஹீதுத்தீன் கானுக்கு வழங்கப்பட்டது.
மௌலானா வஹீதுத்தீன் கான் குறித்த சிறு அறிமுகத்தை மேலே தந்துள்ளேன். அவர் ஓர் இஸ்லாமிய அறிஞர் என்பதால் நல்லவிதமாகவே அவரை அறிமுகப்படுத்தியுள்ளேன். இனி அமைதி, சமாதானம் குறித்த அவரின் கண்ணோட்டத்தையும் அதை அடைவதற்கு அவர் சொல்லும் வழிமுறைகளையும் விமர்சனபூர்வமாக பார்க்கவிருக்கிறோம்.
அமைதி, சமாதானம் என்பதை அடைய அவர் முன்வைக்கும் வழிமுறை சரியானதல்ல. அவர் தனது சித்தாந்தத்தை முன்னெடுப்பதன் அடிப்படையிலேயே சிக்கல் உள்ளது. அது இஸ்லாத்தின் அடிப்படை மதிப்பீடுகளான நீதியையும் சமத்துவத்தையும் அடைவதற்கான பாதையில் குறுக்கீட்டை நிகழ்த்துகின்றது. இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிகழ்வது சகஜம் தான். அது ஆரோக்கியமானதும்கூட. ஆனால் செயற்களத்தில் இயங்கும்போது, எதுவொன்றிலும் ஒரு தீர்க்கமான நிலைப்பாடு எடுக்கவேண்டியது அவசியம். வஹீதுத்தீன் கான் இஸ்லாத்தை அணுகும் விதம் மிகவும் பிரச்னைக்குரியது. அதை விமர்சனத்திற்கு உட்படுத்தவேண்டியுள்ளது.
எனவே, வஹீதுத்தீன் கானைப் பற்றிய உரையாடலில், “அவரிடம் நமக்கு சில கருத்து வேறுபாடுகள் உண்டு” என மேம்போக்காகச் சொல்லி அவரை எளிமையாக நாம் கடந்துவிட முடியாது. அந்த அளவுக்கு கருத்து வேறுபாடுகள் அனைத்தும் கூர்மையானவை. ஆகவே அந்த அம்சங்களை அடையாளப்படுத்துவதையே நாம் முதன்மையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது.
எந்தத் துறையைச் சார்ந்த அறிஞரானாலும் எழுத்தாளரானாலும் அவரின் ஆற்றலோ திறமையோ நம்மை மயக்கத்தில் ஆழ்த்திடல் கூடாது. மனிதகுல நன்மைக்கு அது சாதகமா, பாதகமா என்பதைக் கொண்டே நாம் அவரை மதிப்பிடவேண்டும். நீதியான சமூக அமைப்பை நோக்கிய பயணத்தை விடுத்து ஒருவரின் அறிவு நம்மைத் தடுக்கும் என்றால் நாம் ஏன் அவரை கொண்டாட வேண்டும்? இது வஹீதுத்தீன் கானுக்காக மட்டும் சொல்லவில்லை, பொதுவாகச் சொல்கிறேன்.
நீதிக்கு உலை வைக்கும் அமைதி
அமைதிக்கான அடிப்படை அமைதிதான் என்கிறார் மௌலானா வஹீதுத்தீன் கான். அமைதியை அடைய சமூகநீதி ஒரு நிபந்தனையல்ல என்பது அவரின் கருத்து. இக்கூற்றை பலவகையில் பொருள்கொள்ள வாய்ப்புள்ளது. ஆகவே, அவரின் செயல்வாதங்களின் வழியாகவே நாம் இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது மனங்கொள்ளத்தக்கது. அப்போதுதான் அவரின் போக்கு எந்த அளவுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது எனத் தெரியவரும்.
உண்மையில், அமைதியும் நீதியும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். நீதி இல்லாத இடத்தில் உண்மையான அமைதி இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தால் அது மயான அமைதியாக, திணிக்கப்பட்ட அமைதியாகத்தான் இருக்கும். சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு போராடச் சொல்கிறது இஸ்லாம். ஆனால், மௌலானா அவர்கள் இதை மறுக்கிறார். அவரது பிரதிகளை வாசிக்கும்போது, போராட்டம் என்பதையே ஒரு வன்முறை என்கிற ரீதியில்தான் அவர் பார்க்கிறார் என்பதை அவதானிக்க முடியும்.
போராட்டம் குறித்து பேசும்போதெல்லாம் பல வேளைகளில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் இயக்கங்களையே அவர் மேற்கோள் காட்டுகிறார். கூடை நிறைய பழங்கள் இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். அதில் அழுகியப் பழத்தைத் தேடி எடுத்து கொடுப்பதுபோல, போராட்டம் என்பதை தீவிரவாத செயல்பாடுகளோடு ஒப்பிடுவதன் ஊடாக போராட்டங்களைக் கொச்சைப்படுத்துகிறார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. சிலபோது நியாயமான எதிர்ப்பு இயக்கங்களையும் தீவிரவாத வகையினத்தில் சேர்ப்பதும் உண்டு. சரி, மாற்று போராட்ட வடிவங்களை முன்வைத்தாரா என்றால் அதுவும் இல்லை. அது பற்றிய கரிசனமே அவருக்கு இல்லை என்றால் அது மிகையல்ல. ‘ஜிஹாத்’ என்பதைக்கூட தனிமனித ஆளுமை மேம்பாடு என்ற அளவில் முடக்குகிறார்.
நீதிக்காக போராடுவது அமைதியைக் குலைப்பதாகவும், சிந்திக்கும் ஆற்றலை இழக்கச் செய்வதாகவும் வஹீதுத்தீன் கான் கூறுகிறார். அவரைப் பொறுத்தமட்டில், அநீதியை எதிர்ப்பவர்கள் அமைதி நிலையைச் சிதைப்பவர்கள். அதுதான் இன்றைக்கு இரத்தக்களரிகள் ஏற்பட முக்கிய காரணம்.
ஐ.நா. சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) கொண்டுள்ள சட்டம், அமைதியை சமூக நீதியின் அடிப்படையில்தான் நிறுவ முடியும் என்கிறது. அதை வஹீதுத்தீன் கான் தன் The Age of peace எனும் நூலில் சுட்டிக்காட்டி, மறுக்கிறார். அது யதார்த்தத்திற்கு பொருந்தாது என்றும் குறிப்பிடுகிறார். அதே நூலில், இதற்கு ஒருபடி மேலே சென்று, அமைதியை அடைவதற்கு தற்போதைய நிலையை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் எனும் கருத்தையும் முன்வைக்கிறார். இப்படியெல்லாம் அவர் சொல்வதன் மூலம் அத்தனை அநீதிகளையும் சகித்துக்கொண்டு, அதை எதிர்க்காமல் இருக்கவேண்டும் என்பதையே வலியுறுத்துகிறார்.
சமாதானமா, சரணாகதியா?
“அநியாயக்கார ஆட்சியாளனுக்கு முன்னால் உண்மையை உரைப்பதுதான் ஜிஹாதிலேயே பெரிய ஜிஹாத்” என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்).
நீதிக்கான போராட்டங்கள் கூடாது எனும் அபாயகரமான நிலைப்பாட்டை வஹீதுத்தீன் கான் கொண்டிருப்பது அநீதியாளர்களுக்குச் சாதகமான சூழலையே உருவாக்கித் தரும். மட்டுமல்ல, அவர்களை ஊக்குவிக்கவும் செய்யும்.
மௌலானா வஹீதுத்தீன் கான் அவர்கள் தற்போது இருக்கின்ற (அநீதியான) நிலையைத் தக்கவைத்துக்கொண்டு, ‘கிடைக்கின்ற வாய்ப்புகளை’ முறையாக பயன்படுத்தவேண்டும் என்பதை ஒரு தீர்வாக முன்வைக்கிறார்.
வறுமையாலும் கல்வியறிவு இல்லாததாலும் அல்லலுறும் மக்கள் இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ளார்கள். அவற்றுக்கு வலுவான அரசியல் காரணங்கள் உள்ளதை யாரும் மறுக்கமுடியாது. அதற்கு காரண கர்த்தாக்களான அநியாயக்கார ஆட்சியாளர்களையும் அதிகார வர்க்கத்தையும் எதிர்த்து கேள்வி கேட்கவேண்டாமா? இதையெல்லாம் எதிர்க்காமல், மெளலானா தனிநபர் மாற்றத்தை மட்டுமே பேசுவது எவ்வகையில் பயனளிக்கும்?
அதிகார வர்க்கத்திற்கு எதிராகப் பேசுவது வஹீதுத்தீன் கான் பார்வையில் ‘எதிர்மறையான அணுகுமுறை’ (Negative approach). காரணம், அது சமாதானத்திற்கு கேடு விளைவிக்கிறது என கருதுகிறார். அப்படியானால் மௌலானா சொல்லும் சமாதானம் யாரோடு?
உண்மையில், வஹீதுத்தீன் கான் முன்வைப்பது சமாதானமே அல்ல என்பதை அவரின் The Prophet of Peace நூலைப் படிக்கும்போது எளிதில் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், அதில் சமாதானத்திற்குப் பதிலாக சரணாகதி ஆவதற்கு தத்துவார்த்த அடிப்படைகளை அவர் தருகிறார். அந்த நூலில்தான் அவர் பாலஸ்தீனத்தை யூதர்களுக்கு விட்டுக்கொடுக்கச் சொல்வது, அங்கே நடக்கும் விடுதலைக்கான போராட்டங்களுக்கு எதிராக கருத்துரைப்பது போன்றவை உள்ளன. அவற்றுக்கு இஸ்லாமிய பிரதிகள், வரலாறு போன்றவற்றிலிருந்து நியாயம் கற்பிக்கப்படுகின்றன.
மேற்சொன்ன அதே புத்தகத்திலிருந்து இன்னொரு அபத்தமான கருத்தை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் இரு துருவங்களாக இருந்து உலக அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்ததை அறிவோம். பின்னாளில் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்காவை நிலைப்படுத்திக்கொள்ள எதிரில் “கம்யூனிஸப் பூச்சாண்டி” இல்லை. அதற்குப் பதிலீடாகவே ஏகாதிபத்தியவாதிகள் இஸ்லாத்தை ஒரு அபாயமாக முன்னிறுத்தினார்கள். இந்த உண்மை குறைந்தபட்ச அரசியல் விழிப்பு உணர்வுள்ளவர்களுக்குக் கூட தெரியும். ஆனால் இதை வஹீதுத்தீன் கான் மறுக்கிறார்.
ஏகாதிபத்திய சக்திகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கு கண்டடைந்த ஒன்றுதான் “Islamophobia” (இஸ்லாத்தை குறித்த அச்ச மனப்பான்மை). மௌலானா வஹீதுத்தீன் கான் இதையெல்லாம் ஒரு சதிக் கோட்பாடு எனச் சொல்லி பின்னுக்குத் தள்ளுகிறார். சொல்லப்போனால் அது “முஸ்லிம்களின் கண்டுபிடிப்பு” என கூறுகிறார். (பார்க்க: Spirit of Islam – ஜூலை 2016) இப்படிச் சொல்வது யாருக்குச் சாதகமானது என்பது சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை!
மௌலானாவுக்கு அரசியல் நிலைப்பாடு எதுவும் இல்லை என்றால் யார்தான் நம்புவார்கள்?
அஹிம்சையா, பிழைப்புவாதமா?
தன்னை ஈர்த்த ஓர் ஆளுமையாக காந்தியைக் குறிப்பிடுகிறார் மௌலானா வஹீதுத்தீன் கான். பொதுவில் வஹீதுத்தீன் கானை அறிமுகப்படுத்தும்போது, அவரின் சிந்தனைப் போக்கு காந்தியின் அஹிம்சைக் கோட்பாடோடு ஒப்பிடப்படுகிறது. அதற்குக் காரணம், வெற்றியை அடைய வன்முறையற்ற வழிமுறையை அவர் கொண்டுள்ளதாகக் கூறுகிறார்கள். அப்படி ஒப்பிடுதல் சரிதானா என்பதை அறிய, காந்தி முன்வைத்த அஹிம்சைக்கும் வஹீதுத்தீன் கானின் அணுகுமுறைக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என பார்க்கவேண்டியுள்ளது.
காந்தி ‘அஹிம்சை’ எனும் கோட்பாட்டை எவ்வாறு நடைமுறைப்படுத்திக் காட்டினார் என்பதைக் கொண்டே அதை நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும். காந்தி அஹிம்சையை ஒரு போராட்ட வடிவமாகக் கொண்டிருந்தவர். அஹிம்சை, சத்தியாகிரகம் போன்ற சொல்லாடல்களை காந்தி இந்து மரபிலிருந்து பெற்றுக்கொண்டார். ஆயினும், அவர் மேற்கொண்ட வழிமுறை என்பது மத அடிப்படையிலானதல்ல.
காந்தி தனது வழிகாட்டிகளாகக் கருதிய டால்ஸ்தாய், தோரோ போன்றோரிடமிருந்தே தனக்கான போராட்ட வடிவத்தைப் பெற்றுக்கொண்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அமெரிக்க தத்துவவியலாளரான ஹென்றி டேவிட் தோரோ முன்வைத்த ‘Civil disobedience’ கோட்பாட்டை காந்தி வரித்துக்கொண்டு இங்கே நடைமுறைப்படுத்தினார். அவரின் தலைமையில் நடந்த ஒத்துழையாமைப் போராட்டம் என்பதையெல்லாம் இந்தப் பின்னணியில்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்திய விடுதலைக்கான போராட்டத்தை குறிப்பிட்ட ஒரு மதத்தினரின் போராட்டமாக அல்லாமல், எல்லாச் சமுதாய மக்களையும் ஒருங்கிணைத்து, அதை மக்கள் போராட்டமாக மாற்றிக் காட்டியவர் காந்தி. செயலூக்கமுள்ள அவரின் போராட்ட முறையை வஹீதுத்தீன் கானின் அணுகுமுறையோடு ஒப்பிட முடியுமா? நிச்சயமாக முடியாது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தை இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்தவர்கள் மேற்கொண்டது தவறு என்பது மௌலானாவின் கருத்து. காந்தியின் பிரதான கருத்துகளிலிருந்து பல விஷயங்களில் அவர் முரண்படுகிறார். (அவர் தன்னை முழு காந்தியவாதி என்றும் சொல்லிக் கொள்வதில்லை என்பது இங்கே மனங்கொள்ளத்தக்கது).
வன்முறையற்ற வழிமுறையையே முதல்தெரிவாகக் கொள்ள வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. வன்முறை என்பது நம் விருப்பத்துக்குரிய ஒரு வழிமுறையாக என்றுமே இருக்க முடியாது. “எதிரியைக் கூட போர்க்களத்தில் மட்டுமே சந்திக்க விரும்பாதீர்கள்” என்று நபிகள் நாயகம் அறிவுறுத்தினார்கள். ஆனால், சூழ்நிலைகளைப் பொறுத்து தேவையான தருணங்களில், தேவையான வழிமுறைகளை கைக்கொண்டு எதிர்த்தெழுவதை இஸ்லாம் அறம் என்றே சொல்கிறது. அதுவல்ல இங்கு பிரச்னை.
அவர் போராட்டம் என்பதையே வன்முறை என்கிற ரீதியில்தான் அணுகுகிறார். அவரைப் பொறுத்தவரை, சுரண்டலுக்கெதிரான அல்லது மனித உரிமை மீறலுக்கெதிரான போராட்டம் என்பதுகூட (அது எந்த வகையிலானாலும்) அமைதிக்குக் கேடு விளைவிக்கக்கூடிய ஒரு வன்செயல் மட்டுமே.
இன்னொருபக்கம் அவர் அநீதிகளுக்கு பலவேளைகளில் துணைபோகிறார். அவர் பாபர் மஸ்ஜிதை விட்டுக்கொடுக்கச் சொல்வதையோ, இடஒதுக்கீட்டை தேவையற்றது என கூறிவருவதையோ மட்டும் வைத்துக்கொண்டு நான் இதைக் குறிப்பிடவில்லை. அதற்குச் சான்றாக அவரின் பல நகர்வுகளை இங்கே சுட்டிக்காட்ட முடியும். அவர் முன்வைக்கும் சித்தாந்தத்தின் அடிப்படையே அதற்குக் காரணமாக உள்ளது.
இன்று நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை அவர் இறைவனின் படைப்புத் திட்டம் என்று சொல்லி, இந்தப் பிரச்னையின் உக்கிரத்தை முனைமழுங்கச் செய்கிறார். கம்யூனிஸ்டுகள் கூறும் பொருளாதார சமத்துவம் எனும் கற்பனாவாதத்தை இஸ்லாம் கொண்டிருக்கவில்லைதான். ஆனால், இப்போது நிலவும் ஏற்றத்தாழ்வு மிகவும் ஆபாயகரமானது. அடிப்படைத் தேவைகள்கூட பூர்த்தியாகாத பல கோடி மனிதர்கள் நம்மோடு வாழ்கிறார்கள். அதை இப்படி நியாயப்படுத்துவதை அநீதிக்குத் துணைபோவதாகவே கொள்ளவேண்டும்.
உண்மையில், அவரின் அணுகுமுறைக்கும் காந்திக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது திண்ணம். இதை சுருங்கச் சொல்லவேண்டுமெனில், காந்தி அஹிம்சையை ஒரு செயலூக்கமுள்ள போராட்ட வடிவமாகக் கொண்டிருந்தார். வஹீதுத்தீன் கான் போராட்டமே கூடாது என்கிறார்.
காந்தி பற்றி நிறைய சொல்லலாம். நுகர்வுக் கலாச்சாரம், இயந்திரமயமாதல் போன்றவற்றுக்கு மாற்றான ஒரு வாழ்வியலை முன்வைத்தவர் காந்தி. அஹிம்சை மட்டுமல்லாமல், பல அற்புதமான கருத்துக்களை சமூகத்திற்கு வழங்கியவர் அவர். அவரோடு, உலகமயமாக்கலின் மூலம் விளையும் கேடுகளைக் கண்டுகொள்ளாமல் அது ஏற்படுத்தும் நன்மைகளிலிருந்து பயன்பெறுங்கள் என்று சொன்ன வஹீதுத்தீன் கானை நாம் எப்படி ஒப்பிட இயலும்? (பார்க்க: Spirit of Islam – 2016 ஆகஸ்ட்).
ராபின் ஷர்மாவுடன் ஒரே நேர்கோட்டில்..!
கனடா நாட்டைச் சார்ந்த ராபின் ஷர்மாவின் சுயமுன்னேற்ற நூல்களும் உரைகளும் பிரபலமானவை. மைக்ரோ சாஃப்ட், ஃபெட்எக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு பயிற்சி வழங்கி, அவர்களின் உழைப்பை நிறுவனங்கள் சுரண்டுவதற்காக வகுப்பெடுப்பவர் ராபின் ஷர்மா. நம் தமிழ்நாட்டில்கூட இவருக்கு ரசிகர்கள் உண்டு.
இவரைப் பொறுத்தவரை, வறுமை, படிப்பறிவின்மை போன்ற பெரும் பிரச்னைகளெல்லாம் ஒழிய தனிமனித முயற்சியும் கடின உழைப்புமே தேவை. சமூக அமைப்பு, அரசியல் மாற்றம் என்பதெல்லாம் இந்த ‘அறிஞருக்கு’ ஒரு பொருட்டல்ல. மேற்சொன்ன பிரச்னைகளில் உழல்பவர்கள் தாங்களாகவே முன்னேறுவதற்கு வழியைத் தேடவேண்டும் என்கிறார் ராபின் ஷர்மா.
சமூகத்தில் இப்படி ‘சில’ பிரச்னைகள் இருக்கவே செய்யும். குறைகளை மட்டுமே நாம் தேடுகிறோம். அவற்றைக் கண்டுகொள்ளாமல் வாய்ப்புகளை மட்டும் பார்ப்போம் என்பார் அவர். பிரச்னைகளை சவால் என்கிற ரீதியில் அணுகவேண்டும் என்பது அடிக்கடி அவர் சொல்லும் அறிவுரை.
மேலே உள்ள இரு பத்திகளும் ராபின் ஷர்மாவுக்கு மட்டுமல்லாமல் மௌலானா வஹீதுத்தீன் கானுக்கும் கச்சிதமாகப் பொருந்திப் போகும். மற்றபடி, நவீன இஸ்லாமிய சிந்தனை மரபில் எந்தவொரு அறிஞரின் சிந்தனையோடும் மௌலானா வஹீதுத்தீன் கானின் சிந்தனைப் போக்கை அப்படியே ஒப்பிட முடியாது.
ஜமாலுத்தீன் ஆஃப்கானியை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். அவர் முன்வைத்த Pan islamism – ‘இஸ்லாமிய அகிலம்’ எனும் கருத்தாக்கத்திற்கும் வஹீதுத்தீன் கானின் சமூக மாற்றம் குறித்த பார்வைக்கும் இடையே கொஞ்சம்கூட பொருத்தமில்லை. ஏனெனில் இஸ்லாமிய அகிலம் என்பதனூடாகவே ஆஃப்கானியின் சிந்தனைப் போக்கின் அடிப்படை அமைந்துள்ளது. ஒருவேளை அவர் நவீன யுகத்திற்குத் தக்க இஸ்லாத்தை எடுத்துரைக்க முனைந்தார் என்பதற்காகவே அவரை வஹீதுத்தீன் கானோடு ஒப்பிட்டால், அது வலிந்து பொருத்தம் காண்பதற்கான முயற்சியே தவிர வேறில்லை. அரசியல் மாற்றத்திற்கு அதிக அழுத்தம் தந்த ஆஃப்கானியோடு வஹீதுத்தீன் கானின் சிந்தனை இணங்கிச் செல்லாது என்பது தெளிவு.
சரி, மாலிக் பின்நபியை வஹீதுத்தீன் கானோடு பொருத்த ஏதாவது முகாந்திரம் உள்ளதா? அல்ஜீரிய அறிஞர் மாலிக் பின்நபி இஸ்லாமிய நாகரிகத்தின் வீழ்ச்சி குறித்த ஆழமான பார்வையை கொண்டிருந்தார். அவரது பிரதிகள், முஸ்லிம்கள் மேற்குலகின் ஆக்கிரமிப்புக்கு உள்ளானதற்கான அகக்காரணிகளையும் புறக்காரணிகளையும் அலசுபவை. வெறுமனே மேம்போக்காக அல்லாமல் மிகவும் அறிவியல் பூர்வமான விளக்கங்களைத் தருபவை. மட்டுமல்லாமல், எழுச்சிக்கான பாதையை நமக்குக் காட்டித் தருபவை. ஆனால் மௌலானா வஹீதுத்தீன் கானின் அணுகுமுறை மிகவும் மேலோட்டமானது.
வஹீதுத்தீன் கான் ஜமாஅத்தே இஸ்லாமியின் தொடக்க காலத்தில் இருந்தவர். பேரறிஞர் மௌதூதி அந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர். இகாமத்துத்தீன், ஹாகிமியத் ஆகிய கருத்தாக்கங்கள் அவரின் பிரதிகளின் அடிநாதமாய் விளங்குபவை. வஹீதுத்தீன் கான் அந்த சித்தாந்தத்தில் உடன்பாடு கொள்ளாதவர். மௌதூதியின் சிந்தனையை விமர்சித்து எழுதிவருபவர். The Political Interpretation of Islam எனும் நூலில் விரிவாக இது குறித்து பேசுகிறார்.
ஒரு விஷயத்தை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகளின் இலக்கை தனிமனித மாற்றம் என்பதோடு முடித்துக்கொள்வது முறையான அணுகுமுறையல்ல. மௌலானா மௌதூதி இபாதத்களுக்கு சமூக பரிமாணம் உண்டு என்றார். அதை சடங்காகவோ ஆளுமை உருவாக்கத்திற்கான பயிற்சி என்பதாகவோ அவர் குறுக்கவில்லை. மௌதூதியின் சிந்தனை புரட்சிகரமானது. மானுடத்தின் விடுதலையில் கவனம் குவிக்கக்கூடியது. சரணாகதி அடையச் சொல்வதற்கு தத்துவார்த்த அடிப்படைகளை அது தேடாது. வஹீதுத்தீன் கான் கூறும் விமர்சனங்களில் உள்ள சிக்கல் குறித்து விரிவாக பேசவேண்டியுள்ளது. அதை மற்றொரு சந்தர்ப்பத்துக்கு ஒதுக்கி வைப்போம்.
வஹீதுத்தீன் கானை நவீன இஸ்லாமிய அறிஞர்கள் சிலரோடு ஒப்பீடு செய்து சிலர் பதிவிடுகிறார்கள். அதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. அப்படி ஒப்பிடுபவர்கள் வஹீதுத்தீன் கானின் சிந்தனைப் போக்கில் அந்த அறிஞர்களின் சிந்தனைகள் எந்தப் புள்ளிகளிலெல்லாம் சந்திக்கிறது என்பதை விளக்கவேண்டும். அல்லாமல், மொட்டையாக ஒப்பிடுவது மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்த மட்டுமே உதவும்.
அவரை யாருடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் என தீவிரமாக யோசித்தேன். அதற்குப் பொருத்தமான, சரியான ஆள் கனடா நாட்டு அறிஞர் ராபின் ஷர்மாவாகத் தான் இருக்க முடியும்!