கட்டுரைகள் 

உறவுச் சிக்கல்கள்

Loading

நூறு சதவீதம் நன்மையை மட்டுமே கொண்டது என்று எதுவுமேயில்லை. ஒவ்வொன்றும் நேர் எதிரான பக்கங்களையும் கொண்டிருக்கிறது. ஒன்றைப் பெற வேண்டுமானால் இன்னொன்றை இழக்க வேண்டியிருக்கலாம். ஒருவரிடமிருந்து பயனடைந்து கொள்ள விரும்பினால் அவரது எதிர்மறை பண்புகளையும் நாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கலாம்.

உறவுகளால் நண்பர்களால் ஏற்படும் தொல்லைகளையும் துன்பங்களையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்களை விட்டு விலகக்கூடியவர்கள் தனிமையின் வெம்மையில் வீழ்ந்து நிராசையடைகிறார்கள். மன்னிக்கும் பண்போ கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் மனநிலையையோ பெறாதவர்கள் உறவுகளையும் நட்புகளையும் எளிதில் இழந்து விடுகிறார்கள்.

மனிதர்கள் எதிரெதிர் பண்புகளைக் கொண்டவர்கள். நீங்கள் கஷ்டப்படும்போது ஓடிவந்து உங்களுக்கு உதவி புரிவார்கள். நீங்கள் நல்ல நிலையில் இருக்கும்போது பொறாமை கொண்டு உங்களை வீழ்த்தவும் முனைவார்கள். இரக்கமும் பொறாமையும் அவர்களின் இயல்பிலேயே உள்ள குணங்கள்தாம். மனிதர்களை உள்ளபடியே ஏற்றுக்கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. அப்படித்தான் நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். விருப்பத்திற்குரியவர்களின் எதிர்மறைக் குணங்களை நாம் கண்டும் காணாமல் விட்டு விடுகிறோம். நமக்குப் பிடிக்காதவர்களின் சிறு சிறு தவறுகளையும் ஊதிப் பெரிதாக்குகிறோம். அன்புதான் மிகச்சிறந்த இணைப்புப்பாலம். அதன் வழியாக கடக்க முடியாத இடங்களையும் கடந்துவிடலாம்.

மனதில் குமுறிக் கொண்டிருக்கும் வெறுப்பு மனிதனைக் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷம். அது தனக்கான சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து புகைந்து கொண்டிருக்கிறது. இந்த வெறுப்பை எரியச் செய்வதிலும் அணையச்செய்வதிலும் உடனிருப்பவர்களின் பங்கு முக்கியமானது. நல்லவர்கள் வெறுப்பு என்னும் தீயை அணைக்க முயற்சிக்கிறார்கள். தீயவர்கள் அதனை இன்னும் மூட்ட முயற்சிக்கிறார்கள்.

தம் அருகில் நல்லவர்களைப் பெற்றிருப்பவர்கள் பாக்கியவான்கள். அவர்களின்மூலம் இவர்கள் அந்த நோயின் பாதிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுகிறார்கள். அருகில் மோசமானவர்களைப் பெற்றிருப்பவர்கள் துர்பாக்கியவான்கள். அவர்களினால் இவர்களின் நோய் முற்றிவிடுகிறது. ஷைத்தான் ஊடுருவும் முக்கியமான வழி இது. அவன் சிறு தீப்பொறி கிடைத்தாலும் அதனை எப்படியாவது பெரும் நெருப்பாக மாற்றிவிட முயல்கிறான். பலவீனமான ஆன்மாக்களைப் பெற்றவர்கள் அவனது தூண்டுதலுக்குப் பலியாகிவிடுகிறார்கள். பலமான ஆன்மாக்களைப் பெற்றவர்கள் அவனை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

நண்பர்களை சம்பாதிப்பது, உறவுகளைத் தக்க வைப்பது கடினமானது. ஆனால் அவற்றை துண்டித்துவிடுவது எளிதானது. சம்பாதிப்பதற்கும் தக்க வைப்பதற்கும் பொறுமையும் முயற்சியும் அவசியம். துண்டித்து விடுவதற்கு ஒருவனிடமிருந்து வெளிப்படும் கீழான உணர்வுகளே போதுமானது.

உறவுச்சிக்கல்கள் நிரந்தரமானவை. விட்டுக்கொடுத்தல்கள், கண்டுகொள்ளப்படாமல் விட்டுவிடுதல்கள் இன்றி உறவுகள் நீடிக்காது. மனித மனம் சுயநலம் படிந்ததுதான் என்று குர்ஆன் கூறுவதை எப்போதும் நினைவில்கொள்ள வேண்டும்.
காரணமின்றி தோன்றும் வெறுப்புணர்ச்சி தானாகவே மறைந்துவிடும். நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான், அவ்வுணர்ச்சியை சம்பந்தப்பட்டவர் உணரும்விதமாக வெளிப்படுத்தி அவரை புண்படுத்திவிடக்கூடாது. நம் உணர்ச்சிகளை முடிந்த அளவு கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்துவதுதான் உண்மையான வீரம் என்கிறது இஸ்லாம்.

கோபத்தில் வெளிப்படும் வார்த்தைகள் அர்த்தமற்றவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். முடிந்த அளவு உடனுக்குடன் பதிலளிப்பதைத் தவிர்க்க வேண்டும். உடனுக்குடன் பதிலளிக்கப்படாமல் தள்ளிப்போடப்பட்டாலே பல பிரச்சனைகள் தீர்ந்துவிடுகின்றன. கோபம் தணிந்த பிறகு சம்பந்தப்பட்டவர் தாம் பேசிய வார்த்தைகளுக்காக நிச்சயம் வருத்தப்பட்டு மன்னிப்புக் கோருவார்.

உணர்வுப்பூர்வமான விசயங்களில் உடனுக்குடன் தீர்வை எதிர்பார்க்கக் கூடாது. சிறிது காலம்வரை ஆறப்போடப்பட்டாலே அவை தாமாகவே அடங்கிவிடும். அவற்றுள் பல தற்காலிகமான கோபத்தின், வெறுப்பின், பொறாமையின் விளைச்சல்களாகவே இருக்கும். அவற்றில் உடனுக்குடன் தீர்வை எட்ட முயன்றால் அவை பிரச்சனையின் தீவிரத்தை இன்னும் அதிகப்படுத்தும். தனிமனிதனின், சமூகத்தின் அமைதியைக் கெடுக்கும்.

ஒரு மனிதன் கடந்த காலங்களில் தான் யாருடனெல்லாம் பகைமை பாராட்டினேன்? என்னென்ன காரணங்களுக்காக பகைமை பாராட்டினேன்? என்பதை அசைபோட்டுப் பார்த்தால் அவனுக்கு வருத்தமே எஞ்சும். அற்ப காரணங்களுக்காக சண்டையிட்டுக் கொண்டேமே! என்று அவன் தன்னைத் தானே நொந்து கொள்வான். அப்போது அவன் கண்களுக்கு வீரியமாகத் தெரிந்த காரணங்கள் இப்போது அற்பமானவையாகத் தெரியலாம்.

பொறுமைக்கு தொடர் பயிற்சி அவசியம். ஒரு மனிதன் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள தன்னை கொஞ்சம் கொஞ்சமாக பழக்கிக் கொள்ள வேண்டும். தன் கோபத்தை, வெறுப்பை, பொறாமையை கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறும் மனிதன் மகத்தான மனிதனாக மாற்றடைகிறான். பொறுமை என்பது தீய உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருப்பதும் அவற்றின் மூலமாக நமக்கோ மற்றவர்களுக்கோ தீங்கு நேர்ந்துவிடாமல் காத்துக் கொள்வதும் ஆகும்.

நோன்பு வைப்பதும் பொறுமைக்கான பயிற்சிகளில் ஒன்றாகும். அதன்மூலம் அவன் இச்சைகளின் பிடியிலிருந்து விடுபட்டு அவற்றை தன் பிடிக்குள் கொண்டு வருகிறான். இளைஞர் சமூகத்தைப் பார்த்து நபியவர்கள், “இளைஞர் சமூகமே! உங்களில் மணமுடித்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும். மற்றவர்கள் நோன்பு வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு ஒரு கேடயமாகும்” என்று கூறுவது இந்த அடிப்படையில்தான் என்று நான் கருதுகிறேன்.

மனித மனம் எந்தவொன்றையும் உடனடியாக ஏற்றுக் கொள்ளாது. அதற்கு அவகாசம் அவசியம். எந்தவொன்றும் அதற்கு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புகட்டப்பட வேண்டும். எந்தவொன்றிலிருந்தும் அதனை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விடுவிக்க முடியும். நீண்ட, தொடர் பயிற்சிக்கு அது உட்படுத்தப்பட வேண்டும். இஸ்லாமிய மொழி வழக்கில் தஸ்கிய்யா, தர்பிய்யா என்ற சொல்லாடல்கள் இதனையே சுட்டுகின்றன.

மனிதனின் விருப்பும் வெறுப்பும் இடம்பெயர்ந்துகொண்டே செல்லும். அவற்றிற்கு நிரந்தரம் கிடையாது. அவன் நேற்று விரும்பியதை இன்று வெறுக்கலாம். இன்று விரும்புவதை நாளை வெறுக்கலாம். மனிதனிடம் பகைமை, வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளை ஏற்படுத்தி இறைவன் அவற்றை ஷைத்தானை நோக்கிப் பயன்படுத்துமாறு கட்டளையிடுகிறான். உங்களால் யாரையும் விரும்பாமல், வெறுக்காமல் இருக்க முடியாது. உங்களின் மொத்த வெறுப்பையும் ஷைத்தானின் பக்கம் திருப்புங்கள். உங்களின் நேசத்தை இறைவனின் பக்கம், அவது நேசர்களின் பக்கம் திருப்புங்கள்.

வெறுப்பு என்னும் உணர்ச்சி இடம் மாறிக் கொண்டே சென்றாலும் அது மனித மனதைவிட்டு அகலுவதில்லை என்றே கருதுகிறேன். அதற்கு மனித மனதில் ஏதேனும் ஓரிடம் தேவைப்படுகிறது.
ஷைத்தானை உங்களின் பகைவனாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று இஸ்லாம் குறிப்பிடுவதை நான் இவ்வாறுதான் அணுகுகிறேன். மனித உருவில் வெளிப்படும் ஷைத்தான்களிடம் உங்களின் பகைமையுணர்ச்சி முழுவதையும் கொட்டிவிடுங்கள். நேசிக்கத் தகுதியானவர்களை நீங்கள் நேசிப்பதுபோல வெறுக்கத் தகுதியானவர்களை வெறுக்கவும் செய்யுங்கள்.அனைவரிடமும் அன்பைப் பொழியுங்கள் என்ற அறிவுரை மனித இயல்பை அறியாமல் கூறப்பட்ட வெற்று மொழி என்றே கருதுகிறேன்.

சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமான மோதல் தொடர்ந்து நிகழக்கூடிய இயல்பான ஒன்றுதான். இறுதியில் சத்தியமே மேலோங்கும் என இஸ்லாம் வாக்களிக்கிறது. அசத்தியம் வெள்ள நுரையைப் போன்று மேலேழும்பி வந்தாலும் வந்த வேகத்தில் மறைந்தும் விடும். சத்தியத்திற்கு மட்டும் நீடிக்கும் தன்மையுண்டு. அந்த குறிப்பிட்ட எல்லைவரை பொறுமையுடன் பயணிக்க வேண்டும் என்று இஸ்லாம் நம்பிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறது.

Related posts

Leave a Comment