வதை முகாம்களில் உய்குர் முஸ்லிம்கள்
சீனாவின் கிழக்குப் பிராந்தியமான சிங்ஜியாங் மாநிலத்தில் வாழும் உய்குர் முஸ்லிம்கள் திரைமறைவில் ஒரு கலாச்சாரக் கூட்டுப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று மனித உரிமைகளைக் கண்காணிக்கும் சர்வதேச அமைப்பு (Human Rights Watch) வெளியிட்ட நீண்ட அறிக்கை உலகை ஒருகனம் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. சிறுபான்மையினர் போராட்டங்களைப் ஆய்ந்தறியும் ஆய்வாளர்களையும் சர்வதேச மீடியாக்களையும் சீனாவை நோக்கி அந்த அறிக்கை திருப்பியது. அதையொட்டி சர்வதேச அளவில் சீனாவுக்கெதிரான எதிர்ப்பலைகள் எழத் தொடங்கின. அந்த அறிக்கையின் அடிப்படையில், சமீபகாலமாக உய்குர் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை முன்வைக்கிறது இந்தக் கட்டுரை.
இஸ்லாமியப் பாரம்பரியமிக்க உய்குர் முஸ்லிம்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களை கலாச்சார நீக்கம் செய்யும் நோக்கத்துடன் முகாம்களில் தடுத்து வைத்திருக்கிறது சீன அரசாங்கம். அங்கே சீனாவின் கம்யூனிசக் கொள்கைகள், மதச்சார்பற்ற விழுமியங்கள் அவர்களிடம் திணிக்கப்படுகின்றன. சீனாவின் அரசாங்கக் கட்சியான சீன கம்யூனிசக் கட்சியின் கீதங்களை காலையிலும் மாலையிலும் பாடுவது அவர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, அவர்கள் சீனாவின் அரசியல் தலைவர்களைப் பாராட்டவும் புகழவும் வேண்டும். சுருங்கக்கூறின், அவர்கள் முழுமையாக இஸ்லாமியக் கலாச்சார அடையாளங்களைத் துறப்பதற்கான நிர்பந்தத்தையும் பயிற்சியையும் சீன அரசு அளிக்கிறது என மேற்கூறிய அறிக்கை கூறுகிறது. யூதர்களை இனச்சுத்திரிப்புச் செய்வதற்கு நாஸிகள் உருவாக்கிய வதை முகாம்களுடன் உய்குர் முஸ்லிம்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள முகாம்களை சில சமூகச் செயல்பாட்டாளர்கள் ஒப்பிடுகிறார்கள். அங்கு ஹிட்லர் யூதர்களை இனச்சுத்திரகரிப்புச் செய்தான். இங்கு சீன அரசாங்கம் முஸ்லிம்களை கலாச்சார சுத்திகரிப்புச் செய்கிறது. இதுதான் நாஸி முகாம்களுக்கும், சீனாவின் வதை முகாம்களுக்கும் இடையிலான ஒரே வித்தியாசம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
சிங்ஜியாங் மாநிலம் மூச்சுவிடுவதையும் மோப்பம் பிடிக்கும் பீஜிங்
பதினொரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் வாழும் சிங்ஜியாங் மாநிலத்தை ஒரு திறந்த சித்திரவதைக் கூடமாகவே சீன அரசு நடத்துகிறது. உய்குர் முஸ்லிம்களின் ஒவ்வொரு வினாடியையும் நோட்டமிட்டு வருகிறது. அவர்களைத் துப்பறியும் நோக்குடன் மாநிலம் முழுக்க கேமராக்களைப் பொருத்திவைத்து கண்காணிக்கிறது. அங்கு அவர்கள் தம் குழந்தைகளுக்கு இஸ்லாமியப் பெயர்களை வைக்க இயலாது; பொதுவெளியில் ஒருவரைப் பார்த்து இன்னொருவர் ஸலாம் கூறவோ, இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்யவோகூட முடியாது. இதுதவிர, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளுடன் தொடர்புகள் வைத்துக்கொள்ளக்கூட அவர்களுக்குத் தடை; 18 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்லவும் தடை. மேலும், ரமளானில் மதிய உணவை இலவசமாக வழங்கி, பலவந்தமாக முஸ்லிம்களை உண்ணச் சொல்கிறது சீன அரசு.
உய்குர் முஸ்லிம்கள் மீது அரசு கட்டவிழ்த்துவிடும் கொடுமைகளின் பட்டியல் இன்னும் நீண்டுகொண்டே செல்கிறது. அவர்கள் இரவுநேர களியாட்ட விடுதிகளுக்குச் செல்ல நிர்பந்திக்கப்படுகின்றனர். குறிப்பிட்ட வயதுக்குட்பட்டவர்கள் தாடி வைத்துக்கொள்வதும் தடை செய்யப்பட்டிருக்கிறது. சீன மொழியையும் அதனுடைய வரலாற்றையும் மட்டுமே பாடசாலைகளில் கற்பிக்க முடியும் என்கிற சூழல் அங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு பெருங்கொடுமை என்னவெனில், பொதுவெளியில் இஸ்லாமிய வரையறைகளுக்கு ஏற்ப முஸ்லிம்கள் நடந்துகொள்வதாக யாரேனும் உணர்ந்தால் உடனே அருகிலுள்ள காவல்நிலையத்தை அணுகுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல, யாரேனும் குர்ஆனின் வழிகாட்டுதல்களின்படி வாழ்வதாக பொதுவெளியில் கூறினால் அதுவே அவர் தீவிரவாதக் குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்படுவதற்கு போதுமான நியாயமாகும் என சீன அரசு எச்சரித்துள்ளது. ஒவ்வொரு உய்குர் முஸ்லிமும் பயன்படுத்தும் வாகனம் முதல் சமையலறை கத்தி, கரண்டி போன்ற இதர உபகரணங்கள் வரை பதிவு செய்யப்படுகின்றன. தமது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடக்கும் முஸ்லிம்களை ‘நல்ல குடிமக்கள்’ என்றும், அதைப் பொருட்படுத்தாமல் நடந்துகொள்ளும் முஸ்லிம்களை ‘தாய் நாட்டுப்பற்று இல்லாதவர்கள்’ என்றும் சீன அரசாங்கம் தரப்படுத்துகிறது. இதை “Social Credit System” என அந்நாட்டு அதிகாரிகள் அழைக்கிறார்கள். நாட்டின் மீதும், அதன் சோசலிசப் பெறுமானங்கள் மீதும், சீனாவின் ஹான் பெரும்பான்மைச் சமூகக் கலாச்சாரத்தின் மீதும் முஸ்லிம்கள் எந்த அளவு விசுவாசத்தை வைத்திருக்கிறார்கள் என்பதை மதிப்பிட்டு புள்ளிகள் வழங்குகிறார்கள்! குறைந்த புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் உய்குர் முஸ்லிம்கள் முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். பின்பு பலவந்தமாக சீனக் கலாச்சாரம் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. இவ்வாறு ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் முகாம்களில் அவதியுறுகிறார்கள்.
உய்குர் முஸ்லிம்கள் ஏன் கலாச்சாரக் கூட்டுப் படுகொலை செய்யப்படுகிறார்கள்?
சீனாவில் 55 இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மைச் சமூகங்கள் வாழ்வதாக அதனுடைய அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கூறுகின்றன. முழு சீனாவினுடைய ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 8 சதவீதத்தினரே சிறுபான்மையினர். அந்த எட்டு வீதத்தில் உய்குர் மற்றும் ஹுய் இனத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பகுதி உள்ளனர். இந்த இரண்டு சிறுபான்மைச் சமூகத்தினரும் பாரம்பரியமாக இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள். ஹுய் இன முஸ்லிம்கள் சீனாவின் அனைத்துப் பிராந்தியங்களிலும் பரந்து வாழ்கிறார்கள். உய்குர் முஸ்லிம்கள் புவியரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்ற சீனாவின் கிழக்குப் பிராந்தியமான சிங்ஜியாங் பிராந்தியத்தில் வாழ்கிறார்கள். இம்மாநிலத்தில் 55 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் உய்குர் முஸ்லிம்களே என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், சிறுபான்மைச் சமூகமொன்று பெரும்பான்மையாக வாழும் சீனாவினுடைய ஒரே மாநிலமாக சிங்ஜியாங் இருந்து வருகிறது. மேற்கூறிய விவரங்களே உய்குர் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதற்கான பின்னணியை நமக்கு உணர்த்தும்.
பன்னெடுங்காலமாய் சீனாவில் வாழ்ந்துவரும் உய்குர் முஸ்லிம்களுடைய பாரம்பரிய வரலாற்று வேர் துருக்கியை நோக்கி மீள்வதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இஸ்லாமிய நாகரிக எழுச்சியில் காத்திரமான பங்கு வகித்த சமூகக் குழுவாக உய்குர் முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள். மத்தியாசிய, தெற்காசிய சமூகங்களுடன் நெருக்கிய உறவையும் வரலாற்றுப் பிணைப்பையும் கொண்டவர்கள் அவர்கள். மட்டுமன்றி, கிழக்கு துர்கிஸ்தானுடைய ஆட்சி விரிவடைந்துகொண்டு சீனாவினுடைய எல்லைக்குள் ஊடறுத்துச் செல்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே சீனப் பெருங்சுவர் கட்டப்பட்டதாக சில வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
வரலாறு நெடுகிலும் கிழக்குத் துருக்கிஸ்தான் என்ற தனித்துவமான ஆட்சிப் பிரதேசமொன்றின் சொந்தக் காரர்களாக உய்குர் முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள். இன்றும் உய்குர் முஸ்லிம்கள் தங்களை “கிழக்கு துர்கிஸ்தான்” எனும் தேசத்தின் குடிமக்களாகவே கருதுகிறார்கள். சீனாவில் காலனிய அடக்குமுறை ஏற்பட்டதன் விளைவாகவே கிழக்கு துர்கிஸ்தான் என்ற வரலாற்றுப் பாரம்பரியமிக்க பெயர் ‘சிங்ஜியாங்’ என்று மாற்றியமைக்கப்பட்டது.
கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக தனது கலாச்சாரத் தனித்துவத்தையும், சமய அடையாளங்களையும் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு உய்குர் முஸ்லிம்கள் சீன அரசுடன் போராடி வந்திருக்கிறார்கள். அவர்களின் கலாச்சாரத் தனித்துவம், முஸ்லிம் வரலாற்றுப் பாரம்பரியத்துடன் அவர்களுக்கு இருக்கும் உறவு, தனது அரசியல் தனித்துவத்திற்காக தொடர்ந்து உழைக்கும் வேட்கை போன்றவையே அவர்கள் திட்டமிட்டு கலாச்சாரக் கூட்டுப் படுகொலைக்கு ஆட்டுபடுத்தப்படுவதன் பிரதான பின்புலங்களாகும்.
சீனாவினுடைய மதச்சார்பற்ற சோசலிசக் கொள்கைகளுக்கும், பெரும்பான்மை ஹான் இனத்தவர்களின் கலாச்சாரத்துக்கும் தக்கவாறு தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டும் என உய்குர் முஸ்லிம்களுக்கு சீனா அழுத்தம் கொடுக்கிறது. தங்களின் தனித்துவத்தையும் அடையாளங்களையும் கைவிடுவதற்கு அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். காரணம், ஒவ்வொரு சிறுபான்மைச் சமூகமும் கொண்டுள்ள தனித்துவமும் பிரத்தியேகமான வரலாற்றுப் பாரம்பரியங்களும் என்றோ ஒருநாள் சீனாவின் அரசியல் அடையாளமாகவும், பிரவினைவாதமாகவும் மாறலாம் என சீன கம்யூனிசக் கட்சி சந்தேகிக்கிறது. எனவேதான் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் சீனாவினுடைய இறையாண்மைக்கும், அரச கொள்கைகளுக்கும் எதிரானதாக அது காண்கிறது. இந்தப் பின்னணியில்தான் திபெத் பௌத்த சமூகங்களும், உய்குர் முஸ்லிம்களும் நசுக்கப்படுவதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
இன்னொரு கோணத்திலிருந்தும் இப்பிரச்னையைப் பார்க்க முடியும். புவியரசியல் ரீதியாகவும் சிங்ஜியாங் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமாகும். கேஸ், எண்ணை போன்ற கணிம வளங்களையும் செழிப்பான விவசாய நிலத்தையும் அப்பிராந்தியம் கொண்டிருக்கிறது. தெற்காசியா, மத்திய ஆசியா, ஜரோப்பா போன்ற முப்பெரும் நிலப்பகுதிகளுக்கான தரைவழிப் பாதையும் உய்குர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சிங்ஜியாங் மாநிலத்தின் வழியாகவே ஊடறுத்துச் செல்கிறது. சீனாவினுடைய தற்போதைய ஜனாதிபதி க்ஷி ஜின்பிங் அறிமுகம் செய்துள்ள ‘One Belt One Road’ என்ற சர்வதேசம் தழுவிய மாபெரும் பொருளாதார செயல்திட்டத்தின் மையம் (Core-Area) என சிங்ஜியாங் மாநிலத்தை சீன அரசு பிரகடனம் செய்திருக்கிறது. குறித்த செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மூலோபாயப் பாதைகள் சிங்ஜியாங் மாநிலத்திற்கூடாகவே செல்கிறது.
உய்குர் முஸ்லிம்களின் கலாச்சார அடையாளங்களை நீக்கம் செய்வதற்கு கட்டம் கட்டமான பல்வேறு திட்டங்களை கடந்த இரண்டு தசாப்தங்களாகவே செயல்படுத்தி வந்திருக்கிறது சீனா. அவை அனைத்தும் தோல்வியில் நிறைவடையவே வதை முகாம்களுக்குள் உய்குர் முஸ்லிம்களை உள்வாங்கி பலவந்தமாக கலாச்சாரத் திணிப்புக்கு ஆட்படுத்தும் தீர்மானத்திற்கு அது வந்திருக்கிறது என்கிறார் சீனா சிறுபான்மைகள் தொடர்பான ஆய்வாளர் அட்ரியன் ஸென்ஸ்.
ஆரம்பத்தில் சிங்ஜியாங் மாநிலத்தை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்வதன் மூலமும், அதனுடைய சடவாத பலன்களை அனுபவிப்பதற்குரிய வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதன் மூலமும் உய்குர் முஸ்லிம்களின் தனித்துவத்தைக் கட்டுப்படுத்த முடியும் என அவர்கள் திட்டமிட்டனர். பின்பு இரண்டாம் கட்டமாக அந்த பிராந்தியத்தில் ஹான் இனத்தவர்களைக் குடியேறச் செய்வதன் வழியாக உய்குர் முஸ்லிம்களின் பெரும்பான்மைப் பலத்தை இழக்கச் செய்யும் தந்திரத்தை சீன அரசு கையிலெடுத்தது. விளைவாக, 1940ல் சிங்ஜியாங் மாநிலத்தில் வெறும் 6 சதவீதமாக இருந்த ஹான் இனத்தவர்கள் இன்று 40 சதவீதமானவர்களாக அதிகரித்துள்ளனர். மறுபுறம், அங்கு வாழும் ஒவ்வொரு நான்கு ஹான் இனத்தவர்களிலும் ஒருவர் சீனாவினுடைய உளவுப் பிரிவுக்காக துப்பறியும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்தநேரமும் ஹான் இனத்தவர்கள் உய்குர் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து விசாரனை செய்வதற்கு உரிமை வழங்கப்பட்டிருக்கிறார்கள். இறுதியாக, மூன்றாம் கட்டத்தில்தான் வலுக்கட்டாயமாகவேனும் கலாச்சார நீக்கம் செய்யவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது சீன அரசு என்கிறார் ஆய்வாளர் அட்ரியன்.
உய்குர் முஸ்லிம்களைக் கலாச்சார நீக்கம் செய்துவரும் சீனாவின் கோரத்தாண்டவத்தை விட்டு சர்வதேச நாடுகளின் கவனத்தைத் திருப்பிவிடுவதில் சீன அரசு ஓரளவு வெற்றிபெற்றிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். குறிப்பாக, பிராந்திய நாடுகள் அனைத்தும் சீனாவினுடைய நேரடிப் பொருளாதார உதவியையும், அதன் ‘One Belt One Road’ பொருளாதாரத் திட்டத்தில் பயனையும் பெறுவதற்கு வாயைப் பிளந்துகொண்டு எதிர்பார்த்திருக்கின்றன. மறுபுறம், சீனாவினுடைய ‘வீடோ” அதிகாரத்துக்கு அஞ்சி வேறுபல நாடுகள் மௌனிகளாக நிற்கின்றன. அமெரிக்கா கைவிடும் பட்சத்தில் பற்றிக்கொள்வதற்கு எஞ்சியுள்ள ஒரே ஒரு பொருளாதார சக்தி வாய்ந்த நாடு சீனா மட்டுமே என்ற எண்ணத்தில் பல முஸ்லிம் உலக நாடுகள் வாய்மூடி சலமற்று இருக்கின்றன. இவை அனைத்தையும் தொகுத்துக்கொண்டு சாரம்சத்தை இன்னொரு வசனத்தில் சொன்னால், பிராந்திய நாடுகள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் சீனாவுடைய பொருளாதார ரீதியான நவகாலனியத்திற்குள் சிக்கித் தவிக்கும்போது, எப்படி உய்குர் முஸ்லிம்கள் மீது அது கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறையையும், கலாச்சார நீக்கத்தையும் கேள்வி கேட்க முடியும்?
இத்துணை சவால்களுக்கு மத்தியில்தான் மேற்குலக நாடுகளிலும், ஏனைய பிராந்திய நாடுகளிலும் உய்குர் முஸ்லிம்கள் கவன ஈர்ப்புப் போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தியிருக்கிறார்கள். அதில் பங்குகொள்ளும் உய்குர் இனத்தினர் குறித்த விவரங்கள் சீனாவுடைய உளவுத்துறைக்குத் தெரியவரும் பட்சத்தில் குறித்த நபருடைய குடும்பம் வரவழைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆட்படுத்தப்படுகிறது. இப்படியாக சீனாவின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.