சாயாக்கடை விஜயனும் மொய்து கீழிச்சேரியும்
சாரம், போர்வை, முண்டு, முப்பது ரூபாய் சட்டை, சோப்புடன் தாள் சுருளில் கொஞ்சம் முகப்பவுடர் அடங்கிய கட்டைப்பை துணையாக தமிழ்நாட்டின் பெரும் பகுதியில் இயக்க வாழ்க்கைக்காகத் திரிந்த நாட்கள். உடு துணிகளை அன்றன்றைக்கு அலசி விடுவதுண்டு.1998ம் ஆண்டு தொழில் வாழ்க்கைக்கு வரும் வரைக்கும் துணிகளுக்கு இஸ்திரி என்பது இல்லை. பையில் புதியதாக அனுமதி என்றால் அது இதழ்களுக்கும் கடலை மிட்டாய்க்கும் மட்டும்தான்.
வீடுகள், பள்ளிவாயில்கள், மதரசாக்களில் இராத்தங்கல். விடுதிகளில் தங்குவது என்பது நடந்ததேயில்லை. ஒரு திரும்பும் பயணத்தில் இரவு எட்டரை மணிக்கு உதகமண்டல பேருந்து நிலையத்தில் மெல்லிய பருத்தி குர்த்தா, பைஜாமாவும் இரப்பர் செருப்புமாக நானும் நண்பன் உவைசும் நின்றிருந்தோம். இனி கீழிறங்க பேருந்து இல்லையென்றவுடன் மெல்ல வந்து தனது இருப்பைச் சொல்லியது குளிர். இரண்டரை வருட அலைதல் வாழ்க்கையில் அப்போதுதான் விடுதியில் ஒதுங்கும் தேவை முதன்முதலாக ஏற்பட்டது.
இரயில் பயணங்களில் இருக்கை கிடைத்தால் சரி. இல்லையென்றால் மூன்றாம் வகுப்பு. இருக்கைக்கு அடியில் முண்டு விரித்து நீட்டி மலந்து விடுவதுதான். மஞ்சள் பல்பின் தெளிந்த ஒளியில் தனக்குத்தானே பேசிக்கொண்டு கையை முறுக்கிக்கொண்டிருந்த காவியுடை துறவி, திரைப்படப் பாடல்களை டிஎம்எஸ், சீர்காழியின் குரல் கலவையில் அலையடிக்கப் பாடிக்கொண்டே வந்தார் பணியிலிருந்து திரும்பும் புறநகர் வாசியொருவர். தமிழகத்துக்கு உள்ளே என்றால் அரசு பேருந்துகள். கேரளத்துக்கு என்றால் இரயில் மட்டும்தான். அங்கு போகும் இரயில்களில் நாம் இறங்குமிடம் வரைக்கும் நெரிசல் குறைவதேயில்லை.
அலைதல் ஒழிந்து தொழில் ரீதியான நெடும் பயணங்கள் ஒன்றிய நிலத்தின் குறுக்கும் நெடுக்குமாகத் தொடங்கின. அலைதல் காலத்தைப் போலில்லாமல் இந்தப் பயணங்கள் துல்லியமாக எண்ணி திட்டமிடப்படப்படுபவை. இந்த முழு ஏற்பாட்டுப் பயணங்களுக்குப் பழகிய முதுகு, திட்டமிடப்படாத மின்னல் பயணங்கள் என்றவுடன் சுணங்கத்தான் செய்கின்றது.
2017ம் ஆண்டு நண்பர்களுடன் போய் வந்த வடகிழக்கிந்திய பயணமானது இருபதாண்டுகளுக்கு முன்னர் நின்று போன அலைதல் பயணங்களை மீட்ட உதவின.
அதன் பிறகு அலைதலுக்கென்றே நேர்ந்து விடப்பட்ட உதிரி மனிதர்கள், சொந்த வாழ்க்கையிலிருந்து அவ்வப்போது கழன்று பயணப்படும் மனிதர்கள் பற்றிய காணொளிகள், அச்சு பதிவுகளைத் தேர்ந்து படிக்கத் தொடங்கிய பிறகு அண்மையிலுள்ள ஆனால் இதுவரை போகாத இடங்களுக்கான குறு, சிறு பயணங்களைக்கூட செறிவுள்ளதாய் ஆக்க முடிந்திருக்கின்றது.
கடந்த ஒன்றரை வருடங்களில் அப்படி அறிய நேர்ந்த இரண்டு மனிதர்கள். ஒருவர் கேரளம் மலப்புரம் மாவட்டத்தின் கீழிச்சேரியைச் சேர்ந்த மொய்து. அடுத்தவர் கொச்சியின் தேநீர்க்கடை கே.ஆர்.விஜயன். பெருந்தொற்று முடக்கு கழிந்த பிறகு மொய்து கீழிச்சேரியைச் சந்திக்க வேண்டும் என நினைத்திருந்தேன். சென்ற ஆண்டு தனது அறுபத்தொன்றாம் வயதில் சிறுநீரக பாதிப்பினால் இறந்து போனார் அவர்.
அவர் இறந்து ஒரு வருடம் தாண்டிய நிலையில் எழுபத்தோரு வயதான கே.ஆர்.விஜயனும் இவ்வருட நவம்பர் மூன்றாவது வாரத்தில் நெடும் பயணமொன்றிற்குள் நுழைந்து விட்டார்.
கொச்சி கடவந்தர காந்தி நகர் சலீம் ராஜன் சாலையிலுள்ள தனது தேநீர்க் கடையில் கிடைத்த வருமானத்தின் மூலம் பதினான்கு ஆண்டுகளில் ஆறு கண்டங்கள், இருபத்தாறு நாடுகளுக்கு மனைவி மோகனாவுடன் சுற்றுப்பயணம் செய்த அவர் அங்கெல்லாம் எடுத்துக்கொண்ட ஒளிப்படங்களைக் காட்சிப்படுத்தியிருக்கின்றார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இரஷ்யாவிலிருந்து கே.ஆர்.விஜயனும், அவரின் மனைவி மோகனாவும் சுற்றுலாவை முடித்துக்கொண்டு கேரளா திரும்பினர். அடுத்ததாக, ஜப்பான், வியட்நாம், கம்போடியா நாடுகளுக்குச் செல்ல இருவரும் திட்டமிட்டிருந்த நிலையில் கே.ஆர்.விஜயன் காலமானார்.
முதன்முதலில் 2007ம் ஆண்டு எகிப்து நாட்டுக்கு கே.ஆர்.விஜயன், மோகனா இணையர் சுற்றுலா சென்றனர். தேநீருடன் புட்டு, பயறு, கிழங்கு, சிறு பூரி, புழுங்கிய பழம் உள்ளிட்ட சிறுகடிகளைச் செய்து விற்ற வருமானத்தில் நாளொன்றுக்கு முன்னூறு ரூபாய்களை இதற்கென ஒதுக்கி வைப்பர்.
பயணத்திற்குத் தேவையான பணம் சேராத ஒரு கட்டத்தில் வங்கியில் கடன் கேட்டு போயிருக்கின்றனர். அவர்கள் இவர்களை நம்ப கொஞ்ச காலம் பிடித்தது. ஒரு வழியாக கடன் கிடைத்தது. இருவரும் சுற்றுலா சென்றுவந்தபின், வங்கியில் பெற்ற கடனை விஜயன் முறைப்படி திருப்பிச் செலுத்தினார். இதனால் வங்கியில் கிடைத்த நற்பெயரைக் கொண்டு அடுத்தடுத்து நாடுகளுக்குச் சுற்றுலா செல்ல இருவரும் தொடங்கினர்.
விஜயனின் புகழ் கேரளாவில் பரவத் தொடங்கியபின், பலரும் விஜயன் மோகனா இணையருக்கு சுற்றுலா செல்ல அனுசரணை செய்தனர். 2019ம் ஆண்டில் விஜயன் இணையர் ஆஸ்திரேலியா சென்று வந்தனர். இந்தப் பயணத்திற்கான அனுசரணையாளர் மகிந்திரா தொழில் குழுமத்தின் அதிபர் ஆனந்த் மகிந்திரா ஆவார்.
இது போக, அமிதாப் பச்சனும் அனுபம் கெரும் சசி தரூரும் வேறு சிலரும் பயணச்சீட்டு எடுத்துக் கொடுப்பது, தங்குமிடம் வழங்குவது எனப் பல செலவுகளைச் செய்தனர். நியூஸிலாந்து, இரஷ்யா நாடுகளுக்கும் அனுசரணையாளர்கள் மூலமே கே.ஆர்.விஜயன் சுற்றுலா சென்றுவந்தார்.
“சாயா வீட்டு விஜயன்டேயும் மோகனாயுடேயும் லோக சஞ்சாரங்கள்” என்ற தலைப்பிட்ட பயண நூலொன்றும் வெளிவந்திருக்கின்றது. குளிர் மிகுந்த இரஷ்யா போகும்போது மட்டுமே முழுக்காற்சட்டை அணிந்து சென்றிருக்கின்றார் கே.ஆர்.விஜயன். மற்ற எல்லா நாடுகளுக்கும் மலையாளத்து மரபு உடையான வேட்டியோடுதான் பயணம். தான் சென்று திரும்பும் எந்தவொரு பயணத்திலும் ஆசைக்கு அன்பளிப்பிற்கென பொருட்களை வாங்கிக் குவிப்பதில்லை விஜயன் இணையர். அவர்கள் கொண்டு வந்ததெல்லாம் அந்த நிலங்களின் பரிதியற்ற நினைவுகளை மட்டுமே.
அவரின் சிற்றுண்டிக்கடையில் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் யாரேனும் போனால் அந்த வாடிக்கையாளரைத் திரும்ப அழைத்து காசைக் கேட்பதில்லை. அப்படி அழைப்பதினால் அவர்களுக்கு அவமானம் நேர்ந்து விடக்கூடாது என்பதில் அவ்வளவு கவனம். அவர்களாகவே நினைவு வந்து காசைக் கொடுத்து விடுவர். அப்படி மறந்து ஒரு வருடங்கழித்து வந்து கொடுத்தவர்களும் உண்டு.
காணொளி இணைப்பு: https://www.youtube.com/watch?v=bg-5lOLDvlM&t=2713s
மொய்து கீழிச்சேரி
சிறு வயதில் பள்ளிவாசல்களில் கேட்ட உலகம் சுற்றி சூஃபிய்யாக்களின் கதைகளிலிருந்து விழுந்த துளி பெருகி விசையாகியது. பணமில்லாமல் பயணச்சீட்டில்லாமல் திட்டங்களில்லாமல் கடவுச்சீட்டு, வீஸாவும் இல்லாமல் 1969ம் ஆண்டு தனது பத்தாம் வயதில் தில்லி போகும் தொடர் வண்டியில் ஐம்பது ரூபாய்களுடன் கோழிக்கோட்டிலிருந்து புறப்பட வைத்திருக்கின்றது. அதிலிருந்து ஏழு வருடமும் வடக்கிந்தியா காணுதலுடன் பதிநான்கு ஆண்டுகளில் நாற்பத்தி மூன்று நாடுகளைக் கண்ட பிறகே ஓய்ந்திருக்கின்றது.
நாடு தாண்டும்போது இந்திய எல்லையில் முஸ்லிம் என அறியப்பட்டவுடன் சிப்பாயால் உதைக்கப்பட்டிருக்கின்றார். பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றார். இரான் இராக் போரில் காயம்பட்டிருக்கின்றார். ஆஃப்கானிஸ்தானில் உளவாளி என நினைத்துப் பிடித்திருக்கின்றனர். இவையெல்லாம் நடக்கும்போது அவருக்கு வயது பதினேழு.
சீனம், மியான்மர், முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் சில பகுதிகள், துருக்கி, ஆஃப்ரிக்க நாடுகள், ஐரோப்பாவின் சில பகுதிகள் என அளந்திருக்கின்றன அவரது கால்கள். பயண வழிகாட்டி, ஊடகவியலாளர், மத போதகர் என வயிற்றுக்காக பல்வேறு வேடங்கள். இரானில் இராணுவத்திலும் பணியாற்றியிருக்கின்றார்.1984ல் ஊர் திரும்பியிருக்கின்றார். நிலமிலி என தெரிந்தும் போகுமிடங்களில் விரும்பி இவரை மணம் முடித்திருக்கின்றனர்.
உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பெற்ற அரிய பொருட்களால் அவரின் வீடு நிறைந்திருந்தது. கோடிகளுக்கு விலை பேசப்பட்ட அவற்றை தனியாருக்கு விற்க மறுத்து கேரள அரசின் பண்பாட்டுத் துறைக்கு அறுபத்தைந்து இலட்சம் ரூபாய்களுக்கு கைமாறியிருக்கின்றார். இவை அனைத்தும் மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டியிலுள்ள அரசின் கலை நிறுவனமான மொயின் குட்டி வைத்தியர் நினைவகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தன் வாழ்க்கையை ஈறாக வகுந்து அதில் ஒரு பாதியை அலைதலுக்காக ஒப்புக் கொடுத்த வைக்கம் முஹம்மது பஷீரின் பௌதிக அலைச்சல்கள் அவரை அவரின் இறுதி வரை தீராத அகப்பயணங்களுக்குள் இட்டுச் சென்றன. எழுத்தென்பது அவரின் மொத்த வாழ்க்கையின் சிறு துண்டம் மட்டுமே. பேரப்பிள்ளைகளைக் காணும் வயதில் மண வாழ்க்கைக்குள் நுழைகின்றார். நமது உலகாயதக் கணக்கில் அவர் அன்று தனது வாப்பாவாலும் ஊராராலும் எப்படி பார்க்கப்பட்டிருப்பார்?
வைக்கம் முஹம்மது பஷீர், மொய்து கீழிச்சேரியுடன் ஒப்பிடும்போது விஜயன் இணையரின் பயணமென்பது சம தரமுடையது இல்லைதான். எல்லாமே திட்டமிடப்பட்ட ஏற்பாட்டுப் பயணங்களில் மட்டுமே முழுக்கமுழுக்க விஜயன் இணையர் சென்று வந்திருக்கின்றனர். ஆனால் வைக்கம் முஹம்மது பஷீர், மொய்து கீழிச்சேரி ஆகிய இருவரின் பயணங்களில் அடுத்த நொடியும் அடுத்த அடியும் என்பவை எவ்வித உறுதியும் உத்திரவாதமும் அற்றவை. பல நேரங்களில் சாவுக்கும் அவர்களுக்குமான இடைவெளியானது சில அங்குலங்களாக மட்டுமே இருந்திருக்கின்றன. அவர்களுடைய பயணங்களின் நீள அகலமென்பது அவர்களுடைய வாழ்வின் விளிம்பு வரை தொட்டுச்செல்பவை.
பொதுவாகவே படிப்பு முடிந்து நேரே கடையில் தொழில் நிறுவனத்தின் இருக்கையில் வந்தமரும் எத்தனையோ கடை உரிமையாளர்கள் தங்களது கடைக்கு சில அடிகளுக்கப்பால் என்ன நடக்கிறது என்ற அறிதலும் அதைப் பற்றிய எந்த ஆர்வமும் அற்றவர்கள். சென்னை மண்ணடியில் தேநீர்க்கடை வைத்திருந்தார் கேரளியர் ஒருவர். கோட்டயம் சுரியானி கிறித்தவர். முப்பது வருடங்களாக நான் அவரை அந்தக் கடையின் கல்லாவில் முகம் வெளுத்த பூனையாக மட்டுமே பார்த்துள்ளேன். எதற்காகவும் பிறந்தகம் செல்லாதவர். சில மாதங்களுக்கு முன் சடலமாகத்தான் சொந்த ஊர் திரும்பினார்.
இந்தப் பெரும் போக்கு சராசரி உறைவில் உடைவை ஏற்படுத்தி சாதித்தவர் விஜயன். வாழ்வின் கடைசி வாரங்கள் வரை அயல் நில உலாவில்தான் இருந்திருக்கின்றார். செல்வருக்கும் சாதிக்கக் கிடைக்காத ஒன்று. தன் நேசத்திற்கு முன்நிபந்தனைகள் எதுவும் கோராத வைக்கம் முஹம்மது பஷீர், வாடிக்கையாளரின் மானம் காக்கும் கே.ஆர்.விஜயன், கோடி ரூபாய்களை தள்ளி நிறுத்திய மொய்து கீழ்ச்சேரி – இது போன்றவர்கள்தான் சுற்றுலாவிற்கும் பயணத்திற்குமான வேறுபாட்டை தங்கள் வாழ்வைக் கொண்டு வரையறுப்பதோடு வாழ்வின் வரம்புகளை விரித்துப் பரத்துபவர்களும்கூட.