வட இந்தியாவில் சாதி அமைப்பானது இந்து, முஸ்லிம் சமூகத்தின் உட்பிரிவுகளுள் ஏற்படுத்தியுள்ள வர்க்க முரண்பாட்டை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டு முஸ்லிம் சமூகத்தின் மீதான சாதி அமைப்பின் குறைவான தாக்கத்தை இக்கட்டுரை நிறுவுகிறது. மேலும், முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவும் பாகுபாட்டைப் பயன்படுத்தி தனது வாக்குவங்கியை நிறுவ முயலும் பாஜகவின் தந்திரத்தை புரிந்துகொள்ளவும் உதவுகிறது.
கடந்த பல மாதங்களாக உக்கிரமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றிய கட்டுரைகள் உள்ளூர் ஊடகங்களிலும், உலகளாவிய ஊடகங்களிலும் பிரதானமாக இடம்பெறுகின்றன. இலங்கையின் பெரும் வெளிநாட்டுக் கடன் சுமை, அந்நியச் செலாவணி இருப்பு குறைதல், எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்டுள்ள சவால்கள் முதலான நெருக்கடியின் அறிகுறிகள் பற்றியே அவற்றில் பெரும்பாலான கட்டுரைகள் பேசுகின்றன. இலங்கை அரசியல் பொருளாதாரத்தின் நீண்டகால அம்சங்கள், அவற்றுக்கு இப்போதைய நெருக்கடியுடன் உள்ள உறவுகள் குறித்த கேள்விகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கடந்த கால இலங்கை அரசாங்கங்களின் அரசியல் பொருளாதாரக் கொள்கை முடிவுகள், பெருந்தொற்றுக்குப் பின்னர் இலங்கைப் பொருளாதாரத்தை அதிகமாகவோ குறைவாகவோ அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதா? பொதுவெளியில் வல்லுநர்களும் கருத்தாளர்களும் பொருளாதாரம் பற்றி எப்படி விவாதிக்கிறார்கள்? இப்போதைய அரசாங்கத்தின் முன்னுள்ள பணிகள் என்ன?
அரசியல் பொருளாதார நிபுணரும், வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் கௌரவத் தலைவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளருமான அகிலன் கதிர்காமர் அவர்களுடன் நாம் மேற்கொண்ட கலந்துரையாடல் இந்நேர்காணல். கதிர்காமர் இலங்கையின் பொருளாதாரப் பாதை, அதன் கட்டமைப்பு அம்சங்களை மட்டும் விவரிக்காமல், இப்போதைய நெருக்கடிகள் பற்றிய ஆழமான பார்வையை வழங்குகிறார். அதே வேளையில் இப்போதைய பிரச்னை குறித்த விவாதங்களின் தென்படும் சிக்கல்களையும் சுட்டிக்காட்டுகிறார்.
ஊதிய உயர்வு காரணமாக வறுமை குறைந்துவருவதாக அரசு கூறுகிறது. ஆனால் கறுப்புப் பணம் மற்றும் பண மதிப்பழிப்பு நடவடிக்கையால் வறுமைக்கோடும் மாறி வருகிறது. அதாவது, வறுமை குறைகிறது என்பதைவிட வறுமையை உருவாக்கும் காரணிகள்தான் மாறிக்கொண்டே வருகின்றன என்பதே சரியாகும். கறுப்புப் பணத்தை ஒழிப்பதை கொள்கை வகுப்பதில் சேர்க்காமல் இருப்பது, அதைக் கட்டுப்படுத்துவதை மேலும் சிரமம் ஆக்குகிறது.