கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

தாமிரப்பட்டணம்: தமிழ் எழுத்தில் எழுதப்படாத முதல் தமிழ் நாவல்

Loading

1879ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ நூல்தான் தமிழின் முதல் நாவல் என்பது தமிழ் இலக்கிய வரலாறு ஏற்றுக்கொள்ளபட்ட ஒன்றாகிவிட்டது. ஆயினும் தமிழின் முதல் நாவல் என்று வேறு சில நாவல்களும் அடையாளப்படுத்தப்படுகின்றன. 1856இல் வெளியிடப்பட்டதாக அறியமுடிகிற ‘காவலப்பன் கதை’, 1875இல் வெளியிடப்பட்ட ‘ஆதியூர் அவதானி சரிதம்’, ஆகியவற்றோடு ‘தாமிரப்பட்டணம்’ எனும் நாவலும் ‘தமிழின் முதல் நாவல்’ என்றே அடையாளப்படுத்தப்படுகின்றன.

இவற்றுள் ‘காவலப்பன் கதை’ என்னும் மொழிபெயர்ப்பு நாவல் யாழ்ப்பாணத்தில் 1856ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டிருக்கின்றது. அதனை மூர் (ஹன்னா மூர்) என்பார் எழுதிய ‘Parley the Porter’ என்னும் நாவலின் மொழிபெயர்ப்பு என டாக்டர் போப்பெனட் (1909) தாம் தொகுத்த ‘அச்சிட்ட நூல்கள்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். அறிஞர் ந.சி. கந்தையா பிள்ளையும் தாம் தொகுத்த ‘தமிழ் இலக்கிய அகராதி’ (1952), ‘தமிழ் புலவர் அகராதி (1960) ஆகிய நூல்களில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, தமிழில் முதலாவது நாவல் தோன்றியது எனச் சுட்டிக் குறிப்போர், ‘காவலப்பன் கதை’யினை எவ்வகையிலும் தள்ளிவிட முடியாது. ‘காவலப்பன் கதை’யே தமிழகத்தில், ஈழத்தில் முதன் முதலாகத் தோன்றிய நாவல் எனக் கொள்ளுதல் வேண்டும்.’ என மு.கணபதிப்பிள்ளை சில்லையூர் செல்வராசனின் ‘ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி’ நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் இது தொடர்பில் உறுதியான சான்றுகள் கிடைத்ததாகவோ, விவாதங்கள் நடைபெற்றதாகவோ அறியமுடியவில்லை.

‘ஆதியூர் அவதானி சரிதம்’ 1875ஆம் ஆண்டு வெளியான நூலாகும்.  அம்மானை பாடல் வடிவில் எழுதப்பட்ட நாவல் இது.  புரசைவாக்கம் வித்துவான் சேஷையங்கார் என்னும் பேராசிரியாரால் எழுதப்பட்டது. SREEDHARA PRESS, MADRASஇல் அச்சிடப்பட்டது. ‘The tale is written not in prose after the model of European Novelists, but in an attractive popular form of verse, which our people are generally fond of’   என ஆசிரியர் ஆங்கில முன்னுரையில் குறித்துள்ளதிலிருந்து நூலின் வாசகப் பரவலை நோக்காகக் கொண்டு அக்காலத்தில் வீரசாகக் கதைகளின் வெகுஜன வழக்காயிருந்த ‘ஜனரஞ்சகக் கவிதை’  வடிவில் எழுதினார் என அறியமுடியகிறது.

மேலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தோன்றிய நாவல்கள் பலவற்றிற்கு இரட்டைப் பெயர் சூட்டும் வழக்கம் இருந்ததுபோல இந்நூலுக்கும் ஆங்கிலத்தில் ‘ATHIYUR AVADHANI OR THE SELF – MADE MAN’ என இரட்டைப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘An Original Tamil Novel’ என்று ஆங்கிலத்திலும் ‘நவீனமாகவியற்றிய கட்டுரைக் கதை’ எனத் தமிழிலும் ஆசிரியரே குறிப்பிட்டுள்ளார். ‘நானோவெனில் நமது வித்துவான்கள் வழக்கமாயிறங்குந் துறைகளை விட்டுக் காலத்தியற்கையைத் தழுவிப் புதுத்துறையில் காலிட்டேன்’ என்று தம் முயற்சி பற்றித் தெளிவுடன் கருத்துரைத்துள்ளமை நூலாசிரியரின் நோக்கை வலியுறுத்துகிறது.

பலகாலம் மறைந்து, மறந்து கிடந்த இந்நூலின் பிரதியொன்றை லண்டன் சென்றபோது பிரிட்டிஷ் மியூசியம் நூலகத்தில் கண்டறிந்த சோ.சிவபாதசுந்தரம் அதன் ஒளிநகலச்சைப் பெற்றுக்கொண்டுவந்து பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) அவர்களுடன் இணைந்து கோயமுத்தூர் விஜயா பதிப்பத்தின் வழியாக 1994இல் மீள்பதிப்புச் செய்தார்கள். இவர்கள் இருவரும் ‘தமிழ் நாவல்: நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்’, ‘தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்’ ஆகிய தமிழ் ஆய்வுலகின் முக்கிய நூல்களை எழுதிய நவீன தமிழ் இலக்கிய வரலாற்று முன்னோடிகளாவர். எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு இம் மீள்பதிப்பு வெளியிடப்பட்டது.

முற்போக்கான சிந்தனைகள், சீர்திருத்தக் கருத்துகள் பலவற்றை உள்ளடக்கி, உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், சமகால நிகழ்வுகளைப் பின்புலமாக வைத்ததுடன், கற்பனையின் அடிப்படையில் மக்களுக்குப் பரிச்சயமான அம்சங்களைக் கொண்டு இந்நாவல் புனையப்பட்டுள்ளது. சிட்டி, சிவபாதசுந்தரம் இருவரும் ‘ஆதியூர் அவதானி சரிதம்’தான் தமிழின் முதல் நாவல் என்பதை தர்க்க நியாங்களுடன் வலியுறுத்தி சிறப்பும் ஆழமும் மிக்க முன்னுரையை எழுதியுள்ளனர். அவர்களின் முன்னுரை தரும் தகவல்கள் தொடர்பாகவும், ‘ஆதியூர் அவதானி சரிதம்’ நாவலின் சிறப்புகள் தொடர்பாகவும் தனியான கட்டுரை ஒன்று எழுதவேண்டியது அவசியம் என்பதால் விரிவஞ்சி இங்கே தவிர்க்கப்படுகிறது.

மூன்றாவதாகக் குறித்த நூல் மற்றைய நூல்களிலிருந்தும் சற்று வேறுபட்டது. அந்நூலின் பெயர் ‘மதீனத்துந் நுஹாஸ்’ என்பதாகும். அதன் தமிழாக்கப் பெயர் ‘தாமிரப்பட்டணம்’. பாக்கிர் யஸீது இப்னு மாலிக் அத்தாயீ என்ற பாரசீகர் தொகுத்த வரலாற்றுச் செய்யுளில் இருந்து மாப்பிள்ளை லெப்பை ஆலிம் என்பவரால் அறபுத் தமிழில் எழுதப்பட்டது. தமிழ் மொழியில் எழுதப்பட்டதாயினும் இந்நூல் தமிழெழுத்துகளில் எழுதப்பட்டதில்லை. இதில் நேரக்கூடிய மயக்கத்தைத் தவிர்க்க மேற்கொண்டு தாமிரப்பட்டணம் நாவலை குறித்துப் பேசும் முன் அறபுத் தமிழ் குறித்து அறிந்துகொள்வது பயனுடையதும் அவசியமானதுமாகும் என்பதால் அறபுத் தமிழ் குறித்துப் பார்ப்போம்.

அறபுத் தமிழ் அல்லது அர்வி

அறபுத் தமிழ் அல்லது அர்வி (அறபியில்: الْلِسَانُ الْأَرْوِيُّ, அல்லிசானுல் அர்வி) என்பது தமிழ் மொழியை நீட்டிக்கப்பட்ட அறபு எழுத்துகளில் எழுதப்படும் மொழி வழக்கு ஆகும், இது அறபி மொழியிலிருந்து அதிகப்படியான சொல் மற்றும் ஒலிப்புத் தாக்கங்களைக் கொண்டிருக்கிறது. இது தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தினரால் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று இதன் பயன்பாடு அருகிவிட்டது.

இந்தியப் பெருங்கடல் வர்த்தகம் ஐரோப்பியக் காலனித்துவவாதிகளுக்கு முன்பாக இந்தியாவில் தரையிறங்கிய அறபு, பாரசீக வணிகர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட காலத்தில், பயணமும் வர்த்தகமும் இந்தப் பிராந்தியத்தில் புதிய மொழிகளின் உருவாக்கத்தை சாத்தியமாக்கின. அறபு, பாராசீக வணிகர்கள் பேசிய அறபி மொழியானது உள்ளூர் மொழியான தமிழுடன் கலந்து அறபுத் தமிழ் அல்லது அர்வி என்று அழைக்கப்படுகின்ற மொழியை உருவாக்கியது. எழுத்துரு அல்லது வரிவடிவம் மாற்றியமைக்கப்பட்ட அறபி எழுத்துகளில் எழுதப்படும் இதன் சொற்களும் அவற்றின் அர்த்தங்களும் உள்ளூர் தமிழ்ப் பேச்சுவழக்கிலிருந்து கடன் வாங்கப்பட்டவை. 8ஆம் நூற்றாண்டிலிருந்து, இஸ்லாமிய மார்க்கத்துடன் இணைந்த தமிழர்களுக்கு, தங்கள் தாய்மொழியையும் மத நம்பிக்கைகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு வழியாக அர்வி எழுத்து உதவியது. அர்வி எழுத்தில் அதிகமாக மதவழி உரைகள், கதைகள், கீர்த்தனைகள் போன்றவை எழுதப்பட்டன.

அறபுத் தமிழில் ஏறத்தாழ நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சமய நூல்கள் வெளிவந்துள்ளன. திருக்குர்ஆனுக்கு தமிழில் விளக்கவுரை எழுதக்கூடாது என மார்க்க விற்பன்னர்கள் பெரிதும் வற்புறுத்தி வந்ததன் காரணமாக அறபுத் தமிழில் திருக்குர்ஆன் விரிவுரைகளும் (தஃப்சீர்), ஏனைய இஸ்லாமிய நூல்களும் வெளிவரலாயின. குர்ஆனின் அறபுத் தமிழ் விரிவுரைகளான தஃப்சீர் ஃபத்ஹுல் கரீம், தஃப்சீர் பத்ஹுர் றஹீம், ஃபுதூஹாதூர் றஹ்மானிய்யா ஃபீ தஃப்சீரி கலாமிர் றப்பானிய்யா ஆகியவை பிரசித்தி பெற்ற நூல்களாகும். இவை காயல்பட்டனத்திலிருந்து வெளிவந்தவை. காயல்பட்டனம் ஷாம் சிஹாபுதீன் வலி அவர்கள் அறபுத் தமிழில் பல பாமாலைகளை இயற்றியுள்ளனர்.

பொதுவாக ஆண்களைவிட பெண்கள்தாம் அறபுத் தமிழை அதிகமாக எழுதப் படிக்கத் தெரிந்திருந்தனர். அக்காலத்தில் கடிதங்கள்கூட அறபுத் தமிழில் எழுதப்பட்டுவந்தன. அறபுக் கடலோடிகளுடனான உள்ளூர் தமிழ் முஸ்லிம் பெண்களின் திருமணத்தின் காரணமாக இது தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் பிரபல்யமாக இருந்தது என்றும், வணிகர்களுக்கிடையில் வணிக உறவுகளை ஆழப்படுத்த உதவியது என்றும் நம்பப்படுகிறது. அறபு வணிகர்கள் ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்த அறபி எழுத்துருவைப் பயன்படுத்தி தமிழ் போன்ற சிக்கலான மொழியைக் கையாளத் தொடங்கினர்.

முஸ்லிம்கள் பெரும்பாலும் தென்னிந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்துவந்தனர். அறபியர்கள் வர்த்தகத்தின் மூலம் செழிப்பைக் கொண்டுவந்ததால் குறிப்பாக வரவேற்கப்பட்டனர். சில பதிவுகளின்படி, அர்வி பயன்படுத்தப்பட்டது ஒரு ரகசிய மொழியாக, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் போட்டியை எதிர்கொள்ளும்போது தனிப்பட்ட முறையில் உள்ளூர் மக்களுடன் தொடர்புகொள்வதற்கான வழிமுறையாகும்.

அறபு மற்றும் உள்ளூர் மொழியின் இணைப்பினால் பிறந்த அறபுத் தமிழ் அறபிய வணிகர்களால் வற்புறுத்தப்பட்டதல்ல என்றே கருதப்படுகிறது. கேரளாவில் சொந்த மொழியுடன் கலந்து  அறபு மலையாளம் அல்லது மாப்பிள்ள மலையாளம் என்று அழைக்கப்படுகிற மொழவழக்கு உருவாகியுள்ளது. குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி, சிந்தி போன்ற பிற பிராந்திய இந்திய மொழிகளும் அறபிய எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

அக்காலத்தில் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளில் கணிசமான தமிழ் பேசும் மக்கள் தொகை இருந்ததால் அறபிய வணிகர்கள் தமிழ்நாட்டிலிருந்து நகர்ந்தபோதும் அர்வியும் அவர்களுடன் தொடர்ந்துசென்றது. “வரலாற்றுப் பதிவுகளின்படி, அர்வி இலங்கை, சுமத்ரா, மலேசியா, சிங்கப்பூர், கிழக்காபிரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கும் பயணப்பட்டதாக நம்பப்படுகிறது. அக்கால இந்து சமுத்திர வர்த்தக மொழியில் தமிழ் செல்வாக்கு செலுத்தியதையும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

அறபுத் தமிழும் அறபு மலையாளமும் மிகவும் பிரபலமாக இருந்தன. ஏனெனில் அவை வளமான இலக்கிய, வாய்மொழிப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. இந்தியா, இலங்கை முழுவதும், அறபுத் தமிழில் எழுதப்பட்ட 2,000 புத்தகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கேரளாவில், அரிய அறபு மலையாளக் கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்க ஆராய்ச்சியாளர்கள் முயன்றுவருகின்றனர்.

காலனியத்தின் விளைவாக, கையெழுத்துப் பிரதிகள் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுவிட்டன. வரலாறு, மதம், மருத்துவம், கலாச்சாரம் முதலிய பல்துறை அர்வி நூல்கள் இன்றும் அங்குள்ளன. இவற்றில் பல பெண்களால் எழுதப்பட்டவை. கணிசமான எண்ணிக்கையிலான புத்தகங்கள் பெண்களால் பிற பெண்களுக்காக எழுதப்பட்டவை.  பிரசவம், பாலுறவு போன்ற பிரச்சினைகளை அவை கலந்துரையாடுகின்றன, உணவு வகைகள், கலாச்சாரம் தொடர்பான உள்ளுர் வழக்கங்களை அவை பிரதிபலிக்கின்றன அல்லது விவாதிக்கின்றன. தாய்வழிப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக முஸ்லிம் பெண்கள் எப்படி வலுவான குரலையும் அடையாளத்தையும் கொண்டிருந்தனர் என்பதற்கு இது சான்றாகும் எனச் சில அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழ்நாட்டில் இதில் பல ஃபார்சி, உருதுச் சொற்கள் கலந்துவிட்டபோதும் இலங்கையில் இது தன் நிலைகுலையாது இருந்தது. கி.பி 8ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை அறபுத் தமிழ் சிறப்புற்று விளங்கியது.  அச்சுப் பொறி வந்த பின் இதன் மதிப்பு மங்கலாயிற்று. மேலும் இதில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் பேச்சு வழக்கில் உள்ள சாதாரண சொற்களாக இருந்ததாலும், இதனுடைய நடை பழங்காலத் தன்மை கொண்டிருந்ததாலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்கள் இதனை வன்மையாகத் தாக்கினர், இழித்தும் கூறினர். அதன் காரணமாகவும் அறபி மதராசாக்களில் இது வழகொழிந்ததால் தமிழ்நாட்டில் முஸ்லிம் பொதுமக்களிடத்திலும், பெண்களிடத்திலும் இந்நூல்களைப் படிக்கும் ஆர்வம் அற்றுப் போய்விட்டது.

19ஆம் நூற்றாண்டில் கீழக்கரையில் வாழ்ந்த மாப்பிள்ளை ஆலிம் லெப்பை என்பவர் இஸ்லாமிய மார்க்க அறிஞரும், ஸூஃபி மகானும், எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். தமிழ்நாடு, இலங்கை, கேரளம், மியான்மர் ஆகிய நாடுகளில் அரிசி மற்றும் இரும்பு வணிகம் செய்த தொழிலதிபரான இவர், அறபுத் தமிழில் பல நுால்களை எழுதி, அறபுத் தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றியுள்ளார்.

 தமிழ்நாட்டின் காயல்பட்டினத்தில் 1816இல் பிறந்த இவரின் தந்தை வெள்ளை அஹமது லெப்பை ஆலிம் ஆவார். தாயரின் பெயர் ஆமினா உம்மா. இவரது இயற்பெயர் செய்யித் முஹம்மத். அவரது இரண்டாவது வயதில், அவர்களது குடும்பம் கீழக்கரையில் குடியேறியது. இவர் தனது 10ஆவது வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்தார். கீழக்கரையில் புகழ்பெற்ற மார்க்க அறிஞர் தைக்கா ஸாஹிபு (றழி) அவர்களிடம் கல்வி கற்றார். தனது ஆசிரியரின் மகளையே மணமுடித்தார். இதனால்தான் ‘மாப்பிள்ளை லெப்பை ஆலிம்’ என்று அழைக்கப்பட்டார். தனது மாமனாரிடம் பைஅத்தும், ஃகிலாஃபத்தும் பெற்றுக்கொண்ட இவர், அரூஸிய்யா மதரசாவை அமைத்து அதில் நூலகம் ஒன்றை நிறுவினார். இலங்கை, கேரளம், மைசூர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய நிறுவனங்கள் தோன்றக் காரணமாகவராக இவர் கருதப்படுகிறார். அத்துடன் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் இஸ்லாமிய மறுமலர்ச்சிற்குப் பெரும் பங்காற்றியதாகக் குறிப்பிடப்படுகின்றார். இலங்கை அவரது இரண்டாவது தாயகமாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கையில் போர்த்துகீசியரின் வருகையால் ஏற்பட்ட இஸ்லாமிய மார்க்கக் கல்வி மற்றும் பொருளாதரா வீழ்ச்சியின் தாக்கத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தை புனர்நிர்மாணம் செய்வதில் பெரும் பங்காற்றியதாகப் புகழப்படுகின்ற மாப்பிள்ளை லெப்பை ஆலிம் இலங்கையில் 355 பள்ளிவாசல்களையும் தைக்காக்களையும் நிறுவியதாக நம்பப்படுகிறது.

இத்தகு புகழ் வாய்ந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் பாரசீக எழுத்தாளரான பாக்கிர் யஸீது இப்னு மாலிக் அத்தாயி என்பவர் அறபி மொழியில் எழுதிய நெடுங்கவிதையொன்றைத் தழுவி ‘மதீனத்துந் நுஹாஸ்’ என்னும் பெயர் கொண்ட நாவலை அர்வி அல்லது அறபுத் தமிழில் எழுதினார்.

“கடந்த காலங்களின் நிகழ்ச்சிகளாக அறிஞர்களால் பதிவுசெய்யப்பட்டிருக்கும் வரலாறுகள் மிகப் பல. அவற்றில் ஒன்று தாமிரப்பட்டணம். இந்த அதிசிய பட்டணத்தைப் பற்றி பாரசீகவாசியாகிய பாக்கிர் யஸீது அபூநமாஸி அத்தாயீ என்பவர் தொகுத்திருந்ததை தமிழ் கூறும் மக்கள் அறிவான் வேண்டித் தமிழாக்கினோம்.”

“காலங்கள் தோறும் நிலமெங்கும் வாழும் மனிதர்கள் அபூர்வ நாகரிகங்களைப் படைப்பது நிகழ்ந்துவருகிறது. நிலங்களை ஆட்சி புரியும் அரசர்களும் மக்களும் கால மாறுதல்களால் மாண்டு மடிகின்றனர். அவர்கள் நிர்மாணித்த கோட்டை கொத்தளங்களும் மாடமாளிகைகளும் இடிந்து பொடிந்து போகின்றன. ஆகவே, அடுத்த தலைமுறையினரும் , பிற்காலத்தவரும் கடு தெளிவான் வேண்டி அவைகளைப் பற்றிப் பேசுவதில் பொருத்தம் இருக்கிறது. ஆகையால்தான், ‘மதீனத்துந் நுஹாஸ் – தாமிரப்பட்டணம்’ என்கிற வரலாற்றை செய்யுள்களாக இருந்ததை தமிழில் வசனமாக்கித் தரப்படுகிறது’ என மாப்பிள்ளை லெப்பைப ஆலிம் இந்நூல் தொடர்பில் குறிப்பிடுகிறார்.

இதில் ‘தமிழில் வசனமாக்கித் தரப்படுகிறது’ என்று குறிப்பிடுவது அறபுத் தமிழில் வசனத்தில் எழுப்பட்டது என்பதையே குறிக்கிறது. இதிலிருந்து இந்நூல் சரித்திரச் சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு வசனத்தில் எழுதப்பட்ட புனைவு என்பதை  அறியலாம். ஒரு மார்க்க ஆன்மீகவாதியால் இறைவனின் எல்லையற்ற சக்திக்கான அத்தாட்சியை எடுத்துக் கூறுவதற்காக எழுதப்பட்ட புனைவு இது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

1858இல் இது எழுதப்பட்டதாக தாமிரப்பட்டணம் புதிய மீள்பதிப்பில் (சீர்மை:2024) இந்நூல் தொடர்பான குறிப்புகள் முழுதும் குறிப்பிடுகின்றன. இந்நாவல் தொடர்பில் ’தமிழுக்கு முதல் புதினம் கீழக்கிரையிலிருந்து…’  என்னும் தலைப்பில் அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஏழாவது மாநாட்டுக்கு மானா மக்கீன் எழுதிய கட்டுரையிலும் இந்நாவல் எழுதப்பட்ட ஆண்டு 1858 என்றே குறிக்கிறார். மதுரை காமராசர் பல்கலைக்கழக இஸ்லாமிய தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பீ.மு.அஜ்மல்கான் அவர்களது 1985ஆம் ஆண்டில் வெளிவந்த ‘தமிழகத்தில் முஸ்லிம்கள்’ என்ற நூலில் தாமிரப்பட்டணம் நாவலே தமிழில் முதல் நாவல் என்று குறிப்பிட்டுள்ளதை அந்நூலைச் சான்றுகாட்டி குறித்துள்ளார்.  

மேலும் அக்கட்டுரையில் முனைவர் அப்ஸலுல் உலமா தைக்கா ஷுஐபு கொலம்பியாப் பல்கலைக் கழகத்திற்குச் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றுக்கொண்ட ‘Arabic, Arwi, and Persian in Sarandib and Tamil Nadu’ (சரந்தீபிலும், தமிழகத்திலும்  அறபி, அறபுத் தமிழ், பாரசீகம் ஆகிய மொழிகளின் பங்களிப்பு) என்ற ஆய்வுநூலில் தமிழின் முதல் புதினம் ‘தாமிரப்பட்டணம்’தான் என்பதைக் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பதிவுசெய்கிறார்கள்.

இந்நூல் ‘அறபுத் தமிழில் ஹிஜ்ரீ 12751 / கி.பி.1858இல் சரித்திரப் பின்னணியுடன் தமிழ் பேசும் மக்களுக்காக எழுதப்பட்ட முதலாவது புதினம் (நாவல்) இதுவே. இதற்கு முன்னர் எந்தவொரு முஸ்லிமோ, முஸ்லிம்மல்லாதோரோ புதினம் எழுதியவரலல்லர்’   என்பதை முனைவர் தைக்கா ஷுஐபு தனது முனவவர் பட்ட நூலில் தெளிவாகக் குறித்துள்ளதையும் சான்றுகாட்டிக் குறிப்பிடுகிறார்.

இந்நூலின் வெளியீடு தொடர்பில் இருவேறு பதிவுகளைக் காணமுடிகிறது.  தாமிரப்பட்டணம் புதிய மீள்பதிப்பில் (சீர்மை:2024) ‘சையது முஹம்மது ஆலிம் என்பவர் கி.பி. 1889இல் இந்நாவலை அச்சிட்டார்’ என்றுள்ளது.  இந்நாவல் தொடர்பில் ’தமிழுக்கு முதல் புதினம் கீழக்கிரையிலிருந்து…’  என்னும் மானா மக்கீன் அவர்களின் கட்டுரையில் ‘இந்நாவல் ஸரந்தீபில் (இலங்கை) ஹி.1318 / கி.பி.1900இல் வெளியானது. எழுதிய ஆசிரியர் மறைவுக்கு இரண்டாண்டுகளுக்குப் பின் இது நிகழ்ந்தது. கொழும்பு, 92, இரண்டாம் குறுக்குத் தெரு ‘மத்பஅத்துஸ் ஸுலைமானிய்யா’ பதிப்பகத்தில் டி.முஹம்மது சுலைமான் என்பவரால் வெளியடப்பட்டது. பின், மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஒரு மறுபதிப்பு… செய்யிது முஹம்மது ஆலிம் அவர்களால் வெளியானது கி.பி.1903’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல்களின் படி எழுதப்பட்டு 40 வருடங்களுக்குப் பின் அச்சிடப்பட்ட இவ்வறபுத்தமிழ் இலக்கியம் அதற்கு 70 வருடங்கள் கழித்தே (எழுதப்பட்டு 120 ஆண்டுகள் கழித்து) தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. ‘பசுங்கதிர்’, ‘பிறைக்கொடி’ ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்த பசுங்கதிர் மௌலானா என்று அழைக்கப்படும் எம்கே.ஈ மௌலானா அவர்கள் கீழக்கரை லெ.செ.நூஹ் தம்பி மரைக்காயர் பாதுகாத்து வைத்திருந்த மதீனத்து நுஹாஸ் அறபுத் தமிழ்ப் பிரதியை ‘தாமிரப்பட்டணம்’ என்ற பெயரில் தமிழாக்கி தனது பசுங்கதிர் ஏட்டில் 23 வாரங்கள் தொடராக வெளியிட்டார்.

கீழக்கரையில் பிறந்த பசுங்கதிர் மௌலானா தனது வாழ்வின் பெரும்பகுதியை மன்னார் மரிச்சுகட்டியில் கழித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கே.டி.எம்.எஸ்.அப்துல் காதிர் தைக்காப்பா அவர்களது உதவியால் 1979 ஆண்டு இதனை நூலாக வெளியிட்டார்.

வெளிவந்து 25 ஆண்டுகளாகக் கவனிக்கப்படாமல் இருந்த இந்நாவலை ஏழாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டில் மானா மக்கீன் கவனப்படுத்தினார்.  அதன் பின் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்நால் தொடர்பில் ஓரிரு உரையாடல்கள் நடைபெற்றன. ஆயினும் நூலின் பிரதி கைக்கெட்டாததாக மாறிவிட்டிருந்தது. தற்போது 40 ஆண்டுகள் கழித்து இந்நூல் சீர்மை வெளியீடாக வெளிவந்திருக்கிறது. இது தமிழ் நாவலா, மொழியாக்கத்தை, அதுவும் 1899இல் வெளியிடப்பட்டதை தமிழின் முதல் நாவலாக் கொள்ளலாமா என்ற வழக்கமான கேள்விகளுக்கு புதிய மீள்பதிப்பில் பழங்காசு சீனீவாசன் பதிலளித்துள்ளார். அவை தொடர்பான உரையாடல்களை துறைசார் அறிஞர்களிடமும் வாசகர்களிடமும் விட்டுவிடுவதுதான் சரியானது.

ஆனால் கவனத்தில் கொள்ள வேண்டிய வேறொரு விடயம் இங்கு முக்கியமாகிறது. தாமிரபட்டணம் 1858இல் எழுதப்பட்டதால் அதுவே தமிழின் முதல் நாவல் என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்ற இவ்வேளையில் ‘பிரதாப முதலியார் சரித்திரம் 1857இல் எழுதப்பட்டதாக விக்கிப்பீடியா, தமிழ் விக்கி ஆகியவற்றிலும் அமேசன் இணைய அங்காடியிலும் பிற இணைய விற்பனை அங்காடிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரையான எல்லா ஆய்வுகளும் பிரதாப முதலியார் வெளியிடப்பட்டது1879 என்பதையே ஏற்றுக்கொள்கிறார்கள். மு.வரதாசராசன், பேரா. க.கைலாசபதி இருவரும் 1876இல் எழுதப்பட்டு 1879இல் அச்சில் வெளிவந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆயினும், எவரும் பிரதாப முதலியார் சரித்திரம் தொடர்பில் 1857இல் எழுதப்பட்டதாகக் குறிக்கவில்லை. இந்நிலையில் எவ்விதச் சான்றுகளுமின்றி எழுதப்பட்ட ஆண்டு 1857 எனக் குறிப்பது விஷமத்தனமானது என்பதுடன், வாசகர்களையும் ஆய்வாளர்களையும் திசைதிருப்பிவிடும் நோக்கிலானது என்பதையும் நாம் கருத்திலெடுக்க வேண்டும். ஒருவகையில் அது, 1858இல் எழுதப்பட்ட தாமிரப்பட்டணம் நாவல்தான் தமிழின் முதல் நாவல் என்ற வாதத்தை எதிர்கொள்வதற்காக வேண்டி அதற்கு ஓராண்டு முன்பு 1857இல் எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறதா என்ற சந்தேகம் எழாமலில்லை.  பதிப்பு வரலாறுகள் மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்படுவதன் நோக்கமே சரியான தகவல்கள் உரிய சான்றுகளுடன் உறுதிசெய்யப்பட்டு ஏற்கனவே உள்ள இடைவெளிகளும் தவறுகளும் நேர்செய்யப்பட வேண்டும் என்பதே. இந்நிலையில் நன்கறியப்பட்ட பதிப்பு விவரம் தொடர்பில் சிறுபிள்ளைத் தனமான விளையாட்டு ஆரோக்கியமானதல்ல என்பதை கவலையுடன் குறிப்பிட வேண்டியுள்ளது.

(நன்றி: தாய்வீடு, அக்டோபர் 2024)

தாமிரப்பட்டணம் (மதீனத்துந் நுஹாஸ்) – தமிழின் முதல் நாவல்
அறபுத் தமிழில்: மாப்பிள்ளை லெப்பை ஆலிம்
தமிழில்: எம்கே.ஈ. மவ்லானா
பக்கங்கள்: 134 / விலை: ₹180
வெளியீடு: சீர்மை, புதிய எண் 280; பழைய எண் 238/2, இரண்டாம் தளம், காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 600005
அலைபேசி: +91 80721 23326

Related posts

Leave a Comment