தஸவ்வுப்: இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம் – நூல் பார்வை
தஸவ்வுஃப் என்றால் ஸூஃபியாகுதல் எனப் பொருள். இலங்கையின் தலைசிறந்த கல்வியாளர், அறிஞர்களில் ஒருவரான மறைந்த கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்கள் ஸூஃபியியம் பற்றி ‘இஸ்லாமிய சிந்தனை’ முத்திங்கள் ஆய்விதழில் எழுதியவற்றுடன் புதியதாக சில கட்டுரைகளையும் இணைத்து வெளிவந்திருக்கும் நூல் இது.
அன்னாரை 2003-2010க்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டு மூன்று முறை இலங்கை ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் சந்தித்திருக்கிறேன். அவருடன் கை குலுக்கும்போது ஒரு மலரின் மென்மை தலைக்குள் கடந்தது. நித்தியத் தொடுகைகளின் சேகரத்தில் ஒரு பொன்னிறகு.
காண்பவர்களுக்கு தன்னை ஓர் இறகாகவே தோற்றமயக்கம் உண்டாக்கிவிட்டு, பெரும் மலையொன்று இவ்வுலகிலிருந்து விடைபெற்றுவிட்டது. சுக்ரி அவர்கள் 2020ஆம் ஆண்டு இறைவனிடம் மீண்டுவிட்டார்.
நளீமிய்யா வளாகத்தில் அவரது அலுவல் குடியிருப்பு இல்லத்தை ஒரு தடவை கடந்துசெல்ல நேரிட்டது. நெடுநாள்களாக யாருமே வசித்திராத தோற்றத்தை தாங்கிநின்றது அவ்வீடு. பௌதிக இருப்பையும் தடங்களையும் பற்றி அலட்டிக்கொள்ளாமல் வாழ்ந்து சென்றதன் குறியீடு.
அவர் வாழும் காலத்தில் மொத்த நாட்டிலும் அறியப்பட்டவராக இருந்தாலும், அவரது ஆளுமையின் கனதிக்கேற்ப அவர் முழுவதுமாக அறியப்படவில்லைதான். இன்று இலங்கையின் அறிவுத்தளத்தில் முனைப்புடன் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் அறிஞரொருவர் எனது நண்பராவார். அவர் கலாநிதி சுக்ரி அவர்களின் மாணவருங்கூட. ஒரு தனிப்பட்ட உரையாடலில் தன்னுடைய ஆசிரியரைப் பற்றி அவர் கூறும்போது, சுக்ரி அவர்களின் வாசிப்பு முழுக்க ஸூஃபியியத்தின் பக்கம் மட்டுமே ஒதுங்கிநின்றதால் சமகால இஸ்லாமியத் திசைவழிகள் பக்கம் அவரின் மனம் செல்லவில்லை என்றார்.
அம்மாணவரின் பார்வையை இந்த நூல் பொருளிழக்கச் செய்கிறது. எல்லா துறைகளிலும் இஸ்லாத்தின் செயல்பாடுகளை முன்னெடுத்து செல்வதில் தஸவ்வுஃபின் பங்களிப்பானது — கடந்த காலத்தில் மட்டுமில்லை — நிகழ், எதிர் காலங்களிலும் பொருத்தப்பாடுடையதாகவே விளங்குகிறது என்பதை நூலின் வழியாக ஆசிரியர் நிறுவுகிறார்.
இந்நூலின் வருகை தமிழுலகிற்கு நல்லதொரு கண் திறப்பை வழங்கிடும். காரணம், உலகளவில் கொண்டாடப்பட்ட அளவிற்கு சரியாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்ளப்படாத ஒரு துறையாகவே ஸூஃபியியம் விளங்குகிறது. அதிலும் இந்திய, தமிழ்ச் சூழலில் இது இன்னும் மோசம்.
ஸூஃபியியத்தை தவறாகக் கையாளும் பிரிவினரை சரியாக அடையாளம் காணாமல் சிக்கலின் தீவிரத்தை நம்மால் புரிந்துகொள்ள இயலாது.
- ஸூஃபியியம் என்பது இஸ்லாத்திற்குப் புறம்பானது என முதன்மையாகப் பரப்பியவர்கள் உலகத்தைச் சுரண்டும் காலனியாதிக்கவாதிகள். அதை ஒரு சொல் மாறாமல் வழிமொழிந்து ஸூஃபிகளை இணைவைப்பாளர்களாகவும் சமய புறம்பாளர்களாகவும் தீர்ப்புரைக்கும் வஹ்ஹாபியம்.
- தங்களின் தீய நோக்கங்களையும் இலக்குகளையும் நிறைவேற்றிக்கொள்ளவும், முஸ்லிம் சமூகத்தை பிளந்து அழிப்பதற்காகவும், செயலூக்கமுள்ள இஸ்லாமிய அமைப்புக்களைக் குறிவைத்து தனிமைப்படுத்திடவும் ஸூஃபியியம் X வஹ்ஹாபிய அடிப்படைவாதம் என்ற இருமைச் சூத்திரத்தைக் கட்டமைக்கும் பல்வேறு ஆதிக்க, அரச ஆற்றல்கள். குறிப்பாக ஒன்றிய இந்துத்வ நாஜியரசு.
- இஸ்லாத்தின் கடமைகளை, உயிர்த்துடிப்பு மிக்க இயங்குவிசையை, அதன் உயரிய இம்மை-மறுமை இலக்குகளைப் பற்றி பேசாமல், குறுக்கு வழியில் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம், அற்புதங்களை மட்டுமே நம்பி வழிநடந்தால் போதும் என சாமானியர்களை மயக்கும் போலி ஸூஃபிகள்,
- இறைவனின் பக்கம் மக்களை அழைத்துச் செல்வதற்கு மாற்றாக தங்களையே மையப்படுத்தும் ஆன்மிகத் திருஉருக்கள்.
- ஸூஃபியியத்தைக் கொச்சைபடுத்தக்கூடிய வஹ்ஹாபிகளை மட்டுமே முதன்மை எதிரியாக்கி, ஸூஃபியியத்தின் மற்ற எல்லா நோக்கங்களையும் இலக்குகளையும் கைகழுவி விடுவதோடு மட்டுமின்றி, இஸ்லாத்தை ஒழிக்க கங்கணம் கட்டிச் செயல்படும் நேரடி/மறைமுக எதிரிகளுடன் இணங்கி நிற்பதில் எவ்விதக் கூச்சமும் தயக்கமும் காட்டாதவர்கள்.
- ‘இஸ்லாம் வேண்டாம் – ஸூஃபியியம் வேண்டும்’ என ஒதுக்கம் வேண்டுபவர்கள்.
- ஸூஃபியியத்தை ‘இஸ்லாம்-நீக்கம்’ (de-islamize) செய்வோர்.
- ஸூஃபிய முகமூடி தரித்தவாறே அந்தரங்கத்தில் நிராகரிப்பையும் இறை மறுப்பையும் சுமந்துகொண்டிருக்கும் முஸ்லிம் பெயர்தாங்கிய பிளவுவாதிகள்.
- ஸூஃபியியத்தின் மறைவில் நின்றுகொண்டு மத நல்லிணக்கம் என்ற பெயரில் ஏகத்துவத்தையும் இணை வைப்பையும் சமமாக்க முயலும் போலி அறிவாளிகள்.
உண்மை ஸூஃபிகள் எங்கோ ஒரு மூலையில் ஓசையற்ற நதிபோல ஒழுகிக்கொண்டிருக்க, எதிர்மறைகளால் ஸூஃபியியம் பற்றிய புரிதல்களமோ அலங்கோலப்பட்டுக் கிடக்கிறது. இந்த அவலப் பார்வைகளிலிருந்தும் தெற்றுப் போக்குகளிலிருந்தும் ஸூஃபியியத்தை விடுவிக்கிறது இச்சிறு நூல்.
ஸூஃபி ஆசான்களில் ஒருவரான புகழ்பெற்ற இமாம் கஸ்ஸாலி சொல்கிறார்:
“ஒருவர் வானத்தில் பறக்கவும் நீரில் நடக்கவும் நீவிர் கண்டாலும், அவரது செயல்கள் ஷரீஆவிற்கு (இஸ்லாமியச் சட்ட நெறிகளுக்கு) முரணாக இருப்பின் அது ஷைத்தானின் செயற்பாடு என்பதை அறிந்து கொள்வீராக!”
முதல் அடியிலேயே பாதி மாய்மாலங்கள் விழுந்து நொறுங்குகின்றன. ஷரீஆவின் அக நீட்சியாகத்தான் ஸூஃபியியத்தை இமாம் கஸ்ஸாலி வரையறுக்கிறார். இஸ்லாமியச் சட்ட விதிகளுக்குள் பொதிந்திருக்கும் இறைவனின் நுண்ணறிவை ஞானத்தை வெளிக்கொணரும் துணைக்கருவிதான் ஸூஃபியியம்.
நமக்கு உள்ளும் புறமும் நடக்கும் செயல்களை தனித்தனித் துண்டங்களாக்கி, தீவுகளாக்கி அவற்றை உற்று நோக்கி உலைந்துபோகாமல் அவையனைத்தும் பிரபஞ்ச நாதனின் மொத்த செயற்திட்டத்தின் பகுதிகளே என்ற புரிதலை ஏற்படுத்துகிறது ஸூஃபியியம்.
இந்த தெளிவு பிறக்கும்போது ஸூஃபியொருவருக்கு ‘ஸுஹ்து’ எனும் பற்றற்ற தன்மை கைகூடுகிறது. அந்த ஸூஹ்தானது சமூகத்திலிருந்தும் நடப்புலகிலிருந்தும் துண்டித்துக்கொண்டு மலைப்பொதும்புகளில் அந்த ஸூஃபியை ஒதுக்குவதுமில்லை; பொதுமக்களை விட மேலானவனாக, மிகை மனிதனாக, மனிதக் கடவுளாக ஆக்கிவிடுவதுமில்லை.
மாறாக, ஸுஹ்து என்ற பற்றற்ற தன்மை கிடைக்கப்பெற்ற ஸூஃபிக்கு உள்ளத்தின் கீழான உணர்வுகளிலிருந்தும் சடத்தின் ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை கிடைப்பதுடன் வாழ்க்கையின் பக்கம் முழு ஈடுபாட்டுடன் அவர் திருப்பப்படுகிறார். அதே சமயம், அவர் வாழ்க்கைக்குள் முங்கிக் காணாமல் போவதுமில்லை.
ஓர் இலைக்கே உரிய மிதத்தலுடன் எல்லா வண்ணங்களும் அவருக்குச் சாத்தியமாகிவிடுகிறது. தான் மட்டும் தனியே அந்த வாழ்க்கையைத் துய்த்துத் தொலைவதற்கு அல்ல; மாறாக ‘படைப்பினங்கள் யாவும் அல்லாஹ்வின் குடும்பமே. அவனுடைய குடும்பத்திற்கு பயன் நல்குபவர்களே அவனுக்கு மிகவும் விருப்பமானவர்கள்’ என்ற நபி மொழியானது செயல்பாட்டின் தீரா விசைக்குள் அவரை வழிநடத்துகிறது.
இந்த விசைதான் அஜ்மீர் காஜா நாயகம், நாகூர் ஷாகுல் ஹமீது நாயகம் உள்ளிட்ட எண்ணிலடங்கா ஸூஃபி மெய்ஞானிகளை எல்லா எல்லைகளையும் கடந்து அன்ன சுரபிகளாக, நோய் தீர்க்கும் சஞ்சீவிகளாக, விடுவிப்பாளர்களாக வரலாறு நெடுக வழிநடத்தியது.
காலத்தின் தேவையை ஒட்டி எழுந்த காதிரிய்யா, சுஹ்ரவர்த்திய்யா, ரிஃபாயிய்யா, ஷாதுலிய்யா, ஜிஸ்திய்யா, தீஜானிய்யா, நக்ஷபந்தியா போன்ற ஸூஃபி தரீக்கத்துகள் (ஸூஃபிப் பயிற்சி மரபுகள், நிறுவனங்கள்) பற்றிய அறிமுகங்களை அடர்த்தியான சிறு குறிப்புக்களாக ஆசிரியர் தருகிறார்.
தரீக்காக்கள் தனிமனித, சமூக ஆன்மிக வளர்ச்சிக்கும் பயிற்சிக்கும் அப்பால் மனித சமூகக் கட்டுமானத்தின் எல்லா துறைகளிலும் சமன் பேணிய பங்களிப்பை வழங்கியிருக்கின்றன. பசி ஆற்றுதல், நோய் தீர்த்தல், உள ஆற்றுப்படுத்தல், கைவினைத் தொழிற்பயிற்சிக் கூடங்கள், வேளாண்மை எனத் தங்களின் அனைத்து ஆற்றல்களையும் பூமியை வளப்படுத்துவதில் செலவழித்திருக்கின்றன ஸூஃபித் தரீக்காக்கள்.
வளர்ச்சி குறித்த கண்மூடித்தனமான ஆசையினால், கட்டற்ற நுகர்வு வெறியினால், வளங்கள் மீதான தீராப்பசியினால் உலகம் வெற்றுக்கூடான மனங்களை பிறப்பித்துக்கொண்டே இருக்கிறது. இவை உண்டாக்கும் வலிகளிலிருந்தும் எதிர்மறை விளைவுகளிலிருந்து தப்பிப்பதற்காக ஜென், ஸூஃபியியம் என உலகம் ஆன்மிக ஈடுபாடு கொள்ளத்தொடங்க, இன்று ஸூஃபியியத்துடன் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வது என்பது ஒரு பாங்காகவே (fashion) மாறியிருக்கிறது. ஆனால், பாங்குகள் பெரும்பாலும் பாசாங்காகவே மாற்றமடைகின்றன. பாசாங்குகளோ வட்டச்சூனியத்தைத் தவிர எவற்றையும் எட்டப் போவதில்லை
ஆனால், உண்மையான ஸூஃபியம் என்பது முழுக் கீழ்ப்படிதலை, வழிபாட்டை, தன்னடக்கத்தைக் கோருவது. தனியறைகளில் வழிபாட்டிலும் தியானத்திலும் கண்ணை மூடிக்கொண்டு, இந்த உலகினை உலகாயத ஆதிக்க ஆற்றல்களிடம் ஒப்படைத்துவிடுவதல்ல ஸூஃபியியம்.
காலனியாதிக்க ஆற்றல்களால் மார்க்கம், நிலம், பண்பாடு, வளம் ஆக்கிரமிக்கப்பட்ட போதெல்லாம், மானுடம் நசுக்கப்பட்ட போதெல்லாம் அதற்கெதிராக நேர்க் களங்கண்டு மண்ணின் உரமானவர்கள் ஸூஃபியாக்கள். போர்த்துக்கீசியர்களுக்கு எதிரான நூற்றாண்டுகாலப் போரின் சிற்பியான முதலாம் ஸைனுத்தீன் மஃக்தூம் நக்ஷபந்திய்யா தரீக்காவின் சீடரும் ஆசானுமாவார்.
மாப்பிளா எழுச்சியின் நோக்கங்களில் ஒன்று, சாதியத் தீண்டாமைக்கும் நிலப்புரபுத்துவ அட்டூழியங்களுக்கும் எதிராக, தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலைக்காகப் போராடுவது. இப்போராட்டங்களின் சிற்பி, காதிரிய்யா தரீக்கத்தின் வழிகாட்டியும் ஸூஃபியுமான செய்யத் அலவி தங்ஙள் ஆவார்.
பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வெந்நியூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் தீண்டாமையை எதிர்த்து இஸ்லாத்தைத் தழுவினர். அச்சமயம் அப்பகுதியின் மார்க்க அறிஞரும் காதிரிய்யா தரீக்கத்தின் ஷைஃகுமாக (வழிகாட்டியாக) இருந்த சையித் அலவீ தங்ஙள் கீழ்க்கண்ட ஃபத்வாவை (மார்க்கத் தீர்ப்பினை) பிறப்பித்தார்.
“இஸ்லாத்தைத் தழுவியவர்கள் ஜென்மிகள் எனப்படும் மேல்சாதி நில உடைமையாளர்களை இனி மரியாதையாக பன்மையில் விளிக்கத் தேவையில்லை. ஜென்மி சாப்பிட்டுவிட்டு மீதம் வைத்த எச்சில் உணவைச் சாப்பிடக் கூடாது.”
இந்த தீர்ப்பிற்கான காரணம் இஸ்லாத்தைத் தழுவிய தாழ்த்தப்ப்ட்டோர், முஸ்லிமான பின்னரும் ஜென்மிகளுக்கு அடங்கி ஒடுங்கியிருக்கும் செயல்களைக் கைவிடாதிருந்தமையாகும்.
இஸ்லாத்தைத் தழுவிய அந்தப் பெண், அப்பகுதியின் ஜென்மியான அதிகாரி கப்றாட்டு கிருஷ்ண பணிக்கரின் வேலையாளாகவும் இருந்தார். அந்தப் பெண் உள்ளிட்ட சிலரை விசாரிப்பதற்காக தனது இருப்பிடத்திற்கு வரவழைத்தார் ஜென்மி.
கால காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் வழமைக்கு மாற்றமாக தன்னுடைய வேலையாள் மேற்சட்டை அணிந்து வந்ததைக் கண்டு திகைத்த ஜென்மியை அந்தப் பெண் வழமையான மரியாதைகள் எதுவுமின்றி அவரது இயற்பெயரைச் சொல்லி ஒருமையில் அழைத்தாள்.
இதனால் வெகுண்ட ஜென்மி, அந்தப் பெண் அணிந்திருந்த மேற்சட்டையையும் காலணியையும் வலுவில் அகற்றினார். இது மாப்பிள்ளா முஸ்லிம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாகத்தான் கி.பி.1843இல் சேரூர் போராட்டம் வெடித்தது. இதுதான் மாப்பிளா எழுச்சியின் முதல் பக்கம்.
டச்சு, ஃபிரெஞ்சுக் காலனியாதிக்கத்திற்கெதிரான சமரை தொடங்கி ஒழுங்கமைத்து வழிநடத்தியது காதிரிய்யா தரீக்காவாகும்.
இத்தாலியர்களுக்கெதிரான போரில் இரத்த சாட்சியம் பகர்ந்த. உமர் முக்தார் சனூசிய ஸூஃபி மரபினைச் சார்ந்தவர்.
பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷார் உள்ளிட்ட பல எதிரிகளை எதிர்த்துக் களங்கண்டு இரத்த சாட்சியமான சையித் அஹ்மது ஷஹீது ராய்பரேலி காதிரிய்யா, சிஷ்திய்யா, நக்ஷபந்திய்யா தரீக்காக்களின் மாணவராவார்.
மனிதர்களுக்கு அக விடுதலை தருவதோடு மட்டும் ஸூஃபிகள் தங்கள் பணிகளை மட்டிறுத்திடவில்லை. புற விடுதலையையும் உத்திரவாதப்படுத்தியவர்கள். மண்ணையும் மனத்தையும் ஒருசேரக் கையாண்டு நெறிப்படுத்தியவர்கள்.
“பகலில் வீராவேசத்தோடு போராடும் குதிரை வீரர்கள்; இரவில் பற்றற்ற மன நிலையுடைய துறவிகள்”
(புர்ஹானுன் பின் நஹார், ருஹ்பானுன் பில் லைல்) என்ற வாக்கிகேற்ப வாழ்ந்த நபித்தோழர்களின் பிற்கால நீட்சிதான் ஸூஃபிய்யாக்கள் எனப்படும் ஸூஃபிகளாவர்.
ஒவ்வொரு ஸூஃபி தரீக்காக்களின் ஆன்மீக, சமூக, அரசியல் பங்களிப்புகள் பற்றியும் தனிநூல்களே வர வேண்டிய அளவிற்கு அவற்றின் பணிகள் ஆழமும் விரிவும் கொண்டவை.
உலோகாயதத்தின் தாக்குதலுக்கு முன் ஆயுதங்களை போட்டுவிட்டு கீழடங்கிய கிறிஸ்தவத்தினால் ஐரோப்பாவானது உள்ளீடற்ற மனத்தை, வெறுமையை கை மேல் பலனாகப் பெற்றது. கிறிஸ்தவத்தின் வீழ்ச்சியை மதம் என்ற மொத்த நிறுவனத்திற்கெதிரான பார்வையாகவே வளர்த்தெடுத்து ஈற்றில் நாத்திகத்தில் போய் நின்றது மேலை மனம்.
“உளவியல் முதலில் ‘ஆன்மா’வை இழந்தது. அதன் பின் ‘உள்ளத்தை’ இழந்தது. பின்னர் ‘தன்னுணர்வை’ இழந்தது. இப்போது புலன்களுக்குத் தட்டுப்படும் ‘நடத்தை’ மட்டுமே அதற்கு எஞ்சியுள்ளது”
என்ற வேட்ஸ்வொர்த்தின் மேற்கோளை எடுத்தியம்பும் நூலாசிரியர் மேற்கின் ஓட்டாண்டித்தனத்தை சுட்டுகிறார்.
மேற்குலகம் மனிதனை வெறும் சடத்தொகுதியாகப் பார்க்கும்போது, இஸ்லாமோ மனிதனுக்குரிய உயரிய இடத்தை வழங்கியிருக்கிறது. மனிதனின் ஆன்மா, உள்ளம் பற்றிய இஸ்லாத்தின் வரையறையை எளிய மொழியில் விளக்கிச் செல்கிறார் ஆசிரியர்.
மேற்கு முட்டிக்கொண்டு வந்துசேர்ந்திருக்கும் இடத்திற்கான பாதைத் திறப்பினை முற்கால-தற்கால ஸூஃபியாக்கள், தத்துவ ஞானிகள் ஆன்ம ஞானிகள் என்றோ செய்துவைத்துள்ளனர்.
மௌலானா ரூமியும், றாபியத்துல் பஸரிய்யாவும், இப்றாஹீம் இப்னு அத்ஹமும் மெய்ஞான வட்டத்தையும் மீறி காலந்தோறும் பேசுபொருள்களாக, ஒளிக்கம்பங்களாக நீடிக்கின்றனர்.
வெறுமையின் கனம் தாளவியலாமல், ஸூஃபியியத்தில் நிழல் தேடுகிறது மேலை மனம். ஸூஃபியியத்தினூடாக மானுடம் பெற்றுக்கொள்ளும் உளவியல் விளக்கங்கள் உள்ளிட்ட நல்லறங்கள் அனைத்துமே அல்லாஹ்வோடு தொடர்புபடுவதனாலேயே தங்களுக்குரிய உன்னதங்களை பெற்றிருக்கின்றன. அத்தொடர்பால் மட்டுமே இச்சிறப்புகள் தோன்றவும், வளரவும், நிலைபெறவும் முடியும் என்பதை சடவாத நிராகரிக்கும் உள்ளங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
முல்லா நஸ்ருத்தீன் ஒரு உணவகத்தில் ரொட்டி உண்டுகொண்டிருந்தார். நான்கு ரொட்டிகள் வரை உண்ட பின் ஐந்தாவது ரொட்டியும் வந்து சேர்ந்தது. அதையும் உண்ட பின் வயிறு நிறைந்துவிட்டது. பிறிதொரு நாள் அந்த உணவகத்திற்குப் போன அவர், செலவை மிச்சம் பிடிக்க எண்ணி, “எனக்கு அந்த ஐந்தாவது ரொட்டியை மட்டும் கொண்டு வா” என்றாராம். இஸ்லாத்தைக் கழற்றி ஓரமாக வைத்துவிட்டு ஸூஃபியியத்தைப் பின்பற்ற நினைப்பவர்கள் ஐந்தாம் ரொட்டியை ஆசிக்கிறவர்கள்தாம்.
ஸூஃபியியத்தின் முழு இரசவாதமும் தனக்குள் நிகழ வேண்டும் என விரும்புபவர்கள் இஸ்லாம் என்ற மலர் வனத்தினுள் நுழைய வேண்டும். முழு ஈடுபாடில்லாத எதுவும் வெற்றியையோ அதன் முழு இலக்கையோ எட்டப்போவதில்லை.
அறிமுக நிலையில் உள்ளவர்களுக்கும் தவறான புரிதல்களுக்குள்ளாகியிருப்போருக்கும் மட்டுமில்லாது ஸூஃபியியம் குறித்து புதிய ஆய்வுகளைச் செய்ய விழைவோருக்கான மூலப்பொருட்களையும் அடையாளங்காட்டும் குறுநூலிது.
இந்த நூலின் தனித்தன்மை மிக்க பகுதியாக நான் நினைப்பது, இமாம் இப்னு தைமிய்யா அவர்களைப் பற்றிய குறிப்புதான். இனி வருங்காலங்களில் ஸூஃபியியத்தை ஆய விழைவோருக்கான ஒரு வகைமாதிரி ஆளுமை இமாம் இப்னு தைமிய்யா.
ஸூஃபியியம் தவறாகப் புரியப்பட்டது போலவே, ஸூஃபியியத்தை பொன் துல்லியத்துடன் மதிப்பீடு செய்த ஒரே காரணத்திற்காக தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறார் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷெய்ஃகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா.
தரையில் போட்டுடைக்காமலும், தலையில் வைத்து ஆடாமலும், முன் முடிவுகளற்ற சாய்மானமில்லாத போக்கில், குர்ஆன்-ஹதீஸின் ஒளியில் ஸூஃபியியத்தை நிறுத்ததினாலும், அதற்கு உரிய இடத்தை வழங்கியதினாலுமே அநேக போலி ஸூஃபிகளால் அவர் வெறுக்கப்படுகிறார்
இமாம் இப்னு தைமிய்யாவைக் கொண்டாடும் வஹ்ஹாபிகளோ, அவர் காதிரிய்யா தரீக்கத்தின் முரீது என்பதையும், ஸூஃபியியத்தைப் பற்றிய அவரின் உடன்பாடான கருத்துக்களையும் பற்றி மூச்சே காட்டுவதில்லை,
இமாம் இப்னு தைமிய்யா என்ற பெயரை உச்சரிப்பவருக்கு உடனே முத்திரைகள் காத்திருக்கும் சம காலத்தில் துணிவுடன் அவரைப் பற்றி தன்னுடைய மதிப்பீட்டை வரலாற்றின் ஏடுகளிலிருந்து நேர்மையாக முன் வைத்துள்ளார் கலாநிதி சுக்ரி அவர்கள். நுண்மான் நுழைபுலத்துடன் நேர்மையும் துணிவும் சேருமிடத்தில்தான் அறிஞர்கள் காலங்களைக் கடக்கின்றனர்.
o0o
நூல்: தஸவ்வுப் – இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம்
ஆசிரியர்: எம்.ஏ.எம். சுக்ரி
வெளியீடு: நளீமிய்யா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகம், பேருவலை, இலங்கை
o0o
இந்நூலின் மறுபதிப்பு விரைவில் சீர்மை வெளியீடாக வெளிவரும், இன்ஷா அல்லாஹ்.