தன்னிறைவு
“அல்லாஹ் உங்களுக்குப் பங்கிட்டதைக் கொண்டு திருப்தியடையுங்கள். மனிதர்களில் தன்னிறைவு பெற்றவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.”
இஸ்லாமிய உலகில் மிகவும் புகழ்பெற்ற, வெள்ளிக்கிழமை உரைகளில், அறிவுரைகளில் சொல்லப்படும் இந்த வாசகம் ஒரு நபிமொழியின் சிறிய பகுதி. இந்த வாசகத்தில் இடம்பெற்றுள்ள பங்கீடு என்ற வார்த்தை கவனிக்கத்தக்கது. அது சமநிலை என்ற பொருளையும் தருகிறது. அனைவருக்கும் ஒரே மாதிரியாக அருட்கொடைகள், திறமைகள் வழங்கப்படவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான அருட்கொடை வழங்கப்பட்டுள்ளது. ஒருவரிடம் இருப்பதுபோன்றே இன்னொருவரிடம் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவரிடம் வேறு வகையான திறமைகள் இருக்கலாம். அனைவரும் இணைந்தே ஒரு சமநிலையை உருவாக்க முடியும்.
யாரும் யாரைவிட சிறந்தவர்கள் இல்லை. யாரும் யாரைவிட உயர்ந்தவர்கள் இல்லை. உயர்வும் சிறப்பும் உள்ளத்தில் இருக்கும் இறையச்சத்தின் அடிப்படையில், அதிலிருந்து வெளிப்படும் செயல்களின் அடிப்படையில் ஏற்படலாமே அன்றி வேறு எந்த வகையிலும் ஏற்பட முடியாது. இந்தச் சூழலில் கவனிக்க வேண்டிய மனிதன் தன்னிடம் இருப்பதை எப்படி சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதைத்தான். நிச்சயம் ஒவ்வொருவரிடம் ஏதோ ஒரு விசேஷமான அம்சம் இருந்தே தீரும். அப்படித்தான் மனிதர்கள் படைக்கப்பட்டுள்ளார்கள்.
தான் சார்ந்த துறையை மட்டும், தன்னிடம் இருக்கும் திறமையை மட்டும் மிகச் சிறந்த ஒன்றாக வெளிப்படுத்துவது கர்வத்தின் வெளிப்பாடே அன்றி வேறில்லை. ஒருவரின் இடத்தை இன்னொருவர் நிரப்ப முடியாது. சிறந்த முறையில் செயலாற்றி விட்டு முடிவை இறைவனின் வசம் ஒப்படைத்து விடுமாறு நாம் பணிக்கப்பட்டுள்ளோம். அதுதான் நம்முடைய மனஆரோக்கியத்திற்கும் உடல்ஆரோக்கியத்திற்கும் உகந்தது.
இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பணியை ஆற்றிக் கொண்டிருக்கின்றன. சில பணிகள் வெளிப்படையாக நமக்குத் தெரிகின்றன. சில மறைவாக இருக்கின்றன. அனைத்தும் இணைந்தே ஒரு சமநிலையை உருவாக்குகின்றன. அது ஆச்சரியமான சமநிலை. உண்மையில் அந்த சமநிலையைக் கவனித்துப் பார்க்கும் மனிதர்கள் ஆச்சரியமடைகிறார்கள். அவர்களின் அகம் பொங்கியெழுந்து அந்தப் பேரிறையே முன்னோக்குகிறது. அவனுக்கு முன்னால் சரணடைகிறது. அவனிடம் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்க விரும்புகிறது.
மனம் அடையும் திருப்தியே உண்மையான திருப்தி. அது பெரும் செல்வத்திலிருந்து, பெரும் அதிகாரத்திலிருந்து வெளிப்படக்கூடியதல்ல. அது மனதின் நிறைவிலிருந்து வெளிப்படக்கூடியது. தன்னிறைவு கொண்ட மனமே அன்றி பெரும் அருட்கொடை வேறு எதுவாக இருக்க முடியும்? நமக்கு வழங்கப்பட்டுள்ள திறமைகளை, ஆற்றல்களை நல்வழியில், இலாபகரமான வழியில் பயன்படுத்துமாறு நாம் பணிக்கப்பட்டுள்ளோம். அவற்றைக் கொண்டு நம்முடைய இவ்வுலகையும் மறுவுலகையும் வளப்படுத்துமாறு நாம் பணிக்கப்பட்டுள்ளோம்.
நம்மிடம் இருப்பதை விட்டுவிட்டு மற்றவர்களிடம் இருப்பதை எண்ணி ஏங்குவது பெரும் துன்பமாகும். அது அதிருப்தியை, நிராசையை உண்டுபண்ணக்கூடியது. அது மனநிறைவுக்கு எதிரானது. அது என்றும் தணியாத தாகத்தைப் போன்றது. உண்மையில் அந்த வகையான மனநிலை கொண்ட மனிதர்கள் எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் சென்று கொண்டிருப்பவர்கள், எதற்காக ஓடுகிறோம் என்று தெரியாமல் ஓடிக் கொண்டிருப்பவர்கள். சாதாரண சிறிய வாசகம்தான் இது. மீண்டும் மீண்டும் சொல்லப்படும் வாசகம்தான் இது. ஆனாலும் இது மீண்டும் மீண்டும் நினைவூட்டப்பட வேண்டிய வாசகம். நம் வாழ்க்கையில் பெரிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய வாசகம்.
நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் யார் மாதிரியும் ஆக வேண்டாம். இங்கு ஒவ்வொருவரும் தனித்துவமான படைப்புதான். ஒருவர் இடத்தை இன்னொருவர் நிரப்ப முடியாது. உங்களின் திறமைகளை, செல்வங்களை, நேரங்களை முடிந்த மட்டும் நல்வழியில் பயன்படுத்துங்கள். அது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன்தரக்கூடியதாக அமையும். இறைவன் உங்களுக்கு எந்தப் பாதையை இலகுபடுத்தித் தருகிறானோ அதுதான் நீங்கள் செல்ல வேண்டிய பாதை. எந்தப் பணியில் நீங்கள் மனதிருப்தி அடைகிறீர்களோ அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய பணி.
இந்த உலகம் குருட்டுத்தனங்களால் ஆனது அல்ல. அது ஆச்சரியமான சமநிலையால் ஆனது. நாம் பிறப்பதற்கு முன்னரே இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாம் இறந்த பின்னரும் அது இயங்கிக் கொண்டிருக்கும். அதன் சிறு துளிதான் நாம். ஆனாலும் நம்முடைய செயல்பாடுகளின் மூலம் ஆச்சரியமான அதன் சமநிலையில் பங்கு கொள்கிறோம். முட்டி மோதி அந்த சமநிலையைக் கண்டுகொள்ளும் தருணம்தான் உண்மையில் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பும் தருணம்.