நவீன கருத்தியல்கள் மீதான விமர்சனம்: சூறத்துல் ஃபாத்திஹாவுக்கு ஒரு புதிய விளக்கவுரை
திருக்குர்ஆன் தன்னகத்தே தனித்துவமானதோர் உலகநோக்கைக் கொண்ட ஓர் அறிவுக் கருவூலம்; இடர்மிகு பாதையில், இருள்மிகு காலத்தில் மனிதனுக்கு எது சரி, எது பிழை என்ற பார்வையை முறையாகப் புரியவைப்பதற்காக இறைவனால் அருளப்பட்ட ஒளிமிகு இறுதி வேதம்; எக்கோணத்தில் உலகை நோக்க வேண்டும், உலக-மறுமை விவகாரங்களில் தம் பார்வைகளை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற சட்டகத்தை வழங்கும் விமர்சன சிந்தனைசார் நூல்.
“இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குவதாக உம்மீது நாம் இறக்கிவைத்துள்ளோம்” என்ற குர்ஆன் வசனத்திற்கு, “எவரொருவர் அறிவைத் தேடிப்பெற விரும்புகிறாரோ அவர் குர்ஆனை எடுத்துக்கொள்ளட்டும். ஏனெனில் அது முன்னையவர்களினதும் பின்னயவர்களினதும் (எல்லோரினதும்) அறிவை உள்ளடக்கியுள்ளது” என்று நபித்தோழர் இப்னு மஸ்ஊத் விளக்கமளித்தார்கள்.
இமாம் அபூஹாமிது அல்கஸ்ஸாலி (றஹ்) அவர்கள் தனது ‘ஜவாஹிருல் குர்ஆன்’ நூலில், “எல்லா அறிவுக்கலைகளும் இறையறிவு என்னும் சமுத்திரத்திலிருந்து தருவிக்கப்படுபவையே” என்று கூறி எந்தவொரு அறிவுக்கலையின் அடிப்படையும் குர்ஆனிற்கு வெளியிலில்லை என கருத்துரைத்துள்ளார்.
இதுவே குர்ஆன் பற்றிய ஆரம்பகால அறிஞர்களின் பார்வை. மனித சிந்தனையை வலுவூட்டும் வகையிலான இந்த திருக்குர்ஆனை முஸ்லிம் அறிஞர்களும் புத்திஜீவிகளும் — அது இறைத்தூதர் முஹம்மதுக்கு அருளப்பட்டது முதல் இன்று வரையிலும் — பல்வேறு கோணங்களில் அணுகி உலக, மறுமை விவகாரங்களுக்கு பல்வேறு கண்ணோட்டங்களில் தீர்வுகளை வழங்கிக்கொண்டே இருக்கின்றனர்.
இவ்வகையான முயற்சியின் ஒரு பகுதியாகவே, டாக்டர் நாஸிர் ஃகானின் அண்மைய வெளியீடான The Straight Path: How Surah al-Fatiha Addresses Modern Ideologies நூலையும் கருத முடியும். சமகாலத்தில் பல்வேறு சிந்தனைகளும் கருத்தியல்களும் உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து, நம்மை அறியாமலே நமது சிந்தனைச் சட்டகத்தில் தாக்கம் செலுத்திவருகின்ற நிலையில், அவற்றை இஸ்லாமிய நோக்கிலிருந்து விமர்சன ரீதியாக அணுக வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனடிப்படையில், சூறா பாத்திஹாவிற்கு சமகாலப் பொருள்கோடல் ஒன்றை வழங்குவதன் மூலம் ஒரு முஸ்லிம் எவ்வகையில் நவீன கருத்தியல்களையும் சிந்தனைகளையும் விமர்சன நோக்கில் புரிதலுக்கு உட்படுத்த முடியும் என்பதைத் தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளது இந்நூல்.
நூலாசிரியர் டாக்டர் நாஸிர் ஃகான், வட அமெரிக்காவை மையமாகக்கொண்டு இயங்கும் Yaqeen Instituteஇன் கனடா பிரிவுக்கான தலைவராகச் செயற்பட்டுவருகிறார். அடிப்படையில் மருத்துவரான இவர், இஸ்லாமியக் கற்கைகளில் உயர்கல்வியையும் தொடர்ந்துவருகிறார். இவரின் பல எழுத்தாக்கங்கள் Yaqeen Institute வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இவரின் ஆக்கங்களில் சில, தத்துவம்சார் கலந்துரையாடல்களில் மிக முக்கியமானவை. Skepticism (ஐயவாதம்) தொடர்பான இமாம் இப்னு தைமிய்யாவின் சிந்தனைகள் பற்றிய இவரது விமர்சனக் கட்டுரை மிகவும் முக்கியமான ஆக்கம். இஸ்லாம், நாத்திகம், ஐயவாதம், ஈமானில் உறுதிநிலையை ஏற்படுத்தல் என்பன தொடர்பிலும் இவருடைய பல உரைகள் Youtubeஇல் காணப்படுகின்றன. இவரின் எழுத்தாக்கங்களைப் போலவே காணொளிகளும் அழகானவையாகவும் அறிவுப்பூர்வமானவையாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளன.
The Straight Path: How Surah al-Fatiha Addresses Modern Ideologies நூலில் நாஸிர் ஃகான், சூறத்துல் ஃபாத்திஹாவை பத்து பகுதிகளாகப் பிரித்து சமகாலத்தி்ல் குறிப்பிடத் தக்களவில் தாக்கம் செலுத்திவரும் கருத்தியல்களான நாத்திகம் (Atheism), பொருள்முதல்வாதம் (Materialism), இயற்கைச் சமயவாதம் (Deism), மதச்சார்பின்மைவாதம் (Secularism), பலகடவுள் கொள்கை (Polytheism), இயற்கைவாதம் (Naturalism), சார்பியல்வாதம் (Relativism), முற்போக்குவாதம் (Progressivism), தாராளவாதம் (Liberalism), பின்நவீனத்துவம் (Postmodernism) போன்றவற்றை விமர்சன ரீதியாகவும் ஆழமாகவும் பகுப்பாய்ந்து எழுதி்யுள்ளார்.
நூலின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கு, அவர் வழங்கியுள்ள ஒரு கருத்தியல் விமர்சனத்தை மட்டும் இங்கு சுருக்கமாக நோக்குவதே போதுமென்று கருதுகிறேன்.
“எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக” என்ற பொருளைத் தரும் சூறா ஃபாத்திஹாவின் வசனத்தை, ‘சார்பியல்வாதம்’ (Relativism) என்னும் கருத்தியலை இஸ்லாமிய நோக்கில் விமர்சிக்கும் வாசகமாக நாஸிர் ஃகான் முன்வைக்கிறார். “விழுமியப் பெறுமானங்களும் மெய்மைக் கூற்றுகளும் வெவ்வேறு பண்பாடுகள், கலாச்சாரங்கள், மக்கள் மத்தியில் வேறுபட்டுக் காணப்படுகின்றன. எனவே, முழுமையான பொது உண்மை என்ற ஒன்று இல்லை” என்னும் சார்பியல் வாதத்தின் சாரத்தைக் குறித்துக்காட்டும் நூலாசிரியர், தொடர்ந்து அது தொடர்பிலான இஸ்லாமிய விமர்சனத்தை மேற்குறித்த வசனத்தின் அடிப்படையில் முன்வைக்கிறார்.
ஆரம்பத்தில் அந்தக் குர்ஆன் வசனம், நவீனத்துவம் முன்வைக்கும் மதம் பற்றிய பாரம்பரிய, மரபார்ந்த கருத்தாடலிலிருந்து இஸ்லாம் மாறுபடுவதை முன்வைப்பதாகக் குறிப்பிடுகிறார். ஏனெனில், மதம் என்பதை நவீனத்துவம், ஓர் அடையாளப் பொருளகவும், என்றும் மாறாத தேக்கமடைந்த ஓர் அம்சமாகமாகவுமே முன்வைக்க, மறுதலையாக இவ்வசனம் இஸ்லாத்தை இறைவனை நோக்கித் தொடர்ந்து பயணிக்கும் பாதையாகவும், தன்மேம்பாட்டின் தொடர் செயன்முறையாகவும் அடையாளப்படுத்துகிறது. இதனால்தான், ஒவ்வொரு நாளும் முஸ்லிம்கள் இதனை இறைவனிடம் பிரார்த்தனையாக முன்வைப்பதாகக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். தொடர்ந்து, இவ்வசனத்திலுள்ள சொற்களின் பிரயோகப் பொருத்தப்பாட்டினையும் அழகுபட முன்வைக்கிறார். இதன்போது, ‘நேரான பாதை’ என்று மொழிபெயர்க்கப்படும் ‘ஸிராதுல் முஸ்தகீம்’ என்ற பிரயோகத்தின் ஆழமான அர்த்தத்தையும் நமக்கு உணர்த்துகிறார்.
அடுத்து, சரியான விழுமியப் பெறுமானங்களால் மனித சமூகம் முறையாக அடித்தளமிடப்படுவதில் சில படிநிலைகள் இருப்பதாகக் கூறும் நூலாசிரியர், அவற்றை தெளிவுற விளக்குகிறார். யதார்த்தத்தில் நல்வினை-தீவினை (Moral Truths) என்பது இருக்கிறதா? எது நல்வினை, எது தீவினை என்பதை (Moral Knowledge) எவ்வாறு அறிவது? விழுமியம்சார் இலக்குகளை நோக்கிய முயற்சியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் முகம்கொடுப்பதற்கு (Moral Development) மனிதர்களை எவ்வாறு பயிற்றுவிப்பது? சுயநலத்தை மறுத்து, பொதுநலனைக் கருத்திற்கொள்ளும் ஓர் சமூகத்தை (Moral Society) எவ்வாறு உருவாக்குவது? இவைதாம் அந்தப் படிநிலைகள். இவையே தனிமனித, சமூக மீட்சிக்கும் விமோசனத்திற்கும் வழியமைக்கும் என்பதையும் தெளிவுபடக் குறிப்பிடுகிறார்.
ஆனால், இதற்கு மறுதலையாக நவீனத்துவம் முன்வைக்கும் ’சார்பியல்வாதம்’, மனிதர்களை பல வழிகளிலும் சிதைப்பதாக சில உதாரணங்கள் மூலம் எடுத்துக்காட்டுகிறார். மத பன்முகத்தன்மை உருவாக்கும் சிக்கல்களுக்கு ஒரு தீர்வாக முன்வைக்கப்படும் Perennialism என்கிற கோட்பாடு, எவ்வாறு பொருத்தமற்ற பிழையான நிலைக்கு மனிதர்களை நகர்த்துகிறது என்பதைப் புரியவைக்கிறார்.
இறுதியில், சார்பியல்வாதம் முன்வைக்கும் இத்தகைய சிக்கல்களை சூறா ஃபாத்திஹா எவ்வாறு தீர்க்கிறது, மாற்று வழிமுறைகளை நோக்கி நகர்த்துகிறது என்பதை அடையாளப்படுத்தி குறித்த அந்தப் பகுதியை நிறைவுசெய்கிறார்.
இவ்வாறே, இந்நூல் மேற்குறிப்பிட்ட பத்து கருத்தியல்கள் தொடர்பிலும் நம்மை ஆழமான விமர்சன நோக்கில் சிந்திக்கத் தூண்டுவதுடன், இஸ்லாமிய உலகநோக்கை நமக்குக் கற்பிக்கவும் செய்கிறது. நூலுக்கு எழுதப்பட்டுள்ள இரு அணிந்துரைகளும் இஸ்திஆதா – அஊது, பஸ்மலா – பிஸ்மி போன்றவை எவ்வாறு நவீனகாலச் சிந்தனைகளையும் கருத்தியல்களையும் இஸ்லாமிய நோக்கிலிருந்து விமர்சிப்பதற்கு உதவுகின்றன என்பதை முன்வைப்பதாக அமைந்துள்ளன.
மொத்தத்தில் இந்நூல், நவீன மதச்சார்பற்ற உலகம் முன்வைக்கும் கருத்தியல்களின் போதாமைகளை விளக்குவதுடன், விழுமியம்சார் சிறந்த ஒழுங்கு ஒன்றை உருவாக்குவதற்கு திருக்குர்ஆன் முன்வைக்கும் இஸ்லாமிய உலக நோக்கு எத்துணை அவசியம் என்பதை நமக்கு உணர்த்துவதாக அமைகிறது.
(குறிப்பு: இந்நூலின் தமிழாக்கம் சீர்மை வெளியீடாக விரைவில் வெளிவரும், இன்ஷா அல்லாஹ்)