இஸ்லாமிய நாள்காட்டியின் மூலோபாய முக்கியத்துவம்
ஓ மக்களே! அல்லாஹ் தடுத்ததை அனுமதிக்கப்பட்டதாகவும், அனுமதித்ததை தடுக்கப்பட்டதாகவும் ஆக்குவதற்காக அல்லாஹ்வின் அதிகாரத்தை நிராகரிப்பவர்கள் நாள்காட்டியில் மோசடியாகத் திருத்தங்கள் செய்வதில் ஈடுபடுகிறார்கள். அல்லாஹ் இந்த வானங்களையும் பூமியையும் படைத்தபோது இருந்ததற்கு ஒப்ப காலம் இப்போது தனது அசல் நிலைக்கு வந்துசேர்ந்திருக்கிறது. ஒரு வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களைக் கொண்டதாகும். அவற்றுள் நான்கு புனிதமானவை. துல்கஅதா, துல்ஹஜ், முஹர்றம்; பின்பு ஜுமாதாவுக்கும் ஷஅபானுக்கும் நடுவில் வரும் றஜப் என்பனவே அவை. (நபியின் இறுதி ஹஜ்ஜுப் பேருரை)
நாள்கள், மாதங்கள், வருடங்கள் எனும் அலகுகளைக் கொண்டு காலத்தை எவ்வாறு மிகச்சரியாகக் கணக்கிடுவது என்பதைக் கூறுகின்ற நாள்காட்டி முறை உலக வரலாற்றிலேயே ஒன்றே ஒன்றுதான் இருந்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? அதைத் தவிர மனிதர்கள் இதுநாள்வரை பயன்படுத்தி வந்துள்ள மற்றெல்லா நாள்காட்டி முறைகளும் ஏதோவொரு வகையில் காலத்தைக் கூட்டுவதிலோ குறைப்பதிலோ (‘இடைச் செருகல்’ Intercalation என்றறியப்படும் நடைமுறையில்) ஈடுபட்டுள்ளன; அல்லது, போலிக் கடவுளரையும் அல்லாஹ்வின் சில படைப்புகளையும் வழிபடுவதாக அமைந்துள்ளன என்பதை நீங்கள் அறிவீர்களா?
தனிச்சிறப்பான இந்நாள்காட்டியை உங்கள் அன்றாடக் காரியங்களுக்குப் பயன்படுத்துவீர்களா? அல்லது, சில ‘சமய நிகழ்ச்சிகளுக்கு’ ஆயத்தமாவதற்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டுவிட்டு, அன்றாடக் காரியங்களுக்கு வேறேதேனுமொன்றைப் பயன்படுத்துவீர்களா? உண்மையில் இது கவனத்தை ஈர்க்கக்கூடியதொரு சூழ்நிலைதான்.
அந்த தனிச்சிறப்பான இஸ்லாமிய நாள்காட்டி முறையைத்தான் அல்லாஹ் முழு மனிதகுலத்திற்காகவும் வழங்கி இருக்கிறான் என்பதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். அதில் வாரநாள்களின் பெயர்களோ மாதங்களின் பெயர்களோ போலிக் கடவுளரையோ அல்லாஹ்வின் சில படைப்புகளையோ வழிபடுவதுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை. மாதத்தின் தொடக்கம் புதிய பிறையைப் பார்ப்பதன் மூலம் உறுதிசெய்யப்படுவதால், அதில் ஒவ்வொரு மாதமும் 29 அல்லது 30 நாள்களைக் கொண்டதாக அமைகிறது. இவ்வுண்மையின் முக்கிய விளைவு என்னவென்றால், இந்நாள்காட்டியின் மாதங்களுக்கும் ஆண்டின் பருவகாலங்களுக்கும் இடையே நிலையான உறவு இல்லை என்பதாகும்.
எடுத்துக்காட்டாகக் கூறுவதெனில், முஹர்றம் மாதம் சில ஆண்டுகளில் இளவேனிற் காலத்தில் வருவதுண்டு. பிறகு அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் முன்பனிக் காலத்திலும், பிறகு குளிர் காலத்திலும், பிறகு கோடைக் காலத்திலும், பிறகு மீண்டும் இளவேனிற் காலத்திலும் வரும். இஸ்லாமிய நாள்காட்டியின் மாதங்கள் எந்தவொரு குறிப்பிட்ட பருவகாலத்துடனும் நிலையாகப் பொருந்தாமல், எல்லாப் பருவ காலங்களின் வழியேயும் தொடர்ந்து பயணம் செய்கின்றன.
பருவ காலங்களுடன் இயைந்து செல்வதற்கான முயற்சிகள்
பருவ காலங்களுடன் இயைந்து செல்லும் வகையில் ஒரு நாள்காட்டியை உருவாக்குவதென்பது மிக நீண்ட காலமாகவே — இன்று வரையிலும் கூட — மனிதர்களால் தீர்க்க முடியாதவொரு சவாலாக இருந்து வருகின்றது. அத்தகைய முயற்சிகள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் எதைக் காட்டுகின்றன என்றால், கடந்த 5000க்கும் அதிகமான ஆண்டுகளில் பல்வேறு நாள்காட்டி முறைகளை மனிதர்கள் உருவாக்கியுள்ளனர்; ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவிலான துல்லியத் தன்மை கொண்டவை; ஒரு ஆண்டின் நாள்களையும் மாதங்களையும் தொகுத்துப் பார்த்தால் அது பூமி சூரியனைச் சுற்றி ஒரு முழுப் பயணத்தை நிறைவுசெய்ய ஆகும் காலத்துடன் நேர்த்தியாகப் பொருந்தி வர வேண்டும் என்பதே அம்முயற்சிகளின் நோக்கமாக இருந்துவந்துள்ளது.
பருவ காலங்கள் என்பன மக்களின் வாழ்க்கையில் ஆற்றிவந்துள்ள பாத்திரத்தை இங்கு மனதில் இருத்திக்கொள்ளுங்கள். மக்கள் தமது உணவைப் பெற்றுக்கொள்வதற்கும், விலங்குகளை வேட்டையாடவும் பயிர்செய்யவும் உரிய காலம் எதுவென்பதை கண்டுகொள்வதற்கும் பருவ காலங்களின் வருகையை முன்னறிவது உதவிகரமாக இருந்துவந்துள்ளது. உணவையோ நல்ல வாழ்நிலைகளையோ தேடி சில மனிதர்களும் விலங்குகளும் மேற்கொண்ட இடப்பெயர்வுப் பாங்குகளையும் பருவ காலங்கள் பற்றிய இவ்வறிவே தீர்மானித்தது. பல்வேறு தொழிற்துறைகள் இன்றும் கூட அந்தந்த பருவ காலங்களில் விற்பனையாகும் உற்பத்திப் பொருட்களையும், வழங்கப்படும் சேவைகளையும் சார்ந்தே இருக்கின்றன. உடைகள் மற்றும் காற்றுப் பதனிகளின் (Air-Conditioners) விற்பனை, வரி ஆலோசனைச் சேவைகள் போன்றவை ஓரளவுக்கு பருவகாலப் போக்குகளிலேயே தங்கியுள்ளன.
மற்றனைத்து காரணங்களைக் காட்டிலும் முக்கியமாக, பருவ காலங்களைத் துல்லியமாக முன்னறியும் வகையில் காலத்தின் செல்வழியைத் தடமறிவதற்கான ஒரு சாதனமாகவே நாள்காட்டிகள் உருவாக்கப்பட்டன. நாள்களை எண்ணவும், அவற்றை வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் எனும் அலகுகளாக ஒழுங்கு செய்யவும் அவை வடிவமைக்கப்பட்டன. பொதுவாக இந்த அலகுகள் மீள மீள நிகழும் வானியல் சுழற்சிகளில் இருந்தே பெறப்படுகின்றன. அல்லாஹ்வின் படைப்புகளின் மத்தியில், தமது சுழற்சிகளில் மிக வழமையானவையாகவும் வெளிப்படையாக மாற்றமுறுபவையாகவும் இவ்வானியல் கோளங்கள் இருப்பதே இதற்குக் காரணம்.
எடுத்துக்காட்டாக, சந்திரனின் படிநிலைகளிலிருந்தே மாதங்கள் வருகின்றன (அனேகமாக வாரங்களுக்கும் இது பொருந்தும்). அதேபோல், சூரிய ஆண்டு என்பது சாய்வான கோணத்தில் பூமி சூரியனைச் சுற்றிச் சுழல்வதிலிருந்து உருவாகிறது. மேலோட்டமாகச் சிந்திக்கும்போது, இச்சுழற்சிகளை அவதானிப்பதும் கணக்கீடு செய்வதும் எளியதொரு காரியம்போன்று தோன்றினாலும், உண்மையில் அது அத்துணை எளிதல்ல என்பது தெளிவாகியுள்ளது. பருவ காலங்களுடன் கன கச்சிதமாகப் பொருந்தும் துல்லியமான சூரிய நாள்காட்டி என்ற ஒன்று இன்றும் இல்லை; இருப்பதற்கான சாத்தியமும் இல்லை.
போலிக் கடவுளர் வழிபாடு
வானியல் கோளங்களை அவதானித்து வருவது நாள்காட்டிகளை உருவாக்குவதற்கு அவசியம்தான் என்றாலும், அவற்றை வழிபடுவதற்கான ஒரு வலுவான மனச்சாய்வையும் மனிதர்கள் வெளிப்படுத்தியே வந்துள்ளார்கள். அவற்றின் நகர்வுகளுக்கு ஏற்ப பருவ காலங்கள் வந்துசெல்வதால், பூமியில் மனிதர்களின் இருப்பினை அவை ஏதோவொரு வகையில் கட்டுப்படுத்துகின்றன என்றவர்கள் எண்ணினர். 5000 ஆண்டுகளுக்கு முன்பு டைக்ரீஸ்-யூப்ரடீஸ் நதிக்கரையில் தோன்றி வளர்ந்த சுமேரிய சமூகத்தில் அவற்றை அவதானித்துப் பதிவுசெய்வதற்கென தனியான துறை வல்லுனர்கள் இருந்தார்கள். வருடத்தின் குறிப்பிட்ட காலங்களில் பாசனப் பயிர் நிலங்களை உழுது, விதைத்து, பராமரித்து, அறுவடை செய்வதை சுமேரியர்களின் பொருளாதாரம் சார்ந்திருந்ததால், இப்பதிவர்களின் பாத்திரம் அதில் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது. எனவே அவர்கள் கடவுளரோடு தொடர்புள்ளவர்கள் என்றும், அவர்களின் நல்லாசியைச் சார்ந்தே சமூகத்தின் செழுமை இருக்கிறது என்றும் கருதப்பட்டது.
இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்த பாபிலோனியர்கள், சுமேரியர்களால் பயன்படுத்தப்பட்ட நாள்காட்டியில் திருத்தங்கள் செய்தனர். பத்தொன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரிய, சந்திர சுழற்சிகள் பொருந்திப் போகின்றன என்பது நீண்டகால அவதானங்களுக்குப் பின் கண்டறியப்பட்டது. இதன் ஒளியில் அவர்கள் மேற்கொண்ட திருத்தம், பருவ காலங்களுடன் இயைந்து செல்வதில் சூரிய நாள்காட்டியின் துல்லியத்தன்மையை அதிகரித்தது.
எனினும், பருவ காலங்களைக் கட்டுக்குக்குள் வைத்திருப்பதாக கருதப்பட்ட கடவுளர்களை சமாதானப்படுத்தும் எண்ணமே இப்பணிக்கு பிரதான தூண்டு விசையாக இருந்தது. பருவகாலங்களுடன் ஒத்திசைவதன் மூலம் கடவுளரோடு ஒத்திசையும் வகையில் நாள்காட்டியில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கூடுதல் நாள்களை சேர்க்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். கடவுளரை மகிமைப்படுத்தும் இந்தப் ‘புனித நாள்களை’ எப்போது சேர்க்க வேண்டும் என்பதை அறிந்து, அந்நாள்களில் பொதுவிருந்து, சிறப்பு வழிபாடுகள் போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் கடவுளர் தமக்களித்த அருட்கொடைகளை கொண்டாடி மகிழ்வதாக அவர்கள் கருதினர்.
இதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு உலகின் இன்னொரு பகுதியில் ஜூலியஸ் சீசர் அதிகாரத்திற்கு வந்தார். அவர் சூரிய நாள்காட்டி முறையின் உருவாக்கத்தில் அடுத்த பெரியதொரு சீர்திருத்தத்திற்கு தலைமை தாங்கினார். அவர் 365 நாட்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட எகிப்திய நாள்காட்டி முறையின் முக்கிய அம்சங்களை அப்படியே வைத்துக்கொண்டு, நான்காண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளை கூடுதலாகச் சேர்க்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தினார். இந்நடைமுறையை அவர் அதிகாரபூர்வமாக்கிய ஆண்டு ‘குழப்ப ஆண்டு’ என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் நாள்காட்டியைப் பருவ காலங்களோடு இணக்கமாகக் கொண்டுவருவதற்காக, அவ்வாண்டு மட்டும் வழமையான 365 நாள்களுக்குப் பதில் 445 நாள்களைக் கொண்டதாக ஆக்கப்பட்டது.
இந்த ஜூலியன் நாள்காட்டி முறை 1500 ஆண்டுகாலம் நடைமுறையில் இருந்தாலும், அதில் ஓர் உள்ளார்ந்த பிழை காணப்பட்டது. அதாவது, 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதில் ஒரு நாள் கூடிக்கொண்டே வந்தது. பதிமூன்றாம் கிரிகோரி அதிகாரத்திற்கு வந்தபோது, அது வரையிலும் பத்து நாள்கள் பிழை ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ஆகையால், சூரிய நாள்காட்டியின் 1582ஆம் ஆண்டின் பத்து நாள்களைக் கழித்த கிரிகோரி, லீப் வருட விதியையும் திருத்தியமைத்தார். அதுவே இன்று ‘கிரிகோரியன் நாள்காட்டி’ என்று அறியப்படுகிறது. ஒவ்வொரு 3323 ஆண்டுகளுக்கும் ஒரு கூடுதல் நாள் என்றளவில் துல்லியம் கொண்டது அது. சூரிய நாள்காட்டி முறைகளின் இவ்வரலாற்றுச் சுருக்கத்தை கவனித்தால் அவை அனைத்திலும் பல பொதுச் சரடுகள் தென்படுகின்றன. 1) போலிக் கடவுளரையும் அல்லாஹ்வின் சில படைப்புகளையும் வழிபடுவது தொடர்பான பிரதான கூறுகளையும் 2) நாட்களும் மாதங்களும் பருவ காலங்களுடன் பொருந்திவர வேண்டும் என்பதற்காக காலத்தைக் கூட்டவும் குறைக்கவும் செய்யப்படும் தொடர் முயற்சிகளையும் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
இன்று மிகப் பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் கிரிகோரியன் நாள்காட்டி இத்தகைய கூறுகளை பெருமளவு தன்னில் கொண்டுள்ளது. போலிக் கடவுளரையும் அல்லாஹ்வின் சில படைப்புகளையும் போற்றி வழிபடும் விதமாகவே அதன் மாதங்கள் பலவும், வார நாள்கள் அனைத்தும் பெயரிடப்பட்டுள்ளன. Sunday (ஞாயிறு) அல்லது ‘சூரிய தினம்’ என்பதும், Monday (திங்கள்) அல்லது ‘சந்திர தினம்’ என்பதும் சூரியனையும் சந்திரனையும் மகிமைப்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்டவை. Tuesday (செவ்வாய்), Wednesday (புதன்), Thursday (வியாழன்), Friday (வெள்ளி) ஆகிய அனைத்தும் டியூட்டோனியக் குலமரபுகளின் (Teutonic tribes) போலிக் கடவுளரது பெயர்கள். குறிப்பாக Friday என்பதற்கு ‘ஃபிரையா’ (Fria)வுடைய தினம் என்று பொருள். ‘ஃபிரையா’ என்பது டியூட்டோனிய மரபில் அன்புக்கான கடவுளைக் குறிக்கிறது. எனில், “Friday தொழுகைக்கு” செல்லுதல் என்பதை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா?
நாட்களின் பெயர்களில் இருப்பது என்ன?
ஆங்கிலம்
Sunday – சூரிய தினம்
Monday – சந்திர தினம்
Tuesday – Tiw எனும் போர்க் கடவுளின் தினம்
Wednesday – Woden எனும் பிரதான கடவுளின் தினம்
Thursday – Thonar எனும் வானுக்கான கடவுளின் தினம்
Friday – Fria எனும் அன்புக்கான பெண் கடவுளின் தினம்
Saturday – சனியுடைய தினம்
அறபு
அல்-அஹது – (வாரத்தின்) முதல் நாள்
அல்-இத்னைன் – (வாரத்தின்) இரண்டாம் நாள்
அத்-துலதா – (வாரத்தின்) மூன்றாம் நாள்
அல்-அர்பஆ – (வாரத்தின்) நான்காம் நாள்
அல்-ஃகமீஸ் – (வாரத்தின்) ஐந்தாம் நாள்
அல்-ஜுமுஆ1 – (வாரத்தின்) ஆறாம் நாள்
அஸ்-சபுத் – (வாரத்தின்) ஏழாம் நாள்
கிரிகோரியன் நாள்காட்டியில் இடம்பெற்றுள்ள ‘புனித நாLகள்’ அனைத்துமே (பலதெய்வ வழிபாடு கொண்ட) ‘பேகன்’ (pagan) மரபுகளுடன் பிணைந்தவை. பெரும்பாலான மாதங்களுக்கு போலிக் கடவுளரின் பெயர்களே சூட்டப்பட்டுள்ளன. இவ்வாறிருக்க, முஸ்லிம்கள் அடங்கலாக உலகின் பெரும்பகுதியினர் இந்நாள்காட்டி முறையையே பின்பற்றி வருகின்றனர். பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டுமா, அல்லது அதன் தோற்றத்தைக் கணக்கிட வேண்டுமா, அல்லது இரண்டையும் செய்ய வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதையிட்டு முஸ்லிம்களாகிய நாம் ஒவ்வொரு வருட றமளானிலும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறோம். அதே சமயம், தனது தோற்றுவாயையும் இன்றைய இருப்பையும் அல்லாஹ்வுடன் போலிக் கடவுளரை இணையாக்குவதில் மையப்படுத்தி நிற்கும் ஒரு நாள்காட்டியை நமது அன்றாடக் காரியங்களுக்குப் பயன்படுத்தி வருகிறோம். எனில், நாம் இங்கு ஏதோவொன்றைத் தவறவிட்டுவிட்டோம் என்று கூறுதல் பொருந்துமா?
மாதங்களின் பெயர்களில் இருப்பது என்ன?
January – தொடக்கங்களின் கடவுளான Janusஇன் மாதம்
February – இத்தாலியக் கடவுளான Februssஇன் மாதம்
March – போர் மற்றும் வேளாண்மையின் கடவுளான Marsஇன் மாதம்
April – அன்புக்கான பெண் கடவுளான Aphroஇன் மாதம்
May – மரியாதைக்கான பெண் கடவுளான Maiestaஇன் மாதம்
June – இத்தாலியப் பெண் கடவுளான Junoஇன் மாதம்
July – Julius Caesarஇன் மாதம்
August – Augustus Caesarஇன் மாதம்
September – Septern (ஏழாம்) மாதம்
October – Octo (எட்டாம்) மாதம்
November – Novern (ஒன்பதாம்) மாதம்
December – Decern (பத்தாம்) மாதம்
அல்லாஹ்வின் பேரருள்
அல்லாஹ்வுடைய இறுதித் தூதரின் பிரியாவிடை ஹஜ்ஜின் போது மனிதகுலத்திற்கு இரு வேதவெளிப்பாடுகள் அருளப்பட்டன. முதலாவது, ‘இடைச் செருகல்’ நடைமுறையை அதிகாரபூர்வமாக ரத்து செய்தது. அதாவது, நாள்காட்டியில் காலத்தைக் கூட்டுவதோ குறைப்பதோ சட்டவிரோதமானது என்பது இதன் பொருள். இரண்டாவது, ஆதிப் படைப்பின் தருணத்தில் வழங்கியிருந்த அசல் வடிவத்திற்கே அல்லாஹ் காலத்தை மீட்டுக் கொண்டுவந்துவிட்டான் என்ற பிரகடனம்.
இவ்வேதவேளிப்பாடுகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றின் ஊடாக அல்லாஹ் பரிபூரண முறையில் காலத்தை வரைவிலக்கணம் செய்திருக்கிறான் (இது மனிதர்களால் சாதிக்க முடியாதவொன்று). இடைச் செருகலை ரத்து செய்ததன் விளைவாக, ‘கால இடைவெளி’ அல்லது ‘கால அளவு’ என்ற காலத்தின் பண்பினை தெளிவாக வரைவிலக்கணம் செய்ய முடிந்திருக்கிறது. அதாவது, மாதங்களுடன் சில நாள்களையோ நாளின் ஒரு பகுதியையோ கூட்டிக் குறைத்து மாதங்களை நீட்டவோ சுருக்கவோ முடியாது என்பதை இது குறிப்பதுடன், ஒவ்வொரு மாதமும் காலம் பற்றிய தனித்துவமான விவரணமாக அமைந்திருப்பதையும் இது தெரிவிக்கின்றது. முஹர்றம், சஃபர், … முதலிய மாதங்கள் அனைத்தும் தெளிவான காலத் தொகுதிகளைக் குறிக்கும் பெயர்களாக அமைகின்றன.
இரண்டாவது வேதவெளிப்பாட்டின் ஊடாக, ‘சகாப்தம்’ (epoch) அல்லது ‘கால அமைவிடம்’ (location) என்ற காலத்தின் மற்றொரு பண்பினை அல்லாஹ் வரைவிலக்கணம் செய்திருக்கிறான். இதன் மூலம், மாதங்களின் வரிசையொழுங்கை அவன் தனது ஆதிப் படைப்பை ஆரம்பித்த கணப் புள்ளியுடன் பொருத்துகிறான். எனவே, நாம் ஒவ்வொரு ஆண்டு றமளானை அடையும்போதும் மெய்யாகவே றமளானைத்தான் அடைகிறோம் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்கிறோம். மற்ற மாதங்களுக்கும் இது பொருந்தும். ஒவ்வொரு ஆண்டிலும் நம் வாழ்வின் பன்னிரண்டில் பதினோரு காலத் தொகுதிகளை அவை பிரதிநிதித்துவம் செய்கின்றன என்ற வகையில் அவற்றின் முக்கியத்துவம் இங்கு எவ்வகையிலும் குறைந்தல்ல.
மேற்கூறியதன் ஒளியில் பார்க்கையில், ஆண்டின் மாதங்களுக்குப் பெயரிடுவதோ, மாதங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாள்களை வழங்குவதோ நமது சொந்த விருப்பத்தின்பாற் பட்டதல்ல என்பது தெளிவாகிறது. வேறு வார்த்தைகளில் கூறின், “இன்று எந்த நாள்?”, “நாம் இப்போது எம்மாதத்தில் உள்ளோம்?” போன்ற கேள்விகளுக்கு ‘மிகச் சரியான பதில்கள்’ இருக்கின்றன. அல்லாஹ் மனித குலத்திற்கு இந்நாள்காட்டியை வழங்கியதன் மூலம், இக்கேள்விகளுக்கு ‘மிகச் சரியான பதில்களை’ வழங்கியிருக்கிறான்.
நம் அன்றாட வாழ்வின் மற்ற அம்சங்களில் அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள இலக்குகளை எட்டவும், குறிக்கோள்களை நிறைவேற்றவும் கடுமையாக பிரயத்தனம் எடுக்கக் கடமைப்பட்டுள்ளதைப் போலவே, காலத்தைப் பேணும் முறைமையைத் தெரிவுசெய்வதிலும் பிரயத்தனம் எடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இன்னும் கூறுவதெனில், இலக்குகளை நிர்ணயித்து குறிக்கோள்களை நிறைவேற்ற முயலும் செயல்முறைக்காகவே நாம் இஸ்லாமிய நாள்காட்டி முறையை புரிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் வேண்டியுள்ளது.
அல்லாஹ் காலத்தை விரும்பியவாறு கையாளும் திறன் என்ற சிறப்புப் பரிசொன்றை மனிதர்களுக்கு வழங்கியுள்ளான். இதனால், நிகழ்வுகளை காணொளிப் பட்டை, மின்னணு ஊடகம் போன்றவற்றில் பதிவுசெய்து கடந்தகாலத்தை மீட்டிப் பார்க்க முடிகிறது. நாம் நினைவாற்றலைக் கொண்டிருப்பதுடன், வரவிருப்பவற்றை ஊகிப்பதற்கும், கற்பனையையும் தொலைநோக்குப் பார்வையையும் வெளிப்படுத்துவதற்கும் இயலுமை கொண்டிருக்கிறோம். கடந்த கால, நிகழ் கால, எதிர்கால நிகழ்வுகளை நமக்கேற்ப பயன்படுத்திக் கொள்வதற்கான நமது தனித்திறமை, பொறுப்புகளை நிறைவேற்றவும் வருங்காலத்திற்கு ஆயத்தமாகவும் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது.
நாம் இஸ்லாமிய நாள்காட்டிமுறை குறித்த நமது புரிதலை மேம்படுத்திக்கொள்வதும், வருங்கால நிகழ்வுகளைத் திட்டமிடுவதற்கு அதைப் பயன்படுத்துவதும் சாத்தியமில்லை என்ற தீர்மானத்திற்கு வரும் பட்சத்தில், மற்ற நாள்காட்டி முறைகளைப் பயன்படுத்துவதே நம் முன்னுள்ள ஒரே தெரிவாக மாறும். அவையோ மனிதகுலத்திற்குப் பேரருளாக அல்லாஹ் வழங்கிய வேதவெளிப்பாடுகளை மீறுபவையாக இருக்கின்றன. இத்தகைய முடிவு ‘சமய நிகழ்ச்சிகளுக்கு’ மட்டும் இஸ்லாமிய நாள்காட்டியைப் பயன்படுத்திக்கொண்டுவிட்டு, ‘சமூக விவகாரங்களுக்கு’ போலிக் கடவுளர் வழிபாட்டின் அடிப்படையில் அமைந்த பிற நாள்காட்டிகளை பயன்படுத்தும் நடைமுறை தொடரவே வழிவகுக்கும்.
நமது சமுதாயச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் சமயங்களில் நாம் இப்பிற நாள்காட்டிளுள் ஒன்றைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதே இதன் பொருள்; ஏனெனில், குறித்த எந்தவொரு நாளும் இஸ்லாமிய நாள்காட்டியில் எந்நாளுடன் இணங்கி வருகிறது என்பதை அறியாதவர்களாகவோ, அல்லது அது குறித்து உடன்பாடு காணாதவர்களாகவோதான் நாம் இருக்கிறோம். அது மட்டுமின்றி, நமது அமைப்புகள் தமக்கான மூலோபாயத் திட்டங்களை உருவாக்க முயலும் வேளையிலும்கூட வேறேதேனுமொரு நாள்காட்டியையே பயன்படுத்த வேண்டியிருக்கும் என்ற பொருளையும் இது தருகிறது. இவ்வாறு நமது திட்டமிடலுக்குப் பயன்படுத்த முடியாதவொரு நாள்காட்டியை அல்லாஹ் நமக்கு வழங்கியிருப்பான் என்று உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? அதே போல், வருங்காலத்திற்காக மூலோபாய ரீதியில் ஆயத்தமாகும் ஒரு இஸ்லாமிய அமைப்பு, போலிக் கடவுளர் வழிபாட்டின் மீதமைந்த ஒரு நாள்காட்டியை அதற்குப் பயன்படுத்துவதை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? உண்மையிலேயே இது கவனத்தை ஈர்க்கக் கூடியதொரு சூழ்நிலைதான்.
தமிழில்: உவைஸ் அஹ்மது
(மூலம்: The Strategic Importance of the Islamic Calendar)
குறிப்பு
அல்-ஜுமுஆ என்பது மொழிப்பொருளில் ஒன்றுகூடுதலை குறிக்கிறது (மொ.ர்.)
தமிழில் நாம் பயன்படுத்தி வரும் ஆண்டுகள், மாதங்கள் மற்றும் வாரநாட்களின் பெயர்களும் கட்டுரையில் விவரிக்கப்படும் அதே வகையான போலிக் கடவுளர் வழிபாட்டின் அடியாகவே உருவாகியுள்ளன. பெயர்கள் மட்டுமின்றி, நாள்காட்டியின் ஒட்டுமொத்த இயங்குமுறையும் மேற்குறிப்பிட்ட குறைபாடுகளைக் கொண்டிருப்பது தெளிவு. (மொ.ர்.)
இஸ்லாமிய நாள்காட்டி பற்றி மேலதிகம் அறிய விரும்புவோர் இந்த இணைப்பை பார்வையிடவும்: www.timeandstrategy.org