ஒரு தமிழ் முஸ்லிமின் இலங்கைப் பயண அனுபவப் பதிவு (பகுதி 1)
நமக்கு மிகவும் அறிமுகமானது என்று நாம் நினைக்கும் நிலங்களும் வாழ்க்கைகளும் அருகில் சென்று காணும்பொழுது மிகவும் விசித்திரமாகவும் நமது அனுபவ வெளிகளுக்குள் அகப்படாத, நமது மொழிக்குள் பெயர்த்துவிட முடியாத வாழ்க்கை வடிவங்களைக் கொண்டதாகவும் விரிவுகொள்ளும் அல்லவா, அத்தகையதாகவே இருந்தது எங்களது இலங்கைப் பயணம்.
நமக்கு நன்கு பழகிவிட்ட நமது வாழ்க்கைகளையே சரியாகப் புரிந்துகொள்ள அதனிடமிருந்து குறிப்பிட்ட அளவாவது அந்நியப்படவேண்டி உள்ளது. வேறு வாழ்க்கை வடிவங்களை அணுக்கமாகக் காண நமது புலங்களிலிருந்து அவ்வப்போதேனும் விலகிப் புறப்பட வேண்டியுள்ளது. எழுத்தோ, ஊடகச் செயற்பாடோ, இலக்கியமோ, அரசியல் செயற்பாடோ, ஆய்வோ, எத்துறையிலும் இலட்சியப்பூர்வமாகச் செயற்பட நாடுபவர்கள் அனைவருக்கும் பொதுவான குணமாகக் காணப்படுவது இப்படி வேற்று வாழ்க்கை வடிவங்களுடன் அணுக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் தங்களது சமூக உள்ளடக்கங்களையே ஆழமாகப் புரிந்துகொள்வதுதான்.
அதிலும் குறிப்பாக வரலாற்று ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் பின்னிப் பிணைந்திருந்தாலும் காலனிய அரசியல் நவீனத்தால் தேசிய அரசுகள் எனும் வடிவத்தில் வெவ்வேறு அரசியல் கட்டமைப்புகளாக இறுக்கமடைந்து, சிறுபான்மையாகவும் பெரும்பான்மையாகவும் பல்வேறு தேசிய இனங்களாக அகத்திலும் புறத்திலும் எல்லைக்கோடுகள் தீர்க்கமாக வரையப்பட்டதாக இந்நிலங்களின் சமூக அரசியல் வாழ்க்கை மாறியிருக்கும் காலத்தில், ஆய்வுத்தேடலோடு பயணப்படுபவர்களுக்கு நாடு விட்டு நாடு செல்வது என்பது தங்களது சமூக-பண்பாட்டு அரசியல் வாழ்க்கை குறித்து அவர்கள் இயல்பாக எடுத்துக்கொண்டிருக்கும் புரிதல்களை கலைத்துப்போடும்.
அவ்வாறு இந்திய தேசிய அரசுக்குள், தமிழ்நிலத்தில் தமிழனாகவும் இஸ்லாமியச் சிறுபான்மையாகவும் இடப்படுத்தப்பட்ட நிலையில் நின்றே சமூக அரசியல் வாழ்க்கை குறித்து சிந்தித்துப் பழக்கப்பட்ட எனக்கு, வெளிப்பார்வைக்கு எனதூர் போலவே தெரிந்தாலும் சமூக பண்பாட்டு வேறுபாடுகள், அரசியல் உட்கட்டமைப்பு, அரசியல் அன்றாடம் என்று பலவகைகளிலும் புதியதொரு களத்தைப் புரிந்துகொள்ளும் அனுபவமாக மாறியது இந்த இலங்கைப் பயணம்.
அதுமட்டுமல்லாது காலனிய வரலாற்றில் தொடங்கி, அதற்குப் பின் சிங்கள-பௌத்தப் பெரும்பான்மை அரசாக இலங்கை உருவானதிலிருந்து சமகாலம் வரையிலும் ஏராளமான அரசியல் வன்முறைகளால் தொடர்ந்து காயப்பட்ட நிலப்பரப்பாக இலங்கை இருந்திருக்கிறது எனும்போது, அதனால் தங்கள் வாழ்வு, உறவுகள், உடைமை, சுதந்திரம் ஆகியவற்றை இழந்த பாதிக்கப்பட்டோருடன் அண்டை நாட்டைச் சார்ந்த சக சிறுபான்மை எனும் அடிப்படையில் ஒரு ஒன்றிப்புணர்வு (solidarity) உடன்தான் இந்நிலங்களுக்குள் பயணப்பட முடிந்தது.
பொதுவாகவே, தமிழகத்தைப் பொறுத்தவரை இலங்கையை இங்குள்ள வெகுமக்களிய அரசியலுக்குத் தக புனைந்துகொள்வதுதான் பெரும்போக்காக இருந்துள்ளது. சிங்கள பௌத்தப் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவாக இங்கிருந்து ஆதரவுக்குரல்கள் மேலெழுந்தது இயல்புதான் என்றாலும், அதைத் தமிழ்ச்சூழலில் வெகுவாக எளிமைப்படுத்தி அப்பிரச்சினையில் உள்ள சிடுக்குகளை கவனிக்கத் தவறிவிட்டார்கள். அவ்வாறு வெகுவாக எளிமைப்படுத்தப்பட்டு பலவித தப்பபிப்பிராயங்களுக்கும் உள்ளாக்கப்பட்ட ஒரு விவகாரம் என்பது இலங்கை இஸ்லாமியர் குறித்த கேள்வி.
தமிழக அரசியல் சூழலுக்கும் இலங்கை அரசியல் சூழலுக்கும் இடையில் இருக்கும் ஒரு பெரிய அரசியல் வேறுபாடு என்பது தமிழ் பேசும் அனைவரையும் ஒரு இனமக்களாகக் கருதும் சூழல் அங்கு இல்லை. அங்கு இந்தியாவிலிருந்து பண்ணையடிமைகளாக பிரிட்டிஷாரால் கூட்டிச் செல்லப்பட்ட மலையகத் தமிழர்கள், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஈழம் கேட்ட இலங்கையின் பூர்விகத் தமிழர்கள், தமிழை பிரதானமாகவும் மிகச்சிறிய அளவில் உருது, மலாய், ஆங்கிலம் ஆகியவற்றை முதல்மொழியாகப் பேசக்கூடிய இஸ்லாமியச் சமூகத்தினர் என்று பலதரப்பட்ட சமூகங்கள் உள்ளனர். இவை அனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைக்கக்கூடிய ஒரு ‘தமிழ்’ அடையாளம் என்ற ஒன்று அங்கு இல்லை என்பதையே புரிந்துகொள்ளவேண்டும்.
மேலும் இவ்வெவ்வேறு சமூகங்கள் அனைத்தும் பல வரலாற்றுக் காரணங்களால் தங்களை தனி தேசிய இனங்களாகவே கருதுகிறார்கள். தமிழகச் சூழலுக்கு புரிபடாத ஒரு விசயம், ‘இனங்கள்’ என்பது ஒரு வரலாற்றுக் கட்டமைப்பு என்பதுதான். இன்றும் கூட தமிழக முற்போக்காளர் பலர் இனத்தை ஏதோ மரபணுப்பதிவு போன்றோ, அல்லது அதையும் விட சாசுவதமான ஒன்றாகவோ கருதிக்கொண்டிருப்பது என்பது தமிழ் முற்போக்குப் பொதுச்சூழலின் பிரச்சினையையே காட்டுகிறது.
ஒரு தேசிய அரசுக்குள் அதனது இறையாண்மையில் எவ்வாறு பங்கேற்பது என்பதில் இவ்வெவ்வேறு தேசிய இனங்களுக்கும் வெவ்வேறு பார்வைகள் இருக்கலாம். அப்பார்வைகளை அவர்கள் சந்திக்கும் குறிப்பான அரசியல் சவால்களும் குறிப்பிட்ட தேசிய அரசுக்குள் அவர்கள் எவ்வாறு இடப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பவையும்தான் தீர்மானிக்கின்றன.
உதாரணத்திற்கு, அரசியல் சாசன ரீதியாகவே குடியுரிமை அங்கீகரிக்கப்பட்டிருந்த வடகிழக்குத் தமிழர்கள் சிங்களப் பேரினவாதத்தோடு முரண்பட்டு முன்னெடுத்ததோ தனி நாட்டுக்கான போராட்டம். அதாவது, வடக்கு கிழக்கு உட்பட்ட தனி ஈழப் பிரதேசத்தில் சுயாதீனமான இறையாண்மையுடனான தமிழர்களின் தேசிய அரசு ஒன்றை நிர்மாணித்தல். ஆனால், அரசியல் சாசன ரீதியாகவே குடியுரிமை கூட மறுக்கப்பட்ட, எப்போதுமே இலங்கைக்குச் சொந்தம் கொண்டாட முடியாதவர்களாகக் கருதப்பட்ட மலையகத் தமிழர்கள் முன்னெடுத்ததோ இலங்கைக்குள் சம குடியுரிமைக்கான அரசியல். ஆக, அடிப்படையிலேயே குடியுரிமை சார்ந்து முரண்படக்கூடிய அரசியல்களையே இவ்விரு இனங்களும் கொண்டிருந்தன. எங்களது பயண வழிகாட்டியும் எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான சிராஜ் மஷ்ஹூர் பயணம் நெடுக எங்களிடம் இதை அடிக்கடி சொல்லிவந்தார். அதற்கு ஒரு முக்கிய காரணம் நாங்கள் தமிழகத்திலிருந்து வந்திருப்பதுதான் என்றே எனக்குப்பட்டது.
தமிழக அரசியல் பண்பாட்டு சூழலில் இலங்கை முஸ்லிம்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி என்பது ஏன் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தங்களை பிற தமிழர்களோடு இணைத்து அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான். அத்தகைய கேள்வியின் அடியாக உள்ள அனுமானம் மத அடையாளத்திலிருந்து தனி தேசிய இன அடையாளம் உருவாக முடியாது என்று கருதுவதும்தான். இன அடையாளம் என்பது மதம், மொழி, பிரதேசம் போன்ற சமூக வித்தியாசங்களை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழமைவுக்குள் உருவாகி வருவதே. அது சார்ந்த அரசியல்கள் தங்களை அரசுடனும் பிற இனங்களுடனும் உறவுகொள்ளும் பாங்கு எத்தகையது என்பதும், அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன என்பதும் வேண்டுமானால் விவாதிக்கப்படலாம். ஆனால் எந்த சமூக வித்தியாசம் இனமாகக் கருதப்பட முடியும், எதெல்லாம் அவ்வாறு கருதப்பட முடியாது என்பதை Prescriptive ஆக விவாதிக்க முடியாது.
இத்தகைய நிலையில் தமிழகச் சூழலில் நின்றுகொண்டு இலங்கை முஸ்லிம்களைப் பார்த்து, ‘நீங்கள் ஏன் உங்களை தமிழராக அடையாளப்படுத்திக்கொள்வதில்லை’ என்று வினவுவது ஒரு இனவாத வன்முறையே தவிர வேறில்லை. எதை விவாத மேசைக்கு எடுத்து வர முடியுமென்றால், இலங்கை தமிழ் அரசியல், முஸ்லிம் அரசியல், மலையகத் தமிழ் அரசியல் ஆகியவற்றின் கடந்த கால வரலாற்றையும், நிகழ்காலப் போக்குகளையும் விமர்சன ரீதியாக எடுத்து வர முடியும். இக்காலகட்டத்தில் இவ்வெவ்வேறு ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்களுக்கிடையில் ஏதாவது அரசியல் ஐக்கியமோ அல்லது குறைந்தபட்ச நிரலின் அடிப்படையிலான நகர்வுகளோ சாத்தியமா என்பதை விவாதிக்க முடியும். அல்லது குறைந்தபட்சம் இவ்வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் சேர்ந்து ‘சிறுபான்மை அறத்தால்’ உந்தப்பட்ட பொதுமன்றங்களை உருவாக்கி உழைக்கமுடியுமா என்பதைக் குறித்து சிந்திக்க முடியும். ஆனால் அதை விடுத்து, முஸ்லிம்கள் மதவாதிகளாக இருப்பதால்தான் தமிழ் அடையாளத்தை உயர்த்திப் பிடிப்பதில்லை என்று பேசுவது பெரியண்ணன் மனோபாவத்தில் ஊறிய அறியாமை என்றால், அதை தமிழகத்தைச் சேர்ந்த மையநீரோட்ட அரசியல் கட்சிகளின் முஸ்லிம் தலைவர்கள் சிலரே பேசுவது பலஹீனத்தோடு சேர்ந்த சந்தர்ப்பவாதமே தவிர வேறில்லை.
(தொடரும்)