சின்வாரின் கைத்தடி!
“நான் கொண்டிருப்பது போன்ற நம்பிக்கைகள், என்னுடைய குணம், நான் நம்புவதன்பால் நான் காட்டுகின்ற அர்ப்பணிப்பு, இவற்றை வைத்துப் பார்த்தால், நான் மற்றவர்களைப் போல முதுமையடைந்து அதற்குப் பிறகே மரணமடைவேன் எனக் கூற முடியாது” என்றார் மால்கம் எக்ஸ். அதற்கேற்ப தனது 39ஆவது வயதிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். “எங்கள் கொள்கை, அதனை அடைவதில் நாங்கள் காட்டும் வேகம், உறுதி இவற்றை வைத்துப் பார்க்கும்போது நரைத்தாலும் எங்களின் இறுதி இலட்சியத்தை அடைந்தே தீர்வோம்” என்பதை ஃபலஸ்தீனத் தலைவர்கள், குறிப்பாக ஹமாஸ் தலைவர்கள் நிரூபித்துவருகின்றனர். இந்தப் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பவர் யஹ்யா சின்வார். லட்சியத்தை அடைவதில் வயது ஒரு தடையல்ல என்பதற்கு இவர்கள் சாட்சி.
ஜூலை மாத இறுதியில் ஈரானில் ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட பிறகு அந்த இயக்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சின்வார். இது தவிர சின்வார் குறித்து வெளியுலகம் பெரிதாக அறிந்திருக்கவில்லை.
ஆனால் அக்டோபர் 16 அன்று ஃபலஸ்தீனின் காஸாவில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ரஃபா நகரத்தின் தல் அல்சுல்தான் பகுதியில் இஸ்ரேலியப் படைகளை எதிர்த்துக் களமாடிக் கொண்டிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட சின்வார் உலகின் நட்சத்திர நாயகனாக மாறினார். போராட்ட இயக்கத் தலைவர்கள் இதற்கு முன்னரும் படுகொலை செய்யப்பட்டிருந்தாலும் களத்தில் கொல்லப்பட்ட சின்வார் அறபு மற்றும் முஸ்லிம் உலகத்திற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகத்திற்கும் ஒரு ஹீரோவாக மாறியிருக்கிறார்.
தென் அமெரிக்கப் போராளி சே குவேராவுடன் அவரை ஒப்பிடுகின்றனர் காம்ரேடுகள். லிபியாவின் போராட்ட வீரர் உமர் முஃக்தாருடன் அவரை ஒப்பிடுகிறது முஸ்லிம் உலகம். ஆங்கிலேயரை எதிர்த்துக் களம் கண்ட திப்புசுல்தானுடன் ஒப்பிட்டு மகிழ்கின்றனர் இந்தியர்கள்.
அசத்தியம் தனது அக்கிரமத்தின் உச்சத்தில் இருக்கும்போதுதான் முட்டாள்தனமாகச் செயல்படும். மூசா (அலை) அவர்களை விரட்டிச் சென்ற ஃபிர்அவ்ன் இரு கூறாகப் பிரிந்த கடலுக்கு மத்தியில் அவர்களைப் பின்தொடர்ந்தான். அதுவரை கடல் பிளந்ததை அவன் கண்டதும் இல்லை, யார் சொல்லிக் கேட்டதும் இல்லை. ஆனால் எப்படியும் தனது அதிகாரத்தை தக்கவைக்க வேண்டும் என்ற மமதை அவனின் அறிவை மறைத்தது. விளைவு மூசா (அலை) அவரின் கூட்டத்தாருடன் காப்பாற்றப்பட்டார். ஃபிர்அவ்ன் இழிவான மரணத்தைச் சந்தித்தான்.
சின்வார் மரணத்தில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இப்படித்தான் செயல்பட்டார். சின்வாரின் இறுதித் தருணங்களை எதற்காக நமது அரசாங்கம் வெளியிட்டது என்று தலையில் அடித்துக்கொள்கின்றனர் இஸ்ரேலிய இராணுவத் தளபதிகள். ஒரு நிமிடத்திற்கும் குறைவான அந்த வீடியோ இஸ்ரேலின் பொய்களையும் போலி பிம்பத்தையும் தகர்த்ததுடன் சின்வாரின் கண்ணியத்தையும் உயர்த்தியுள்ளது.
ரகசியப் பதுங்குகுழியில் இஸ்ரேலியப் பிணைக்கைதிகளைக் கேடயமாக வைத்து சின்வார் கோழையைப் போல் வாழ்ந்துவருகிறார் என்பதுதான் அவர்குறித்து இஸ்ரேல் கட்டமைத்த பிம்பம். ஆனால் சக வீரர்களுடன் இஸ்ரேலியப் படைகளை நேரடியாக எதிர்த்து, காயம் அடைந்து, வீர மரணத்தைத் தழுவியுள்ளார் சின்வார். தலையில் காயம், ஒரு கையில் ரத்தம் கசிந்துகொண்டிருக்க சோஃபாவில் அமர்ந்திருக்கும் சின்வார் இறுதித் தருணத்திலும் தன்னைக் கண்காணிக்க வந்த ட்ரோன் மீது தடியை தூக்கி வீசிய காட்சி இன்னும் சில காலம் மக்களின் மனதை விட்டும் அகலாது. சின்வார் வீசிய தடி அந்த ட்ரோனை மட்டுமல்ல ஒட்டுமொத்த ஸியோனிசக் கும்பலையும் ஆட்டம் காணச் செய்துள்ளது.
இஸ்ரேலியப் படைகளுடன் காஸாவின் வீதிகளில் சண்டையிட்டுக்கொண்டிருந்த சின்வார் தனது சக வீரர்களுடன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும்போது இஸ்ரேலியப் படைகளால் தாக்கப்பட்டார். ஷெல் தாக்குதலால் அவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டபோதும் தன்னை நோக்கி வந்த இஸ்ரேலியப் படையினர் மீது கையெறி குண்டுகளை வீசினார். அவர்கள் பயந்து ஓடினர்.
மீண்டும் அருகில் வர தைரியம் இல்லாதவர்கள் கண்காணிப்பதற்காக ட்ரோனை அனுப்பியுள்ளனர். சோர்வடைந்த போதும் ட்ரோனை நோக்கி தடியை வீசி தனது எதிர்ப்பைப் பதிவுசெய்தார் சின்வார். இருப்பிடத்தை அறிந்தவர்கள் கவச வாகனத்திலிருந்து தாக்குதல் நடத்தி அவரைக் கொலைசெய்தனர். ட்ரோன், கவச வாகனம், வான் தாக்குதல் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு மனிதனைக் கொலைசெய்துள்ளது இஸ்ரேல். ஹாலிவுட் படங்களில் மட்டுமே இத்தகைய காட்சிகளைக் கண்டுள்ளதாக பலரும் சிலாகிக்கின்றனர்.
இஸ்ரேல், அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் சின்வாரை ஒரு வில்லனாகச் சித்தரிக்க முயன்றாலும் ஃபலஸ்தீனில் அகதிகள் முகாம் ஒன்றில் பிறந்தவர் மரணத்திற்குப் பின்னரும் ஸியோனிசவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார். இஸ்ரேலின் கொடுஞ்சிறைகளில் 23 ஆண்டுகால சிறைவாசம் அனுபவித்த ஒருவர் இஸ்ரேலின் தொண்டையில் சிக்கிய முள்ளாக மாறியிருப்பது உண்மையில் ஆச்சரியமானதே!
காஸாவின் ஃகான் யூனுஸ் அகதிகள் முகாமில் யஹ்யா சின்வார் 1962இல் பிறந்தார். ஃபலஸ்தீனின் மஜ்தல் நகரில் வசித்துவந்த அவரின் குடும்பத்தினர் 1948இல் அகதிகளாக காஸாவிற்கு வந்தனர். ஒரே இரவில் இவர்களின் ஊரும் இஸ்ரேலாக மாறியது. காஸா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற சின்வார் அறபி மொழியில் பட்டம் பெற்றார்.
கல்லூரி நாள்களிலேயே இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டங்களிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். 1982இல் இஸ்ரேலிய அதிகாரிகளால் முதன் முறையாக கைதுசெய்யப்பட்டார். மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கைதுசெய்யப்பட்டவருக்கு சிறைச்சாலை திருப்புமுனையாக அமைந்தது. அங்குதான் மூத்த ஃபலஸ்தீனத் தலைவர் ஷைஃகு அஹ்மது யாசீனைச் சந்தித்தார். ஹமாஸ் இயக்கத்தின் முதல் தலைவரான ஷைஃகு யாசீன் இவரை தனது நெருங்கிய வட்டத்திற்குள் கொண்டுவந்தார்.
முனாஸமாத் அல்ஜிஹாத் வத்தஃவா (சுருக்கமாக மஜ்து) என்ற பிரிவை சின்வார் தோற்றுவித்தார். இஸ்ரேலுக்கு உளவுபார்க்கும் ஃபலஸ்தீனக் கைக்கூலிகளை கண்காணிப்பது இந்தப் பிரிவின் வேலை. புதிதாகத் தொடங்கப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் முதல் பாதுகாப்புப் பிரிவாக இது செயல்பட்டது.
1988இல் சின்வார் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். இரண்டு இஸ்ரேலிய இராணுவத்தினரையும் நான்கு ஃபலஸ்தீன உளவாளிகளையும் கொலைசெய்ததற்காக அவருக்கு நான்கு ஆயுள் தண்டனை, அதாவது 426 ஆண்டுகள் சிறைவாசம் தண்டனையாக விதிக்கப்பட்டது.
இதனையே தனது முதல் சிறைவாசம் என்று தனது உயிலில் குறிப்பிட்டுள்ளார். முந்தையவை சில மாதச் சிறைவாசம் என்பதால் அவற்றை கணக்கில் கொள்ளவில்லை போலும்!
யஹ்யா சின்வார் என்ற தலைவன் உருவாகும் முன்பே முடக்கிவிட்டோம் என்று ஸியோனிசத் தலைவர்கள் அப்போது கணக்கு போட்டிருப்பார்கள். ஆனால் 35 ஆண்டுகள் கழித்து இப்படி தடியை வீசி தங்கள் முகத்தில் கரியைப் பூசுவார் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
தன்னிடம் வருபவர்களை சிதைக்கும் வல்லமை கொண்டது சிறை. மன உறுதியும் கொள்கை உறுதியும் கொண்டவர்கள் இதற்கு விதிவிலக்கு. பொறுமை என்ற மிகக் கடினமான ஆயுதத்தை சிறையில்தான் கற்றுக்கொண்டதாக சின்வார் தெரிவித்துள்ளார். ஃபலஸ்தீனில் பிறந்த அனைவரும் சிறைக்குச் செல்லும் சாத்தியம் அதிகம் இருப்பதால் “விடுதலைக்கான வழி வலியில் இருக்கிறது. எனவே சிறையைக் கண்டு அஞ்சாதீர்கள்” என்று தனது மக்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார்.
வயதைக் கொண்டு ஒரு மனிதன் மதிப்பிடப்படுவதில்லை. மாறாக தனது தாய்நாட்டிற்காக என்ன செய்தான் என்பதைக் கொண்டே மதிப்பிடப்படுகிறான் என்பதை காஸாவின் வீதிகளில் தான் கற்றுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார். சிறையும் போர்களும் வலிகளும் நம்பிக்கையும் அவரின் வாழ்க்கையை வடிவமைத்துள்ளன.
சிறையில் இருந்த நாள்களில் ஹீப்ரூ மொழியைக் கற்றுக்கொண்ட இவர், இஸ்ரேலின் அரசியல் மற்றும் உள்விவகாரங்களில் நன்கு பரிச்சயம் அடைந்தார். எதிரியை சரியாகப் புரிந்துகொள்ள இவை தனக்கு உதவியதாகக் கூறியுள்ளார். தனது சுயசரிதையின் ஒரு பகுதியை சிறையில் வைத்து எழுதினார்.
2011இல் கிலாத் ஷாலித் என்ற ஒரு இராணுவ வீரனுக்காக 1027 ஃபலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுதலை செய்தது. அதில் யஹ்யா சின்வாரும் ஒருவர்.
சிறையில் இருந்து வெளியே வரும்போது தான் வலிமையுடன் வந்ததாக அவர் குறிப்பிடுகிறார். அதன் பின்னரான அவரின் செயல்பாடுகள் அவரின் வலிமையைப் பறைசாற்றின. தாங்கள் நடத்துவது தற்காலிகப் போராட்டம் அல்ல என்பதையும், அதுதான் தங்களின் விதி என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.
2013இல் ஹமாஸ் இயக்கத்தின் பொலிட் பீரோ உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இயக்கத்தின் இராணுவப் பிரிவான இஸ்ஸத்தீன் அல்கஸ்ஸாம் பிரிவை ஒருங்கிணைக்கும் பணியும் அவரிடம் கொடுக்கப்பட்டது. 2014இல் காஸிவின் மீது ஏழு வாரங்கள் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. அப்போது அரசியல் மற்றும் இராணுவத் துறைகளில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். மறு வருடம் ‘சிறப்பு பயங்கரவாதிகள் பட்டியலில்’ இவரை அமெரிக்கா சேர்த்தது.
2017இல் ஹமாஸ் அமைப்பின் காஸா பிரிவு தலைவராக சின்வார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 மே 6 முதல் 21 வரை காஸா மீது குண்டுமழை பொழிந்தது இஸ்ரேல். இதற்கு பதிலடியாக ‘ஜெரூஸலத்தின் வாள்’ என்ற பெயரில் தாக்குதலை நடத்தியது ஹமாஸ். இதிலும் சின்வார் முக்கியப் பங்கு வகித்தார்.
2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலை அதிரச் செய்த ‘அல்அக்ஸா பிரளய’த் தாக்குதலை திட்டமிட்டவரும் இவரே என்று கூறப்படுகிறது. உலகின் வலிமையான இராணுவம், யாராலும் வெல்ல முடியாத உளவுத்துறை, அதி நவீன கண்காணிப்புக் கருவிகள் என இஸ்ரேல் கட்டமைத்து வைத்திருந்த ஒட்டுமொத்த பிம்பமும் சுக்குநூறாக உடைந்த தினம் அது. அதற்கு முன்னரே தனது ஹிட் லிஸ்டில் சின்வார் பெயரை வைத்திருந்த இஸ்ரேல் இப்போது அதனை முன்னுக்குக் கொண்டுவந்தது.
ஹிட் லிஸ்டில் பெயர் வந்துவிட்டது என்பதற்காக புதைகுழியில் மறைந்து வாழும் பழக்கம் ஃபலஸ்தீனர்கள் உட்பட எந்த லட்சியவாதிக்கும் கிடையாது. ‘Dead Men Walking’ என்று இஸ்ரேல் இவர்களைக் குறிப்பிடும்போதெல்லாம் ஹமாஸ் இயக்கத் தலைவர் ஃகாலித் மிஷ்அல் கூறிய வார்த்தைகள்தாம் நினைவுக்கு வருகின்றன. 1997 செப்டம்பர் மாதம் ஜோர்டான் தலைநகர் அம்மானில் வைத்து ஃகாலித் மீது மொஸாத் உளவாளிகள் தாக்குதல் நடத்தினர். கோமா நிலைக்குச் சென்ற ஃகாலித் மிஷ்அல் அதிலிருந்து மீண்டுவந்தார். “படைத்தவன் எப்போது நாடுகின்றானோ அப்போதுதான் உயிர் பிரியுமே தவிர, நீ நினைக்கும் போதெல்லாம் உயிரை எடுக்க முடியாது” என்று அப்போது அவர் கூறியதுதான் எப்போதும் இஸ்ரேலுக்கான பதிலாக இருக்கிறது.
சின்வாரும் அப்படித்தான் இருந்தார். ஒருமுறை பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து “சந்திப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்துதான் செல்வேன். இஸ்ரேல் நினைத்தால் என்னை கொலைசெய்து கொள்ளட்டும்” என்று தெரிவித்தார். “என்னைப் படுகொலை செய்வதுதான் ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கு கொடுக்கும் மிகப்பெரும் பரிசாக இருக்க முடியும். அதன் மூலம் ஒரு உயிர்த் தியாகியாக அல்லாஹ்விடம் நான் செல்ல முடியும். கொரோனா அல்லது பக்கவாதம் அல்லது மாரடைப்பு அல்லது விபத்தில் மரணிப்பதை விட எஃப் 16 (போர் விமானம்) அல்லது ஏவுகணைகள் மூலம் கொல்லப்படுவதை நான் விரும்புகிறேன். அர்த்தமில்லாத மரணத்தை விட ஓர் உயிர்த் தியாகியாக மரணிக்கவே நான் விரும்புகிறேன்” என்று சில வருடங்களுக்கு முன் சின்வார் கூறிய வார்த்தைகளில் அவரின் லட்சியத்தை அறிந்துகொள்ளலாம்.
ஹமாஸ் முன்னால் தலைவர் அப்துல் அஜீஸ் றன்தீசி கூறிய வார்த்தைகளுக்கும் சின்வாரின் வார்த்தைகளுக்கும் இடையே ஒற்றுமையைக் காண இயலும். 2004 மார்ச் மாதம் ஹமாஸ் இயக்கத் தலைவர் ஷைஃகு அஹ்மது யாசீன் படுகொலை செய்யப்பட்ட பிறகு றன்தீசி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது இன்திஃபாதா (மக்கள் எழுச்சி) உச்சத்தில் இருந்த அந்த காலகட்டத்தில் ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் தொடர்ச்சியாகக் கொலைசெய்துகொண்டிருந்தது.
‘தலைவர்களைக் கொல்வோம்; ஹமாஸை அழிப்போம்’ என்று அப்போதும் கொக்கரித்தது இஸ்ரேல். “மாரடைப்பு வந்து மரணிப்பதை விட அப்பாச்சி ஹெலிகாப்டரால் மரணிப்பதையே விரும்புகிறேன்” என்றார் றன்தீசி. அதற்கேற்ப ஏப்ரல் மாதம் அவர் படுகொலை செய்யப்பட்டார். ஷைஃகு யாசீன், றன்தீசி ஆகியோரைப் போன்று தற்போது இஸ்மாயில் ஹனிய்யாவும் யஹ்யா சின்வாரும் அடுத்தடுத்து கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
சின்வாரின் படுகொலையை வரவேற்றுள்ள அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் அவரை மிகப்பெரும் பயங்கரவாதியாகச் சித்தரிக்கின்றனர். ஆனால் நெதன்யாகு போன்று சின்வார் போர்வெறி கொண்டவர் கிடையாது. இஸ்ரேலுடன் இன்னொரு போரை நடத்தும் விருப்பம் தங்களுக்கு இல்லை என்று 2018இல் அவர் தெரிவித்திருந்தார். காஸாவின் மீதான தடைகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதே வருடம் மிகப்பெரும் பேரணிகளை ஃபலஸ்தீனர்கள் நடத்தினர். ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் எல்லைகளை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் அமைதியாக அணிவகுத்தனர். ஆனால் இந்த அமைதிப் போராட்டத்தையும் வன்முறையைக் கொண்டு எதிர்கொண்டது இஸ்ரேல். இஸ்ரேலின் தாக்குதலில் 230 ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த அமைதிப் பேரணிகளை வழிநடத்தியதில் சின்வாருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ‘அக்டோபர் 7 தாக்குதலைத் திட்டமிட்டவர்’ என்று கூறும் மேற்கத்திய ஊடகங்கள் இதனை ஏனோ சொல்வதில்லை. ஃபலஸ்தீன மக்களின் அமைதிப் போராட்டங்களை சர்வதேச சமூகம் ஆதரித்து தங்களின் உரிமையை வழங்க இஸ்ரேலை நிர்ப்பந்திக்கும் என்று நம்பிய சின்வார் உள்ளிட்டவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆயுதப் போராட்டம், அமைதிப் போராட்டம், அரசியல் நகர்வுகள் என அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் நம்பினார். ஆனால் இரண்டு வருடங்கள் நடைபெற்ற அமைதிப் போராட்டங்களை சர்வதேச சமூகம் கண்டுகொள்ளவில்லை; இஸ்ரேலின் அத்துமீறல்களையும் கண்டிக்கவில்லை.
மே 26 2021 அன்று நடைபெற்ற நீண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் தங்களின் அரசியல் மற்றும் இராணுவ நிலைப்பாடு குறித்து தெளிவாக எடுத்துரைத்தார் சின்வார். இஸ்ரேலுடன் நீண்டகால அமைதி ஒப்பந்தத்திற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் அவர் பேசினார். ஆனால் 2022 இறுதியில் இஸ்ரேலில் ஆட்சிக்கு வந்த தீவிர வலதுசாரி ஸியோனிச அரசாங்கத்தின் செயல்பாடுகள் ஃபலஸ்தீன மக்கள், போராட்ட இயக்கங்கள், மற்றும் சின்வார் உள்ளிட்ட தலைவர்கள் இடையே மாற்றத்தை ஏற்படுத்தின.
ஃபதாஹ் உள்ளிட்ட ஏனைய ஃபலஸ்தீன இயக்கங்களுடன் நெருக்கமான உறவைப் பேணிவந்த சின்வார், அந்த இயக்கங்களின் தலைவர்கள்மீது அதிக மரியாதையும் கொண்டிருந்தார்.
ஹனிய்யாவின் மரணத்திற்குப் பின் ஹமாஸ் தலைவராக சின்வார் தேர்ந்தெடுக்கப்பட்டதே ஆச்சரியமான விஷயம்தான். தற்போதைய சூழலில் தலைவராக உள்ளவர் சுதந்திரமாகப் பயணிக்க வேண்டும்; ஏனைய தலைவர்களை சந்திக்க வேண்டும். தடைகளுக்கு மத்தியில் காஸாவில் வாழ்ந்துகொண்டு இவற்றைச் செய்வது சாத்தியமில்லை. அதனால்தான் ஃகாலித் மிஷ்அலுக்குப் பிறகு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்மாயில் ஹனிய்யா கத்தார் நாட்டிற்குக் குடிப்பெயர்ந்தார். ஹனிய்யாவிற்குப் பிறகு மீண்டும் ஃகாலித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இஸ்ரேலின் அத்துமீறல்களை நேரடியாக எதிர்கொள்ளும் காஸாவிற்கே இயக்கத்தை வழிநடத்தும் உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று ஃகாலித் மிஷ்அல் கூறினார். இதைத் தொடர்ந்து இயக்கம் மற்றும் ஃபலஸ்தீனின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் சின்வார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சின்வாரின் மரணம் போராட்டத்திற்கான முற்றுப்புள்ளி அல்ல. ஃபலஸ்தீனப் போராட்டம் தொடங்கிய நாள்களில் இருந்து பல தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இயற்கை மரணத்தைச் சந்தித்த ஃபலஸ்தீனத் தலைவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இரண்டாவது இன்திஃபாதாவின் (2000-2005) போதும் அடுத்தடுத்து தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் போராட்டம் நீர்த்துப் போகவில்லை. இன்னும் சொல்வதென்றால் ஒவ்வொரு தலைவரின் மரணமும் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்றுள்ளது. சின்வாரின் மரணமும் அதையே செய்யும். இதைத்தான் அவரும் தனது உயிலில் தெளிவுபடுத்தியுள்ளார்.
“உயிர்த் தியாகிகள் சிந்திய ரத்தத்திற்கு உண்மையாளர்களாக இருங்கள். சுதந்திரத்திற்காக பாதை அமைத்த அவர்களின் தியாகங்களை அரசியல் லாபங்களுக்காக வீணாக்கிவிடாதீர்கள். நமது முன்னோர்கள் தொடங்கியதை முடிப்பது நமது வேலை. விலை எவ்வளவு இருந்தாலும் இந்தப் பாதையை விட்டும் தவறிவிடாதீர்கள். இந்த நிலம் நமக்கு எவ்வளவு குறுகியதாக இருந்தாலும் இப்போதும் எப்போதும் உறுதியின் உறைவிடமாக காஸா இருக்கும்” என்று தன் மக்களுக்கு உபதேசம் வழங்கியுள்ளார் சின்வார். நூறாண்டு காலப் போராட்டத்தில் தியாகத்தைச் சந்தித்த அளவிற்கு துரோகத்தையும் சந்தித்தவர்கள் ஃபலஸ்தீனர்கள். சர்வதேச சமூகம் தங்களுக்கு வழங்கும் ஆதரவிற்கு நன்றி மறக்காத அவர்கள், ஆட்சியாளர்களின் துரோகங்களையும் கண்டிக்கத் தவறுவதில்லை. அதே சமயம் உரிமைக்கான போராட்டம் அடுத்தவர்களின் தயவிலும் கண் அசைவிலும் நடைபெறுவதில்லை என்பதையும் அவர்கள் நன்றாக அறிவார்கள்.
“உலகம் உங்களுக்கு நீதியை வழங்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். நமது பாதிப்புகளை உலகம் எவ்வாறு மௌனமாக வேடிக்கை பார்த்தது என்பதை என் வாழ்நாள் முழுவதும் என் கண்களால் கண்டுள்ளேன். நீதிக்காகக் காத்திருக்காதீர்கள்; நீங்களே நீதியாக மாறிவிடுங்கள். ஒவ்வொரு காயத்தையும் ஆயுதமாக மாற்றுங்கள்; ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் நம்பிக்கையின் ஊற்றாக மாற்றுங்கள்” என்று தன் மக்களுக்கு எதார்த்தத்தை உணர்த்தி நம்பிக்கை ஊட்டியவர் அவர்.
சின்வாரின் மரணம் ஃபலஸ்தீன மக்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என்று சிலர் பகல் கனவு காண்கின்றனர். சின்வாருக்குப் பின் என்ன என்று சிலர் கேள்விக்குறியை எழுப்புகின்றனர். தலைவர்களின் மரணம் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதில்லை. இது உண்மையாக இருந்திருந்தால் 1930களில் இஸ்ஸத்தீன் அல்கஸ்ஸாமின் படுகொலையுடன் ஃபலஸ்தீனப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இன்று அதே கஸ்ஸாமின் பெயரில் அமைந்துள்ள இராணுவப் பிரிவு ஸியோனிசத்தின் இருப்பை ஆட்டம் காணச் செய்துள்ளது.
“நான் வீழ்ந்தால் என்னுடன் வீழ்ந்துவிடாதீர்கள். இதுவரை நிலத்தில் ஓய்வெடுக்காத கொடியை என் கரத்தில் இருந்து பற்றிக்கொள்ளுங்கள். நமது சாம்பலில் இருந்து எழுச்சி பெறும் வலிமையான சமுதாயத்திற்கு எனது குருதியைக் கொண்டு பாலம் அமையுங்கள்” என்று தனக்குப் பின் என்ன என்ற கேள்விக்கு அழகான பதில் கொடுத்துள்ளார் சின்வார்.
“புயல் மீண்டும் எழுந்து, நான் உங்களுக்கு மத்தியில் இல்லாத சமயத்தில், சுதந்திர அலையின் முதல் துளியாக நான் இருந்தேன் என்பதை புரிந்துகொள்ளுங்கள். அவர்களின் (எதிரிகளின்) தொண்டைகளில் முள்ளாக இருங்கள். புறமுதுகு காட்டாத புயலாக மாறுங்கள். நாம் நீதிக்காக நிற்கிறோம் என்பதை உலகம் அறியும்வரை ஓய்வெடுக்காதீர்கள்” என்று தனது இறுதி வரிகளின் மூலம் நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார்.
நிலம், கலாசாரம், கண்ணியம், போராட்டம், தியாகம் என அனைத்தையும் போற்றும் ஃபலஸ்தீன மக்கள் நீதியின் கொடியை எப்போதும் உயர்த்திப் பிடிப்பார்கள்.