நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

‘அத்தர்’ வாசிப்பு அனுபவம்

Loading

மனிதனின் வாழ்க்கைப் பயணம் அலைச்சல் மிகுந்தது. அனுபவங்களுக்கும் படிப்பினைகளுமே சிக்கலான அக, புற உணர்வுகளை எதிர்கொள்ளும் திராணியை வளர்க்கின்றது. இசைந்து நெகிழ்ந்து நுழையும் நிர்ப்பந்தமான பாதைகளில் நொறுங்கிப்போய்விடும் வலுவற்ற சந்தர்ப்பங்களில் தொலைதலுக்கும் மீட்புக்குமான வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. எழுத்தும் வாழ்வும் ஒரு சிறு நினைவு யாத்திரையாக அலைச்சல்களில் இருந்து விடுவிப்பையும் தப்பித்தலையும் அளிக்கிறது.

சமகாலத்தில் பல எழுத்துவகையறாக்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. புனைவின் புதிய பரிமாணத்தைத் தோற்றுவிக்கும் நிகழ்வை மெருகேற்றிப் படைக்கின்றன. சீர்மை வெளியீடாக வெளிவந்த அத்தர் எனும் நூல் புது நம்பிக்கையை படைப்பிலக்கிய வரிசையில் பதியமிடுகிறது.

ஒவ்வொரு கதைகளும் தனித்துவமாக ஒன்றிலிருந்து இன்னொன்று மாறுபட்ட கதைக்களமாக இருக்கிறது. அதன் மைய நோக்கத்தினை அடைய செயல்பட்ட விதமும் கதைகளுக்குள்ளான எழுத்தின் இயங்கியலும் புதுமையான பாணியில் கதைப்பின்னலொன்றை ஒருங்கிணைத்துள்ளது.

நேரடி போதனையற்று சமூகப் பிரக்ஞையோடு தனிமனித அனுபவத்தின் பாதிப்பிலிருந்து உட்குறிப்புகளைக் கடத்துகின்றது. அதற்கு ஏதுவாக கதாபாத்திரங்கள், பொருட்கள், இடங்களுக்கான தரவுகள் ஏராளமாக கதையின் அடர்த்திக்கு வலுச்சேர்த்துள்ளார் கதைசொல்லி. தரவுகளின் உட்குறிப்புகள் வெளிப்படையாகவும், ஒருசில இடங்களில் மறைமுகமாகவும் மிகைத்துள்ளதை வாசிக்கும்போது உணர முடிகின்றது.

நம்மைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையைக் கூர்மையாக நோக்குவதற்கு உதவும் சமூகச் சார்புமிக்க எழுத்துகள் வாழ்க்கையை சரியாகப் புரிந்துகொள்ள உதவும். உம்மாவின் துப்பட்டி எனும் கதையில் வாழ்வின் அகத்தேக்கமாய் ஓடும் தாயின் உணர்வை உரையாடல் குறிப்புகளில் ரசவாதமாய்க் கடத்தியுள்ளது சிறப்பு. முளரியில் ஜேக்கப் எனும் பயண வழிகாட்டி பழங்குடி மக்களின் வாழ்க்கையை கக்கூவா சடங்குகளை, சாகா திருவிழாவை, காடுகளின் வாசத்தை, இயற்கையான ரம்மியமான விநோதச் சூழலொன்றைக் காண்பிக்கின்றது. அதில் முழுவதும் நிறைந்துள்ள வனவாழ்க்கையின் மறுபக்கத்தை தரவுகளும் விறுவிறுப்புமாக ஆதிவாசிகளின் விதவிதமான நம்பிக்கைகளின் மீது ஒரு பயணம் நிகழ்த்தியது. டிஸ்கவரி தொலைக்காட்சியில் பியர் கிரில்ஸ் என்பவோடு பயணிக்கும் சாகசப் பயணம்போல அமைந்திருந்தது.

ஷாஹிபா சவுண்ட் சர்வீஸ் கதையில், வானொலிச் சேவையின் மீதான நேசம் காலத்தைப் பின்னோக்கி அழைத்துச் செல்கின்றது. இலங்கையில் வசிக்கும் எனக்கு புதுமையும் ஆச்சரியமுமாக இருந்தது. அதில் சொல்லப்பட்ட விடயங்கள் அந்த நிலம் சார்ந்தவரல்லாது இருக்கும்போது ஒரு பரந்த வழக்கில் நடைமுறைகளைத் தெரிந்து காலத்திற்குப் பின்னோக்கி எழுதுவது அவ்வளவு சாதாரணமல்ல. இக்கதையைப் படிக்கும்போது தரைத்தோற்றத்தில்தான் இலங்கை இந்தியா பிரிந்துள்ளது என உள்ளார்ந்தமாய்த் தோன்ற வைத்துவிடுகிறது.

அத்தர் கதையில் உஸ்தாத் ஹாதியின் வார்த்தைகள் பொக்கிஷமானவை. அவரின் இழப்பு ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. பூக்கள்தான் ஞானம். அவற்றை எத்தனை முறை கசக்கினாலும் வாசனையைத் தவிர வேறொன்றும் தருவதில்லை அதன் குறியீடே உனது வாசனைக்கடை. எல்லோருக்கும் உள்ளேயும் பூ இருக்கிறதுதானே எனும் உஸ்தாதின் வார்த்தைகள் வலியையும் சுகந்தமான வாசனையால் கமழச்செய்து பரவசப்படுத்துகின்றது.

ஆழிப்பேரலையின் பின் தொலைந்துபோன தடயங்களாக நீத்தவர்களின் பெயர்கள். அவர்களின் நெருங்கிய உறவுகளின் வாழ்வில் தனிமையின் போராட்டம் அதனைக் கடக்க எதிர்கொள்ளும் மௌனிப்பை சொல்ல விழைகின்றது. இவ்வலைகள் கதையில் நீட்சியுறாதப் பகுதிகள் வாசகர்களுக்கு விடப்படுவதாய்த் தோன்றியது.

இஸ்முல் அஃலம் என்பது பொறுமையே. அதுவே காத்திருப்பின் மந்திரம் என்று சொல்கிறது புறப்பாடு எனும் கதை. பாறையைப் போல நிசப்தமாக இருக்க முடியுமானால் உங்களின் மீதே விருட்சங்கள் வேர்விடும் எனும் குகை வாசகங்கள் உலக வாழ்வியலின் இருவழிப்பாதையை அதன் சூட்சுமத்தைக் கண்டடையும் புறப்பாட்டு வழியைப் புடம்போட்டுக் காண்பிக்கிறது.

மென்பொருள் கதையில் தொழிலின்போது எதிர்கொள்ளும் சவாலான நிகழ்வுகளாக தொலையும் மென்பொருளை மீட்டெடுக்கும் போராட்டம். அலுவலக ஆடுபுலி ஆட்டத்தில் ஆடுவது போலவும், சிலநேரம் மரணக்குழிக்குள் மோட்டார் சைக்கிள் பந்தய வீரன் சரிவது போலவும் வெறுப்பின் முடிச்சில் பயிலப்படும் கற்பிதங்களையும், சுய சமாதானங்களையும் யதார்த்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

புறப்பாடு கதையில் வெளிப்படுத்தப்படும் தத்துவ வாசகங்கள் யதார்த்த வாழ்வியலின் நுட்பமான தொலைதலும் மீட்புமாக காலத்தின் மீது நிசப்தமான செதுக்கலை நிகழ்த்துகிறது. அது தனிமனித விசாரங்களைக் கேள்விக்கு உட்படுத்தி இருவழிப்பாதையான வாழ்வில் மயக்கத்திலிருந்து தெளிவிற்கும், தெளிவிலிருந்து திரும்புதலுக்கான வழிகாட்டுதலையும் வழங்குகிறது.

இத்தொகுப்பில் சிறிய கதைகளான ஒன்பதும் வெவ்வேறாகப் பிரிந்து, சொல்ல விளையும் களங்கள் ஆழமானவை. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுபட்ட புரிதலைக் காட்சிப்படுத்தும் புதுமை. ஏனெனில், அதில் கையாளப்பட்ட அமைப்பியல் நாம் மட்டும்தான் இவ்வாறு புரிந்துள்ளோமோ என கதைசொல்லியின் மனநிலையோடு ஒட்டாத அந்நியப்படுத்தலை வாசகருக்குத் தருவது அத்தர் மற்றும் பிறகதைகளின் சிறப்பு. கதைகள் ஒவ்வொன்றின் முடிவிலும் நவீனத்துவமான செருகுதல் என்னவாக இருக்கும் என்பதாக அடுத்த கதைக்குள் நுழைவதற்கு கால அவகாசம் கேட்டு நிறுத்திவைக்கிறது. அதன் நுட்பத்தை அறிவதற்காகவே இக்கதைகளை மீண்டும் வாசித்தேன்.

🛒 ஆன்லைனில் ஆர்டர் செய்ய: https://www.commonfolks.in/books/d/attar
📞 வாட்ஸ்அப்-ல் ஆர்டர் செய்ய: +91-7550174762 
அத்தர் நூல் அறிமுகம் – கலந்துரையாடல் நிகழ்வு

Related posts

Leave a Comment