உரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஷீஆ சிந்தனைப் பள்ளி
இஸ்லாமிய வரலாற்றில் அரசியல் சிந்தனைப் பள்ளிகள்

Loading

[ஒரே இறைவன், ஒரே தூதர், ஒரே வேதம், ஒரே உம்மத் – என்ற கருத்தாக்கம் கொண்ட முஸ்லிம் சமூகத்தில் பல்வேறுபட்ட பிளவுகளும் குழுக்களும் இருப்பதுபோல் தோன்றுவதன் உண்மைநிலை என்ன? 1400 ஆண்டுகால நீண்ட இஸ்லாமிய வரலாற்றில் பல்வேறுபட்ட சமூக-அரசியல் சூழல்களில் தோன்றிய இச்சிந்தனைக் குழுக்களின் அடிப்படைகள், வகைகள், வேறுபடும் புள்ளிகள் போன்றவற்றை விளக்கி இமாம் முஹம்மது அல்ஆஸீ ஆங்கிலத்தில் ஆற்றிய உரைகளை மொழிபெயர்த்து தொடராகப் பதிவிடுகிறோம். தேடலுள்ள ஆரம்பநிலை வாசகர்களுக்கு இவை நல்லதொரு புரிதலை வழங்குமென்று எதிர்பார்க்கலாம்.]

இறைத்தூதர் முஹம்மது நபியின் (ﷺ) மறைவுக்குப் பிறகு இஸ்லாமியச் சமூகத்தில் பலவிதமான சிந்தனைப் போக்குகள் உருவாயின. அவற்றை அரசியல் (Political), கோட்பாடு (Doctrinal), சட்டவியல் (Jurisprudential) ரீதியான போக்குகள் என வகைப்படுத்தலாம். இவற்றை அறபியில் மதாஹிபு சியாசிய்யா, மதாஹிபு இஃதிகாதிய்யா, மதாஹிபு ஃபிக்ஹிய்யா என்பர்.

தலைமை

இறைத்தூதரைத் தொடர்ந்து வந்த காலங்களில் சில பாரதூர அரசியல் விளைவுகள் ஏற்பட்டன. அவற்றை ஆராய்கையில் முஸ்லிம்கள் அனைவரும் தங்களுக்கு ஒரு தலைவர் அல்லது இமாம் தேவை என்பதில் ஒருமித்த கருத்தில் இருந்ததை அறிகிறோம். அறிஞர்களின் மொழியில் கூறுவதானால்,  ஒரு இமாம் கட்டாயம் தேவை (வுஜூபுல் இமாமா) அது ஒரு கடமை (வாஜிபு) என்பதில் முஸ்லிம்கள் ஒத்த கருத்து கொண்டுள்ளனர். எனினும், அத்தலைவரின் பண்புகளை வரையறுப்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

மொத்த சமூகத்துக்கும் ஒரேயொரு இமாமா அல்லது இரண்டு இமாம்கள் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. தொலைவு என்ற அளவீட்டின் அடிப்படையில் இவ்வாதம் முன்வைக்கப்படுகிறது. அதாவது, ஒரே பகுதியில் அல்லது ஒரே விதமான பௌதீகத் தன்மை கொண்ட நிலவரம்பில் இரு இமாம்கள் இருத்தல் கூடாது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை என்றே தெரிகிறது. எனினும், மிகத் தொலைவான 1000 அல்லது 2000 மைல்களுக்கு அப்பாலுள்ள ஒரு பகுதியின் நிலை என்ன? அங்கு மற்றொரு இமாம் இருக்கலாமா? இங்குதான் கருத்து வேறுபாடு எழுகிறது.

இமாமைக் கொண்டிருப்பதிலுள்ள வேறுசில கூறுகள் என்னவெனில், அவர் குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டுமா? மேலும், தவறு செய்யும் இயல்புடைய ஒருவர் முஸ்லிம்களின் தலைவராக முடியுமா? அல்லது அத்தலைவர் தவறுகள், பிழைகளுக்கு அப்பாற்பட்டவராக, தவறான மதிப்பீடுகளே செய்யாதவராக இருக்க வேண்டுமா? அதாவது, ஒருவர் இமாமாகத் தகுதி பெறுவதற்கு ‘மஅஸூம்’ ஆக (பாவம், பிழைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவராக) இருக்க வேண்டுமா?

இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, தலைவருக்கான மேற்கூறப்பட்ட பண்புகள்குறித்து முஸ்லிம்களை ஒற்றைக் கருத்தில் இணைக்கும்படியான உறுதியான ஒரேயொரு திருக்குர்ஆன் வசனம் அல்லது ஹதீஸ்கூட இல்லை. முஸ்லிம்களின் தலைமைபற்றி நிலவும் கருத்துகள் அனைத்தும் ஓரளவு சரியானவையே. ஒரு இமாமுக்குரிய தகுதிகள் என இதுவரை நாம் கொண்டிருந்த கருத்துகள் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் நியாயமானவையே. வருந்தத்தக்க விதத்தில் சமகாலம்வரை அத்தகைய நியாயங்களை வரலாற்றின் ஒளியில் நாம் பார்க்கத் தவறிவிட்டோம்.

முஸ்லிம்களின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதுகுறித்து திருக்குர்ஆனில் தேட முற்பட்டால் நமக்கு மூன்று சொற்கள் கிடைக்கின்றன. இவை தலைவருக்கான விளக்கத்தை வரையறுக்க உதவுகின்றன.

முதலாவது, நீதி (அத்ல் அல்லது அதாலத்). பரிசுத்தமும் உயர்வும் மிக்க அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்: ‘நீதியைக்கொண்டு ஆட்சி புரியுங்கள். ஏனெனில், அது இறைபிரக்ஞையோடு இருப்பதற்கு இணையானது இஃதிலு ஹுவ அக்றபு லித்தக்வா. ’ – திருக்குர்ஆன் (5:8)

இரண்டாவது, ஆலோசனை (ஷூறா). பொதுவாக, ஷூறா என்பது ‘ஆலோசனை’ என்று மொழிபெயர்க்கப்படுகிறது. எனினும், அசலில் ஷூறா என்பது முடிவெடுக்கும் விஷயத்தில் தலைவரையும் தாண்டியுள்ள மக்களின் பங்களிப்பைக் குறிக்கும். அவர்கள், பொதுமக்களாக இருக்கலாம்; அல்லது பொதுமக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிலராக இருக்கலாம். அதாவது மனிதர்களிலிருந்து பற்றுறுதி கொண்ட முஸ்லிம்களையும் இஸ்லாமிய சட்டவியல் கலைச்சொல்லின்படி ‘அஹ்லுல் ஹல் வல் அக்து’ என அழைக்கப்படுபவர்களையும் உள்ளடக்கியது.

‘அஹ்லுல் ஹல் வல்அக்து’ எனப்படுவோர், இஸ்லாமியச் சமூகத்தில் சமூகப் பொறுப்புகள் கொண்ட மேயர் அல்லது அரசு ஊழியர் போன்றோரைக் குறிக்கும். இதுபற்றித் தெளிவுபடுத்தும் திருக்குர்ஆனின் வசனம், ‘அவர்களை முடிவெடுக்கும் விஷயத்தில் பங்கு பெறச் செய்வீராக வ ஷாவிர்ஹும் ஃபில் அம்ரி’ – திருக்குர்ஆன் (3:159)

மூன்றாவது சொல்லானது, கட்டுப்படுதல் (அத் தா’அ). இதைக் குறிப்பிடும் குர்ஆனிய வசனம்: ‘அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இன்னும் அவனுடைய தூதருக்கும், இன்னும் உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கட்டுப்படுங்கள் வ அதீஉல்லாஹ வ அதீஉர் றசூல வ ஊலில் அம்ரி மின்கும்.’ – திருக்குர்ஆன் (4:59)

இம்மூன்று சொற்களும் ஏவல் பொருளில் இருப்பதைக் கவனிக்கவும். மேலும் நுணுக்கமாகப் பார்க்கையில், ‘இஃஅதிலு’ என்பது பொதுமக்களைச் சுட்டுகிறது. நீதி நிலைநாட்டப்படுவது பொதுமக்களின் மீது பொறுப்பாகும். எனினும், ‘ஷாவிர்ஹும்’ (ஆலோசித்தல்) என்பது தலைவருக்கு உரியது. ‘அதீஉ’ (கட்டுப்படுதல்) மீண்டும் பொதுமக்களின்பால் திரும்புகிறது.

இங்கு மற்றொரு விஷயத்தை வலியுறுத்த விரும்புகிறேன். இச்சொற்களை தலைவருக்கான தகுதிகள் எனத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். தனிமனித விஷயங்கள், போர், இயற்கை நியதி எனப் பல விஷயங்களைப் பற்றி திருக்குர்ஆன் பேசுகிறது. அந்த வரிசையில் அரசாங்கம், தலைவர் போன்ற விஷயங்களை விளக்குவதற்கு குர்ஆனின் உதவியை நாடினால் அதிலுள்ள இச்சொற்கள் நமக்கு உதவுகின்றன என்பதுதான் இதன் கருத்து. இதுபோல மேலும் பிற சொற்கள் இருந்தால் என் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள். அவற்றை என் தொகுப்பில் சேர்த்துக்கொள்கிறேன்.

இறைத்தூதர் மறைந்த தினத்தன்று அந்த நாள் ‘யவ்முத் தகீஃபா’ என்று அழைக்கப்படுகிறது முஸ்லிம்களின் தலைமைபற்றி பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. சிலர், முஸ்லிம்களின் தலைவர் ‘அன்ஸார்’களிலிருந்தே வர வேண்டும் எனக் கூறினர். ‘அன்ஸார்’கள் என்போர் இறைத்தூதருக்கு ஆதரவளித்த மதீனாவாசிகள். அவர்கள் இல்லையெனில் இஸ்லாமிய அதிகார மையம் உருவாகியே இருக்காது. எனவே, அன்ஸார்களிலிருந்தே அடுத்த தலைவர் வர வேண்டும் என்றனர் ஒரு சாரார். இது ஓரவஞ்சனையுடன்கூடிய வாதம் அல்ல. இதில் ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது.

மற்றொரு சாரார், முஸ்லிம்களின் தலைமைப் பொறுப்பு (இமாமா அல்லது ஃகிலாஃபா) ‘முஹாஜிர்’களிடமே இருக்க வேண்டும் என்றனர். ‘முஹாஜிர்’கள் என்போர் இவ்வுலகில் இஸ்லாமிய அமைப்பை உருவாக்குவதற்கு பெரும் துன்பங்களைச் சகித்துக்கொண்டோராவர். இவர்கள் அன்ஸார்களைவிடப் பல வருடங்களுக்கு முன்னரே தங்களை நிரூபித்துக் காட்டியவர்கள். எனவே, இவ்வாதத்திலும் ஒரு அடிப்படை நியாயம் உள்ளது. மேலும் சிலர், முஸ்லிம்களின் தலைவர் குறிப்பாக குறைஷிக் குலத்திலிருந்தே வர வேண்டும் என்றனர். இவ்வாதத்தை முன்வைப்போர், “முஸ்லிம்களுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு குறிப்பாக குறைஷிகளுக்கே உரியது” எனக் கூறும் இறைத்தூதரின் ஹதீஸை மேற்கோள் காட்டுகின்றனர். எனினும், குறைஷி என்பது ஒற்றைக் கருத்து கொண்ட ஒரே கோத்திரமாக இருக்கவில்லை.

குறைஷிகளில் இறைத்தூதரை ஆதரித்தோரும் இருந்தனர்; அவரை எதிர்த்தோரும் இருந்தனர். இன்னும் சொல்லப்போனால், இறைத்தூதருக்கு எதிராக எழுந்த மூர்க்கமான எதிர்ப்பு குறைஷிகளிடமிருந்துதான் வந்தது. எனவே, குறைஷிகளிலிருந்தே தலைவர் வர வேண்டும் என்போரும் ஒரு நியாயத்துடனேயே தம் கருத்தை முன்வைக்கின்றனர். ஏனெனில், மக்கள் தங்கள் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களையே எதிர்ப்பதென்பது சாதாரண விஷயம் அல்ல. இறைத்தூதரை ஆதரித்த குறைஷிகள், தங்கள் குடும்பம், உற்றார் உறவினர், கோத்திர அமைப்பு என எல்லாவற்றையும் எதிர்த்து நின்றனர்.

உஸ்மான் ஆட்சி காலம்

சில வருடங்கள் தாண்டி உஸ்மானின் காலத்தில் வாழ்ந்த முஹாஜிர்கள்,  அன்ஸார்களை இப்போது பார்ப்போம். முஸ்லிம்கள் மிகக் கவனமாகப் பார்க்க வேண்டிய காலகட்டம் இது. அபூபக்கர், உமருடைய காலத்தில் முதல் தலைமுறை முஸ்லிம்களின் இறைத்தூதரின் தோழர்கள் எனக் கருதப்பட்டோர் மீது சில கறாரான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவர்களில் பெரும்பாலோர் அப்போது மதீனாவில் வசித்தனர். மதீனாவிலிருந்து வெளியேறுவதில் அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதற்குத் தகுந்த காரணமும் இருந்தது. வெறுமனே, ‘உங்களை இங்கேயே இருக்கச்செய்ய வேண்டும், வீட்டுக் காவலில் அடைத்து வைக்க வேண்டும், நீங்கள் எங்கும் செல்லக் கூடாது’ என்ற ரீதியில் அக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

நாம் பேசும் ஒவ்வொரு விஷயத்துக்கும் தகுந்த நியாயம் இருப்பதைக் கவனிக்க வேண்டும். அம்மக்கள் சில பிரத்தியேகமான சிறப்பு அம்சங்களைப் பெற்றிருந்தனர். அவர்கள் இறைத்தூதரோடு வாழ்ந்தவர்கள், இறைத்தூதரின் பொன்மொழிகளைக் கேட்டவர்கள், அவரோடு பத்ரு, உஹதுப் போர்களில் பங்குபெற்றவர்கள், குர்ஆனையும் ஹதீஸையும் மனனம் செய்தவர்கள், பிற முஸ்லிம்களால் மிகுந்த மரியாதையோடு நடத்தப்படுபவர்கள். அவர்கள் மதீனாவிலுருந்து வெளியே சென்று தூரதேசங்களில் வசித்தால், அங்கு அவர்களைச் சுற்றி ஒரு அதிகார மையம் உருவாகுமென்ற அச்சம் இருந்தது. ஏனெனில், அவர்கள் ‘பிரபலங்கள்’. இன்றைய மொழியில் சொல்வதானால், அவர்கள் அதிகாரமிகுதியால் சீர்கெட்டுப் போவதற்கான வாய்ப்புகள் இருந்தன. இதைத் தவிர்ப்பது எப்படி? இதற்காகத்தான் அவர்கள்மீது அத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், உஸ்மான் ஆட்சிக்கு வந்த பின்னர் அக்கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சென்று தங்கலாம் என்றார். இதைப் பயன்படுத்தி அவர்களும் பல்வேறு இடங்களுக்குச் சென்று தங்கினர். பொதுவாக இஸ்லாமிய இராணுவத்தில் பங்குபெறுவதை காரணம்காட்டி அவர்கள் பிற பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தனர்.

ஹிஜாஸின் மக்கா, மதீனாவைவிட அவர்கள் சென்ற இராக், ஷாம், மிஸ்ரு (எகிப்து) போன்ற பகுதிகள் வளர்ச்சியடைந்த பகுதிகளாக இருந்தன. அங்கு அவர்கள் முன்னேறிய வாழ்க்கையையும் நவீனத்தையும் கண்டனர். எனினும், அவர்கள் பெரும்பாலோர் மாசற்றவர்களாக இருந்த காரணத்தினால் அங்கு சென்றவுடன் அதிகார மையத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. அத்தகைய நோக்கமும் அவர்களுக்கு இருக்கவில்லை. எனினும், அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் செல்வம் சேர்க்க ஆரம்பித்தனர். பின்னர் இஸ்லாமிய அரசாங்கத்தில் அவர்களது தலையீடு ஏற்படும் நிலைக்கு அச்செல்வம் அவர்களை இட்டுச் சென்றது.

இந்த மாற்றம் பல பத்தாண்டுகள் அல்லது நூற்றாண்டு காலமாக நடந்ததன்று. இது, அவர்களின் வாழ்நாளிலேயே நிகழ்ந்தது. இதுகுறித்த அபூதரின் வார்த்தைகள் கவனிக்கப்பட வேண்டியவை. இறைத்தூதரின் காலத்திலிருந்த தோழர்கள் இப்போது உஸ்மானின் தாராளவாதக் கொள்கைகள் அமலுக்கு வந்த பின்னர் எவ்வாறு உருமாறினர் என்பதை அவர் இவ்வாறு கூறுகிறார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இங்கு நடந்த சம்பவங்களை என்னால் நம்ப முடியவில்லை. அவை இறை வேதத்திலும் இல்லை. அவனுடைய தூதரின் வழிகாட்டலிலும் இல்லை. சத்தியம் அழிந்து அசத்தியம் மீண்டும் தலைதூக்குவதை நான் பார்க்கிறேன். உண்மையாளர் ஒருவர் அரசாங்கத்தின் கொள்கை காரணமாக பொய்யரைப் போல் பார்க்கப்படுவதையும், இறைபிரக்ஞை இல்லாத சுயநலத்தையும்  காண்கிறேன். செல்வம் சுருட்டப்படுவதையும் பார்க்கிறேன்.” எனினும், அபூதர் அதிகமாகப் பேசப்படுபவர் அல்லர். இன்று பள்ளிவாசல்களில் உரையாற்றுபவர்கள் அபூதரைப் பற்றிப் பேசுவதே இல்லை.

உஸ்மானின் ஆட்சிக் காலத்தில் மற்றொரு அரசியல் புதுமையும் அரங்கேறியது. இறைத்தூதர், அவரைத் தொடர்ந்து வந்த இரு தலைவர்களின் வழிமுறையில் முஸ்லிம்களின் தலைமைப் பொறுப்பை வகிப்பதாக எடுத்த உறுதிமொழிக்கு மாறாக, உஸ்மான் தன் உற்றார் உறவினர்களுக்கு அரசாங்கப் பதவிகளை வாரி வழங்கினார். இது எந்த அளவுக்குச் சென்றது எனில் சஅது இப்னு அபீ சுஹ்றா என்ற அவரது உறவினர் ஒருவருக்கு உயர் அரசாங்கப் பதவியை அவர் கொடுத்தார். இந்நபர் முஸ்லிமாக இருந்து நிராகரித்து மீண்டும் முஸ்லிமாக மாறியவர். இப்படிப்பட்ட ஒருவருக்கு எப்படி இஸ்லாமிய அரசாங்கத்தில் பதவி கொடுக்க முடியும்? இறைத்தூதரோ, அபூபக்கரோ, உமரோ இவ்வாறு செய்யவில்லை. எனினும், உஸ்மான் காலத்தில் இது நிகழ்ந்தது. இதுவும் இன்றளவும் முஸ்லிம்களைப் பீடித்திருக்கும் பிரிவினைக்கு வழிவகுத்த பிரச்சினைகளுள் ஒன்று. இஸ்லாமிய வரலாற்று நூல்களில் எங்கோ பொதிந்து கிடக்கும் அரிய செய்திகளை தேடி எடுத்து நான் உங்களுக்குச் சொல்லவில்லை. இவை எல்லாமே பிரபலமான இஸ்லாமிய நூல்களில் உள்ள செய்திகள்தாம்.

சில குறிப்புகள்

நாம் மேலே தொடரும்முன் ஒருசில விஷயங்களைத் தெளிவுபடுத்துவது அவசியம் எனக் கருதுகிறேன். இங்கு, நாம் வரலாற்று நிகழ்வுகளை அவற்றின் போக்கிலேயே பார்க்க முற்படுகிறோம். இன்றைய மக்கள் இவற்றைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது நமக்கு முக்கியமல்ல. இறைத்தூதரின் (ஸல்) மறைவுக்குப் பிறகு உருவான அரசியல் கொள்கைகள், அவற்றின் வரலாற்றுப் பின்னணி, ஆணிவேர் போன்றவற்றைப் பற்றி நாம் பார்ப்போம்.

எனது வெள்ளிக்கிழமை உரைகளைக் கேட்போர், இதை  இன்னும் விரிவாகப் புரிந்துகொள்ள முடியும். ஓரிரு வருடங்களாகவே நான் இதைப் பற்றி விரிவாகவே பேசி வருகிறேன். ஏனெனில், உலக ஒழுங்கின் உச்சத்தில் இருக்கும் சில விஷமிகள், இத்தகைய அறியப்படாத வேற்றுமைகளைக் கிளறி நம்மிடையே வெறுப்பை உருவாக்க மும்முரமாகப் பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக, நான் இவ்விவகாரங்களில் எந்தப் பக்கம் சாய்கிறேன் என்ற கோணத்தில் இவ்வுரையை அணுகுபவர் நஷ்டமே அடைவார். இத்தகைய எண்ணங்களைக் களைந்து ஆரோக்கியமான சிந்தனையுடன் இதை அணுகுகினால் நீங்கள் பலனடைவீர்கள் எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், நாம் பேசும் பல்வேறு விஷயங்களுக்கும் பல்வேறு நியாயங்கள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ளவும். இவற்றை அங்கீகரிப்பது இஸ்லாத்துக்கு விரோதமான காரியம் ஆகி விடாது. இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் இவ்விஷயங்களை நாம் ஆரோக்கியமான சிந்தனையுடன் அணுகத்தவறி விட்டோம். நம் வரலாறு பிரச்சினைகளோடுதான் வளர்ந்து வந்துள்ளது. எனினும், இவற்றைச் சரிசெய்யும் பணியை ஏதோவொரு புள்ளியிலிருந்து துவங்கித்தான் ஆக வேண்டும். அதைத்தான் நாம் இங்கே செய்ய முற்படுகிறோம். ஷீஆ சிந்தனைப் பள்ளியிலிருந்து நாம் துவங்குவோம். இதைப் படிக்கும் ஷீஆக்கள் இவற்றை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

ஷீஆக்கள்

இவ்விவகாரங்கள் அனைத்திலிருந்தும் இமாம் அலீ தனித்து நிற்கிறார். ஷீஆக்கள் என்று அழைக்கப்படுவோர் அவரை ஆதரித்தவர்கள் என்பதை நாம் அறிவோம். இமாம் அலீயின் மறைவுக்குப் பிறகு முஸ்லிம் சமூகத்தில் மூன்று விதமான வழிமுறைகள் மேலெழுந்தன. இதன் பொருள், ஏற்கனவே அவை இருக்கவில்லை என்பதல்ல. எனினும், அவரது மறைவுக்குப் பிறகு அவை வலுப்பெற்றன.

முதலாவது, ஷீஆ என்றழைக்கப்படும் ‘தஷய்யு’ ஆகும். இது பிரதானமாக அரசியல் இயக்கமாக உருவாகி, பிற்காலத்தில் மற்ற இரண்டு கூறுகளையும் (கோட்பாடு, சட்டவியல்) உள்வாங்கிக் கொண்டது. இமாம் அலீயின் இல்லாமைக்கு மாற்றான ஒரு அரசியல் இயக்கமாக இது வளர்ச்சியடைந்தது. இரண்டாவதாக, மனிதனை ஆன்மீகச் சுத்தி செய்யும் நோக்கம் கொண்ட ‘தஸவ்வுஃப்’ என்னும் வழிமுறை மேலெழுந்தது. மூன்றாவதாக அறிவு, சிந்தனை சார்ந்த ‘முஃதஸிலா’ என்னும் வழிமுறை உருப்பெற்றது.

இஸ்லாமிய வரலாற்றின் பிற்காலங்களில் இம்மூன்று போக்குகளும் வீரியம் பெற்றுத் திகழ்ந்தன. இம்மூன்றையும் நாம் இமாம் அலீயோடு தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். அதாவது, அவர் உயிரோடு இருந்தபோது இம்மூன்றும் வெவ்வேறின்றி ஒரே இயக்கமாக இருந்ததைப் போலவும், அவரது மறைவுக்குப் பிறகு அவை தனித்தனி அடையாளங்கள் பெற்று வளர்ச்சியடைந்ததாகவும் பார்க்கலாம். ஸூஃபி, முஃதஸிலாவிலிருந்து வேறுபட்டு ஷீஆ இருந்தது. ஷீஆ, முஃதஸிலாவிலிருந்து மாறுபட்டு ஸூஃபிகள் இருந்தனர்; அதேபோல், முஃதஸிலாக்களும் மற்ற இரண்டிலிருந்தும் மாறுபட்டு இருந்தனர்.

‘அஹ்லுஸ் சுன்னாஹ்’வினரும் ஷீஆக்கள்தான்!

இப்போது இங்கு ஒரு கேள்வி எழலாம். முஸ்லிம் சமூகத்தில் தோன்றிய மூன்று சிந்தனைப் போக்குகளைப் பற்றிக் கூறினோம். எனினும், இதில் ‘அஹ்லுஸ் சுன்னாஹ்’வினர் விடுபட்டுள்ளனரே?! உலகெங்கும் பரந்து விரிந்து, பெரும் சமூகமாகக் காணப்படும் ‘அஹ்லுஸ் சுன்னாஹ்’வினரை விட்டுவிட்டோமே என்ற கேள்வி தோன்றலாம். ஆனால், உண்மை என்னவெனில் இன்று ‘அஹ்லுஸ் சுன்னாஹ்’ என்று அறியப்படுவோர், நாம் மேற்கூறிய மூன்று சிந்தனைப் பாங்குகளில் ஏதோ ஒன்றில் உள்ளடங்குவர். அவர்கள் ஷீஆக்களோடு இருந்தனர்; அல்லது ஸூஃபிகளோடு இருந்தனர்; அல்லது முஃதஸிலாக்களுடன் இருந்தனர். ஆனால், வருந்தத்தக்க விதத்தில், அரசுகள் ‘அஹ்லுஸ் சுன்னாஹ்’வினரைச் சொந்தம் கொண்டாடி தமதாக்கிக் கொண்டன. இன்றும்கூட இது நிகழ்வதைப் பார்க்கிறோம்.

வரலாற்றைப் பார்க்கையில் இமாம் அபூ ஹனீஃபா, இமாம் ஷாஃபிஈ, இமாம் மாலிக், இமாம் ஹம்பல் ஆகியோர் அக்கால அரசுகளை எதிர்த்து நின்றனர் என்று அறிகிறோம். எனவே, நம்மீது விழுந்துள்ள வரலாற்றுச் சுமைகளை நீக்கி, அரசியல்ரீதியாகப் பார்த்தால், அவர்கள் இமாம் அபூஹனீஃபா, இமாம் ஷாஃபிஈ, ஓரளவிற்கு இமாம் மாலிக் தத்தம் கால இமாமுக்கு ஆதரவாக இருந்தனர் என்று கூறலாம். எனினும், மரபுகளில் ஊறிய இன்றைய மனங்களுக்கு ‘அஹ்லுஸ் சுன்னாஹ்வினரும் ஷீஆக்கள்தான்!’ என்ற செய்தியை கிரகித்துக்கொள்வது சிரமமாகவே இருக்கும். ஆகையால், வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தால், இத்தகைய ஷீஆ-சுன்னீ பிரிவு எந்த அர்த்தத்தையும் கொடுப்பதில்லை என்பது தெளிவாகிறது. இத்தனை காலமாக நம்மைத் தொற்றிக்கொண்ட வெறுமையை நிரப்ப நம்மிடையே தோன்றிய மரபுகளே இதற்குக் காரணம் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

இமாமத்

இப்போது, ஷீஆக்களுக்கான இத்தகைய மரபுகள்  தோன்றுவதற்கு முன்னிருந்த விளக்கத்தைப் பார்ப்போம். ஷீஆக்களைப் பற்றிச் சொல்வதென்றால் பல விஷயங்கள், பல்வேறு சிந்தனைகள், செயல்பாடுகள் உள்ளன. எனினும், அவர்களுடைய தனியியல்பு ‘இமாமத்’ கோட்பாடு ஆகும்.

இறைத்தூதர் (ஸல்) மறைந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் இமாம் பற்றி பொதுவாகக் கொண்டிருந்த கருத்துகளை நாம் ஏற்கனவே பார்த்தோம். இறுக்கமான மரபுகள் தோன்றுவதற்கு முன் ஷீஆக்கள், இமாமத்தை எப்படிப் பார்த்தனர்? அவர்கள் கூறியதாவது, “இமாமத் என்பது அதன் செயல்படுதலில், இயக்கத்தில், பலாபலனில், பொது முஸ்லிம் சமூகத்தை எவ்வகையிலும் சார்ந்தது அல்ல”. அதாவது, தலைவர் யார், எப்படிப்பட்டவர் என்பதுபற்றி மக்களின் கருத்து என்ன என்பது ஒரு பொருட்டே அல்ல. அதில் மக்களின் உள்ளீடு எதுவும் இல்லை. அது ஒரு மரபாக, சாசனமாகத் தொடர்ந்துவருவது.

ஒருவர் அவருக்கு முன் வந்தவரால் நியமனம் இதற்கு அவர்கள் பயன்படுத்தும் சொல் ‘விலாயா’ செய்யப்படுவதாலேயே இமாம் ஆகிவிடுகிறார். முழு முஸ்லிம் சமூகமும் சேர்ந்து அவரை எதிர்த்தாலும் அவர்தான் இமாம். அவர், அவருக்கு முன்னிருந்தவரால் நியமனம் செய்யப்பட்டவராக இருப்பார்; இப்படியே இது இறைத்தூதர்வரை செல்கிறது. இறைத்தூதர் இமாம் அலீயை நியமனம் செய்தார்; இமாம் அலீ ஹசனை, ஹசன் ஹுசைனை என்று இது தொடர்கிறது.

தலைவரை வரையறுப்பதில் நமக்குத் துணைபுரியும் குர்ஆனிய சொற்களை நாம் முன்னர் பார்த்தோம். இப்போது ஷீஆக்களின் தலைவருக்கான விளக்கத்தைப் பார்க்கும்போது, ஆலோசனை (ஷூறா) விடுபட்டிருப்பது தெளிவாகிறது. இதற்கான விளக்கத்தை ஷீஆக்களாகிய அவர்கள்தான் தர வேண்டும்.

எனினும், பிற்காலத்தில் முஹம்மது அல்பாக்கிருக்குப் பிறகு யார் இமாம் என்பதில் ஷீஆக்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடு தோன்றியது. இங்கு ஷீஆ என்பது பொதுவான ஷீஆக்களைக் குறிக்கும். ஏனெனில், ஷீஆ என்று சொன்னாலே மக்களின் பொதுப்புத்தியில் ‘இஸ்னா அஷரீ’ (பன்னிருவர்)தான் முக்கியமாகத் தோன்றும். எனினும் தஷய்யு என்பது அதைவிடப் பரந்த பொருள் கொண்டது. மற்ற எல்லா ஷீஆ பிரிவுகளைச் சேர்ந்த மக்களைவிட ‘பன்னிருவர்‘ ஷீஆ பிரிவைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கையில் மிகமிக அதிகமாக இருந்தபோதிலும், நாம் இங்கு எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. நாம் கருத்துகளை, கோட்பாடுகளையே முக்கியமாகப் பார்க்கிறோம்.

இமாம் ஹுசைனின் பேரர்களான முஹம்மது அல்பாக்கிர் இப்னு அலீ (ஸைனுல் ஆபிதீன்), ஸைத் ஆகியோரிலிருந்து வேற்றுமைகளும் சில வேளை கசப்பான உறவுகளும் தோன்றுகின்றன. யார் இமாம் என்பதுபற்றி தோன்றிய முதல் தீவிர கருத்து வேறுபாடு இதுவே ஆகும். பின்னர் இஸ்னா அஷரீ கணக்குப்படி ஏழாவது இமாமுக்குப் பிறகு மீண்டும் யார் இமாம் என்பதில் கருத்துவேறுபாடு தோன்றியது.

இஸ்னா அஷரீகள் ஒருவரை இமாம் என்றனர். மற்றொரு பிரிவினர் இஸ்மாயிலீ ஷீஆக்கள் “இல்லை. அவரது சகோதரரான இஸ்மாயீல்தான் இமாம்” என்றனர். பின்னர் மீண்டும் இஸ்மாயிலீகளிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி, அவர்களிலிருந்து ‘ஆகா ஃகான்’ பிரிவினர் தோன்றினர். அவர்களின் தலைவர் ஷீஆ பிரிவில் வந்த 49ஆவது தலைவர் ஆவார். இப்போது ஆகா ஃகானிகள், தம் அடையாளத்தை வரையறுப்பதில் உள் நெருக்கடியில் உள்ளனர். இதுபற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

இவ்வாறாக ஆரம்ப நாள்களில், ஷீஆக்களையும் ஷீஆ அல்லாத பிற முஸ்லிம்களையும் பிரித்துக் காட்டும் முக்கியக் கொள்கையாக இமாமத் அல்லது முஸ்லிம்களின் தலைவர்குறித்த கொள்கை இருந்தது. ஷீஆக்களைப் பொறுத்தவரை தலைவர் என்பவர் அவருக்கு முன்னிருந்தவரின் சாசனம் அல்லது மரபாகத் தொடர்ந்து வருகிறார். அவர் தன் கடமைகளை ஆற்றுவதற்கு முஸ்லிம் பொது மக்களின் அங்கீகாரத்தையோ ஒப்புதலையோ பெற வேண்டிய அவசியம் இல்லை.

மேலும், ஷீஆக்களின் (மரபுகளுக்கு முந்திய) விளக்கப்படி, இமாமத் என்பது ‘ருக்ன்’ ஆகும். ‘ருக்ன்’ என்றால் அடிப்படை என்று பொருள்; அதாவது மார்க்கத்தின் அடிப்படை. இதன்படி, இமாமத் என்பது இலேசாகக் கருதப்படும் கருதுகோள் அல்ல. அது மார்க்கத்தின் அடிப்படையில், இஸ்லாத்தின் அஸ்திவாரத்தில் பின்னிப் பிணைந்தது. எனவே, இறுதித்தூதரோ அல்லது மற்ற இறைத்தூதர்களோ இதை அலட்சியப்படுத்தியிருக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் இமாமத் பற்றிப் பேசுவது, மக்களுக்கு நேர்வழிகாட்ட வந்த இறைத்தூதர்களின் மீது கட்டாயக் கடமை என்பது அவர்களின் கோட்பாடு. இதன் காரணமாக, இமாம் ‘மஅஸூம்’ ஆக இருப்பார். அதாவது அவர் இஸ்லாமியச் சொற்பிரயோகத்தில் பெரும் பாவங்கள் (கபாயிர்), சிறு பாவங்களின் (ஸகாயிர்) சுமையைச் சுமக்காதவராக இருப்பார்.

ஷீஆக்களின் விளக்கப்படி முதல் இமாம், இமாம் அலீ ஆவார். இமாம் அலீயின் தலைமையை உறுதியாக ஏற்றுக்கொண்டவர்களுள் பிரபலமான நபித்தோழர்களும் உள்ளனர்; அறியப்படாத பல தோழர்களும் உள்ளனர். சிலரின் பெயர்களை நீங்கள் அதிகம் கேட்டிருக்கமாட்டீர்கள். எனவே, சில பெயர்களை நான் இங்கே குறிப்பிடுகிறேன். அம்மார் இப்னு யாசிர், மிக்தாத் இப்னுல் அஸ்வது, அபூதர் அல்கிஃபாரீ, சல்மானுல் ஃபாரிசீ, ஜாபிர் இப்னு அப்துல்லாஹ், உபை இப்னு கஅபு, ஹுதைஃபா, அபூ அய்யூபுல் அன்ஸாரீ, சஹல் இப்னு ஹனீஃப், அவரது சகோதரர் உஸ்மான் இப்னு ஹனீஃப், அபூ ஹைஃபான் இப்னு அத்தைஃபான், அபூ துஃபைல் இப்னு வைலா, அப்பாஸ் இப்னுல் முத்தலிபு (இறைத்தூதரின் பெரிய தந்தை), அப்பாஸின் பிள்ளைகள் மற்றும் பனீ ஹாஷிமில் பெரும்பாலோர் இதில் அடங்குவர்.

குறைஷிக் குலத்தினுள்ளேயே இறைத்தூதர் சார்ந்திருந்த கோத்திரம்தான் பனீ ஹாஷிம். பிற்காலத்தில் இப்பட்டியலில் இப்னு ஸூபைர்கூட சேர்ந்தார் என்று சொல்லப்படுகிறது. உமைய்யா கோத்திரத்தில் பிரபலமாக அறியப்பட்ட சஈது இப்னுல் ஆஸைக் கூட இப்பட்டியலில் காணமுடிகிறது.

இமாம் அலீ

தலைவருக்கான பண்புகள்குறித்து முஸ்லிம்களை ஒற்றைக் கருத்தில் இணைக்கும்படியான உறுதியான திருக்குர்ஆன் வசனம் அல்லது ஹதீஸ் ஒன்றுகூட இல்லை என்னும் தகவலை நினைவூட்ட விரும்புகிறேன். அது முஸ்லிம்களாகிய நம் அறிவு முதிர்ச்சிக்கு சவாலாக விடப்பட்டுள்ளது. எனினும், ஷீஆ அல்லது இமாமத் கோட்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதல் தலைமுறை முஸ்லிம்கள், சில ஹதீஸ்களை மேற்கோள் காட்டுகின்றனர். இமாம் அலீ எப்பேர்பட்டவர் என்பதையும் அவரது தகுதியையும் உணர்த்தும் இறைத்தூதரின் அறிவிப்புகள் பல உள்ளன. அவற்றுள் சிலவற்றை இப்போது பார்ப்போம்.

இறைத்தூதர், இமாம் அலீயிடம் கூறியதாவது,  “உமது போர் எமது போர் ஆகும். உமது அமைதி எமது அமைதி ஆகும் ஹர்பீ வ ஹர்புக், சில்மீ வ சில்முக்”. நிச்சயமாகவே இது எதிர்கால நிகழ்வுகளிலும் தாக்கம் ஏற்படுத்தும் வலுவான கூற்றாகும்.

அதிகம் மேற்கோள் காட்டப்படும் பிரபலமான மற்றொரு அறிவிப்பின்படி, இமாம் அலீயைக் குறித்து இறைத்தூதர் கூறியதாவது, “யா அல்லாஹ்! அவருடைய முக்கிய ஆதரவாளராக நீயே இருப்பாயாக! அவரை எதிர்ப்பவர்களின் எதிரியாக நீயே இருப்பாயாக! அல்லாஹும்ம வாலி மன் வாலா வ ஆதி மன் ஆதா”. மிகத் தெளிவான பொருள்கொண்ட, வலுவான வாக்கியங்கள் இவை.

மேலும், மற்றொரு ஹதீஸ் இமாம் அலீயைக் குறித்து, “ஒரு நம்பிக்கையாளர் மட்டுமே உம்மை விரும்ப முடியும், ஒரு நயவஞ்சகர் மட்டுமே உம்மை வெறுக்க முடியும் லா யுஹிப்புக இல்லா முஃமின் வ லா யக்லிபுக இல்லா முனாஃபிக்” என்கிறது.

இவையனைத்துமே தெளிவான பொருள் கொண்ட வலுவான ஹதீஸ்களாக இருந்தபோதிலும், அவை இமாம் என்ற சொல்லை உள்ளடக்கியதாக இல்லை. பிற முஸ்லிம்களைப் பார்த்து, “எனக்குப் பிறகு அலீதான் உங்கள் இமாம்” என்று தெளிவாகக் கூறும் ஹதீஸ் இல்லவே இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் நாம் இப்போது இங்கே இதுகுறித்துப் பேசிக்கொண்டிருக்கமாட்டோம். நாம் அனைவரும் ஒற்றைக் கருத்தில் ஒன்றியிருப்போம்.

முஆவியாவின் எதிர்ப்பு

இப்போது நான் உங்கள் கவனத்தை எனது வெள்ளிக்கிழமை உரைகளின்பால் திருப்புகிறேன். அவற்றைக் கேட்போர் இவ்விஷயங்களை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வர். வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்த மற்றொரு சம்பவம் தஷய்யு சிந்தனையை உணர்ச்சிகரமான, பிரபல்யமான ஒரு சக்தியாக மாற்றியது. இமாம் அலீயின் முக்கிய, தீவிர எதிரியான முஆவியா ஒரு கட்டளையிட்டார். தன் கட்டுப்பாட்டில் இருந்த இலாக்காக்களின் பள்ளிவாசல்கள் அனைத்திலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை உரைக்குப் பின்னரும், உரை நிகழ்த்துபவர் இமாம் அலீயையும் அவரது மகன்கள் ஹசன்-ஹுசைனையும், அவரது குடும்பத்தினர் பிறரையும் மேடையிலிருந்தே (மிம்பர்) சபிக்க வேண்டும் என்றார். இமாம் அலீயை வெறுத்த முஆவியா அவ்வெறுப்பை தந்திரமாக அரசியல்மயப்படுத்தினார்.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! முஸ்லிமாக இருக்கும் ஒருவர், இறைத்தூதரை நன்கு அறிந்தவர், மக்கா, மதீனாவில் நிகழ்ந்த போராட்டங்களை அறிந்தவர், இவையனைத்திலும் இமாம் அலீயின் முக்கியப் பங்கை அறிந்தவர் இவற்றை எப்படிப் பார்ப்பார் என்று சிந்தித்துப் பாருங்கள்! அக்கறையின்றி, சமூக நிகழ்வுகள் எதிலும் பங்குபெறாமல் அலட்சியமாக இருக்கும் ஒருவருக்குகூட வெள்ளி உரைக்குப் பிறகு ‘அல்லாஹும்ம இல்அன்’ லஅன (சாபம்) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்று கேட்டபோது அவரது மனம் இறைத்தூதர்பால் மேலும் நெருங்கியது. முஆவியா விரும்பாவிட்டாலும் மக்கள் மத்தியில் இமாம் அலீ, அவரது குடும்பத்தினருக்கு ஆதரவான ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பு உருவாகியது. அதன் நீட்சியாக, அப்போது இமாம் அலீயின் அரசியல் முயற்சிகளை முன்னெடுத்திருந்த ஷீஆக்கள் மத்தியில், நிலைமையை மாற்றியமைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மேலோங்கியது.

இச்சம்பவங்களைக் கேள்வியுற்ற இறைத்தூதரின் மனைவி உம்மு சல்மா முஆவியாவிற்கு இவ்வாறு கடிதம் எழுதினார்: “அபூதாலிபின் மகனாகிய அலீயை சபித்து நிந்திப்பதன் மூலம் நீங்கள் உங்கள் மேடையிலிருந்து அல்லாஹ்வையும் அவனது தூதரையும் சபித்து நிந்திக்கிறீர்கள். இதற்கு நானே சாட்சியாக இருக்கிறேன்.” அதாவது அவர் கூறுவது என்னவெனில், அல்லாஹ் இறைத்தூதரை நேசிக்கிறான்; இறைத்தூதரோ அலீயை நேசித்தார். எனவே, அலீயை சபிப்பது அல்லாஹ்வை சபிப்பதற்குச் சமமாகும் என்கிறார். இவ்வாறு வெள்ளி உரையின் இறுதியில் அலீயை சபிக்கும் வழக்கம் உமர் இப்னு அப்துல் அஸீஸ் பதவிக்கு வரும்வரை நீடித்தது. நீதிநெறிகொண்ட உமைய்யா ஆட்சியாளர்களுள் ஒருவரான உமர் இப்னு அப்துல் அஸீஸ்தான் இதற்கு முடிவு கட்டினார்.

பின்னர் கர்பலாவில் அந்த துர்சம்பவம் நிகழ்ந்தது. இமாம் ஹுசைன் முஆவியாவின் மகன் யஸீதால் படுகொலை செய்யப்பட்டார். இமாம் ஹசன், ஹுசைன்குறித்து இறைத்தூதர் கூறிய  “அவர்களிருவரும் சுவனத்தில் இளைஞர்களின் தலைவர்களாக இருப்பர் (சையிதா ஷபாபி அஹ்லுல் ஜன்னத்)” என்ற பொன்மொழியை நாம் அனைவரும் அறிவோம். மேலும், கர்பலாவிற்குப் பிறகு இமாம் ஹுசைன் மற்றும் இமாம் அலீயின் புதல்விகள் யஸீதால் கைது செய்யப்பட்ட சம்பவமும் இத்தகைய அரசியல் சிந்தனைக்கு வலுச் சேர்த்தது. இவையனைத்தும் சேர்ந்து முஸ்லிம் பொதுப்புத்தியில் முஆவியாவிற்கு எதிராக ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

எனினும், சில அறிஞர்கள் இருந்தனர்; இவர்களை நான் ‘அரசவை அறிஞர்கள்’ என அழைப்பதுண்டு. அவர்கள் தம் சொற்களால் அரசர்களையும் அரசாங்கத்தையும் அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக இருந்தபோதிலும் பாதுகாக்க முற்படுவர். அத்தகைய ஒரு அறிஞர்தான் ஷஅபி. அவர் ஷீஆக்கள்குறித்து கூறுவதாவது: “பிரினைவாதிகளான, அலீயின் ஆதரவாளர்களான ஷீஆக்கள்தாம் நம் சமூகத்தின் யூதர்கள் அஷ்ஷியாஉ யஹூது ஹாதிஹில் உம்மா” என்கிறார்.

அரசவை அறிஞர்கள்

ழாஹிரி சிந்தனைப் பள்ளியின் நிறுவனரான அந்தலூஸில் வாழ்ந்த மற்றொரு சட்டவியலாளர் (ஃபகீஹ்) இப்னு ஹஸ்மும் “ஷீஆக்கள் யூதர்களின் வழியில் சென்றுவிட்டனர்” என்கிறார். இறைத்தூதராகிய இல்யாஸ் (அலை), இப்னு ஹாறூன் என்ற யூத துறவி இருவரும் இன்றுவரை உயிரோடு உள்ளனர் என யூதர்கள் கூறுவதைப் போலவே ஷீஆக்களும் இமாம் மஹ்தீ இன்றளவும் உயிரோடு இருப்பதாகக் கூறுகின்றனர் என்கிறார். ஆனால் சில ஸூஃபிகளும்கூட ஃகிள்ரு (அலை), இல்யாஸ் (அலை) இருவரும் இன்றளவும் உயிரோடு இருப்பதாகக் கூறுகின்றனர். இவையனைத்தும் நம் வரலாற்றில் உள்ளன; இஸ்லாமியக் கலாச்சாரம் என நாம் சொந்தம் கொண்டாடும் கலாச்சாரத்தில் உள்ளன. இவற்றை யாரும் மறுக்க முடியாது.

இமாம் அலீயின் மேன்மை

இமாம் அலீயின் தலைமைகுறித்து சந்தேகம் எழுப்புபவர்களுக்கு பதில் கூறும் விதமாக ஷீஆக்கள் மற்றொரு அம்சத்தைச் சுட்டிக்காட்டுகின்றனர். இறைத்தூதர் வாழ்ந்த காலத்தில் இமாம் அலீ தனக்கு மேலான பதவியில் இறைத்தூதரைத் தவிர வேறெவெரையும் ஒருமுறைகூட கொண்டிருக்கவில்லை. ஆனால் அபூபக்கர், உமரின் நிலை இவ்வாறில்லை. உதாரணமாக உசாமா போரை எடுத்துக்கொள்ளலாம். இறைத்தூதரின் காலத்தில் நிகழ்ந்த கடைசி இரு போர்களில் அப்படையில் உமர், அபூபக்கர் இருந்தபோதிலும் இறைத்தூதர் உசாமா பின் ஸைதை தளபதியாக நியமித்தார்.

மற்றொரு சமயம் ஹஜ்ஜின்போது இறைத்தூதர் அபூபக்கரை மக்காவிற்கு அனுப்பியிருந்தார். பின்னர் அலீயையும் மக்காவிற்கு அனுப்பி அவரிடமே அத்தியாயம் பறாஅ அல்லது அத்தியாயம் தவ்பாவின் வசனங்களை ஓதுவதற்குப் பணித்தார். குழுவின் தலைவராக அபூபக்கர் இருந்தபோதிலும் அப்பொறுப்பை அவரிடம் கொடுக்காமல் இறைத்தூதர் இமாம் அலீக்கே கொடுத்தார். இவையனைத்தும் மற்ற எல்லோரையும்விட இமாம் அலீதான் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவர் என விளக்குவதற்குச் சொல்லப்படுகிறது. நம் இஸ்லாமிய வரலாற்றின் முற்பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவங்கள் இமாம் அலீயின் தகுதிகுறித்து விளக்குவதற்கு எடுத்துரைக்கப்படுகின்றன.

தலைமை – மக்களின் ஒப்புதல்

தலைமைப் பதவிகுறித்து இமாம் அலீ என்ன கருதினார் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. மேலும், இது விஷயத்தில் அபூபக்கர், உமரின் கருத்து என்ன என்றும் கேட்கப்படுகிறது.

இக்கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக அக்கால நிகழ்வுகளை நான் உங்கள் கண் முன்னே கொண்டுவர வேண்டியுள்ளது. நீண்ட காலமாக வெள்ளிக்கிழமை உரைகளில் இதுகுறித்துப் பேசியுள்ளேன். இறைத்தூதர் இவ்வுலகை விட்டு மறைந்தபோது உலகம் வெற்றிடமாக இருக்கவில்லை. அதில் பல்வேறு மக்கள் வாழ்ந்துகொண்டிருந்தனர். இஸ்லாத்திற்கு முந்திய அரசியல் போக்குகள் இருந்தன; ஒரு வலுவான கலாச்சாரம் இருந்தது. இஸ்லாம் வந்த பிறகு அம்மக்கள், கலாச்சார நீக்கம் பெற்றனர்.

முஸ்லிம்களின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு அபூபக்கரும் உமரும் தகுதியானவர்கள் என்று அப்போது வாழ்ந்த பெரும்பாலான மக்கள் கருதினர்; அவர்கள் இருவரும் அதை ஏற்றுக்கொண்டனர். இது அதிகாரத்தைக் கைப்பற்றும் எண்ணத்தில் செய்யப்பட்டது அல்ல. இங்குதான் சிலர் நம் வரலாறை தவறாகப் புரிந்து வைத்துள்ளனர். தலைமைப் பொறுப்பு விஷயத்தில் இறைத்தூதருக்கும் இமாம் அலீக்கும் நடுவில் அபூபக்கரும் உமரும் தம்மைப் புகுத்திக்கொண்டனர் என்று சிலர் கருதுகின்றனர். இது உண்மையல்ல.

நிச்சயமாக இறைத்தூதர் இமாமாக இருந்தார் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்தான்  முஸ்லிம்களின் தலைவராக (வலீயுல் அம்ரு) இருந்தார். மேலும், அக்காலத்தில் மக்களை வழி நடத்துவதற்கு இமாம் அலீ ஆகத் தகுதியானவராக இருந்தார் என்பதும் உண்மைதான். எனினும், முஸ்லிம்களின் தலைமைப் பொறுப்பு என்பது அத்தலைமையில் அவர்கள் கொண்டுள்ள ஈடுபாடு சார்ந்தும் உள்ளது. இந்த விதி இறைத்தூதர்களுக்கும் பொருந்தும்.

இறைத்தூதர் என்பவர் இறைவனின் தூதர்தான். எனினும், அவரது தலைமைபற்றிய விஷயம், அம்மக்களின் ஒத்துழைப்பு சார்ந்து இருக்கிறது. நூஹ், இப்றாஹீம், மூசா, ஈசா, இறுதித்தூதர் என எல்லா இறைத்தூதர்களுக்கும் இது பொருந்தும். எனவே, சில இறைத்தூதர்கள் இமாமாக இருந்தும் அல்லது இமாமத் தகுதி பெற்றிருந்தும் அவர்களால் மக்களின் தலைமையை ஏற்க முடியவில்லை எனில், அதற்குக் காரணம் அவர்களின் தகுதிக் குறைபாடு அல்ல. மாறாக அவர்களுக்கு மக்களின் ஒப்புதல் கிடைக்காததே காரணமாகும். இதுபோலத்தான் இமாம் அலீயும் ஆகத் தகுதியானவராக இருந்தபோதிலும், மக்களின் ஒப்புதல் இன்றி அவர்களை அவர் வழிநடத்த முடியாது.

அஸபிய்யா

முஸ்லிம்களை வழிநடத்துவதற்கு தாம் தகுதியானவர் என்ற உண்மையை இமாம் அலீ அறிந்தே இருந்தார். அவர் சாதாரண மனிதரல்லர். உண்மைகளை அறிந்திருந்த ஒரு தனித்துவமான ஆளுமை அவர். தன்னைச் சுற்றி நடந்துகொண்டிருந்த முரண்பாடுகளை அவர் அறிந்திருந்தார். ஆனால், மனிதர்களின் குறைபாடுகளால் ஏற்பட்ட முரண்பாடுகளையும் தீய எண்ணத்தால் ஏற்பட்ட முரண்பாடுகளையும் அவரால் பிரித்தறிய முடிந்தது. ஆனால், 1400 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் நம்மால் இதை அறிந்துகொள்ள முடியவில்லை. இதை இன்றைய மக்கள் புரிந்துகொண்டு பேசாமல் இருக்கிறார்களா, அல்லது அவர்கள் இதைப் புரிந்துகொள்ளவேயில்லையா என்பதை நான் அறியேன்.

பிரச்சினை என்னவென்றால் அக்காலச் சமூகம் ஒரு ‘அஸபிய்யா’ சமூகமாக இருந்தது. அஸபிய்யா என்பது குலம் சார்ந்த நேசம் ஆகும். அது குலம், கோத்திரம் சார்ந்ததாக இருக்கலாம் அல்லது இனம், தேசம், தோற்றம் சார்ந்ததாக இருக்கலாம். அன்றைய அறபியச் சமூகத்தில் காணப்பட்ட கோத்திரவாதத்தை இன்றைய தேசியவாதத்தோடு ஒப்பிடலாம். இதை முழுமையாக வெற்றிகொள்வது சற்றே கடினமானது.

இறைத்தூதரின் காலத்தில், இந்தக் கோத்திரவாதம் (அஸபிய்யா) மேலோட்டமாக வீழ்த்தப்பட்டதென்றாலும் வேரறுக்கப்படாமலேயே இருந்தது. மீண்டும் தலைதூக்குவதற்கு தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தது. இருபது வருடங்களுக்கும் மேலாக அறபிய்யாவில் இறைத்தூதரை எதிர்த்துக்கொண்டிருந்த மக்கள், எதிர்காலம் இஸ்லாத்திற்கே சொந்தம் என்ற நிலை உருவானபின், இப்போது முஸ்லிம்களாக மாறியிருந்தனர்; இஸ்லாத்தின் வெற்றி முடிவாகி அது தன்னை நிலைநாட்டியிருந்தது; அதை வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் சாத்தியமற்றுப் போயிருந்தன.

இந்த நிலையில் அம்மக்கள் “நாங்கள் பற்றுறுதி மிக்க முஸ்லிம்கள்” என்றனர். அவர்களுக்கான பதில் அல்லாஹ்விடமிருந்து வந்தது:   நபியே நீர் அவர்களிடம் கூறுவீராக! “நீங்கள் பற்றுறுதி கொண்டவர்கள் அல்லர். நீங்கள் மனமின்றி இணங்கியுள்ளீர்கள். எனினும், நம்பிக்கை (ஈமான்) உங்கள் உள்ளத்தை அடையவில்லை வ காலதில் அஃறாபு ஆமன்னா குல் லம் துஃமினூ வலா கின் கூலூ அஸ்லம்னா வ லம்மா யத்ஃகுலில் ஈமானு ஃபீ குலூபிகும்.” – திருக்குர்ஆன் (49:14)

இப்போது இறைத்தூதர் இறந்துவிடுகிறார். அத்தினத்தில் (யவ்முத் தகீஃபா) இறைத்தூதரின் உடலைக் குளிப்பாட்டிவிட்டு அங்கு கூடியிருந்த மக்களிடம் இமாம் அலீ வருகிறார். அப்போது அவர்கள் அனைவரும் அபூபக்கரை தலைவராகத் தேர்ந்தெடுக்கத் தயாராக இருக்கின்றனர். ஆனால், அபூசுஃப்யான் மட்டும் இமாம் அலீயிடம், “உங்கள் கையை நீட்டுங்கள். நான் உங்களுக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) செய்கிறேன்” என்றார். ஆனால் இமாம் அலீ அதற்குச் சம்மதிக்கவில்லை. அன்று அவர் மட்டும் சம்மதித்திருந்தால் வரலாறு அபூசுஃப்யானின் விருப்பப்படி மாறியிருக்கும். அவர் அபூசுஃப்யானையும் அந்தச் சமூகத்தையும் நன்கு அறிந்திருந்தார். இறைத்தூதரின் போராட்டங்களில் அவரும் பங்கு பெற்றிருந்தார்; இறைத்தூதரின் 23 ஆண்டுகள் இமாம் அலீயுடையதாகவும் இருந்தன.

அப்போது கோத்திரவாதம் தலைதூக்குவதற்கு ஆயத்தமாக இருந்தது. முஸ்லிம்களுக்கு தலைமை தாங்குவதற்கு ஆகத் தகுதியானவராக அவரது மருமகனும் சிறிய தந்தையின் மகனுமான இமாம் அலீ இருந்தாரெனினும், இறைத்தூதரின் உறவினர் அவர். அன்று அவர் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தால் அம்மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்களா? அவர்களுள் பெரும்பாலானோர் ஒருசில வருடங்களுக்கு முன்னர்தான் முஸ்லிம்களாக மாறியிருந்தனர். இறைத்தூதர், நம்மிடமிருந்து அதிகாரத்தைப் பறித்து தம் குடும்பத்தார் வசம் ஒப்படைக்கிறார் என அவர்கள் கருதியிருக்கமாட்டார்களா? “அவர் செய்த பிரச்சாரமெல்லாம் ஒரு கண் துடைப்புதான். வாருங்கள்! இவர்களை அழித்து நாம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்” என்று எண்ணியிருக்கமாட்டார்களா?

இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பத்திலேயே கர்பலாவும் ஆஷூறாவும் நிகழ்ந்திருக்கும். அப்போதே இமாம் அலீயும் இறைத்தூதரின் உறவினர்களும் இத்தகைய தேசியவாதச் சக்திகளால் வீழ்த்தப்பட்டு “நாங்கள்தாம் தலைவர்கள். நீங்கள் அல்லர்” என்று சொல்லும் நிலை ஏற்பட யாரேனும் விரும்புவார்களா? இவ்வாறு நிகழ்வது உகந்ததா அல்லது அத்தகைய கோத்திரவாதத்தை மீண்டும் தலைதூக்கவிடாமல் மட்டுப்படுத்துவது உகந்ததா? இக்கேள்விகளை உங்கள் அறிஞர்களிடம், உங்கள் ஆசிரியர்களிடம், உங்கள் தலைவர்களிடம் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அபூபக்கரும் உமரும்கூட இவ்விஷயங்களை நன்கு உணர்ந்திருந்தனர். இத்தகைய கோத்திரவாதச் சக்திகள் மீண்டும் தலைதூக்கிவிடாமல் தடுக்கவே அவர்கள் விரும்பினர். இதன் காரணமாக தம் குடும்பத்தினர், கோத்திரத்தார் என எவரையும் அவர்கள் பதவியில் அமர்த்தவேயில்லை.

வஞ்சகம் இல்லை

எனினும், உஸ்மான் வந்தபின் நிலைமை தலைகீழாக மாறிப்போனது. கோத்திரவாதத்தை எதிர்கொள்ளும் விதம் மாறியது. பிரச்சினைகள் உருவாகின. அவர் எல்லாவற்றையும் திறந்துவிட்டார். உஸ்மான், தான் செய்ததை அறிந்து செய்தாரா அல்லது அறியாமல் செய்தாரா என்பது அறிஞர்களின் விவாதப் பொருளாகும். ஏனெனில், அவர் வயதில் முதியவராக இருந்தார். தான் செய்ததெல்லாம் சரியானது என அவர் உளமாரக் கருதியிருக்கலாம். தான் தவறேதும் செய்யவில்லை என நினைத்திருக்கலாம். வயது முதிர்வின் காரணமாக அவரது நினைவாற்றல் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். இத்தனை தவறுகளுக்குப் பிறகும் அவருக்குச் சாதகமாக இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், அவர் மக்களோடு மக்களாக இருந்தார்; அவர்களோடு பள்ளிவாசலுக்குச் சென்றார்; சிப்பாய்கள் புடைசூழ அவர் தன்னை மக்களிடமிருந்து அன்னியப்படுத்தவில்லை.

வஞ்சகத்தோடு இருக்கும் ஒருவர் இப்படி இருந்திருப்பாரா? இன்றைய ஆட்சியாளர்களைப் பாருங்கள். ஆட்சியைக் கைப்பற்றி தம் குடும்பத்தார், கோத்திரத்தார் அல்லது தம்மைச் சேர்ந்தவர்களோடு மட்டுமே அதிகாரத்தைப் பங்கிடுபவர்கள், மக்களிடமிருந்து வெகுதூரமாக இருக்கின்றனர். உஸ்மான் தன்னை எதிர்ப்பவர்களுக்கெதிராக அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்றபோதிலும் அது வஞ்சக எண்ணத்தோடு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. நிச்சயமாக அவர், குர்ஆனால் கண்டிக்கப்பட்ட ஒருவரை ஒரு பகுதியின் ஆளுநராக நியமித்தார். அவர் முஸ்லிமாக இருந்து நிராகரித்து மீண்டும் முஸ்லிமானவர். இத்தகைய ஒருவரை எப்படி அவர் பதவியில் அமர்த்தினார் என்பது எனக்கு விளங்கவில்லை. எனக்குக் கிடைத்த நூல்கள், தகவல்களின் அடிப்படையில் அப்போது என்னதான் நடந்தது என்பதை உறுதிப்படுத்த முயல்கிறேன். எனவே, உஸ்மான் விஷயத்தில் இருபுறமும் வாதம் செய்ய முடியும்.

அபூபக்கர், உமருக்கு மக்கள் அனைவரும் விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்தபின், இமாம் அலீ மட்டும் தயங்கினார் என்றபோதிலும், சில காலம் கழித்து அவர் பைஅத் செய்தார் என நூல்கள் கூறுகின்றன. அவர்களிருவரும் தொழுகையில் தலைமை தாங்கியபோது அவர்களின் பின்னால் இவரும் வரிசையில் நின்று தொழுதார். அவர்கள் வஞ்சகத்தோடு செயல்படுகிறார்கள் என்று இமாம் அலீ உணர்ந்திருந்தால் அவர்கள் பின் நின்று தொழுதிருப்பாரா?

இமாம் அலீயும் அவரது குடும்பத்தாரும் அபூபக்கர், உமரின் குடும்பத்தோடு திருமண உறவும் செய்திருந்தனர். பகையுணர்வு இருந்திருந்தால் இது சாத்தியமாகியிருக்குமா? ஆனால், உஸ்மானைப் பொறுத்தவரை அவர் சில கடுமையான தவறுகளைச் செய்தார். “அவர் செய்தது அரசியல் குற்றம்” என்றுகூட சிலர் அவர் மீது குற்றம் சுமத்துகின்றனர். அப்படியிருந்தும், அவர் தன் வீட்டில் சிறைபிடிக்கப்பட்டபோது, இமாம் அலீ தன் மகன்களை அனுப்பி அவருக்கு உணவும் தண்ணீரும் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

எனவே, இவ்விஷயங்களைக் கொண்டு அவ்வளவு எளிதாக நாம் நம்மிடையே பகையை வளர்த்துக்கொள்ளக் கூடாது. மாறாக புரிதலை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இதைச் செய்யத் தவறிவிட்டால், இவ்வுலகில் இயங்கும் சில கொடூரக் கொலைகாரர்களுக்கு நாம் இரையாக வேண்டியிருக்கும். அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு நம் வரலாறைக் கற்று, நம் உளவியலை அறிந்து, முஸ்லிம்களாகிய நம்மிடையே பகையை விதைத்து ஒருவருக்கொருவர் அடித்துச் சாகும் நிலைக்கு நம்மைத் தள்ளிவிடுவர். இதைத்தான் அவர்கள் இராக்கில் செய்துகொண்டிருக்கின்றனர். சில விஷயங்களை அலட்சியம் செய்த காரணத்தினால், நாமே நம் ரத்தத்தைச் சிந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. நம்மில் சிலர் இவ்வரலாறுகளை உணர்ச்சிப்பூர்வமாக அணுகினர். இன்னும் சிலர் அவற்றை அலட்சியத்தோடு அணுகினர். ஆனால், நாம் செய்ய வேண்டியதெல்லாம் இவ்வரலாறை மரபுகளிலிருந்து விலக்கி, இத்தனை காலமாக உருவாகியுள்ள எதிர்மறை எண்ணங்களைக் களைந்து அறிவார்ந்த நோக்கில் அணுக வேண்டும்.

பிறழ்வுகள்

இறுதியாக, மேலும் சில மக்களைப் பற்றிப் பார்ப்போம். அவர்கள் கொண்டிருந்த சில சிந்தனைகள், அவர்களை முஸ்லிம்கள் என எளிதாக வரையறுப்பதைவிட்டும் தடுக்கின்றன. ‘சிலர்’ என நான் சொல்லும்போது அவர்கள் உண்மையிலேயே சொற்பமானவர்கள். நாம் பின்னர் பார்க்கப்போகும் ஃகவாரிஜ்களுள் சிலரும் வினோதமான கருத்துகளையும் இஜ்திஹாதையும் கொண்டிருந்தனர்; அவர்களை நாம் பொதுமைப்படுத்த முடியாது. அதேபோல இவர்களையும் நாம் பொதுமைப்படுத்த முடியாது. நாம் கவனமாகவும் துல்லியமாகவும் இதை அணுக வேண்டும்.

ஷீஆக்கள் எனச் சொல்லும்போது அவர்களுள் சிலர், இமாம் அலீ ஏதோ ஒருவிதத்தில் தெய்வீகமானவர் எனக் கூறினர். இங்குதான் நாம் மர்மமான பகுதிகளை நெருங்குகிறோம். மக்கள் பிற மனிதர்களை மனிதத்துக்கு அப்பாற்பட்டு உயர்த்திப் பார்க்கும்போது இத்தகைய நிகழ்வுகள் நடந்துவிடுகின்றன. இமாம் அலீ ஏதோ ஒரு அர்த்தத்தில் கடவுள் என்ற நிலைக்கு அவர்கள் அவரை உயர்த்திவிடுகின்றனர். இது நம் வரலாற்றின் உண்மை. காலங்காலமாக இத்தகையவர்கள் இருந்தனர். இப்போதும் மிகச் சொற்பமாக இருக்கின்றனர். அவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் தங்களுக்குத் தாங்களே விளக்கம் அளித்துக் கொள்ளட்டும்.

நீங்கள் அவர்களைக் காண நேர்ந்தால், அவர்களிடமே கேளுங்கள். எனினும், அவர்கள் பதிலளிக்க மிகத் தயங்குவார்கள் என்பதையும் சொல்லிவிடுகிறேன். ஆகவே, அவர்களுள் திறந்த மனம்கொண்ட ஒருவரை நீங்கள் கண்டால் “இமாம் அலீ தெய்வீகமானவர், அல்லது கடவுள், அல்லது அதுபோல ஏதோவொன்று என்று நீங்கள் சொல்லும்போது, என்ன சொல்ல வருகிறீர்கள்?” என அவர்களிடமே கேளுங்கள். இமாம் அலீ ஒரு மனிதர்தான், சிறப்புவாய்ந்த மனிதர் அவர்; ஆனால் கடவுள் அல்ல.

தமிழில் : ஜுந்துப்

(நன்றி : மெல்லினம்)

ஆங்கிலத்தில் உரையைக் கேட்க : Islamic History – Ahl Tashayyu’

Related posts

One Thought to “ஷீஆ சிந்தனைப் பள்ளி
இஸ்லாமிய வரலாற்றில் அரசியல் சிந்தனைப் பள்ளிகள்

  1. Moinudeen

    உண்மையான தெளிவு இது. ஆரம்ப கால இஸ்லாமிய வரலாற்றை சம்பவங்களாக படித்தால் முழுமையாக விளங்காது. வரலாற்றை சமூக சூழல்களோடு (sociological) அடிப்படையில் ஆராய வேண்டியது உள்ளது உண்மையை அறிய. நான் இந்த ஷியா சுன்னி சம்பந்தமாக சிறிய ஆராய்ச்சியில் கடந்த ஒரு வருடமாக நேரம் கிடைக்கும் போது வரலாற்று மற்றும் இஸ்லாமிய இலக்கிய நூல் அடிப்படையில் சில ஆங்கில புத்தகங்கள் உதவி கொன்டு படித்து வருகிறேன். நான் படித்த ஆராய்ந்த கருத்தில் அடிப்படையில் உள்ள சில கருத்துகளே இவை. ரசூல் (ஸல்) காலத்தில் இருந்தே அசபிய்யா இருந்தது. பனு ஹாஷிம்(clergy role in Makkah) vs பனு உமையா (defence and military role) என்று சொல்லலாம். பனு மக்ஸும் (top notch business role deciding economy of Makkah) பனு உம்மையா வுடன் தான் சேர்ந்து இருந்தது. ரசூல் ஸல் அவர்கள் பனு உம்மையா விற்கு உம்மா பாரம்பர்ய வகையில் தொடர்பு உள்ளது. தாய் வழி தொடர்பை விட தந்தை வழி தொடர்பு தான் குலத் தலைமை யை நிர்ணயிக்கும் அப்போது இருந்த tribal society யில். ஒரு விதமான கண்ணிய குறைவாக உம்மா வலி சொந்தங்களை ஆட்சியாளர்கள் பார்க்கும் ஜாஹிலிய நிலை அப்போது. அதனால் தான் அபு ஜஹ்ல் போன்றோர்கள் ரசூல் (ஸல்) அவர்களை ஏற்கவில்லை இஸ்லாம் உண்மை என்று தெரிந்து இருந்தும். காரணம் பதவி இழப்பை பயந்தான் அவன். ரசூல்(ஸல்) காலத்திற்கு பிறகும் அதே அசபிய்யா வின் தொடக்கம் ஆர்மபம், அது பனு அப்பாஸ் vs பனு உமையா. இந்த ஷியா சுன்னி ஆரம்ப காலத்தில் இரண்டும் ஒன்றாகவே இருந்து உள்ளது. இதற்கு வேறு எங்கும் ஆதாரம் தேட வேண்டாம். இமாம் புகாரி அவர்களே தன்னுடைய ஸஹீஹ் நூலில் approx 10 கும் மேற்பட்ட ஷீஆக்களின் பெயர்களை நம்பக தகுந்த list இல் சேர்த்துள்ளார்கள். அதே மாதிரி மற்ற ஹதீத் கிர்நதங்களிலும் உள்ளது. இந்த ஷியா சுன்னி வேறுபாடு கோட்பாடு ரீதியில் ஏற்பட வில்லை என்னை பொறுத்த வரையில். இது ஏற்ப்பட்டு இருப்பது அரசியல் ரீதியில் தான். உமையக்கள் ஆட்சியில் இந்த வேற்றுமைகள் சிந்தனை ரீதியில் ஏற்பட்டு உள்ளது. இது தான் உண்மை. ஆனால் முக்கியமான இலக்கியமான ஹதீத் கிதாபுகளின் ரீதியில் அணுகினால் நான் அறிந்த வரையில் ஷியாக்களும் புகாரி மற்றும் இன்ன பிற ஹதீத் கிதாபுகளை பின்பற்றவே செய்கின்றனர். நல்லவர்கள் கெட்டவர்கள் அனைத்து பிரிவர்களிடமுமும் உள்ளனர் என்பது போல தான் இதுவும். அரசியல் நயவஞ்சகத்தில் தான் இந்த வேற்றுமை இன்றும் மக்கள் சிந்தனைகளில் நிலை பெற வைக்க பட்டு உள்ளது.

    இமாம் கொமெய்நி ஈரானிய இஸ்லாமிய புரட்சிக்கு பின் , தலைமை பதவி பெற்ற பின் , சொன்ன கருத்து “எந்த ஷியா வும் சுன்னி யை சாட கூடாது. எந்த ஷியாவும் அபுபக்கர் உமரை கண்நிய குறைவாக பேச கூடாது.மீறினால் தண்டனை” என்ற பிரகடனம் செய்தார்.இது உண்மையே. அவர் வரலாற்று நிகழ்வை அறிந்ததாலேயே இதனை கூற முடிந்தது. அமெரிக்க ஏகாதிபத்திய சூழ்ச்சி, சில முஸ்லீம் மன்னர்களின் அதற்கு ஆதரவு, பிரித்தாளும் நயவஞ்சக முறை போன்றவைகளால் கோமேனியின் கட்டளைகளை நிலை நிறுத்த முடியவில்லை அவர் ஆட்சி செய்த காலத்தில் கூட. இதற்கு சில சுன்னி அறிஞ்சர்களும் சாட்சியாகவே உள்ளார்கள். இதுதான் அக்காலத்தில் உள்ள யதார்த்தம். அக்காலத்தில் எந்த அளவிற்கு ஷியா சுன்னி ஒற்றுமை மேலோங்க இருந்தது என்றால், எகிப்தில் உள்ள அஸ்ஹர் பல்கலை கழக அறிஞ்சர்கள் ஒன்றிநைந்து கொடுத்த பத்வா வில் உள்ளது. அவர்கள் வெளியிட்ட பத் வா என்ன வெனில் சுன்னி முஸ்லிம்களில் 4 மத்ஹபுகள் போன்ற ஒரு மத்ஹபு தான் jafari மத்ஹப். ஆகையால் ஷியா சுன்னி வேறுபாடு கோட்பாட்டு அளவில் இல்லை.” என்பதே. மொரோக்கோ வில் உள்ள சில மாலிகி அறிஞ்சகள் கூட இதே மாதிரி ஒரு பத்வாவை கூறினர்.இது தான் உண்மை நிலை. தர்கா, ஷிர்க், விழாயா,தக்கிய்யா போன்ற நிலைகள் ஷியா சுன்னி இருபிரிவாரிலும் உள்ளோர்களில் அறியாத மக்களிடம் இருந்து உள்ளதே. ஆனால் நன்கு அறிந்த அறிஞ்சர்கள் மற்றும் மக்கள் இவைகளின் வேறுபாட்டை நன்கு அறிந்தவர்கலே. ஆனால் மேற்சொன்ன 4 விஷயங்களை வைத்து ஷியாக்கள் எதிரிகள் போன்று பொது புத்தியில் திணிக்க படுகிறது. இதனை நான் அறிந்த வரை தீவிர போக்கு கொண்ட சலபி பிரிவாறே இதனை செய்கின்றனர்.அறிந்து செய்கிறார்களா அல்லது அறியாமல் செய்ய வைக்க படுகின்றார்களா என்பது எனக்கு புரியவில்லை.. சவூதி மற்றும் ஈரான் அரசியல் பிரிவினையை நிலை நிறுத்த தான் இந்த நிலையாக இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது.நான் சலபி மன்ஹஜ் ஜை பின்பற்ற கூடியவன் தான் .ஆனால் மிதமான போக்கும் கொண்டவன். யதார்த்தத்தை யதார்த்தமாக அணுக கூடியவன் இஸ்லாமிய பார்வையில். இப்போதும் பார்த்தால் தீவிர சலபி பிரிவார் மேற்சொன்ன இமாம் கொமெய்நி கட்டளைகளை ஏற்ற இஃவான் மற்றும் ஜமாதே இஸ்லாமி இயக்கங்களை தீவிரமாக சாடுவதை பார்க்கலாம். காரணம் வரலாற்று தெளிவின்மை மற்றும் பிரிவினைவாத சிந்தனை. இந்த மாதிரி சிந்தனை போக்கிற்கு பின் நிச்சயம் ஆட்சி அரசியல் influence இருக்கும் என்பதை அறிய முடிகிறது. இதனை நேரடியாகவே நாம் காணலாம்.

    உஸ்மான் ரலி காலத்தில் இஸ்லாம் ரோமாபுரி கையில் இருந்த ஷாம் வரை சென்றது. அக்காலத்தில் இஸ்லாம் ஷாமில் புதிதாக நுழைந்த போது பொது மக்கள் இஸ்லாத்தில் இருந்தாலும் தங்கள் கிருஷத்வ காலத்தில் இருந்த tribalism என்ற குல பெருமையை சிந்தனையில் வைத்தே இருந்தனர். இதனை அசபிய்யா சிந்தனை என்று சொல்வதை விட , சமூக சூழல் அப்படி இருந்தது. போதாத குறைக்கு கிருத்துவ மத மக்களும் அங்கு இருந்தனர். குல ஒன்றுபடுதல் அடிப்படையில் முஅவியா ரலி அவர்கள் கிருஸ்துவ உயர் குல பெண்ணை மணந்தார்கள். இது அக்கால நிகழ்வு. அவர்களுக்கு பிறந்த குழந்தை தான் யஜீத். இந்த பெண்ணின் வளர்ப்பில் இஸ்லாமிய மற்றும் கிருஷத்வ சூழலில் வளர்க்க பட்டவர் தான் யஜீத். பிரச்சனை முஆவியா அவர்கள் காலத்தில் தோன்றினாலும், இந்த ஷியா சுன்னி வேற்றுமை யஜீத் காலத்தில் தான் வேரூன்றியது. ரோமாபுரி ஆட்சி காலத்தில் மன்னராட்சி மாதிரி முஸ்லிம் சமூகத்த்தில் மன்னராட்சி நுழைந்தது. அலி முஆவியா பிரச்சனை சில நயவஞ்சகர்கள் ஏற்படுத்திய நிலை. ஏன் என்றால் மதினா ஹிஜாஸ் மக்களின் கலாச்சார சூழ்நிலை வேறு.ஷாம் மக்களின் கலாச்சார சூழ்நிலை வேறு. இரு சாரார் மக்களின் தக்வா வும் ஒரே நிலையில் பார்க்க முடியாது. அந்த அந்த இடத்தில் மக்கள் மன நிலை எவ்வரோ அப்படி தான் ஆட்சியும் அமைக்க முடியும் இஸ்லாமிய வரம்பிற்கு உட்பட்டு. இதனை ibn kaldhun என்ற சங்க கால வரலாற்று ஆய்வாளர் மிக தெளிவாக பல ஆதாரங்களுடன் தன்னுடைய பிரதான நூலான muqqdhimah என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். Ibn kaldhun என்ற ஆய்வாளர் தான் வரலாற்றில் வரலாற்றை sociological முரையில் முதலில் ஆராய்ந்து விளக்கம் சொன்னவர். மேற்கத்திய உலகம் இஸ்லாமிய வரலாற்றை அணுகும்போது அவர்களின் list இல் ibn kaldhun இல்லாமல் இருக்காது.

    அனு ஆயுதங்களை விட மிக பலமான சேதங்களை இந்த உம்மதில் தலைமுறை தலைமுறையாக இன்றளவும் ஏற்படுத்தி கொண்டு இருப்பது இந்த ஷியா சுன்னி பிரச்சனை தான் என்று நான் சொன்னால் அது மிகை இல்லை என்றே நான் கருதுகிறேன்…

Leave a Comment