சலஃபிசமும் மரபுவாதமும் – நூல் அறிமுகம்
சமீபத்தில் வெளியான முனைவர் இமாத் ஹம்தாவின் Salafism and Traditionalism: Scholarly Authority in Modern Islam (CUP, 2020) என்ற நூல் எமது உரையாடல்புலத்திற்குப் பயனளிக்கும் பல முக்கியமான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது. அதிலொன்று, நவீனகால சலஃபிசச் சிந்தனைப் பள்ளியானது இஸ்லாமிய மூலாதாரங்களைப் பொருள்கோடல் செய்வதற்கான மற்றொரு முறைமையாகவே (Hermeneutical Methodology) புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற அவரது கருத்து. ஏனெனில், கடந்த சில தசாப்தங்களாக சலஃபிசம் எனும் சொல் மிகவும் அரசியல்படுத்தப்பட்ட ஒன்றாகிவிட்டது. நாசகர அரசியல் குறிக்கோள்களை நோக்கி மக்களை வழிநடத்தும் கோட்பாடாகவே அது பார்க்கப்படுகிறது. இது தவறான கண்ணோட்டம் என்று கூறும் நூலாசிரியர், சலஃபிசத்தின் மையமான வாதங்களையும், மூலாதாரங்களை அவர்கள் அணுகும் விதத்தையும், அதிலுள்ள உள்முரண்பாடுகளையும் பகுப்பாய்வு செய்கிறார்.
இரண்டாவது, இஸ்லாமிய மூலாதாரங்களைப் பொருள்கோடல் செய்வது எப்படி என்பது குறித்த சலஃபிசச் சிந்தனைப் போக்கை, அதற்கு எதிர்த்திசையில் பயணித்த இஸ்லாமிய மரபுவாதத்தின் (Islamic Traditionalism) விவாதங்களைத் தவிர்த்துவிட்டுப் புரிந்துகொள்ள முடியாது என்கிறார் இமாத் ஹம்தா. இந்தப் பின்னணியில், இஸ்லாமிய மரபுவாதத்தின் பிரதான கருத்தாடல்கள் பற்றியும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது. விளைவாக, சலஃபிசத்திற்கும் மரபுவாதிகளுக்கும் இடையில் இடம்பெறும் பரஸ்பர உரையாடல் போன்று முழு நூலையுமே இமாத் ஹம்தா தொகுத்தளித்திருக்கிறார்.
மூன்றாவது, இஸ்லாத்தின் ஆதார நூல்களை அணுகுவற்கு இஸ்லாமிய மரபிலுள்ள பொருள்கோடல்முறைகளும் கருத்துகளும் அவசியமா, இல்லையா என்ற கேள்விக்கு இருதரப்பும் முன்வைக்கும் இருவேறுபட்ட பதில்களே இவ்விரு சிந்தனைப் பள்ளிகளையும் பிரிக்கும் பிரதான புள்ளி என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர். பாரம்பரிய பொருள்கோடல்முறைகளோ விளக்கங்களோ அவசியமற்றவை என்றும், திருக்குர்ஆனையும் நபிவழியையும் அதன் நேரடி அர்த்தத்தில் (Literalist meanings) புரிந்துகொள்வதே அடிப்படையானது என்றும் சலஃபிசம் வாதிடுகிறது. இதற்கு முரணாக, இஸ்லாமிய மூல நூல்களை நேரடியாகப் புரிந்துகொள்ள முயல்வது இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியை வேறோடு தள்ளிச்சாய்த்து விடுவதற்கான முயற்சி என்பதாக வாதிடுகிறது மரபுவாதம். அத்துடன், இஸ்லாமிய மரபுகளுக்குட்பட்டு சட்டப் பன்மைத்துவத்தையும் பொருள்கோடல்களையும் மரபுவாதம் ஆதரிக்கிறது. விளைவாக, சட்டத்தையும் அற மதிப்பீட்டையும் பெறுவதற்கான மூலாதாரமாக (Sources of Morality and Law) குர்ஆனையும் நபிவழியையும் இஸ்லாமிய மரபுவாதம் கருதும்போது, சலஃபிசம் அதை இஸ்லாமியச் சட்டங்களின், அற விழுமியத்தின் தொகுப்பாகக் (Collection of Islamic Morality and laws) காண முற்படுகிறது என்கிறார் இமாத்.
இந்நூலில் முனைவர் இமாத் ஹம்தா முன்வைக்கும் மற்றொரு கருத்தும் மிக முக்கியமானது. சலஃபிசத்தை ஒரு குறிப்பிட்ட கறாரானச் சிந்தனைப் பள்ளியாக அடையாளப்படுத்த முடியாது என்று வாதிடும் அவர், சமகாலத்தில் சலஃபிச லேபலுடன் செயல்படும் பல்வேறு வித்தியாசமான முகாம்களையும், அவற்றின் வேறுபட்ட புரிதல்களையும் தொகுத்தளிக்கிறார். ஒரு குறிப்பிடத்தக்க முகாமான வஹ்ஹாபிச சலஃபிசமானது, நம்பிக்கை கோட்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு இஸ்லாமிய மூல நூல்களை நேரடியாக அணுக வேண்டும் என்று வாதிட்டாலும், இஸ்லாமியச் சட்டவியல் விஷயத்தில் மரபுவாதத்தின் சாயல்களைப் பெருமளவில் கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார். பிரபல ஹதீஸ்துறை அறிஞரான அல்பானியின் சிந்தனைப் பள்ளியை தூய்மைவாத சலஃபிசம் (Salafi Puritanism) என அவர் அடையாளப்படுத்துகிறார்.
தூய்மைவாத சலஃபிசத்திற்கும், இஸ்லாமிய மரபுவாதிகளுக்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றங்களை மையப்படுத்தியே இந்நூல் நகர்ந்து செல்கிறது. இஸ்லாமிய நம்பிக்கை கோட்பாடுகள், சட்டம், ஒழுக்கவியல் உள்ளிட்ட சகல அம்சங்களிலும் மரபுவாதத்தை, அதன் அணுகுமுறைகளை முழுமையாகப் புறக்கணிக்கும் தூய்மைவாத சலஃபிசம், அதற்கெதிரான மக்கள் இயக்கமாகவும் தன்னை முன்னிறுத்திக் கொள்வதை இமாத் குறிப்பிட்டுக்காட்டுகிறார்.
மேலும், சமகால சலஃபி முகாம்களுக்கு மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சிந்தனைப் பள்ளியாக தூய்மைவாத சலஃபிசம் இருப்பதாகச் சுட்டிக்காட்டும் நூலாசிரியர், மரபுவாதத்தின் எச்சசொச்சங்கள் ஏனைய சலஃபிச் சிந்தனை முகாம்களுக்கு மத்தியிலும் காணப்படுகிறது என்றும், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதன் மூலம் அவற்றையும் சுவீகரிக்க அது முனைவதாகவும் கூறுகிறார். மொத்தமாக நோக்கும்போது, சர்வதேச அளவில் மரபுவாதத்தின் அதிகாரத்தைத் தகர்த்து ஹதீஸ்களின் சர்வாதிகாரத்தை (Hadeeth Dictatorship) நிலைநாட்டும் கருத்தாடலுடன் (Discourse) செயல்படும் சிந்தனை இயக்கமே தூய்மைவாத சலஃபிசம் என இமாத் ஹம்தா கோடிட்டுக்காட்டுகிறார்.
தொடர்ந்து, இஸ்லாமிய மரபு என்றால் என்ன? அதன் அறிவுக்கோட்பாடு, கல்விக்கோட்பாடுகள் யாவை போன்றவற்றையும் இந்நூல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறது. அதன்போது, இஸ்லாமியப் பாரம்பரியம் அறிவுத்தேடலை ஆன்மிக வளர்ச்சியுடன் இணைத்து நோக்குகிறது. மேலும், ஆழ்ந்த ஆன்மிகப் பற்றுள்ள ஆசிரியர்களிடமிருந்து நேரடியாகவும், சீரான வழிமுறைகளைப் பேணியும் இஸ்லாமியப் பாரம்பரியம் பிரசவித்த நூல்களை முழுமையாகக் கற்க வேண்டும். அத்தகைய ஆசிரியர்களிடமிருந்தே இஸ்லாமிய அறிவைக் கற்பிப்பதற்கான அனுமதியையும் பெற்றுக்கொள்ள வேண்டும். வேறு வார்த்தையில் சொன்னால், சுயமாக இஸ்லாமிய மூலாதாரங்களை அணுகிக் கற்பது இஸ்லாமிய அறிவு மரபின் ஒருமுகப்பட்ட தன்மையைச் சிதைக்கும் செயல். ஆக, ஒருவர் எந்த நூலைக் கற்கிறார் என்பதைப் போலவே, யாரிடம் அவர் அதைக் கற்றார் என்பதும், அந்த ஆசிரியரின் ஆத்மிக, சட்டப் பின்புலமும் முறைமைகளும் என்ன என்பனவும் முக்கியமானதாகும்.
ஆனால், கடந்த ஒரு நூற்றாண்டாகப் புதிய கல்விமுறைகளின் எழுச்சி, புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகள் என்பவற்றுடன், சுயமாக ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுவதற்கான தத்துவ அடித்தளத்தை நவீனத்துவம் முன்வைத்தது. இவை இஸ்லாமிய மரபுவாதத்தின் சிந்தனைச் சட்டகத்தையும் உலகநோக்கையும் அடியோடு புரட்டிப்போட்டிருக்கிறது. அதேவேளை, சலஃபிசத்தின் எழுச்சிக்கும், மக்கள் செல்வாக்குக்கும் எவ்வாறு மேற்சொன்ன புதிய தளமாற்றங்கள் தூண்டல் காரணியாக இருந்திருக்கிறது என்பதையும் இமாத் ஹம்தா பகுப்பாய்வு செய்கிறார். இத்தகைய புதிய மாற்றங்களின் நிழலில் நின்று, மரபுவாதத்தை விசாரணை செய்யும் சலஃபிசம், நேரடியாக குர்ஆன், ஸுன்னாவைக் கற்பவர்கள் தங்களுக்குத் தேவையான ஆன்மிக வளர்ச்சியை எட்ட முடியும் என்ற கருத்தை முன்வைக்கிறது. அதற்கு ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பொன்று அவசியமில்லை எனச் சொல்கிறது. மரபுவாதக் கண்ணோட்டங்களைத் திட்டமிட்டு ஓரங்கட்டும் நிகழ்ச்சித் திட்டத்துடன் தூய்மைவாத சலஃபிசம் செயல்படுவதாக மரபுவாதம் நோக்குகிறது. இந்த வகையில், நவீனத்துவத்தைத் தாண்டிய தனது பிரதான கருத்தியல் எதிரியாக தூய்மைவாத சலஃபிசத்தை மரபுவாதம் கருதுகிறது என்கிறார் நூலாசிரியர்.
அதேநேரம், தூய்மைவாத சலஃபிசத்திற்குள் நிலவும் உள்முரண்பாடுகளையும் நூலாசிரியர் அலசுகிறார். அப்போது, மக்களை நேரடியாக குர்ஆன், ஹதீஸுடன் இணைத்துவிடுவதற்குத் தூய சலஃபிசம் முயல்கிறது என ஷெய்க் அல்பானி போன்றவர்கள் வாதித்தபோதிலும், பலபோது இஸ்லாமிய ஆதார நூல்களைப் புரிந்துகொள்வதில் மரபுவாத அணுகுமுறையின் ஆதிக்கத்தைக் கட்டுடைத்து (Deconstruction), அவ்விடத்தில் தமது பொருள்கோடல் அணுகுமுறையை நிறுத்துவதற்கான உத்தியாகவே (Strategy) நேரடியாக குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றல் என்ற தர்க்கத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்கிறார்.
ஏனெனில்,பொதுமக்கள் மத்ஹப் அறிஞர்களைப் புறக்கணிக்க வேண்டும் எனத் தூய்மைவாத சலஃபிசம் கோரும் அதேவேளை, திருக்குர்ஆன், ஸுன்னாவை நேரடியாகப் பின்பற்றும் அறிஞர்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் தம்மையறியாமல் அழைப்பு விடுக்கிறது. ஷெய்க் அல்பானி தனது பிற்பட்ட காலங்களில் இந்த அழைப்பை இன்னும் வெளிப்படையாக விடுத்தார். இதிலுள்ள உள்முரண்பாடு என்னவெனில், மக்கள் குர்ஆன்-ஸுன்னாவை நேரடியாகப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தை அவர்களது அடிப்படையான தர்க்கமாகக் கொண்டால், பிறகு ஏன் பொதுமக்கள் குர்ஆன்-ஸுன்னாவைப் பின்பற்றும் அறிஞர்களைப் பின்தொடர வேண்டும்? அறிஞர்களின் வழியாகவே மூலாதார நூல்களைக் கற்க வேண்டும் என்ற சிந்தனையானது அடிப்படையில் மரபுவாத்தினுடையதே. பொதுமக்கள் நேரடியாக இஸ்லாமிய மூலதாரங்களை அணுகிக் கற்க முடியாது. அவற்றை அறிஞர்களிடம் சென்று ஆழ்ந்து கற்க வேண்டும் என்ற கருத்தை மரபுவாதம் தெளிவாகச் சொல்கிறது. இந்த தர்க்கத்திலிருந்தே மத்ஹபுகளைப் பின்பற்றவேண்டும் என்ற விவாதமும் எழுகிறது.
அப்படியென்றால் குர்ஆன் ஸுன்னாவை நேரடியாக எடுத்த எடுப்பில் புரிந்துகொள்ள முடியாது; அவற்றைத் தெளிவுபடுத்தும் அறிஞர் தேவை என்ற அடிப்படை தர்க்கத்தில் மரபுவாதமும், தூய்மைவாத சலஃபிசமும் மறைமுகமாக உடன்படுவது தெளிவாகிறது. பொருள்கோடல் செய்யும் வழிமுறையில்தான் வேறுபடுகின்றன என்பது இமாத் ஹம்தாவின் கருத்தாகும்.
மேலும் விவரிக்கும் அவர், மரபுவாதமும் தூய்மைவாத சலஃபிசமும் தீவிரமான கருத்து மோதலில் ஈடுபட்ட பகுதிகளில் முக்கியமான ஒன்று, பலவீனமான ஹதீஸ்களை வழிகாட்டலாகக் கொள்ள முடியுமா, முடியாதா என்பது. இரு தரப்பினருக்குமிடையிலான விவாதம் நவீனகாலத்தில் கிட்டத்தட்ட 1960கள் முதல் இன்றுவரை தீவிரமாகத் தொடர்கிறது. தூய சலஃபிசமும், அதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அறிஞர்களும் பலவீனமான ஹதீஸ்களை எந்த அடிப்படையிலும் பயன்படுத்த முடியாது என்ற கருத்தை ஆதரிப்பவர்கள். ஏனெனில், பிழையான நம்பிக்கைகளும் சமூக வழக்காறுகளும் இத்தகைய பலவீனமான ஹதீஸ்களைப் பயன்படுத்துவதன் மூலமே தோற்றம் பெறுகின்றன. அதனால், முஸ்லிம்கள் தங்களின் மார்க்கத்தைப் பிழையாகச் சித்தரிக்கும் நிலை தோன்றுகிறது என்பது அவர்கள் வாதம்.
ஆனால், பொதுமக்களை நல்லமல்கள் செய்வதற்குத் தூண்டும் நோக்குடன் பலவீனமான ஹதீஸ்களைப் பயன்படுத்த முடியும் என்கிறது மரபுவாதக் கண்ணோட்டம். மட்டுமல்ல, அதை இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் நிலவிய இஜ்மா (ஏகோபித்த முடிவு) என்றும் சொல்கிறது. மேலும், குறித்தவொரு ஹதீஸ் நீண்ட காலம் புழக்கத்தில் இருந்தாலும், அதனடியாக பல நல்லமல்களை அச்சமூகம் நீண்டகாலம் செய்துவந்தாலும் அத்தகைய ஹதீஸின் பலவீனம் சமூக வழமையுடன் இணைந்து பலமானதாய் மாறுகிறது என மரபுவாதிகள் வாதிடுகிறார்கள். இதன் அர்த்தம் ஹதீஸின் பலவீனமான தன்மையை அவர்கள் பொருட்படுத்தாமல் இருக்கிறார்கள் என்பதல்ல. மாறாக, ஒரு பலவீனமான ஹதீஸை ஏற்பதில் வெறுமனே அதன் அறிவிப்பாளர் வரிசையை மட்டுமே நோக்காமல், அக்குறிப்பிட்ட ஹதீஸையும், அது போதிக்கும் நல்லமலையும் முஸ்லிம் சமூகம் பன்னூற்றாண்டுகளாக எவ்வாறு நோக்கி வந்திருக்கிறது என்பதை இணைத்துதான் பார்க்க வேண்டும் என மரபுவாதிகள் சொல்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தின் நீண்டகால வழமை ஷரீஆவில் மிகவும் பெறுமதியுடையது என்பது அவர்களது தர்க்கம். இதுவே, தறாவீஹ் தொழுகையில் றகஅத்துகள் எத்தனை என்பது முதல் ஏனைய சகல சமூக வழக்காறுகள் விடயங்களிலும் மரபுவாதிகளும், தூய்மைவாத சலஃபிகளும் கருத்து முரண்பட்டுக்கொள்வதன் பின்புலம் என்கிறார் நூலாசிரியர் இமாத்.
கடைசியாக, தற்கால இஸ்லாமிய உரையாடல்களில் தூய சலஃபிசம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை நூல் சுருக்கமாகப் பேசுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், தாம் பயன்படுத்தும் ஹதீஸின் தரத்தைக் குறிப்பிடுதல், தமது நிலைப்பாடுகள் குறிப்பிட்ட ஹதீஸ்களுடன் முரண்படவில்லை என்பதை நிறுவ முற்படல் போன்ற நடைமுறை இன்று சர்வ சாதாரணமாக இடம்பெறுகிறது. இந்தத் தோற்றப்பாட்டைக் கட்டியெழுப்பியதில் தூய்மைவாத சலஃபிசத்திற்கு குறிப்பிடத்தக்க பங்கிருப்பதாகச் சொல்கிறார் இமாத் ஹம்தா. குறிப்பாக, தூய்மைவாத சலஃபிசத்தின் தர்க்கத்தை மரபுவாதிகள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், ஹதீஸ்களைப் பயன்படுத்தி தமது பாரம்பரியத்தை, அதன் கருத்துகளை நியாயப்படுத்தும் அளவுக்கு அவர்களும் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்கிறார். இத்தகைய புதிய தோற்றப்பாட்டை Scripturalization of Traditionalism என்ற பிரயோகத்தின் மூலம் நூலாசிரியர் அடையாளப்படுத்துகிறார். இந்தத் தோற்றப்பாட்டை மேலதிக ஆய்வுகளுக்குட்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.
மேலும், நவீனகால இஸ்லாமியச் சிந்தனையாளரான முஹம்மது அல்கஸ்ஸாலி போன்றவர்கள்கூட தனது நூலில் ஹதீஸ்களைத் தரப்படுத்தித் தருமாறு தூய்மைவாத சலஃபியான அல்பானியிடம் கேட்டுக்கொள்ளும் அளவுக்கு அவர்களது செல்வாக்கு மேலோங்கியிருந்ததாகக் கூறும் நூலாசிரியர், தூய சலஃபிசத்தின் செல்வாக்கு இஸ்லாமிய புலமைத்துவ உரையாடல்களை மேம்போக்காக அணுகும் போக்கையும் ஏற்படுத்தி விட்டிருப்பதாக அவர் விமர்சிக்கிறார்.
மொத்தமாக நோக்கும்போது, இஸ்லாமிய மரபில் ஒவ்வொரு சிந்தனைப் பள்ளியும், பிற சிந்தனைப் பள்ளிகளுடன் உரையாடல்களையும் விவாதங்களையும் மேற்கொண்டதன் வழியாகவே இயங்கி வந்திருக்கிறது. எந்தவொரு சிந்தனைப் போக்கையும் தனித்துப் பிரித்து, அதன் இயங்குதன்மையை சரியாகப் புரிந்துகொள்ள இயலாது என்பதை முனைவர் இமாத் ஹம்தாவின் புத்தகம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.