1980 மொராதாபாத் பெருநாள் படுகொலை: நினைவேந்தல்
சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள்மீது அரசே முன்னெடுத்த, அல்லது அரசின் உதவியுடன் நடந்த தாக்குதல் விஷயத்தில் இந்தியச் சமூகம் செலக்டிவ் அம்னீஷியாவைக் கொண்டுள்ளது.
2002 குஜராத் படுகொலையையும், 1984 சீக்கியர்களுக்கெதிரான கலவரங்களையும் அவதானிக்கையில் காவல்துறை அதில் வாய்மூடி வேடிக்கை பார்த்ததை, அல்லது கலவரக் கும்பலுக்கு உதவிபுரிந்ததாகக் கூறப்படுவதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. தனித்துவமான நிகழ்வுகளாக, நம் வரலாற்றின் மிகப் பயங்கரமான தருணங்களாக இந்தச் சம்பவங்களை நாம் விவாதிப்பதுண்டு.
ஆனால், சீக்கியர்கள் காவல்துறையால் தொடர்ச்சியாக துன்புறுத்தலுக்கும், போலி என்கவுண்டர்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வந்த காலகட்டத்தின் மற்றுமொரு அத்தியாயமே 1984 படுகொலைகள் என்பது. பழங்குடிகள்மீது அரசு முன்னின்று நடத்திய ஏராளமான படுகொலைகளைக்கூட நாம் மறந்தேவிட்டோம். அதுபோலவே, கடந்த ஏழு தசாப்தங்களாகச் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் அரசால் படுகொலை செய்யப்பட்டு வந்திருப்பதை நாம் வசதியாக மறந்துவிட்டோம்.
இம்மாதிரியான செலக்டிவ் அம்னீஷியா காரணமாக, இந்தியாவில் பாஜக என்ற ஒரே அரசியல் கட்சியின் கரங்களில் மட்டும்தான் முஸ்லிம்களின் உதிரம் படிந்திருக்கிறது என்ற பிழையான நம்பிக்கை முஸ்லிம்களிடையே பரவலாக நிலவுகிறது. அப்பட்டமான வரலாற்றுத் திரிபு இது.
மேஜர் லீதுல் கோகாய் எனும் ராணுவ அதிகாரி கஷ்மீரி ஒருவரை ஜீப் ஒன்றில் கட்டி மனிதக் கவசமாக அவரைப் பயன்படுத்தியதை ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரின் செயலோடு சமீபத்தில் ஒப்பிட்டிருந்தார் பார்த்தா சட்டர்ஜி.
அவரது ஒப்பீடு அவ்வளவு துல்லியமானதல்ல என்று நினைக்கிறேன். சுதந்திர இந்தியா பல ஜாலியன் வாலாபாக்குகளைக் கண்டுள்ளது. அநேகமாக, மொராதாபாத் துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகக் கச்சிதமான உதாரணமாக இருக்க முடியும். 1980ம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று முஸ்லிம்கள் நாடு முழுக்கப் பெருநாள் கொண்டாடிக் கொண்டிருந்தபோது மொராதாபாத் பெருநாள் திடலில் தொழுகைக்காக சுமார் 40,000 முஸ்லிம்கள் ஒன்றுகூடியிருந்தனர். அங்கு காவல்துறையும் பிஏசியும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 300 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
ஜாலியன் வாலாபாக்கில் பைசாகி தினத்தன்று ஆயிரக்கணக்கானோர் அதைக் கொண்டாடவும் அங்கு போராட்டம் நடத்தவும் ஒன்றுகூடியிருந்தபோது, டையர் தலைமையிலான ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி 400 பேரைக் கொன்றது. ஒப்புமைகள் இத்தோடு முடிந்துவிடவில்லை. மேற்கூறிய இரு சம்பவங்களிலும் துப்பாக்கிச்சூடு நடந்தபோது பாதிக்கப்பட்டவர்கள் வெளியேற முடிந்த ஒரே வழியும் அடைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டனர். சையது சஹாபுத்தீன் மொராதாபாத் சம்பவத்தை சுதந்திர இந்தியாவின் ஜாலியன் வாலாபாக் என்று மிகச் சரியாகவே அழைத்தார்.
பாஜக தலைவர்களுள் ஒருவரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான எம்.ஜே. அக்பர் மொராதாபாத் நிகழ்ந்த சமயம் இளம் பத்திரிகையாளராக இருந்து, களத்திலிருந்து செய்தி அளித்தார். அவரது Riot after Riot புத்தகத்தில் பின்வருமாறு எழுதினார்: “பெருநாள் தொழுகையில் ஈடுபட்டிருந்த சுமார் 40,000 முஸ்லிம்கள் மீது பிஏசியினர் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தினர். அதில் எத்தனை பேர் இறந்துபோனார்கள் என்பது யாருக்கும் தெரியாது. தெரிந்த விஷயம் என்னவென்றால், மொராதாபாத்தில் நடந்த சம்பவமென்பது இந்து-முஸ்லிம் கலவரமல்ல, வெறிகொண்ட வகுப்புவாதக் காவல்துறை முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட முறையில் கொஞ்சமும் இரக்கமின்றி நிகழ்த்திய படுகொலை. அந்த இனப்படுகொலையை மூடிமறைப்பதற்கே இந்து-முஸ்லிம் கலவரமாக அதைச் சித்தரிக்க காவல்துறை முயன்றது.”
அக்பரைப் போன்ற ஒருவரே இப்பார்வையை வழங்கும்போது, நவீன இந்தியாவில் போலீஸின் மிருகத்தனத்துக்கான இந்த உதாரணச் சம்பவத்தை நாம் எப்படி மறந்தோம்? இதற்கான விடையின் ஒரு பகுதி மேற்கண்ட அக்பரின் பகுப்பாய்விலேயே உள்ளது: “அந்த இனப்படுகொலையை மூடிமறைப்பதற்கே இந்து-முஸ்லிம் கலவரமாக அதைச் சித்தரிக்க காவல்துறை முயன்றது.”
மொராதாபாத்தில் நடந்தது ஈவிரக்கமற்ற படுகொலை என்பதற்கு மாறாக அதை வகுப்புவாத மோதலாகக் காட்டுவதற்கு ஊடகங்களும் முக்கியமான பங்கை ஆற்றின. ஆங்கில, இந்தி ஊடகங்கள் பிரதானமாக காங்கிரஸ், இடதுசாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டன. அவைதாம் முஸ்லிம்களின் வகுப்புவாதப் போக்கே அம்மோதலுக்கு இட்டுச்சென்றது எனும் போலீஸ் கதையாடலுக்கான ஏற்பை வழங்கின.
இதற்குச் சில முக்கியமான உதாரணங்களைப் பார்ப்போம்.
தொழுகை நடத்தியவர்கள் ஆயுதம் வைத்திருந்ததோடு போலீசாரை அவர்கள் தாக்கினார்கள் என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா வாதிட்டது. போலீசார் பதிலடி தரவேண்டிய நிர்பந்தம் எழுந்ததைத் தொடர்ந்து அங்கிருந்த சிலர் உயிரிழந்ததாகவும் கூறியது. முஸ்லிம்களின் “வகுப்புவாதப் போக்குகள்” மீது பழி சுமத்தியதுடன், மொராதாபாத்துக்கு வெளிநாட்டுப் பணம் சர்வ சாதாரணமாக வந்துகொண்டிருப்பதாகவும் வாசகர்களுக்குக் குறிப்பிட்டுக்காட்டியது.
ஓர் ஆங்கில நாளேடு போலிச் செய்தியைக்கூட பிரசுரித்தது. நான்கு எல்லைப் பாதுகாப்புப்படை (பி.எஸ்.எஃப்) வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஐவரைக் காணவில்லை என்றும் கூறி அதற்கான பழியை முஸ்லிம்கள் மீது போட்டது. இதற்கு பி.எஸ்.எஃப் உடனடியாக எதிர்வினையாற்றியது. இந்தச் செய்தியை மறுத்ததோடு மட்டுமின்றி, அவர்களுள் யாரும் காயமடையவில்லை என்பதைப் பத்திரிகையாளர்களை அழைத்துத் தெளிவுபடுத்தியது. போலீசும் காங்கிரஸ் அரசும் இந்த எல்லைவரை சென்றன. அவற்றின் மதச்சார்பற்ற பிம்பத்தைப் பாதுகாக்கவும் முஸ்லிம் வாக்குகளைத் தக்கவைக்கவும்தான் இந்தப் பிரயத்தனமும்.
மறுபுறம், காங்கிரஸ் அரசின் முஸ்லிம்களுக்கு எதிரான கதையாடலை வழமைபோலவே ஊடகங்களும் வழிமொழிந்தன. Economic and Political Weekly (EPW) ஒரு நம்பிக்கைக்குரிய இடதுசாரிப் பத்திரிகை என்கிற ரீதியில் புகழ்பெற்றது. மொராதாபாத் நிகழ்வு சம்பதமாக பல கட்டுரைகளை அது பிரசுரித்தது. அவையனைத்தும் பகுதியளவோ முழுமையாகவோ முஸ்லிம்கள் மீது அச்சம்பவத்துக்கான பொறுப்பைச் சாட்டின. சையது சஹாபுத்தீன் என்பவரின் வாசகர் கடிதம் தவிர்த்து அந்தப் பத்திரிகையில் போலீஸ் கதையாடலை மறுத்து எந்தவொரு கட்டுரையும் பிரசுரமாகவில்லை.
ரொமீலா தாப்பரின் சகோதரர் ரோமேஷ் தாப்பர் எழுதிய கட்டுரையில், போலீஸாரின் தோட்டாக்களுக்கு முஸ்லிம்கள் தாமாகப் பலியானதாய் குறைகூறப்பட்டிருந்தனர். இந்தியாவைச் சீர்குலைப்பதற்கு சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து முஸ்லிம்களுக்கு நிதி வருவதாகவும் ரோமேஷ் தாப்பர் வாதிட்டார். அவரது பகுப்பாய்வை பின்வரும் கருத்தோடு முடித்திருந்தார். அது முஸ்லிம்கள் மீது பழிபோட முயற்சிப்பதுடன் பெரும்பான்மை வகுப்புவாதத்துக்குப் பரிந்து பேசுவதாகவும் அமைந்திருக்கிறது.
“முஸ்லிம்களிடையே நிலவும் போக்குகள் குறித்த பொது மனப்பாங்கு மிக முக்கியமானது. ஏனெனில், அந்தச் சமூகம் அளவில் பெரிதாக இருப்பதாலும் (பாகிஸ்தான் மக்கள் தொகையைக் காட்டிலுமா அதிகம்!), அந்தப் போக்குகள் எதிர்வினைகளை உருவாக்கி, எல்லாச் சிறுபான்மையினரையும் குறித்த பெரும்பான்மைச் சமூகத்தின் மனப்பாங்கில் தாக்கம் செலுத்தும் என்பதாலும்.”
”குற்றவாளிகளைக் கொண்ட ஒரு குழு எம்.எல். (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தலைவர்களால் ஆதரிக்கப்பட்டது” என்றும் அவர்களே படுகொலைகளுக்குக் காரண கர்த்தாக்கள் என்றும் EPW நிருபர் கிருஷ்ணா காந்தி வாதிட்டார். அவரைப் பொறுத்தவரை, முஸ்லிம்கள் காவல்துறையினரைத் தாக்கிய பிறகே துப்பாக்கிச்சூடு நடந்தது; போலீஸாரின் அத்துமீறல் என்பது முஸ்லிம்களின் தாக்குதலுக்கான எதிர்வினையே.
எப்படியிருக்கிறது கதை?! ”கல் வீச்சுக்குப் பதிலடியாக 300 முஸ்லிம்கள் போலீஸாரால் கொலை செய்யப்பட நேர்ந்துள்ளதாம்! சுருங்கக்கூறின், இடதுசாரி ஊடகங்கள் முஸ்லிம்கள் மீது பொறுப்புச்சாட்டிவிட்டு, மதச்சார்பற்ற காங்கிரஸுக்கும் போலீஸுக்கும் சார்பாக வாதிட்டன. கவனமாக இருக்கும் கே.பாலகோபால்கூட மறந்துபோய், இந்திய அரசின் அமைப்புசார் வகுப்புவாதம் எனும் முதன்மை அம்சத்தைக் குறிப்பிடத் தவறினார்.
மற்றொருபுறம், மொராதாபாத் சம்பவம் பற்றி அக்பரும் சஹாபுத்தீனும் முழுமையாக வேறொரு கோணத்தைத் தந்தனர். அரசு நிறுவனங்களின் கதையாடலிலுள்ள பிழைகளை எடுத்துரைத்தனர். முஸ்லிம்கள் ஆயுதம் தரித்திருந்தனர் என்பது கட்டுக்கதை எனச் சுட்டிக்காட்டினார் சஹாபுத்தீன். கீழ்கண்டவாறு அவர் எழுதினார்:
- பெருநாள் திடலுக்குள் யாரும் துப்பாக்கியுடன் காணப்படவில்லை.
- அவர்களால் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிக் குண்டுகள் எதுவும் அங்கே கண்டெடுக்கப்படவில்லை.
- கற்களாலோ தோட்டாக்களாலோ எந்தப் போலீஸாருக்கும் காயம் ஏற்படவில்லை.
- பெருநாள் திடலுக்கு எதிரிலுள்ள கட்டடத்தில் தோட்டாக்களின் தடங்கள் ஏதுமில்லை.
- நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையிலும், துப்பாக்கிகள் எதுவும் அங்கு கண்டெடுக்கப்படவில்லை.
- கலகத்தை ஏற்படுத்தியோர் ஆயுதம் தரித்திருந்தார்கள் என்றால் அவர்கள் ஏன் கல்லெறியவேண்டும்?
Riot after Riot நூலில் அக்பர் எழுதினார்:
“மொராதாபாத் நிகழ்வானது காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம் என்பது மிகத் தெளிவானது. முஸ்லிம்களின் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்துக்கும் உரிய நாளில் அவர்கள் தொழுகைக்காக வந்திருந்தபோது, சட்டம் ஒழுங்கு காவல்படைகள் தம்முடைய மூர்க்கத்தனத்தை ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்டன. அந்தப் படுகொலையிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டும் நூற்றுக்கணக்கானோர், பல குழந்தைகள் உட்பட உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் கடுமையாகக் காயமடைந்தனர். அவர்களுக்கு இறப்பு சற்று தாமதமாக வந்தது!
மொராதாபாத்தின் இந்துக்களும் முஸ்லிம்களும் யார் கேட்டாலும் சொல்வார்கள், 1980 ஆகஸ்ட் 13ல் அவர்கள் பகுதியில் நடந்தது வகுப்புவாதக் கலவரமல்ல என்று. அது போலீஸுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதல். காவல்துறை தம் குரூர வன்செயலை மூடிமறைக்கவே உண்மையாக அங்கு நடந்தது குறித்துப் பொய்யுரைத்ததோடு, அந்தச் சம்பவத்திலிருந்து திசைதிருப்பும் வகையில் போலியான விசாரணைகளை அது மேற்கொண்டது. ஆகஸ்ட் 13 நடந்த மொராதாபாத் நிகழ்வு வகுப்புவாதச் சம்பவமன்று; ஆனால் பிற்பாடு போலீஸார் அதை வகுப்புவாதப் பிரச்னையாக மாற்றிவிட்டனர்.”
அக்பர் மேலும் சுட்டிக்காட்டுகிறார், துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்தே காவல்துறையினர் தாக்கப்பட்டனர்; கொந்தளிப்பிலிருந்த முஸ்லிம்கள் எதிர்வினையாகக் காவல் நிலையத்தைத் தாக்கியதோடு ஐவரைக் கொன்றனர். பெருநாள் திடலிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அந்தக் காவல் நிலையம் இருந்தது. பெருநாள் திடலிலிருந்து அதை நோக்கிக் கூட்டமாகச் சென்றவர்கள் வழியிலிருந்த இந்துக்களின் வீடுகளுக்கும் கடைகளுக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நியாயமாக அவதானிக்கும் யாரும் அக்பர், சஹாபுத்தீன் போன்றோரின் பகுபாய்வை ஏற்றுக்கொள்ளவே செய்வர்.
இந்தப் படுகொலையையும், ஊடகங்களில் இடதுசாரிகளால் அப்பட்டமாக இதற்கு வகுப்புவாதச் சாயம் பூசப்பட்டதையும் நாம் மறந்துவிட்டோம் எனும் உண்மை ஒருபுறமிருக்க, இன்னொரு முக்கியமான அம்சத்தையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். பொதுவாக சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் புரிந்துகொள்ளவேண்டியது, காங்கிரஸும் அதன் இடதுசாரிக் கூட்டாளிகளும் மதச்சார்பற்றோராக இல்லை (அவர்கள் அவ்வாறு வாதிட்டபோதிலும்) என்பதைத்தான். ஒருபோதும் அவர்கள் அப்படி இருந்ததும் இல்லை.
காங்கிரஸ் ஆட்சியில் மொராதாபாத்தில் போலீஸாரால் கொல்லப்பட்ட அனைவரையும் மற்றொரு பெருநாளின்போதும் நாம் நினைவுகூருவோம். பாஜகவின் பக்கம் மட்டும் கவனம் செலுத்துவது மதச்சார்பற்ற கட்சிகள் எனச் சொல்லப்படுவனவற்றின் குற்றங்களை நமக்கு மறக்கடிப்பதோடு, அது காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்குமே அனுகூலமளிக்கும் என்பதை மறந்துவிடவேண்டாம்.
தமிழாக்கம்: நாகூர் ரிஸ்வான்
மூலம்: Remembering 1980 Moradabad Muslim massacre: A harsh indictment of ‘secular’ and Left politics