“மரணத்திற்குப் பிறகான வாழ்வு என்பது மதம் உருவாக்கிய கட்டுக்கதை!”
[Daniel Haqiqatjou எழுதிய Religion Invented the Afterlife என்ற பதிவின் தமிழாக்கத்தைக் கீழே தருகிறோம்]
மறுமை வாழ்வு (சுவர்க்கம்-நரகம்) என்பது மனிதனை மரணம் குறித்த அச்சத்திலிருந்து ஆறுதல்படுத்துவதற்கென மதம் உருவாக்கிய வெறும் கட்டுக்கதையா?
மரணம் குறித்த அச்சத்திலிருந்து பலவீனமான மனம்படைத்த மனிதர்களை ஆறுதல்படுத்துவதற்காக மதம் புனைந்துருவாக்கிய ஒன்றுதான் மறுமைவாழ்வு என்பதாகக் கடந்தகால, நிகழ்கால ஐயுறவுவாதிகள் பலரும் கூறிவருகின்றனர். ஆனால், உண்மை இதற்கு நேர்மாற்றமானது.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நிலைத்த பின்விளைவுகள் முடிவற்ற காலம் வரை நீடித்திருக்கும் என்கிற கருத்துதான் உண்மையில் அச்சம் தருவது. அது ‘நம் வாழ்வின் அர்த்தம் என்ன?’, ‘அதன் நோக்கம் என்ன?’ போன்ற கேள்விகளின்பால் கவனத்தைக் குவிக்கும்படி நம்மை வற்புறுத்துவதுடன், நாம் செய்யும் செயல்கள் யாவற்றையும் குறித்து நாளை மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதால் நாம் நம்முடைய செயல்களை மிகக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அது நம்மை வற்புறுத்துகிறது.
இதற்கு மாற்றமாக, ‘நாம் சராசரியாக எழுபதாண்டுகள் வாழ்ந்து மரித்து விடுவோம்; நம்முடைய செயல்பாடுகள் எத்துணை சுயநலமிக்கவையாக, நாசகரமானவையாக, ஒழுக்கக்கேடானவையாக இருந்த போதிலும், நமது செயல்களுக்கென்று பின்விளைவுகள் இருக்கும் பட்சத்தில் அவையும் கூட நம்மை ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு அப்பால் பாதிக்கப் போவதில்லை; ‘வாழ்க்கையை முழுமையாக வாழ்வது’ மட்டுமே நமது வாழ்வின் நோக்கம்; அதாவது, எந்தவொரு ஆழமான நோக்கமும் இன்றி வெறுமனே இன்ப நுகர்ச்சிக்காக வேண்டி ஆடிக் களித்துக் கிடப்பது மட்டுமே நம் வாழ்வின் நோக்கம்’ என்கிற நம்பிக்கைதான் மனதுக்கு மிகுந்த ஆறுதல் தருவதாக அமையும்.
மக்கள் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கைதான் அடிப்படையேதுமற்ற கற்பனையே தவிர, மறுமை வாழ்வு அவ்வாறானதல்ல.
இதற்கான தெளிவான உவமையாக ஒரு ஆரம்பப் பள்ளியைச் சொல்லலாம்.
இறுதித் தேர்வென்று ஒன்று இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். எனினும், ஒரு மாணவன் மட்டும் தேர்வு பற்றிய சிந்தனையையே தனது நினைவை விட்டுத் தூக்கியெறிந்து விடுவதாக வைத்துக் கொள்வோம். வந்தேதீரக் கூடிய ஒன்றை (தேர்வை) ஏற்கமறுக்கும் அந்த மாணவன், கல்வியாண்டின் அப்பருவத்தை மிகவும் மகிழ்ச்சிகரமாக, நண்பர்களோடு சேர்ந்து ஊர்சுற்றிக் கொண்டும், நள்ளிரவு அரட்டைகள் அடித்துக் கொண்டும் விட்டேத்தியாகச் செலவிடுவான். படிப்பதில் தமது நேரத்தைச் செலவிடும் மற்ற மாணவர்களைப் பார்த்து ஏளனம் செய்வதோடு, “சுமைகளைக் களைந்து”, “கொஞ்சம் கேளிக்கைகளில் களித்திருக்கலாம்” எனத் தனது வகுப்புத் தோழர்களுக்கு அவன் அறிவுரை சொல்லவும் கூட முயற்சிகள் மேற்கொள்வான். தேர்வு பற்றியோ, அதில் தோல்வியடைந்தால் அந்தக் கல்விப் பருவத்தின் பிறகான தனது வாழ்க்கையை அது எந்த வகையில் பாதிக்கும் என்பது பற்றியோ அவன் சிந்திக்கக் கூட விரும்ப மாட்டான்.
உண்மையை ஏற்க மறுப்பதும், தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வதும் சுலபமான உளவியல் எதிர்வினை. இதற்கு மாறாக, வந்தே தீரக்கூடிய ஒன்றை உணர்ந்து ஏற்று, அதற்காகத் தம்மை தயார் செய்துகொள்பவர்கள்தான் உண்மையில் எதார்த்தவாதிகள்.
(தமிழில்: ஷான் நவாஸ்)