காணொளிகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்மாயில் ஹனிய்யா கொல்லப்படக் காரணம் என்ன?

Loading

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட செய்தி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 10 மாதத்துக்குள் இஸ்மாயில் ஹனிய்யாவின் குடும்ப உறுப்பினர்கள் 60 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்கூட ஃகஸ்ஸாவில் இருந்த அவரின் மூன்று மகன்களைக் கொன்றது இஸ்ரேல்.

இப்போது இஸ்மாயில் ஹனிய்யா ஷஹீதாகியிருக்கிறார். இதற்குக் காரணம் என்னவென்று பலருக்கும் கேள்வி இருக்கும். குறிப்பாக இதற்கு 4 காரணங்களைச் சொல்லலாம்.

முதல் காரணம்: ஃகஸ்ஸாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை இல்லாமல் ஆக்குவது.

ஃகஸ்ஸாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் வழிகளையும் இஸ்ரேல் முழுமையாக இல்லாமல் செய்ய முயற்சிக்கிறது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு முயற்சிக்கிறார். இஸ்மாயில் ஹனிய்யா போர் நிறுத்தப் பேச்சு வார்த்தையில் முன்னணி வகித்தவர். ஃபலஸ்தீனர்கள் சார்பாக அவர் போர் நிறுத்தம் கொண்டுவர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

அமைதியை ஏற்படுத்துவதற்கான சரியான திசையில் அவருடைய நகர்வு இருந்தது. அதனால்தான் அவர் இப்போது கொல்லப்பட்டிருக்கிறார். இவரைப் போன்ற முக்கியத் தலைவர்களைக் கொல்வது மூலமாகப் பேச்சு வார்த்தை என்ற ஒரு வாய்ப்பையே இல்லாமல் ஆக்க நெதன்யாஹு நினைக்கிறார்.

இரண்டாவது காரணம்: அந்த மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் ஒரு பெரிய போரை ஏற்படுத்த இஸ்ரேல் முயல்கிறது.

ஃகஸ்ஸாவில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் போர் நடவடிக்கை இஸ்ரேலுக்கு எதையுமே பெற்றுத் தரவில்லை என்பதே உண்மை. குழந்தைகள், பெண்கள் எனப் பொதுமக்களைக் கொன்று குவிப்பதை தவிர இஸ்ரேல் எதையுமே சாதிக்கவில்லை. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அசிங்கப்பட்டுத்தான் நிற்கின்றது இஸ்ரேல். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உலகம் முழுக்க பொதுக் கருத்து, மக்கள் கருத்து இஸ்ரேலுக்கு எதிராக மாறிவிட்டது.

இப்படியான சூழலில்தான் போரை நிறுத்தாமல் நீட்டிக்க நெதன்யாஹு விரும்புகிறார். அதுதான் அவருடைய அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்ற உதவும் என நம்புகிறார். இதனால்தான் ஈரான், லெபனான், சிரியா போன்ற அண்டை நாடுகளைச் சீண்டிக்கொண்டே இருக்கிறார். அவர்கள் முழுமையான ஒரு போரைத் தொடங்கினால் அமெரிக்காவை போரில் ஈடுபடுத்தலாம் என்பது நெதன்யாஹுவின் விருப்பம்.

மூன்றாவது காரணம்: ஃபலஸ்தீனர்கள் ஒன்றுபடுவதைத் தடுப்பது.

ஃபலஸ்தீனில் பல இயக்கங்கள் இருக்கின்றன. அவற்றுக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இந்தச் சூழலில், சீனா முன்னிலையில் இந்த இயக்கங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தும் ஓர் ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. நீண்ட காலமாக எதிரும் புதிருமாக இருந்த ஹமாஸ், ஃபத்தாஹ்  உட்பட 14 ஃபலஸ்தீன இயக்கங்கள் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். ஃகஸ்ஸா போரைத் தொடர்ந்து இவ்வாறாக ஒன்றுபட அதிகமான தேவை இருந்த பின்னணியில்  இது நடந்தது.

இது இஸ்ரேலுக்குக் கடுமையான அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சீனா முன்னிலையில் இந்த அமைதி ஒப்பந்தம் நடந்ததால் அமெரிக்கா கலக்கமடைந்திருக்கிறது. இதை முறியடிக்கும்  ஒரு முயற்சியாகவே ஹனிய்யா கொல்லப்பட்டிருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

நான்காவது காரணம் : இஸ்மாயில் ஹனிய்யாவை தண்டிப்பது.

ஆம், ஹனிய்யா ஃபலஸ்தீனர்களின் பொறுமைக்கும், நிலைகுலையாமைக்கும் ஓர் அடையாளமாக இருந்தவர். அவரின் தங்கைகள், மகன்கள், பேரப் பிள்ளைகள், உறவினர்கள் என சுமார் 60 குடும்ப உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்பும் அவர் அசராமல் விடுதலைப் போராட்டத்தில் முன்னணி வகித்தார்.

அவர் நினைத்திருந்தால் தன் குடும்பத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பி பாதுகாப்பு அளித்திருக்க முடியும். ஆனால் அவ்வாறாகச் செய்யாமல் ஃபலஸ்தீன மண்ணில் தன் மக்களோடு தன் குடும்பம் இருப்பதையே விரும்பினார். எனவேதான் ஃபலஸ்தீன பொதுமக்கள் அவரைத் தங்களின் உயர்ந்த தலைவராகக் கருதினார்கள். இதுதான் அவர் குறிவைக்கப்படக் நான்காவது காரணம்.

ஐந்தாவது காரணம்: இஸ்ரேல் நாட்டிற்குள் பிரதமர் நெதன்யாஹுவிற்கு ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து தப்பிப்பது.

இஸ்ரேலுக்குள் மிகப் பெரிய குழப்பமும் கலகமும் நடைபெற்று வருகிறது. பெரும் திரளான மக்கள் பிரதமர் நெதன்யாஹு பதவி விலக வேண்டும் எனப் போராட்டம் நடத்துகின்றனர். ஃகஸ்ஸா மீதான போர் தோல்விக்கும், பணையக் கைதிகளை மீட்க முடியாமல் போனதற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என இஸ்ரேலியர்கள் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்துகின்றனர். 

இதுபோக, ராணுவத்திற்கும் காவல்துறையினருக்கும் முரண்பாடு. காவல்துறையினருக்கும் அங்குள்ள போராட்டக்காரர்களுக்கும் முரண்பாடு என நிறைய குளறுபடிகள் அங்கே போய்க்கொண்டுள்ளன. இதையெல்லாம் திசை திருப்புவதற்காகவே ஹமாஸ் தலைவர்களை இலக்காக்கிக் கொலை செய்கிறது இஸ்ரேல். இதற்கு முன்னர் சாலிஹ் அல்அரூரி ஷஹீதாக்கப்பட்டார். இப்போது இஸ்மாயில் ஹனிய்யா ஷஹீதாக்கப்பட்டிருக்கிறார்.

Related posts

Leave a Comment