கலவர பூமியாக மாறிய பிரிட்டன்
ஜூலை மாதம் இறுதியிலிருந்து இங்கிலாந்தின் பல பகுதிகளில் வெள்ளை இனவாதிகள் மிகப் பெரிய கலவரத்தை புலம்பெயர்ந்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கொண்டிருக்கிறார்கள். அதில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், பள்ளிவாசல்கள், வாகனங்கள், தங்கும் விடுதிகள் எனப் பலவும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினரும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
இதுவரை பல நூற்றுக்கணக்கான கலவரக்காரர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. இனவெறி, இஸ்லாமிய வெறுப்பு, புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான வெறுப்பு, தீவிர தேசியவாதம் போன்றவையே இன்றைக்கு பிரிட்டன் பற்றியெரியக் காரணம்.
கலவரம் தொடங்கியது எப்படி?
சரியாக ஜுலை 29ஆம் தேதி திங்கட்கிழமை இங்கிலாந்தில் உள்ள சவுத்போர்ட் பகுதியில் ஒரு கோரச் சம்பவம் அரங்கேறியது. அதுவே இந்தக் கலவரத்தின் தொடக்கப்புள்ளி. ஒரு 17 வயது சிறுவன் மூன்று குழந்தைகளைக் கத்தியால் குத்திக் கொன்றான். அதேபோல் இன்னும் 8 குழந்தைங்கள் உட்பட 10 பேரைக் கத்தியால் தாக்கினான். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் ஒரு நடனப் பயிற்சி வகுப்பு நடந்தது. அதில்தான் அந்தச் சிறுவன் இப்படியொரு கொடூரத்தை நிகழ்த்தியிருக்கிறான். ஏன் இவ்வாறு செய்தான் என்ற விளக்கம் இதுவரை காவல்துறையினர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இதைச் செய்தது ஒரு முஸ்லிம் என்றும், அவன் பெயர் அலி அஷ்ஷகாதி என்றும், அவன் ஒரு படகு மூலம் நாட்டுக்குள் குடியேறியவன் என்றும் பொய்ச் செய்தி தீவிர வலதுசாரிகளால் பரப்பப்பட்டது. இது சமூக ஊடகம் முதல் மைய நீரோட்ட ஊடகங்கள்வரை பரவியது.
குறிப்பாக டாமி ராபின்சன் என்ற ஓர் இனவாதி, இஸ்ரேலிய ஆதரவாளர், இஸ்லாமிய வெறுப்பாளர் சமூக ஊடகத்தில் இதைப் பரப்பினார். அதைத் தொடர்ந்து புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசினார். அதன் விளைவுதான் இன்றைக்கு இங்கிலாந்து பற்றியெரிகிறது.
டாமி ராபின்சனுக்குப் பின்னால் ஒரு மிகப் பெரிய இஸ்ரேலிய, ஸியோனிச வலைப்பின்னல் இருப்பதாகவும், ஸியோனிஸ்டுகளில் ஒரு சாரார் இங்கிலாந்தில் கலவரத்தை ஊக்குவிப்பதாகவும் சொல்லப்படுகிறது. டாமி ராபின்சனின் கலவரத்தைத் தூண்டும் விஷமக் கருத்துகளுக்கு வலுச்சேர்க்கும் விதமாக ஆன்ட்ரூ டேட் என்ற சர்ச்சைக்குரிய நபர் கருத்து தெரிவித்தார். அதுவும் சமூக ஊடகத்தில் காட்டுத்தீயாய் பரவியது.
அதில் அவர் கொலை செய்தது சட்ட விரோதக் குடியேறி என்று பதிவுசெய்திருந்தார். இனவாதிகளின் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்ற தன்மையில் அவருடைய வீடியோ இருக்கிறது. உலகப் பணக்காரரான இலான் மஸ்க் இங்கிலாந்துக் கலவரம் பற்றிய ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார் அதில் ‘Civil War’ தவிர்க்க இயலாதது என்ற கருத்தைச் சொல்லியிருந்தார். இது இங்கிலாந்து அரசால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.
இங்கிலாந்து அமைச்சர் ஹைதி அலெக்சாண்டர் எலான் மஸ்கின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், “பொறுப்போடு நடந்துகொள்ளுங்கள்” என அறிவுரை வழங்கினார். அது மட்டுமல்லாமல், ஒரு கலவரத்தை ‘சிவில் யுத்தம்’ என்று அழைப்பது நியாயமற்றது என்றும் கூறினார்.
தமிழ் பொக்கிஷம் என்ற யூடியூப் சேனலை நடத்தும் ஒருவர் Civil war என்ற தலைப்பில் இங்கிலாந்துக் கலவரம் தொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் இங்கிலாந்து முஸ்லிம் நாடாக மாறப் போவதாகவும், அதற்கு எதிராகவே இப்படியான ஒரு போராட்டம் அங்கு நடப்பதாகவும் அபத்தமாக வாதிடுகிறார். வெள்ளைக்கார சங்கிக்கு தமிழ்நாட்டு சங்கி முட்டுக்கொடுப்பதில் நமக்கு வியப்பேதுமில்லை. உலகம் முழுவதும் வலதுசாரிகள் சிறுபான்மையினரின் மக்கள்தொகையைக் காட்டி அச்சுறுத்தித்தான் அரசியல் செய்கிறார்கள்.
நான் முன்பு குறிப்பிட்ட டாமி ராபின்சன், ஆன்ட்ரூ டேட் போன்ற நபர்கள் ட்விட்டரில் இருந்து முன்னர் தடை செய்யப்பட்டிருந்தனர். இலான் மஸ்க் இவர்களை மீண்டும் சுதந்திரமாக இயங்க வழிசெய்தார். சமூக ஊடகம் என்பது கலவரத்தைத் தூண்டப் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் அதுசார்ந்த விவாதமும் இன்று இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
டாபி ராபின்சனின் களேபரக் கருத்துகளால் இன்றைக்கு பிரிட்டனே பற்றியெரிகிறது. ஆனால் இதற்குக் காரணமான அவர் இப்போது பிரிட்டனை விட்டு வெளியேறி மகிழ்ச்சியாக சைப்ரஸ் நாட்டிலிருந்தபடி நிழற்படங்களைப் பகிர்ந்துகொண்டு இருக்கிறார். இவ்வளவு பெரிய கலவரத்தைத் தூண்டுவிட்டுவிட்டு அவர் அதற்கான எந்த ஒரு பின்விளைவையும் சந்திக்காமல் இருக்கிறார். எனவே, பிரிட்டன் அரசு நினைத்தால் அவரைக் கைது செய்ய முடியும் என்றும், அவரைக் கைது செய்து இங்கிலாந்திற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
பலியாடுகளாக ஆக்கப்பட்ட முஸ்லிம்கள்!
சவுத்போர்ட் பகுதியில் குழந்தைகளைக் கொன்றவனின் உண்மையான பெயர் ஆக்சல் ருடாகுபனா. இவன் ருவாண்டா வம்சாவளியைச் சார்ந்தவன். அவனுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கொன்றது 17 வயது சிறுவன் என்பதால் பிரிட்டன் சட்டப்படி அவனுடைய உண்மையான பெயரைப் பத்திரிகைகள் வெளியிடக் கூடாது.
அதனால்தான் தொடக்கத்தில் அவனுடைய பெயர் வெளிவராமல் இருந்தது. இதைப் பயன்படுத்திக்கொண்ட வெள்ளை இனவாதிகள் அந்தச் சிறுவனைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பி ஒரு பெரும் கலவரத்தையே ஏற்படுத்திவிட்டனர். அதனால் நீதிமன்றமே அந்தப் சிறுவனின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த அனுமதி வழங்கியது.
ஆனாலும் கலவரக்காரர்கள் ஓயாமல் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையிலையே பிரிட்டனை வைத்து இருக்கின்றனர். கொல்லப்பட்ட, படுகாயமடைந்த குழந்தைகள் குறித்தெல்லாம் இவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது என்பது தெளிவு. கலவரம் செய்ய வேண்டும் என்ற சங்கி மனநிலைதான் அவர்களிடம் உள்ளது. இவ்வாறு கொல்லப்பட்ட அப்பாவி குழந்தைகளுடைய உயிரிழப்பை தமது அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்துவது மிகவும் இழிவான ஒரு செயல். இது அந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதியும்கூட.
கொலைச் சம்பவம் நடந்தது 29ஆம் தேதி. இந்த வெள்ளை இனவாதிகள் 30ஆம் தேதியே, அதாவது மறுநாளே தங்களுடைய ஆதரவாளர்கள் அனைவரையும் திரட்டிக்கொண்டு போராட்டம் எனக் கிளம்பிவிட்டனர். ஒரு பள்ளிவாசல் முன் திரண்டு தாக்குதல் நடத்தி அந்தப் பகுதியிலுள்ள கடைகளையெல்லாம் அடித்து உடைத்தனர். இவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை.
இது நடந்து முடிந்த மறுநாள் முதல் இனவாதிகளுடைய போராட்டம் மற்ற பகுதிகளுக்கும் தீயாய்ப் பரவியது. அனைத்து இடங்களிலும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இங்கிலாந்து வீதிகளில் “இங்கே பிற நாட்டவர்கள் குடியேற அனுமதிக்க மாட்டோம்” என்றெல்லாம் இந்த வலதுசாரி கலவரக்காரர்கள் முழங்கினர். இன்னும் பல இனவாத முழக்கங்களையும் எழுப்பினர்.
ஆகஸ்ட் 1 அன்று எந்தப் போராட்டமும் நடக்கவில்லை. ஆனால் அடுத்தடுத்த நாள்களில் பல பள்ளிவாசல்கள் இலக்காக்கப்பட்டன. ஒரு காவல் நிலையம் சூறையாடப்பட்டது. ஒரு கார் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இப்படியான சூழலில் இனவாதிகளுக்கு எதிரான போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் கலவரக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ரோதர்ஹம் பகுதியில் இங்கிலாந்திற்குப் புகலிடம் தேடி வந்தவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் இனவாதிகளால் தாக்கப்பட்டது.
13 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த லண்டன் கலவரத்தை அடுத்து இப்போதுதான் இப்படியான ஒரு பெரிய கலவரம் பிரிட்டனில் ஏற்பட்டுள்ளது. பிரதமர் கியர் ஸ்டாமர் கலவரக்காரர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் பாயும் எனத் தெரிவித்தார். இங்கு நடப்பது ஒரு போராட்டமே இல்லை, இது வலதுசாரி குண்டர்களால் நடத்தப்படும் கலவரம் என்றும் வன்மையாகச் சாடினார்.
புலம்பெயர்ந்தவர்கள் மீதான வெறுப்பு!
பொதுவாகவே மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான ஒரு எதிர்மறை மனநிலை இருக்கிறது. நாட்டின் கலாச்சாரம், பொருளாதாரம் என அனைத்தையும் இவர்கள் அழிக்கிறார்கள் என்று இனவாதிகள் கருதுகின்றனர். இதையே தம் இனவாதத்திற்கான நியாயவாதமாகவும் அவர்கள் முன்வைக்கின்றனர்.
பிரிட்டனில் பொருளாதாரப் பிரச்னைகள், வேலையின்மை போன்றவை ஒரு பெரும் சிக்கல். அந்த நிலை உருவாகக் காரணம் புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்கள், ஆப்பிரிக்கர்கள் போன்றவர்கள்தாம் என்ற பொய்யான கருத்தை அவர்கள் பரப்புகின்றனர். உண்மையைச் சொன்னால், இனவாதிகளின் வெறுப்பு புலம்பெயர்ந்தோர் சம்பந்தப்பட்டது மட்டுமில்லை. இவர்களிடம் நிறவெறி, மதவெறியென அனைத்தும் ஒருசேர இருக்கிறது.
பிரிட்டன் போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் ஓர் அத்தியாவசியத் தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொழிலாளர்கள், கல்வியாளர்கள், இன்னபிற ஆற்றலுடையவர்கள் தேவை. முக்கியமாக இளைஞர்கள் தேவை.
ஆனால், பிரிட்டன் போன்ற நாடுகளில் வயதானவர்கள் எண்ணிக்கைதான் அதிகம். இவ்வாறான சூழலில் புலப்பெயர்ந்த இளைஞர்கள் மூலமாக பிரிட்டன் பல வகையில் செழிப்படைகிறது. புலம்பெயர்ந்தோர் அரசுக்கு வரி செலுத்துகின்றனர். அந்த வரியில் ஒரு பகுதி முதியோர் நலனுக்காக ஒதுக்கப்படுகிறது. கல்வி, விளையாட்டு, கலாச்சாரம் என அனைத்துக்கும் புலம்பெயர்ந்தோர் பங்களிக்கின்றனர்.
மிக முக்கியமான கேள்வி என்னவென்றால் பிரிட்டன், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் மற்ற மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்களை, பொருளாதாரத்தை பெருமளவில் சுரண்டிக் கொழுத்துள்ளன. மக்களை அடிமைப்படுத்தியுள்ளன. மிகப் பெரிய நாசத்தையும் போரையும் மற்ற நாடுகளில் ஏற்படுத்தியிருக்கின்றன. இப்படியான சூழலில், மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வரக்கூடிய அகதிகள், புலம்பெயர்ந்தோர் மட்டும் ஏன் அவற்றுக்கு கசக்கின்றர் என்ற கேள்வி எழுகிறது.
பிரிட்டனின் வளர்ச்சியில் ஆப்பிரிக்கர்களும் முஸ்லிம்களும் மிகப் பெரிய அளவில் பங்காற்றி இருக்கின்றனர். இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, அங்கேயே பல தலைமுறையாக வாழ்ந்துவரும் கறுப்பினத்தவர்களையும் பழுப்பு நிறத்தவர்களையும் எதிரியாகக் கட்டமைப்பது அபத்தமானது.
மேற்குலகிலும் மற்ற பல நாடுகளிலும் வலதுசாரித் தீவிரவாதம்தான் உண்மையான அச்சுறுத்தலாக உள்ளது. அரசியல், ஊடகம் என அனைத்துத் தளங்களிலும் இவர்கள்தாம் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இளைஞர்களை மூளைச் சலவை செய்து வன்முறையைத் தூண்டுகின்றனர். இதற்கு எதிராக உலகம் முழுவதும் பலமான குரல் எழ வேண்டும். அந்தந்த நாடுகளில் இருக்கும் அரசுகள் வலதுசாரித் தீவிரவாதத்தை தனிக் கவனமெடுத்து முறியடிக்க வேண்டும். இனவாதத்தையும், இஸ்லாமிய வெறுப்பையும் முற்றாக வேரறுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த நாடுகள் ‘உண்மையான வளர்ச்சி’யை நோக்கிச் செல்ல முடியும்.