Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிறை சீர்திருத்தங்களும் சில அபத்தங்களும்

Loading

உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்றக் குழு சிறைச்சாலைகளின் நிலை மற்றும் சீர்திருத்தங்கள்குறித்த தனது பரிந்துரைகளை (Prisons: Conditions, Infrastructure and Reforms) சமீபத்தில் வெளியிட்டது. இந்தியச் சிறைச்சாலைகளில் உள்ள நெருக்கடி, மூன்றாம் பாலினச் சிறைவாசிகள், பெண் சிறைவாசிகள் உள்ளிட்ட விவகாரங்கள்குறித்து இந்த அறிக்கை பேசுகிறது. சிறை சீர்திருத்தங்கள் தொடர்பாக சில மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ள இக்குழு சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரிஜ் லால் தலைமையிலான 31 நபர்கள் குழு இந்த பரிந்துரைகளை வழங்கியுள்ளது. பிரிஜ் லால் உத்திரப் பிரதேச காவல்துறை டி.ஜி.பி-ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 14, 2020 அன்று தனது பணிகளைத் தொடங்கிய இக்குழு, ஆறு அமர்வுகளையும் சிறை அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளையும் தொடர்ந்து சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

மேலும், அஸ்ஸாம் மற்றும் தமிழ்நாடு சிறைத்துறை மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகளை ‘சிறந்த நடவடிக்கைகள்’ என்றும் இக்குழு சான்றிதழ் வழங்கியுள்ளது. இம்மாநிலங்களில் உள்ள சிறைவாசிகளுக்கு தனிமை, மன அழுத்தத்தைப் போக்க அவர்களது குடும்பத்தினரை நேரடியாகச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு (meet and touch) வழங்கப்பட்டுள்ளதை இக்குழு பாராட்டியுள்ளது. பெரும்பான்மையான சிறைச்சாலைகளில் சிறைவாசிகள் தங்களது குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் சந்திப்பில், கண்ணாடி தடுப்புகளால் தடுக்கப்பட்டு இன்டர்காம் மூலம் அவர்கள் உரையாடும் நிலையில் தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் இந்த முறையை இக்குழு பாராட்டியுள்ளது.

அதேபோல் அஸ்ஸாம் மாநிலத்தில் சிறைவாசிகளின் குழந்தைகள், பள்ளி அல்லது கல்லூரி தேர்வுகளை எழுதுவதற்கு முன்பு அல்லது வேலைகளுக்கான நேர்முகத் தேர்வுக்குச் செல்வதற்கு முன்பு சிறைக்குச் சென்று தங்களின் பெற்றோரை நேரடியாகச் சந்தித்து ஆசீர்வாதம்பெறும் ‘ஆசிர்வாத் அனுஸ்தான்’ திட்டத்தையும் இக்குழு வரவேற்றுள்ளது.

குடும்பத்தினருடன் வீடியோ தொலைபேசி அழைப்புகள்மூலம் தொடர்புகொள்ளும் திட்டம் ஏப்ரல் மாதம் ஐந்து ‘பெண்கள் சிறைச்சாலை’களில் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டது. மாதம் பத்து முறை இந்த வாய்ப்பு வழங்கப்படும். ஒவ்வொரு முறையும் 12 நிமிடங்கள் சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தினருடன் பேசலாம். இந்தத் திட்டம் ஏனைய சிறைச்சாலைகளிலும் பின்னர் நடைமுறைபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற சில சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில்தான் நாடாளுமன்றக் குழு தனது பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் ‘விசாரணைக் கைதிகள்’ என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதற்கு முன் வெளிவந்துள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விசாரணை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் ‘விசாரணைக் கைதிகள்’ என்று அழைக்கப்படுகின்றனர். குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று நிருபிக்கப்படாமல் பல்லாண்டுகள் விசாரணைக் கைதிகளாகவே பலர் நமது நாட்டின் சிறைச்சாலைகளில் உள்ளனர் என்பது கசப்பான உண்மை.

இந்தியச் சிறைச்சாலைகளின் நிலைகுறித்து தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் ஒவ்வொரு ஆண்டும் விரிவான அறிக்கையை வெளியிடுகிறது. டிசம்பர் 31, 2021 கணக்கின்படி இந்தியச் சிறைச்சாலைகளில் 4,27,165 சிறைவாசிகள் உள்ளதாகவும் மொத்த சிறைவாசிகளின் எண்ணிக்கையில் இது 77.1 சதவிகிதம் எனவும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இவர்களில் 11,490 பேர் ஐந்து வருடங்களுக்கும் அதிகமாக விசாரணை கைதிகளாக உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள சிறைவாசிகளில் 65 சதவிகித நபர்கள் ‘விசாரணைக் கைதிகள்’ ஆவர்.

விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பே சிறைச்சாலைகளில் இடநெருக்கடிக்கு முக்கியக் காரணமாகும். இந்தியாவில் மொத்தமுள்ள 1319 சிறைச்சாலைகளின் கொள்ளளவு 4,25,609. ஆனால் டிசம்பர் 31, 2021 கணக்கின்படி சிறைச்சாலைகளில் மொத்தமாக 5,54,034 சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மிக மோசமான சுகாதாரமின்மைக்கும் தூக்கமின்மைக்கும் இது வழிவகுப்பதாக குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தர்காண்ட் (185.0), உத்திரப் பிரதேசம் (184.8), சிக்கிம் (166.9), மத்தியப் பிரதேசம் (164.1), மேகாலயா (160.1), மகாராஷ்டிரா (148.8) மற்றும் சட்டீஸ்கர் (148.6) மாநிலச் சிறைச்சாலைகளில் நெருக்கடி அதிகமாக உள்ளது. யூனியன் பிரதேசங்களில் தலைநகர் டெல்லி (182.5) முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சிறைச்சாலைகளின் கொள்ளளவு 23,592 ஆக உள்ள நிலையில் 18,015 சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இது 76.4 சதவிகிதமாகும்.

மூன்றாம் பாலினத்தினருக்கு தனியான சிறை அறைகள், யூனியன் பிரதேசங்களில் சிறை அதிகாரிகளுக்கென தனிப் பிரிவை உருவாக்குவது, பெண் சிறைவாசிகள் தங்களின் குழந்தைகளுடன் 12 வயதுவரை இருக்க அனுமதிப்பது உள்ளிட்ட பரிந்துரைகளை இக்குழு வழங்கியுள்ளது. சிறைச்சாலைகளில் நெருக்கடியைக் குறைப்பதற்காக நாடாளுமன்றக் குழு வழங்கியுள்ள சில பரிந்துரைகள் விமர்சனத்திற்குரியதாக உள்ளது.

விசாரணைக் கைதிகளுக்கு ஜாமீன் வழங்கி சிறைச்சாலையில் நெருக்கடியைக் குறைக்கும் முகமாக, ஜாமீனில் செல்பவர்களின் மணிக்கட்டுகளில் பிரேஸ்லெட் போன்ற கருவியை பொருத்தி அதன்மூலம் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம் என்று இக்குழு பரிந்துரை செய்துள்ளது. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குறைந்தபட்ச விலையில் இவற்றைத் தயாரிக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளது.

24 மணி நேரமும் நிரந்தரக் கண்காணிப்பில் இருக்கும் வகையிலேயே சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ‘பனோப்டிகன்’ என்று சொல்லப்படும் அரைவட்ட வடிவிலேயே சிறைச்சாலைகள் பெரும்பாலும் அமைக்கப்பட்டன. ஒரு கண்காணிப்பு கோபுரத்திலிருந்து அனைத்து செல்களையும் பார்க்கும் வகையில் சிறை கூடங்கள் நிர்மானம் செய்யப்பட்டன. கண்காணிப்பு கோபுரத்தில் யாரும் இல்லை என்றாலும் ‘நாம் கண்காணிக்கப்படுகிறோம்’ என்ற உணர்வை சிறைவாசிகளிடம் இவை ஏற்படுத்திவிட்டன.

இன்று இதே வேலையை கண்காணிப்பு கேமராக்கள் சிறைச்சாலைகளில் மட்டுமின்றி வெளியிடங்களிலும் செய்கின்றன. இந்த அரைவட்ட வடிவிலேயே பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளதை சற்று யோசித்தால் நாம் விளங்கிக் கொள்ளலாம். சிறைவாசிகள் மட்டுமின்றி வெளி நபர்களும்கூட இன்று 24 மணி நேர கண்காணிப்புக்கு ஆளாக்கப்பட்டுவிட்டனர் என்பது வேறு விஷயம்.

சிறைவாசிகள் பிரச்சினைக்கு மீண்டும் வருவோம். கண்காணிப்பு பிரேஸ்லெட்டை அணிந்திருக்கும் நபரை எப்போதும் அதிகாரிகள் தங்களின் கண்காணிப்பிலேயே வைத்திருக்கலாம். நாம் நித்தமும் கண்காணிப்பிலேயே இருக்கின்றோம் என்ற உணர்வை சம்பந்தப்பட்ட நபருக்கு இது ஏற்படுத்திவிடும். இதனால் அவரின் தனி உரிமையும் (பிரைவசி) சுதந்திரமும் முற்றிலுமாக பறிக்கப்படும். ஜாமீன் பெற்று செல்லும் நபர்கள் தங்களின் மொபைல் ஃபோன்களில் லொகேஷனை எப்போதும் ‘ஆன்’ செய்து வைத்திருக்க வேண்டும் என்று ஜாமீன் உத்தரவுகளை பிறப்பிக்கும் அளவிற்கு கண்காணிப்பு இன்று வலுப்பெற்றுவிட்டது.

சிறைவாசிகளின் உரிமையை மறுக்கும் விதமாக இந்தப் பரிந்துரை அமைந்துள்ளது என்றால் இதைவிட மோசமான மற்றொரு பரிந்துரையும் இக்குழு செய்துள்ளது. சிறைச்சாலைகளின் நெருக்கடியைக் குறைப்பதற்காக நெருக்கடி குறைவாக உள்ள சிறைகளுக்கு கைதிகளை மாற்றலாம் என்பதே அந்த ஆலோசனை. மாற்றப்படும் இந்த சிறைச்சாலை அதே மாநிலத்தில் அல்லது வேறு மாநிலத்தில்கூட இருக்கலாம். அதாவது, உத்தர்காண்ட், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற நெருக்கடி நிறைந்த சிறைச்சாலைகளில் உள்ள சிறைவாசிகள் நெருக்கடி குறைவாக உள்ள தமிழ்நாடு, சண்டிகர், கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு மாற்றப்படலாம்.

வெறும் நெருக்கடியைக் குறைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரை சிறைவாசிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நிலை, அவர்களின் உரிமைகுறித்து கிஞ்சிற்றும் அக்கறை கொள்ளவில்லை. சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் பெரும்பான்மையினர் பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள். அவர்களை வேறு மாநிலங்களுக்கு மாற்றுவது குடும்பத்தினருடனான அவர்களின் சந்திப்பை முற்றிலும் இல்லாததாக மாற்றிவிடும்.

மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகம்மது சலீன் 2013இல் வழக்கொன்றில் கைது செய்யப்படுகிறார். ஒரு வழக்கில் விடுதலை செய்யப்படாலும் மேலும் இரண்டு வழக்குகளில் காவல்துறை அவரை குற்றவாளியாகச் சேர்த்ததால், அவர் இப்போதும் விசாரணைக் கைதியாகச் சிறையில் உள்ளார். ஆரம்பத்தில் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது குடும்பத்தினர் அவரை சந்திப்பது வசதியாக இருந்தது. அவரும் பரோலில் வந்து சென்றுள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக 2018இல் அவரின் மனைவி மரணமடைந்தார். தற்போது இரண்டு குழந்தைகளும் இவரின் சகோதரியின் அரவணைப்பில் உள்ளனர்.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் இவர் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டதால், பெங்களூர் பரப்பன அக்ரகார சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு சென்று சந்திப்பதற்கான வசதிகளும் வாய்ப்புகளும் இல்லாததால் 2018இற்கு பிறகு குழந்தைகள் உட்பட யாரும் அவரை இதுவரை சந்திக்கவே இல்லை. இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் நான்கு நபர்களுடன் ஒரே சிறையில் உள்ளார் என்பதே குடும்பத்தினரின் ஒரே ஆறுதலாக இருந்தது.

நிலைமை இவ்வாறு இருக்க சில மாதங்களுக்கு முன் சிறைச்சாலையில் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சினையை காரணமாக வைத்து இவர்கள் ஐந்து பேரையும் ஐந்து வெவ்வேறு சிறைகளுக்கு சிறைத்துறை மாற்றிவிட்டது. மாற்றப்பட்ட அந்தச் சிறைச்சாலை இருக்கும் ஊரின் பெயர்கூட இவர்களுக்குத் தெரியவில்லை. ‘மகாராஷ்டிரா எல்லைக்கு அருகில் இருக்கக்கூடிய ஏதோ ஒரு ஊருக்கு மாற்றியுள்ளார்களாம். பெங்களூரில் இருந்து செல்வதற்கே பல மணி நேரம் ஆகுமாம். ‘பெங்களூரில் இருக்கும்போதே சென்று சந்திக்க முடியாத நாங்கள் இனி அவனை எவ்வாறு சந்திப்போம்?’ என்று ஆதங்கத்துடன் குடும்பத்தினர் கேள்வி எழுப்பினர். தனது மரணத்திற்கு முன் மகனை சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் இருக்கும் பெற்றோர், தாயை இழந்து, ஐந்து வருடங்களாகத் தந்தையைப் பார்க்காமல் பிள்ளைகள், சகோதரனின் நிலையை நினைத்து நிம்மதி இழக்கும் உடன் பிறந்தவர்கள்.

இவற்றையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் வெறும் நெருக்கடியைக் குறைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வழங்கப்படும் பரிந்துரைகளால் எவ்வித உபயோகமும் இருக்கப்போவதில்லை. ‘பிணைதான் சட்டம், சிறை என்பது விதிவிலக்கு’ (Bail is rule, jail is exception) என்று கூறப்பட்டாலும் நடைமுறையில் இதற்கு மாற்றமாகவே இருக்கிறது. ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனையை வழங்கக்கூடிய குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கலாம் என்று சட்டங்கள் தெளிவாகக் கூறும் நிலையில் அதனைப் பின்பற்றாதது சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதற்கு முக்கியக் காரணமாகும்.

நமது நாட்டின் ஜாமீன் நடைமுறைகள் ஏழைகளுக்கு எவ்வாறு பாதகமாக இருக்கிறது என்பதை நீதிபதி பி.என். பகவதி தலைமையிலான அமர்வு ஹூஸைனாரா காத்தூன் எதிர் பீகார் அரசு வழக்கில் (1979) குறிப்பிட்டுள்ளது. இரண்டு ஜாமீன்தாரர்களை காட்ட வேண்டும், அவர்களும் குறிப்பிட்டத் தொகையை ஜாமீனாக காட்ட வேண்டும் என்பதெல்லாம் ஏழைகளுக்குச் சாத்தியமில்லாத விசயம் என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். ஆனால் ஜாமீன் சட்டங்களில் சீர்திருத்தங்கள் ஏதும் செய்யப்படவில்லை.

உள்ளூர் நபரை ஜாமீனாக காட்ட வேண்டும் என்ற நிபந்தனையை மோத்தி ராம் எதிர் மத்தியப் பிரதேச அரசு (1978) வழக்கில் உச்சநீதிமன்றம் வன்மையாகக் கண்டித்திருந்தது. உதாரணமாக, தமிழ்நாட்டை சார்ந்த ஒரு நபர் உத்திரப் பிரதேசத்தில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீன் வழங்கப்படும் பட்சத்தில் அவர் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர்களை ஜாமீனாக காட்ட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுவது. இந்த முறையை உச்சநீதிமன்றம் கண்டித்தபோதும் தற்போதும் இந்த நிபந்தனை சில வழக்குகளில் விதிக்கப்படுகிறது.

ஹத்ராஸ் வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகையாளர் சித்தீக் காப்பனுக்கு ஜாமீன் வழங்கியபோது, அவர் உத்திரப் பிரதேசத்தை சார்ந்த நபரை ஜாமீன்தாரராகக் காட்ட வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. அவரால் இதனை ஏற்பாடு செய்ய முடியாத பட்சத்தில் லக்னோ பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ரூப் ரேகா வர்மா அவருக்கு ஜாமீன் வழங்க முன்வந்தார். ஆனால், இது எத்தனை நபர்களுக்கு சாத்தியம்?

ஜாமீன்குறித்த சட்ட விதிகளை முறையாக பின்பற்றினாலே சிறைச்சாலைகளில் நெருக்கடியைக் குறைக்க முடியும். அதைவிடுத்து, உரிமைகளைப் பறிக்கும் பரிந்துரைகளை நடைமுறைபடுத்துவது விசாரணைக் கைதிகளின் வாழ்க்கையை இன்னும் கேள்விக்குறியாக்கிவிடும்.

துணைநின்றவை:

  1. Draft report on prison reforms: House panel suggests transfer of prisoners from congested jails, Prawesh Lama, Hindustan Times, 24 August 2023.
  2. விசாரணை சிறைவாசிகள் வாழ்வில் ஒரு விடியல், புதிய விடியல், அக்டோபர் 1-15, 2022.
  3. Prison Statistics 2021, Published by National Crime Records Bureau.

Related posts

Leave a Comment