கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அழிவின் விளிம்பில் அடையாளச் சின்னங்கள்

Loading

தமிழக முஸ்லிம்களின் வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது. நீண்ட பாரம்பரியம் மிக்கது. எனினும், தமிழக வரலாற்றுப் பக்கங்களில் இவர்களுக்குரிய இடம் இல்லை. தங்களின் வரலாற்றைப் பதிவு செய்வதிலும் வரலாற்று அடையாளங்களைப் பாதுகாப்பதிலும் இவர்கள் பின்தங்கியுள்ளனர். இச்சமூகத்தின் வரலாற்றை எடுத்துக்கூறும் அடையாளச் சின்னங்கள் பலவும் அழிந்துவிட்டன. அறியாமையாலும் அலட்சியத்தாலும் அழிக்கப்பட்டு வருகின்றன. அழிவின் விளிம்பில் இருக்கும் வரலாற்று அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இஸ்லாமிய அமைப்புகளும் மார்க்க அறிஞர்களும் வரலாற்று ஆர்வலர்களும் சமூக அக்கறை கொண்டவர்களும் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். காலம் தாழ்த்தினால் எதுவும் மிஞ்சாது.

மரத்தின் வேர்கள் மண்ணுக்கு அடியில் இருப்பது போன்று, ஒரு சமுதாயத்தின் வரலாறாக மண்ணுக்கு மேல் தலை உயர்த்தி நிற்கும் அடையாளச் சின்னங்கள் உள்ளன. மரத்தின் வேர்களை அறுத்துவிட்டால் மரம் அழிந்துவிடுவது போன்று, சமுதாயத்தின் வரலாற்றுச் சின்னங்களை அழித்துவிட்டால் அவர்களின் வரலாறும் அழிந்துவிடும்.

தமிழகத்தில் 1000 ஆண்டுகளைக் கடந்து முஸ்லிம்கள் வாழ்ந்துவரும் பல ஊர்கள் உள்ளன. கேரளக்கரையை இஸ்லாம் முதலில் வந்தடைந்த காலகட்டத்துடன் தொடர்புடைய தொன்மையான ஊர்களும் உண்டு. எனினும், இத்தகைய தொன்மையை எடுத்துக்கூறும் பள்ளிவாசல்களும் கல்வெட்டுகளும் இன்னபிற வரலாற்று அடையாளங்களும் ஆவணங்களும் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை என்பது கவலைக்குரியதாகும்.

பள்ளிவாசல்களை விரிவாக்கம் செய்யும்போதும் புனரமைக்கும்போதும் நிர்வாகிகள் பலரும் வரலாற்றுக்கு இழைக்கும் அநீதிகள் ஏராளம். பழமையான பள்ளிவாசல்களை முற்றாக அழித்து புதிய கான்கிரீட் கட்டடத்தை எழுப்புவதும் புனரமைப்பு என்ற பெயரில் பழமையைச் சிதைப்பதும் அரங்கேறி வருகிறது. வரலாற்று அடையாளங்களைத் தகர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறித்து சமுதாயத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால் வரலாற்றுச் சின்னங்களைச் சிதைப்பது தொடர் கதையாகி வருகிறது.

வரலாற்று அடையாளங்களைத் தொலைத்த ஊர்களில் வாழும் தலைமுறையினருக்கு அவர்களின் கடந்த கால வரலாறு தெரிவதில்லை. சில ஊர்களுக்குச் செல்லும்போது அங்குள்ள பள்ளிவாசல்கள் அதன் தொன்மையான வரலாற்றை நினைவுபடுத்தும். கீழக்கரை போன்ற ஊர்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 1000 ஆண்டுகளைக் கடந்து முஸ்லிம்கள் வாழ்ந்துவரும் திருச்சி, மதுரை போன்ற நகரங்களிலுள்ள முஸ்லிம்களின் வரலாற்று அடையாளங்கள் குறித்து எதுவும் சொல்வதற்கில்லை.

கீழக்கரை ஜும்ஆ பள்ளிவாசல் உள்பகுதி.

தென்னிந்திய முஸ்லிம்களின் பண்பாட்டுக் கல்வியின் ஊற்றாக விளங்கிய காயல்பட்டினத்தின் தொன்மையான அடையாளங்கள் பலவும் அழிக்கப்பட்டுவிட்டன. இங்குள்ள மிகப் பழமையான பெரிய குத்பா பள்ளிவாசல் போன்ற பல பள்ளிவாசல்களின் பழமை சிதைக்கப்பட்டுவிட்டது. கல்வெட்டுகளும் மீஸான் கற்களும் அவற்றின் அருமை தெரியாதவர்களால் மண்மறைந்து விட்டன. இதனால் இவ்வூரை நோக்கி வரும் கேரள வரலாற்று ஆய்வாளர்கள் ஏமாற்றமடைகிறார்கள்.

முஸ்லிம்களின் பண்பாட்டு உறைவிடமாகத் திகழும் பள்ளிவாசல்களுக்கு என்று தனிப்பட்ட கட்டடக்கலை எதையும் இஸ்லாம் வரையறுக்கவில்லை. எனவே, அந்தந்த நிலப்பகுதிகளின் மண் சார்ந்தும் மரபு சார்ந்தும் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. குடியிருப்புகளைத் தாங்கள் வாழும் பகுதிகளின் மரபு வழியில் அமைத்துக் கொண்டது போன்று வழிபாட்டுத்தலங்களையும் முஸ்லிம்கள் அமைத்துக் கொண்டார்கள். பாரசீக முகலாய பாணியில் கட்டும் முறை பின்னர் அறிமுகமானதாகும்.

கலைநயமிக்க கட்டடங்களும் கல் தூண்களும் மரவேலைப்பாடுகளும் எல்லோருக்கும் பொதுவானது. குறிப்பிட்ட மதத்திற்குச் சொந்தமானதல்ல. பாரசீக முகலாய கட்டடக்கலையும் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் உரியதல்ல. இக்கட்டடக்கலை இஸ்லாமியக் கட்டடக்கலையாக பெருவளர்ச்சி அடைந்ததால் இந்தப் பாணியில் பள்ளிவாசல்களைக் கட்டுவது எங்கும் பிரபலமாகியுள்ளது.

மரபு சார்ந்து கட்டப்பட்ட பழமையான பள்ளிவாசல்கள் குறித்த எதிரிகளின் பொய்யுரைகளுக்கு அஞ்சி அதன் கலைநயங்களை சிலர் சிதைத்து விடுகின்றனர். இது அறியாமையின் வெளிப்பாடாகும். மரபு சார்ந்த புனரமைப்பையும் விரிவாக்கத்தையும் மேற்கொண்டு அதன் தனித்துவத்தைப் பாதுகாக்க முன்வருவதே அறிவார்ந்த செயலாகும். சூழலுக்கும் உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்காத மரபு வழியிலான புதிய இறையில்லங்களை எழுப்ப முஸ்லிம்கள் இனிவரும் காலங்களில் முன்வரவேண்டும்.

கல்லுப் பள்ளிகளாக அறியப்படும் ஏராளமான பள்ளிவாசல்கள் தமிழக கட்டடக் கலையின் சிறப்பை எடுத்துக்கூறுவதாக உள்ளன. திராவிட கட்டடக்கலை என்று கூறப்படும் இக்கலை அனைவருக்கும் பொதுவானது என்பதால் முஸ்லிம்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். அண்டை மாநிலத்தில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, கேரள கட்டடக்கலையுடன் கூடிய பள்ளிவாசல்கள் எழுப்பப்பட்டு வந்தன. மரவேலைப்பாடுகளுடன் கூடிய பள்ளிவாசல்கள் கேரள வாஸ்து சிற்பக்கலையின் தனித்துவத்தை எடுத்துக்கூறுகின்றன. சீனாவின் பழமையான பள்ளிவாசல்கள் சீன கட்டடக்கலையைப் பிரதிபலிப்பதுபோல் உலகின் பழமையான பள்ளிவாசல்கள் அந்தந்த பகுதிகளின் கலைநயத்திற்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளன.

செங்கற்களாலும் சுண்ணாம்புக் காரையினாலும் ஓடுகள் வேயப்பட்டும் கட்டப்பட்ட உறுதி மிக்க பள்ளிவாசல்கள் மண் சார்ந்தும் மரபு சார்ந்தும் கட்டப்பட்டவையாகும். உட்பள்ளி, வெளிப்பள்ளி, விசாலமான காற்றோட்டத்துடன் கூடிய தாழ்வாரங்கள், திண்ணைகள், பரந்த முற்றங்கள், சுற்றிலும் மரங்கள், குளங்கள் என்று சூழலுக்குப் பங்கம் விளைவிக்காமல் கட்டப்பட்ட உறுதிமிக்க பள்ளிவாசல்களும் மறைந்து கொண்டிருக்கின்றன. விரிவாக்கமும் புனரமைப்பும் தேவைப்படாத உறுதிமிக்க பள்ளிவாசல்கள் நவீனக் கட்டுமானத்தில் மோகம் கொண்டவர்களால் இடிக்கப்பட்டு கான்கிரீட் பள்ளிகளாக மாற்றம் பெற்று வருகின்றன.

திருவல்லிக்கேணி வாலாஜா பள்ளிவாசல்.

கல்லுப் பள்ளிகளில் நச்சுத்தன்மை மிக்க வண்ணம் பூசுவதும் கல் தரைகளில் டைல்ஸ் ஒட்டுவதும் பிரபலமாகி வருகிறது. சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பள்ளிவாசல் வண்ணப் பூச்சுகளால் மூச்சு விட முடியாமல் அதன் தனித்தன்மையை இழந்து நிற்கிறது.

கல் தூண்களில் சிமெண்ட் பூசி மறைப்பதும் கல்வெட்டுகளைச் சிதைப்பதும் தொடர்ந்து வருகிறது. விரிவாக்கம் என்ற பெயரில் குளங்களை மூடிவிடுகிறார்கள். சில ஊர்களின் குளங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் பயனற்றுக் கிடக்கின்றன. குளச்சலிலுள்ள மாலிக் தீனார் பள்ளிவாசலின் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த குளம் பராமரிப்பின்றி கிடந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அதை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட்டார்கள்.

பள்ளிவாசல்களைப் புனரமைக்கும்போது, பாரசீக கட்டட பாணியில் சீரமைக்கும் சிந்தனை ஏற்படுவதால் அதில் குவிமாடங்களையும் மினாராக்களையும் அமைக்க முற்படுகிறார்கள். அவ்வாறு அமைக்க முடியாத இடங்களில் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு புதியதாக அமைக்கப்படுகிறது.

புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பதில் கேரளம் முன்னிலை வகிக்கிறது. கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் பெற்றுள்ளதால் புராதன சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அங்கு அதிகரித்து வருகிறது. இதனால் ஏராளமான பள்ளிவாசல்கள் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மலபாரின் மக்கா என்று அறியப்படும் பொன்னானி நகரில் அமைந்துள்ள மிஸ்ரி பள்ளி வரலாற்றுச் சிறப்புமிக்கது. பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசிய ஆக்கிரமிப்பிலிருந்து தங்களைப் பாதுகாக்க சாமூதிரி மன்னரின் உதவியுடன் முஸ்லிம்கள் போராடி வந்தனர். பரங்கியர்களுக்கு எதிரான போரில் உதவுமாறு ஜைனுத்தீன் மக்தூம் (ரஹ்) அவர்கள் அன்றைய கலீஃபாவிற்கும் கடிதம் அனுப்பினார்கள். மிஸ்ர் (எகிப்து) பகுதியிலிருந்து இராணுவம் வந்தது. கலீஃபாவின் படை வீரர்கள் பொன்னானி நகருக்கும் வந்தார்கள். அவர்கள் தங்கிய பகுதியின் பள்ளிவாசல் மிஸ்ரி பள்ளி என்று அழைக்கப்படுகிறது. பரங்கியர்களுடன் போரிட்டு மடிந்த இரத்த சாட்சிகளும் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளர்கள்.

2019ம் ஆண்டில் மிஸ்ரி பள்ளிவாசலின் புனரமைப்பிற்காக நிர்வாகத்தினர் சில பகுதிகளை இடிக்க முற்பட்டபோது மாபெரும் எதிர்ப்பு கிளம்பியது. பொன்னானி நகரின் புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று அப்பகுதியில் வாழும் இந்துக்களும் விரும்பினார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க மிஸ்ரி பள்ளியின் பழமை அப்படியே பாதுகாக்கப்பட வேண்டுமென்று எம்.ஜி.எஸ்.நாராயணன் போன்ற வரலாற்று ஆய்வாளர்களும் வேண்டுகோள் விடுத்தனர். பொன்னானி சட்டமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான ஸ்ரீராமகிருஷ்ணன் அவர்களும் களத்தில் இறங்கினார். புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கும் கேரள அரசின் முசிறி ஹெரிடேஜ் திட்டத்தின் கீழ் 85 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு பள்ளிவாசலின் பழமை நிலைநாட்டப்பட்டது.

சேரமான் பெருமாள் பள்ளிவாசல்.

இந்தியாவின் முதல் பள்ளிவாசலாகக் கருதப்படும் சேரமான் பள்ளி 1974ம் ஆண்டு வரை அதன் பழமையுடன் நிமிர்ந்து நின்றது. பின்னர் நடந்த விரிவாக்கங்களின்போது சில மாற்றங்களை அடைந்தது. விரிவாக்கத்தின்போது இரு தாழ்வாரங்களும் முகப்பும் இடிக்கப்பட்டு கான்கிரீட் கட்டடமாக மாறியது. இதனால் வெளியிலிருந்து பார்க்கும்போது பழமையான உட்பள்ளி தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், பள்ளிவாசலின் தொன்மையை மீண்டும் வெளிக்கொண்டு வரவும், அதன் பழமையைப் பாதுகாக்கவும் தற்போதைய நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக முன்னர் இடிக்கப்பட்ட பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்ட கான்கிரீட் கட்டடத்தை இடித்தனர். இடநெருக்கடியைத் தவிர்க்க பூமிக்கு அடியில் விசாலமான கட்டடம் எழுப்பி விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்தனர். தற்போது அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பழமையான உட்பள்ளி வெளியிலிருந்து பார்க்கும்போது இனி தெளிவாகத் தெரியும். கேரள அரசின் முசிறி ஹெரிடேஜ் திட்டத்தின் உதவி சேரமான் பள்ளிக்கும் கிடைத்தது.

வரலாற்று அறிவு மங்கிவரும் இச்சூழலில், சமுதாயத்தில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. தொல்லியல் சார்ந்த படிப்புகளை ஊக்குவிப்பதும், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதும் காலத்தின் கட்டாயமாகும்.

அழிவின் விளிம்பில் இருக்கும் அடையாளச் சின்னங்களை முறையாகப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும். பின்வரும் தலைமுறையினருக்காக வரலாற்று ஆவணங்களை முறைப்படுத்தவும் உறுதி கொள்ள வேண்டும்.

நன்றி: சமூக உயிரோட்டம்

Related posts

Leave a Comment