அண்ணலாரின் வாழ்வில் அதிகாரப் பரிமாணங்கள் – ஸஃபர் பங்காஷ்
(அண்ணலார் எவ்வாறு அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள், எவ்வாறு அதைப் பிரயோகித்தார்கள் என்ற சீறாவின் அம்சம் முஸ்லிம்களால் முறையாக ஆய்வுசெய்யப்படாத ஒன்றாகவே நீடிக்கிறது. நாம் சீறாவின் மென்னதிகாரம் (Soft-power), வல்லதிகாரம் (Hard-power) இரண்டுபற்றியும் ஒரு பார்வை செலுத்த வேண்டியுள்ளது.
முஸ்லிம்கள் ரபீயுல் அவ்வல் மாதத்தில் நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்தக் கொண்டாட்டங்கள் நாத், நஷீத்களைக் கொண்டு மௌலூது பாடுவதாகவே பெரும்பாலும் அமைகின்றன. உரைகள் நிகழ்த்தப்பட்டாலும்கூட அண்ணலார் நிகழ்த்திய அற்புதங்களை எடுத்துரைப்பவையாக அவை சுருங்கிவிடுகின்றன. நபிகளாரின் வாழ்நாள் நீளப் போராட்டத்தின் ஒரு அம்சம் என்ற வகையில் சீறாவின் அதிகாரப் பரிமாணங்கள் (Power Dimensions) பற்றிய கலந்துரையாடல்கள் அவற்றில் ஒருபோதும் இடம்பெறுவதில்லை.
சமகால இஸ்லாமியச் சிந்தனைக்கான நிறுவனத்தின் (ICIT) இயக்குநர் ஸஃபர் பங்காஷின் இக்கட்டுரை அதனுடன் தொடர்புடைய சில அம்சங்கள்பற்றி கலந்துரையாடுகிறது.)
பெருமானாரும் அரசியலும்
அல்லாஹ் (சுப்ஹானஹூ வ தஆலா) திருக்குர்ஆனில் நபிகள் பெருமானாரை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) யுகஇறுதி வரையான மனிதகுலம் முழுமைக்கும் ஓர் அழகிய முன்மாதிரி (33:21) என்று வருணித்திருக்கிறான். தெளிவான வழிகாட்டுதலையும், (இறைவல்லமை, அதிகாரம், ஆட்சி என்பவற்றில் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும்) இணைவைப்பாளர்கள் (முஷ்ரிகீன்) எவ்வளவு வெறுத்தபோதும் மற்றெல்லா அமைப்புமுறைகளையும் மிகைத்து மேலோங்குவதற்காக சத்திய தீனுல் இஸ்லாத்தையும் கொடுத்து அண்ணலாரை அனுப்பியுள்ளதாகவும் (9:33, 61:9) அல்லாஹ் கூறுகிறான். மேலும், முஸ்லிம்கள் வெற்றியாளர்களாகவும் மேலோங்கியவர்களாகவும் மாறும்போது மக்கள் இஸ்லாமியக் கூடாரத்திற்குள் கூட்டங் கூட்டமாக நுழைவார்கள் என்றும் அல்லாஹ் திருக்குர்ஆனில் (அல்-நஸ்ரு அத்தியாயம்) கூறுகிறான். ஆக இஸ்லாம் மேலோங்கியதாக மாறவேண்டும் என்பதும், அதன் பிறகே மக்கள் பெரும் எண்ணிக்கையில் அதன் குடையின் கீழ் வருவார்கள் என்பதும் அல்லாஹ்வின் பிரகடனமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், இஸ்லாத்தின் வெற்றிகரமான பரவலுக்கு இஸ்லாம் மேலோங்கியதாக மாறவேண்டியது அவசியமாகும்.
எனினும், இன்றைய நிலைமை அவ்வாறில்லை. முஸ்லிம் அரசியல் சிந்தனையை ஐரோப்பியக் காலனித்துவம் ஆழமாகப் பாதித்திருக்கிறதெனத் தெரிகிறது. மேற்குலகைப் பொறுத்தவரை, மதத்தையும் அரசையும் பிரித்து நோக்கும் கருத்தாக்கம் அங்கு நன்கு நிலைபெற்றுவிட்டது. அதே விதமான கண்ணோட்டத்தை முஸ்லிம்கள் சிலரும் கொண்டிருக்கிறார்கள். இறைத்தூதர்களின் பாத்திரம் என்ன என்பதுவரை கூட இவ்வாதம் நீண்டு செல்கிறது. அதாவது, ”இறைத்தூதர்கள் இறைத்தூதை எடுத்துரைப்பதற்காக மட்டுமே அனுப்பப்பட்டார்கள்; அதனை அமலாக்குவது என்பது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியின் ஒரு பகுதியல்ல” என்பதாக அந்த வாதம் நீளுகிறது. ‘வல்லமை, அதிகாரம் என்பன அரசநிர்வாகத்துடன் சம்பந்தப்பட்ட விசயங்கள் என்பதால், அவை இறைத்ததூதர்களின் பொறுப்பு மண்டலத்திற்கு வெளியிலுள்ளவை’ என்பதாக அந்த வாதம் நீளுகிறது.
இது ஒருபுறமிருக்க, பகுத்தறிவுவாதமே மனிதச் சாதனையின் அதியுச்சம் என்பதாக முன்னிறுத்தப்படுகிறது; இறைவழிகாட்டுதல் எனும் சுமையேற்றப்படாத பகுத்தறிவுவாதமே சமூகத்தைப் பாதித்திருக்கும் நோய்கள் அனைத்திற்குமான சர்வ ரோக நிவாரணி என்றும் முன்வைக்கப்படுகிறது. முஸ்லிம்கள் தாமாகவே ஒரு சீர்திருத்தத்திற்கு (Reformation) உள்ளாகி அரசியலிலிருந்து மதத்தை அப்புறப்படுத்தாத வரை அவர்கள் முன்னேற முடியாது என்றும் வாதிடப்படுகிறது. ஐரோப்பிய வரலாற்றில் திருச்சபை வகித்த தனித்துவமான பாத்திரமானது மேற்கத்தியச் சமூகத்தைப் பல வகையிலும் எதிர்மறையாகப் பாதித்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், முஸ்லிம்கள் மிகவும் வேறுபட்டவொரு வரலாற்று அனுபவத்தைக் கடந்துவந்துள்ளார்கள். திருச்சபையின் ஒடுக்குமுறை பாத்திரம் போன்ற எதுவும் முஸ்லிம்களின் வரலாற்றில் இல்லை.
‘திருச்சபைக்கும் அரசுக்கும் இடையிலான பிரிவினை’ எனும் இக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, முஹம்மது நபி (ஸல்) மக்காவிலிருந்த போது ஒரு இறைத்தூதராக இருந்ததாகவும், மதீனாவில் ஒரு ஆட்சியாளராக மாறியதாகவும் மாண்ட்கோமெரி வாட் (Montgomery Watt) போன்ற மேற்கத்திய கீழைத்தேயவாதிகள் எழுதியிருக்கிறார்கள். இதன் பொருள் என்னவென்றால், எதுவரை நபியவர்கள் (ஸல்) அமலாக்கப் பொறிமுறை எதுவுமின்றி தூதைப் பிரச்சாரம் செய்துகொண்டு மட்டும் இருந்தார்களோ அதுவரை அவர்கள் ஒரு இறைத்தூதரின் பணியைச் செய்துவந்தார்கள்; எப்போது இஸ்லாத்தின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வல்லமை மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றினார்களோ, அப்போதே ஒருவகையில் அவர்களின் தூதுத்துவப் பணி முடிவுக்கு வந்துவிட்டது என்பதாகும் (நஸ்தக்ஃபிருல்லாஹ்- அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!).
அதிகாரம் என்பது என்ன?
மேற்குலக கருத்தாக்கத்தின் படி பார்க்கின், அதிகாரம் என்பது இறைத்தூதர்களின் பாத்திரத்திலிருந்து விலக்கப்பட்ட ஒன்று. அவர்கள் நல்லறத்தைப் பரப்புவதற்காகவும், வணக்க வழிபாடுகளைப் போதிப்பதற்காகவும் மட்டுமே அனுப்பப்பட்டவர்கள்; அரச விவகாரங்களில் தலையிடுவது அவர்களின் பணியல்ல என்று கருதப்படுகிறது. இப்போது, அறமும் கூட ஒரு தனிமனிதத் தெரிவாகச் சுருக்கப்பட்டிருக்கிறது. அறநெறிப் பெறுமானங்கள் இனி இறைவழிகாட்டுதலில் ஊன்றியவையாக இருக்கப் போவதில்லை; மாறாக, ‘தெரிவுச் சுதந்திரம்’ என்ற பெயரில் செயற்படும் அழுத்தக் குழுக்களாலேயே (Pressure Groups) அவை இனி தீர்மானிக்கப்படும்.
முஸ்லிம்கள் மத்தியில் மற்றொரு பிழையான கருத்தாக்கமும் பொதுவாகக் காணப்படுகிறது: அதாவது, மக்காவிலிருந்த போது நபியவர்களிடம் வலிமையோ அதிகாரமோ இருக்கவில்லை; மதீனாவை அடைந்த பிறகே அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள் என்பதாக. இது அன்றிருந்த சூழ்நிலை பற்றிய துல்லியமான வாசிப்பு அல்ல. நபியவர்கள் மக்காவிலிருந்த போது முற்றிலும் அதிகாரமற்றவராகவும் இல்லை; அதே போல், மதீனாவை அடைந்தவுடனேயே ஒட்டுமொத்த அதிகாரத்தைக் கைப்பற்றிவிடவும் இல்லை. நபியவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியது பற்றி கலந்துரையாடுவதற்கு முன்னால், அதிகாரம் என்றால் என்னவென்பதை வரைவிலக்கணம் செய்யவேண்டியுள்ளது.
அதிகாரம் என்றால் என்னவென்பதை மேற்கத்தியக் கோட்பாட்டியலாளர்கள் இவ்வாறு வரைவிலக்கணம் செய்கிறார்கள்: ” (அதிகாரம் என்பது) நீங்கள் விரும்பும் விளைவை ஏற்படுத்துவதற்கும், அவசியப்பட்டால் அதற்காக மற்றவர்களின் நடத்தையை மாற்றி அமைப்பதற்குமான சக்தியாகும்” (ஜோசப் நியே, அமெரிக்க அதிகாரத்தின் முரணுண்மை, 2002). “(அதிகாரம் என்பது) மக்கள்திரள், ஆட்சிப்பரப்பு, இயற்கை வளம், பொருளாதார வலிமை, இராணுவ சக்தி, அரசியல் நிலைத்தன்மை போன்ற குறிப்பிட்ட சில வளங்களைப் பெற்றிருப்பதாகும்” என்று அதிகாரம் பற்றிய மற்றொரு வரைவிலக்கணம் கூறுகிறது. இவை முழுக்கவும் சடவாத வரைவிலக்கணங்கள்; இங்கு சமய அல்லது ஆன்மிக விழுமியங்களுக்கு பாத்திரமெதுவும் இல்லை.
ஆனால், அதிகாரம் என்றால் என்ன என்பது பற்றி முஸ்லிம்களிடம் மிகவும் மாறுபட்டதொரு கண்ணோட்டம் இருக்கிறது. டாக்டர் கலீம் சித்தீக்கி இவ்வாறு கூறுகிறார்: “உண்மையான அதிகாரம் என்பது விசுவாசம், நம்பிக்கை, மனநிறைவு, பற்றுறுதி, பொறுப்புணர்வு, எல்லாம் வல்லவனுக்கு மறுமையில் பதில்கூறக் கடமைப்பட்டவர்கள் நாம் என்கிற உணர்வு ஆகியவற்றைப் பெற்றிருப்பதிலேயே இருக்கிறது” (இஸ்லாமியப் புரட்சியின் படிநிலைகள், 1996). விசுவாசம், அல்லாஹ்வுடைய வல்லமையின் பிரசன்னத்தை உணர்ந்து பணிதல், பற்றுறுதி, பொறுப்புடைமை, பதில்கூறக் கடமைப்பட்ட உணர்வு ஆகிய கருத்தாக்கங்களை நாம் மீளாய்வு செய்யும்போதே அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மீதும், அதைப் பிரயோகிப்பதன் மீதும் அவை கொண்டுள்ள உண்மைத் தாக்கத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதிகார ஏற்றத்தாழ்வு என்ற ஒன்றே இருக்க முடியாதென இஸ்லாம் கூறவில்லை; மாறாக, பலவீனமான மக்களை ஒடுக்கவும் சுரண்டவுமான வரம்பற்றதொரு சுதந்திரம் அதிகாரம் படைத்தோரிடம் இருக்கக்கூடாது என்ற வகையில், அது அதிகாரப் பிரயோகத்தை நன்கு வரைவிலக்கணம் செய்யப்பட்ட வரம்புகளுக்கு உள்ளாக முறைப்படுத்துகிறது. எனினும், இதற்கு நேர்மாறான சூழ்நிலையே இன்று உலகில் மிகப் பொதுவாக நிலவுகிறது.
இராணுவ வலிமை, ஆட்சிப்பரப்பு, செல்வவளம் என்பவற்றின் அடிப்படையில் அமைந்த மேற்கத்திய வரையறை அரைகுறையானது என்பது பல சமயங்களில் நிரூபணமாகியுள்ளது. எடுத்துக்காட்டாக யு.எஸ். ஏ. உலகிலேயே மிகப் பெரிய இராணுவ பட்ஜெட்டைக் கொண்ட நாடு. அதனிடம் ஆயிரக்கணக்கான போர்விமானங்கள், கடல்களில் சுற்றியலையும் நூற்றுக்கணக்கான போர்க் கப்பல்கள், பல பத்தாயிரக்கணக்கான டாங்குகள், ஏவுகணைகள், ஏன் அணுவாயுதங்கள் கூட இருக்கின்றன. இவையெல்லாம் இருந்தும் கூட, வெறும் எளியவகை ஆயுதங்களை மட்டுமே வைத்திருக்கும் சாதாரண ஆஃப்கன் போராளிக் குழுக்களால் இன்று அது தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவால் தனது நூறுகோடி மக்கள்தொகையில் அடிமட்ட ஏழைகளாகவுள்ள நாற்பதுகோடி பேருக்கு மிக அடிப்படையான வசதிகளைக் கூட செய்துதர முடியாமலிருப்பது, அதிகாரம் பற்றிய மேற்கத்திய வரைவிலக்கணத்தின் போதாமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. சிறு குழுவான ஹிஸ்புல்லாஹ் போராளிகளின் கரங்களில் இஸ்ரேல் அடைந்த தோல்வி (ஒரு முறையல்ல, இரண்டு முறை) , அதிகாரம் பற்றிய சடவாத வரைவிலக்கணத்தின் பலவீனத்தை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியிருக்கிறது.
அதிகாரத்தின் இரு வகைகள்
எனவே, அதிகாரம் என்றால் என்னவென்பதை நாம் இன்னும் துல்லியமாக வரையறை செய்யவேண்டும். அதிகாரத்தில் இருவகைகள் உண்டு: (உணர்வூட்டுவதற்கான) மென்னதிகாரம் மற்றும் (நிர்பந்திப்பதற்கான) வல்லதிகாரம். இவ்விரண்டும் ஒன்றையொன்று பூரணமாக்கும் வகையில் தத்தமக்கே உரிய தனித்துவப் பாத்திரங்களைக் கொண்டுள்ளன.
மென்னதிகாரம் (Soft-Power) என்பதை ‘கோரிக்கை விடுப்பதற்கும், நியாயம் கற்பிப்பதற்கும், இணக்கப்படுத்துவதற்கும், வசீகரிப்பதற்கும், செல்வாக்குச் செலுத்துவதற்கும், தார்மிக ரீதியில் ஆணையிடுவதற்கும் தேவையான பலம்’ என்று வரைவிலக்கணம் செய்யலாம். குறிப்பிட்டதொரு கண்ணோட்டத்தின் பக்கம் வரவேண்டுமெனப் பிறரைக் கோருவதில் பொதுவாகப் பலவந்தம் சம்பந்தப்படுவதில்லை; அல்லது மிகச் சிறிதளவே சம்பந்தப்படுகிறது. எனினும், சமகால உலகில் அது கூட எப்போதும் அவ்விதம் இருப்பதில்லை என்பது தனிக்கதை.
மனிதர்கள் அனைவரிடமும் ஒரு குறிப்பிட்டளவு மென்னதிகாரமும் வல்லதிகாரமும் இருக்கின்றன. அவை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுகின்றன. உள்ளத்தை நெகிழவைக்கும் தமது கெஞ்சல்கள் மூலம் குழந்தைகள் தங்கள் பெற்றோர் மீது ஒருவித மென்னதிகாரத்தைப் பிரயோகிக்கிறார்கள்; கணவன்-மனைவி உறவுகளில் மென்னதிகாரம்-வல்லதிகாரம் இரண்டும் பிரயோகிக்கப்படுகின்றன. அதேபோல், முதலாளிகள் தங்களின் தொழிலாளர்கள் மீது இருவகை அதிகாரங்களையும் பிரயோகிக்கிறார்கள். தொழிலாளர்களிடம் கடமையுணர்வை விதைப்பதன் மூலம் அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு மென்னதிகாரம் பிரயோகிக்கப்படுகிறது; பணிநீக்க மிரட்டல் என்பது வல்லதிகார வகையின் கீழ் வருகிறது. கண்ணியமான ஊதியம் அல்லது பணிச்சூழல் அல்லது இரண்டையும் பெறுவதற்காக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அச்சுறுத்துவன் மூலம் தொழிலாளர்களும் கூட வல்லதிகாரத்தைப் பிரயோகிக்க முடியும். அரசியல் களத்தைப் பொறுத்தவரை, அதிகாரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற தணியாத தாகத்தில் (அல்லது பொதுவாக அறியப்படுகின்றவாறு, “அதிகாரத்திற்கு வருவதற்காக”) இவ்விரு வகை அதிகாரங்களும் பயன்படுத்தப்படுகின்றன; அவ்வாறு அதிகாரத்திற்கு வருவதன் மூலம் கிடைக்கிற வளங்களைப் பயன்படுத்தி மேலும் அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்வதே பொதுவாக அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
மென்னதிகாரம் என்பது செல்வாக்கு (Influence) என்பதைக் காட்டிலும் அதிகமானது; அது மக்களை உணர்வூட்டி, வசீகரித்து, இணங்கச் செய்வதற்கான ஒரு திறன். மேலும் அது பழைய வழக்கங்களையும் மரபுகளையும் விட்டொழித்து புதியவற்றை விருத்தி செய்வதற்கு வழிகோலுகிறது. ஒரு தனிமனிதரின் குடும்பமும் நண்பர்களும் அவர் பற்றிப்பிடித்துள்ள சிந்தாந்தத்திற்கு எதிரானதொரு சித்தாந்தத்தைக் கொண்டிருப்பின், அவர் அவர்களை விட்டு தன்னைத் துண்டித்துக் கொள்ளும்படி செய்வதற்கும் கூட இந்த மென்னதிகாரம் திறன்படைத்ததாக இருக்கிறது. புதிய விழுமிய அமைப்பு முன்னிறுத்துகின்ற இச்சித்தாந்தம், இயல்பாகவே புதிய உறவுப் பிணைப்புகளின் தோற்றத்திற்கும் வழிகோலுகிறது.
மறுபுறம் (நிர்பந்திப்பதற்கான) வல்லதிகாரம் (Hard-power) என்பது மக்கள் தமது நடத்தையை மாற்றிக்கொள்ளும் படியும், குறிப்பிட்ட சில விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியும் படியும், குறிப்பிட்ட சில பெறுமானங்களை ஏற்றுக்கொள்ளும்படியும் -அவர்கள் அவற்றை விரும்பாவிடினும், அவற்றுடன் உடன்படாவிடினும் சரியே – அவர்களை நிர்பந்திப்பதற்கான ஒரு திறனாகும். சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்துவதற்கும், அந்தச் சட்டங்களை மீறுவோரைத் தண்டிப்பதற்கும், தனது நலன்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராகப் போரிடுவதற்காக இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்குமான ஒரு அதிகாரத்திலிருந்தே இது வருகின்றது. பொருளாதார-அரசியல் அதிகாரங்களும், அச்சுறுத்தும் விதமான அவற்றின் பிரயோகமும் வல்லதிகாரச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கின்றன.
இராணுவ பலத்தை மிகுதியாகப் பெற்றிருக்கும் போது, பிறரை நேரடியாகவோ மறைமுகமாகவோ கீழடக்கி மேலோங்க முடியும் என்ற உணர்வையும் அது சிலரிடம் உண்டாக்குகிறது. எனினும், ஒத்திசைவான மென்னதிகாரம் இல்லாத எந்தவொரு வல்லதிகாரமும் நெடுநாட்களுக்கு நீடிக்க முடியாது. நிச்சயமாக அது கொடுங்கோன்மைக்கும் ஒடுக்குமுறைக்குமே வழிவகுக்கும்; எனவே விரைவிலேயே மக்கள் அதற்கெதிராகக் கிளர்ச்சியில் இறங்குவார்கள்!
நபிவாழ்வில் இரு வகை அதிகாரங்கள்
அதேவேளை எந்தவொரு மென்னதிகாரமும், அது எத்துணை வலுவான கொள்கைகளின் மீதமைந்ததாக இருப்பினும், வினைத்திறன் மிக்கதாக மாறவேண்டுமென்றால் அதற்கொரு வல்லதிகாரம் தேவைப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர்கள் அனைவரின் பாத்திரமும் இந்த வகைப்பாட்டின் கீழேயே வருகின்றது. அவர்களிடம் ஒருவித “மென்னதிகாரம்” இருந்தது. அதாவது, அவர்களின் தூது இறைவனால் அருளப்பட்டதாக, சட்டப்பூர்வமானதாக இருந்தது. தெள்ளத் தெளிவுடன் இரத்தினச் சுருக்கமாக அது மக்களிடம் முன்வைக்கப்பட்டது. ஆயினும், பெரும்பாலான மக்கள் அதை ஏற்கவில்லை அல்லது அதை ஏற்பதிலிருந்து தடுக்கப்பட்டார்கள். எனவே, பெரும்பாலான இறைத்தூதர்கள் தம்முடைய தூதைப் பிரச்சாரம் செய்துவிட்டு இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்டார்கள். வேறு சில இறைத்தூதர்களோ தமது சொந்த மக்களாலேயே படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் “மென்னதிகாரம்” “வல்லதிகாரமாக” மாற்றப்படவில்லை. அதாவது, அவர்களின் சமூகங்களில் இறைவனால் விதிக்கப்பட்ட சட்டங்கள் அமலாக்கம் செய்யப்படவில்லை. வெகுசில எடுத்துக்காட்டுகளில் மட்டுமே இறைத்தூதர்களின் ‘மென்னதிகாரம்’ ‘வல்லதிகாரமாக’ நிலைமாற்றப்பட்டது. அதாவது, அவர்கள் இப்புவியில் அல்லாஹ்வின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரத்தை வென்றெடுத்தார்கள்.
அல்லாஹ்விடமிருந்து வேதவெளிப்பாட்டைப் பெறத்துவங்கு முன்பே கூட அண்ணல் நபிகளாரிடம் ஒரு குறிப்பிட்டளவு மென்னதிகாரம் இருந்தது. நேர்மை, நம்பகத்தன்மை, வசீகரிக்கும் ஆளுமை ஆகியவை அவர்களிடம் இருந்தன. மக்காவில் அல்-அமீன் (நம்பிக்கைக்கு உரியவர்) என்று பிரபலமாக அறியப்படுபவராக இருந்தார்கள். மேலும், வெற்றிகரமான ஒரு வணிகர்-வியாபாரி என்ற நன்மதிப்பையும் ஈட்டியிருந்தார்கள். அதிகாரத்தைப் பெறவேண்டுமென்ற தனிப்பட்ட குறிக்கோள் மட்டும் இருந்திருப்பின், அதற்காக மக்களை அணிதிரட்டப் பயன்பட்டிருக்கக் கூடிய தகைமைகள் பலவும் அவர்களிடம் இருக்கவே செய்தன. ஆனால், அவர்கள் செய்ததென்னவோ அதற்கு நேரெதிராக இருந்தது. (தூதுத்துவம் வழங்கப்படுவதற்கு முன்பு) நபியவர்கள் அடிக்கடி சமூகத்திலிருந்தி விலகித் தனிமையை நாடிச் செல்பவராகவும், ரமழான் மாதத்தில் தியானத்திலும் சிந்தனையிலும் ஈடுபடுவதற்காக ஹிரா குகையில் தஞ்சமடைபவராகவும் இருந்தார்கள். இதே ஹிரா குகையில் வைத்துத்தான் ஓர் ரமழான் இரவில் அல்லாஹ்வின் புறத்திலிருந்த வந்த முதல் வேதவெளிப்பாட்டை நபியவர்கள் பெற்றார்கள். இவ்வாறு, வானுலக அனுமதியுடன் அவருக்கு இந்தத் தூது (அல்லது மென்னதிகாரம்) வழங்கப்பட்டது.
இதிலிருந்து மூன்றாண்டுகள் நபியவர்களின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே இந்தத் தூது எடுத்துரைக்கப்பட்டது. நபிகளார் தனது தூதைப் பகிரங்கமாக எடுத்துச் சென்றபோதுதான், ஏற்கனவே சிலர் இஸ்லாத்தை ஏற்றிருக்கிறார்கள் என்பது வெளியே தெரியவந்தபோதுதான் எதிர்ப்பு கிளம்பியது. நாம் இங்கு இருவகை அதிகாரங்களுக்கு இடையில் தோன்றும் மோதலுக்கான ஒரு முதல்தர முன்மாதிரியைப் பார்க்கிறோம். அது இறைத்தூதரின் மென்னதிகாரத்திற்கு எதிராகக் கிளம்பிய கோத்திரத் தலைவர்களின் வல்லதிகாரம். மக்கத்துத் தலைவர்கள் கட்டவிழ்த்துவிட்ட ஒடுக்குமுறையையும் மீறி மக்கள் தொடர்ச்சியாக இஸ்லாத்தின் பால் கவரப்பட்டார்கள். விரைவிலேயே நபிகளாரைச் சுற்றிக் கணிசமான எண்ணிக்கையில் பின்பற்றாளர்கள் திரண்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பலவீனமான, ஒடுக்கப்பட்ட வகுப்பினராகவே இருந்தார்கள் என்றாலும், அங்கு மக்கத்துப் பிரபுக்குலத்தைச் சேர்ந்தவர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கவே செய்தார்கள். இது ஆளும்வர்க்க மேட்டுக்குடிகளின் அணிகளின் மத்தியில் ஒரு பெரிய விரிசலை உண்டுபண்ணியது. சிறு எண்ணிக்கையிலான இந்தப் பின்பற்றாளர்களைக் கொண்டே, நபியவர்கள் அந்தச் சமூகத்தில் நிலைபெற்றிருந்த ஒழுங்குக்கு எதிராக ஓரளவு அதிகாரத்தை வென்றெடுத்தார்கள். தூதிலிருந்து வந்த தார்மீக அதிகாரத்தைப் பிரயோகித்து நபிகளார் இதைச் சாதித்தார்கள்.
வேதவெளிப்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஒரு விழுமியத் தொகுதியை முஸ்லிம்களுக்கு வழங்கியதன் மூலம் சமூகத்தில் புதிய விதிமுறைகளை இஸ்லாம் நிறுவியது. “மென்னதிகாரத்தை” பிரயோகிக்காமல் நபியவர்களால் இதைச் செய்திருக்கமுடியாது என்பது தெளிவு. கொடுமைகளிலிருந்து தப்பிப்பதற்காக முஸ்லிம்களின் ஒரு குழுவை அபிசீனியாவுக்குப் புலம்பெயர அனுமதித்தபோது, நபியவர்களின் இம்மென்னதிகாரம் மேலும் வினைத்திறத்துடன் வெளிப்பட்டது. இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் மக்காவின் பிரபுக்குலத்தைச் சேர்ந்த பலரும் இருந்தார்கள். எடுத்துக்காட்டாக, மக்காவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான அபூ சுஃப்யானின் மகளார் உம்மு ஹபீபாவையும், பனூ உமையா கிளையின் மற்றொரு முக்கியப் பிரமுகரான உஸ்மான் இப்னு அஃப்பானையும் கூறலாம்.
அபிசீனியப் புலப்பெயர்வு இரண்டு விசயங்களை நடைமுறையில் புலப்படுத்தியது. ஒன்று, நபியவர்கள் பெற்றிருந்த மென்னதிகாரம். மற்றது, தன்னுடைய ஆணைகளைப் பின்பற்றுமாறு பின்பற்றாளர்களை இணங்கச் செய்வதற்கான அவர்களின் திறன். இதில் பலவந்தமோ, ‘கீழ்ப்படியாவிடில் தண்டிக்கப்படுவீர்கள்’ என்பது போன்ற அச்சுறுத்தலோ சம்பந்தப்படவில்லை. அபிசீனியாவுக்குப் புலம்பெயர்ந்த அந்தக் குழுவினர்கள் தங்களின் உற்றார்-உறவினர்களில் பெரும்பாலானவர்களை விட்டுப்பிரிந்து செல்லவேண்டியிருந்தது. இப்புலப்பெயர்வின் காரணமாக, பிரபுக்குலக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களின் பெற்றோர்கள் தங்களுக்கு ஏற்படுத்தித் தந்திருந்த சுகபோக வாழ்க்கையைத் துறந்து, இனமறியாதவொரு நாட்டில் நிச்சயமற்றதொரு எதிர்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது. எனினும், சுமார் நூறு பேர்களைக் கொண்ட அந்த முதற் குழுவிலிருந்த முஸ்லிம்கள் அனைவரும் நபிகளாரின் ஆணையைத் தயக்கமேதுமின்றி ஏற்றார்கள். (அபிசீனியப் புலப்பெயர்வைப் போன்றே)
இரண்டாவதாக, தனது தூதுத்துவப் பணியின் பத்தாமாண்டில் நபிகளார் மேற்கொண்ட தாயிஃப் பயணமும் கூட இஸ்லாத்திற்கு ஒரு ஆட்சிப்பரப்பை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்டதுதான். தாயிஃப் அனுபவம் மிகவும் வேதனையான ஒன்றாக அமைந்துபோனது என்றாலும் (நபியவர்கள் அந்நகர மக்களால் அவமானப்படுத்தப்பட்டு தாக்குதலுக்கு ஆளானார்கள்), இஸ்லாத்திற்கு பாதுகாப்பானவோர் தளத்தை வென்றெடுப்பதற்கான ஒரு முயற்சியாக அது இருந்தது என்பதே உண்மை.
வல்லதிகாரத்தின் முக்கியத்துவம்
இஸ்லாத்தின் தூதைப் பிரச்சாரம் செய்வதில் நபிகளார் மக்காவில் பதிமூன்று ஆண்டுகளைச் செலவிட்டார்கள். அன்னார் அம்மக்களிடையே அவர்களின் வாழ்வுநெடுக நன்கு அறிமுகமான ஒருவராக இருந்தார்கள்; அன்னாரின் நேர்மையையும் நம்பகத்தன்மையையும் மக்காவாசிகள் நன்கு அறிந்திருந்தார்கள். இருந்தபோதும், அம்மக்கள் நபியவர்களின் தூதை ஏற்கமறுத்து விட்டார்கள். அந்தப் பதிமூன்று ஆண்டுகளில் மக்காவின் சுமார் 5000 பேரில் வெறுமனே சில நூறு பேர் மட்டுமே இஸ்லாத்தை ஏற்றார்கள். மக்காவில் இருந்தபோது நபிகளாரிடம் மென்னதிகாரம் மட்டுமே இருந்தது. இஸ்லாத்தின் தூது பரவுவதைப் தடுப்பதற்காக குறைஷிகள் தமது வல்லதிகாரத்தைப் பயன்படுத்தி தம்மால் இயன்ற சகல முயற்சிகளையும் மேற்கொண்டார்கள்.
குறைஷிகள் நபியவர்களுடன் ஒரு நேர்மையான திறந்த விவாதத்தை மேற்கொண்டிருக்க முடியும்தான்; ஆனால், அத்தகையவொரு போக்கை அவர்கள் கைக்கொள்ளவில்லை. அன்னார் தமது தூதைப் பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்வதை அனுமதித்தால் பெரும்பாலான மக்கள் அதை ஏற்றுக்கொண்டு விடுவார்கள் என்பதையும், அதனால் தமது அதிகாரத்தையும் செல்வாக்கையும் இழக்கநேரிடும் என்பதையும் குறைஷிகள் அறிந்திருந்தார்கள். எனவே, அவர்கள் அந்தத் தூதினை நசுக்க முயன்றார்கள். இறுதியில் நபியவர்களைக் கொல்லவும் சதிசெய்தார்கள். இவ்வாறு நபிகள் பெருமானார் பெற்றிருந்த மென்னதிகாரம் குறைஷிகளின் வல்லதிகாரத்துடன் மோதநேர்ந்தது. இது பொதுவானதொரு அனுபவம். வல்லதிகாரத்தைப் பெற்றிருப்போர் மென்னதிகாரத்தைப் பெற்றிருப்போரை வன்முறையைக் கொண்டும் அச்சுறுத்தல்களைக் கொண்டும் அழித்திடவே எப்போதும் முயல்வார்கள்.
நபிகளார் அல்லாஹ்விடமிருந்து மென்னதிகாரத்தைப் பெற்றிருந்த போதும் கூட, அவர்களால் பெரும் எண்ணிக்கையில் பின்பற்றாளர்களை வென்றெடுக்க முடியவில்லை என்பதைத்தான் மக்காவில் அன்னாருக்கு வாய்த்த அனுபவம் காட்டிநிற்கிறது. எனவே, அல்லாஹ்வின் எதிரிகளுடைய வல்லதிகாரத்தை எதிர்த்து முறியடிப்பதற்கு மென்னதிகாரம் மட்டுமே (அது மிக அவசியமான ஒன்றுதான் என்றாலும்) போதுமானதாக மாட்டாது. முஸ்லிம்கள் அக்கிரமமாக நடந்துகொள்ள வேண்டுமென்று இதற்குப் பொருளில்லை; ஆனால், அல்லாஹ்வின் மீது பற்றுறுதி கொண்டோரின் வல்லதிகாரத்தைக் கொண்டு நம்முடைய எதிரிகளின் கொடுங்கோன்மையை எதிர்கொள்வதைத் தவிர அது நமக்கு வேறு தெரிவெதையும் விட்டுவைப்பதில்லை. மென்னதிகாரத்தைப் பெற்றிருக்க வேண்டியது மிக அவசியமானதொரு முன்நிபந்தனை தான். எனினும், ஒடுக்குமுறையாளர்களின் வல்லதிகாரத்தை முறியடிப்பதற்கு அது மட்டுமே போதுமானது அல்ல. தூதின் மேன்னதிகாரத்தால் செறிவூட்டப்பட்ட, பற்றுறுதி கொண்ட முஸ்லிம்களின் வல்லதிகாரத்தைக் கொண்டே அறுதியில் அது சவாலுக்குள்ளாக்கப்பட வேண்டியுள்ளது.
ஜாஹிலிய்ய அதிகார அமைப்பில் பங்கெடுக்கலாமா?
மக்காவிலிருந்த காலத்தில், குறைஷிகளுடன் சமரசம் செய்துகொண்டால் அதற்கு விலையாக நபிகளாருக்கு அதிகாரத்தில் பங்கு தருவதாக ஒரு பேரம் முன்வைக்கப்பட்டது. நபியவர்கள் அதனை மிகத் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார்கள். உண்மையில், நடந்துகொண்டிருப்பது ஒரு போராட்டம்-மோதல் என்பதையும், அறுதியில் அதில் இஸ்லாமே வெல்லும் என்பதையும் அவர்களின் மறுமொழி உள்ளடக்கியிருந்தது. குறைஷிகளிடமிருந்து இச்செய்தியைக் கொண்டுவந்த தனது பாசத்திற்குரிய சிறிய தந்தை அபூ தாலிபிடம் நபிகளார் இவ்வாறு கூறினார்கள்: “அவர்கள் எனது வலக்கரத்தில் சூரியனையும் இடக்கரத்தில் சந்திரனையும் வைத்தாலும் கூட, அல்லாஹ் என்னிடம் பொறுப்பளித்திருக்கும் இத்தூதை எடுத்துரைப்பதை நான் நிறுத்தப் போவதில்லை. ஒன்று இஸ்லாம் மேலோங்க வேண்டும்; அல்லது அதை மேலோங்கச் செய்வதற்கான செயல்முறையில் நான் அழிந்துபோக வேண்டும்.”
சந்தர்ப்பவாத அரசியலின் நோக்கில் பார்த்திருந்தால், குறைஷிகள் முன்வைத்த பேரம் மிகக் கவர்ச்சிகரமான ஒன்றாக தோன்றியிருக்க முடியும். நபியவர்கள் அதனை ஏற்பதன் மூலம் குறைஷிகளின் தலைவராக மாறி, இஸ்லாத்தை மேலிருந்து பிரச்சாரம் செய்தும் இருக்கலாம். ஆனால், அன்னார் அதைச் செய்யவில்லை. அவர்கள் மட்டும் அவ்வாறு செய்திருந்தால் அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்திருக்கும் என்பதுடன், தனது பின்பற்றாளர்கள் அனுபவித்துவந்த பல்லாண்டுக் கொடுமைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்ற முடிந்திருக்கும் என்று சிலர் வாதிடலாம். உண்மையுள்ளம் படைத்த வெகுளியான முஸ்லிம்கள் பலரிடம் இன்றும் கூட இத்தகைய பிழையான சிந்தனை காணப்படுகிறது.
குறைஷிகளுடன் செய்துகொள்ளப்படும் சமரசம் தனது தூதை நீர்த்துப்போகச் செய்துவிடும் என்பதையும், குறைஷிகளின் வல்லதிகாரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு சட்டபூர்வமற்ற அமைப்புக்கு அது ஒருவிதத்தில் சட்டபூர்வ தன்மையை வழங்கிவிடும் என்பதையும் அண்ணல் நபிகளார் அறிந்திருந்தார்கள். ஆனால் அவப்பேறாக, இன்று இஸ்லாமிய இயக்கத்தின் அங்கத்தவர்கள் பலரும் இப்பார்வையை தொலைத்து விட்டிருக்கிறார்கள். அவர்கள் ஐயத்திற்குரிய நம்பகச் சான்றுகளைக் கொண்ட அரசாங்கங்களில் அமைச்சர் பதவிகளைப் பெறுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். ஒரு இஸ்லாமிய அரசை நிறுவும் நம்பிக்கையில், இஸ்லாத்திற்கு முரணான (ஜாஹிலிய்ய) அமைப்புமுறைகளின் பிழையான கருவிகளைப் பயன்படுத்தி உழைப்பதற்கும் வேறு சிலர் ஆயத்தமாக இருக்கிறார்கள்.
இஸ்லாத்தினால் ஒரு கீழடங்கிய பாத்திரத்தில் இயங்கவோ செயல்படவோ முடியாது; இஸ்லாத்தின் அதிகாரத்தில் வேர்கொண்ட தனது சொந்த அமைப்பை அது நிறுவியாக வேண்டும். பின்வரும் திருக்குர்ஆன் வசனத்திலிருந்தும், அண்ணல் நபிகளாரின் சீறாவிலிருந்தும் தெரியவருவது அதுவே: “(அல்லாஹ்) தனது தூதரை தெளிவானதொரு வழிகாட்டுதலைக் கொண்டும், மற்றெல்லா அமைப்புமுறைகளையும் மேலோங்க வேண்டுமென்பதற்காக சத்திய தீனைக் கொண்டும் அனுப்பியிருக்கிறான்; அதை இணைவைப்பாளர்கள் (முஷ்ரிகீன்) எத்துணை வெறுத்தபோதும் சரியே.” (9:33; 61:09)
மதீனாவின் இஸ்லாமிய அரசு
அண்ணல் நபிகளார் யத்ரிபுக்கு புலம்பெயர்ந்த போது இஸ்லாத்தின் மென்னதிகாரம் மேலாதிக்கம் பெற்று வல்லதிகாரமாக மாறியது (யத்ரிப் பின்னாட்களில் மதீனா என்று பெயர்மாற்றப்பட்டது). மக்காவில் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவொரு சிறுபான்மை சமுதாயமாக இருந்த முஸ்லிம்கள், மதீனாவில் ஒரு மேலாதிக்கம் மிக்க பிரசன்னத்தைப் பெற்றார்கள். அப்போதும் கூட அவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகவே இருந்தார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அங்கு நபியவர்கள் தன்னிகரற்ற ஓர் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள் என்பது சுவாரஸ்யமானது. யூதர்கள், உம்மிகள் (இறைவேதத்துடன் பரிச்சயமற்றவர்கள்) என முஸ்லிம்-அல்லாதோரும் கூட எல்லாப் பிரச்சினைகளையும் நபிகளாரிடமே கொண்டு வந்தார்கள். ‘மதீனா சாசனம்’ (மீஸாக் அல்-மதீனா) என்றறியப்படும் ஓர் எழுத்துபூர்வ ஆவணத்தில் சகல குடிமக்களின் உரிமைகள்-பொறுப்புகள் அனைத்தும் மிகத் தெளிவாக நிறுவப்பட்டு, மதீனாவில் ஓர் இஸ்லாமிய அரசு தோற்றம் பெற்றது.
இவ்வாறு இஸ்லாத்தின் மென்னதிகாரம் ஒரு வல்லதிகாரமாக மாற்றப்பட்டதையும், மதீனாவில் இஸ்லாம் மேலோங்கியதையும் கண்ட மக்காவின் இணைவைப்பாளர்கள் (முஷ்ரிகீன்) மிகக் கடுமையான அவமான உணர்வுக்கு ஆளானார்கள். தங்கள் நகரைக் காலிசெய்து விட்டு மதீனாவுக்குச் சென்று குடியமர்ந்து விட்டார்கள் என்பதற்காக மட்டும் முஸ்லிம்களை மக்கத்துத் தலைவர்கள் நிம்மதியாக இருக்க விட்டுவிடப் போவதில்லை என்பதை நபியவர்களால் முன்னுணர முடிந்தது. முஸ்லிம் அதிகாரம் மதீனாவில் இவ்வாறு திண்மம் அடைந்தது குறைஷிகளை மேலும் அச்சமூட்டுவதாக அமைந்தது. இந்த அச்சுறுத்தல் இன்னும் வலுவடையும் முன்பே அதைத் தாக்கியழிக்க வேண்டியதொரு கட்டாயத்தில் குறைஷிகள் இருந்தார்கள்.
எனினும் நபியவர்கள் தனது மென்னதிகாரத்தை மிக விவேகமாகப் பயன்படுத்தி, மதீனாவுக்கும் செங்கடலுக்கும் நடுவிலிருந்த குறுகிய வணிகப் பாதையில் வாழ்ந்த கோத்திரங்கள் பலவற்றையும் முஸ்லிம்களின் கூட்டணியில் இணைத்தார்கள் (மக்காவின் பெரும்பாலான வணிகக் கூட்டங்கள் இவ்வணிகப் பாதையின் வழியாகவே கடந்துசெல்ல வேண்டியிருந்தது). இது (தார்மிக ரீதியில் உணர்வூட்டுவதற்கான) மென்னதிகாரத்தை வெற்றிகரமாக (இராணுவ வலிமைக்கான) வல்லதிகாரமாக மாற்றுவதாக அமைந்தது. இப்போது குறைஷிகள் மதீனாவைத் தாக்கினால், முஸ்லிம்களின் உதவிக்கு வரவேண்டுமென்ற கடப்பாடு கொண்டவையாக இப்போது அந்தக் கோத்திரங்கள் மாறின. அதே போல், அந்தக் கோத்திரங்கள் தாக்கப்பட்டால் முஸ்லிம்கள் அவற்றைப் பாதுகாக்க போரிடுவார்கள் என்றும் வாக்களிக்கப்பட்டது.
அண்டையிலிருந்த கோத்திரங்களுடன் செய்துகொள்ளப்பட்ட இந்தக் கூட்டணி உடன்படிக்கைக்கு மற்றொரு பின்விளைவும் இருந்தது; போராட்ட அரங்கை அது மேலும் விசாலமாக்கி விட்டது. போர் இப்போது வெறுமனே மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையில் மட்டுமில்லை என்றானது. செறிவானதொரு அதிகார மையம் என்பதாக மக்கா பெற்றிருந்த அனுகூலமானது இராணுவ ரீதியில் நுண்ணறிவுடன் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையால் ஒருவகையில் மட்டுப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மக்காவின் உயிர்-ஆதாரங்களாக இருந்த வணிகக் கூட்டங்களை முஸ்லிம்களின் கூட்டணியினர் அச்சுறுத்தத் துவங்கிவிட்டார்கள். ஆக, முஸ்லிம்களுக்கும் மக்கத்து எதிரிகளுக்கும் நடுவே முறைப்படியான ஆயுத மோதல் துவங்குவதற்கு முன்பே, நபியவர்கள் இவ்விதமான முன்னெடுப்புகளின் வழியாக குறைஷிகளுடைய வல்லதிகாரத்தின் அடித்தளங்கள் சிலவற்றைத் தகர்த்து எறிந்தார்கள்.
முஸ்லிம்களுக்கு எதிரான நேரடி மோதலைப் பொறுத்தவரை, குறைஷிகள் இராணுவ-பொருளாதார-அரசியல் வல்லதிகாரம் என்ற அம்சங்களில் முஸ்லிம்களை மிகைத்தவர்களாக இருந்தார்கள். எஞ்சிய அரேபியத் தீபகற்பத்திலிருந்த எஞ்சிய பல கோத்திரங்களுடனும் அவர்களுக்குத் தொடர்புகள் இருந்தன. கஅபா ஆலயம் மக்காவில் இருந்ததும், கிழக்கு-மேற்கு வணிகப் பாதையில் அமைந்த ஒரு நகராக அது இருந்ததும் மக்காவுக்கு மேலுமதிக அனுகூலத்தை வழங்கியிருந்தன.
அது மட்டுமின்றி, குறைஷிகள் மிகச் சிறந்த போர் வீரர்களாக இருந்தார்கள். எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்களாகவும் வளங்களில் வெகுவாகப் பற்றாக்குறை கொண்டவர்களாகவும் இருந்த முஸ்லிம்களின் போரிடும் திறன் அதுவரை போர்க்களத்தில் சோதிக்கப்பட்டு நிரூபணமாகியிருக்கவில்லை. எனவே, கூட்டணியினரை ஈர்ப்பதற்கு ஏதேனுமொரு வெற்றியைச் சுட்டிக்காட்டும் நிலையில் அவர்கள் அப்போது இருக்கவில்லை. மக்காவின் வல்லதிகார அச்சுறுத்தலை கருத்தில் கொண்டால், மக்களை வென்றெடுப்பதற்கு முஸ்லிம்களின் வசமிருந்த (அற்புதமான நீதமிக்க தூதும் உயர் ஒழுக்க மாண்பும் என்ற) மென்னதிகாரம் மட்டுமே போதுமானதாக இல்லை.
இஸ்லாம் எப்போது வெல்லும்?
ஒரு சித்தாந்தமோ அமைப்புமுறையோ, அது சரியானதாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் பெரும்பான்மை மக்களால் ஆதரிக்கப்படுவது இல்லை என்பதே வரலாற்று யதார்த்தம். அது மகத்தான இராணுவ-பொருளாதார வலிமையைக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் உணரும்போதே தம்மை அதனுடன் இணைத்துக் கொள்கிறார்கள். எனவே, இஸ்லாத்திற்கும் இறைநிராகரிப்புக்கும் (குஃப்ரு) இடையிலான அந்தப் போராட்டத்தில் அரேபியாவின் பெரும்பாலான கோத்திரங்கள் குறைஷிகளின் பக்கமே அணிசேர்ந்திருந்தன. பத்ரு களத்தில் முதலாவது தீர்மானகரமான வெற்றியை ஈட்டும்வரை, நபிகளாரிடம் உணர்வூட்டுவதற்கான அதிகாரமும் இறைவனால் வழங்கப்பட்ட சட்டபூர்வ தன்மையும் மட்டுமே கைவசம் இருந்தன. இஸ்லாத்தை ஏற்கும்படியும், முஸ்லிம்களுடன் கூட்டணியில் இணையும்படியும், (குறைந்த பட்சம்) நடுநிலை வகிக்கும்படியும் மக்களைத் தூண்டுவதற்கு நபியவர்கள் அவற்றைப் பயன்படுத்தினார்கள்.
மக்காவிலிருந்த பதிமூன்று வருடங்களில் சில நூறு பேர் மட்டுமே முஸ்லிம்களாக மாறியிருந்தார்கள். ஆனால், மதீனாவின் பத்தாண்டுகளில் பல்லாயிரக் கணக்கான மக்கள் முஸ்லிம்களாக மாறினார்கள். ஏன் இத்துணை பெரிய வேறுபாடு? இன்று இஸ்லாமியப் பிரச்சாரத்தை அதிகம் வலியுறுத்துவோர் தம்முடைய முயற்சிகள் ஏன் வெகுசிறிதளவே பலன்தருகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், இக்கேள்வி குறித்து அவர்கள் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். வேறுபாடு இருப்பது இதில்தான்: மக்காவில் நபிகளாரிடம் மென்னதிகாரம் மட்டுமே இருந்தது, ஆனால் மதீனாவில் அவர்கள் வல்லதிகாரத்தையும் ஈட்டிக்கொண்டார்கள். விரும்பிய பலன்களை அடையவேண்டுமெனில், மென்னதிகாரம் வல்லதிகாரத்தால் வலுவூட்டப்பட வேண்டும்.
இன்றும் கூட இது வெளிப்படையே. ஓர் உலக வல்லரசாக இருக்கும் யு.எஸ்ஸிடம் பண்புநலம், ஒழுக்க மாண்புகள், பண்பாடு அல்லது நல்லறம் என எவ்வித இயல்பான விழுமியங்களும் இல்லை; எனினும், அதனிடமுள்ள வல்லதிகாரத்தின் காரணத்தினாலேயே மெக்டொனால்டு, கோகோ-கோலா, பெப்சி போன்றவற்றின் உற்பத்திப் பண்டங்கள் அன்றாடம் பல பத்து இலட்சக்கணக்கான மக்களால் நுகரப்படுகின்றன; இத்தனைக்கும், இவ்வுணவுப் பொருட்கள் ஊட்டச்சத்து ரீதியில் பெறுமதி அற்றவையே (அல்லது மிகச் சிறிதளவே பெறுமதி கொண்டவை). அமெரிக்க பாணி ஆடைகளும் கூட இதே காரணத்தினால்தான் உலகம் முழுக்க நவ-நாகரிகமானவை என்று கருதப்படுகின்றன. இராணுவத் தோல்விகளின் விளைவாக யு.எஸ்ஸின் வல்லதிகாரம் குறையக் குறைய, மேற்கூறியவற்றின் மேலுள்ள மோகங்களும் படிப்படியாகக் குறைய ஆரம்பிப்பதைப் பார்க்கமுடிகிறது.
நபியவர்களின் தூதுத்துவப் பணியில் அதிமுக்கியச் சிறப்பு நிகழ்வுகள் எனப் பலவற்றை நம்மால் அடையாளம் காணமுடியும். மக்காவிலிருந்த பதிமூன்று ஆண்டுகளில் அவர்கள் மென்னதிகாரத்தை மட்டுமே பெற்றிருந்தார்கள். அப்போது இஸ்லாத்திடம் ஒரு ஆட்சிப்பரப்புத் தளம் இல்லாதிருந்தமையால், அதன் தாக்கம் வரையறுக்கப்பட்டதாக இருந்தது. இஸ்லாத்தின் அதிகாரத்தை ஒரு முறையான தளத்தின் மீது நிறுவுவதற்கான ஆட்சிப்பரப்பை மதீனா வழங்கியது. முஸ்லிம்களின் மனத்துணிவைச் சோதிப்பதாக அமைந்த பத்ருப் போர், அரேபியாவில் புதியதொரு சக்தி எழுச்சி பெற்றிருக்கிறது என்பதை அரேபியத் தீபகற்பத்தில் வாழ்ந்த மக்களுக்கு கட்டியம்கூறி அறிவித்தது.
எனினும், இராணுவ ரீதியில் வலிமை மிக்கவர்களாகவும், பொருளாதார ரீதியில் செழிப்பு மிக்கவர்களாகவும், கஅபா ஆலயம் மக்காவில் இருந்த காரணத்தால் பல்வேறு அரசியல் கூட்டணிகளைக் கொண்டவர்களாகவும், மிகுந்த செல்வாக்கு பெற்றவர்களாகவும் இருந்த குறைஷிகளின் அதிகாரத்துக்கு எதிராக முஸ்லிம்கள் எவ்வளவு காலம் தாக்குப்பிடித்து நிற்கமுடியும் என்பது பற்றி அரேபியாவின் மக்களுக்கு அப்பொழுது முழு நம்பிக்கை வந்திருக்கவில்லை (இவ்வாறிருக்க, குறைஷிகளின் அதிகாரத்தை முஸ்லிம்களால் முற்றாகத் தோற்கடிக்க முடியுமா என்று அவர்களுக்கு இருந்திருக்கக் கூடிய சந்தேகம் பற்றி தனியே கூறத் தேவையில்லை) .
மதீனா காலகட்டத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு, வல்லதிகாரத்துக்கான மிகவும் திறம்வாய்ந்த ஒரு சான்றாகும். வெற்றி எப்போதுமே மக்கள் மீது உற்சாகமூட்டும் தாக்கம் ஒன்றை ஏற்படுத்துகிறது; மக்கள் தாமாகவே அதை நோக்கி கவரப்படுகிறார்கள். இதற்கு நேர்மாற்றமாக, தோல்வி எப்போதும் வெகுசில ஆதரவாளர்களை மட்டுமே பெற்றிருக்கும்; அதன் பக்க நியாயம் எத்துணை உறுதியான அடிப்படையைக் கொண்டதாகவும் அறிவுக்குப் பொருந்துவதாகவும் இருந்தபோதிலும் சரியே.
நபிவாழ்வு காட்டும் பாதை
இறுதியாக ஒன்றைக் கூற வேண்டியுள்ளது. (முஸ்லிம் உலகில் நடைமுறையிலுள்ள) இன்றைய அரசியல், பொருளாதார, கல்வி அமைப்புகள் இஸ்லாத்தின் குறிக்கோள்களைச் சாதிப்பதற்குப் பொருத்தமான மக்களை உருவாக்குபவையாக இல்லை. இஸ்லாத்தின் விழுமியங்களுக்கு எதிராக இன்று மேலோங்கியுள்ள அமைப்புமுறையின் நலன்களுக்குச் சேவையாற்றக் கூடியவர்களையே அவை உற்பத்தி செய்கின்றன. “இஸ்லாமிய” நிறுவனங்கள் பலவற்றின் விசயத்திலும் இதுவே உண்மையாக இருக்கிறது. ஏனெனில், அவை மேற்கத்தியச் செல்வாக்குகளால் மாசடைந்திருக்கின்றன. எனவே, பெரும்பாலும் அவை முஸ்லிம்களின் தேவைகளுக்குப் பொருத்தப்பாடு அற்றவையாக மாறிப்போயிருக்கின்றன.
நபியவர்கள் தனது வாழ்நாளின் போது எந்த இலட்சியப் பணிக்காகத் தனது தோழர்களைப் பயிற்றுவித்தார்களோ, அவ்வாறான ஒரு பயிற்சியை முஸ்லிம்களுக்கு வழங்குபவையாக இத்தகைய நிறுவனங்கள் இருப்பதில்லை. எனவே, நபியவர்கள் அரேபியத் தீபகற்பத்தில் எந்தவிதமான ஒரு அமைப்புமுறையை நிறுவினார்களோ, நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு அரேபியத் தீபகற்பத்தைச் சுற்றியிருந்த பூமிகளில் நபித்தோழர்கள் எந்த அமைப்புமுறையைத் தொடரச் செய்தார்களோ, அதே அமைப்புமுறையின் மாதிரியில் நாம் நமது ஒட்டுமொத்த அமைப்புமுறையையும் மாற்றியமைக்க வேண்டியது நிர்பந்தமாகிறது.
அல்லாஹ்வுடன் போரில் ஈடுபட்டிருந்த ஆதிக்க அதிகார மையங்களின் நலன்களுக்குச் சேவை செய்யாத ஒரு விழுமியத் தொகுதியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வளர்த்தெடுத்தார்கள். 9:33, 61:09 ஆகிய வசனங்களில் அல்லாஹ் வாக்களித்துள்ளவாறும் கோரியுள்ளவாறும், இஸ்லாத்தை மேலாதிக்கம் பெற்றவோர் முன்மாதிரியாக ஆக்க வேண்டுமெனில் நபிகளார் மற்றும் நபித்தோழர்களுடையதை ஒத்தவொரு பேரியக்கத்தை முஸ்லிம்கள் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறிருக்க, இன்று முஸ்லிம் சமூகங்களில் நிலவும் இஸ்லாத்திற்கு முரணான (ஜாஹிலிய்ய) அமைப்புமுறைகளுக்கு உள்ளே செயற்படுவதன் மூலமோ அல்லது அவற்றுடன் சமரசம் செய்துகொள்வதன் மூலமோ இதனைச் சாதிக்க முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
எனினும் அவப்பேறு என்னவென்றால், நல்லெண்ணம் கொண்ட முஸ்லிம்கள் பலரும் வெகுளித்தனமாக இவ்வாறு எண்ணுகிறார்கள்: “நாம் சேவையாற்றிக் கொண்டிருக்கும் இந்த அமைப்புமுறைகளின் அநீதிகளுக்கு நாம் பொறுப்பாளிகள் இல்லை; நாம் ‘நற்செயல்கள்’ செய்கிறோமா இல்லையா என்பதுதான் கேள்வி.” இத்தகைய கண்ணோட்டத்தை திருக்குர்ஆனோ நபிகளாரின் சுன்னாஹ்வோ ஆதரிப்பதில்லை. முதல் முறை வஹீயைப் பெற்றதன் பிறகு நபிகளார் மீண்டும் குகைக்குத் திரும்பிச் செல்லவில்லை; தியானத்தையும் அமைதியான முறையில் வெறுமனே நற்செயல்கள் புரிவதையும் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கவும் இல்லை. மாறாக, கடைவீதியில் நுழைந்து அந்தச் சமூகத்தில் நிறுவப்பட்டிருந்த ஒழுங்கை சவாலுக்குள்ளாக்கினார்கள்; அச்செயல்முறையில் மகத்தான துன்பங்களை அனுபவித்தார்கள். இவையெல்லாம் இல்லாமல் இஸ்லாம் அந்த இருபத்திமூன்று வருடங்களில் அரேபியத் தீபகற்பத்தில் மேலாதிக்கம் பெற்றவொரு சக்தியாகவோ முன்மாதிரியாகவோ மாறியிருக்க முடியாது.
நிலைத்தன்மை இல்லாத இன்றைய காலங்களில் இறைநிராகரிப்பின் (குஃப்ரு) ஆதிக்கப் பிடியை உடைத்தெறிய வேண்டுமென்றால், முஸ்லிம்கள் சீறாவின் அதிகாரப் பரிமாணங்களின் பால் திரும்புவதைத் தவிர தெரிவேதுமில்லை.
************
மூலம்: Power dimensions in the Sirah of the noble Messenger (saws)
(தமிழில்: உவைஸ் அஹமது)