அறிவியலின் தத்துவம் – ஓர் அறிமுகம்
அறிவியல் என்றால் என்ன என்று கேட்டால் இயற்பியல், வேதியியல், உயிரியல் முதலானவை அறிவியல் என்றே பலரும் பதிலளிப்பார்கள். ஆம், இவையெல்லாம் அறிவியல் ‘பாடங்களே’ என்றாலும், ஏன் நாம் இவற்றை மட்டும் அறிவியல் என்கிறோம்? மற்ற பாடங்களையும் துறைகளையும் ஏன் அறிவியல் என்று அழைப்பதில்லை? இந்தத் துறைகளிடம் உள்ள எந்தத் தன்மை இவற்றை அறிவியல் என்று அடையாளப்படுத்துகிறது? யார் இந்தத் துறை அறிவியல் என்றும், இந்தத் துறை அறிவியல் இல்லை என்றும் முடிவு செய்வது? எதன் அடிப்படையில், எதை அளவுகோலாக வைத்து இந்த முடிவை எடுப்பது?
உலகைப் பற்றியும், உலகிலுள்ளவை பற்றியும் கண்டறிந்து விளக்குவதுதான் அறிவியல் என்று கொள்ளலாமா? அப்படியென்றால் மதங்களும் இவற்றையெல்லாம் பேசவும் விளக்கவும் முற்படுகின்றவே! அவற்றை நாம் ஏன் அறிவியல் என்பதில்லை? நடப்பதையும் நடந்ததையும் ஆராய்ந்து வருங்காலத்தைக் கணிப்பது அறிவியல் ஆகுமா? அப்படியென்றால் பல்வேறு கணிதக் கணிப்புகளைக் கொண்டு வருங்காலத்தை அனுமானிக்க முயலும் ஜோதிடம் போன்ற துறைகளை நாம் அறிவியல் என்கிறோமா? இல்லையே.
குறிப்பிட்ட சில முறைகளைக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்வது அறிவியல் எனக் கொண்டால், வானியல் விஞ்ஞானிகள் வானத்தில் ஆய்வுகளை மேற்கொள்கிறார்களா? அவர்கள் வானத்தை உற்று நோக்கி, அங்கே என்ன உள்ளது, என்ன நடக்கிறது என்பதை அவதானித்துப் பதிவுசெய்கிறார்கள். இதை நாம் அறிவியல் என்று வகைப்படுத்தக் காரணம் என்ன?
இதுபோன்ற பல கேள்விகளுக்கு அறிவியலின் தத்துவவியலாளர்கள் விடை காண முயல்கிறார்கள்.
பெரும்பாலானோர் அறிவியலை ஒரு முறையியல் (methodology) என்பார்கள். ஆனால் அறிவியலின் தத்துவம் சார்ந்த கல்விசார் வட்டங்களில் அறிவியல் இன்னதுதான் என்று ஒருமித்த கருத்து இல்லை. அறிவியல் பற்றி தத்துவார்த்தமாகச் சிந்தித்து, அதிலுள்ள நிறை குறைகளைக் கண்டறிந்து, அதைச் செம்மைப்படுத்துவது அறிவியலின் தத்துவவியலாளர்களது செயல்பாடாகும்.
அறிவியலின் தத்துவவியலாளர்களும் அறிவியலாளர்களும்
அறிவியலைப் பற்றி ஆய்வு செய்ய ஏன் அறிவியல் தத்துவம் (Philosophy of Science) வேண்டும், ஏன் அறிவியலின் தத்துவவியலாளர்கள் வேண்டும், அறிவியலாளர்களும் விஞ்ஞானிகளும் போதாதா என இங்கே கேள்விகள் எழலாம். அறிவியலில் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்துவார்த்த அடிப்படைகளைத்தான் ஆய்வு செய்ய வேண்டும், கேள்விக்குட்படுத்த வேண்டும். அறிவியலாளர்கள் இந்த அடிப்படைகளையே கேள்வி கேட்கத் தொடங்கினால் அவர்களால் அறிவியலை தொடர்ந்து செய்ய இயலாது.
அறிவியலாளர்கள் கொண்டுள்ள அனுமானங்களெல்லாம் சரியா தவறா, இந்த அனுமானங்களை நாம் ஏன் ஏற்க வேண்டும், எவ்வளவு தூரம்வரை ஏற்க வேண்டும் போன்ற கேள்விகளுக்குப் பின்னால் ஓர் அறிவியலாளர் சென்றால் அவர் அறிவியலின் தத்துவம் எனும் பிரபஞ்சத்திற்குள் நுழைந்துவிடுவார். தனது அறிவியல் ஆய்வை என்றைக்கும் அவரால் நிறைவு செய்ய இயலாது.
பல இயற்பியலாளர்கள் இந்தக் கேள்விகளுக்குப் பின் சென்று அறிவியலின் தத்துவப் பாடத்தைப் பயின்றுள்ளனர். The Structure of Scientific Revolutions என்ற ஆய்வு நூலை எழுதி அறிவியல், அறிவியலின் தத்துவம் ஆகிய இரண்டு துறைகளையும் புரட்டிப் போட்ட தாமஸ் கூன் இயற்பியல் பாடத்திலிருந்து அறிவியலின் தத்துவத்திற்கு நகர்ந்தவரே.
அறிவியலும் அறிவாய்வியலும் (Science and Epistemology)
அறிவியலாளர்கள் ஆய்வுகள் செய்து, அவதானம் மேற்கொண்டு அறிவியல் உண்மைகளை அறிந்துகொள்கிறார்கள். அதே சமயம், பிறரிடமிருந்து கேட்டு அறிந்துகொள்வதற்கும் ஆய்வுகள் செய்து அறிந்துகொள்வதற்கும் வித்தியாசம் உண்டு. அறியும்முறைகளை மூன்றாக வகுத்துக்கொள்ளலாம்.
- நேரடியாகப் பார்த்து அறிவது
- பிறரிடம் கேட்டு அறிவது
- நேரடியாகப் பார்க்காமலும், பிறரிடம் கேட்காமலும், முன்னனுபவத்தைப் போன்று உள்ளதாக அனுமானித்து அறிவது
முன்னனுபவம் வழியாக அறிவது இரு வகைப்படும். ஒன்று தொகுத்தறிதல், மற்றொன்று பிரித்தறிதல்.
தொகுத்தறிதல் (Induction)
தனிப்பட்ட அனுபவத்தில் கிடைக்கும் அறிவை நேரடி அனுபவம் இல்லாதவற்றிலும் பொருத்திப் புரிந்துகொள்வது தொகுத்தறிதல் எனப்படுகிறது. அதாவது, ஒருமுறை கண்டுணர்ந்த ஒரு விஷயம் எதிர்காலத்திலும் இவ்வாறே இருக்கும் என்று அனுமானிப்பது; தனக்கு அறிமுகமான ஒரு பொருள், அது எங்கிருந்தாலும் இவ்வாறே இருக்கும் என்று அனுமானிப்பது.
உதாரணத்திற்கு, ஒருவர் நெருப்பைத் தொட்டதால் அவருக்குக் காயம் ஏற்பட்டுவிடுகிறது என்றால் அதன் பிறகு அவர் எங்கே நெருப்பைக் கண்டாலும் அது சுடும் என்று கருதுவார். அதுபோல, முதல்முறையாக மாம்பழத்தைச் சுவைப்பவர் அது இனிப்பாக இருந்தததன் காரணமாக எங்கேயும் எப்போதும் மாம்பழம் இனிக்கவே செய்யும் என்று கருதக்கூடும். இந்த அறிதல்முறை அறிவியலின் ஓர் அடிப்படை. ஒரு தடவை கிடைத்த ஆய்வு முடிவைக் கொண்டு எதிர்காலத்திலும் இதுபோன்ற முடிவே கிடைக்கும், வேறு இடங்களில் நடைபெறும் ஆய்வுகளிலும் இதே முடிவுதான் கிடைக்கும் எனக் கொள்ளப்படுகிறது.
பிரித்தறிதல் அல்லது சிறந்த விளக்கத்தை அனுமானித்தல்
பிரித்தறிதல் (Abduction) அல்லது சிறந்த விளக்கத்தை அனுமானித்தல் (Inference to the Best Explanation – IBE) என்ற இந்த அறிதல்முறையை அறிவியலின் இதயம் எனலாம். அறிவியல் “இருப்பதாக”ச் சொல்லும் பல பொருள்களை யாரும் நேரடியாகப் பார்த்ததில்லை, பார்க்கவும் முடியாது. அணு, எலக்ட்ரான், கருந்துளை என அதற்கு எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். எலக்ட்ரான் நுண்ணோக்கி கொண்டு எலக்ட்ரான்களைப் பார்க்க முடியும் என்றும், கருந்துளையின் புகைப்படம்கூட சமீபத்தில் வெளியானதாகவும் ஒருசிலர் கருதக்கூடும்.
ஒரு விளைவை வைத்து நாம் காணாத ஒரு காரணியத்தை அனுமானிப்பதே IBE ஆகும். தொலைவில் புகை சூழ்ந்துள்ளது என்றால் அங்கே தீப்பற்றி எரிவதாக நாம் அனுமானிக்கிறோம். தீயை நேரடியாகக் கண்டிருக்க மாட்டோம். இதுதான் அறிவியலில் எப்போதும் நடக்கிறது.
கருந்துளையை யாரும் நேரில் கண்டதில்லை. எனினும் கருந்துளை இருந்தால் என்ன விளைவு நிகழுமோ அந்த விளைவைக் கண்டு, அங்கே கருந்துளை உள்ளதாகக் கொள்ளப்படுகிறது. இந்த விளைவுகளுக்கு வேறு விளக்கங்களும் இருக்கலாம். எனினும் இதுவே சிறந்த விளக்கமாகக் கருதப்படுகிறது. அவ்வாறு கருதுவதும் நாம் எந்தக் கோட்பாட்டை சிறந்த கோட்பாடாகக் கருதுகிறோம் என்பதைப் பொருத்தது. ஐன்ஸ்டீன், ஹாக்கிங் போன்றோரின் கோட்பாடுகளை சிறந்த கோட்பாடுகளாகக் கொள்வதால் குறிப்பிட்ட அந்த வானியல் அவதானிப்பின் காரணியாக கருந்துளையை நாம் அனுமானிக்கிறோம்.
IBE பற்றி இன்னும் தெளிவாக விளங்கிக்கொள்ள ஓர் எளிய உதாரணத்தைப் பார்ப்போம். உங்கள் வீட்டின் அடுப்பங்கரையில் சத்தம் கேட்டு நீங்கள் அங்கு விரைந்து சென்று பார்க்கையில் பால் கொட்டியுள்ளது என்று வைத்துக்கொள்வோம். எப்படி இது நடந்திருக்கும் என்பதற்கு பல விளக்கங்களை நீங்கள் தர முடியும். பூனை ஜன்னல் வழியாக உள்ளே வந்து பாலைக் குடித்து கொட்டிச் சென்றுவிட்டதாகச் சொல்லலாம். பால் பாத்திரத்தை சரியாக வைக்காததால் அதுவாகவே தவறி விழுந்ததாகவோ அல்லது வீட்டிலுள்ள சிறுவன் அந்தப் பாத்திரத்தைத் தட்டிவிட்டு ஓடிவிட்டதாகவோகூட சொல்லலாம். இவ்வாறு அனுமானிப்பதே IBE எனப்படுகிறது. இந்த முறையைக் கொண்டுதான் அறிவியலாளர்கள் பல காரணிகளை அனுமானிக்கிறார்கள்.
ஒரு நிகழ்விற்கான காரணியாய் பல விளக்கங்களை அளிக்க இயலும் என்பதே ஒரு சிக்கல்தான். எது சரியான விளக்கம், எது உண்மையில் நடந்திருக்கும் என்பதில் தீர்மானகரமான முடிவுக்கு வர இயலாது. இந்தச் சிக்கல் அறிவியல் கோட்பாட்டிற்கும் பொருந்தும். புவி மையக் கோட்பாடு, சூரிய மையக் கோட்பாடு போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள்.
மேற்கூறிய பால் பாத்திரம் உதாரணத்தில் பாத்திரம் கீழே விழுந்ததற்கு பூனை காரணமாக இருக்கலாம் என்று நம்மில் பலர் கருதக்கூடும். ஆனால் பூனை அவ்வாறு செய்ததை நேரடியாக நாம் பார்த்திருக்க மாட்டோம். பூனைக்குப் பதில் எலியோ குரங்கோ அவ்வாறு செய்ததாக நாம் கற்பனைகூட செய்ய மாட்டோம். அதற்குக் காரணம் நமது முன்னனுபவம் சார்ந்தது. எலியும் குரங்கும் பால் கொட்டி நாம் கேள்விப்பட்டதில்லை, பார்த்ததில்லை. அவ்வாறான முன்னனுபவம் பிறர் வாயிலாகவோ, நேரடியாகவோ நமக்கு இருந்ததில்லை. அதனால் அந்த அனுபவத்தைக் கொண்டு ஒரு முடிவெடுக்கிறோம்.
அறிவியலாளர்கள் என்ன செய்கிறார்கள்?
அறிவியலாளர்கள் அறிவியல் சார்ந்த ஆய்வுகளை எப்படிச் செய்கிறார்கள், எங்கிருந்து ஆய்வுகளைத் தொடங்குகிறார்கள் என்பன முக்கியமானவை. நம் புலன்களால் நேரடியாகவோ கருவிகளைக் கொண்டோ அறியும் தகவல்களைக் கொண்டு எந்த நிகழ்வுப்போக்கை (Phenomenon) விளக்க வேண்டுமோ அதை முதலில் அவதானிப்பார்கள். இரண்டாவது, அவற்றின் மாதிரியை உருவாக்கி அதைக் கொண்டு கோட்பாட்டை வரைவார்கள். இறுதியாக, அந்தக் கோட்பாட்டைப் பரிசோதிப்பார்கள். இவைதாம் அறிவியாளர்களின் பிரதான பணி.
உதாரணத்திற்கு, விண்ணைப் பார்க்கும்போது சூரியனும் சந்திரனும் நம் உலகத்தைச் சுற்றுவதாகத் தெரிகிறது. இதைக் கொண்டு ஒரு கோட்பாடு வரைவார்கள். எதிர்காலத்தைக் கணிக்கவும், நாம் காணும் நிகழ்வுகளை செம்மையாக விளக்கவும் கோட்பாட்டாக்கம் நிகழ்கிறது. அதாவது, புவி நடுவில் இருக்க, சூரியனும் சந்திரனும் அதைச் சுற்றி வருகிறது என்றால் ஒரு சுற்று பூர்த்தியடைய எவ்வளவு காலம் எடுக்கிறது, எப்போது எந்த இடத்தில் அது இருக்கும் என்பன தொகுத்துக் கொள்ளப்படும். இந்நேரத்தில் சூரியன் இங்கே இருக்கும், சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுவிடும்.
இதுபோல ஒரு கோட்பாட்டை உருவாக்குவதன் வாயிலாக நாம் எதிர்கால நிகழ்வுகளைக் கணிக்க முடியும். நாம் காணும் நிகழ்வுகளையும் விளக்க முடியும். இங்கே குறிப்பாக கவனிக்க வேண்டிய சுவாரசியமான விஷயம் என்னவென்றால், புவி மையக் கோட்பாடு தவறானது. ஆனாலும் அந்தக் கோட்பாட்டால் பல்வேறு வானியல் நிகழ்வுகளை துல்லியமாகக் கணிக்க முடிந்தது. இவ்வாறு தவறான கோட்பாட்டாலும் எதிர்காலத்தை சரியாகக் கணிக்க இயலுமெனில், இன்றுள்ள கோட்பாடுகளும் தவறானவையல்ல என்று நாம் எப்படி உறுதியாக நம்புவது? ஒரு கோட்பாடு சரியானது, மெய்மையை அவ்வாறே விளக்குகிறது என்று நாம் எவ்வாறு அறிந்துகொள்வது? இது அறிவியல் தத்துவத்தில் ஒரு முக்கியமான தலைப்பு.
அந்தக் காலத்திலேயே சூரிய மையக் கோட்பாட்டையும் சிலர் முன்மொழிந்திருந்தார்கள். எனினும், சூரியன் மையமாக இருப்பது உண்மையானால் இரு பெரிய நிகழ்வுகளை விளக்க வேண்டியிருந்தது.
- இரவு – பகல் மாற்றம் எப்படி நிகழ்கிறது? உலகம் தன்னைத்தானே சுற்றிச் சுழல்கிறது எனில், நாம் ஏன் அதை உணரவில்லை?
- நாம் நகர்ந்துகொண்டே இருக்கிறோம் என்றால் நட்சத்திரங்கள் ஓரிடத்தில் இருப்பதுபோல் ஏன் தெரிகிறது?
இவ்விரு கேள்விகளுக்கும் விளக்கம் தராததால் அப்போது சூரிய மையக் கோட்பாடு நிராகரிக்கப்பட்டது.
கோட்பாடு மாற்றம்
அறிவியல் பரிசோதனையில் எதிர்பாராத முடிவுகள் வந்தால் என்ன நடக்கும்? அந்தக் குறிப்பிட்ட கோட்பாடு தவறு என்று நிராகரிக்கப்பட்டு வேறு கோட்பாடு உருவாக்கப்படும். ஆனால், யதார்த்தத்தில் இதை அறிவியலாளர்கள் செய்வதில்லை. அவர்கள் கோட்பாட்டில் சில திருத்தங்களைச் செய்து, பொருந்தாத பரிசோதனைத் தரவுகளையும் முடிவுகளையும் பொருத்திவிடுவார்கள்.
ஒரு கோட்பாட்டிலிருந்து மற்றொரு புதிய கோட்பாட்டிற்கு நகர்வது அறிவியல் புரட்சி என்று தாமஸ் கூன் அவரது பிரபலமான அறிவியல் தத்துவ ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார். பல வேளைகளில் இந்தக் கோட்பாடு மாற்றமும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட மனித விருப்பு வெறுப்புகள் காரணமாகவே நிகழ்கிறது. ஒரே தரவுகளைக் கொண்டு நாம் பல்வேறு கோட்பாடுகளையும் உருவாக்க இயலும். அந்த பல கோட்பாடுகளின் வழியாகப் பெறப்படும் எதிர்காலம் குறித்த கணிப்புகளும் பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.
நாம் ஏற்கனவே புவி மையக் கோட்பாடு, சூரிய மையக் கோட்பாடு பற்றி மேலே பேசினோம். புவி மையக் கோட்பாட்டைப் பிரச்சாரம் செய்த, அதற்காக உழைத்த அறிவியலாளர் அறிவியல் ரீதியான காரணங்களைத் தாண்டி அவரது தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாகவே அவ்வாறு செய்ததாக ஒருவர் வாதிட முடியும். ஆனால் அறிவியலுக்கு கோட்பாடு மிகவும் அத்தியாவசியமானது. கோட்பாடின்றி அறிவியல் இல்லை எனலாம். கோட்பாட்டிற்கு அறிவியல் ரீதியான அத்தாட்சிகள் தேவையில்லை. ஏனெனில் அறிவியலே அதை அஸ்திவாரமாகக் கொண்டுதான் நிற்கிறது.
உதாரணத்திற்கு, புவியீர்ப்பு விசை என்ற ஒரு கதையை நியூட்டன் கற்பனை செய்கிறார். அந்தக் கதைதான் அவருடைய கோட்பாடு. பிறகு அந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பல இயற்பியல், வானியல் நிகழ்வுகளை விளக்குகிறார். எதிர்காலத்தைக் கணிக்கிறார். இந்த வேகத்தில் ஒரு கல்லை இன்ன திசையில் எறிந்தால் அது எப்போது, எங்கே விழும் என இந்தக் கோட்பாட்டைக் கொண்டு நம்மால் துல்லியமாகச் சொல்ல முடியும்.
புவியீர்ப்பு விசையை நான் ‘கதை’ என்று குறிப்பிடக் காரணம் அது உண்மையிலேயே ஒரு கட்டுக்கதைதான். நியூட்டன் காலத்து சக இயற்பியலாளர்கள் பல்லாண்டுகள்வரை அதை ஏற்கவில்லை. அவரின் கோட்பாட்டால் சரியான கணிப்புகளைச் செய்ய முடிந்ததாலேயே அதற்கு பொது ஏற்பு உருவானது. புவியீர்ப்பு அல்லது புவியீர்ப்பு விசை (Gravity Or Gravitational Force) என எதுவும் கிடையாது என்று பலப்பல ஆண்டுகளுக்குப் பிறகு ஐன்ஸ்டீன் நிரூபித்தார். ஆனால், இன்றளவும் சாதாரண மக்கள் பலருக்கு இது தெரிவதில்லை. புவியீர்ப்பு என்று ஒன்று கிடையாது, பொருட்கள் விழுவதும் கிடையாது, விழுவது போலத் தெரிகின்றது அதற்குக் காரணம் கால – வெளி வளைவும் (Space – Time Curvature), இருக்கும் இடத்தின் சார்பும் (Frame Of Reference) தான்.
இவ்வாறு ஒரு கோட்பாடு வேலை செய்கின்றது என்பதால் மட்டும் அந்தக் கோட்பாடு உண்மையாகிவிடாது என்பதை புவி மையக் கோட்பாடு நமக்கு உணர்த்தியுள்ளது. நமக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் ஏதோவொரு புதிய தகவல் அவதானிப்பு நாம் இன்று கொண்டுள்ள கோட்பாடுகளைத் தவறு என நிரூபிக்கலாம். இந்தப் பிரச்னையை அறிவியல் தத்துவத்தில் Problem of Underdetermination என்பார்கள். மேலும், நாம் இன்று கொண்டுள்ள தகவல்களையும் அவதானிப்புகளையும் வைத்து இன்றுள்ள வெற்றிகரமான கோட்பாடுகளுக்கு இணையான இன்னொரு கோட்பாட்டையும் உருவாக்க இயலும். இதன் விளைவு Scientific Instrumentalism எனப்படும் சிந்தனைப் பள்ளியாகும்.
Scientific Instrumentalism என்பதை அறிவியல் பயன்பாட்டுவாதம் எனலாம். அதாவது, ஒரு கோட்பாட்டின் வாயிலாக நாம் சரியாக எதிர்காலத்தைக் கணிக்க முடிந்தாலும், இயற்கை நிகழ்வுகளுக்கான சிறந்த விளக்கங்களைக் கொடுத்தாலும், அதை உண்மையான கோட்பாடு என்று கருத இயலாது. ஏனெனில், பொய்யான கோட்பாடுகளைக் கொண்டும் பல சரியான கணிப்புகள், விளக்கங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மட்டுமின்றி, வெறும் கருத்தளவிலேயே Problem of Underdetermination எனப்படும் பிரச்னையும் உள்ளது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், நம்மால் ஒருபோதும் உண்மையான விளக்கத்தை, காரணத்தைக் கொடுக்கும்படியான ஒரு கோட்பாட்டைக் கண்டுபிடிக்கவே முடியாது. மாறாக, நமது கோட்பாடுகளினால் நல்ல பயன் உள்ளது என்றால் நாம் அதைக் கொண்டு திருப்தி அடைந்துகொள்ள வேண்டும். கோட்பாட்டை சீர்படுத்தி இன்னும் பல பயன்களைப் பெற முயல வேண்டும். இதுவே அறிவியல் பயன்பாட்டுவாதம் ஆகும்.
அறிவியல்வாதம் (Scientism)
நம் அன்றாட வாழ்வின் பயன்பாட்டில் அறிவியல் கலந்துள்ளது. இந்தக் கட்டுரையையும் அறிவியலின் பயன்பாட்டாலேயே நாம் வாசித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த அறிவியல் பயன்பாடுகளால் மதிமயக்கம் கொண்டு அறிவியல் நம் கருத்துகள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக் கூடாது. ஒரு கூர்மையான ஆயுதத்தைப் போன்ற ஒரு கருவிதான் அறிவியலும். அதைக் கொண்டு நாம் அறுவை சிகிச்சை செய்யலாம், அல்லது கொலையும் செய்யலாம். தானாக அறிவியலால் எதுவும் செய்ய இயலாது.
அறிவியல் என்று தனியாக எதுவும் இல்லை. அறிவியலாளர்கள் அல்லது அறிவியலாளர்களின் குழுமம்தான் அறிவியல் எனவும் எளிதாக வாதிட முடியும். ஆனால், அறிவியலால் மதிமயக்கம் கொண்டோர் அதைக் கருவியாகப் பார்ப்பதில்லை, கடவுளாகப் பார்க்கிறார்கள். அறிவியலாளர்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்று கருதுகிறார்கள். இதுவே அறிவியல்வாதம் எனும் கருத்தியல் ஆகும்.
ஓரிரு வாரங்களுக்கு முன் ட்விட்டரில் பிரெஞ்சு அறிவியலாளர் ஒருவர், சூரியனிலிருந்து 4 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ஒரு நட்சத்திரம் என ஒரு படத்தைப் பதிவிட்டார். அதைப் பார்த்த சிலர் அறிவியலையும் அறிவியலாளர்களையும் புகழ்ந்து தள்ளினார்கள். பிறகு, அது அவரது உணவான சாசேஜ் எனவும், தான் அதனை கேலியாகப் பதிவிட்டதையும் விளக்கினார்.
சுமார் 100 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதரிடம். தங்களின் தாய் என்று யாரை நீங்கள் கருதுகிறீரோ அவர் தான் உங்களை உண்மையில் ஈன்றெடுத்தவர் என்பதற்கு சான்று என்னவென்று கேட்டால், அவர் தாயுடன் இருந்தவர்களிடம் கேட்டு அவர்களின் சாட்சியை சான்று எனக் கருதுவார். இன்று இதே கேள்வியை ஒரு பள்ளி மாணவனிடம் நான் கேட்டேன் அதற்கு அவன் DNA test மூலம் நிரூபிப்பேன் என்றான்.
எது சான்று, எது உண்மை, எதைக் கொண்டு நாம் உண்மையை அறிந்துகொள்ள முடியும், நிரூபிக்க முடியும் போன்ற கேள்விகளில் அறிவியல் நம் சிந்தனையைப் பெரிதும் கைப்பற்றியுள்ளது. அறிவியலைக் கொண்டு மட்டுமே நாம் உண்மையை அறிந்துகொள்ள முடியும் என்ற கருத்தியலால் நாமனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம், எந்தளவு என்பதில் வேறுபாடு இருக்கலாம்.
ஏதோ ஒன்றை அறிந்துகொள்ள அல்லது உண்மைதானா என்று பரிசோதிக்க பல வழிகள் உள்ளன. அதே மாணவனிடம் நான் DNA Test பரிசோதிக்க இயலாதெனில், எப்படி நிரூபணம் செய்வாய் என்று கேட்டதற்கு குழந்தையை வைத்திருப்பது போல் புகைப்படம்/காணொளி கொண்டு நிரூபிக்கலாம் என்றான். தன் தாயின் நண்பர்கள் உறவினர்களின் சான்றைக் கொண்டும் நிரூபிக்கலாம் என்றேன் நான்.
காணொளி ஆதாரம் பொய்யாக இருக்கலாம் அல்லவா என்று நான் வினவினேன். அவன் வீண் விவாதம் செய்யவில்லை. இன்று Deep Fake போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் மிகவும் துல்லியமாக போலிக் காணொளிகளை தயாரிக்க இயலும். நண்பர்கள், உறவினர்கள் மறந்திருக்க கூடும் அல்லது பொய் சொல்ல கூடும். அவ்வாறானால், DNA Test தான் சிறந்ததா?
நண்பர் – உறவினரிடம் சான்று கேட்பது, காணொளி காண்பது ஆகியவை நேரடியான பரிசோதனை முறைகள், நேரடியாக அறிந்துகொள்ளப் பயன்படுபவை.
ஆனால், DNA Test என்பது அவ்வாறல்ல, அது ஒரு கருத்தாக்கம் (Concept). இன்னும் சரியாக சொல்லவேண்டுமென்றால் பல கருத்தாக்கங்களை, அனுமானங்களை (Assumptions) ஒன்றாகக் கொண்டிருக்கும் ஒரு குவியல் கருத்தாக்கம்.
DNA டெஸ்டில் சொல்லப்பட்டுள்ள முடிவு சரிதானா என்று நம்மால் பரிசோதிக்க இயலாது. அவ்வளவு ஏன், அதில் என்ன முடிவு சொல்லப்பட்டுள்ளது என்பதைக் கூட நம்மால் வாசிக்க இயலாது. ஆங்கிலம் மட்டும் தெரிந்திருக்கும் ஒருவராலும் ஆங்கில அறிக்கையை வாசித்து என்ன முடிவு எனக் காண இயலாது. ஏனெனில், அது அறிவியல் மொழியில் அச்சிடப்பட்டிருக்கும், பாசிட்டிவ் என்றோ நெகடிவ் என்றோ.
DNA Test எனப்படும் ஒட்டுமொத்த செயல்பாட்டில் தொடக்கம் முதல் முடிவு வரை ஏகப்பட்ட அனுமானங்கள் பொதிந்துள்ளன.
சில அனுமானங்கள்:
- DNA என்று ஒன்றுள்ளது
- தாய்/தந்தை பிள்ளைகளுக்கு அதில் சில ஒருமைப்பாடுகள் இருக்கும்
- அந்த ஒருமைப்பாட்டை நாம் கண்டறிய இயலும்
இவை மூன்றும் மிக அடிப்படையான அறிவியல் கருத்தாக்க அனுமானங்கள்.
அடுத்து, அறிவியல் தொழில்நுட்ப அனுமானங்கள்.
- DNA வை தொழில்நுட்ப உதவியோடு சரியாகக் கண்டறிய இயலும்
- தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு சரியாக ஒப்பிட்டுப் பார்க்க இயலும்
தொழில்நுட்பப் கருவிகளில் கோளாறில்லை என்றபோது, மனிதர்கள் சரியாக அதைக் கையாள்கிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். முடிவை சரியாக அச்சிடுகிறார்களா?
DNA பரிசோதனை சரியாக நடந்துள்ளதா என்று அறிந்துகொள்ள நாம், உயிரியல் பாடத்தைக் கற்க வேண்டும். அதில் கையாளப்படும் தொழில்நுட்பங்களைக் கற்க வேண்டும். அதில் பயன்படுத்தப்படும் மொழியைக் கற்க வேண்டும். இறுதியாக அவை அனைத்தையும் கையாளும் மனிதர்கள் சரியாகச் செய்தார்களா என்றும் காண வேண்டும்.
இவை அனைத்தும் கூட முதல் நிலை அனுமானங்கள் மட்டுமே எனலாம். இதற்க்கு அடுத்த நிலையில் அறிவியல் முறையையே கேள்விக்குட்படுத்தி அலசி ஆராயலாம்.
DNA பரிசோதனை எவ்வாறு நடக்கிறது என்பதை விளக்குவதோ அல்லது இதெல்லாம் பொய் சதிக் கோட்பாடு எனக் கூறுவதோ நம் நோக்கமல்ல. அதில் புதைந்துள்ள அனுமானங்களின் பக்கம் நம் கவனத்தைச் செலுத்துவதே நோக்கம்.
இந்த முறைகளை, தொழில்நுட்பங்களை, இதில் ஈடுபடும் மனிதர்கள் அனைவரையும் நாம் நம்பவேண்டும். அறிவியல் பரிசோதனைகளிலும் ’சான்று பகர்தல்’ பெருமளவில் பங்குபெற்றுள்ளது.
இன்று அறிவியல் எல்லா துறைகளிலும் தாக்கம் செலுத்துகிறது. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் அதன் பின்னே ’அறிவியல்’ என்ற வார்த்தையை நாம் சேர்த்துக்கொள்கிறோம். அவ்வாறு சேர்த்துக்கொள்வதால் அத்துறை சார்ந்தவர்கள் தங்களையும் உயர்ந்தவர்களாகக் கருதிக்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, சமூக அறிவியல் (Social Science), நிர்வாக அறிவியல் (Management Science) எனச் சொல்லிக்கொண்டே போகலாம். சுவாரசியமான தகவல்: நியூட்டன் காலத்தில் தத்துவம் உயர்ந்த அந்தஸ்தைக் கொண்டிருந்தது, எனவே, அன்று இயற்பியலை (Physics) ’இயற்கை தத்துவம்’ (Natural Philosophy) என்றே அழைத்தார்கள். இன்று அறிவியல் துறையுடன் தங்கள் துறையைச் சேர்த்துக்கொள்ள முயற்சிப்பது போல, அன்று தத்துவத் துறையுடன் தங்களை இணைத்துக்கொண்டிருந்தார்கள்.
அறிவியல் உண்மை
நாம் அடிக்கடி கேட்கும் ஒரு வார்த்தை scientific fact (அறிவியல்-உண்மை) என்பதாகும். அல்லது வெறும் fact (உண்மை) எனச் சொல்லி, ”ஏனெனில் அதை அறிவியல் நிரூபித்துள்ளது” என்பார்கள். அறிவியல்-உண்மை (scientific fact ) என்றால் என்ன? உண்மை உண்மை தானே? அதை ஏன் அறிவியல் உண்மை என்று நாம் பிரித்துப் பார்க்கிறோம்? அவ்வாறு பிரிப்பது சரியா? அவ்வாறு பிரிப்பதன் பொருள் என்ன? அதன் விளைவு என்ன?
அறிவியல்-உண்மை என்பது அறிவியல் கோட்பாட்டைச் சார்ந்திருக்கும் ஒரு உண்மையாகும். அந்தக் கோட்பாடு பொய் என்று ஆகிவிட்டால் அந்த தனிப்பட்ட உண்மையும் பொய் ஆகிவிடும். உதாரணத்திற்கு, இன்று டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு அறிவியல்-உண்மை எனப்படுகிறது. உயிரற்ற ஒரு பொருளிலிருந்து, திடீரென்று மாயாஜாலம் போல் உயிர் உருவாகி, பின்னர், இயற்கையின் தேர்வு (Natural Selection) எனப்படும் நோக்கமற்ற இயற்கைச் செயல்பாடு மூலம் ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக மாறுகிறது. இவ்வாறுதான் மனிதனும் தோன்றினான். மனிதனுக்கும் குரங்குக்கும் ஒரு பொதுவான மூதாதையர் (Common Ancestor) விலங்கினம் உண்டு எனபனவற்றை டார்வினிச கோட்பாடு சொல்கிறது. (குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் படியே தவறாகும். புவி ஈர்ப்பு விசையை பற்றி சராசரி மக்களுக்கு தெரியாததைப் போலவே இதுவும் பலருக்கு தெரிவதில்லை). இந்தக் கோட்பாடு தவறு என்று நிரூபிக்கபட்டு விட்டால் பிறகு குரங்கும் மனிதனும் ஒரே மூதாதையர்களைக் கொண்ட விலங்குகள் எனச் சொல்வதும் பொய் ஆகிவிடும். ஆனால், இந்தக் கோட்பாட்டினை தவறு என்று எப்படி நிரூபிப்பது, அல்லது சரி என்று எப்படி நிரூபிப்பது?
முதலில், டார்வினிச பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு ஒரு அறிவியல் கோட்பாடுதானா?அறிவியலை நாம் எவ்வாறு பிற அறிவுத் துறைகளிடமிருந்து பிரித்தறிய முடியும் என்ற கேள்விக்கு கார்ல் பாப்பர் ஒரு வரையறை கொடுக்கிறார். அறிவியல் கோட்பாடுகள் பொய்ப்பிக்கக் கூடியவையாக இருக்க வேண்டும் என்கிறார். அதாவது, நான் ஒரு அறிவியல் கோட்பாட்டை முன்வைக்கிறேன் என்றால், அப்போது இந்த அவதானிப்பு நிகழ வேண்டும்; அவ்வாறில்லையெனில் எனது கோட்பாடு தவறு என்று என் கோட்பாட்டை பொய்ப்பிக்கும் வழிமுறையையும் நான் கூற வேண்டும்.
உதாரணத்திற்கு, ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டை எடுத்துக்கொள்வோம். பெரிய பொருள்கள் வெளியை வளைக்கும் என இந்தக் கோட்பாடு கூறுகிறது. இது உண்மையானால், பெரிய பொருள்களுக்கு அருகே உள்ள ஒளிக்கதிர்கள் வளைய வேண்டும். அவ்வாறு வளையவில்லை எனில் ஐன்ஸ்டீன் முன்வைத்த பொது சார்பியல் கோட்பாடு தவறு என்றாகிவிடும். ஐன்ஸ்டீன் அவரது பொது சார்பியல் கோட்பாட்டை 1916ம் ஆண்டு பதிவுசெய்தார். அந்தக் கோட்பாடு கணித்த விளைவு 1919ம் ஆண்டு சூரிய கிரகணம் நிகழும்போது காணப்பட்டது. எனவே அவருடைய கோட்பாடு அறிவியல் உண்மை ஆகிறது.
ஆனால், சுவாரசியம் என்னவென்றால், நியூட்டனின் கோட்பாட்டின் வாயிலாகவும் ஒளி வளையும், எந்த அளவு வளையும் என்றெல்லாம் கணிக்கப்பட்டிருந்தது. நியூட்டனின் கோட்பாட்டில் வெளி வளைவு கிடையாது, எனினும், அவர் ஒளியை கதிராக அல்லாமல் துகளாகக் கருதினார். மற்ற பொருள்கள் போல ஒளித் துகள்களும் புவி ஈர்ப்பு விசையால் பாதிக்கப்பட்டு வளைகின்றன எனக் கருதப்பட்டது. ஒரு வேளை, ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு இல்லாமல் இருந்திருந்தால் ஒளித் துகளின் கனம்தான் வளைவிற்கு காரணமாகக் கருத்தப்பட்டிருக்குமே தவிர வெளியின் வளைவு அல்ல. இவ்வாறு நம் அவதானங்களை நாம் உண்மை என ஏற்கும் கோட்பாடுகள் பாதிக்கின்றன. இதே போல, டார்வினிசக் கோட்பாட்டால் விளக்க முடியாதவற்றை மரபணுவியல் துறை வாயிலாகக் கண்டறிந்த அறிவியல் உண்மைகளுடன் சேர்த்து ’புது-டார்வினிசம்’ என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டு அதுவே இன்று பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் பிரதான கோட்பாடாக உள்ளது. டார்வினுக்கு முன்னரும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு இருந்துள்ளது. லமார்க்கியன் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு ஒரு முக்கிய உதாரணம்.
ஒரு அவதானத்தை அடிப்படையாகக் கொண்டே கோட்பாடு வரைய வேண்டும். அவதானம், கோட்பாடு கணிப்பது போல் இல்லாத பட்சத்தில் அந்தக் கோட்பாட்டை தூக்கி எறிய வேண்டும். ஆனால் எதார்த்தத்தில், ஒரு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே ஒரு அவதானிப்பு பொருள்படுத்தப்படுகிறது. இது கார்ல் பாப்பர் சொல்லும் பொய்மைப்படுத்துதல் வரையறைக்கு முற்றிலும் மாறானது. இதை Theory Laden Observation என தாமஸ் கூன் குறிப்பிடுகிறார்.
சரி, பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை பொய்ப்பிப்பதுதான் எப்படி? அதைப் பொய்ப்பிக்க வழியுள்ளதா? கேம்ப்ரியன் காலத்துக்கு முன்னுள்ள தொல்லுயிர் படிவத்தில் முயல் அல்லது வேறேதேனும் பாலூட்டி வகை உயிரினம் இருந்ததற்கான அடையாளம் இருந்தால் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு பொய் என்பதாக நிரூபணம் ஆகிவிடும் என ஓரிரு பரிணாம உயிரியலாளர்கள் கருதியுள்ளார்கள். உண்மையில் அதுபோன்றதொரு தொல்லுயிர்ப் படிவம் கிடைத்தாலும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை நம்பும் அறிவியலாளர்கள் அந்தக் கோட்பாடு பொய் என்று ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
அறிவியலின் வரலாற்றில் இது போல பொய்ப்பிக்கப்பட்ட கோட்பாடுகளையும் அறிவியலாளர்கள் கைவிட்டதில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி அந்த அவதானிப்பையும் கோட்பாட்டிற்குள் சேர்த்துவிடவே முயற்சிப்பார்கள். உதாரணத்திற்கு, யுரேனஸ் என்கிற கோள் நியூட்டனின் கோட்பாடு கணித்த பாதையில் செல்லவில்லை. எனவே, நியூட்டனின் கோட்பாடு தவறு என்று தூக்கி எறிந்திருக்க வேண்டும். ஆனால் இயற்பியலாளர்கள் இருவர், அந்தக் கோட்பாடு சரி என்று நம்பி, அந்த தவறான பாதைக்கு வேறு காரணம் இருக்கும் என்று கூறி நெப்டியூன் என்னும் மற்றொரு கோளை அனுமானித்தார்கள்.
எனவே, நாளை கேம்ப்ரியன் காலத்துக்கு முன்னுள்ள தொல்லுயிர்ப் படிவத்தில் முயலைக் கண்டாலும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை நம்புபவர்கள் அவர்களின் பகுத்தறிவைப் பயன்படுத்தி தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்கள். அதை ஒரு விலக்காகக் கருதுவார்கள், இல்லையேல் கோட்பாட்டில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தி, இதையும் அதில் பொருத்தி, இன்று புது-டார்வினிசம் இருப்பது போல அதை ’மிகப் புதிய-டார்வினிசம்’ என்று பெயர் சூட்டிவிடுவார்கள்.
அறிவியலும் அரசும்
அறிவியல் ஆய்வுகள் நிகழ்த்த நிறைய பொருளாதாரத் தேவையுள்ளது. அறிவியலாளர்களுக்கும் பணம் தேவை, அறிவியல் ஆய்வுகள் நடத்த இடம் தேவை, பொருட்கள் தேவை. இவற்றையெல்லாம் தனி மனிதர்களால் ஏற்பாடு செய்ய இயலாது. பெரும்பாலான அறிவியல் ஆய்வுகளை அரசுகளே முன்னெடுக்கின்றன நிதியுதவி செய்கின்றன. சில ஆய்வுகளைப் பரிசோதிக்க பல கிலோமீட்டர் அளவிலான இடமும் ஆய்வுக் கருவிகளும் தேவைப்படும்.
அரசு இந்த ஆய்வுகளால் பெறப்படும் பயன்பாடுகளை தன்னை வலுப்படுத்திக்கொள்ளவும், பிறரை அச்சுறுத்தவும் பயன்படுத்திக்கொள்ளும். இன்று நாம் பயன்படுத்தும் இணையம் அமெரிக்க ராணுவ தொலைத்தொடர்புக்காக அமெரிக்க அரசால் உருவாக்கப்பட்டது. இவ்வாறு அரசு நிதி செலுத்துவதால் அரசின் கட்டுப்பாட்டில் அறிவியலும் அறிவியலாளர்களும் உள்ளார்கள். அதே போல், அரசும் தனது முடிவெடுக்கும் குழுக்களில் அறிவியலாளர்களை இணைத்துக்கொள்கிறது. அரசின் அறிவியல் அல்லாத திட்டங்களிலும் கூட அறிவியலாளர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
அறிவியலால் நன்மை நிகழும் பொது அறிவியலாளர்களும் அறிவியலை வணங்குபவர்களும் அறிவியலை போற்றித் துதிபாடுவார்கள். ஆனால், அறிவியலால் ஏதேனும் பிரச்சனை அல்லது தீமை நிகழ்ந்தால் குறிப்பிட்ட அறிவியலாளரின் மீது பழிபோடுவார்கள். அறிவியல் அப்பாவி குழந்தை என்பார்கள். நன்மை நடக்கும்போதும் அந்தக் குறிப்பிட்ட அறிவியலாளரை மட்டுமே புகழ்ந்தால் அறிவியல் என்ற கருத்தாக்கம் ஒரு கருவியாக மட்டும் சுருங்கிவிடும் எனத் தோன்றுகிறது.
அறிவியலால் நன்மைகள் நடந்துள்ளன. ஆனால் அதைவிடப் பன்மடங்கு அதிகமான தீமைகளும் நடந்துள்ளன. ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்டு லட்சக்கணக்கான மனிதர்கள், குழந்தைகள், மிருகங்கள் ஒரே நொடியில் சாம்பலானது மட்டுமல்லாமல், டார்வினிச பரிணாமக் கோட்பாட்டால் கறுப்பினத்தவர்கள் தாழ்ந்தவர்கள், முழுமையாக பரிணாம வளர்ச்சி அடையாதவர்கள் போன்ற சமூக டார்வினிசக் கோட்பாடும் கறுப்பினத்தவர்கள் ஒடுக்குமுறையும் நிகழ்ந்துள்ளன. இன்று மனோதத்துவம் முழுவதுமாக டார்வினிச பரிணாமக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகிறது. தத்துவவியலின் கிளையான அறவியல் துறையிலும் (Ethics) அறிவியல் ஆதிக்கம் செலுத்த நாடுகிறது.
அறிவியல் என்பது ‘என்ன உள்ளது’ என்பதைக் கண்டறிய உதவும் அறிவுத்துறையாகும். அறவியல் (morality) என்பது ‘எப்படி இருக்க வேண்டும்’, ’எது சரி, எது தவறு’ என்பதைக் கண்டறிய உதவும் அறிவுத்துறையாகும். ’என்ன உள்ளது’ என்பதிலிருந்து ’எப்படி இருக்க வேண்டும்’ என்ற கேள்விக்கு பதிலளிக்க இயலாது, இது ஒரு தர்க்கப் பிழை. ’எப்படி இருக்க வேண்டும்’ எனத் தீர்மானிப்பதில் ’என்ன உள்ளது’ என்பதின் பங்கும் இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. ஆகையால், அறிவியலின் கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ”அறிவியலின் கருத்தை, முடிவை மட்டும்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். சரி தவறு எது என அறிவதற்கான ஒரே வழி அறிவியல்தான்” என்பது அறிவியல்வாதம் ஆகும்.
முடிவுரை
அறிந்தோ அறியாமலோ அறிவியல்தான் உயர்ந்தது என்று கருதுவதால் மக்கள் தங்கள் கருத்தியலை, மதத்தை உண்மைப்படுத்த அறிவியலின் உதவியை நாடுகிறார்கள். குறிப்பாக, முஸ்லிம்கள் ”குர்ஆனில் அறிவியல் உண்மை உள்ளது. எனவே குர்ஆன் உண்மையானது” என்று வாதிடுகிறார்கள். ஆனால், இந்த வாதத்தில் ஒரு பிழையுள்ளது. அறிவியல்-உண்மைக்கும், உண்மைக்கும் வித்தியாசம் உள்ளது. இதைப் பற்றி நாம் மேலே பேசியுள்ளோம். அறிவியல்-உண்மை மாறக்கூடியது. குர்ஆன் என்றும் மாறாதது. குர்ஆனில் அறிவியல்-உண்மை உள்ளது என்று வாதிட்டு அழைப்புப் பணி செய்த மேற்கத்திய முஸ்லிம்கள் இன்று அவ்வாதம் தவறு என்பதை ஒப்புக்கொண்டு அதிலிருந்து நகர்ந்துவிட்டனர்.
ஆனால், இன்று மற்றொரு சிக்கல் எழுந்துள்ளது. அனைவரும் தங்கள் முன்னோர்கள்தாம் அறிவியலின் முன்னோடிகளாக இருந்துள்ளார்கள் எனக் கோருகிறார்கள். இதுவும், ’அறிவியல் உயர்ந்தது’ என்கிற மனப்பான்மையிலிருந்து எழும் கருத்தாக இருக்கவே வாய்ப்புள்ளது.
அறிவியல்-உண்மையானது புலனறிவு-உண்மை போன்றதல்ல, அதாவது, நாம் நேராக நம் கண்களால் காணக்கூடியதொரு உண்மை போன்றதல்ல. மாறாக, அது ஒரு கோட்பாட்டைச் சார்ந்த உண்மையாகும். கோட்பாடு மாறும்போது அந்த உண்மையும் பொய்யாகிவிடும்.
அறிவியல் கோட்பாடுகள் மாறிக்கொண்டே இருக்கும். எனவே, நாம் அறிவியல் கோட்பாட்டில் நம்பிக்கை கொள்ளாமல் அதன் பயன்பாட்டை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்.
அறிவியலுக்கு எல்லைகள் உள்ளது போல, அறிவியலில் போதாமைகள் இருப்பது போல, அறிவியல் தத்துவத்திற்கும் எல்லைகளும் போதாமைகளும் உள்ளன. அறிவியலின் தத்துவத்தின் உதவிகொண்டு அறிவியலை ஆதரிப்பவர்களும் உண்டு, அறிவியலை எதிர்ப்பவர்களும் உண்டு.
References: