பாவத்தின் வசீகரம்
தடுக்கப்பட்ட வழியில் அனுபவிக்கும் இன்பத்தைவிட அதனால் ஏற்படும் துன்பம் அதிகமாக இருக்கும். இங்கு ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய விலை இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய கடமைகள் இருக்கின்றன. திருடித் தின்பவன் ஒருநாள் வசமாக மாட்டிக் கொள்வான். அவனால் எல்லா சமயத்திலும் தப்பிக்க முடியாது. எல்லா சமயத்திலும் அவனால் விழிப்புணர்வோடு, புத்திசாலித்தனத்தோடு நடந்துகொள்ள முடியாது. அவன் அனுபவித்த இன்பங்களுக்குப் பலமடங்கு துன்பங்களை அவன் அனுபவிக்க நேரிடலாம். ஒருவேளை அவன் வெளியில் அகப்படவில்லையென்றாலும் அவனுடைய அகத்திலிருந்து திடீரென உருவெடுக்கும் வெறுமையின் பிடியிலிருந்து அவனால் தப்பிக்க முடியாது. இங்கு அனுபவிக்கும் ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய கூலியை மனிதன் விரும்பியோ விரும்பாமலோ வழங்கி விட வேண்டும்.
இறைவன் மனிதனுக்குத் தீங்கிழைக்கும் விசயங்களைத்தான் தடைசெய்துள்ளான். தடைசெய்யப்பட்டவற்றைவிட்டு தவிர்ந்திருப்பதால் அவனுக்குத்தான் நல்லது. அதனால் இறைவனுக்கு எந்த இலாபமும் இல்லை. அந்தத் தடையை மீறும்போது அவன் தனக்குத்தானே அநீதி இழைப்பவனாக ஆகிவிடுகிறான்.
மனிதர்கள் அடையும் கண்ணியத்திற்கும் அவர்களுடைய பேணுதலான வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. அவர்கள் அடையும் இழிவுக்கும் அவர்களின் கட்டற்ற வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. மனம் அதற்கு உகந்த விசயங்களைக் கொண்டுதான் நிம்மதியடைகிறது. அதற்கு மாறான விசயங்களைக் கொண்டு அது துன்பம் அடைகிறது.
ஏன் தடுக்கப்பட்டவற்றில் ஈர்ப்பு மிகுந்து காணப்படுகிறது? பாவங்களில் ஒருவித வசீகரம் இருப்பதால்தானே மனிதன் மீண்டும் மீண்டும் அவற்றில் ஈடுபட்டுக் கொண்டேயிருக்கிறான்? மனம் தன்னிடம் இருப்பவற்றை விட்டுவிட்டு இல்லாதவற்றுக்காக ஏன் ஏங்கிக் கொண்டேயிருக்கிறது?
“அவன் உங்களுக்கு ஈமானை பிரியத்திற்குரிய ஒன்றாக ஆக்கினான். உங்கள் உள்ளங்களில் அதனை அழகாக்கினான். அவனை நிராகரிப்பதையும் அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதையும் பாவம் செய்வதையும் உங்களுக்கு வெறுப்புக்குரியவையாக ஆக்கினான்”
அல்ஹூஜூராத் என்ற அத்தியாயத்தில் இடம்பெறும் இந்த வசனத்தில் மேற்கண்ட கேள்விகளுக்கு விடைகளிருப்பதாக நான் கருதுகிறேன். விருப்பும் வெறுப்பும் உள்ளத்திற்கு புகட்டப்பட வேண்டும். இந்த விருப்பும் வெறுப்பும் எப்படி உருவாகின்றன என்பது ஆச்சரியமான ஒன்று. ஒன்றை நாம் விரும்புகிறோம் எனில் அல்லது ஒன்றை நாம் வெறுக்கிறோம் எனில் அதற்கான சரியான காரணத்தை நம்மால் கூற முடியுமா? நாமே காரணங்கள் உருவாக்கிக் கொள்கிறோம். ஆனால் அதே காரணிகள் காணப்படும் மற்ற பொருட்களை நாம் நேசிப்பதோ வெறுப்பதோ இல்லையே!
மேற்கண்ட வசனம் நபித்தோழர்களைக் குறித்து சொல்லப்பட்ட வசனம். அதே சமயம் அது நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய வசனம். ஈமானை, நற்செயல்களை நாம் நேசிப்பதும் அல்லாஹ்வை நிராகரிப்பதை, அவன் கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதை, தீய செயல்களை நாம் வெறுப்பதும் மாபெரும் அருட்கொடை. அது உள்ளத்திற்கு வழங்கப்படும் அருட்கொடை. அதற்கு ஈடான வேறு அருட்கொடை இல்லை. நம்மால் நல்லவற்றை நேசிக்க முடிந்தால் தீயவற்றை வெறுக்க முடிந்தால் நாம் இயல்பு நிலையில் இருக்கின்றோம் என்று பொருள்.
பாவத்திற்கு ஒரு வசீகரம் இருக்கிறது. ஆனால் அது மேலோட்டமான வசீகரம். அதனுள்ளே வெறுமையும் நிராசையும் அழிவும் இருக்கிறது. உண்மையில் அது நமக்கு நாமே செய்யும் தீங்கு. அதனுள் செல்லச் செல்ல நாம் நம் சுயத்தை இழந்துவிடுவோம். நம்மை நாமே மறந்து விடுவோம். அடிமைபோன்று செயல்படத் தொடங்கிவிடுவோம்.
நேசம்தான் நம்முடைய செயல்களை அலங்கரிக்கும். நேசம்தான் நம்மை செயல்படத் தூண்டும். ஈமானிய நேசம் நமக்கு வழங்கப்பட்டுவிட்டால் நற்செயல்கள் அழகானவையாக பாவமான செயல்கள் அருவருப்பானவையாக நமக்குத் தென்படத் துவங்கும்.
நேரான வழியில் நிலைத்திருப்பது, தவறான விசயங்களைவிட்டு விலகியிருப்பது ஆகிய நோக்கங்களைத் தவிர மனிதனுக்கு பெரிய அளவில் வேறு நோக்கம் அவசியமில்லை என்று கருதுகிறேன். தனிமனிதன் தன்னளவில் அவன் விரும்பும் வேறு நோக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். நான் கூறுவது சமூக அளவில் அவன் மீது சுமத்தப்படும் நோக்கம் என்றளவில்.
இந்த இரண்டுமே பார்ப்பதற்கு சாதாரணமானவையாகத் தெரிந்தாலும் வாழ்வில் கடைப்பிடிப்பது கொஞ்சம் கடினமானது. மனிதன் தன் வாழ்க்கை முழுவதும் நேரான பாதையைவிட்டு பிறழச் செய்யும் தடைகளையும் தவறான பாதையின் பக்கம் இழுத்துச் செல்லும் ஈர்ப்புகளையும் எதிர்கொண்டு கொண்டேயிருப்பான். அந்தத் தடைகளையும் ஈர்ப்புகளையும் தாண்டி நேரான பாதையில், சத்தியத்தில் நிலைத்திருப்பது நிச்சயம் ஒருவித போராட்டம்தான். அது அவன் வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளும் போராட்டம்.
உங்களைச் சோதிப்பதற்காகவே அல்லாஹ் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதைத்தான் நான் மாபெரும் சோதனையாகக் என்று கருதுகிறேன். பெரும் பெரும் இலட்சியங்களை நாங்கள் கொண்டிருக்கிறோம் என்று கூறுபவர்கள்கூட இந்தச் சோதனைக்கு முன்னால் எளிதில் தோல்வியடைந்து விடுகிறார்கள். சில சமயங்களில் அவர்களிடமிருந்து வெளிப்படும் செயல்கள் அவர்களை அற்ப மனிதர்களாகக் காட்டி விடுகின்றன.