பாவங்கள் ஏற்படுத்தும் விளைவுகள்-1
ஒரு மனிதன் பாவங்களில் மூழ்கிவிட்டால் அவன் இறைவனைவிட்டும் அவனை நினைவுகூருவதைவிட்டும் தூரமாகிவிடுகிறான். பாவத்தில் மூழ்கியவாறே அவனால் இறைவணக்கத்தில் ஆர்வத்துடன் ஈடுபட முடியாது. பாவத்தில் இன்பம் காண்பவரால் இறைவணக்கத்தில் இன்பம் காண முடியாது. ஒரு கட்டத்தில் இறைவணக்கம் அவனுக்கு கடினமான ஒன்றாகிவிடும். அதுவரை கட்டாயத்தின் அடிப்படையில் செய்து கொண்டிருந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக அதனை விட்டுவிடவும் தொடங்குகிறான். இறைவணக்கத்திலிருந்து அவன் விலகிச் செல்லச் செல்ல பாவங்களை நோக்கி இன்னும் வேகமாகச் செல்கிறான். அவற்றுக்கான நியாய வாதங்களையும் அவன் உருவாக்கிக் கொள்கிறான். அவன் கர்வம்கொண்டவனாகவும் இருந்தால் ஒரு கட்டத்தில் இறைமறுப்பு வரையிலும் அவன் சென்றுவிடுகிறான். அவனை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிய ஒழுக்கங்கள் அறவிழுமியங்கள் என அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி அவையனைத்தையும் தகர்க்க முயல்கிறான்.
வணக்க வழிபாட்டில் லயித்திருக்கும் ஒரு மனிதனால் திடீரென இறைமறுப்பில் நுழைந்துவிட முடியாது. பாவங்கள்தாம் அவனை கொஞ்சம் கொஞ்சமாக இறைமறுப்பை நோக்கி இழுத்துச் செல்கின்றன. அவன் ஆரம்ப நிலையிலேயே தன்னை சீர்திருத்தாவிட்டால் போகப் போக சீர்திருத்தம் மிகவும் கடினமான ஒன்றாகிவிடும். பாவத்தில் அவ்வப்போது ஈடுபடுதல் என்பது வேறு. பாவத்தில் ஒரேயடியாக மூழ்கிவிடுதல் வேறு. இங்கு நான் பாவத்தில் ஒரேயடியாக மூழ்கிவிடுவதைக் குறித்தே பேசிக் கொண்டிருக்கிறேன்.
தொழுகை மானக்கேடான, தீய காரியங்களை விட்டும் தடுக்கின்றது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. தொழுகை உள்ளத்தில் இறைநினைவை பசுமையாக்குகிறது; குற்றவுணர்வை கூர்மையாக்குகிறது. ஐந்து வேளை தொழுதுகொண்டே ஒருவனால் பாவங்களில் மூழ்கியிருக்கவும் முடியாது. இரண்டும் எதிரெதிர் அம்சங்கள். ஒன்றின் இருப்பு மற்றொன்றை இல்லாமலாக்கி விடும். தொழுகையில் நிலைத்திருப்பவன் பாவங்களில் மூழ்க முடியாது. பாவங்களில் மூழ்கியிருப்பவன் தொழுகையில் நிலைத்திருக்க முடியாது.
ஒரு மனிதன் தான் செய்யும் பாவத்தை பாவம் என உணர்தலே அவன் அதிலிருந்து விடுபடுவதற்கான முதல் அடி. எந்தச் சமயத்திலும் அதனை அவன் நியாயப்படுத்தி விடக்கூடாது. அதற்கான நியாய வாதங்கள் அவனுக்குள் உருவாகிவிட்டால், அவற்றை அவன் வெளிப்படுத்தத் துணிந்து விட்டால் அவன் அடுத்த நிலைக்குச் சென்றுவிடுவான். அது வெளியேறுவதற்கு சற்று கடினமான நிலை. ஒருவன் தனக்கு நோய் இருப்பதை உணர்ந்தால்தானே அதற்கான சிகிழ்ச்சையை அவன் முன்னெடுக்க முடியும்.
பாவங்கள் உள்ளத்தைத் தாக்கக்கூடியவை; அகவெளிச்சத்தை இல்லாமல் ஆக்கக்கூடியவை. அகவெளிச்சம் ஆரோக்கியமான உள்ளத்தின் விளைச்சல். பாவங்கள் அவனுடைய உள்ளத்தை கடினமாக்கி விடுகின்றன. கடினமான உள்ளங்கள் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவற்றுக்கு அறிவுரைகள் கசக்கின்றன. அறிவுரைகள் அவற்றின் கர்வத்தை சீண்டுகின்றன. அதன் காரணமாக அவை இன்னும் உறுதியாக பாவங்களில் நிலைத்து விடுகின்றன.
சிலரது பாவங்கள் அவர்களின் கர்வத்தை உடைக்கவும் செய்கின்றன. பாவம் செய்யாத தன்மை சில சமயங்களில் கர்வத்தை உண்டாக்கிவிடுகிறது. அந்த நிலை மற்றவர்களை இழிவாகக் கருதச் செய்கிறது. அப்படிப்பட்டவர்கள் செய்யும் பாவங்களால் அவர்களின் கர்வம் உடைபடுகிறது எனில் உண்மையில் அவை அவர்களைப் பாதுகாக்கும் கேடயங்கள்தாம்.
பாவமன்னிப்புக் கோரிக்கையும் நற்செயல்களும் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துகின்றன. நற்செயல்கள் பாவங்களை அழித்துவிடுகின்றன. இங்கு பாவம் செய்யாத புனிதர்கள் என்று யாரும் இல்லை. மனிதர்கள் பாவம் செய்யக்கூடியவர்கள். ஆனால் நம்பிக்கையாளர்கள் பாவங்களில் நிலைத்திருக்க மாட்டார்கள். அவற்றுக்கு அடிமையாக மாட்டார்கள். தங்களின் பாவங்களை நியாயப்படுத்த மாட்டார்கள். இதுதான் நம்பிக்கையாளர்களுக்கும் மற்றவர்களுக்குமான அடிப்படையான வேறுபாடு. இதன் காரணமாகத்தான் நம்பிக்கையாளர்கள் மன்னிக்கப்படுகிறார்கள்.
மனிதன் ஒரு பாவத்தை தொடர்ந்து செய்யும்போது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதற்கான நியாய வாதங்களை தன் மனதில் அவன் உருவாக்கிக் கொள்கிறான். முதலில் அவன் மனதில் ஒலிக்கும் குரலுக்கு அவன் காரணம் சொல்ல வேண்டியிருக்கிறது. பிறகு மனதிற்கு அதனை உண்மையென நம்பவைக்க வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்திற்குப் பிறகு குற்றவுணர்ச்சியே இல்லாத திருப்தியடைந்த நிலைக்கு அவன் சென்று விடுகிறான். தான் மட்டுமே அப்படி இல்லையென்றும் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்றும் அவன் தனக்கும் மற்றவர்களுக்கும் நியாயம் சொல்லிக் கொள்கிறான். இந்த திருப்தியடைந்த நிலை மோசமான நிலை. அது மனிதன் பாவங்களிலிருந்து வெளியேற முடியாத நிலை.
ஆரம்ப கட்டத்திலேயே தவிர்ந்திருக்கும் மனிதர்கள் பாக்கியவான்கள். அதுதான் குற்றவுணர்வு கூர்மையாக இருக்கும் நிலை. அதற்குப் பிறகு அந்த உணர்வு மழுங்கடிக்கப்பட்ட நிலைக்குச் சென்று விடுகிறது. சிறு சிறு துன்பங்கள் அந்த உணர்வை மீண்டும் கூர்திட்டலாம். அவை அவன் பாவங்களிலிருந்து மீண்டுவர அவனுக்கு உதவலாம். மூன்றாம் நிலையே அவன் அடிமையாகும் நிலை. அவன் பாவங்களுக்கு அடிமையாகிவிடுகிறான். அவனே வெளியேற நினைத்தாலும் அவனால் அவ்வளவு எளிதாக வெளியேறிவிட முடியாது. அவன் அடிமைத்தனத்தில் சுகம் காண்பவனாகிவிடுகிறான்.
சில சமயங்களில் அவனுக்கு ஏற்படும் பெரும் துன்பம் அவன் சிக்கியிருக்கும் இழிநிலையை அவனுக்கு உணர வைக்கிறது. அதன் போதையிலிருந்து அவனை மீட்டு இயல்பு நிலைக்குக் கொண்டு வருகிறது. உண்மையில் அத்தகையே பெரும் துன்பம்கூட அவனுக்கு அருட்கொடையே. அதுதானே அவனை மீட்டு இயல்பு நிலைக்குக் கொண்டு வருகிறது.
இந்த கட்டுரையின் முதல் பத்தியில் குற்றவுணர்ச்சி பற்றி கூறியுள்ளீர் அது எனக்கு சரி வர விளங்கவில்லை.