கட்டுரைகள் 

நவீன ‘ஓரியண்டலிசம்’

Loading

‘மேற்கு Vs கிழக்கு’, ‘மேற்கு நாகரிகம் Vs இஸ்லாமிய நாகரிகம்’ என்பதாக எளிமைப்படுத்தப்பட்ட எதிர்நிலைகளின் நோக்கிலேயே எல்லா விடயங்களையும் நோக்கும் ‘பாமரப் பார்வையின்’ ஆதரவாளர்கள் அல்ல நாம்.

அனைத்தையும் அவ்வவற்றின் மெய்ப்பொருள் கண்டு ஏற்பது அல்லது நிராகரிப்பது அல்லது விமர்சிப்பதே நியாயம் என்கிறோம். இது முக்கியம்.

அதேவேளை நமது அறிதல் முறைகளும் கருவிகளும் எவையென்பது குறித்தும், அவற்றின் பூர்விகம் யாதென்பது குறித்தும், அக்கருவிகளின் வடிவமைப்பு நோக்கம் என்னவென்பது குறித்தும் நாம் பூரண பிரக்ஞை கொண்டிருப்பதுவும் சமளவு முக்கியம். இல்லாதுபடின், நம் கரங்களாலேயே நம் சொந்த வீட்டைக் கொளுத்தி விடும் அவலம் நேரலாம். நேர்ந்து கொண்டுமிருக்கிறது.

ஓரியண்டலிசம் என்பது காலனித்துவ பின்னணியில் மேற்கத்திய மிஷனரிகளும் ‘கல்வியியல்’ அறிஞர்களும் முற்றிலும் தம்முடைய நோக்கிலிருந்து தமது அளவுகோல்களையும் முறைமைகளையும் கொண்டு கிழக்குலகை, குறிப்பாக இஸ்லாத்தை ‘ஆய்வு’ செய்ய முயல்வதுடன் தொடர்புடையதாகும்.

இவ்வாய்வுகளின் நோக்கங்கள் பொதுவாக உண்மையைக் கண்டறிவதாக அன்றி, பெரும்பாலும் தமது மேற்கத்திய கிறிஸ்தவ-யூத வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் தாம் ஏற்படுத்திக் கொண்ட முன்முடிவுகளை நிறுவுவதற்காகவும், அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி செய்யவும் ‘பக்கச் சார்பற்ற’ ஆய்வுகளை முன்னெடுப்பதாகவே அமைந்துள்ளன.

மேற்குலகிலும் முஸ்லிம் நாடுகளிலும் ‘இஸ்லாமிய கற்கைகள் துறைகள்’ இந்த ஓரியண்டலிஸ்டுகளின் வழிகாட்டுதலின் அடியொற்றியே பெரும்பாலும் அமைக்கப்படுவது அபாயகரமானதொரு போக்கு. தீனுல் இஸ்லாத்தைக் குறித்த நம்முடைய அணுகுமுறையை தலைகீழாக மாற்றிவிடக் கூடியது.

கீழைத்தேய வாதிகளும் அவர்களின் பணிகளும் ஒரு படித்தானவை என்று நாம் குறுக்கிப் புரிந்து கொள்ள முயலவில்லை. அவற்றின் பன்முகத் தன்மையை மறுக்காத அதேவேளை, அத்தகைய கீழைத்தேய ஆய்வுகளின் பிரதான பொதுப் பண்புகளையே நாம் இங்கு கவனப்படுத்த முயற்சித்திருக்கிறோம்.

நவீன ஓரியண்டலிசம் தொடர்பான சில விடயங்கள் பற்றி இங்கு கவனம் செலுத்துவது பொருத்தமாக இருக்கும்.

‘தொண்டுள்ளம் கொண்ட’ மிஷனரி செயல்பாடுகளையும் ‘பக்கச்சார்பற்ற’ ஓரியண்டலிச ஆய்வுகளையும் காலனித்துவப் பின்னணியில் வைத்தே நாம் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக அவற்றால் விளைந்த ‘அனுகூலங்களை’ மட்டும் முன்னிறுத்தியோ, அதில் சம்பந்தப்பட்ட ‘தன்னலம் மறுத்த’ தனிமனிதர்களை மட்டும் கருத்தில் கொண்டோ நோக்க முற்படுவது மகா அபத்தம். அபாயகரம்.

‘இவை வரலாற்று விடயங்களாயிற்றே, அவற்றுக்கு இப்போதென்ன வந்தது?’ என்கிறீர்களா? காலனித்துவம் முற்றுப் பெற்றதுடன் ஒட்டிப் பிறந்த ‘ஓரியண்டலிஸ்டுகளும்’ இல்லாது போயினர் என்று நினைத்துக் கொண்டீர்களா?. முற்றிலும் தவறு.

காலனித்துவமும் முற்றுப் பெறவில்லை; ஓரியண்டலிஸ்டுகளும் காற்றில் கரைந்து விடவில்லை. பெயர்களும் சிலபோது வடிவங்களும் மாறியிருக்கின்றன, அவ்வளவே. காலனித்துவம் நவ காலனியமாக, மறு காலனியமாக பரிணமித்திருக்கிறது; ஓரியண்டலிஸ்டுகள் இன்றைய பல்கலைகழகங்களில் ‘இஸ்லாமிய கற்கைகள் துறை நிபுணர்களாக’ புது அவதாரம் எடுத்திருக்கிறார்கள். பெயர்களைக் கண்டு ஏமாந்து விடலாகுமா? இந்தப் புரிதல் அவசியம்.

ஓரியண்டலிஸ்டுகளின் அரும் பங்களிப்புகள் பற்றி பலரும் பட்டியலிடக் கண்டிருப்பீர்கள். தொலைந்துவிட்ட ஏராளமான இஸ்லாமிய இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை கண்டெடுத்து மீள்பதிப்பித்தது அவர்கள் தாம்; இஸ்லாமிய வரலாற்றுத் தகவல் மூலங்களை இனம்பிரித்து அணுகிட வசதியாக அட்டவணைப் படுத்தியது அவர்கள் தாம்; தமது ‘ஆய்வு நேர்மைமிக்க’ விமர்சனங்களால் இஸ்லாமிய மரபினை செழுமைப்படுத்தியது அவர்கள் தாம்; கணக்கற்ற ஆக்கங்களை மொழிபெயர்த்து அருளியது அவர்கள் தாம்; இன்னும் இன்னோரன்னவை.

இவை ஒரு வகையில் உண்மைதான். நாம் அவற்றை மறுதலிக்கவோ, ‘நன்றி மறக்கவோ’, அநீதம் இழைக்கவோ முற்படவில்லை. மாறாக அவற்றை அவற்றுக்குரிய சூழமைவில் வைத்துப் புரிந்து கொள்ளவே அழைக்கிறோம்.

செவ்வியல் மற்றும் நவீன ஓரியண்டலிஸ்டுகளின் ஆய்வுப் போக்கின் பொதுப் பண்புகளாக கீழ்வருவனவற்றை இனம்காண முடியும்:

  1. இறைவேத வெளிப்பாட்டின் செல்லுபடித் தன்மையை மறுத்தல்,
  2. இஸ்லாமிய மூலாதாரங்களின் நம்பகத் தன்மையை உதாசீனம் செய்தல்,
  3. இஸ்லாத்தை வெறுமனேயொரு ‘ஆய்வுப் பொருளாக’ குறுக்குதல்,
  4. இஸ்லாத்தின் மீது தனிப்பட்டளவில் பற்றுறுதி கொண்டிருப்பதை ஏற்க மறுத்தல்.

14264873_1217437508297938_4108546564435891852_nஇது தொடர்பில், காலஞ்சென்ற கலாநிதி அஹ்மது குறாப் எழுதிய ‘Subverting Islam – The Role of Orientalist Centres’ என்ற மிக முக்கியமான ஆக்கத்தை பரிசீலிக்கும்படி வாசகர்களுக்கு ஆர்வமூட்ட விரும்புகிறேன். ICIT Digital Library சந்தாதாரர்கள் பின்வரும் இணைப்பில் இந்நூலை PDF வடிவில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்: Subverting Islam: The Role of Orientalist Centers

நம்மில் பலரும் ‘அரசியல் இஸ்லாம்’ போன்ற ஓரியண்டலிச சொல்லாடல்களை முறையான புரிதலின்றி பயன்படுத்தி வருகிறோம். இப்பதங்கள் தனியே வருவதில்லை. அவை தோன்றி வளர்ந்த கருத்தியல் சட்டகத்தையும் உடனழைத்து வருகின்றன. ‘விமர்சிக்கிறோம்’ என்ற பெயரில் சொந்த வீட்டைக் கொளுத்தும் செயற்பாடு இது என்கிறோம்.

திருக்குர்ஆன் மற்றும் சுன்னாஹ்வில் ஊன்றி நின்று, இஸ்லாமிய விமர்சன சட்டகத்தைப் பேணி, சொந்தச் சொல்லாடல்களை பிரயோகித்து நம் விமர்சனங்களை அமைத்துக் கொள்ளும் போதே நம்மால் இஸ்லாமிய செயற்திட்டத்தை முன்னகர்த்த முடியும். அதுவன்றி, இவ்வாறு கடன்பெற்ற சட்டகங்களையும் சொற்களன்களையும் பயன்படுத்த முனையும் போது, நம்மையும் அறியாமல் பகைவர்களின் கரங்களில் கருவிகளாய் மாறுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இது பற்றி விரிவாக கலந்துரையாட அழைக்கிறேன்.

ஓரியண்டலிச வரலாற்றுப் பின்னணி குறித்த மேலதிக வாசிப்புக்கு எட்வர்ட் சைதின் ‘Orientalism’ நூலையும், யூசுஃப் பிராக்ளரின் ‘The Utility of Islamic Imagery in the West’ என்ற நீண்ட ஆய்வுக் கட்டுரையையும் பரிந்துரைக்கிறேன். இப்பொருளுடன் தொடர்புடைய, ‘Islam and Orientalism’ என்ற தலைப்பில் அமைந்த மரியம் ஜமீலாவின் நூலை வாசிப்பதும் பயன் தரும்.

நவீன ஓரியண்டலிச பிரச்சினை உண்மையில் மிகப் பாரதூரமான ஒன்றாக இன்று மாறியிருக்கிறது. காரணம், ஒரு பெருந்திரளான முஸ்லிம் ‘ஆய்வாளர்கள்’ ஓரியண்டலிஸ்டுகளின் இவ்வணியில் சேர்ந்து கொண்டுள்ளனர். இதனால் முஸ்லிம்கள் மத்தியில் அதற்கு ஒருவித ஏற்புடைமை உருவாகியிருக்கிறது. இதுதான் மிகவும் அபாயகரமானது.

மேற்குலக நாடுகளிலும் முஸ்லிம் உலகிலும் உள்ள பெரும் எண்ணிக்கையிலான பல்கலைகழகங்களில் இவர்கள் முக்கியப் பொறுப்புகளை வகிக்கின்றனர். அந்தக் கல்வி நிறுவனங்களின் இஸ்லாமிய கற்கைகள் துறையின் பாடத்திட்டத்தை வகுப்பதும் இவர்களே. ஆய்வு முறைகளையும், நியமங்களையும், ஏன் ஆய்வுத் தலைப்புகளையும் கூட இவர்களே கட்டுப்படுத்துகின்றனர்.

இவ்வகையில், முஸ்லிம்களின் வளங்களைக் கொண்டு முஸ்லிம் மறுமலர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இவர்கள் ‘கடத்தி விட்டிருக்கிறார்கள்’ என்றே சொல்ல வேண்டும்.

Related posts

Leave a Comment