காலனிய எதிர்ப்புப் போரில் முஸ்லிம்கள் (2)
சிப்பாய்ப் புரட்சியின் நாயகர்கள்
அல்லாமா பஜ்லேஹக் கைராபாதி
1857ல் நடந்த சிப்பாய்ப் புரட்சிக்கு இந்திய விடுதலை வரலாற்றில் முதன்மையான இடமுண்டு. அதில் பங்குகொண்டு போராடியவர்களில் மிக முக்கியமானவர் அல்லாமா பஜ்லேஹக் கைராபாதி. 1797ல் பிறந்த இவர், அறபி, உருது, பார்ஸி, இந்தி, ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் புலமை பெற்ற பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார். சமஸ்தான மன்னர்கள் இவரிடம் ஆலோசனை கேட்டு அதன்படி நடக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார். சில சமஸ்தானங்களில் நீதிபதியாகவும் பணி புரிந்தார்.
இந்திய மன்னர்களுக்கு இடையே விரோதத்தை விதைத்து, பிரித்தாளும் சூழ்ச்சியில் பெரும் வெற்றி பெற்று இறுமாப்புடன் இருந்த ஆங்கிலேய அரசு, இந்திய செல்வத்தை தொடர்ச்சியாகக் கொள்ளையடித்து வந்தது. அதுகுறித்து சமஸ்தான மன்னர்களுக்குப் புரிய வைத்துடன், முகலாய மன்னர் பஹதூர்ஷா ஜாஃபர் தலைமையில் 1857 சுதந்திரப் போராட்டம் நடைபெற வித்திட்டவர் அல்லாமா பஜ்லேஹக் கைராபாதி.
இவரின் அறிவுரைப்படிதான் 1857 ஜூன் மாதம் ஜெனரல் பத்துகான் 14,000 வீரர்களுடன் டெல்லியில் முகாமிட்டார். அந்த மாத முதல் ஜும்ஆவில் டெல்லி ஜும்ஆ மசூதியில் அல்லாமா பஜ்லேஹக் கைராபாதி வெள்ளையனை வெளியேற்ற இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டு இன்னுயிரைத் தியாகம் செய்வது இஸ்லாமியச் சட்டப்படி ஆகுமானது என்று அறிவித்தார். அதன் பின்னரே சிப்பாய்ப் புரட்சி ஏற்பட்டது.
இவரின் உரையைப் பற்றி ஆங்கில அரசு உளவாளி கௌரி சங்கர் தன் அறிக்கையில், மௌலவி பஜ்லேஹக் சுதந்திரத்துக்கான உத்வேகத்தை மக்களிடமும் சிப்பாய்களிடமும் தூண்டியதாக எழுதினான். அது ஆங்கிலேய அரசை கதி கலங்க வைத்தது. அதைத் தொடர்ந்து, அல்லாமா பஜ்லேஹக் கைது செய்யப்பட்டார். இங்கு குறிப்பிடத்தக்க விஷயம், அல்லாமா பஜ்லேஹக் தனக்கென்று வழக்கறிஞர் எவரையும் வைத்துக்கொள்ளாமல், தானே நீதிமன்றத்தில் வாதாடினார். தான் ஜிஹாது ஃபத்வா கொடுத்ததை ஒப்புக்கொண்டதோடு, அப்படி அபிப்ராயம் தெரிவித்தது தனது மண்ணிற்குச் செய்யும் தியாகம் என்றும் தெளிவாய் ஒளிவுமறைவின்றி ஓங்கி ஒலித்தார். கடைசியில், ஆயுள் தண்டனை பெற்று அந்தமான் சிறையில் எல்லாக் கொடுமைகளுக்கும் உள்ளாகி 1861ல் அல்லாமா இறந்துபோனார்.
மௌலானா ஆசுர்தா
சிப்பாய்ப் புரட்சியின் மற்றொரு நாயகர் மௌலானா ஆஸுர்தா தெஹ்லவி. இவரது இயற்பெயர் சத்ருதீன் கான். கொல்கத்தாவில் ஷாஜஹானால் நிறுவப்பட்டு மூடிக்கிடந்த தாருல் பகா மதரசாவை மீண்டும் திறந்து மாணவர்கள் கல்வி பயில ஏற்பாடு செய்தவர். சிப்பாய்ப் புரட்சிக்குக் காரணமானவர் என்று ஆங்கிலேய அரசு ஆஸுர்தாவைக் கைது செய்து, இவரின் சொத்துகளையும் நூல் நிலையத்தையும் கைப்பற்றியது.
ஆங்கிலேய அரசு 1857ல் டெல்லி ஜும்ஆ மசூதியைக் கைப்பற்றி இராணுவ இருப்பிடமாக்கியதுபோது, இரண்டு ஆண்டுகள் போராடி அரசிடமிருந்து ஜும்ஆ மசூதியை மீட்டு மீண்டும் தொழும் மசூதியாக்கியது இவரின் சாதனைகளில் ஒன்று. அதுபோல, ஆஸுர்தா ஓர் உருதுக் கவிஞரும்கூட. அவர் கவிதைகள் எழுதுவதோடு நிற்காமல், முற்கால உருதுக் கவிஞர்களின் வரலாற்றை எழுதித் தொகுத்து நூலாக வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. 1912ல் இவர் மறைந்தார்.
பஹதூர்ஷா ஜாஃபர்
பஹதூர்ஷா ஜாஃபர் முகலாயப் பேரரசின் இறுதி மன்னர் இரண்டாம் அக்பர்ஷாவின் இரண்டாவது மகன். தந்தையின் மறைவைத் தொடர்ந்து, 1837ல் அரியணையில் அமர்ந்தார். முஸ்லிம்களும் இந்துக்களும் என் இரு கண்கள் என்றார். 1857 சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களில் இவர் முக்கியமானவர். இவர் 1857 ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சியில் கலந்துகொள்ளும்படி ஜெய்பூர், ஜோத்பூர், இந்தூர், குவாலியர் மன்னர்களுக்கு கடிதம் எழுதியவர்.
அதில் அவர் பின்வருமாறு கூறியிருந்தார்: “ஆங்கிலேயர்களை நம் நாட்டிலிருந்து விரட்ட வேண்டும் என்பதே என் உள்ளக்கிடத்தை. இந்தியா சுதந்திரமடைய வேண்டும் என்பதே எனது ஆவல். இந்தியா முழுவதையும் ஆளும் எண்ணம் எனக்கு இல்லை. பொது எதிரிக்கு எதிராகப் போரிட ஒன்றுபடுவோம். வென்றபின் உங்களில் ஒருவர் அந்த அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.”
இவரின் கருத்தை ஏற்காத சமஸ்தான மன்னர்களின் சூழ்ச்சியால் 1857 செப்டம்பர் 20 அன்று டெல்லி வீழ்ந்தது. இவர் செங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் பசிதாளாது உணவு கேட்டபோது, மூடப்பட்ட இரு பாத்திரங்கள் தரப்பட்டன. உணவு உண்ண திறந்த பொழுது பஹதூர்ஷாவின் இருமகன்களின் தலைகள் பாத்திரங்களிலும் இருந்தன. ஆம், இவரின் இரு மகன்களையும் ஆங்கிலேயர்கள் கொன்றொழித்திருந்தனர்.
செங்கோட்டையில் 42 நாட்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு ரங்கூனுக்கு நாடு இவர் கடத்தப்பட்டார். இவரும் இவரின் குடும்பத்தினர் 16 பேரும் ஒரு சிறு வீட்டில் சிறைவைக்கப்பட்டனர். படுக்க பாய்கூட கொடுக்கப்படவில்லை. பாரசீகம், உருது, அறபி, பஞ்சாபி மொழிகளில் புலமை பெற்ற கவிஞர் இவர். ஆனால், சிறையில் அவருக்குத் தாளும் எழுதுகோலும்கூட கொடுக்கப்படவில்லை. கரிக்கட்டையால் சுவர் முழுவதும் சிப்பாய்ப் புரட்சி பற்றி கவிதைகள் எழுதியதாக வரலாறு பதிவு செய்துள்ளது. இறுதியாக, 1862 நவம்பரின் இவரின் உயிர் இம்மண்ணை விட்டு அகன்றது.
தொடரும்…