மம்மர் (சிறுகதை)
1
நான்கரை மணிக்குள் வீட்டிற்குச் செல்ல வேண்டியவன், நேரம் மறந்து நீருக்குள் லயித்திருந்தேன். காவேரி நகர்ச் சுடுகாட்டை ஒட்டியோடிய உய்யக்கொண்டான் வாய்க்கால், ஊரின் மொத்த அழுக்குகளையும் — முக்கியமாக பெரியாஸ்பத்திரியின் மருந்துக் கழிவுகளை — சுமந்தபடி பாய்ந்தது. நீர் வரத்து அதிகமிருந்ததால் மேலோட்டமாய்ப் பார்க்க நன்னீர் போலத்தான் காட்சியளித்தது. உள்ளே தவ்வி சேறு பூத்த ஓடுநீர் தளத்தில் கால் பதித்து நன்கு சுரண்டிச் சுழற்றுகையில்தான் அதன் கசடுகள் மேலெழும்புவதைக் கண்கொண்டு பார்க்கலாம். அவ்வப்போது ஆகாயத் தாமரைகளுடன் இணைந்து அடை அடையாய் மை வண்ணத்தில் வறட்டியான சாக்கடைக் கழிவுபோல் ஒரு வஸ்து மிதந்து வருவதையும் பார்க்க இயலும். வாய்க்காலுக்கு எதிர்ப்புறத்தில் தெரிந்த காசு வெட்டும் கருப்புக் கோயிலிலிருந்து உடுக்கைச் சத்தம் கேட்க, கோயிலிலிருந்து சந்தன மணமும் சுவரைச் சூழ்ந்திருந்த எருக்கஞ்செடியின் பால் கசிந்த நெடியும் குப்பென்று வீசியது.
‘டேய் மணியென்ன தெரியுமா?’ எனப் படியேறிருந்த டோமினிக் தன் கைக்கடிகாரத்தை நீட்டிக் காட்டினான். தாத்தா, என் கையில் வீட்டுச் சாவியைத் கொடுத்து முன்னே செல்லுமாறு சொல்லி ஒரு மணி நேரத்திற்குமேல் கடந்துவிட்டிருந்தது.
‘ஐய்யய்யோ செத்தேன்டா. எம்-டன் ஜெசியை ஸ்கூலேந்து கூட்டிட்டு எப்பவோ வீட்டுக்கு வந்துருப்பாரே… என்ன ஆகப்போகுதோ!’ என்றதும் அவனுக்கும் பதட்டம் தொற்றிக்கொண்டிருக்க வேண்டும். சென்ற வருடம் ஐந்தாவது படித்த ராமகிருஷ்ணன் என்னைக் கேலி செய்வதையும் அடிக்கத் துரத்துவதையும் வீட்டில் சொன்னவுடன், ‘ஒரு வயசுதானே மூத்தவன். அவனை அடிக்கவா பயந்துக்கிட்டு வந்து என்கிட்ட சொல்லுற’ என்று என்னைச் சண்டையிட உசுப்பேற்றிய மனிதன் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். வீட்டுப்பக்கம் சென்றதுமே தாத்தாவுக்குப் பயந்து என்னை வாசலுக்கு முன்பாகவே இறக்கிவிட்டுவிட்டு தன் சைக்கிளில் வேகமாய் நகர்ந்துவிட்டான்.
வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்தார். கழுத்தில் பழுப்பு நிறக் கைக்குட்டையை மடக்கி காலரில் வியர்வை அழுக்கு படியாதவாறு போட்டிருந்தார். சட்டைப் பாக்கெட்டிலிருந்த சகாய மேரியன்னையின் திருவுருவப் படம் இருபதடி தூரத்திலிருந்தும் பளிச்சென்று தெரிந்தது. கண்களை வெறித்தபடி என்னை நோக்கி நடந்துவந்தவர் ஒரு கையால் என் கழுத்தைப் பற்றி அவரது தோள் உயரத்திற்குத் தூக்கிவிட்டிருந்தார். படிக்கட்டில் அமர்ந்தபடி சோகத்துடன் ஜெசி என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
காம்பளக்ஸின் அருகருகே இருந்த தையல், மெக்கானிக், சலூன் கடைகளில் இருந்தவர்கள் போக, அந்த நேரம் நெடுஞ்சாலையைக் கடந்த வாகன ஓட்டிகளும் நான் கால்களையசைக்காது தவிப்புடன் அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்த காட்சியை ஒருகணம் பரிதாபத்துடனோ, கோபத்துடனோ, கண்டிப்பு நியாயமென்ற கருத்துடனோ பார்த்தபடி கடந்திருக்கக்கூடும்.
அன்றிரவு ‘இனி எப்பவும் இந்த வீட்டுல நான் இருக்க மாட்டேன், வெளியவே வரமுடியாதபடி அவரு என்னை அசிங்கப்படுத்திவிட்டார்’ எனக் கண்ணீர் மல்கிக் கசிந்ததில் அம்மாச்சியும் மாமாக்களும் தாத்தாவைக் கடுமையாகத் திட்டிவிட்டனர். அம்மா எதுவும் பேசாமல் என் அழுகைக்குத் துணையாய் அழுதுகொண்டிருந்தார். அம்மாவுக்காகத்தான் தாத்தாவை எல்லோரும் திட்டியிருக்க வேண்டும்.
‘இனி அவன் என்ன செஞ்சாலும் நான் என்னன்னு கேக்கமாட்டேன்’ எனச் சத்தியம் செய்தார். அதுமுதல் என் காரியங்களைக் குறித்துப் பேச நேரிடுகையில் எல்லாம் ‘மைனருக்குத் தெரியாதா!’ என்ற நக்கலாக ஆரம்பிப்பவர் இறுதிக் காலம்வரை பாசத்துடனே மைனர் எனக் குறிப்பிட்டு வந்தார்.
முரட்டாவேசத்துடன் சொன்ன மாத்திரத்தில் ராணுவ வீரன் கையில் துவக்குடன் தரையில் பாய்ந்து குறிபார்த்துக் கட்டளைக்குக் காத்திருக்கும் காட்சியைத் தன் எழுபதுவரை எனக்கும் ஜெசிக்கும் செய்துகாட்டிய சாகச உடல் மறைந்து, என்னால் குளிப்பாட்டப்பட வேண்டுமென நிர்வாணியாய்த் தடுமாறி நடந்து நாற்காலியில் அமர்ந்திருக்கும் தாத்தா அணுக்கமாய், நெருங்கி நிற்பவராய் மாறிப் போனார். ரோமங்கள் நிறைந்த உடலெங்கும் சோப்பைத் தேய்த்துக் குளிப்பாட்டுகையில் நன்கு ஆறிய நீரையும்கூட, ‘ஆ… சூடு’ எனப் பின்வாங்கும் தொனியுடன் முறைக்கும் சிறுபிள்ளையின் கோபத்தை இழந்துவிட்டேனே என்ற சுமையுடன் அவரது இரும்பு நாற்காலியில் சாய்ந்தமர்ந்தேன்.
ஒரு வருட காலமாய் அவரது வெளியுடலின் கசடுகளையெல்லாம் சுமந்த நாற்காலியில் இப்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கண்களுக்குப் புலப்படாத அவருடல் சார்ந்த டெட்-செல்கள் இருக்கக்கூடும். அப்படியிருப்பின், என்னுடலிலும் அவை படட்டும்; ஏறிக்கொள்ளட்டும் எனக் கண்ணசந்தேன்.
2
‘நான் இறந்தா அழுவியா?’ என்று அம்மாச்சி கேட்டதைப் போல் தாத்தா எதுவும் கேட்டதாக நினைவில்லை. ஆனால் தன் வாழ்க்கையின் பகுதிகளையும், தான் இருந்துவிட்டுச் சென்றதற்கான வரலாறாகத் தடயங்களையும், இல்லாமைக்குப் பின்னான விருப்பு-வெறுப்பு, ஏற்பு-நிராகரிப்புகளையும் நிறையவே சொல்லியிருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.
திண்ணையை மூடியவாறு அமைந்த படிக்கட்டின் அடிப்பாக இடைவெளியில் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாத அவரது செருப்புகளையும் கிழியத்தொடங்கியிருந்த குடையையும் பார்த்தபடி வெளியேறினேன். நேற்றைப் போல் இன்றும் வெய்யில்கால மாலை இளமழை தூரத் தொடங்கியது. ‘நான் போனதுக்கப்புறம் நீங்கலாம் நிம்மதியா இருக்கலாம்’ என்று மழலை குடிபுகுந்த மூப்பின் தாளாமைக் குரலுடன் அவர் கத்தியது நினைவில் கசிந்தபடி என் நடைப்பாதையைத் தொடர்ந்தது.
தவக்கால இறுதி என்பதால் ஆலயத்தின் உள்ளும் புறமும் எவ்வேளையிலும் கூட்டம் இருந்தபடியே இருந்தது. இரட்சகர் தன் கையை விரித்தபடி உலகை அணைக்க ஏந்தும் பாவனையைக் கண்டு வணங்கிவிட்டு வாசலுக்கு வந்தேன். முகப்பு வராந்தாவில் சிறு படிகளின் தொடங்கு முகத்திற்கு அருகில் ஜான் தாத்தா அமர்ந்திருந்தார். கொஞ்ச காலமாகத்தான் வீட்டினுள்ளே நடக்கத் தொடங்கியிருப்பதாக அவரின் மனைவி தாத்தாவின் மறைவிற்கு வந்தபோது சொல்லியது நினைவுக்கு வந்தது.
‘கேபாதானே. இங்க வா சாமி.’
‘தாத்தா, உங்க உடம்பு இப்ப தேவலாங்களா? படுக்கையில இருந்தப்போ உங்கள பார்க்க நானும் தாத்தாவும் வந்திருந்தோம்’ என்றதும் அமைதியுடன் அருகிலிருந்த இருக்கையில் அமரச் சொன்னார். கோபுர மணியை, கோயில் பிள்ளை அடிக்கவே, உச்சி சிலுவையில் இளைப்பாறுதலாய்க் கால்பதித்திருந்த புறாக்கள் பறந்து சென்றன. ஆலய மைதானத்திலிருந்த பதினான்கு சிலுவைப் பாதைக்குரிய நிகழ்வுகளிலும் மிச்சசொச்சமாக கர்த்தரின் பளுவைச் சுமக்க ஓடிய சிரேனே ஊரானாகிய சீமோனைப் போல் விசுவாசிகள் பணிந்து நின்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தனர். ஆன்மிகக் குரு ரெவரெண்ட் அலோசியஸ் வழிபாட்டுக்கான மேற்பார்வைகளைக் கவனித்தவாறு என்னை நெருங்கி ஓர் அந்நியப் பார்வை வீசிக் கடந்தார்.
‘ஒரு நாள்கூட உன் தாத்தாவுக்கு முந்தி பூசைக்கு வந்ததில்ல. அவன் இல்லாதப்பதான் வர முடிஞ்சிருக்கு. எத்தன கூட்டம் இருந்தாலும் எனக்குனு ஒரு நாற்காலியப் பிடிச்சு வச்சிருவான். நிறைய மேல் படிப்பு படிச்சிருக்கன்னு உன்னதான்யா சொல்லிட்டே இருப்பான்.’
‘நீங்களும் தாத்தாவும் ஒரே ரெஜிமண்ட் தானே?’
புன்னகையுடன், ‘இல்ல சாமி. நான் பெரும்பாலும் கவுஹாத்திலதான் இருந்தேன். அவன்தான் பல இடம் சுத்துனவன். சீனா, கார்கில் போர்ச் சமயத்துல லாரி ஓட்டுன மனுசனாச்சே. முழு சர்வீஸும் இருந்துருந்தா நாயக் சுப்புதாரா வெளில வந்துருக்கலாம். டிரைவராவே வந்துட்டான். சோல்ஜர் போர்ட் ஆபீஸ்லேந்துதான் பழக்கம். அதுவும்தான் ஆச்சே முப்பது வருஷம்…’ என்றார்.
முழுக்கவும் நரைத்திருந்தாலும் முடியின் அடர்த்தியில் குறைவில்லாதிருந்தது. முகமெல்லாம் ஊதி குழந்தையின் மப்படித்த வயிறுபோல் உப்பலாக இருந்தது. கால் வீக்கம் மட்டும் இல்லையென்றால் தடி ஊன்றாமலே நடப்பவர் போலத்தான் இருந்தார். இவரைவிடவும் பலமடங்கு ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் இருந்த தாத்தா, ஏன் சில மாதம் இடைவெளியில் மறைந்துபோனார் என்று வினவிக்கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.
‘எவ்வளவோ இறப்பைப் பார்த்துட்டேன் சாமி. ஆனா அமலு இல்லாதது ரொம்பவே ஏக்கமா இருக்கு. கேண்ட்டீனுக்கு அஞ்சு மணிக்கே கிளம்பிப் போய் இடம் பிடிச்சு வைக்கவோ, பூசைக்கு எனக்குன்னு நாற்காலி பிடிக்கவோ, அதைவிட இந்த வயசுல என்னை வாடா போடான்னு கூப்பிடவோ ஆள் இல்லைங்கிறது சொன்னாலும் புரிஞ்சிக்கக்கூடிய விஷயமான்னு தெரியல’ என்றார். அவரிடம் தாத்தா மைக்கேல்பட்டி செல்ல வேண்டுமென்று இறுதி நாள்களில் ஆசைப்பட்டது குறித்துச் சொல்லாமா என்று யோசித்தவன், சொல்லிவிட்டிருந்தேன்.
‘அவன் விரும்பியிருக்கான்னா நீ தங்கலைன்னாலும் ஒரு எட்டுப் போயிட்டு வந்துருயா’ என்றார்.
தூரல் மறைந்ததில் வெப்பம் மிகுந்திருந்தது. மெல்ல இருட்டத் தொடங்கவே சிலுவைப்பாடு ஆராதனைக்கான மக்கள் திரள் ஆலயத்துள் கூடவாரம்பித்தது. தாத்தாவிடம் முழுங்காலிட்டுச் சிலுவை பெற்றுக்கொண்டு அகன்றேன்.
3
ஃபிரெட்ரிக் வாத்தியார் வீடு எதுவெனக் கேட்டதுமே புனித மைக்கேல் ஆலய வாசலில் மெழுகுவர்த்தியை அடுக்கிக்கொண்டிருந்த பெரியவர், ‘பச்சை பெயிண்ட் அடிச்ச வீடு தம்பி. இங்கேந்து ரோட்டைத் தாண்டி சரியா ஏழாவது வீடு. வாசக் கதவுல குருத்துல செஞ்ச சிலுவை தொங்கிக்கிட்டிருக்கும் பாருங்க’ என்றார்.
வெய்யில் வற்றி காவிரிக் கரையோர ஈரக்காற்று தென்றலாய்ச் சுழலில் சிக்கிக்கொண்டாற்போல் ஊரிலே உழன்றது. தாத்தாவோடு மிகச் சின்ன வயதில் வந்த ஞாபகம் நினைவில் பிசிறுபிசிறாக எட்டிப் பார்த்தது. கருப்பூர் போக வேண்டுமென்று கூட்டி வந்திருந்தார். தெருவில் தண்ணீர் பிடிக்கையில் ஏதோ விஷப் பூச்சி கடித்திருக்கலாம் எனத் தெரிந்திருந்தும், இல்லை இது செய்வினை என்று வெத்தலையில் மை போட்டுப் பார்க்கவென என்னையும் அப்போது அழைத்து வந்திருந்தார். மின் இணைப்பு இல்லாத பழைய தூண்கள் பாவிய உயர்ந்த மாடம் இருந்த வீட்டில் அமர்ந்திருந்ததாக நினைவு. அந்த வீட்டில் நிறைந்திருந்த கரப்பான் வாடை தாங்க முடியாத வண்ணம் இருந்தது. அந்த வீடு நிச்சயமாக தாத்தாவின் நண்பர் ஃபிரெட்ரிக்கின் வீடாக இருக்காது என நம்பினேன்.
ஊரிலிருந்த தூய இருதய மேல்நிலைப்பள்ளி வாசலில், தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு பள்ளியின் சார்பாக அஞ்சலி பேனர் வைக்கப்பட்டிருந்தது. அருகிலே ஊர் இளவட்டங்களின் சார்பாக தங்கள் ஊரும் மக்களும் பள்ளி நிர்வாகத்தினரும் மத நல்லிணக்கம் பேணுபவர்கள் என்பதை வலியுறுத்தி மாணவிக்கு இரங்கற்பாவுடன் பேனர் வைத்திருந்தனர்.
அழைப்பு மணியை அழுத்திய சில கணங்களிலே வாசலுக்கு வந்த ஃப்ரெட்ரிக் தாத்தா, ‘அமலு பேரன்தானே வாயா, உள்ள வா. தாத்தா எங்க?’ என நன்றாகவே என்னை அடையாளம் கண்டுகொண்டார்.
வாசலில் விளக்கு எரியவில்லை, ஃபியூஸ் போய்விட்டதாகச் சொல்லி வருந்தினார். எதுவும் பதில் சொல்லாது உள்ளே நுழைந்தேன். மர நாற்காலியை எடுத்துப் போட்டு அமர வைத்தார். கைப்பிடியில் அழுக்கு படிந்த வெள்ளைத் துண்டு தொங்கிக்கொண்டிருந்தது. அதைத் தொடாமல் எச்சரிக்கையுடன் உட்கார்ந்துகொண்டேன். வீட்டில் வேறு யாருமே இல்லை. தொலைக்காட்சியில் நாடகத் தொடர் ஒன்று சத்தம் அணைக்கப்பட்டு ஓடிக்கொண்டிருந்தது. முகப்பறையில் இருக்கும் கெபியில் இருதய ஆண்டவரின் அரையடி உருவச் சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. அதன் கழுத்தைச் சுற்றி இளம் பச்சை நிறத்தில் ரேடியன் மாலை ஒன்று கிடந்தது.
‘கேபாதானே உன் பேரு. ஆமா எங்க தாத்தா வரலயா? இன்னுமா உடம்பு முடியாமப் படுத்திருக்கான்?! மாசம் மூணுமுறை வேளாங்கண்ணி ஓடிடுவானே!’
‘மன்னிச்சிடுங்க தாத்தா. தாத்தா இறந்து இரண்டு மாசம் ஆகுது. உங்களுக்கு அந்த நேரத்துல சொல்ல மறந்துட்டோம்’ என்றதும் சோஃபாவிலிருந்து எழுந்தவர் ‘அடக் கடவுளே… கடவுளே’ எனத் தலையில் அடித்துக் கொண்டவர், ‘எப்படிச் சொல்லாம விடலாம்?! உனக்குத்தான் என்னை நல்லாத் தெரியுமே’ என்ற ராகத்தில் வசை பாடப்போகிறார் என எதிர்பார்த்தவனுக்கு அதன் பிறகான அவரது அமைதி பயத்தை உண்டாக்கியது.
‘சரியா நீ சொன்ன சமயத்துலதான்யா எம்மவனும் இறந்து போனான். சொல்லலைனு எப்படிக் கோவிச்சிக்க முடியும்?! நேரங்கள்ல உடைஞ்சுப் போய் நிக்கிறப்போ நமக்கு நம்மலையே ஞாபகம் இருக்கறதில்ல. என்ன பண்ணுறது’ என விரக்தியாய் அமர்ந்துகொண்டார்.
‘உங்க மகன் எப்படிங்க தாத்தா இறந்தார்?’ என சுவரில் மாட்டப்பட்டிருந்த படத்தைச் சுட்டியவாறு கேட்டேன்.
‘எப்பவுமே குடி. பொண்டாட்டி புள்ளங்களும் கூட இல்ல. மூத்த மவன் இப்படிப் போயிட்டானேனு அவன் குடிக்கிறதுக்கு நானும் ஒத்த பைசா தர்ரதில்ல. நானே சம்பாதிச்சிக்கிறேன் போயானு திட்டிட்டு கேரளாவுக்கு கொத்தனார் வேலைக்குப் போனான். செவுரு மேல சாய்ஞ்சிருச்சுங்கிறதைத் தவிர என்ன நடந்துதுனே ஒரு எழவும் சொல்ல மாட்டேனுட்டானுங்க. அவன் உடம்பு வரதுக்கே மூணு நாளு ஆகிடுச்சு’ என்று சொல்லி முடிக்கையில் குரல் கம்மிப் போயிருந்தது. அவரது மேல் உதடு மட்டும் கருப்பாகவும் கீழுதடு சிவப்பாகவும் இருந்ததைக் கவனித்தேன். படத்தில் இருந்த அவரது மகனுக்கும் அதே ஒற்றுமை. தன் சாயலை மண்ணுக்குக் கொடுத்துவிட்டு வெறுமையுடன் அமர்ந்திருப்பவருக்கு என்ன பதில் தருவது எனத் தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன்.
‘படிச்சிருக்கலாம். வாத்தி மவன் ஃபெயில் ஆகுறான்னு சொல்லியே அவனைப் படிக்க விடாம பண்ணிட்டானுங்க. படிச்சிருந்தா கல்ல கொத்தப் போயிருப்பானா?’ என நொந்துகொண்டார். வாழ்க்கையில் நடந்த அனைத்துக்கும் தானே பொறுப்பு, தன் செயலும் செயலின்மையுமே எல்லாத் துயருக்கும் காரணம் என்ற மனநிலையில் குடிகொண்டுவிட்டதன் வார்த்தைகள் பிறந்துகொண்டே இருந்தன. ஒருவகையில் பொறுப்பேற்றல் புத்திசாலித்தனம் என்றாலும் இந்த வயதில் அழுகைக்கும் புழுக்கத்தும் அல்லவா வழிவகுக்கும் எனத் தோள் பையினுள் இருந்த மேன்சன் ஹவுஸ் பாட்டிலை எடுத்து அருகிலிருந்த மெத்தையில் வைத்தேன்.
‘தாத்தாவுக்கு நினைவு தப்புறவரையும் மெக்கேல்பட்டி வரணும், உங்களப் பாக்கணும்னு கேண்ட்டீன்ல வாங்குன இந்த ஒரு பாட்டிலை மட்டும் யாருக்கும் கொடுக்காம பெட்டியிலேயே பத்திரமா வச்சிருந்தாங்க. எனக்கு என்னவோ போல உறுத்திக்கிட்டே இருந்துச்சு. அதான் எடுத்துட்டு வந்துட்டேன்’ என்றேன்.
‘அமலுக்கு அரும பேரானாவுல கிடைச்சிருக்கு’ எனக் கன்னத்தைக் கிள்ளியெடுத்து முத்தமிட்டார். முட்டை பொடிமாஸுடன் இருவருமாகக் குடிக்கத் தொடங்கினோம். ‘இருந்துட்டுக் காலைல போ’ என்றவர் சிறிது நேரத்துலே மெத்தையில் சாய்ந்துவிட்டார். கழற்றிய சட்டையை மேலே போர்த்தினாற்போல் போட்டுக்கொண்டு வாசலுக்குப் போய் நின்றேன். அரையணா பொடி மட்டைக்காக இரண்டு ரூபாய் ஏமாறும் கொள்ளுத் தாத்தா ஆரோக்கிய சாமியைப் பற்றியும், சுருட்டு பிடித்தபடி வெளிக்குப் போய்விட்டு நிரம்பியோடும் காவிரி வெள்ளத்திலும் மறுகரைவரை நீந்திவரும் ரஞ்சித்ததம்மாளின் வீட்டைக் கட்டும் நிர்வாகத்தைப் பற்றியும் தாத்தாவின் குரலில் பலமுறைக் கேட்டவை காட்சிகளாய் மூண்டன.
டைமெக்ஸ் வாட்ச் மணிக்கட்டை விட்டு நழுவி கட்டை விரலைத் தொட்டிடக் குலுங்கியபடி இருக்க ஒரு கையில் அரிசி மூட்டையையும் மறுகையில் தேங்காய்ப் பையையும் பிடித்துக்கொண்டு பூதலூர்வரை ரயிலுக்கென விறுவிறுவென நடக்கும் தாத்தாவின் வியர்வை மணம் அவரது காலரில் மடித்துவிடப்பட்டிருந்த கைக்குட்டையிலிருந்து பரவத் தொடங்கியது.
இதோ இந்த வீதியிலிருந்துதான் அவரும் ஃபிரெட்ரிக் தாத்தாவும் திருக்காட்டுப்பள்ளியில நாடக மேடையில இருந்தபடி சிகரெட் குடிச்சிக்கிட்டு ‘காவலுக்கு நிக்கிற போலீஸ்கார நாய்களா’ என்று ஏசிய ஆதர்ச நடிகனான எம்.ஆர்.ராதாவை பார்க்கச் சென்றிருக்க வேண்டும் என என்னை மீறி எழுந்த சிரிப்பைக் களைய விரும்பாதவனாய் அங்கேயே நின்றேன்.
‘அந்தப் பக்கம் திருக்காட்டுப்பள்ளியெல்லாம் வந்துடுச்சு. இந்தப் பக்கம் மேகளத்தூரத் தாண்டி வந்துட்டு இருக்கு. ஊருல எல்லாரும் உறைஞ்சு போய் பீதில நடுங்கிக்கிட்டு வீட்டுக்குள்ளே கிடந்தோம். காலையில எழுந்தா எத்தன பேரு உசுரு மிச்சமிருக்கோன்னு நினைக்கிற அளவுக்குப் பயம். நானும் எங்க அண்ணனும் அம்மா பிடிச்சு வச்சிருந்த சத்துமாவு உருண்டைய இருட்டுல பதுசா சாப்பிட்டுட்டே முழிச்சிக்கிட்டு உக்காந்திருக்கோம். எங்க செத்துட்டா இனிமே கிடைக்காதேன்னு. நீயெல்லாம் இன்னிக்கு உங்கம்மாளோட சேர்ந்துக்கிட்டு அல்லேலூயா கூட்டத்துக்குப் போறீல, சொன்னா நம்பமாட்டடா… ரேடியோவுல கேக்குறாப்புல மெக்கேல் சம்மனசோட குதிரைச் சத்தம்; குதிரையோட காலுல சலம்புற கொலுசுச் சத்தம்; அப்படி ஒரு ஆவேசமான சத்தம். எங்களுக்கு மட்டுமில்ல ஊருக்கே கேட்டுருக்கு. அடுக்களைய விட்டு பயத்துல நாங்க நகரவே இல்ல. அன்னிக்கு ராத்திரி மெக்கேலாண்டவர் காவலா நின்னு காலராவை விரட்டியேபுட்டாரு. அப்போலேந்து சுத்தியிருக்க ஊரானுங்க எல்லாம் கோயில் வாசல்ல வந்து வந்து விழுந்துட்டுப் போனானுங்க’ எனக் கண்கலங்கச் சொல்லி முடித்த ஆவேசத்துடன் ‘ஸ்தோத்திரம்’ என்று குதூகலித்த தாத்தாவின் நினைவு அழுத்தமாய் நிழலாடியது.
கதவைத் திறக்காமல் திண்ணையில் அமர்ந்தவாறு பௌர்ணமி வெளிச்சத்தில் ஆலயக் கொடிக் கம்பத்தில் மின்னல்களுக்கு மத்தியில் வெண் இறக்கைகளை விரித்துக் கையில் வாளுடன் மைக்கேல் அதிதூதர் அசைவாடிக் கொண்டிருந்ததையும், விடிவதற்குள் அவர் குதிரையில் காவல் வந்து ஊரைக் காக்கும் சத்தத்தைக் கேட்க வேண்டுமென்ற வேண்டுதலுடனும் வெறித்தவாறு இருந்தேன்.
மிகவும் சிறப்பான ஊண்மையின் சித்தரிப்பு ஜார்ஜ்! வாழ்த்துக்கள்!