மௌதூதியின் சிந்தனைகளும் தமிழ் அறிவுலகமும்: உரையாடல்களுக்கான முன்னுரை
கேரள ஜமாஅத்தே இஸ்லாமி சார்பாக ‘மௌலானா மௌதூதி’ எனும் கருபொருளில் ஒரு மாநாடு நடைபெற்றதாக கேள்வியுற்றேன். மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இருபதாம் நூற்றாண்டின் இஸ்லாமிய எழுச்சியிலும் சிந்தனைப்போக்கிலும் ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தனித்துவமான அறிவாளுமை தான் மௌலானா மௌதூதி. தமிழ் புலத்திலும் இதுபோன்ற கருத்தரங்குகளின் தேவையுள்ளது.
ஜமாஅத்தே இஸ்லாமி உருவான காலம் முதல் தமிழகத்திலும் அதன் பணிகள் தொடங்கிவிட்டன. எனினும் மௌதூதியின் சிந்தனைகள் பற்றிய முழுமையான பார்வையை இன்றும் நம்மால் தமிழ்வழி பெறமுடிவதில்லை. அதிகபட்சம் அது ‘இஸ்லாமிய அரசு ஒன்றினை உருவாக்க மௌதூதி சிந்தித்தார்’ எனும் பொதுப்புரிதலை மட்டுமே கொண்டுள்ளது. ஜமாஅத்தே இஸ்லாமியை அமைப்பு ரீதியாக தொடங்குவதற்கு ஒன்றுகூடிய 75 நபர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சிபகத்துல்லாஹ் பக்தியாரும் ஒருவர். இந்திய ஜமாஅத்தே இஸ்லாமியின் திசைப்போக்கை கட்டமைத்த மௌதூதியின் ‘சென்னை பேருரை’ நிகழ்த்தப்பட்டதும் தமிழகத்தில்தான்.
இவ்வாறான மௌதூதியின் தொடர்பு தமிழகத்துடன் தொடர்ந்து இருந்துவந்தாலும் மௌதூதியின் சிந்தனைகள் விரிவாக இங்கு விவாதிக்கப்படாததற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை சிந்தனை சிக்கல்கள், நடைமுறை சிக்கல்கள் என இரண்டாக பிரிக்கலாம்.
சிந்தனை சிக்கல்கள்
- மௌதூதியின் கருத்துக்கள் குர்ஆன், ஸூன்னாவிலிருந்து மௌதூதியின் புரிதல்கள் என அல்லாமல் உண்மையான இஸ்லாமை தான் மௌதூதி சரியாக விளக்கப்படுத்தினார் என முன்வைக்கப்பட்டது.
- தனிநபர் வழிபாடு ஆகி விடுமோ என்ற பயம்.
முன்னைய கருத்து இயக்கத்தின் ஆரம்ப கட்டத்திலும் இரண்டாம் கருத்து பிற்காலத்திலும் ஏற்பட்டது. சற்று ஆழமாக சிந்தித்தால் இவ்விரு கருத்துகளுக்கும் இடையே உள்ள உள்முரண் விளங்கும்..
நடைமுறை சிக்கல்கள்
- மௌதூதியின் சிந்தனைகள் இயக்கத்தின் கொள்கை எனும் இறுதி செய்யப்பட்ட வடிவிலேயே இங்கு பரவலாக அறிமுகமானது.
- தென்தமிழகத்தின் திண்டுக்கல், திருச்சி, கோவை, சேலம் ஆகிய பகுதிகளுக்கும் இயக்கத்தின் தர்ஜூமானுல் குர்ஆன் பத்திரிக்கை சென்றாலும் அது உர்து மொழி பேசும் மக்களிடம் அதுவும் குறைவான எண்ணிக்கையிலயே சென்றடைந்தது.
- அழைப்புபணிக்கும் இயக்க கட்டமைப்பிற்க்கும்அதிகமான முக்கியத்துவம் கொடுத்து இயக்கம் பயணித்தது.
- தமிழில் இஸ்லாமிய இயக்கம் வெளியிட்ட மௌதூதியின் புத்தகங்களின் போதாமை ஒரு மிக முக்கிய காரணம். இஸ்லாமிய இயக்கத்தின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார், மௌதூதியின் சிந்தனைகள் ஐந்து சதவீதம் கூட தமிழில் வெளிவரவில்லை என்று.
**********
மௌதூதியின் சிந்தனைகள் அவரின் உரைகள், கேள்வி-பதில்கள் (இது ரஸாயில் மஸாயில் என தனியாக தொகுக்கப்பட்டுள்ளது), தர்ஜூமானுல் குர்ஆன் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைகள், சிற்றேடுகள், புத்தகங்கள், திருக்குர்ஆன் விளக்கவுரை ஆகியவற்றின் மூலமாக வெளிபட்டன. இவற்றில் மௌதூதியின் சிற்றேடுகள் மட்டுமே தமிழில் வெளிவந்துள்ளன.
தமிழில் வெளிவந்த புத்தகங்களைப் பொறுத்தவரை இதுதான் இஸ்லாம், குத்பாப் பேருரைகள், திருக்குர்ஆனின் நான்கு ஆதாரச் சொற்கள், இஸ்லாமிய மறுமலர்ச்சி, இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும், ஜிஹாத் ஃபீ ஸபீலில்லாஹ் ஆகியன முக்கியமானவை.
இதில் ‘இதுதான் இஸ்லாம்’ நூலை உயர்நிலை பள்ளி மாணவர்களுக்காக மௌதூதி எழுதினார். ‘குத்பாப் பேருரைகள்’ பாமர மக்களுக்கு இஸ்லாமை எளிமைபடுத்தி விளக்க மௌதூதியால் ஆற்றப்பட்ட உரைகள். ‘திருக்குர்ஆனின் நான்கு ஆதார சொற்கள்’ மிக முக்கிய புத்தகம் எனினும் இயக்கவட்டத்தில் கூட பெரிய கவனஈர்ப்பை பெறவில்லை. ‘இஸ்லாமிய மறுமலர்ச்சி’ இலங்கையிலும், மற்ற இரு புத்தகங்களும் தனிநபர்களின் முயற்சியால் வெளிவந்தன.
‘ரஸாயில் மஸாயில்’-ன் ஒரு சிறு தொகுப்பு தமிழில் வெளிவந்துள்ளது. ஜனாப். அப்துர் ரஹிம் அவர்களின் முயற்சியில் அதன் முக்கிய கேள்வி பதில்கள் தமிழில் சிறிது சிறிதாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகிறது.
இதைதவிர மௌதூதியின் முக்கிய கட்டுரைகளும், குர்ஆன் விளக்கவுரையும் கூட முழுமையாக தமிழில் வெளிவரவில்லை. அவற்றில் குறிப்படத்தக்கது தன்கீஹாத், தஃப்ஹிமாத் (1,2,3), சர்வரே ஆலம் (1,2), முதலாளித்துவமும் பொதுவுடமையும், திருக்குர்ஆனின் சட்ட அந்தஸ்து, ஸூன்னாவின் சட்ட அந்தஸ்து, இஸ்லாமிய கலாச்சாரமும் அதன் அடிப்படைகளும் போன்ற நூற்கள்.
இதில் ‘தன்கீஹாத்’ முழுக்க முழுக்க அவர்கால சமூக, அரசியல், பொருளாதார நிலைப்பாடுகளின் மீதான விமர்சனங்களை தாங்கிய கட்டுரைகளின் தொகுப்பு, ‘தஃப்ஹீமாத்’ கொள்கை விளக்கங்களை கொண்ட நூல். அது மூனறு பாகம் உள்ளது. ‘இஸ்லாமிய பண்பாடும் அதன் அடிப்படைக் கூறுகளும்’ எனும் நூல் இஸ்லாமிய கலாச்சாரத்தின் மூலம், அதன் தனித்தன்மைகள், அது உருவாக்கிய சமூகம் என விரிவான பார்வை கொண்டது.
இதன் சில பகுதிகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக அதுவும் புத்தகவடிவம் பெறவில்லை. ‘சர்வரே ஆலம்’ (உலகத் தலைவர்) ரஸூல்(ஸல்) அவர்களின் சீரா நூல். அதன் முதல் பாகம் ஆதம்(அலை) முதல் முஹம்மத்(ஸல்) வரையிலான நபித்துவத்தின் வழியாக வரலாற்றின் ஆரம்பம், போக்கு, வளர்ச்சியை விளக்கும் நூல். ஒருவேளை அந்நூல் நமக்கு தமிழில் கிடைத்திருந்தால் பொதுவுடமைவாதிகளுக்கு ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ எவ்வாறு வரலாற்றை விளக்கும் ஒரு முக்கிய நூலோ அதே போன்று நமக்கு ஒரு முக்கிய நூலாக இருந்திருக்கும். அதன் இரண்டாம் பாகம் பாதி முடிவடைவதற்க்குள் அல்லாஹ் அந்த மாபெரும் ஆளுமையை தன் பால் எடுத்துக் கொண்டான். இன்னாலில்லாஹி.
இவற்றையெல்லாம் விட வருந்த தக்க செய்தி மௌதூதியின் முழுமையான வாழ்க்கை வரலாறு கூட தமிழில் கிடையாது. தமிழில் வெளியாகிய தாழை மதியவனின் ‘சிறைப்பறவை’யும் மௌலானா அப்துல் ஹபீஸ் ரஹ்மானியின் ‘மௌலானா மௌதூதி – இருபதாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி நாயகர்’ஆகிய இரு புத்தகங்களும் மௌலானாவின் சிறு வாழ்க்கை குறிப்புகளை மட்டுமே கொண்டுள்ளன. மௌதூதியின் மகள் ஹூமைரா எழுதிய ‘வேர்களை வாசிக்கும் விழுதுகள்’ அரபி பத்திரிக்கை ‘அல் முஜ்தமா’வில் வந்து இலங்கையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. அதுவும் முழுமையானது அல்ல.
மௌதூதியின் சிந்தனைகள் மீதான விமர்சனம்
தமிழகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி தனிமனித சீர்திருத்தம், அழைப்புபணி, இயக்க கட்டமைப்பு போன்றவற்றுடன் சுருங்கிவிட்டதால் மௌதூதியின் சிந்தனைகள் பெரிதாக இங்கு விவாதபொருளாக மாறவில்லை. பொதுவாக மௌதூதியின் சிந்தனை என்றவுடன் அது இறையாட்சிதான் எனும் பொதுப் பார்வை நம்மிடம் உள்ளது. (இறையாண்மை இறைவனுக்கு மட்டுமே என்ற) ஹாகிமிய்யத்திற்கு மௌதூதி அதிக முக்கியத்துவம் கொடுத்தது உண்மைதான். அதைத் தாண்டி சமூகம், பொருளாதாரம், பிற கொள்கைகள், பெண்கள், சமகால அரசு இயந்திரம், கலாச்சாரம் குறித்த அவருக்கே உரித்தான தனித்துவமான பார்வையும் அதற்கான தர்க்க நியாயங்களும் அவரிடம் இருந்தன. இவற்றில் உள்ள குறைகள் கலையப்பட இறையாட்சியை அவர் இறுதி தீர்வாக முன்னிறுத்தினார். முழுமையான அறிமுகமே இல்லாத போது விவாதங்கள் எவ்வாறு ஆரோக்கியமாக அமையும். மௌதூதி சிந்தனைகள் மீதான மதஅதிகார வர்க்கத்தின் விமர்சனங்களும் கூட காழ்ப்புணர்வை கொண்டு அமைந்ததே தவிர அதில் எவ்வித அறிவாதார அடிப்படையும் இல்லை. தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவிலும் மௌதூதிக்கு நிகரான அறிவாளுமைகள் இருக்கவில்லை. அபுல்ஹசன் அலி நத்வி, அமீன் அஹ்சன் இஸ்லாஹி போன்றவர்களை கூட விதிவிலக்குகளாகச் சொல்ல முடியாது. அவர்களின் விமர்சனமும் கூட ஜமாஅத்தின் இயக்க கட்டமைப்பு சார்ந்ததாக தான் இருந்தது.
ஆனால் நம்முடைய சமகாலத்தில் இயக்க மற்றும் நடுநிலை சிந்தனை மரபிலிருந்தே வரக்கூடிய விமர்சனங்கள் கவனத்திற்குரியவை. மௌதூதியின் சிந்தனையை ஆய்வு செய்வதற்கு அவரின் முழுமையான படைப்புகளையும் செயல்பாடுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மௌதூதியின் ஹாகிமய்யத் கோட்பாடு கிலாஃபத் வீழ்ச்சி மற்றும் ஹெகல் தத்துவத்தின் தாக்கமா? அல்லது குர்ஆன், ஸூன்னா விலிருந்து பெறப்பபட்டதா? என முடிவுக்கு வர இயலும். மேற்கூறிய மௌதூதியின் சிந்தனைகளை தாங்கிய பல நூற்கள் அரபியிலேயோ ஆங்கிலத்திலேயோ மொழிபெயர்க்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் சைய்யத் குதுப் பற்றிய ‘SYED QUTUB BETWEEN REFORM AND REVOLUTION’ எனும் ஆய்வு நூலினை படித்தால் இதுவரை அறிந்திராத ஒரு சைய்யத் குதுபின் சித்திரத்தை நம்மால் காண முடியும். அவவாறே மௌதூதியின் முழுமையான சிந்தனையும் அதை அடைவதற்கான அவரின் வழிமுறையும் மீள்பார்வைக்கு உட்படுத்துவதின் மூலம் இதுவரை நாம் அறிந்திராத மௌதூதியை அது நமக்கு காட்டலாம். ஏனெனில், ஹாகிமியத்தை தூக்கி பிடித்த மௌதூதி தான் பாலஸ்தீன் பிரச்சனைக்கு தீர்வாக யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய கூட்டரங்காசத்தை முன்மொழிந்தார். ஜனநாயகத்தை விமர்சனம் செய்த அவர்தான் பின்னால் பாகிஸ்தானில் தேர்தல் அரசியலில் போட்டியிட்டார்.
மேலும் ஹாகிமிய்யத் பற்றி பேசிய அவர் அதை கருத்தியல் தளத்தில் மட்டுமல்லாமல் அதை செயல்வாதமாக மாற்ற ஓர் இயக்கத்தையும் கட்டமைத்தார். அதன் வரலாறு ‘ரூதாத்’ எனும் பெயரில் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. அதில் மௌதூதியின் பல்வேறு உரைகள், செயல்நகர்வுகளைப் காணலாம். அதில் அவரின் முழுமையான பரிமாணத்தை பெற முடியும். அதில் அவரின் வழிமுறைகள் குறித்த சிந்தனைகளும் பதிவாகியுள்ளன. அதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இது தமிழில் ‘ஜமாஅத் கடந்துவந்த பாதை’ எனும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இறுதியாக..
சந்தேகத்திற்கிடமின்றி மௌதூதியை விடவும் சில குறிப்பிட்ட அறிவுத்துறையில் சிறந்து விளங்கிய அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள், மறுப்பதற்கில்லை. ஆனால் மேற்கு நாகரீகம் இறைநம்பிக்கையை கேலிக்கும் கேள்விக்கும் உள்ளாக்கி ஆர்பரித்த போது ஒரு சாதாரண முஸ்லிமின் ஈமானை தக்கவைத்ததோடு மட்டுமல்லாமல் அவனையும் இஸ்லாமை ஒரு மாற்றுசக்தியாக ஏந்தி களத்திற்கு வந்து போராட வைத்த பெருமை மௌதூதியையே சாரும். மௌதூதி ஒரு அறிஞர் மட்டுமல்ல போராளியும் கூட. தனது சிந்தனைகளை செயல்வாதமாக மாற்றிய போராளி.
மௌதூதியின் சிந்தனைகளை நாம் மீள்வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் மேற்கில் வளர்ச்சியுற்ற தேசியம், ஜனநாயகம், செக்குலரிசம் பற்றிய மௌதூதியின் விமர்சனங்கள் இன்று நாம் உரையாடும் பின்நவீன, பின்காலனிய கருத்துநிலைகளோடு பொருந்திபோககூடியது. மேலும் மேற்கின் கடுமையான எதிரியாக அறியப்பட்ட அவர்தான் மேற்கின் அறிவுவளர்ச்சியை அது மேற்குக்கு மட்டும் உரியதல்ல, மாறாக முழுமனித குலத்தின் பாரம்பரிய சொத்து என்பார். இவ்வாறு பலகோணங்களில் அவரின் சிந்தனைகளை முழுமையாக பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு முன்னால் அவற்றை எலலாம் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டியுள்ளது.
குறைந்தபட்சம் உடனடியாக மௌதூதியைப் பற்றிய கனமான வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றாவது தமிழில் வெளிவரவேண்டிய தேவையுள்ளது. ஏனெனில் அவர் ஒரு மாபெரும் அறிஞர் என்று அறிஞர்கள் ஏற்றுகொள்வார்கள், அவர்கள் அறிஞர்கள் என்பதால். இயக்கவாதிகள் ஏற்றுகொள்வார்கள், இயக்கத்தில் இருப்பதால். ஆனால் அது பொதுமக்களுக்கு தெரியவேண்டியுள்ளது. அதுவே அவரின் மாபெரும் அர்பணிப்புமிக்க பணிக்கு நாம் செய்யும் பிரதியுபகாரமாகும்.
அல்லாஹ் அந்த ஆளுமையின் அர்பணிப்புகளை ஏற்று பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தவ்சை வழங்குவானாக. இத்துடன் தற்காலிகமாக முடித்துக் கொள்கிறேன்.
ஆனால் உரையாடல்கள் முடிவதில்லை.
மௌதூதியை குறித்த பக்கீர் முஹம்மது அவர்களின் கட்டுரை.. மிக அருமை.. மௌதூதியின் சிந்தனைகளை மிள்வாசிப்பிற்கு உட்படுத்துவது., பொதள மக்கள் மத்தியில் அதனை கொண்டு சேர்ப்பது என்பது இன்றைய காலத்தின் கட்டாயம்..