மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்: ஒரு சமூகவியல் ஆய்வு – நூலறிமுகம்
மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம் பற்றிய நினைவுகள் சில இஸ்லாமியர்களைத் தவிர்த்து அனேகமாக பொதுச் சமூக நினைவிலிருந்து முற்றிலும் நீங்கிவிட்டதாகவே தெரிகிறது. தமிழ்நாட்டில் வேங்கைவயல் போன்ற சாதிய வக்கிரங்கள் நிகழும் யுகத்தில், இந்தியாவில் இந்துத்துவம் இஸ்லாமிய மக்களை இரண்டாம் குடிகளாக மாற்றத் துடிக்கும் காலகட்டத்தில் மீண்டும் மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றத்தைக் குறித்துப் பேசுவதும் விவாதிப்பதும் அவசியமாகும்.
அத்தகைய விவாதத்தின் தொடக்கமாக 2023 ஜனவரி மாதம் வெளியான மொழிபெயர்ப்பு நூலான ‘மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்: ஒரு சமூகவியல் ஆய்வு’ என்ற மும்தாஸ் அலீ கான் அவரது நூலினைக் குறிப்பிடலாம். ‘Mass-conversions of Meenakshipuram: A Sociological Enquiry’ என்று ஆங்கிலத்தில் 1983ல் வெளியான இந்நூலினை ப. பிரபாகரன் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். மிக நேர்த்தியாக, வாசிப்பில் எந்தத் தடையையும் ஏற்படுத்தாத மொழிபெயர்ப்பு. ஓர் ஆய்வு நூலுக்கு இதுபோன்ற மொழிபெயர்ப்பு அமைவது அரிது. கடைசியாக க.அ. மணிக்குமாரின் ‘முதுகுளத்தூர் படுகொலை’ நூல் இத்தகைய வாசிப்பனுபவத்தைக் கொடுத்தது.
தமிழ்நாட்டில் இன்றைய அதிமுக-பாஜக உறவின் வேர் பார்ப்பனத் தலைமையான ஜெயலலிதா காலத்தில் தொடங்கியதல்ல; அது எந்தவொரு கோட்பாட்டு அடித்தளமும் இல்லாத எம்ஜிஆர் காலம் முதலே தொடங்கியதாகும். அதிமுக என்ற கட்சிக்குள் மென்மையான மதவாதம் தொடர்ந்து இருந்தே வந்துள்ளது. அதைத்தான் மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம் நடைபெற்ற 1980 காலகட்டத்தில் ஆட்சியிலிருந்த அதிமுக அரசு ஆற்றிய மிக மோசமான எதிர்வினை நமக்கு உணர்த்துகிறது. அதன் தொடர்ச்சிதான் ஜெயலலிதா ராமர் கோவில் கட்ட செங்கல் அனுப்பியது, அடித்தள மக்கள் வழிபடும் கோவில்களில் உயிர்ப்பலியைத் தடை செய்தது எல்லாம். மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம் நடைபெற்ற சமயத்தில் ‘மதமாற்றத் தடைச் சட்டம் வேண்டும்’ என்பது போன்ற கோரிக்கைகளெல்லாம் ஆளும்கட்சி தரப்பிலிருந்து எழுப்பப்பட்டன. மதமாற்றம் குறித்து பிற அரசியல் கட்சிகள் கொண்டிருந்த பார்வையை இந்நூலில் காண முடியும். அதே நேரத்தில், மதம் குறித்தும் மதமாற்றம் குறித்தும் திமுக கொண்டிருந்த நிலைப்பாடு அதன் சிறுபான்மையினர் சார்ந்த கொள்கைப் பிடிப்புக்குச் சான்றாகும்.
இந்நூல் ஆறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் அத்தியாயம் ஆய்வின் நோக்கம் குறித்தும், அது மேற்கொள்ளப்பட்ட முறை குறித்தும், பெருந்திரள் மத மாற்றத்திற்கான காரணங்களையும், அத்தகைய மதமாற்றத்திற்கு அரசியல் கட்சிகள் ஆற்றிய எதிர்வினையையும் மிகச் சுருக்கமாகச் சொல்கிறது. எந்தவொரு அமைப்பிடமும் நிதியுதவி பெறாமல் சொந்த முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விது என்பதால் இதன் நம்பகத்தன்மையும் நடுநிலைமையும் உறுதியாகிறது. ஒரு அறிமுகத்தை வழங்கும் அத்தியாயமாக இதைக் கொள்ளலாம்.
இரண்டாவது அத்தியாயம் தமிழ்நாட்டில் சாதி அமைப்பு பற்றியும், குறிப்பாகத் திருநெல்வேலி மற்றும் மீனாட்சிபுரம் பகுதியில் இருக்கும் மக்கள் தொகை விவரங்களையும் சமூக நிலைமைகள் பற்றியும் நமக்குத் தெரிவிக்கிறது. மீனாட்சிபுரத்தில் நிலவிய சாதிய உறவுகள் அங்கு மதமாற்றம் நடக்கும் என்பதற்கான ஒரு அறிகுறியை நமக்கு அளிக்கின்றன. குறிப்பாக அந்த வட்டாரத்தில் ஆதிக்கச் சாதியாகவும் நிலவுடைமை சாதியாகவும் இருக்கும் தேவர்கள், தேவேந்திர குல வேளாளர்கள் (பள்ளர்கள்) மீது செலுத்திய ஆதிக்கத்தையும் ஒடுக்குமுறைகளையும் இதில் பார்க்க முடிகிறது. பள்ளர் (தேவேந்திர குல வேளாளர்) சமூக மக்களிடம் பரவி இருந்த கல்வியும் அரசியல் விழிப்புணர்வும் நீண்டநாள் அவர்கள் மனதில் துடித்துக்கொண்டிருந்த இஸ்லாமிற்கு மதம்மாறுவது பற்றிய சிந்தனைகளையும் இந்த அத்தியாயம் கொண்டிருக்கிறது.
மீனாட்சிபுரம் மக்கள் கிறித்தவத்தையும் பௌத்தத்தையும் தவிர்த்துவிட்டு இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன என்பதை ‘மதமாற்றம்: உண்மைகளும் விளைவுகளும்’ என்ற மூன்றாம் அத்தியாயம் கொண்டிருக்கிறது. மதமாற்றம் நிகழ்ந்த விதத்தையும் அது நடந்தவுடன் நடைபெற்ற சம்பவங்கள், அதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்வினைகள், மீள்மதமாற்றங்கள் போன்றவற்றையும் இந்த அத்தியாயம் விரிவாகப் பேசுகிறது. தனிநபர், சமுதாயம், அரசாங்கம், அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் என அனைத்து தரப்பும் பெருந்திரள் மதமாற்றத்தை எவ்வகையில் அணுகினார்கள் என்பதை இந்த அத்தியாயம் படம் பிடித்துக் காட்டுகிறது. பள்ளர் (தேவேந்திர குல வேளாளர்கள்) சமூக மக்கள் மதம் மாறுவதென்பது தேவர்களின் அதிகார வீழ்ச்சியாகப் பார்க்கப்பட்டது. வட்டார அளவில் அவர்களுக்கிருந்த சில நிலவுடைமை அதிகாரங்களை வைத்துக்கொண்டு அவர்களால் ஏற்படுத்த முடிந்த சில தடைகளை ஏற்படுத்தினார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக மதமாற்றம் அங்கு பெரிய மதக் கலவரங்கள் எதையும் உருவாக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் மத கலவரத்தை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. தமிழ்நாட்டின் நீண்ட நெடிய பெரியாரிய மரபுதான் இதற்குக் காரணம் என்பது ஆய்வாளரின் கருத்தாக இருக்கிறது.
நான்காவது அத்தியாயம்தான் இந்நூலில் பேசப்படும் ஆய்வு முடிவுகளுக்கு ஆதாரமாக உள்ளது . தனிநபர் நேர்காணல்கள் மூலம் நிகழ்த்தப்பட்ட ஆய்வுமுடிவுகளுக்கான தரவுகள், கேள்விகளின் அடிப்படையில் “ஏற்பு” “மறுப்பு” என்ற வகையில் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அட்டவணைப் பிரிவினர், பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாத உயர்சாதியினர், பார்ப்பனர் அல்லாத கீழ்ச் சாதியினர், கிறித்தவர்கள், முஸ்லிம்கள் என இதன் பங்கேற்பாளர்கள் முறையாகப் பிரிக்கப்பட்டு அனைவரது கருத்துகளும் இடம்பெற்றிருக்கின்றன.
பெருந்திரள் மதமாற்றத்திற்கு அறபுப் பணம்/ Petro Dollarதான் காரணமென்று கிளப்பிவிடப்பட்ட பொய்யை இந்த அத்தியாயத்தில் இருக்கும் தனிநபர் நேர்காணல்கள் மறுக்கின்றன. மதம்மாறிய அட்டவணைச் சாதி மக்களைத் தாண்டி தேவர்களில் கணிசமான மக்களும் மதமாற்றத்திற்கு பணம் காரணமில்லை என்பதை ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். மீள்மதமாற்றங்கள், அரசின் நடவடிக்கைகள், ஊடகங்கள் வகித்த பாத்திரம், இந்துமத எதிர்ப்பு போன்ற முக்கியமான சில ஆய்வுப் பார்வைகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.
ஐந்தாவது அத்தியாயம் 20க்கும் மேற்பட்ட தனிநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களைக் கொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலானோர் மதமாற்றத்திற்க்கான காரணமாக தமது சுயமரியாதை உணர்வையே காரணம் காட்டுகின்றனர். சாதிய ஒடுக்குமுறை, சாதியின் காரணமாக அவர்களுக்கு ஏற்படும் இழிவு போன்றவை கூடுதல் காரணமாக இருந்துள்ளன. பல ஆண்டு காலமாகத் திட்டமிடப்பட்டு, ஒரு திடீர் நிகழ்வால் உந்தப்பட்டு மீனாட்சிபுரத்தில் பெருந்திரள் மதமாற்றம் நிகழ்ந்துள்ளது. சில அட்டவணைச் சாதிகள் கிறித்தவத்திற்கு மதம் மாறியும்கூட அவர்களுக்கு சமூக சமத்துவம் கிடைக்கவில்லை என்றும்; ஆனால் இஸ்லாத்தில் ஓரளவு சமூக சமத்துவமும் சுயமரியாதையும் கிடைப்பதாகப் பெரும்பாலானோர் சொல்கிறார்கள். மதமாற்றம் அறிவிக்கப்பட்ட அன்றே சிலர் மதம் மாறாமல் இருந்துள்ளனர். இன்னும் சிலர் குடும்பத்துக்கு அஞ்சி மீள்மதமாற்றம் செய்துகொண்டனர். மீனாட்சிபுரத்திலிருந்த சில சிறுவர்களிடமும் இதைப் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவர்களும் மதமாற்றம் பற்றி அறிந்தே உள்ளனர். தேவர்களில் சிலரும், பார்ப்பனர்களும் மதமாற்றத்தை மிக மோசமாக விமர்சிக்கவும் செய்துள்ளனர். ஆய்வாளர் தனது இஸ்லாமிய அடையாளத்தை மறைத்துக்கொண்டே சில நேர்காணல்களை நடத்த முடிந்திருக்கிறது. இந்திய ஒன்றிய அளவில் விவாதத்தைக் கிளப்பிய மீனாட்சிபுரம் பெருந்திரள் (280 குடும்பங்களின்) மதமாற்றம் பிராந்திய அளவில் எவ்விதக் கலவரங்களை உருவாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
கடைசி அத்தியாயத்தில் சில ஆய்வு முடிவுகளையும், அரசுக்குப் பரிந்துரைகள் சிலவற்றையும் வழங்கி இருக்கிறார் நூலாசிரியர். அந்தப் பகுதியிலுள்ள உயர்சாதிகளால் தலித்துகள் காலம் காலமாக அனுபவித்த அவஸ்தைகளும் கொடுமைகளும் மதம் மாறக் காரணமாக அமைந்தன. கிறித்தவத்திற்கு மதம் மாறியும் சாதிய இழிவு நீங்காத காரணத்தால் அசமத்துவங்கள் குறைவாகவுள்ள இஸ்லாத்துக்கு மதமாறினர். பெருந்திரள் மதமாற்றங்கள் தமிழ்நாட்டில் நிகழ்வதற்கான காரணங்களாக கல்விப் பரவலும், உரிமைகள் குறித்தான விழிப்புணர்வும், சுயமரியாதை வேட்கையும் கூறப்படுகின்றன. மேலும், தமிழ்நாட்டில் இருக்கும் அதிகார அமைப்புகளில் சாதியம் பல இடங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் தலித்துகள் பெரிதும் இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள். வழக்குகளில் ஒருதலைபட்சமாக முடிவுகள் எட்டப்படுகின்றன. அதிகார அமைப்புகளில் சாதியத்தின் வேர்களை அறிய ராதா குமார் எழுதிய Police Matters என்ற நூலும், மணிக்குமார் எழுதிய ’முதுகுளத்தூர் கலவரம்’ நூலும் உதவும்.
காங்கிரஸும் அஇஅதிமுகவும் அதிகச் செல்வாக்கு செலுத்திய தென் தமிழகத்தில், ஆதிக்கச் சாதியான தேவர்களும் மறவர்களும் தலித்துகளுக்கு எதிராகச் செய்யும் குற்றங்களை சரியாகக் கவனிக்காமல் விட்டதுதான் இரண்டு சமூகத்தவருக்கும் இடையிலான முரண்களை அதிகமாக்கி இருந்தது. இந்த முரண் கவனிக்கப்படாமல் இருந்ததும் மதமாற்றத்திற்கான முக்கியமானவொரு காரணமாகச் சொல்லப்படுகிறது. மதமாற்றத்தைத் தடுக்க அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தின.
மீனாட்சிபுரம் மதமாற்றத்தால் இந்து-முஸ்லிம் உறவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும், சமூக நல்லிணக்கம் சீர்குலையவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. அதன் காரணங்கள் நுணுக்கமாக ஆராயப்பட வேண்டியவை. காலம் காலமாக நடந்துவரும் பெருந்திரள் மதமாற்றங்களின் தொடர்ச்சியாகவே மீனாட்சிபுரம் மதமாற்றத்தையும் பார்க்க வேண்டும்.
இஸ்லாமியக் குடும்பங்களில் பெண்களின் நிலை குறித்து இந்நூல் சில செய்திகளைப் பதிவுசெய்திருந்தாலும், அவற்றில் நிலவுவதாகச் சொல்லப்படும் ஆணாதிக்க அம்சங்கள் பற்றி விமர்சன ரீதியாக எதையும் பதிவு செய்யவில்லை. அப்படியான ஒன்று இந்நூலின் ஆய்வின் எல்லையை மீறியதாக இருக்கும் எனச் சொல்லப்பட்டாலும், இஸ்லாம் மீது சமகாலத்தில் வைக்கப்படும் விமர்சனங்களை சீர்தூக்கிப் பார்ப்பதற்கு அத்தகைய ஆய்வு நிச்சயம் உதவிகரமாக இருந்திருக்கும்.
இன்று மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம் போன்றதொரு நிகழ்வு நிகழும்பட்சத்தில், அது ஏற்படுத்தக்கூடிய அதிர்வுகளை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. வளர்ந்துவரும் இந்துத்துவமும் அதிகரித்து வரும் சாதிய மோதல்களும் இருவேறு சமூகச் சிக்கல்களின் பரிணாமத்தை உணர்த்தினாலும் அவை ஏற்படுத்தும் மோசமான விளைவுகளைக் குறைத்து மதிப்பிட முடியாது.
அந்த வகையில் 40 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகி இருக்கும் இந்நூல் மதம் குறித்தும், இஸ்லாம் குறித்தும் ஒரு பெரும் உரையாடலை நிகழ்த்தும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது. வாய்ப்பிருப்போர் வாசிக்கவும்.
***
நூல்: மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்: ஒரு சமூகவியல் ஆய்வு
ஆசிரியர்: மும்தாஸ் அலீ கான், தமிழில்: ப. பிரபாகரன்
பக்கங்கள் : 240 / விலை : ₹300
வெளியீடு: சீர்மை
🛒 ஆன்லைனில் ஆர்டர் செய்ய: https://www.commonfolks.in/books/d/meenatchipuram-perunthiral-mathamaatram-oru-samoogaviyal-aaivu
📞 வாட்ஸ்அப்பில் ஆர்டர் செய்ய: +91-7550174762