கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்மாயில் ஹனிய்யாவின் உயிர்த் தியாகமும், ஃபலஸ்தீனப் போராட்டத்தின் எதிர்காலமும்

Loading

ஜூலை 31 நள்ளிரவில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் இயக்க அரசியல் பிரிவுத் தலைவரும் ஃபலஸ்தீனின் முன்னாள் பிரதமருமான இஸ்மாயில் ஹனிய்யா படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் பொறுப்பு ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. ஆனால், ஹனிய்யாவை படுகொலை செய்தது இஸ்ரேல்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஹனிய்யாவின் படுகொலையை வரவேற்று இஸ்ரேலிய அமைச்சர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் கருத்துகளைப் பதிவுசெய்தனர். ஈரான் புதிய அதிபரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்திருந்த ஹனிய்யா, நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது அறைக்குத் திரும்பிய சில மணிநேரங்களில் கொலை செய்யப்பட்டார். ஏவுகணை அல்லது ட்ரோன் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று ஈரான் கூறுகிறது.

இத்தாக்குதலுக்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக லெபனானில் மற்றொரு தாக்குதலை நடத்திய இஸ்ரேல், ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் மூத்த தளபதியான ஃபுஆது ஷுக்ரு என்பவரைப் படுகொலை செய்தது. வெளிநாடுகளில் தாக்குதல்களையும் படுகொலைகளையும் நடத்துவது இஸ்ரேலுக்குப் புதிதல்ல. உலக நாடுகளின் மௌனமும் கையாலாகாத்தனமும் இந்த அக்கிரமத்தை தொடரச் செய்கிறது. எனினும், அரசின் விருந்தினராக, ஜனநாயக முறைப்படி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நபரை இஸ்ரேல் படுகொலை செய்வது இதுதான் முதன் முறை. இஸ்மாயில் ஹனிய்யாவின் படுகொலையை ஈரான், சீனா, ரஷ்யா, துருக்கி, கத்தார் உள்ளிட்ட நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. இஸ்ரேலின் இத்தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானும் ஹமாஸும் எச்சரித்துள்ளன.

ஹனிய்யாவின் உடல் கத்தாரில் அடக்கம் செய்யப்பட்டது. அக்டோபர் 7 தாக்குதலைத் தொடர்ந்து கடந்த பத்து மாதங்களாக ஃபலஸ்தீனின் காஸாவில் கொடூரமான தாக்குதல்களை நடத்திவரும் இஸ்ரேல் இதுவரை 40,000இற்கும் அதிகமாக ஃபலஸ்தீனர்களைப் படுகொலை செய்துள்ளது. ஒட்டுமொத்த காஸா பிராந்தியமும் வாழ்வதற்குத் தகுதியற்ற இடமாக மாற்றப்பட்டுள்ளது. ஏறத்தாழ காஸாவின் முழு மக்கள் தொகையும் அகதிகளாக மாற்றப்பட்டுள்ளது.

ஹமாஸும் பிற ஃபலஸ்தீன அமைப்புகளும் தம் வசமுள்ள நூற்றுக்கும் அதிகமான பிணைக்கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்த நிலையில், சமாதானப் பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்கு ஆற்றிவந்த இஸ்மாயில் ஹனிய்யாவை இஸ்ரேல் படுகொலை செய்திருப்பதன் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தையில் தனக்கு அக்கறை இல்லை என்பதை அது நிரூபித்துள்ளது. ஏற்கெனவே ஊழல், முறையற்ற நிர்வாகம், தொடர் தோல்விகள் எனப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, பிணைக் கைதிகளை மீட்க முடியாமல் திணறி வருவதற்காக இஸ்ரேலிய மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஹமாஸ் அமைப்புடன் விரைவாக சமாதான உடன்படிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அழுத்தங்கள் அதிகரித்து வந்த நிலையில், ஹனிய்யாவை படுகொலை செய்து தனது இமேஜை சரி செய்ய முயன்றுள்ளார் நெதன்யாஹு.

நெதன்யாஹு அமெரிக்கப் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பிய சில நாள்களில் இஸ்மாயில் ஹனிய்யா படுகொலை செய்யப்பட்டுள்ளதால், இப்படுகொலையில் அமெரிக்காவின் பங்களிப்பும் ஒப்புதலும் இருக்கிறது என்று ஃபலஸ்தீனர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மறுத்துள்ளது.

இஸ்மாயில் ஹனிய்யா: வாழ்வும் மரணமும்

1948இல் உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடு கள்ளத்தனமாகத் திணிக்கப்பட்டபோது 475 கிராமங்களைச் சேர்ந்த ஏறத்தாழ ஏழரை இலட்சம் ஃபலஸ்தீன மக்கள் அவர்களின் வீடுகளை விட்டும் நிலங்களை விட்டும் விரட்டப்பட்டு அகதிகளாக்கப்பட்டனர். இவர்கள் ஃபலஸ்தீனின் காஸா மற்றும் மேற்குக் கரைப் பகுதிகளுக்கும், ஜோர்டான், லெபனான், எகிப்து உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் அகதிகளாகச் சென்றனர். அஸ்கலான் நகரின் அல்ஜூறா பகுதியில் வசித்து வந்த இஸ்மாயில் ஹனிய்யாவின் குடும்பம் காஸாவில் உள்ள அல்ஷாத்தி அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்தது. அகதிகள் முகாமில் 1962இல் பிறந்த இஸ்மாயில் ஹனிய்யா, தனது பள்ளிக் கல்வியை காஸாவில் உள்ள அல்அஸ்ஹர் கல்வி நிலையத்திலும், அரபு இலக்கியத்தில் பட்டப் படிப்பை காஸாவின் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திலும் முடித்தார்.

1983இல் கல்லூரி நாள்களில் ஹமாஸ் இயக்கத்திற்கு முன்னோடியாகப் பார்க்கப்படும் இஸ்லாமிக் பிளாக் மாணவர் அமைப்பில் இணைந்து செயலாற்றினார். அப்போதே அவரின் சிறை வாழ்க்கையும் தொடங்கிவிட்டது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போராடிய காரணத்திற்காக 25 வயதில் பதினெட்டு நாள்கள் சிறைவாசம் அனுபவித்தார். 1987இல் ஹமாஸ் இயக்கம் தொடங்கப்பட்டபோது அதன் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1988இல் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மறு வருடம், மூன்று வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். 1991இல் ஏறத்தாழ 400 ஃபலஸ்தீனத் தலைவர்களையும் செயல்பாட்டாளர்களையும் தெற்கு லெபனானின் பாலைவனத்திற்கு இஸ்ரேல் நாடு கடத்தியது. இவர்களில் பெரும்பான்மையினர் ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாது அமைப்பைச் சார்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் லெபனானுக்குச் சென்றுவிடுவார்கள் என்றும், அத்துடன் தனது தலைவலி முடிந்துவிடும் என்றும் தப்புக் கணக்கு போட்டது இஸ்ரேல். ஆனால் வெய்யில், மழை, குளிர் என ஒரு வருடம் பாலைவத்தில் கழித்த இவர்கள் அதனையே தங்களின் பிரச்சாரக் கேந்திரமாக மாற்றிக்கொண்டுவிட்டனர். ஹமாஸ் முன்னாள் தலைவர் அப்துல் அஸீஸ் றன்தீஸி, இஸ்மாயில் ஹனிய்யா ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். உலக நாடுகளின் ஊடகங்கள் அவர்களை நோக்கித் திரும்பின.

வேறு வழியின்றி அவர்களை மீண்டும் ஃபலஸ்தீனுக்குள் அனுமதித்தது இஸ்ரேல். காஸா திரும்பிய ஹனிய்யா, காஸா பல்கலைக்கழகத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். 1997இல் ஜோர்டானில் ஹமாஸ் இயக்கத் தலைவர் ஃகாலித் மிஷ்அல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தோல்வியில் முடியவே, அதற்குப் பகரமாக ஷைஃகு அஹ்மது யாசீன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்தது இஸ்ரேல். ஷைஃகு யாசீன் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து அவரின் தனிச் செயலாளராக இருந்துவந்தார் ஹனிய்யா. 2003இல் இருவரும் இருந்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் இருவரும் தப்பினர். 2004 மார்ச் மாதம் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் ஷைஃகு யாசீன் படுகொலை செய்யப்பட்டார்.

2005 இறுதியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் மிகப்பெரும் வெற்றியைப் பெற்று ஹனிய்யா பிரதமராகப் பதவியேற்றார். அதுவரை பெருமளவில் அறியப்படாத நபராக இருந்த ஹனிய்யா, உலகின் கவனத்தை ஈர்த்தார். ஆனால் ஹமாஸின் அரசியல் வெற்றியை பொறுத்துக்கொள்ள இயலாத இஸ்ரேல், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஃபலஸ்தீன அதிகாரச் சபையின் அதிபர் மஹ்மூது அப்பாஸை பயன்படுத்திப் பிரச்சனைகளை ஏற்படுத்தினர். ஹமாஸ், ஃபத்தாஹ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தமக்குள் வீதிச் சண்டைகளில் ஈடுபட்டனர். அக்டோபர் 20, 2006 அன்று ஹனிய்யாவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதல்களைத் தொடர்ந்து காஸா முழுவதுமாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் வந்தது. காஸாவின் மீது இஸ்ரேல் பொருளாதாரத் தடைகளை விதித்தது. 2007இல் ஹமாஸின் காஸா பிரிவுத் தலைவராக ஹனிய்யா நியமிக்கப்பட்டார்.

2012இல் காஸாவின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹனிய்யாவின் வீட்டிற்கு அருகிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன் பிரதமர் அலுவலகம், அமைச்சரவைக் கட்டிடங்கள் என அனைத்தும் தாக்குதலுக்கு ஆளாகின. தாக்குதலில் கொல்லப்பட்ட ஒரு பச்சிளம் குழந்தையைக் கையில் ஏந்திய இஸ்மாயில் ஹனிய்யா, அப்போதைய எகிப்தியப் பிரதமர் ஹிஷாம் கந்தில் இருவரும் கண்ணீர் வடித்தனர். மருத்துவமனையில் இருந்து வெளிவந்த இருவரின் ஆடைகளிலும் ரத்தம் தோய்ந்திருந்தது. இக்காட்சிகள் அப்போது உலகின் மௌனத்தை சற்று அசைத்துப் பார்த்தன.

ஃபத்தாஹ் அமைப்புடன் இணைந்து ஒரு ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கு ஏதுவாக இஸ்மாயில் ஹனிய்யா தனது பதவியை 2014இல் விட்டுக் கொடுத்தார்.

ஆனால், இந்தப் பொருளாதாரத் தடை ஃபத்தாஹ் மீது தங்களின் கோபத்தைத் திருப்புவதற்குக் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதில் ஹனிய்யா உள்ளிட்ட தலைவர்கள் கவனமாக இருந்தனர். ‘இந்தத் தடை நமது உறுதியைக் குலைத்துவிடக் கூடாது. ஃபலஸ்தீன மக்கள் மீது இத்தடையை விதித்தவர்களுக்கு எதிராகவே நமது போராட்டம் இருக்க வேண்டும்’ என்று அப்போது ஹனிய்யா கூறியிருந்தார். 2018இல் ஹனிய்யாவை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

2017இல் ஃகாலித் மிஷ்அலுக்குப் பிறகு ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹனிய்யா, 2019இல் இருந்து கத்தாரில் வசித்து வந்தார். இஸ்ரேலின் தடைகள் காரணமாக, காஸாவில் இருந்து அடிக்கடி பயணங்களை மேற்கொள்வது சிரமமாக இருக்கும் என்பதால் அவர் கத்தாருக்குப் புலம்பெயர்ந்து சென்றார். 2021இல் அரசியல் பிரிவின் தலைவராக அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது காஸாவின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கோரமான தாக்குதலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 60 நபர்கள் கொல்லப்பட்டதாக அவர் தெரவித்திருந்தார். ஏப்ரல் 10, 2024 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் அவரின் மூன்று மகன்கள் கொல்லப்பட்டனர். அதற்கு முன்னர் மற்றொரு தாக்குதலில் அவரின் பேரக் குழந்தைகள் மூவர் கொல்லப்பட்டனர். ‘தியாகிகளின் இரத்தம், காயமடைந்தவர்களின் வலிகள் ஆகியவற்றின் மூலம் நாம் நமது நம்பிக்கையையும், எதிர்காலத்தையும், நம் மக்களுடைய – தேசத்துடைய சுதந்திரத்தையும் கட்டியெழுப்புகிறோம்’ என்று அவர் கூறினார்.

தலைவர்களின் கள்ள மௌனம்

தலைவர்களின் மரணம் ஹமாஸ் இயக்கத்தைத் தளர்வடையச் செய்யாது என்றாலும் எந்த மரணத்தையும் போன்று இந்த மரணமும் அவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை. உலகம் முழுவதும் — பாரிஸ் ஒலிம்பிக் தொடங்கி பல்கலைக்கழக வளாகங்கள் வரை — ஃபலஸ்தீன மக்களுக்கான ஆதரவுக் குரல்கள் எழுந்தாலும் உலக நாடுகளின் தலைவர்கள் தங்களின் கள்ள மௌனத்தைக் கலைப்பதற்கு விரும்பவில்லை.

படுகொலை செய்யப்பட்டவர் ஒரு நாட்டின் முன்னாள் பிரதமர் என்ற போதும் பல நாடுகள் இதனைக் குறித்து வாய் திறக்கவில்லை. சிலர் கண்டனங்களைப் பதிவுசெய்தனர். இரு தரப்பும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கினர் பலர். இதுவே, இஸ்ரேலின் ஒரு வார்டு கவுன்சிலர் கொலை செய்யப்படிருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும்? மறு கணமே, ஃபலஸ்தீன் மீதும் லெபனான் மீதும் தனது தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி இருக்கும். ‘தனது இறையாண்மையைப் பாதுகாக்கும் உரிமை இஸ்ரேலுக்கு இருக்கிறது’ என்று கூறி பறந்து வரும் அமெரிக்கா, தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, யமன் மீதும் ஈரான் மீதும் குண்டுகளைப் பொழிந்திருக்கும். அமெரிக்காவின் பக்க வாத்தியங்களாக இங்கிலாந்தும் பிரான்சும் உடன் வந்திருக்கும்.

இப்படியெல்லாம் தாக்குதல் நடத்தி நாடுகளைச் சீரழிக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. நீதிக்காக குரல் எழுப்ப வேண்டும் என்றுதான் சொல்கிறோம். உலக நாடுகளில் உள்ள மக்கள் ஃபலஸ்தீன ஆதரவு நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் மூலம் இதனைத்தான் தங்கள் நாடுகளின் தலைவர்களிடம் முன்வைக்கிறார்கள்.

மறுபுறம், ஈரானின் பாதுகாப்பு, அதன் வல்லமை குறித்த கேள்விகளையும் இச்சம்பவம் எழுப்பியுள்ளது. தங்கும் அறையில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மூலம் ஹனிய்யா கொல்லப்பட்டார் என்றும், ஏவுகணை மூலம் கொல்லப்பட்டார் என்றும் இருவேறு விதமாகத் தகவல்கள் வருகின்றன. எதுவாக இருந்தாலும் இவை ஈரானின் தோல்வியை எடுத்துரைக்கின்றன. அறபு நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுடன் ஏதேனுமொரு வகையில் அமைதி நிலைக்குச் சென்றுவிட்ட நிலையில் இராணுவ ரீதியாக இஸ்ரேலைத் தாக்கும் வல்லமை கொண்ட ஒரே நாடு ஈரான் மட்டுமே என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் நிலப்பரப்பிற்கு உள்ளேயே தன்னால் தாக்குதல் நடத்த முடியும் என்ற எச்சரிக்கையை இஸ்ரேல் வெளிப்படையாகவே விடுத்துள்ளது.

இச்சம்பவத்திற்கு சில மாதங்கள் முன்தான் ஈரான் அதிபர் விமான விபத்தில் மரணமடைந்தார். அந்த மர்மம் இன்னும் விலகாத நிலையில், தனது விருந்தினரைப் பாதுகாக்க ஈரான் தவறிவிட்டது என்று அவப்பெயரையும் அந்நாடு சுமக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சோர்ந்துவிடுமா போராட்டம்?

வெளிநாட்டின் தலைநகரில் தனது முக்கிய எதிரிகளில் ஒருவரைக் கொலை செய்திருப்பது இஸ்ரேலியத் தலைவர்களுக்கு ஒருவிதத்தில் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கலாம். ஸியோனிசத்தின் ஆதரவாளர்களாக இங்குள்ள பாசிசவாதிகளும் ஆனந்தக் களியாட்டம் ஆடுகின்றனர். ஆனால் படுகொலைகள் ஃபலஸ்தீனப் போராட்டத்தைத் தடுப்பதாக இருந்திருந்தால் அது எப்போதோ முடிவுக்கு வந்திருக்க வேண்டும். நீதிக்கான தங்களின் போராட்டத்தில் பொதுமக்களை மட்டுமன்றி ஏராளமான தலைவர்களையும் ஃபலஸ்தீனிர்கள் உரமாகக் கொடுத்துள்ளனர். ஹமாஸ் இயக்கம் இதில் முன்னணியில் நிற்கிறது. யஹ்யா அய்யாஷ், ஸலாஹ் ஷஹாதா, ஷைஃகு அஹ்மது யாசீன், அப்துல் அஸீஸ் றன்தீஸி, அஹ்மது ஜாப்ரி, ஸலாஹ் அல்அரூரி, இஸ்மாயில் ஹனிய்யா… எனப் பட்டியல் நீள்கிறது.

ஹமாஸ் தலைவர்களை நாங்கள் படுகொலை செய்வோம் என்று இஸ்ரேல் பட்டியல் போட்டு சொன்னாலும், ஃகாலித் மிஷ்அல் கூறிய வார்த்தைகள்தாம் அவர்களுக்கான சரியான பதிலாக இருக்கும். 1997இல் தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலுக்குப் பதில் கொடுத்த ஃகாலித் மிஷ்அல், ‘நீ நினைக்கும் போதெல்லாம் உயிரை எடுக்க முடியாது. படைத்தவன் எப்போது நாடியுள்ளானோ அப்போதுதான் உயிர் பிரியும்’ என்று தெளிவாகக் கூறினார்.

அத்துடன் சில தலைவர்களைக் கொலை செய்வதன் மூலம் ஹமாஸ் இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்ற நம்பிக்கை ஸியோனிசவாதிகளுக்கே இப்போது இல்லை. ‘ஹமாஸ் ஒரு சித்தாந்தம். அதனைத் தோற்கடிக்க முடியாது’ என்று மொசாத் தலைவர்களே நெதன்யாஹு போன்றவர்களுக்குப் பாடம் எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஹனிய்யாவின் படுகொலை ஹமாஸ் இயக்கத்தையும் ஃபலஸ்தீனப் போராட்டத்தையும் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னர் ஒவ்வொரு தலைவரின் படுகொலைக்குப் பின்னரும் ஹமாஸ் அடைந்த புத்தெழுச்சியை தங்களுக்கான ஆதாரமாக அவர்கள் முன்வைக்கின்றனர்.

புதிய தலைவர் யஹ்யா சின்வர்

இஸ்மாயில் ஹனிய்யா படுகொலையைத் தொடர்ந்து தற்போதைய காஸா பகுதியின் தலைவரான யஹ்யா சின்வரை தனது அரசியல் பிரிவுத் தலைவராக ஹமாஸ் அறிவித்துள்ளது. 2017இல் இஸ்மாயில் ஹனிய்யா அரசியல் பிரிவுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து யஹ்யா சின்வர் காஸா பிரிவுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஃபலஸ்தீனின் ஃகான் யூனிஸ் பகுதியில் 1962இல் ஒரு அகதிகள் முகாமில் பிறந்த யஹ்யா சின்வர், தனது வாழ்நாளின் கணிசமான பகுதியை இஸ்ரேலியச் சிறைகளில் கழித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹமாஸின் இராணுவப் பிரிவான இஸ்ஸத்தீன் அல்கஸ்ஸாம் பிரிவைக் கட்டமைத்தவர்களுள் இவரும் முக்கியமனவர் என்று கூறப்படுகிறது.

1980களில் தனது கல்லூரி நாள்களிலேயே இஸ்ரேலிய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹமாஸ் அமைப்பின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவரான இவர், 1988இல் இரண்டு இஸ்ரேலிய இராணுவத்தினரையும், இஸ்ரேலுக்கு உளவு பார்த்த நான்கு ஃபலஸ்தீனர்களையும் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நான்கு ஆயுள் தண்டனைகள் (426 வருடங்கள்) விதிக்கப்பட்டார். 23 வருடங்கள் சிறையில் கழித்த இவர், 2011இல் இஸ்ரேலிய இராணு வீரர் கிலாத் ஷாலித்திற்குp பகரமாக 1027 ஃபலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தபோது விடுவிக்கப்பட்டார்.

2012இல் அரசியல் பிரிவிற்குத் தேர்வுசெய்யப்பட்ட இவரிடம், கஸ்ஸாம் பிரிவை ஒருங்கிணைக்கும் பணியும் கொடுக்கப்பட்டது. 2014இல் ஏழு வாரங்கள் நீடித்த இஸ்ரேலின் காஸா மீதான தாக்குதலின் போது அரசியல், இராணுவத் துறைகளில் முக்கியப் பங்கு வகித்தார். மறுவருடம் இவரை ‘சிறப்பு சர்வதேச பயங்கரவாதிகள்’ பட்டியலில் அமெரிக்கா இணைத்தது.

சிறையில் இருந்த நாள்களில் ஹீப்ரூ மொழியைக் கற்றுக் கொண்ட இவர், இஸ்ரேலின் அரசியல், உள்விவகாரங்களில் நன்கு பரிச்சயம் அடைந்தார்.

அக்டோபர் 7 தாக்குதலுக்கு யஹ்யா சின்வர்தான் மூளை என்று இஸ்ரேல் குற்றம்சாட்டி வரும் நிலையில் அவர் அரசியல் பிரிவுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தங்களின் படுகொலைப் பட்டியலில் சின்வரும் உள்ளார் என்று இஸ்ரேல் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது. தாக்குதல்களுக்கு மத்தியில் சிதிலமடைந்த கட்டடங்களுக்கு நடுவில் களத்தில் நின்று இஸ்ரேலை எதிர்கொள்ளும் சின்வரை தலைவராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் ஹமாஸ் இயக்கம் ஒரு தெளிவான செய்தியை இஸ்ரேலுக்குத் தெரிவித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நியமனத்தின் மூலம் தற்போதைய ஃபலஸ்தீன விவகாரங்கள், இஸ்ரேல் உடனான சமாதானப் பேச்சுவார்தை ஆகியவற்றின் நடுநாயகமாக காஸா கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

Related posts

Leave a Comment