மரணம் என்னும் எதார்த்தம்
நாட்கள் நகர்கின்றன, மிக வேகமாக. எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணும்போது மனதில் வெறுமையே மிஞ்சுகிறது. கடந்த காலம் வெகு தொலைவில் இருப்பதாகத் தெரியவில்லை. மனதிற்கு ஓரளவு ஆறுதலையும் நிறைவையும் தருவது நாம் செய்த நற்செயல்களே. வாழ்வென்னும் பெரும் நதி நம்மை எந்த இடத்தில் விட்டுவிட்டுச் செல்லப் போகிறது என்பது தெரியவில்லை.
கடந்த கால கதைகளுக்கும் என்னவென்றெ தெரியாத எதிர்காலத்திற்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடந்த காலத்தை எண்ணி பெருமைப்படுவதாலோ எதிர்காலத்தைக் குறித்து அச்சத்தை வெளிப்படுத்துவதாலோ நாம் அடையும் மனஉளைச்சலைத் தவிர வேறு எந்தவொன்றும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. எல்லாம் கடந்து போகும். நாம் விரும்பியவை, விரும்பாதவை என ஒவ்வொன்றும் நம்மை எதிர்கொண்டே தீரும்.
மரணம் வாழ்வுக்கான அர்த்தத்தை வேண்டி நிற்கிறது. வாழ்க்கை நம்மை மூழ்கடிக்கப் பார்க்கின்றது. பிரச்சனைகளுக்குப் பின்னால் ஓடுபவர்கள் மிக விரைவில் தீராத புலம்பலில் அகப்பட்டுக் கொள்வார்கள். ஒரு பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டால் அதன் இடத்தில் மற்றொன்று வந்து அமர்ந்து கொள்ளும். இங்கு எல்லாவற்றையும் எதிர்கொண்டவாறே வாழ்க்கையின் நோக்கத்தையும் கண்டடைய வேண்டியிருக்கிறது. ஒரு கதவு அடைக்கப்பட்டு விட்டால் இன்னொரு கதவு திறக்கும் என்பது இந்த உலகில் இறைவன் அமைத்த நியதி. நம்பிக்கையாளன் செய்ய வேண்டியதெல்லாம் சாத்தியக்கூறுகளை கண்டடைந்து முன்னேறிக் கொண்டே இருப்பதுதான். யாருக்குத் தெரியும், எந்தச் சமயத்தில் எந்தக் கதவு திறக்கும் என்று.
நமக்கு நெருக்கமானவர்கள், நாம் நன்கு அறிந்தவர்கள் மரணிக்கும்போது மரணத்தை மிக அருகில் உணர்கிறோம். அது நம் கண்முன்னால் ஊர்ந்து கொண்டு நம்மை பயமுறுத்துகிறது. நம் நிச்சயமின்மையை நமக்கு நினைவூட்டுகிறது. உண்மையில் நிச்சயமின்மையே நம்மைச் சூழ்ந்திருக்கிறது. எதிர்பாராமையே நம்மை வழிநடத்துகிறது. நமக்கு முன்னால் எந்த உத்தரவாதங்களும் இல்லை. கண நேரத்தில் நம் கனவுகள் தகர்க்கப்பட்டுவிடலாம், நம் புலம்பல்கள் ஓய்ந்து விடலாம். மரணம் எல்லாவற்றுக்குமான முற்றுப்புள்ளியாக அமைந்து விடுகிறது.
இங்கு யாரும் யாரையும் நம்பியில்லை. ஒருவர் இறந்துவிட்டால் அவரது இடத்தை மற்றொருவர் மிக இலகுவாக நிரப்பிவிடுவார். குறுகிய காலத்தில் அவர் மறக்கடிக்கப்பட்டுவிடுவார். அவரது வாழ்நாள் சாதனைகள்கூட வெறும் செய்திகளாக மட்டுமே எஞ்சுகின்றன. இந்த பூமி எல்லாவற்றையும் உண்டு செரித்துவிடுகிறது.
தூக்கத்தை சிறு மரணம் என்றும் விழிப்பை உயிர்பெறுதல் என்றும் வர்ணிக்கிறது இஸ்லாம். தினமும் தூங்கச் செல்லும் முன் நம்பிக்கையாளன் “அல்லாஹ்வே! உனது பெயரால் மரணிக்கிறேன், உயிர் பெறுகிறேன்” என்ற பிரார்த்தனையை ஓதியவனாக, தன் இயல்பை, நிச்சயமின்மையை நினைவுகூர்ந்தவனாக அவன் தூங்கச் செல்கிறான். தூக்கத்தில் மனிதன் தன் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறான். அவனது ஆன்மா அவனது உடலைவிட்டு நீங்கியதுபோல உணர்கிறான். மரணம் நீண்ட நித்திரை. தூக்கத்திலிருந்து நீங்கள் எழுவதுபோலத்தான் மரணித்த பிறகு நீங்கள் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதும்.
“நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். அவன் பக்கமே திரும்பக்கூடியவர்கள்” என்று கூறுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. ஆம், அதுதானே எதார்த்தம். அது மட்டுமே உண்மை. மற்றவை யாவும் நாம் உருவாக்கிய கற்பனைகள். அவை உண்மைக்கு முன்னால் கானல் நீரைப்போன்று காணாமல் போய்விடும். கொடுத்தவனுக்கு எடுக்கும் உரிமையும் இருக்கிறது. அவனிடமிருந்தே வந்தோம். அவனிடமே செல்வோம். நம்மிடம் உள்ளவை யாவும் அவன் நமக்கு அளித்தவையே. நாம் அனுபவிக்கும் எந்தவொன்றும் நமக்குச் சொந்தமானவை அல்ல. அவை நாம் கேட்டதன் பேரில் நமக்கு வழங்கப்படவும் இல்லை. அவனுடைய செயல்கள் அனைத்தும் நோக்கம்கொண்டவை. அவன் வீணாக எந்தவொன்றையும் நிகழ்த்துவதில்லை. இறைவனின் பண்புகளில் ‘அல்ஹகீம்’ என்பதும் ஒன்றாகும். அவனிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொன்றும் மிகச் சரியானவை, நோக்கம்கொண்டவை. எதுவும் குருட்டாம்போக்கில் வெளிப்படக்கூடியவை அல்ல. நமக்கு நன்மையளிக்கக்கூடியது எது? தீமையளிக்கக்கூடியது எது என்பதை நம்மைப் படைத்தவன்தானே நன்கறிவான்.
விதி என்பது நம்பிக்கையாளனை செயல்பட விடாமல் முடக்கக்கூடிய ஒன்றல்ல. மாறாக அது அவன் துன்பங்களால் சூழப்படும்போது முடங்கிவிடாமல் அவனைக் காக்கும் அருமருந்து. மூடர்கள்தாம் செயல்படாமல் இருப்பதற்கு விதியைக் காரணம் காட்டுவார்கள். விதியை நாம் நம்ப வேண்டிய முறைப்படி நம்பினால் நாம் எந்தச் சமயத்திலும் நிராசையடைய மாட்டோம்; உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ண மாட்டோம்; எல்லாவற்றையும் மிக எளிதாகக் கடந்து விடுவோம். விதி குறித்த தவறான நம்பிக்கை நம்மை குழப்பத்தின் பக்கம், நிராசையின் பக்கம் இட்டுச் சென்றுவிடும்.
நம்பிக்கையாளனின் பார்வையில் மரணம் என்பது வாழ்வின் முடிவு அல்ல. அது நிரந்தரமான வாழ்வை நோக்கிய இடம்பெயர்வு. மனிதன் நிரந்தரமாக வாழ்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளான் என்று இஸ்லாம் கூறுகிறது. தற்காலிகமான இவ்வுலகிலிருந்து நிரந்தரமான மறுவுலகை நோக்கிய இடம்பெயர்வே மரணம். அது நியாயத் தீர்ப்பு வழங்கப்படும் இடம். அங்கு மனிதன் இவ்வுலகில் அவன் செய்த எல்லாவற்றுக்காகவும் விசாரிக்கப்படுவான், கூலி வழங்கப்படுவான்.
இறைமறுப்பாளனின் பார்வையில் மரணம் வாழ்வை அர்த்தமற்றதாக்கி விடுகிறது. வாழ்வின் வரையறைகள், அறநெறிகள் அனைத்தையும் அவசியமற்றவையாக்கி விடுகிறது. எதற்காக வாழ்ந்தோம்? எதற்காக செயல்பட்டோம்? என்ற எந்த அடிப்படையான கேள்விக்கும் விடைதெரியாமல் பதற்றத்தில், ஒருவித குழப்பத்தில் அவன் வாழ்ந்து மடிகிறான். வாழ்வு, மரணம் குறித்த எந்தத் தெளிவான கண்ணோட்டமுமின்றி காரிருளில் இங்கும் அங்கும் தடுமாறித் திரிகிறான்.
மரணம்தான் எத்துணை வலிமையானது, விசித்திரமானது! பார்த்துக் கொண்டிருக்கும்போதே பலரை மீளாப் பயணத்திற்கு இட்டுச் சென்று விடுகிறது!. மரண பயம் மனிதனின் தூக்கத்தை கெடுத்து வாழ்வின் நோக்கத்தை தேடும்படி அவனை நிர்ப்பந்திக்கிறது. நேரில் காணாதவரை, அனுபவிக்காதவரை மனிதன் எதையும் முழுமையாக நம்புவதில்லை. அவனுக்கு நெருங்கியவர்களின் மரணம், அவனைத் தாக்கும் நோய் அவனுக்கு மரணத்தை நினைவூட்டவே செய்கின்றன. ஆனாலும் அவனிடம் இருக்கின்ற செல்வங்கள், அவன் ஈடுபடக்கூடிய பணிகள், பொழுதுபோக்குகள் அவனை ஒருவித மறதியில் மயக்கத்தில் ஆழ்த்திக்கொண்டும் வாழ்வின் நோக்கத்தை அறிவதைவிட்டு திருப்பிக் கொண்டும் இருக்கின்றன.
எத்தனை எத்தனை இடையூறுகள் வாழ்வின் நோக்கத்தை அடைவதற்குத் தடையாக வந்து நிற்கின்றன! எங்கோ நம்மை இட்டுச் செல்ல, நம்மை முழுமையாக ஆக்கிரமிக்க அவை இடைவிடாமல் நம்மை வந்தடைந்து கொண்டேயிருக்கின்றன. மரணம் வாழ்வுக்கு அர்த்தத்தை வேண்டுகிறது. அவ்வப்போது நம்மை உலுக்கிக் கொண்டும் நினைவூட்டிக் கொண்டும் இருக்கிறது. நமக்கு வழங்கப்பட்டுள்ள அவகாசத்தை நாம் அறிய மாட்டோம். ஆனால் மரணம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை உறுதியாக அறிவோம். எந்த மருத்துவனும் மாந்தரீகனும் அதற்குக் குறுக்காக வந்துவிட முடியாது.
மரணம் பற்றிய நினைவு வாழ்வின் மீதான பற்றைக் குறைக்கிறது. வாழ்வின் எதார்த்தத்தைப் புரிய வைக்கிறது. அதனைப் புரிந்துகொண்ட மனிதன் கிடைத்திருக்கும் குறுகிய வாழ்வை சரியான முறையில் வாழவே விரும்புவான். அதனால்தான் நபியவர்கள் தம் தோழர்களுக்கு மீண்டும் மீண்டும் மரணம் குறித்து நினைவூட்டிக் கொண்டேயிருந்தார்கள்.
மனிதன் என்றென்றும் வாழவே விரும்புகிறான். ஆனால் மரணம் அவனது விருப்பத்திற்கு தடையாக வந்துவிடுகிறது. அவனது ஆசைகள், கனவுகள், திட்டங்கள் என அத்தனையையும் தகர்த்துவிடுகிறது. எனக்கு நானே உரிமையாளன் என்று எண்ணுகிறான் மனிதன். ஆனால் விதி அவனது தலையில் அடித்து புரிய வைக்கிறது, உன் உரிமையாளன், உன்னை இயக்குபவன் நீ இல்லை வேறு ஒருவர் என்று. மரணத்தைவிட சிறந்த ஆசான் வேறொன்றும் இல்லை.