தீண்டாமையை அழித்தொழித்த சையித் ஃபழ்ல் தங்ஙள்
பா அலவீகள் – பதினெட்டாம் நூற்றாண்டைய கேரளத்தின் மலபார் பகுதியில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகள். நபியவர்களின் தலைமுறையில் உதித்த இவர்களில் மிகவும் அறியப்பட்டவர்கள் சையிது அலவீ தங்ஙளும், அவரது ஒரே மகனான சையிது ஃபழ்ல் தங்ஙளும் ஆவர்.
பா அலவீ என்பது இவர்களின் குடும்பப் பெயர். ஒரு நூற்றாண்டு வரை நீண்ட மாப்பிளா போராட்டத்தின் மைய விசையாக விளங்கியவர்கள். சமூக – ஆன்மீக – அரசியல் தளத்தில் இவர்கள் செய்த பணிகள் — குறிப்பாக அரசியல் சாதனைகள் — Mappila Leader in Exile : A Political Biography of Syed Fazl Tangal என்ற ஆங்கில நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
Other Books பதிப்பகத்தினூடாக வெளிவந்த இந்நூலை, புகழ்பெற்ற மாப்பிளா எழுத்தாளரும் அரும் நூல்களின் களஞ்சியமும் வரலாற்றாசிரியருமான மறைந்த முஹம்மது அப்துல் கரீம் மாஸ்டர் அவர்களின் மகன் கே.கே. முஹம்மது அப்துல் சத்தார் எழுதியுள்ளார். கே.கே. முஹம்மது அப்துல் சத்தார், கல்வியாளரும் வரலாற்றாய்வாளரும் எழுத்தாளருமாவார்.
o0o
1921ஆம் ஆண்டு நடைபெற்ற மாப்பிளா போராட்ட நாயகர்கள் 387 பேரின் பெயர்களை இந்திய விடுதலைப் போராட்ட இரத்த சாட்சிகளின் பெயர்ப் பட்டியலிலிருந்து இந்திய வரலாற்றாய்வுக் கழகம் நீக்கியுள்ளது.
அதற்கு அது சொன்ன காரணம்: “1921ஆம் ஆண்டில் நடந்த போராட்டமானது விடுதலைப்போரின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. மதமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு நடந்த போராட்டம் இது. கிளர்ச்சியாளர்கள் எழுப்பிய முழக்கங்களில் தேசியவாதத்திற்கு ஆதரவாகவோ பிரிட்டிஷாருக்கு எதிராகவோ எதுவுமில்லை.”
பிரிட்டிஷாருக்கு எதிராக சாவர்க்கர் ‘போராடிய மாதிரி’ மாப்பிளாக்கள் போராடாததினால் சாவர்க்கரின் தலைமுறையினர் இம்முடிவிற்கு வந்ததில் வியப்பில்லைதான்.
மாப்பிளா போராட்டத்தை மதவெறி என இந்துத்வ நாஜிகள் சாயமடிக்கின்றனர். இடது சாரியினரோ “விவசாயக்கூலிகளின் புரட்சி” என்பதாக மட்டிறுத்துகின்றனர். ஆனால், மாப்பிளா போராட்டத்தின் களமோ மானுட கரிசனத்தின் ஆழமும் பரப்பும் கொண்டது. இந்துத்வ நாஜிகள் அவதூறு உரைப்பதைப் போல இப்போராட்டம் இந்து x முஸ்லிம் என்ற இருமைகளுக்கிடையிலான முரணாக நடந்திடவில்லை.
இப்போராட்டங்கள் அவற்றின் இலக்கைப் போலவே, ஆதரவும் எதிர்ப்பும் கூடிய பல முனைகளைக் கொண்டவை என்பதை தனது உழைப்பினால் நிரூபித்திருக்கிறார் நூலாசிரியர் முஹம்மது அப்துல் சத்தார்.
பிரிட்டிஷ் அரசின் ஆவணங்கள், அறபு மொழி, மலையாள மொழி, அறபு மலையாள மொழிக் கிரந்தங்கள், இடதுசாரி, மதச்சார்பற்ற ஆய்வாளர்களின் நூல்களை உசாத்துணையாகக் கொண்டிருப்பது இந்நூலின் உண்மையையும் நம்பகத்தன்மையும் நிலைநிறுத்துகிறது.
பெரும்பாலும் இந்துக்களாக இருந்த ஜென்மி என்றழைக்கப்பட்ட நில உடைமையாளர்களின் நிலத்தின் கூலிகளாக, குத்தகைதாரர்களாக இருந்தவர்கள் தலித்துகளும் முஸ்லிம்களுமே. வாழ முடியாதபடிக்கு அவர்கள்மீது அநீதியான வாடகைகளும் வரிகளும் சுமத்தப்பட்டன. இந்த அநீதிகளுக்குத் துணைபோகும் விதத்தில் பிரிட்டிஷாரும் சட்டங்களை இயற்றினர்
பசியும் வறுமையும் ஒருசேரத் திணிக்கப்பட்ட மாப்பிளாக்கள் ஒரே சமயத்தில் ஜென்மிகளுக்கெதிராகவும் வெள்ளையர்களுக்கெதிராகவும் போராடத் துணிந்தனர். இப்போராட்ட பூமியின் மையத்தில் அமைந்ததுதான் மலப்புரம் மாவட்டத்திலுள்ள மம்புரம், திரூரங்காடி கிராமங்கள்.
இங்கு தங்கி வாழ்ந்து சமய, ஆன்மீகச் சீர்திருத்தங்களை மக்களிடையே முன்னெடுத்துச் சென்றவர்கள் சையிது அலவீ தங்ஙளும் அவரது மகனார் சையிது ஃபழ்ல் தங்ஙளுமாவர். நபிகளாரின் வழி வந்த இந்த ஆன்மிகத் திருவுருக்கள் நிகழ்கால அரசியல் நடப்புகளுக்கெதிராக கண்ணடைத்த காஷாய பூனையாகி ஒதுங்கிடவில்லை. மாப்பிளா போராளிகளையும் போராட்டக் களத்தையும் நெறிப்படுத்தினர்.
ஜென்மிகளில் பெரும்பாலோர் ஆதிக்க சாதி இந்துக்களாக இருந்தபோதிலும் சராசரி இந்துக்களுக்கும் மாப்பிளா முஸ்லிம் சமூகத்திற்குமிடையேயான நல்லுறவு மிகச் சிறப்பாகவே பேணப்பட்டு வந்தது. இந்துக்களின் பண்டிகைகள் தடங்கலில்லாமல் கொண்டாடப்படுவதை ஃபழ்ல் தங்ஙள் உத்திரவாதப்படுத்தினார். சையிது ஃபழ்ல் தங்ஙள் பிரிட்டிஷாரால் நாடு கடத்தப்பட்டபோது முஸ்லிம்களுடன் இந்துக்களும் இணைந்து மம்புரம் தங்ஙளை நாடு திருப்பக் கோரும் இயக்கத்திற்கு ஆதரவளித்தனர்.
இந்து எதிர்ப்பு மட்டுமே மாப்பிளா போராட்டத்தின் இலக்கு என்ற இந்துத்வ நாஜிக்களின் பொய்களுக்கு எதிராகவே மாப்பிளா போராட்டக்களம் இருந்திருப்பதை கீழ்க்கண்ட கள உண்மைகள், தரவுகளுடன் நிறுவுகிறார் நூலாசிரியர்.
ஜென்மிகளுக்கெதிரான இப்போராட்டத்தின் ஒரு சில பகுதிகளை தங்களின் தன்னலத்திற்காக திசை திருப்பிய ’மாப்பிளா ஜென்மிகளும்’ இருந்திருக்கின்றனர். மாப்பிளா போராளிகளை காட்டிக் கொடுத்தது சர்ச்சைக்குரிய கொண்டோட்டி முஹம்மது ஷா தங்ஙள்.
பிரிட்டிஷ் அரசால் சையிது ஃபழ்ல் தங்ஙள், அவரது குடும்பத்தினருடன் நாடு கடத்தப்பட்டபோது அவர் இங்கு விட்டுச்சென்ற வீட்டையும் சொத்துக்களையும் அபகரித்ததுடன் சையிது ஃபழ்ல் தங்ஙள் நாடு திரும்பிடக்கூடாது என வெள்ளையர்களை இடைவிடாமல் முடுக்கியது தங்ஙளின் உறவினரான முத்துக் கோயா தங்ஙள்.
o0o
எளிய விவசாயக்கூலிகளின் நலன்களையும் தாண்டி அவர்களுக்கு சமூக ரீதியாக கண்ணியமான வாழ்க்கையை உத்திரவாதப்படுத்தியது மாப்பிளாக்களின் தளகர்த்தர்களான பா அலவீகள்.
ஜென்மிகளின் நிலத்தில் வேலை பார்த்து வந்த செருமன், வேட்டுவன், புலையன், முக்குவன் முதலிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் முஸ்லிமான பின்னர் மாப்பிளாக்கள் என்றழைக்கப்பட்டனர்.
இவர்களின் மத மாற்றத்திற்குப் பின்னரும் தங்களின் சாதிய ஆண்டைத்தனத்தை இவர்கள்மீது திணித்து வந்தனர் ஜென்மிகள். மதம் மாறியோரும் அவர்களைப் பணிந்து வணங்கும் வழக்கத்தைத் தொடர்ந்தனர்.
ஆடுகள் சிங்கங்களான பிறகும் அகத்தில் தங்களை ஆடுகளாகவே எண்ணி நடப்பதைக் கண்ட சையிது அலவீ தங்ஙள், “ஜென்மி இலையில் மீந்த எச்சி சோற்றை உண்ணாதே. ஜென்மியும் உன்னைப் போலவே ஒரு மனிதன்தான் என்பதால் அவனுக்குச் சிறப்பு மரியாதை செலுத்தாதே” என்ற ஒற்றை ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) மூலம் சிங்கங்களுக்கு அவர்கள் சிங்கங்கள்தாம் என்பதை நினைவூட்டினார்.
சையிது அலவீ தங்ஙளின் இந்த ஃபத்வா இல்லையென்றால் கிறித்தவத்திற்கு நேர்ந்தது போல இஸ்லாம் கூறும் மானிடச் சமத்துவம் என்பது ஏட்டோடு சுருங்கியிருக்கும். இஸ்லாத்தின் இந்த உள்ளார்ந்த வலிமையினால்தான் மற்ற மதங்களை உண்டு செரித்ததைப் போல சனாதன இந்து மதத்தால் இஸ்லாத்தைச் செய்திட இயலவில்லை.
சாதிய இழிவுக்கெதிராக, தீண்டாமைக்கெதிராக இந்திய மண்ணில் பல விதமான போராட்ட வடிவங்கள் முன்னெடுத்துச் சோதித்து பார்க்கப்பட்டுள்ளன.
சாதிக்கான ஆன்மீக ஏற்பை வழங்கும் இந்துமத ஸ்மிருதிகள் பொது இடத்தில் தீயிடப்பட்டன. பறையைக் கொண்டே பறையர் சமூகம் ஒடுக்கப்படுவதால் அந்தப் பறையை வர்ணாசிரமத்திற்கெதிரான போர்ப் பறையாக்கி முழங்கிப் பார்த்தனர். மாட்டுக்கறி உணவு விழாக்கள் நடத்தப்பட்டன.
கல்வியும் அதிகாரமும் கைவரப்பெற்றால் சாதி வெறி அஞ்சி ஒடுங்கிக்கொள்ளும் என்றனர். மதம் மாறுவது என்பது தப்பி ஓடுவதற்குச் சமமான கோழைத்தனம்; உள்ளிருந்தே போராடி வெல்வோம் என முழங்கினர். இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கோரிப் பெற்றனர்.
பெயரில் சாதியைக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்றஞ்சிஆதிக்கச் சாதியினரைப் போலவே குழந்தைகளுக்கு பெயரிட்டுப் பார்த்தனர். அவர்களின் சடங்குகளையும் கடைப்பிடித்துப் பார்த்தனர். ஆதிக்கச் சாதியினர் மனத்தில் தீண்டாமை குறித்து அகிம்சை வழியில் குற்றவுணர்வு ஏற்படுத்தினால் எல்லாம் சரியாகும் என்றனர். கிறித்தவத்தை, பௌத்தத்தை, மார்க்சியத்தை, நாத்திகத்தைக் கூட தழுவிப் பார்த்தனர்.
இன்று இப்படி எடுக்கப்படும் தீண்டாமை நீக்க முயற்சிகளுக்கும் முன்னெடுப்புகளுக்கும் வெகு காலத்திற்கு முன்னரே மலபாரின் தாழ்த்தப்பட்டோரை நிரந்தர விடுதலையை நோக்கி வழி நடத்தினர் சையிது ஃபழ்ல் தங்ஙளும் அவரின் தந்தையாரும்.
அதன் பிறகு அங்கு என்ன நடந்தது என்பதை நூலாசிரியர் பதிவுசெய்கிறார்:
பொ.ஆ.1852இல் நடந்த மாப்பிளா போராட்டம் குறித்து விசாரிக்க டி.எ.ஸ்டிரேஞ்ச் என்ற வெள்ளை அலுவலரின் தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் நியமிக்கப்பட்டது.
அன்றைய கேரளத்தின் வள்ளுவநாடு, ஷேரநாடு, எரநாடு பகுதிகளைச் சேர்ந்த இந்துக்கள் டி.எல்.ஸ்ட்ரேஞ்சு ஆணையத்திடம் மாப்பிளாக்களுக்கெதிராக முன்வைத்த கோரிக்கைகள், முறைப்பாடுகளில் வலியுறுத்தியவை:
- சாலைகளில் எங்களுக்குரிய மரபுரிமைகளை மாப்பிளாக்கள் விட்டுத்தர மறுக்கிறார்கள்.
(பொது சாலையில் ஆதிக்கச் சாதியினர் நடந்துவரும்போது தங்களுக்கு கீழ் நிலையிலுள்ள சாதியினரை ஒதுங்கிப்போக சமிக்ஞை ஒலியெழுப்பியவுடன் ஒடுக்கப்பட்ட சாதிகள் விலகுவதுதான் இவர்கள் கூறிடும் மரபு)
- தாழ்த்தப்பட்டவர்களிலிருந்து முஸ்லிமானவர்கள் சாஸ்திர ரீதியான தீட்டிலிருந்து விடுபட்டவர்கள் என்ற உரிமை வேண்டும் என மாப்பிளாக்கள் கோருகிறார்கள்.
தங்களின் ஆண்டாண்டு கால ஆண்டைத்தனம் நொறுங்கி விழுந்தததை வெள்ளைத்தோல் எஜமானனிடம் அங்கலாய்த்து முறையிடத்தான் அவர்களால் இயன்றது.
சவடால்கள், வெற்று அறைகூவல்கள் எதுவுமின்றி ஒரு கலிமா (மொழிதல்), ஒரு ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) மூலம் தங்களின் கழுத்துகளை அழுத்திக்கொண்டிருந்த பல்லாயிரமாண்டுகால மனுதர்ம பாரத்தை தூசியில் புரட்டினர் மலபாரின் மாப்பிளாக்கள்.
இந்துச் சடங்குகளை முஸ்லிம்களும் இஸ்லாமியச் சடங்குகளை இந்துக்களும் மாறிமாறிக் கடைப்பிடித்தால் மத நல்லிணக்கம் விளைந்துவிடும் என சமகால தாராளவாதக் கனவான்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதுபோன்ற குழப்படியின் சந்திகள் எதிலும் மாட்டிக்கொள்ளாமல் தமது பாதையிலும் வழிமுறையிலும் தேர்விலும் தெளிவாக இருந்தனர் பா அலவீ தங்ஙள்கள்.
மனிதனுக்கும் பிற அஃறிணைப் பொருட்களுக்கும் மனிதனை அடிமையாக்கும் தெய்வங்களையும் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் வாழ்க்கை முறைகளையும் முற்றாக நிராகரித்துக் கொண்டே அதைப் பின்பற்றும் எளிய பொதுமக்களுடன் நல்லிணக்கமாக இருக்க முடியும் என்பதைச் செயலில் நிரூபித்துக்காட்டினர். கோட்பாடுகளில் சமரசமில்லாமலேயே சமூக நல்லிணக்கம் பேண இயல்வதை களத்தில் நிரூபித்தவர்கள் பா அலவீகள்.
ஓரிறைக் கொள்கையில் அவர்களின் விட்டுக்கொடுக்காமைதான் மலபாரின் தாழ்த்தப்பட்டோரை என்றென்றைக்குமான விடுதலையின் பால் வழி நடத்தியது.
o0o
சாதியக் கொடூரத்திலிருந்து இந்திய மண்ணை விடுவித்த குற்றத்திற்காக முஸ்லிம்கள் முன்னர் கொடுத்துள்ள, தற்காலம் கொடுத்துவருகிற விலை மிகக் கூடுதலானது.
ஜென்மிகளும் அவர்களுக்கு உடந்தையான பிரிட்டிஷாரும் மாப்பிளாக்களை நசுக்க முயலும்போதெல்லாம் தங்கள் உயிர்துறந்து அடங்க மறுத்தனர் அவர்கள்.
மாப்பிளா போராளிகளின் உடலங்கள் போற்றப்படும் படிமங்களாகிவிடக்கூடாது என்பதற்காக சுட்டுக் கரிக்கப்பட்டு பரத்தப்பட்டன.மாப்பிளா கிராமங்களுக்கு வெள்ளையரசால் கூட்டுத் தண்டம் விதிக்கப்பட்டது. மாப்பிளா போராளிகளின் குடும்பங்கள் சொந்த மண்ணிலிருந்து அந்நிய நிலங்களுக்குள் பிடுங்கி எறியப்பட்டன. நூறாண்டுகளாக கொடிய வறுமையில் மாப்பிளா குடும்பங்கள் உழன்றன.
அநீத வரிகளுக்கெதிராக தீண்டாமையிலிருந்து சக மனிதர்களை என்றென்றைக்குமாக விடுவித்ததற்காக மாப்பிளா முஸ்லிம்கள் கொடுத்த விலையின் பட்டியல் இது. விடுதலை என்றைக்குமே மலிவான விலையில் கிடைத்ததில்லைதானே?!
அவர்கள் கொடுத்த விலை வீணாகிடவில்லை. இன்று மாப்பிளாக்கள் நெஞ்சையும் தலையையும் ஒரு சேர நிமிர்த்தி வாழ்கின்றனர்.
சாதிய நிலப்பிரபுத்துவ மேலாதிக்கத்திற்கு எதிராக ஆயிரமாண்டுகளில் இல்லாத அளவிற்கு அவர்களுக்கு புரியும் விதத்தில் மறுமொழி அளிக்கப்பட்டவுடன் இந்திய தேசிய சாதி ஆதிக்க மனம் விழித்துக்கொண்டது. தங்களுக்கான உண்மையான அறைகூவலின் வலிமையைப் புரிந்து கொண்ட அவர்கள் ஆர்.எஸ்.எஸை நிறுவினார்கள்.
மாப்பிளா போராட்டத்தின் பல இலக்குகளில் ஒன்றான துருக்கியில் கிலாஃபத் மீட்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை “இந்திய அரசியல் வானில் நச்சுப் பாம்புகளின் மூச்சுக்காற்று” என வர்ணித்ததுடன், “இதுபோன்ற நச்சரவங்களினால்தான் ஆர்.எஸ்.எஸ் என்ற தேசிய இயக்கம் தேவையாகிறது” என ஆர்.எஸ்.எஸ். சித்தாந்திகள் எழுதுகின்றனர்.
சையிது ஃபழ்ல் தங்ஙள் பிறந்தது பொ.ஆ.1824. ஆர்.எஸ்.எஸ். நிறுவப்பட்டது பொ.ஆ.1925.
விடுதலையின் குரலுக்கு இரு நூற்றாண்டு நிறைவு வருவது போலவே துரோகத்தின், அநீதத்தின், அடிமைத்தனத்தின் அடக்குமுறையின் குரலுக்கும் ஒரு நூற்றாண்டு நிறைவு வரவிருக்கிறது.
நூற்றாண்டுகளின் காலச் சந்தியில் நீதமும் அநீதமும் கண்டு முட்டுகின்றன. அநீதியின் அணியினர் ஆள், அம்பு, செங்கோலுடன் அணி வகுத்து நிற்கிறார்கள்.
அலவீ தங்ஙள்களின் போராட்ட வரலாறு முஸ்லிம்களுக்கானது மட்டுமில்லை, ஒட்டு மொத்த இந்திய நாட்டிற்கும் சமூகத்திற்கும் மொத்த மானுடத்திற்கும் உரியது.
பொ.ஆ.1852இல் அறபு நாட்டிற்கு நாடு கடத்தப்பட்ட சையிது ஃபழ்ல் தங்ஙள் வரலாற்றின் இருள் மூலைகளுக்குள் போய் மங்கி மறைந்திடவில்லை. அறபகத்திலிருந்து உஸ்மானிய கிலாஃபத்தின் தலைநகரமான துருக்கியின் கான்ஸ்தாந்திநோபிளுக்கு (இஸ்தான்புல்) நகர்ந்தார்.
கிலாஃபத் அரசின் அமைச்சராக நியமிக்கப்பட்டு நல்ல பல திட்டங்களையும் சீர்திருத்தங்களையும் செய்துகாட்டினார். பொ.ஆ.1900இல் அங்கேயே இறந்து அடங்கியுள்ளார்.
நாடு கடத்திய பிறகும் அவர் மீதுள்ள அச்சத்தினால் சையிது ஃபழ்ல் தங்ஙள் போகுமிடங்களிலெல்லாம் ஒற்றர்களை அனுப்பி வேவு பார்த்துவந்தது காலனியாதிக்க வெள்ளையரசு. பிறப்பிலிருந்து தன் இறுதி மூச்சு வரை வெள்ளையர்களின் கொடுங்கனவாக விளங்கிய சாதனையாளர் அவர்.
நீதியின் பக்கம் நிற்பதாகச் சொல்லிக்கொள்பவர்களுக்கு இவ்வரலாற்றுத் தடத்தை இறுகப் பற்றிக்கொள்வதைத் தவிர இன்னொரு வழியில்லை.
புத்தகத்தை வாங்கிட: Other Books