மனம் என்னும் மாயநதியின் வழியே – 7
ஒருவர் அவரிடம் காணப்படும் உள்வாங்கிக் கொள்ளும் திறனுக்கேற்பவே விவகாரங்களைப் புரிந்து கொள்கிறார். சிலருக்கு உங்வாங்கும் திறன் கூர்மையானதாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் விவகாரங்களை மிகச் சரியாகப் புரிந்துகொள்வார்கள். சிலர் தங்களின் உள்வாங்கும் திறனுக்கேற்ப கொஞ்சம் தாமதமாகப் புரிந்துகொள்வார்கள். சிலருக்கு அது தட்டையானதாக இருக்கும். அவர்களின் புரிதலும் மிக மேலோட்டமானதாகவே இருக்கும். மனிதர்களை வேறுபடுத்தும் அம்சங்களுள் இதுவும் ஒன்று. ஒரே விவகாரத்தை மனிதர்கள் பலவிதமாக அணுகிறார்கள். பலவிதமாகப் புரிந்துகொள்கிறார்கள். மனிதர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்று.
மனிதன் எதை தேடிச் செல்வானே, எதில் அவனுக்கு ஆர்வம் இருக்கிறதோ அதை மிக இலகுவாக அவன் புரிந்து கொள்வான். அதன் பாதையில் ஏற்படக்கூடிய சிரமங்கள் அவனுக்குச் சிரமங்களாகவே தெரியாது. மிக எளிதாக அவன் எல்லாவற்றையும் கடந்துவிடுவான். அவனிடம் திணிக்கப்படும் எந்தவொன்றையும் அது இலகுவானதாக இருந்தாலும்கூட அவன் புறக்கணிக்கவே செய்வான். ஆர்வமின்மை புரிதலுக்குத் தடையாக இருக்கும் அம்சங்களுள் ஒன்று.
எந்தவொன்றிற்கும் முதலில் மனம் தயாராக வேண்டும். மனம் தயாராகி விட்டால் விவகாரம் எளிதாகிவிடும். ஆன்மீகத்தை நீங்கள் புரிந்துகொள்ள விரும்பினால் முதலில் அதற்காக உங்கள் உள்ளம் தயார் நிலையில் இருக்க வேண்டும். உங்கள் உள்ளம் அதற்காக பண்பட வேண்டும். அதற்கான கால அளவு ஒவ்வொருவரிடம் வேறுபடுகிறது. சிலரது உள்ளம் இளமையிலேயே பண்பட்டுவிடுகிறது. சிலரது உள்ளம் வெறுப்பின் காரணமாக பண்படாமலேயே இருக்கிறது. சிலருக்கு திடீரென ஏற்படும் கடுமையான அடி, இழப்பு ஆகியவை உள்ளத்தில் படிந்திருக்கும் ஆணவத்தையும் வெறுப்பையும் அகற்றிவிடுகிறது. எதிர்பாராதவிதமாக அவர்களும் ஆன்மீகத்தின் பக்கம் திரும்புகிறார்கள்.
இங்கு ஆன்மீகத்தின் பக்கம் திரும்புதல் என்று மனிதன் தன்னைக் குறித்து, வாழ்க்கையின் ஆதாரமான கேள்விகள் குறித்து அறிய முற்படுவதைத்தான் கூறுகிறேன். அவற்றைக் குறித்து அறிய விரும்பாதவர்கள் அல்லது வலுக்கட்டாயமாக அவற்றைவிட்டும் தங்களைத் திருப்பிக் கொள்ள முயல்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். போலியான கொள்கைகளைக் கொண்டோ வெறுப்பைக் கொண்டோ தங்களை நிரப்பிக் கொள்ளாதவர்கள் நிச்சயம் ஒரு கட்டத்தில் இறைவனின் பக்கம் திரும்புவார்கள்.
மனிதர்களில் ஒவ்வொருவரையும் ஒருவகையில் அவர் இன்ன இயல்பினர், அவருக்கு இன்னின்ன தனித்தன்மைகள், பலவீனங்கள் இருக்கின்றன, அவர் இப்படித்தான் செயல்படுவார் என்றெல்லாம் மிக எளிதாக வகைப்படுத்திவிடலாம். இந்த வகையில் நாம் அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்ளலாம். அவர்களின் செயல்பாடுகளை சரியாகக் கணிக்கலாம். ஆனால் இன்னொரு வகையில் ஒவ்வொருவரும் ஒரு தனி உலகம். சில சமயங்களில் அவர்கள் நம் கணிப்புகளை, எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி விடுவார்கள். அவர்களின் சில செயல்பாடுகள் நம்மை வியப்பின் உச்சிக்கு கொண்டு செல்லலாம் அல்லது பேரதிர்ச்சியில் ஆழ்த்தலாம். இந்த வகையில் மனிதன் ஒரு புரியாத புதிர்.
நம் கணிப்பை மீறி ஒருவன் வளர்ந்து விட்டால் அவனை சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறோம். நம் கணிப்பை மீறி ஒருவன் வீழ்ந்துவிட்டால் அதனை நம்ப முடியாமல் திகைக்கிறோம். மனிதன் எந்தச் சமயத்திலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றடையலாம் என்பதே உண்மை. குற்றவாளிகளில் பலர் அந்தக் கணத்தில் குற்றவாளியானவர்கள்தாம். கண நேரத்தில் தங்களின் சுகபோக வாழ்க்கையைப் பறிகொடுத்து சிறைவாழ்க்கையில் புகுந்து விடுபவர்களையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
முந்தைய அனுபவங்களைக் கொண்டே நாம் கணிக்கிறோம். அந்தக் கணிப்பு உண்மையாகவும் அமையலாம். அதற்கு மாறாகவும் அமையலாம். எதிர்காலம் இறந்த காலத்திற்குக் கட்டுப்பட்டதல்ல. எதிர்காலம் நாம் எண்ணியும் பார்த்திராத பலவற்றை நம் முன்னால் கொண்டு வரலாம். நாளை மற்றுமொரு நாளாகவும் இருக்கலாம். நாளை நம் வாழ்வின் போக்கையே மாற்றக்கூடியதாகவும் இருக்கலாம்.
மனிதனால் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி சிந்திக்க முடியாது. அவனுடைய அறிவு வரம்புக்குட்பட்டது. தம் இயலாமையை உணர்ந்து இறைவனின் பேராற்றலை சார்ந்திருப்பவர்கள் மூடுமந்திரங்களால் சூழப்படுவதில்லை. அவர்கள் எல்லாவற்றையும் இறைவனின் நாட்டத்தோடு பேராற்றலோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள். ஆம், அது ஒன்றே சரியான, ஆரோக்கியமான வழிமுறை.
மனிதன் எந்தச் சமயத்தில் எப்படி மாற்றமடைவான் என்பதை யாரும் அறிந்துவிட முடியாது. ஒருவரிடமிருந்து வெளிப்படும் சொற்கள், செயல்களைக் கொண்டு அவரைக் குறித்த பிம்பத்தை நாம் நமக்குள் கட்டமைத்துக் கொள்கிறோம். அவரது மனதுக்குள் முட்டி மோதும் எண்ணங்களை நாம் அறிய மாட்டோம். திடீரென ஒருவன் கொடூரனாக, கொலைகாரனாக, பெரும் பாவியாக நம் முன்னால் வெளிப்படலாம். அவனைக் குறித்து நமக்குள் இருக்கும் பிம்பத்தினால் நாம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகலாம். நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் அதைக் குறித்தே பேசிக் கொண்டிருக்கலாம்.
நூலிழையில் நாம் காப்பாற்றப்படுகிறோம். நூலிழையில் நாம் சிக்க வைக்கப்படுகிறோம். குறிப்பிட்ட சில கணங்களுக்கு நம் அறிவு சூன்யமாகி விடுகிறது. பின்னர் விழித்தெழுந்து நம்மையே பழிக்கிறது. உணர்வுக்கும் அறிவுக்குமான போராட்டத்தில் உணர்வே வெல்கிறது. அறிவு மிக எளிதில் அதற்கு முன்னால் சரணடைந்து அதற்கான நியாயவாதங்களை முன்வைக்கிறது. நம் உள்ளங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. விருப்பும் வெறுப்பும் அவற்றுக்கு புகட்டப்படுகின்றன. “உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே! என் உள்ளத்தை உன் மார்க்கத்தின் மீது நிலைத்திருக்கச் செய்” என்ற நபி கற்றுக்கொடுத்த பிரார்த்தனைதான் அடிக்கடி நினைவுக்கு வருகிறது.
எந்தவொரு மனிதனும் அவனுடைய வட்டத்திற்குள் நின்றுகொண்டுதான் சிந்திக்கிறான். அவனால் அப்படித்தான் சிந்திக்க முடியும். அவனுடைய வட்டத்தைத் தாண்டி அவன் சிந்திப்பான் என நாம் எதிர்பார்ப்பது அதீத கற்பனை. ஒவ்வொருவருக்கும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ ஒரு நோக்கம் இருக்கிறது. அறிந்தும் அறியாமலும் அந்த நோக்கத்தின் பக்கமே அவர்கள் சென்று கொண்டிருப்பர்.
குறைவாகவோ அதிகமாகவோ ஒரு மனிதனின் பேச்சிலும் எழுத்திலும் செயல்பாட்டிலும் அவனுடைய அரசியல் சார்புகள் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். அரசியல் சார்புகள் இல்லாதவர்கள் முற்றும் துறந்த ஞானிகளாகத்தான் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களைக் காண்பது அரிதிலும் அரிது. ஒரு மனிதனின் அரசியல் சார்புகளைத் தாண்டி அவனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் இருக்கின்றன என்ற அறிதல்கூட முக்கியத்துவம் வாய்ந்த மகத்தான அறிதல்தான்.
ஒரு மனிதன் செய்யும் சிறு தவறைக் கொண்டோ அவன் செய்யக்கூடிய ஒரு பெரிய தவறைக் கொண்டோ அவனுடைய செயல்பாடுகள், சாதனைகள் அனைத்தையும் ஒன்றுமில்லாமல் ஆக்க நினைப்பவர்கள் பொறாமையாலும் காழ்ப்பாலும் பாதிக்கப்பட்ட சிறிய மனிதர்களாவர். அந்த மனிதனை சிறுமைப்படுத்த அவர்கள் கடைப்பிடிக்கும் எளிய குறுக்கு வழி இது. தவறு செய்யாத எந்த மனிதனும் இங்கு இல்லை. மனிதர்களின் அந்தரங்கள் நாற்றம் அடிக்கக்கூடியதுதான்.
விதி என்ற ஒன்றை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. அது யார் விசயத்தில் எப்படிச் செயல்படும் என்பது மர்மமான ஒன்று. இறைநியதிகள் புரிந்துகொள்ளத்தக்கவையே. ஆனால் அவற்றையும் தாண்டி இறைவிதி என்று ஒன்று இருக்கிறது. சிறிய தவறுக்கு ஒரு மனிதன் அனுபவிக்கும் பெரிய தண்டனை, பெரிய தவறையும் செய்து கொண்டு யாருக்கும் தெரியாமல் சமூகத்தில் தூய்மையானவனாகத் தன்னைக் காட்டிக் கொண்டு திரியும் இன்னொரு மனிதன் என ஒவ்வொரு புரிந்துகொள்ள முடியாத நிகழ்வுக்குப் பின்னாலும் விதியின் கரம் இருக்கிறது என்று புரிந்துகொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. ஒருவரிடமிருந்து வெளிப்படும் ஒரு செயலைக் கொண்டு அவரை ஒட்டுமொத்தமாக எடைபோடுவது அநீதியும் அறியாமையும் ஆகும். புரியாத விசயங்களை யூகங்களைக் கொண்டு நிரப்பாமல் இருப்பதே மிகச் சிறந்த அணுகுமுறை.