திரவியம் (சிறுகதை)
’காலையிலேர்ந்து 22 வெள்ளிக்கு மலேசியா ஓடுனதுதான்… பிறகு யாவாரம் ஒண்ணும் இல்ல, நிஜாம்.’
ஜூரோங் எம்ஆர்டி ரயில்நிலையத்தில் க்ரீச் என்ற சத்தத்தோடு ரயில் வந்துநின்றது. கண்ணாடிக் கூண்டுக்கு உள்பக்கமாக நின்றுகொண்டு ஈரத்துணியால் துடைத்ததில் அப்பாஸின் தோள் இரண்டிலும் ஏகவருத்தம். கவுண்டர் திறந்ததும் நாகூர் தர்கா உண்டியலில் வழமையாய்ப் போடும் காணிக்கை இரண்டு வெள்ளி, பின்பு யாசீன் சூறா. இருபக்கவாட்டிலும் கேஷ் மெசின்களுக்கு நடுவே இருக்கும் செவ்வக ஊதா நிறப்பெட்டியில் மலேசிய வெள்ளி, அமெரிக்கப் பச்சை, இந்தோனேசிய நிக்காஹ், பிரிட்டிஷ் வெள்ளை என நாணயம் வாரியாகப் பிரிக்கப்பட்டு ரப்பர் பாண்டில் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தன. கவுண்டர் திறந்ததும் வங்கிகளுக்கு ஃபோன் செய்து நாணய விலையைக் குறித்துக்கொண்டு, ஆர்கேட் பிளாசாவில் மொத்த ஹோல்சேல் டீலர்களிடம் விலை கேட்பது, இரண்டையும் ஒப்பீடு செய்து ஆர்டர் செய்வது, லாபத்தோடு விலை நிர்ணயம் செய்து போர்டில் டிஸ்பிளே செய்வது போன்றவை அப்பாஸின் தினசரிப் பணிகள்.
சம்பளப் பட்டுவாடா நாட்களில் வியாபாரம் சூடுபிடிக்கும். சுற்றுவட்டார மணிசேஞ்சர்களில் விலையை பேப்பரில் குறித்துக்கொண்டு விலை படிய பேரம் பேசும் சீன அங்கிள்கள், டூரிஸ்டுகள், வார இறுதியில் ஜோகூர் போய் மளிகை, இறைச்சி வாங்கக் காத்திருக்கும் குடும்பஸ்தர்கள், நேரத்தோடு ஜோகூர் திரும்பி குடும்பத்தோடு சம்பளநாளைக் கொண்டாடக் காத்திருக்கும் மலேசியத் தொழிலாளர்கள் என கவுண்டரின் முன் வரிசை நீண்டு தரைத்தளம் கோப்பித்தியம் வரை முட்டிநிற்கும். அதெல்லாம் ஒருகாலம். எல்லாவற்றிலும் கொரொனா ஒருபிடி மண்ணள்ளிப் போட்டுவிட்டது. விமானப் போக்குவரத்து, ஜோகூர் பார்டர் அடைப்பு என நாணய வியாபாரம் முடங்கிக் கிடக்கிறது. கோலோச்சிய முதலாளிகள் எல்லாம் வேறு தொழில் தொடங்கலாமா என்ற யோசனையில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
‘மலேசிய டிடி மாத்துனதுல மஜீத் கடை பற்று 7000 வெள்ளி ரொம்ப நாள் பென்டிங்கா கிடக்குதே, நிஜாம்…’
நிஜாமிற்கும் அப்பாஸிற்கும் பெரிதாக வயது வித்தியாசம் இல்லை. அப்பாஸிற்கு ஒருகாலத்தில் மெட்ராஸ் பர்மா பஜார் வியாபாரம். குருவி, டிவி, கேமரா, மஞ்சள் என வியாபாரம் பெரிதாய் வளர்ந்தபோது இங்கேஅறிமுகம் ஆனது. தக்க சமயத்தில் சரக்குகளை இறக்கி பஜாரில் சேட்டிடம் கைமாற்றிவிட்டு கொள்ளை லாபம் பார்த்துக்கொண்டிருந்தான். சேட்டிற்கு ரிஸ்க்கே இல்லாமல் சரக்கு கிடைத்தது. அவரும் இவனை வைத்துக் கல்லா கட்டினார். கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் வட்டிக்குப் பணம் வாங்குவதும், சரக்கு வாங்கி ஊருக்கு இறக்குவதுமாய் இருந்தான். ஏதோ ஒரு பொல்லா நாள். மேலதிகாரி இன்ஸ்பெக்சன் வர, கஸ்டம்ஸ் கெடுபிடியில் ஒரே நாளில் பதினைந்து குருவிகளோடு சரக்குகள் மாட்டிக்கொண்டன. சரக்கு என்றால் ஒவ்வொரு குருவி தலையிலும் இரண்டரை லட்சம் மதிப்புள்ள சரக்கு. அப்பாஸ் வாழ்க்கையே மாறிப்போனது. தெரிந்த லாபிகளில் மூவ் செய்தும், சரக்கு கைக்கு வந்துசேரவில்லை. அன்று அணைந்ததுதான் சேட்டின் செல்போன், இன்றுவரை அவரிடம் பேசமுடியவில்லை. மாஸ்கான்சாவடி வீட்டிற்கும் எத்தனையோ முறை நடந்து செருப்பு தேய்ந்ததுதான் மிச்சம். எப்போது போனாலும், ‘சேட் வெளியூர் போயிருக்கு…’ என்பதையே அவனால் கேட்க முடிந்தது. அத்தா மெளத்தில்கூட தண்டல்காரர்கள் வீட்டைச் சுற்றி நின்றார்கள். கோவளத்தில் ஒளிந்துகிடந்து துக்கத்திற்குப் போனவனை கழுத்தில் கத்தி வைத்தார்கள். எங்கு பார்த்தாலும் கடன்! நாலு திசையிலும் கடன்! வாழ்நாள் முழுதும் சம்பாதித்துக் கட்டினாலும் தீராக்கடன். கோர்ட், கேஸு, கந்துவட்டிக் கடன், தற்கொலை முயற்சி என மனஅழுத்தத்தில் சிங்கப்பூரில் அடைக்கலமானான். ஆபத்பாந்தவனாக வந்தார் மஜீத்முதலாளி. அப்பாஸை மாதம் 800 வெள்ளி சம்பளத்திற்குத் தனது ஆர்கேட் பிளாசா கவுண்டரில் சேர்த்துக்கொண்டார். கொஞ்சம் ஆறுதல் கிடைத்தது. ஊர் செலவுக்குப் பத்தாயிரம், மீதியைக் கந்து, மீட்டர்வட்டிக்குப் பணம் கட்டியதன் மூலம் தண்டல்காரர்களிடம் தவணை கிடைத்தது. ஐந்து ஆண்டு வனவாசத்தில்தான் உடன் வேலைபார்க்கும் நிஜாம் அவனுக்கு அறிமுகம்.
’நிஜாம், காப்பி வாங்கி வரவா?’
கையில் வெள்ளைப்பையும் கவருமாய் நின்ற நிஜாம், ’வேணாம் இப்பதான் சாப்பிட்டு வாரேன்’ என கையிலிருந்த பாத்திரத்தை நீட்டி, நஃபீசா உனக்குத் தந்தாள் என்றான். உள்ளே நான்கு தேங்காய்பால் கொழுக்கட்டைகள் இருந்தன. இரண்டு வருடங்களுக்கு முன்புதான், அப்பாஸோடு தங்கை இருவருமாய் மொத்தம் மூன்று கல்யாணம். ஏற்கனவே இருந்த கடனோடு கல்யாணக் கடனும் சேர்ந்துகொண்டது. மூன்றுமாதம் வட்டிகட்ட முடியாமல் போனதில் வக்கீல் சோமு வீட்டிற்கே அடியாள்களோடு இறங்கிவிட்டான். வீட்டில் கிடந்த சோஃபாவை இழுத்து நடுரோட்டில் போட்டான். அக்கம்பக்கத்தினரை அழைத்து குடும்ப மானத்தை வாங்கினான். தம்பி, தங்கை, மனைவி, உம்மா உடல் கூசிப்போய் தெருவில் நின்றார்கள். தெருவே கூடிநின்று வேடிக்கை பார்த்தது. ’தவணை கட்டாவிட்டால் அடுத்தமுறை பண்டபாத்திரங்களைத் தெருவில் அள்ளிப் போடுவேன்’ என மிரட்டிவிட்டுப் போனதாக உம்மா ஃபோனில் கூறினாள். கடையடைத்ததில் நிஜாமிற்கு வருமானம் வாடகை, சம்பளம் எனக் கையைக் கடித்தது. இருந்தும் சகித்துக்கொண்டு மெஸ் செலவு, ரூம் வாடகைக்கு எனத் தன் கைகாசில் கொஞ்சம் கொடுத்தான். இப்போது கடைதிறந்தும் வியாபாரம் பெரிதாய் இல்லை. இப்படியே போனால் நிஜாமிற்கு கடும் நசிவு வரும் என்பதை அப்பாஸ் அறியாமல் இல்லை. அப்பாஸின் கடன்சுமை நிஜாம் அறியாமலும் இல்லை.
நிஜாம் கையிலிருந்த கவரைப் பார்த்துக்கொண்டே ட்ராயரைத் திறந்தான் அப்பாஸ். அதே 22 வெள்ளி. எத்தனைமுறை திறந்து பார்த்தாலும் மாறுவதாய் இல்லை. ’ஏதாவது அற்புதம் நிகழாதா?!’ என்று அச்சத்தில் மூழ்கிக்கிடக்கும் எண்ணற்ற தொழிலாளர்களில் அவனும் ஒருவன். மஜீத் மணிசேஞ்சரில் இருவரும் ரன்னர்கள். முதுகில் ஆமை ஒடுபோல் பணத்தை பேக்கில் கட்டிக்கொண்டு முதலில் பேங்கிற்குப் போகவேண்டும். நாணயம் டெலிவரி முடிந்ததும் திரும்பவும் ஆர்கேட். கொஞ்சம் ஆசுவாசம், பின்பு வெளிநாட்டுக் கப்பல் ஆர்டர் இருக்கிறதா என செக் செய்துவிட்டு ஆஸ்திரேலியா, மலேசியா, பவுண்ட், யூரோ நாணயங்களை திரும்பவும் முதுகில் கட்டிக்கொண்டு கப்பலுக்கு ஓடவேண்டும். மீண்டும் ஆர்கேட். இந்த முறை லோக்கல் மணிசேஞ்சர்களுக்கு சரக்கு டெலிவரி. மதியம் சாப்பிட மூன்று மணியாகிவிடும். எல்லா நாணயங்களையும் இருப்பில் வைத்துக்கொண்டு தக்க சமயம் பார்த்து கைமாற்றிவிடுவதில் மஜீத்முதலாளி பலே கில்லாடி. படித்தவர் இல்லை. ஆனால் நாணயத்தோட மதிப்பு எப்ப ஏறும் இறங்கும்னு கணிக்கிறதுல பெரிய ஜோஸ்யக்காரன். எல்லாம் நாகூர் பெரிய எஜமானோட பார்வை எனத் தவறாமல் உண்டியலில் இரண்டு வெள்ளி போட்டுவிடுவார். கிடைக்கும் லாபத்தில் செலவுகளைச் சுருக்கிக்கொண்டு ஊரில் சொத்து வாங்கிப் போட்டுவிடுவார். நெகரா பேங்ல வெள்ளியில்லனாலும் மஜீத்ட வெள்ளியிருக்கும் என்பது ஆர்கேட் வியாபாரிகளிடையே புழங்கும் பேச்சு வழக்கு.
கொஞ்சம் கருமியே தவிர, மனிதர் ரொம்ப நாணயமானவர். காலை ரெண்டு பிரட் துண்டு, 11 மணிக்கு மைலோ த்ரி இன் ஒன், மதியம் வெள்ளைச்சோறு ரெண்டு காய்கறி, இரவு ரெண்டு சப்பாத்தி என வெகுசிக்கன செலவுதாரி. கடையில் யாரேனும்நெய்ச்சோறு இறைச்சி வாங்கிச் சாப்பிட்டால் கூட, ’கட்டுசட்டா சம்பாதிச்சு ஊர்ல சொத்து சேர்க்கணும்டா… சம்பளத்தை இங்கே திண்டழிச்சா பின்னாடி கஷ்டம்’ எனக் கத்திக்கொண்டே இருப்பார். இந்தக் காலத்தில்தான் நிஜாமிற்கு கல்யாண வரன் வந்தது. கருப்புகேசம் திரண்டுகிடக்கும் புருவங்கள் இரண்டும் சேர்ந்திருக்கும். கொத்துகொத்தாய் நெற்றியில் வழிந்துவிழும் முடியைக் கோதிவிட்டு அவன் வியாபாரம் செய்யும் அழகு, பார்ப்பதற்கு ஒரு சினிமா நாயகனுக்குரிய எல்லா முகலட்சணங்களும் அவனுக்கு இருந்தன. ஆர்கேட்டிற்கு சரக்கு வாங்கவரும் இன்னொரு வியாபாரி சாகுல் அமீது மாமா தன்னுடைய மகளோடு ஒருமுறை கடைக்கு வந்தார்கள். எல்லாம் கைகூடி வர, மஜீத்முதலாளியே நின்று நிஜாம்-நஃஃபீசா திருமணத்தை நடத்திவைத்தார். தனியாகத் தொழில் வைக்கப்போகிறேன் என்று நிஜாம் லைசென்சோடு வந்துநிற்க அவரே இந்தக் கவுண்டரையும் பிடித்துக்கொடுத்தார்.
’கடனுக்கு யாவாரம் பண்ணாதே. அப்படியே பண்ணுனாலும் ஒருநாள்தான் கடனுக்கு கொடு. உட்கார்ந்து கடன் கொடுத்தா, அதை அலஞ்சு வாங்கணும். எதையும் கேஷ் யாவாரமா பண்ணு. என்னட்ட காலையில சரக்கு எடுத்துக்க. ஆனா, ராத்திரி எட்டுக்குள்ள செட்டில் பண்ணிடு’ என கண்டிசன் கம் அறிவுரையோடு, ’இவனையும் கூட வச்சுக்கோ. நல்லா தொழில் தெரிஞ்சவன்’னு அப்பாஸையும் அனுப்பிவைத்தார். கடை ஆரம்பித்ததும் மஜீத்முதலாளி முதல் வியாபாரமாக பிஸ்மி சொல்லி நூறுவெள்ளி கொடுத்தார். நிஜாம் அதை சென்டிமென்டாக இன்னும் கடையில் வைத்திருக்கிறான். ஆரம்பத்தில் 50 க்கும் 60க்கும் பிசிறு தட்டி, பின்பு 500 வெள்ளியை ஒருவழியாக மூன்று மாதங்களில் தாண்டியது. வியாபாரத்தைக் கூட்டும் உத்திகளில் அப்பாஸ், வெளிநாட்டினர் அதிகமாகப் புழங்கும் மால்களில் பழைய கூட்டாளிகளான ஷோரூம் சேல்ஸ் பெர்சன்களைச் சந்தித்தான். நல்ல ரேட் தருவதாக உறுதியளித்தான். மார்கெட் ரேட்டைவிட இரண்டு- மூணு காசு உடைத்துக் கொடுத்தான். வியாபாரம் வளர்ந்தது. கொரானாவிற்கு முன்புவரை நாளொன்றுக்கு சராசரி 1000 வெள்ளி, மலேசியா டிடியில் மட்டும் சுளையாக 200 வெள்ளி லாபம் நிற்கும். மஜீத்முதலாளி காலத்திற்குப் பிறகு அவருடைய மகன்கள் பொறுப்பில் நிறுவனங்கள் கைமாறின. நாணயம் தவற மார்க்கெட்டில் பெயர் கெட்டுப்போனது. ‘மஜீத்’ கடைப்பெயரில் மட்டும் வைத்துக்கொண்டு பாகப் பிரிவினையில்அவரையே ஊருக்குப் பற்றிவிட்டார்கள். ’மஜீத்முதலாளி மாதிரி அவரோட பிள்ளைங்க கிடையாது’ என அவங்க காதுபடவே ஆர்கேட் வியாபாரிகள் பேச ஆரம்பித்தார்கள். அவ்வப்போது இங்கே வந்துபோகும் முதலாளியை எங்காவது கண்டால் பழைய உற்சாகமும் டயலாக்கும் கேட்க முடிவதில்லை. பதிலாக, ‘முடிஞ்சா புண்ணியத்த சேருங்கடா. காசுபணத்தைச் சேர்த்து வச்சா புள்ளைங்க அடிச்சுக்குவானுங்க’ எனப் புலம்பிக்கொண்டிருந்தார்.
இரவு எட்டுமணி. கடையடைக்கத் தயாரானபோது அப்பாஸை நோக்கி ஒரு நிழல் வந்தது.
‘சாப்பிடுவோமா?’
’இதோ வந்துட்டேன், நிஜாம்’ என விளக்குகளை அணைத்துவிட்டு பக்கவாட்டுக் கதவையும் அடைத்தான். ஒன்றுக்கு இரண்டுமுறை கதவைச் சரிபார்த்துவிட்டு இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள். பூரிகிழங்கும் தோசையும் ஆர்டர் செய்துவிட்டு இருவரும் மேசையில் அமர்ந்திருந்தார்கள். எங்கிருந்து ஆரம்பிப்பது எனத் தெரியாமல் தொண்டையைக் கணைத்துக்கொண்டிருந்தான் நிஜாம்.
‘என்ன யோசிக்கிற, நிஜாம்?‘
தன் கையிலிருந்த கவரை அப்பாஸை நோக்கி நகர்த்திவைத்தான். பிரித்துப் பார்த்தால் ஊருக்கு டிக்கெட் புக்காகியிருந்தது. பின்பு கையிலிருந்த பையையும் தள்ளினான்.
‘இதுல வீட்டுக்குக் கொஞ்சம் சாமான் இருக்கு. உம்மாவ கேட்டதாச் சொல்லு.‘
புரியாமல் விழித்துக்கொண்டிருந்தான் அப்பாஸ்.
‘ நிலைமை உனக்குப் புரியும்ணு நினைக்கிறேன். நானும் பல்லக் கடிக்கிறேன். இதுக்குமேல இத வச்சிச் காலம் தள்ளமுடியாது.’
‘… ‘
‘கோல்டன் மைல் காதர், லக்கிபிளாசா செல்வம்னு இந்த வாரம் மட்டும் மூணு பேர் லைசன்ஸ் வேணாம்னு திருப்பிக் கொடுத்துட்டாங்க. இந்த மாசத்துல மட்டும் இதோட 8 பேர். நிலைமை சரியானதும் சொல்லியனுப்புறேன்.’ என எழுந்துபோய்விட்டான் நிஜாம். தோசையும் பூரியும் மேசையில் கேட்பாரற்றுக் காய்ந்து கிடந்தன.’
‘நிஜாம்… நான் காதர் மாமா பேசுறேன்.‘
‘சொல்லுங்க மாமா…’ மறுமுனையில் மஜீத் மேனேஜர் காதர்.
‘உங்களுக்கு அடிச்சுப் பார்த்தேன். லைன் போகல. என்ன அவசரம் மாப்ளே? காலையில அப்பாஸ் வந்து 7000 வெள்ளி பாக்கிய வாங்கிட்டுப் போயிட்டார்.‘
நிஜாமிற்கு ஒருகணம் தலைசுற்றியது. சில வினாடிகளுக்குப் பிறகு சுதாரித்துக்கொண்டு,
‘நான்தான் மாமா வாங்கிக்கச் சொன்னேன்‘ என ஃபோனை அணைத்து நஃபீசாவிடம் கொடுத்தான். விஷயத்தை அறிந்த நஃபீசா வானத்திற்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டிருந்தாள்.
‘படிச்சுபடிச்சு சொன்னேனே… வைக்கிற இடத்துல வைக்கணும். நல்ல ஆளுன்னு நெனச்சே… இப்படி நல்லபாம்புக்கு முட்டை உடைச்சி வளர்த்திருக்கோம்.‘
‘பரவாயில்லை, விடு.‘
‘பிளாசா வாடகை பாக்கிய எப்படி செட்டில் பண்ணப் போறீங்க? என்னமோ கையில காசு இருக்குற மாதிரி பரவாயில்லைங்குறீங்க?!’
‘கொஞ்சம் அனத்தாமா இருக்கியா?’
’என்னமோ பண்ணித் தொலைங்க.‘
கையில் இருந்த கடை அக்கவுண்ட் புத்தகத்தை சோஃபாவில் வீசி எறிந்துவிட்டுப் போனாள். தலையில் கைவைத்தவாறு சோஃபாவில் சாய்ந்தான். அப்பாஸின் பழைய நினைவுகள் புகைபோலச் சூழ்ந்துக்கொண்டிருந்தன. சோஃபா நடுவில் சொருகிக்கிடந்த ஃபோன் இடுப்பைக் குத்திக்கொண்டிருந்தது. நகர்ந்து அமர்ந்தான். மீண்டும் அசெளகர்யமாகவே இருந்தது. சுருட்டுக்குள் கைவிட்டு துலாவி ஃபோனை எடுத்துப்பார்த்தான்.
‘Your account XXXX has been credited with 7000.00’
(நன்றி: தமிழ் முரசு)