வாழ்வென்பது யாதெனில்…
காலத்தைக் காட்டிலும் சிறந்த ஆசான் யாருமில்லை. காலம் நாம் எதிர்பார்க்காத, அறியாத பல விஷயங்களை நம் முன்னால் கொண்டு வருகிறது. நம் நிலைப்பாடுகளைத் தலைகீழாக மாற்றுகிறது. நாம் சரியெனக் கண்டதைத் தவறெனக் காட்டுகிறது. நாம் தவறெனக் கண்டதை சரியெனக் காட்டுகிறது. நாம் விரும்பியதை வெறுக்கவும் வெறுத்ததை விரும்பவும் வைக்கிறது. நம் கர்வத்தை உடைத்து நம் இயலாமையை உணர்த்துகிறது. நம் இன்பங்களையும் துன்பங்களையும் பழங்கதைகளாக மாற்றிவிடுகிறது. பலவற்றை மறக்கடித்துவிடுகிறது. காலத்தைவிடச் சிறந்த நிவாரணி வேறெதுவும் இல்லை. காலப்போக்கில் காயங்கள், துன்பங்கள் எல்லாம் காணாமல்போகும். பொறுமை எத்துணை அற்புதமான ஒரு தீர்வு! பொறுமையாளர்கள் கணக்கில்லாமல் கூலி பெறுவார்கள் என்று திருக்குர்ஆன் வாக்களிப்பது மறுவுலகில் மட்டுமல்ல, இவ்வுலகிலும்தான்.
நாம் செய்யும் நற்செயல்களும் தீய செயல்களும் நம் மனதில் அழியாச் சுவடுகளை விட்டுச் செல்கின்றன. அவை நம் மனதிற்கு அமைதியை ஏற்படுத்தலாம். கடும் குற்றவுணர்ச்சிகளை ஏற்படுத்தி நம்மை வேதனைக்குள்ளாக்கலாம். மனம் எல்லாவற்றிலிருந்தும் தனக்கானதைப் பெற்றுக்கொள்கிறது.
ஒரு நல்ல செயலைச் செய்துவிட்டால் மனம் திருப்தியடைகிறது. தீய செயல் மனதில் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது. பெருமையடிப்பவர்களை நாம் விரும்புவதில்லை, பணிவானவர்களையே நாம் விரும்புகிறோம். வட்டிக்கு விடுபவர்களை நாம் விரும்புவதில்லை, தர்மம் செய்பவர்களேயே நாம் விரும்புகிறோம். தீய செயல்களில் ஈடுபடுபவர்களை நாம் விரும்புவதில்லை, நற்செயல்களில் ஈடுபடுபவர்களையே நாம் விரும்புகிறோம்.
எது நல்லது, எது தீயது என்பதை இன்னொருவர் சொல்லிக் கொடுக்காமலேயே நம் மனம் உணர்ந்து கொள்கிறது. இது அனைவரும் உணர்கின்ற பொதுவான மனித இயல்புதான்.
மனித ஆன்மாவைப் படைத்த இறைவன் நன்மை எது, தீமை எது என்பதை அதற்கு உணர்த்திவிட்டான். அவற்றை அதற்கு யாரும் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நினைவூட்டலே அதற்குப் போதுமானது. திருக்குர்ஆன் கூறுகிறது:
“ஆன்மாவின் மீதும் அதனைச் செம்மையாக ஆக்கியவன்மீதும் சத்தியமாக. அவன் அதன் தீமையையும் நன்மையையும் உள்ளுதிப்பின்மூலம் அதற்கு உணர்த்திவிட்டான். தம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தியவர் வெற்றியடைந்து விட்டார். அதனைப் பாவங்களால் களங்கப்படுத்தியவர் தோல்வியடைந்து விட்டார்.” (91:7-10)
ஒரு நற்செயல் செய்தபிறகு மனித மனம் உணரும் திருப்தியே அதற்குக் கூலியாக இருப்பதற்குப் போதுமானது. சத்தியத்தைப் பின்பற்றுபவன் இவ்வுலகிலேயே சுவனத்தைக் காண்கிறான். அவனது மனம் உணரும் நிம்மதிதான் அந்தச் சுவனம்.
பாவமான, அநீதியான செயல்களில் ஈடுபடும்போது கிடைக்கும் கணநேர அற்ப இன்பங்கள் அவற்றுக்குப் பிறகு வரக்கூடிய குற்றவுணர்ச்சிகளால் அடித்துச் செல்லப்பட்டுவிடுகின்றன. தொடர்ந்து மனிதன் செய்யக்கூடிய பாவங்களால் ஏற்படும் குற்றவுணர்ச்சிகள் அவன் மனதில் முள்ளாய்க் குத்திக் கொண்டும் பாரமாய் அழுத்திக் கொண்டும் இருக்கின்றன.
சுவனமும் நரகமும் மறுவுலகில் மட்டுமல்ல, இவ்வுலகிலும்தான். மனிதர்கள் உணரும் இந்தத் திருப்தியுணர்வே அவர்களை நன்மையான காரியங்களில், சமூகச் சேவைகளில் ஆர்வமுடன் ஈடுபட வைக்கிறது. அதுவும் மறுவுலகிலும் கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கை இறைநம்பிக்கையாளர்களை இன்னும் ஆர்வமுடன் ஈடுபட வைக்கிறது.
நாம் அனுபவித்த இன்பங்களும் துன்பங்களும் வெறும் நினைவுகளாக மட்டுமே எஞ்சிவிடுகின்றன. நாம் செய்த நற்செயல்களே ஆறுதலளிக்கும், திருப்தியளிக்கும் உணர்வுகளாக மனதில் நிலைத்திருக்கின்றன.
நோக்கமற்ற, தேடலற்ற வாழ்வு எளிதில் சலிப்பை ஏற்படுத்திவிடும். எதையாவது தேடிக்கொண்டிருப்பவர்கள் வேகமாக முன்னோக்கி நகர்கிறார்கள். தேடல் அவர்களை செயல்படத் தூண்டுகிறது. அதிலும் வாழ்வின் புதிர்களை அவிழ்க்க, நோக்கத்தை அறிய முயற்சிப்பவர்களின் தேடல் அவர்களின் வாழ்வை சுவாராசியமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குகிறது.
ஓடாமல் தேங்கிக்கிடக்கும் நீர் அழுக்கடைந்து விடுவதுபோல இயங்காமல், தேடாமல் இருக்கும் மனிதன் சோர்வடைந்துவிடுகிறான். தொடர்ந்து தனக்குப் புத்துணர்வையும் உத்வேகத்தையும் அளிக்கும் விஷயங்களை அவன் பெறவில்லையெனில் சலிப்படைந்து, நிராசையடைந்து முடங்கிவிடுவான்.
இவ்வுலகம் ஆச்சரியங்களால் நிரம்பியுள்ளது. என்றும் வற்றாத நீரூற்றுபோல அது தன் அதிசயங்களை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. ஆனாலும் அவற்றைக் கண்டு அவற்றின் மூலத்தை அறிவதற்கு அகப்பார்வை அவசியமாகிறது. பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டதால் அவை அதிசியங்கள் என்பதையே நாம் மறந்துவிட்டோம். வாழ்வின் நோக்கத்தைத் தேடி அலைபவர்கள் அவற்றைக் கண்டுகொள்கிறார்கள். அவற்றின் பின்னாலிருக்கும் மாபெரும் சக்தியை கண்டடைகிறார்கள். தாங்கள் வீணாகப் படைக்கப்படவில்லை என்பதை உணர்ந்துகொள்கிறார்கள். அவற்றின்மூலம் தங்களைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள், அவை அவர்களின் அகவுலகை விரிவடையச் செய்கின்றன. மற்றவர்கள் அவற்றைக் கண்டும்காணாமல் கடந்து செல்கிறார்கள். நம்பிக்கையாளர்களின் ஒரு பண்பாக திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது:
“வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும் இரவும் பகலும் மாறிமாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் இருக்கின்றன. அவர்கள் நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைவுகூருவார்கள்; வானங்கள் மற்றும் பூமியின் படைப்பில் சிந்தனை செலுத்துவார்கள். “எங்கள் இறைவா! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ தூய்மையானவன். எங்களை நரக நெருப்பின் வேதனையை விட்டும் காப்பாற்றுவாயாக” என்றும் பிரார்த்திப்பார்கள்.” (3:191)
இவ்வுலகின் சம்பாத்தியத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்கள் செக்குமாடுகளைப் போன்றவர்கள். அவை தமக்கு வழங்கப்பட்ட பணியை இடைவிடாமல் செய்துகொண்டிருக்கின்றன, எவ்விதச் சிந்தனையும் இல்லாமல். இறுதியில் வாழ்வின் நோக்கத்தை அறியாமலேயே அவர்கள் இறந்தும் விடுகிறார்கள்.
வாழ்க்கை என்பது வெறுமனே அனுபவித்தல் மட்டுமல்ல. அப்படியான ஒரு வாழ்க்கையும் மரணமும் ஒன்றுதான். அப்படிப்பட்ட வாழ்க்கையில் இறுதியில் வெறுமையையும் விரக்தியையும் தவிர வேறெதுவும் மிஞ்சப் போவதில்லை. வாழ்வதென்பது இயந்திரங்கள் செயல்படுவதைப்போன்று செயல்படுவது அல்ல. அப்படிப்பட்டவர்களை காலம் விரைவில் மறக்கடித்துவிடும். அவர்களும் தங்களைத் தாங்களே மறந்துவிடுவார்கள். வாழ்க்கை தீராத அறிதலையும் கண்டடைதலையும் வேண்டி நிற்கிறது.
மனிதனுக்கு வழங்கப்பட்ட அறிவே அவனைப் பிற உயிரினங்களைவிட்டு வேறுபடுத்துகிறது. அவன் தன் நோக்கத்தைக் கண்டடைய வேண்டும் என்பதற்காகவே அவனுக்கு அது வழங்கப்பட்டுள்ளது. வெறுமனே அனுபவித்தலுக்கு மட்டுமே அந்த அறிவை அவன் பயன்படுத்தினால் அவனது வாழ்க்கையை அவனே அர்த்தமற்ற ஒன்றாக்கிவிடுகிறான்.
வாழ்வின் நோக்கத்தை அடைந்தவர் இவ்வுலகிலும் சுவனத்தைக் காண்பார். மன அமைதி என்பது வாழ்வின் நோக்கத்தோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகும் படைக்கப்பட்ட நோக்கத்தைக் கண்டடையும்பொருட்டு மனிதன் எடுத்துவைக்கும் அடிகள் விலைமதிப்பற்றவை. உண்மையைத் தேடிச் செல்லும் பயணி அதன்பொருட்டு உயிரையும் அர்ப்பணிக்கத் தயங்க மாட்டான். உண்மையைவிட மதிப்பான எந்தவொன்றும் இந்த உலகில் இல்லை.
(தேடல் தொடரும்)