‘க’ஞானம்
முதுகு ஒட்டிக்கொண்டு வியர்த்து எண்ணெயாகி டைல்ஸ் தரை நழுவியது. சற்று நகர்ந்த பிறகு பழைய இடத்திலுள்ள வியர்வையின் மினுமினுப்பில் ஜன்னலின் கிராதி கோணவும் தலையின் சூடு மெழுகாகி இளகியது. அதற்கு மேல் தொடர மனமில்லை. எழும்பி அமர்ந்து கொண்டான் நூகு.
பச்சையும் கருமையுமாக இடது கெண்டைக்காலில் முந்திரிக்கொத்து போல சுருண்டிருந்த சுருள் நரம்பு பிரச்சினைக்கு விபரீத கரணி ஆசனம் சிறந்தது என யோகாச்சார்யன் இஸ்மாயீல் திருவனந்தபுரம் வானொலியில் சொல்லியதைக் கேட்டிருந்தான். அதன் பேரில் ஒரு வாரமாக காலை அல்லது மாலை என நூகின் யோகாசனப் பயிற்சி தீவிரமடைந்தது.
அடுத்த நாள் காலையில் யோகாசனத்திற்கான அரைக்காற்சட்டையை மாட்டும்போது தலைக்குள் நசநசத்தது. அதே நசநசப்புதான். “சிமிண்ட் தர போட்டிருந்தா இந்த பெரச்ன இல்ல. இப்போ நசநசத்து கசகசத்து வேலயில்ல. எல்லாம் முடிஞ்ச பொறவு பேசி ஒன்னும் ஆவப்போறதில்ல”
டைல்ஸ் போட வேண்டும் என்ற மனைவி கஜ்ஜத்தின் பெரு விருப்பத்தையும் தாண்டி வீடு கட்டும் குஞ்சப்பன் மேஸ்திரியிடம் தன் விருப்பத்தைச் சொன்னான் நூகு.
“நம்ம ஆளுகளுக்கு டைல்ஸ் ஒட்டத்தான் தெரியும் பாத்துக்குங்க. ரெட் ஆக்சைட் பெரட்டுன சிமிண்ட் தரைலாம் போடத் தெரியாது மோல்ளி . “
மேஸ்திரியின் கண்களுக்குள் உற்றுப்பார்த்தான் நூகு . இரண்டடி பின்னுக்கு நகர்ந்து தலையை சற்று வலப்பக்கம் ஒடித்தவாறே “ இல்ல மோல்ளி. நெசமாத்தான்” என சொல்லதொடங்கியவரை பார்த்து சிரித்தான்.” ய சொன்னா நம்புங்க . இப்ப யாரு வீட்லயும் சிமிண்ட தர போட்றதில்லல்லா. அதுனால அதப்பத்தி யாருக்கும் வேலயும் தெரியல” என்றார் மேஸ்திரி
“ஓய் மேஸ்திரி! சிமிண்ட் தர போட தெரியலேன்டு ஒரு கொத்தனார் சொன்னா அவனுக்கு மூச்சு உடத்தெரியாதுன்டு சொல்ற மாதிதான். நீரு என்ன முட்டாளாக்காதீயும். டைல்ஸ் போட்டாத்தான் அடுத்த ஊடு கெடய்க்குங்கறதுனாலத்தான் இந்த பேச்சு பேசுரியும். பெரட்டு விளயாட்டு வெளங்காதுன்டு நெனச்சீரோ ஓய்? ”.
நூகின் பேச்சை ஒத்துக் கொண்ட மாதிரியும் இருக்கக்கூடாது மறுத்த மாதிரியும் இருக்க வேண்டாம் என தீர்மானித்து எந்த குறிகளுமற்ற அமைதி காத்தார் குஞ்சப்பன். மேல் சலனத்திற்கு கொஞ்சம் சிரித்தார்.
குஞ்சப்பனை நினைத்த நேரத்திற்கு கூடுதலாக ஓர் ஆசனத்தை செய்திருக்கலாம் என்றவாறே நசநசப்பு கசகசப்பிற்காக காற்றாடியை போடப் போகும்போது “ ஆசனம் அப்யசிக்கும்போள் ஃபான் பாடில்லா” என்ற யோகாச்சார்யனின் அறிவுறுத்தல் நினைவிற்கு வந்தது. அவர் பார்க்கவிலலைதான். இருந்தாலும் அது நல்லதில்லை. ஆச்சார்யன் சொல்லில் பாம்பின் கூர் உண்டு, விரிப்போ பாயோ விரிக்கலாமென்றால் தரையின் குளிர்ச்சி அதில் கிடைக்காது. அதனால் அதுவும் சரிப்பட்டு வராது. பச்சை சிரிப்பு சிரித்து சென்ற மேஸ்திரி குஞ்சப்பனின் முகத்தில் இந்த வியர்வையை எடுத்து மொத்தமாகத் தடவ வேண்டும் போலிருந்தது.
கான்கிரீட்டின் வெக்கையில் கனம் கூடியிருப்பதாக நூகிற்குத் தோன்றியது. மொட்டை மெத்தையின் சாளரக்கதவில் நின்று கொண்டிருந்த ஆண் குருவி சிர்ப்பியது. மொட்டை மெத்தையின் நினைப்பு நூகிற்குள் உற்சாகத்தைக் கிளப்ப ஏணிப்படிகளை இரண்டிரண்டாகத் தாவினான். குஞ்சப்பனிலிருந்தும் நசநசப்பிலிருந்தும் கொஞ்ச நேரத்திற்கு விடுதலை. மாடிக்காற்றின் தழுவலில் வியர்வையின் பெருக்கு தணியத் தொடங்கியது.
கிழக்கே பூசாமல் நின்ற பனாட்டுக்கார வீடு. வட பக்கம் மட முகத்தின் வீடு அவன் வீட்டு தண்ணீர் தொட்டியின் மீதமர்ந்திருந்த நாட்டியப்புறா நூகின் தலையைக்கண்டவுடன் சிலிர்த்து கலைந்து மேலெழும்பியது. நெஞ்சில் செஞ்சாயம் பூசிய இன்னொரு புறா வானத்திலிருந்து இறக்கைகளை அணைத்துப் பொத்தியவாறே கல்லாகி கீழிறங்கியது. நாட்டியப்புறாவின் அருகில் வந்தவுடன் இறக்கைகளை விரித்தது. பின்னர் இரண்டுமாக திசை திரிந்து பறந்தலைந்தன.
எல்லாம் சரியான நிறைவில், மேடு பள்ளம் இல்லாத பக்கமாக பார்த்து படுத்தான் நூகு. அடி வெளுத்த வானில் சுட்ட மஞ்சள் கிழங்காகி கதிரவன் எட்டிப்பார்த்தவுடன் எழுந்து கொஞ்சம் யோசித்து விட்டு தென்வடலாக அமர்ந்தான்.
பிஸ்மி சொல்லி பத்மாசனத்தில் தொடங்கியாகி விட்டது. மூச்சை முழுவதுமாக உள் நிரப்பி மார்பு விம்மியவுடன் பந்தனத்திற்காக மூச்சைக் கட்டி நிறுத்தினான். வலது கைவிரல்களை மெல்ல விடுவித்து எண்ணி முடிக்க வும் வயிறு பாபாவின் கப்பரையாக குழிந்து விட்டிருந்தது.. எழுபது எண்ணும் வரைக்கும் தாக்கு பிடிக்கிறது. நுரையீரலுக்கு இன்னும் வயது தெரியவில்லை போல. தலைமாட்டிலிருந்த பிலிப்ஸ் வானொலிப்பேழையில் ஜீயின் குரலைப்போலவே மூச்சை இழுத்து பிடித்த ஏற்ற இறக்க அபிநயங்களுடன் அரசின் சாதனைகளை எடுத்து விட்டுக் கொண்டிருந்தார் மூத்த அறிவிப்பாளர் ஒருவர்.
அடுத்ததாக உட்கடாசனம். மூச்சை வெளி விட்டவாறே முட்டுக்கால்களை முக்கால் திட்டத்திற்கு வளைத்துக் கொண்டு ஆசன இருக்கையில் நின்றான். முருங்கைக்காயின் இள முறிவு ஒலி கேட்ட மாதிரி ஒரு சக்கு, முட்டுதான் மொறு மொறுத்ததா? என்ற தெளிவின்மை.. வாடா மூடியாக இருக்கும். முட்டு சிரட்டை தெறித்தாலும் பரவாயில்லை. ஆனால் உட்கடாசனத்தை விட்டு விடக்கூடாது. அது முட்டு வலிக்கு நல்லதாமே? இருபத்தேழு வருடங்களுக்கு முந்தி மலப்புரத்து நரம்பன் சௌக்கத் எடுத்த எட்டு மணி நேர மொத்த பிழிச்சலுக்கு நின்று பிடித்த முட்டா இது? நினைத்தால் வலிதான். “மாறடா” என உரத்து சொல்லி விட்டு மூச்சை திரும்ப உள்ளிழுத்தான். உள்ளிழுப்பினால் பெருத்த விலாவில் வியர்வை ஊற்றெடுத்தது. முட்டு வலி இருந்தாலும் அதன் இளமை பெரிதாக குன்றவில்லை என்ற நிறைவில் சவாசனம் கிடந்தான். நெஞ்சு மார்பு என எல்லாப்பக்கங்களிலிருந்தும் வழிந்த வியர்வை மொத்த ஒழுக்காகி முதுகின் பக்கம் இறங்கியது. நசநசப்பு ஒழிந்தது. தாகித்திருந்த தள ஓடுகளுக்கு நல்ல உப்பிட்ட வெள்ளக் குடிப்பு.
கீறப்பட்ட குரல் வளையிலிருந்து ஒரு குரல் ஏணிப்படி கூட்டில் முட்டித் திரும்பியது “கா“ என்று வேக இடைவெளியில் மூன்று முறை. வெளுத்து பிளந்த வாயுடன் முதிரா காக்கையொன்று கைப்பிடிச்சுவரின் விளிம்பில் வந்தமர்ந்தது. அதைத்தொடர்ந்து கிழக்கிலும் மேற்கிலுமாக பத்து காக்கைகள் வரை இறக்கையை தணித்து சீராக சுவற்றிலிறங்கின. மெத்தை முழுக்க நெடில் ‘க’ வின் இரைச்சல்களால் நிரம்பின. இத்தனைக்கும் மெத்தையில் காக்கைக்கான உணவென்று எதுவும் கிடக்கவில்லை. வழித்து துடைத்து துப்புரவாக இருந்தது தளம். மாதமொருமுறை வீட்டுப்பக்கம் எட்டிப்பார்க்கும் சேதுராஜா தெரு பார்வதியக்கா நேற்றைய தினம்தான் பெருக்கி விட்டிருந்தாள்.
சில காக்கைகள் வலமும் இடமுமாக தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்து விட்டு நூகின் விலாப்பக்கத்திலிருந்து எட்டடி தொலைவில் நின்றன. சலனமொழிந்து அவன் கிடந்தான். காக்கைகளின் கரைதல்கள் உக்கிரமடைந்தன. குரலால் இருபது காக்கைகள்.
“இதென்ன எழவுக்கு நம்மள ரவுண்ட் கட்டுது?” காக்கைப்படை எதுவும் தனக்கெதிராக ஏவப்படும் அளவிற்கு தான் ஒன்றும் பெரிய ஆளில்லையே? அக்கம்பக்க பகை என ஒன்றும் இல்லை. தொழில் போட்டிக்கான வாய்ப்பேயில்லை . தனக்கும் ஏவல் சூனியங்களிலும் நம்பிக்கையில்லை. மனிதர்களது நம்பிக்கைகள் அனைத்தும் தங்களின் நம்பிக்கைகளோடு ஒத்துப்போக வேண்டும் என்றெல்லாம் உலகம் தோன்றிய நாளிலிருந்தே காக்கை கூட்டம் எண்ணியதற்கான தெளிவுகள் எதுவுமில்லை.
ஒரு வேளை இப்படி இருக்கலாம். காக்கை சித்தரின் ஞான மரபு தொடர்ச்சியாகவும் இருக்க வாய்ப்புண்டு அவரைப் போலவே தங்கள் தங்கள் இறக்கைகளுக்குள் என்னென்ன சித்துக்களை எல்லாம் இவைகள் செருகி வைத்திருக்கின்றனவோ? குறுக்கு மறுக்கான ஒட்டங்கள் “தானா தெளியட்டும்” என்ற தன் சித்தத்துடன் குழப்பத்திற்குள் கிடந்தான் அவன்.
சவாசனத்தில் கிடந்து கொஞ்ச நேரம் கண்ணயர்ந்ததால் காக்கைகளுக்கு தன்னை ஒரு பெரிய இறைச்சி துண்டமாக தெரிந்திருக்கிறது என்ற ஞானமானது நூகின் தலைக்குள் குதித்து வெளுத்தது. அத்தோடு பழங்கதையொன்றும் துணை விளைவாக அவனுக்குள் விரிந்தது.
கொடிமரப்பள்ளி கூட்டத் தீர்மானத்திற்கும் அடங்காமல் ஆட்டுக்கறி விலையை பெரிய நாடான் ஏற்றவே திருமணத்திற்கான களறிச்சோறு ஆர்டர் எடுத்திருந்த துணி லெப்பையின் மண்டைக்குள் புழு குடைந்தது. ஒரு பக்கம் விடியும் முன்னாலேயே இருட்டின் மறைவில், எட்டு சிதறாமல் நடந்து வருடம் முழுவதும் கன்றுக்குட்டி மட்டுமே அறுக்கும் மரிக்காவின் கடைக்கு வந்தார். நான்கு சட்டி கறிக்கான முள்ளில்லா தனி இறைச்சியை வாளியில் நிறைத்துக் கொண்டு டீக்கடையில் போய் உட்கார்ந்தார். இருந்த இடத்திலேயே மூன்று டீ செலவாகியது. நன்கு வெளிச்சம் பரவிய பிறகு பக்குவமாக சூத்தைக் கிளப்பி பெரிய நாடானின் ஆட்டுக்கறிக்கடையில் போய் நின்றார். இரண்டு நாளைக்கு முன்கூட்டியே சொல்லி வைத்து விட்டதினால் ஆட்டுத்தலைகளையும் முள்ளையும் பெரிய நாடான் பனை நாரில் முடிந்து வைத்திருந்தான். எல்லோருக்கும் தெரியும்படி வாளிக்கு மேல் அவற்றை வைத்து வெற்றி வீரனாக திருமண சமையலை முடித்தார் துணி லெப்பை.
திருமணம் முடிந்து பணமெல்லாம் கொடுத்து முடித்து ஒரு வாரங்கழித்து துணி லெப்பையை இரண்டு கறிக்கடைகளிலும் பார்த்திருந்த ஒருவர் நடப்பை போட்டு உடைக்க திருமண வீட்டுக்காரருக்கு கல்பும் முகமும் ஒரு சேர சிவந்தன. “பூ மவன எங்கே?” என மடிக்குள் சுருட்டி வைத்திருந்த சைக்கிள் சங்கிலியோடு மூசிக் கொண்டு அலைந்தார். சங்கிலி வீச்சுடன் கூடவே தொப்புள் குழியின் நேர் கீழ் குறி தப்பாமல் பாயும் இவரின் முட்டடிக்கு அஞ்சி அவர் ஹாங்காங் புறப்படும் வரைக்கும் ஆந்திராவில் உள்ள உறவினரின் தோல் மண்டியில் துணி லெப்பை சம்பளமில்லா வேலைக்காரனாகி ஒளித்துக் கிடந்தாக கேள்வி.
தனது பத்து வயதில் நடந்த இந்த கதையானது நிகழ்கால நடப்புகளுக்குள் நூகின் ஞானத்தை இன்னும் துலக்கியது. இன்றோ ஆட்டிற்குப் போட்டியாக மாட்டிறைச்சியின் விலையும் துரத்தும்போது தான் விரும்பிப் பார்க்கும் மரம் செடி கொடிகளும் இறைச்சியாகி விட்டால் என்ன? என்ற பஞ்ச கால கணக்கும் கதையைக் கடந்தபடியே நூகின் மூளைக்குள் ஓடின. ஈறின் இண்டு இடுக்குகளில் சிக்கிக் கிடக்கும் கறியிழையை துளாவுவதற்கு இனி வாய்ப்பற்று போகும் நாக்கின் அவலத்தை நினைத்து காக்கையின் தரிசனத்திற்குள் விசனத்துடன் மீண்டான் நூகு.
நல்லவனும் கெட்டவனுமாக இருந்தாலும் தான் ஒரு எழுத்தாளன், அதற்குப் பிறகு ஒரு தந்தை ஒரு வணிகன் ஒரு பாட்டன் என்பது காக்கைக் கூட்டத்திற்கு தெரியாதுதானே என்ற நினைப்பு தந்த ஆயாசத்தில் தன் கைகளை ஊன்றினான். ஆனாலும் சுவற்றில் அமர்ந்திருந்த காக்கைகள் தங்கள் நம்பிக்கையை அவ்வளவு எளிதில் துறக்க ஆயத்தமாக இல்லை. இவனது அசைவைக்கண்டு அவைகள் எதுவுமே எழும்பி பறக்கவுமில்லை.
தானும் எழும்ப மனமில்லாமல் இதைப்பற்றி சிந்திப்பதற்காக மீண்டும் சவாசனத்தில் கிடந்தான் நூகு. வானம் தெளிந்தும் மேகங்களால் கலங்கியும் கிடந்தது. நீலமும் வெள்ளையும் ஆக முடியாத அவசத்தில் நிறங்கள் சலித்துக் கொண்டிருந்தன.
இவன் தலைக்கு நேரே உள்ள வானம் தெளிவாகவும் மேக வரித்தீற்றல்களுடனும் துலாம்பரமாகக் கிடந்தது. அருகிலிருந்த மேகக்குலையிலிருந்து வெளிப்பட்ட பருந்தொன்று இப்போது சரியாக அவன் தலைக்கு நேரே வலப்பக்கம் இறக்கை கட்டி நின்று மிதந்தது. வலப்பக்கம் ஒரு முறை இடப்பக்கம் ஒரு முறை என அரை வட்டமடித்து விட்டு வடக்கு நோக்கி பறந்தது.
ஜீயின் மொழியாக்கப் பீற்றல்களுக்குப் பிறகு வானொலியில் இந்தி படப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்க நூகு ஒருக்களித்து கிடந்தான். “ஆஷ் நிராஷ் கே தோ ராகோன் சே துனியா துனே சஜாயி” என முஹம்மத் ரஃபி துயரார்ந்து கொண்டிருந்தார். வரிகளின் பொருளுக்குள் உருகிக் கொண்டிருந்த மனத்தை தூக்கம் மேவிட இமைகள் வெட்டி இறங்கிக் கொண்டிருந்தன. “காஹ்” என தகர போணியில் ஆணியால் இழுத்த ஒரு கரைதலில் எல்லாம் கலைந்தவிழ்ந்தது . அவனது வலது கை ஒன்றரை இறக்கைகளுடனும் இருண்ட அலகுடனும் மின்னியது.
காக்கையிலிருந்து தப்பியாக வேண்டுமென்றால் அதைப் பற்றி நினைக்காமலிருப்பதுதான் சிறந்த உத்தி என்ற மன அறிவியல் விதிப்படி இதயத்தையும் மனத்தையும் கஜ்ஜத்தின் பக்கம் திருப்பினால் நல்லது என அவனுக்கு தோன்றியது.
நூகின் வீட்டில் பெருத்த இறைச்சிக் கண்டம் வாய்க்கின்றதோ இல்லையோ வறட்டிய மாட்டிறச்சி துண்டங்களை கோழி முட்டையில் முக்கி பொரிக்கப்படும் சாப்ஸ் கறிக்கு நூறு சதவிகித உறுதிதான். இது கஜ்ஜத்தின் கைச் சிறப்பு. திருமணமான புதிதில் “மச்சானுக்கு பிடிக்கும்“ என மாங்கி மாங்கி செய்தாள். கால் நூற்றாண்டைக் கடந்த பிறகு இப்பொழுதெல்லாம் வருடத்திற்கொருமுறை அதுவும் ஹஜ்ஜுப்பெரு நாளைக்கு மட்டும்தான் சாப்ஸ் கறி என்றாகி விட்டது.
எட்டு வருடங்கள் உணர்வின்றி கிடந்த இஸ்ராயீல் பிரதமர் ஏரியல் ஷரோனின் மூக்கினருகே அவருக்குப் பிடிக்கும் என்பதாலேயே ஆட்டப்பட்ட லாலி பாப் பற்றி என்றோ வாசித்திருந்தது நினைவிற்கு வர சாப்ஸ் கறி பற்றிய துயரம் நூகிற்குள் பெருகியது. “கெழவனுக்கு எதுல மச்சமோ” என முணுமுணுத்தவாறே அர்த்த மத்ஸ்யேந்திராசனத்திற்காக வலது குதிகாலை பிட்டத்தின் கீழ் வைத்தான்.
***
சொல் விளக்கம்:
சக்கு – சக் என்ற அறபி பதத்தின் திரிபு. இதன் பொருள் அய்யம்.
வாடா – பரு அரிசி மாவில் தட்டும் மூடியுமாக வெங்காய கறி உள்ளடக்கத்துடன் எண்ணெய்யில் பொறித்தெடுக்கப்படும் சிறு கடி.