கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஆத்ம ஆனந்தங்கள் – சையித் குதுப்

Loading

தூக்குக் கயிறு முகத்துக்கு நேரே தொங்கிக் கொண்டிருக்கிறது. அதன் வளையத்தைப் பார்த்து,

அதோ தெரிகிறது சொர்க்கம்! இரண்டடி பாய்ந்தால் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம்

என்றதோடு, கலிமா சொல்லித்தர வந்த மதகுருவை நோக்கி,

நீ லா இலாஹ இல்லல்லாஹ்வை சாப்பிடுகிறாய், நானோ அதற்காக மரணிக்கப் போகிறேன். தொழுகையில் கலிமதுஷ் ஷஹாதாவுக்காக எந்த விரலை உயர்த்தினேனோ அந்த விரலால் எழுதியதை ஒருபோதும் நான் திரும்பப் பெறப்போவதில்லை. என்னுடைய கருத்தாக இருந்தால் திரும்பப் பெறலாம், அல்லாஹ்வின் கருத்தை திரும்பப் பெறுவதற்கு எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

என்ற வரலாற்று வசனங்களின் சொந்தக்காரர்தான் ஷஹீத் சையித் குதுப். கொள்கைக்காக மரணத்தின் வாசற்படியில் மகிழ்ச்சியோடு காலடி எடுத்து வைத்தவர் அவர்.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்து, அதன் நடுப்பகுதியில் அல்-இஃக்வான் அல்-முஸ்லிமூன் இயக்கத்துடன் இணைந்து, ‘இறைமை அல்லாஹ்வுக்கே!’ என்று கூறிய ஒரே காரணத்திற்காக எகிப்தின் நாசர் அரசால் தூக்கிலேற்றப்பட்டவர். சிறையிலிருந்த காலத்தில் அவரது கொள்கையைத் தளர்த்தும்படி கேட்டு, அவருக்கு மிகவும் நெருக்கமான அவரது தங்கை ஹமீதா குதுபை இயக்கத்தினர் அவரிடம் அனுப்பி வைத்தனர். தனது மரணத்தை எண்ணி கலங்கிய தங்கைக்கு இலட்சிய அண்ணன் எழுதிய நீண்ட மடலிது.

 

– ஏ.பி.எம். இத்ரீஸ்

(தமிழாக்கம்: கலாநிதி பி.எம்.எம். இர்ஃபான்)

*****************

01

என் அன்புள்ள சகோதரிக்கு…

இங்கு என் மனவெழுச்சிகளை உனக்கு அர்ப்பணம் செய்கிறேன். மரணம் பற்றிய சிந்தனை உன்னிடம் அடிக்கடி தோன்றுவதை நான் காண்கின்றேன்.

எல்லா இடங்களிலும், எல்லாவற்றின் பின்புலத்திலும் அதையே நீ உருவகிக்கிறாய். வாழ்வையும் உயிரிகளையும் மூடி நிற்கின்ற ராட்சதச் சக்தியாக அதைக் கற்பனை செய்கிறாய். மரணத்தின் அருகில் வாழ்வை வைத்துப் பார்க்கும்போது, வாழ்வு என்பது அச்சமும் பீதியும் நிறைந்ததாக உனக்குத் தோன்றுகிறது.

ஆனால், நான் மரணத்தைப் பார்க்கிறேன். எங்கும் வியாபித்து நிறைந்திருக்கும் வாழ்வின் சக்திகளுக்கு அருகில் ஓர் அற்ப அம்சமாகவே அது எனக்குத் தெரிகிறது. வாழ்க்கை என்ற உணவுத் தட்டிலிருந்து சிந்தும் ஒரு பருக்கையைப் பொறுக்கி உண்பதைத் தவிர வேறெதனையும் அதனால் செய்துவிட முடிவதில்லை. பொலிவு நிறைந்த வாழ்வின் நீட்சி இதோ என்னைச் சூழ ஆர்ப்பரிக்கிறது.

ஒவ்வொரு பொருளும் வளர்ச்சியை, மலர்ச்சியை, பாய்ச்சலை நோக்கியே செல்கிறது. மனித, மிருகத் தாய்மைகள் கருவைச் சுமந்து பிரசவிக்கின்றன. மீன்களும் பூச்சிகளும் விலங்குகளும் முட்டையிட்டு வாழ்வைப் புஷ்பிக்கின்றன. கனிகளும் மலர்களும் கொண்ட மரங்களால் பூமி புன்னகைக்கிறது. வானம் மழை பொழிகிறது. கடல்கள் அலைகளாக உயர்ந்து கைதட்டுகின்றன.

பூமியின் ஒவ்வொரு பொருளும் வளர்கிறது, பெருகுகிறது. மரணமோ இடையிடையே பாய்ந்துவந்து வாழ்வென்ற உணவுத் தட்டிலிருந்து சிந்தும் பருக்கைகளைக் கவ்விச் செல்கிறது.

ஆனால், இதைச் சற்றும் கண்டு கொள்ளாமல் தன் வழியில் உயிரோட்டத்தோடு நகர்ந்து கொண்டே இருக்கிறது வாழ்க்கை. எதிர்பாராமல் மரணம் வந்து தன் உடலைத் தீண்டும்போது வாழ்க்கை சிலவேளை அலறலாம். ஆனாலும் அந்தக் காயம் விரைவிலேயே ஆறிவிடுகின்றது. வேதனைப் புலம்பல் ஆனந்தமயமாக மலர்கின்றது.

மனிதர்களும் விலங்குகளும் மீன்களும் பறவைகளும் பூச்சிப் புழுக்களும் புற்பூண்டுகளும் வாழ்தலால் பூமியை நிரப்பிக் கொண்டே இருக்கின்றன. மரணமோ காத்திருந்து வாழ்க்கையைத் தீண்டுகிறது. அல்லது, தட்டிலிருந்து சிந்தும் உணவுப் பருக்கையைக் கொத்திச் செல்கிறது.

சூரியன் உதித்து மறைகிறான். பூமி அவனை வலம் வருகிறான். இங்கும் அங்கும் வெளிப்படுகிறது வாழ்க்கை. ஒவ்வொன்றும் வளர்ச்சியை நோக்கி. வகை, முறை, எண்ணிக்கை ஆகிய அனைத்திலுமே.

மரணத்தால் எதையாவது சாதிக்க முடிந்திருந்தால், வாழ்வின் நீட்சி எப்போதோ நின்று போயிருக்கும். எங்கும் வியாபித்து நிறைந்திருக்கும் வாழ்வின் சக்திகளுக்கு அருகில் அது ஓர் அற்ப அம்சமே தவிர வேறில்லை.

நித்திய ஜீவன் அல்லாஹ்வின் ஆற்றலில் இருந்தல்லவா வாழ்வின் ஜீவிதம் முகிழ்த்திருக்கிறது?!

02

நமக்காக மட்டுமே நாம் வாழும்போது வாழ்வென்பது எளியதாகவும் குறுகியதாகவுமே தோன்றுகிறது. நம் வாழ்வு தொடங்கிய புள்ளியிலிருந்து நம் ஆயுள் முடியும் புள்ளியோடு அது வரையறுக்கப்பட்டு விடுகிறது.

ஆனால் பிறருக்காக, ஒரு சிந்தனைக்காக நாம் வாழும்போது அந்த வாழ்வு ஆழமும் நீளமும் கொண்டதாக மாறுகிறது. மனித இனத் தோற்றத்திலிருந்து ஆரம்பித்து இப்பூமியை விட்டு நாம் விடைபெற்ற பிறகும் கூட அது நீள்கிறது.

இது வெறும் அனுமானமன்று. ஏனெனில், இந்த அமைப்பிலான வாழ்வு பற்றிய பார்வை எமது நாட்களையும் மணிகளையும் நிமிடங்களையும் பன்மடங்காக்குகிறது. உண்மையில் ஆயுள் நீட்சி என்பது வயதின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுவதல்ல. உணர்வுகளின் திருப்தியில்தான் அது தீர்மானிக்கப்படுகிறது.

யதார்த்தவாதிகள் இதனைக் கற்பிதம் என்பர். ஆனால் அவர்கள் வைத்திருக்கும் பல யதார்த்தப் பெறுமானங்களை விட இது சிறந்த யதார்த்தமே.

வாழ்வு என்பது வாழ்தல் பற்றிய பிரக்ஞையே தவிர வேறில்லை. வாழ்தல் குறித்தான உணர்விலிருந்து ஒரு மனிதனைக் கழற்றிவிடுவதானது, அதன் உண்மைப் பொருளில் வாழ்விலிருந்தே அவனை கழற்றிவிடுவதுதான்.

தன் வாழ்வு பற்றி பன்மடங்கு உணர்வைப் பெறும் மனிதன் உண்மையில் பன்மடங்கு வாழ்கிறான். இது விவாதத்திற்கு அவசியமற்ற ஓர் எளிய உண்மை என்றே நான் நினைக்கிறேன். அடுத்தவர்களுக்காக வாழும்போது நமக்கு நாமே பன்மடங்கு வாழ்கிறோம். அடுத்தவர்கள் பற்றிய உணர்வைப் பெருக்கிக் கொள்ளும் அளவுக்கேற்ப நமது வாழ்வையே நாம் பெருக்கிக் கொள்கிறோம்.

03

தீமையின் வித்து வேகமாய் வளரலாம். ஆனால் நன்மையின் வித்தே நல்ல விளைவைத் தருகின்றது. தீய வித்து வானத்தை நோக்கி விரைவாக உயர்ந்தாலும் அதன் வேர்கள் மண்ணில் ஆழப்பதிவதில்லை. நல்ல விருட்சத்திற்கான உஷ்ணத்தையும் காற்றையும் அது தடுக்க முனைந்தாலும் நல்விருட்சம் அமைதியாக வளர்ந்து கொண்டேயிருக்கிறது.

நல்விருட்சத்தின் ஆழ்ந்த பிடிமானம் கொண்ட வேர்களே காற்றையும் உஷ்ணத்தையும் அதற்குப் பெற்றுக் கொடுக்கப் போதுமாகின்றன. தீய விருட்சத்தின் வெளிப்பகட்டை விட்டு உண்மையான சக்தியையும் உறுதியையும் சோதித்துப் பார்க்கும் போதுதான் அதன் பலவீனம் தெரியவருகிறது.

ஆனால் நல்விருட்சமோ சோதனைகளைத் தாங்கிக் கொள்கிறது. எந்தப் புயலுக்கும் தாக்குப் பிடிக்கின்றது. தீய விருட்சம் வீசும் முட்களையும் அழுக்குகளையும் பொருட்படுத்தாமல் அமைதியாக அது வளர்ந்து கொண்டேயிருக்கிறது.

04

மனித மனங்களில் நல்ல பகுதியை தேடிச் செல்லும்போது அங்கு ஏராளமான நன்மைகளைக் கண்டுகொள்கிறோம். சிலபோது முதற் பார்வையிலேயே அவை நமது கண்களுக்குத் தெரிவதில்லை. இந்த உண்மையை அனுபவப் பூர்வமாய் நான் உணர்ந்திருக்கின்றேன். பலரிடத்தில் அனுபவித்திருக்கிறேன். அவர்கள் வெளிப்படையில் மோசமானவர்களாய், உணர்ச்சியற்றவர்களாய்த் தென்பட்டாலும் கூட கொஞ்சம் அவர்களது தவறுகளையும் அறியாமையையும் மன்னிக்கக் கூடிய கருணை, கொஞ்சம் அவர்கள் மீதான உண்மையான அன்பு, கொஞ்சம் அவர்களது கவலைகள்-அபிலாஷைகள் மீதான செயற்கையற்ற அக்கறை இவை போதும் அவர்களது உள்ளத்திலுள்ள நன்மையின் ஊற்று திறந்து கொள்வதற்கு.

இதய சுத்தியோடும் உண்மையோடும் நீ கொடுத்த அந்தக் கொஞ்சத்திற்குப் பகரமாய், அன்பையும் பாசத்தையும் உனக்கு அவர்கள் காணிக்கையாக்குவார்கள்.

தீமை என்பது பல நேரங்களில் நாம் நினைப்பது போன்று மனித உள்ளத்தில் ஆழப்பதிந்த ஒன்றல்ல. நிலைத்து வாழ்தலுக்கான போராட்டத்திற்கு முகம் கொடுக்க மனிதர்கள் போர்த்தியிருக்கும் கடினமான மேற்தோலில்தான் அது ஒட்டியிருக்கிறது. போராட்டத்தில் அவர்கள் வென்றுவிட்டால் அந்த மேற்தோலும் விலகி சுவைமிக்க கனி வெளிப்படுகிறது. தான் நம்பிக்கைக்குரியவன் என்று அவர்களை உணரச்செய்பவனால் மட்டுமே இந்தக் இனிய கனியைச் சுவைக்க முடியும்.

அவன் காட்டுகிற அன்பும், அவர்களது வாழ்க்கைப் போராட்டங்கள், வேதனைகள், தவறுகள், அறியாமைகள் குறித்து அவன் காட்டும் அக்கறையும் உண்மையானவை என்று அவர்கள் உணர வேண்டும். ஆரம்பத்திலேயே நாம் காட்டுகின்ற சிறிது மனவிசாலம் மூலமாக இவை அனைத்தையும் சாதித்துக்கொள்ள முடியும். இதை நான் அனுபவித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறேன். எனவே இவை வெறுமனே இறக்கை கட்டிவந்த வார்த்தைகளன்று. என் கனவுகளின், கற்பனைகளின் குழந்தைகளுமன்று.

05

அன்பும் கனிவும் எம் உள்ளத்தில் வேர்விடுகின்றபோது சுமைகளும் கஷ்டங்களும் உள்ளத்தைவிட்டு நீங்கிவிடுகின்றன. அப்போது அடுத்தவர்களைப் புகழ்வதற்கு எமக்கு முகஸ்துதி வேண்டியதில்லை. ஏனெனில், இதய சுத்தியோடும் உண்மையோடுமே நாம் அவர்களைப் புகழ்கிறோம். இத்தகைய உண்மை எம்மிடம் உள்ளபோதுதான் மனித மனங்களில் இருக்கும் நன்மைகளின் புதையல்களை, புகழத்தக்க நல்லியல்புகளைக் கண்டுகொள்ள முடிகிறது.

எந்த மனிதனிடமும் ஒரு புகழ்வார்த்தையை அவனுக்குப் பெற்றுக்கொடுக்கின்ற நல்ல பக்கமொன்று அல்லது நல்லியல்பு இல்லாமல் போய்விடுவதில்லை. ஆனால், அன்பு விதை எம் உள்ளங்களில் வளராதபோது அதைக் கண்டுகொள்வது சாத்தியமற்றதாகி விடுகிறது. அடுத்தவர்கள் மீதான எந்தக் கடமைப்பாட்டையும் நாம் எமது உள்ளத்தின் மீது சுமத்தி வருத்த வேண்டியதில்லை.

அவர்களது தவறுகளையும் அறியாமைகளையும் சகித்துக்கொள்ளும் சிரமத்தையும் கூட அதன் மீது திணிக்கத் தேவையில்லை. ஏனென்றால், குறைபாடுகளையும் பலவீனங்களையும் சேர்த்தே அவர்களை நாம் நேசிக்கிறோம். பாச வித்து நம் உள்ளத்தில் வளருகின்றபோது குறைகளைத் தேடிக் கொண்டிருக்க மாட்டோம்.

காழ்ப்புணர்வோ எச்சரிக்கையுணர்வோ கூட நம்மை அழுத்த வேண்டியதில்லை. ஏனெனில், நன்மை நம் இதயத்தில் போதுமானளவு வளராத போதுதான் அடுத்தவர்கள் மீது காழ்ப்புணர்வு கொள்கிறோம். நன்மையின் மீதான நம்பிக்கைக் குறைவால்தான் அடுத்தவர்களிடம் நாம் அச்சம் கொள்கிறோம். அன்பும் கனிவும் அருளும் நம் உள்ளத்தில் வேர்விடும் அந்தப் பொழுதில், அடுத்தவர் மீது அந்த அன்பையும் கனிவையும் நம்பிக்கையையும் நாம் பாய்ச்சுகின்ற அந்தப் பொழுதில், எத்தனை நிம்மதியும் அமைதியும் காண்கிறோம்!

06

அடுத்த மனிதர்களைவிட நாம் பக்குவமான ஆன்மா கொண்டவர்கள், சுத்தியான இதயம் கொண்டவர்கள், விரிந்த உள்ளம் கொண்டவர்கள், கூரிய அறிவு கொண்டவர்கள் என்ற உணர்வுநிலையின் காரணமாக அவர்களிடமிருந்து ஒதுங்கிவிடும்போது பெரிதாக எதையும் நாம் சாதிக்கப் போவதில்லை. ஏனென்றால், அதன் மூலம் சிரமங்கள் குறைந்த, இலகுவான பாதையையே நாம் தேர்ந்தெடுக்கிறோம். உண்மையான பெருந்தன்மை என்பது அப்படி வருவதன்று.

விரிந்த ஆன்மாவோடு, தவறையும் பலவீனத்தையும் கண்டு இரங்குகின்ற கனிவோடு அடுத்த மனிதர்களோடு பழகுவதும் அவர்களைக் கவனிப்பதுமே உண்மையான பெருந்தன்மையாகும். அவர்களைப் பண்படுத்தி, தூய்மைப்படுத்தி, முடிந்த அளவு நம் கருத்துக்கு உயர்த்துவதற்கான போலியற்ற விருப்பத்தை அதுவே பிரதிபலிக்கிறது. இதன் பொருள் எம் உயர்ந்த பெறுமானங்கள், இலட்சியங்கள் ஆகியவற்றிலிருந்து விலகிவிடுவதோ, அல்லது அடுத்த மனிதர்களோடு முகஸ்துதி பாராட்டி அவர்களது துர்க்குணங்களைப் புகழ்வதோ, அல்லது அவர்களை விட நாம் உயர்ந்து நிற்பவர்கள் என்று உணரச்செய்வதோ அன்று.

இத்தகைய முரண் நிலைகளுக்கு மத்தியில் நாம் காணும் இணக்கமும், அது வேண்டிநிற்கும் சிரமத்தைப் பரந்த மனத்தோடு ஏற்பதுமே உண்மையான பெருந்தன்மையாகும்.

07

 நாம் ஒரு குறிப்பிட்டளவு பலமடைந்து விட்டபோதும், அடுத்தவர்களின் உதவியைப் பெற்றுக் கொள்வதால் எந்தக் குறையும் எமக்கு  ஏற்பட்டுவிடப் போவதில்லை என்று நாம் உணர வேண்டும். அவர்கள் எம்மை விடப் பலம் குறைந்தவர்களாக இருந்தாலும் சரியே. நாம் பெறும் உயர்வுக்கு அடுத்த மனிதர்களின் உதவி காரணமாக அமைவது எமது அந்தஸ்தை எந்த விதத்திலும் பாதித்துவிடாது என்ற உணர்வுதான் எம்மிடம் இருக்க வேண்டும்.

ஆனால் நாமோ ஒவ்வொரு விடயத்தையும் தனியாக நின்று செய்யவே முயல்கிறோம். அடுத்தவர்களின் உதவியைப் பெறுவதிலிருந்து தவிர்ந்து கொள்கிறோம். அவர்களது முயற்சியை எமது முயற்சியோடு சேர்த்துக்கொள்ள சங்கடப்படுகிறோம். நாம் அடையும் வளர்ச்சிக்கு அடுத்தவர் உதவியும் ஒரு காரணம் என்று மக்கள் அறிந்துகொள்வதை நாம் தாழ்வாகவே உணர்கிறோம்.

நமக்கு நம் மீதே பெரியளவு நம்பிக்கை இல்லாதபோதுதான் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறோம். நம்மிடம் ஏதோவொரு பலவீனம் இருப்பதையே இது காட்டுகிறது.

உண்மையான பலசாலியாக இருக்கும்போது இத்தகைய உணர்வுநிலைகளுக்கு நாம் ஆட்பட மாட்டோம். சிறு குழந்தைதான் அது நடக்கப் பழகும்போது பிறர் உதவிக்காக நீட்டும் கையையும் தட்டிவிடுகிறது.

நாம் ஒரு குறிப்பிட்டளவு பலமடையும்போது அடுத்தவர்களின் உதவியை மகிழ்வோடும் நன்றியுணர்வோடும் வரவேற்க வேண்டும். நன்றி அவர்கள் உதவிக்கானது. மகிழ்ச்சி நாம் நம்பும் சிந்தனையை இன்னும் பலர் நம்பி அதில் பங்கெடுக்கிறார்கள் என்பதற்கானது. உணர்வுப் பரிமாறலின்போது கிடைக்கின்ற ஆனந்தமே கட்டற்ற தூய ஆனந்தமாகும்.

08

எமது சிந்தனைகளையும் நம்பிக்கைகளையும் நாம் பதுக்கியே வைக்கிறோம். அவற்றில் பிறர் கன்னமிடும்போது கோபமடைகிறோம். அவை எமக்குரியவை என்பதை நிரூபிக்க அதிக பிரயத்தனம் எடுக்கிறோம்.

இப்படி நாம் செய்யக் காரணம், அச்சிந்தனைகளையும் நம்பிக்கைகளையும் பற்றிய விசுவாசம் எம்மிடமே பெரியளவு இல்லாததுதான். எமது உள்ளத்தின் அடியிலிருந்து அவை ஊற்றெடுக்காதபோது, எம்மை விடவும் அவை நமக்கு நேசத்துக்கு உரியவையாக இல்லாத போதுதான் நாம் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறோம்.

தூய ஆனந்தமென்பது நாம் உயிரோடிருக்கும் போதே நமது சிந்தனைகளும் நம்பிக்கைகளும் அடுத்தவர் சொத்தாக மாறிவிடுவதைக் காணும்போது இயல்பாக வருவதாகும். அந்த நம்பிக்கைகளும் சிந்தனைகளும் நாம் மறைந்த பிறகாவது அடுத்த மனிதர்களுக்குப் பயன்படும் என்ற ஆறுதலும் திருப்தியும் மகிழ்ச்சியுமே எம் உள்ளத்தை நிரப்பப் போதுமானதாகும்.

வியாபாரிகள்தான் தங்கள் பொருட்களின் வியாபார முத்திரையில் கவனமாயிருப்பார்கள். தமக்குரிய நற்பெயரையும் இலாபத்தையும் அடுத்தவர் அபகரித்துக் கொள்ளாதிருக்க அவர்கள் அப்படி நடந்து கொள்வார்கள். ஆனால், சிந்தனையாளர்களதும் கொள்கைவாதிகளதும் ஆனந்தமே, அவர்களது சிந்தனையையும் கொள்கையையும் மக்கள் பங்குபோட்டுக் கொள்வதைப் பார்க்கும்போது, அவற்றை மக்கள் தம் சொந்தப் பெயர்களோடு இணைத்துச் சொல்லுமளவு விசுவாசிப்பதைக் காணும்போதுதான் ஏற்படுகிறது.

அந்த நம்பிக்கைகளுக்கும் சிந்தனைகளுக்கும் சொந்தக்காரர்கள் தாம் மட்டுமே என்று இத்தகைய மாமனிதர்கள் எண்ணமாட்டார்கள். அவற்றைப் பிறருக்கு நகர்த்துகின்ற, விளக்குகின்ற வெறும் ஊடகங்களாகவே அவர்கள் தங்களைக் கருதுவர். தாம் கொண்டுள்ள நம்பிக்கைகளுக்கும் சிந்தனைகளுக்குமான மூலஊற்று தங்கள் சொத்தல்ல என்ற உணர்வு அவர்களிடம் இருக்கும். அந்த அடிப்படை ஊற்றோடு தங்களுக்கிருக்கும் உறவில் கிடைக்கக் கூடிய திருப்தி மட்டுமே அவர்களது தூய ஆனந்தத்துக்குப் போதுமாகின்றது.

09

 உண்மைகளை விளங்கிக் கொள்ளல், உண்மைகளை அடைந்து கொள்ளல் ஆகிய இரண்டுக்குமிடையிலான வேறுபாடு மிகப் பெரியது. முதல் வகை அறிவு. இரண்டாவது வகை ஞானம்.

முதலாவதில் வார்த்தைகளோடும் வெறும் அர்த்தங்களோடும் அல்லது அனுபவங்களோடும் துண்டுதுண்டான பெறுபேறுகளோடுமே உறவாடுகிறோம். இரண்டாவதிலோ உயிர் ததும்பும் விளைவுகளோடும் முழுமையான முடிவுகளோடும் உறவாடுகிறோம்.

முதலாவது தகவல்கள் வெளியிலிருந்து வந்து எமது பகுத்தறிவில் நிலைகொள்வது. இரண்டாவது உண்மைகள் எம் அடையாளங்களிலிருந்து பிரவாகமெடுத்து எமது நாடி நரம்புகளில் இரத்தத்தோடு கலந்து நிற்பது. அவற்றின் ஜுவாலைகள் நம் மெய்மையோடு அத்வைதம் அடைந்து விடுவது.

முதலாவதில் துறைகளும் தலைப்புகளுமே இருக்கும். அறிவுத்துறையும் அதன் கீழ் பல்வேறுபட்ட தலைப்புகள்; மார்க்கத்துறையும் அதன் கீழ் பல்வேறுபட்ட தலைப்புகள், பிரிவுகள், தொகுதிகள்; கலைத்துறையும் அதன் கீழ் அக்கோட்பாடு பற்றிய விளக்கங்கள், வியாக்கியானங்கள் என்று அவை அமைகின்றன.

இரண்டாவதிலோ மிகப்பெரும் பிரபஞ்ச சக்தியோடு தொடர்பு கொண்ட ஒரு சக்தியே தொழிற்படும். மூலஊற்றோடு சங்கமிக்கின்ற கிளை ஊற்றாக அது இருக்கும்.

10

மானிடக் கலைகளின் ஒவ்வொரு துறையிலும் சிறப்புத் தேர்ச்சி கொண்டோர் எமக்கு அவசியம் தேவைப்படுகின்றனர். இத்தகையோர் தங்கள் பணிமனைகளை ஆசிரமங்களாகவும் பாணசாலைகளாகவும் எடுத்துக்கொண்டு தாம் தெரிவு செய்திருக்கும் துறைக்காக வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும்.

தியாகச் சிந்தையோடன்றி, தனது ஆன்மாவை மகிழ்வோடு தன் கடவுளுக்குக் காணிக்கையாக்குகின்ற ஒரு பக்தனின் இன்ப உணர்வோடு வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும். எனினும் வாழ்வின் திசையைத் தீர்மானிப்போர் அல்லது மனித சமூகத்திற்கான பாதையைத் தெரிவு செய்வோர் இவர்களல்லர் என்ற புரிதலும் எம்மிடம் இருப்பது அவசியமாகும்.

ஒப்பற்ற ஆத்ம பலம் கொண்டோரே எல்லாக் காலத்திலும் மனித இனத்தின் வழிகாட்டிகளாய் இருந்து வந்திருக்கின்றனர்; இருக்கவும் போகின்றனர். இவர்கள் ஏந்திநிற்கும் புனித நெருப்பில்தான் அனைத்து அறிவியல்களும் புடம் போடப்படுகின்றன. அதன் வெளிச்சத்தில்தான் பயணத்திற்கான வழித்தடம் தெளிவாகிறது. அதுதான் மிக உன்னத இலட்சியத்தை நோக்கிய நகர்வைத் தயார் செய்கிறது.

இத்தகைய முன்னோடிகளே தங்கள் ஞானப்பார்வையால் அறிவு, கலை, நம்பிக்கை, உழைப்பு ஆகிய அனைத்திலும் வெளிப்பட்டு நிற்கும் முழுமைபெற்ற அந்த ஒருமையைத் தரிசிக்கின்றனர். எனவே, இவற்றில் எதையும் அவர்கள் இழிவாக நோக்குவதில்லை. எதையும் அதன் தரத்திற்கு மேல் உயர்த்துவதுமில்லை. எளிய மனிதர்களே வேறுபட்ட வெளிப்பாடு கொண்ட இந்தத் துறைகளுக்கு இடையில் ஒரு முரண்பாடு இருப்பதாக நம்புகிறார்கள்.

அதனால்தான் மார்க்கத்தின் பெயரால் அறிவியலையும் அறிவியலின் பெயரால் மார்க்கத்தையும் எதிர்க்கிறார்கள். உழைப்பின் பெயரால் கலையையும் சூஃபித்துவ நம்பிக்கையின் பெயரால் உயிர் ததும்பும் முன்னோக்கிய பாய்ச்சலையும் இழிவாக நோக்குகிறார்கள். முழுப் பிரபஞ்சத்தையும் மூடிநிற்கும் பிரம்மாண்டமான சக்திகளின் ஒரே ஊற்றிலிருந்து வெளிப்படுகின்ற இந்த அம்சங்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறானவை என்று நம்புவதே இதற்குக் காரணம்.

ஆனால் மகோன்னத மனிதர்கள் இந்த ஒருமைப்பாட்டை அறிவார்கள். அதே மூல ஊற்றோடுதான் அவர்களும் தொடர்பு வைத்திருக்கிறார்கள். அதிலிருந்துதான் அவர்களும் பெறுகிறார்கள். இத்தகைய மகான்கள் மனித வரலாற்றில் மிக அரிதாகவே தோன்றுகின்றனர். எனினும் அவர்களே போதுமாகவும் இருக்கின்றனர். ஏனெனில், இப்பிரபஞ்சத்தைக் கண்காணிக்கும் அந்த ஒரே சக்திதான் இவர்களைச் சிருஷ்டிக்கிறது. அவசியம் என்று தீர்மானிக்கப்பட்ட பொழுதில் உலகுக்கு அனுப்பி வைக்கிறது.

11

பௌதீக உண்மைகளுக்கு மாற்றமான நிகழ்வுகளுக்கும் மறைவான சக்திகள் குறித்தான நம்பிக்கைகளுக்கும் முழுமையாக அடிமைப்பட்டு விடுவது அபாயகரமானது. ஏனெனில், அது மூட நம்பிக்கையை நோக்கியே நம்மைச் செலுத்தும். முழு வாழ்வையும் ஒரு பெரும் யூகமாக மாற்றிவிடும்.

இந்த அம்சங்களை முற்றாக மறுதலித்து விடுவதும் அதே போன்று அபாயமானதே. ஏனெனில், இவ்வாறான மறுதலிப்பு மறைவான உலகத்தின் ஜன்னல்களை எம்முன் மூடிவிடுகின்றது. வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் மானிடப் புரிதலுக்கு உட்படாது நின்ற ஒரே காரணத்திற்காகக் கட்புலனாகாத அனைத்து சக்திகளையும் அது நிராகரிக்க வைத்து விடுகின்றது.

இந்நிலையில் இப்பிரபஞ்சம் அதன் பருமனாலும் சக்தியாலும் பெறுமானத்தாலும் சுருங்கிவிடுகிறது. ‘அறியப்பட்ட’ உலகோடு மட்டும் அது வரையறைப்பட்டு விடுகிறது. ஆனால், இப்பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத் தன்மையுடன் ஒப்பிடும்போது மிக மிகச் சொற்பமானது இந்த அறியப்பட்ட உலகம். இப்பூமியில் மனித வாழ்வு தனது நீண்ட பாதையில் முன்னோக்கி நகர்ந்த போதெல்லாம், பிரபஞ்ச சக்திகளை அறிந்துகொள்வது குறித்த இயலாமையினதும் இயலுமையினதும் சங்கிலித் தொடராகவே அது இருந்து வந்திருக்கிறது.

கடந்த நிமிடம் வரை தனக்குப் புரியாதிருந்த, தனது அறிவுக்கு அப்பாற்பட்டிருந்த ஒவ்வொரு பிரபஞ்ச சக்தியையும் ஒரேயொரு பொழுதில் கண்டுகொள்கின்ற மனித ஆற்றலே அவனது ஞானக்கண்ணைத் திறக்கப் போதுமானது. தன் அறிவுக்குத் தட்டுப்படாத இன்னும் பல சக்திகள் இருப்பதையும், தான் இன்னும் பரிசோதனைக் கட்டத்திலேயே இருப்பதையும் அந்த ஞானக்கண் மூலம் அவன் உணர்ந்து கொள்கிறான்.

இந்த வகையில், மறை உலகுக்குக் கொடுக்க வேண்டிய அந்தஸ்தைக் கொடுத்து விடுவதே மனிதப் பகுத்தறிவுக்குக் கௌரவமானதாகும். மூட நம்பிக்கையாளர்கள் செய்வது போல் நம் அனைத்து விடயங்களையும் அந்த மறை உலகிடம் ஒப்படைத்து விடுதல் என்பது இதன் பொருளல்ல. இப்பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத் தன்மையை அதன் உண்மைத் தோற்றத்தில் ஏற்றுக் கொள்வதும், பரந்த இந்த அண்டப் பெருவெளியில் எமக்குரிய இடம் என்ன என்பதை அறிந்து கொள்வதுமே இதன் பொருளாகும்.

இத்தகைய நிலைப்பாடு மனித ஆன்மாவுக்கு முன்னால் ஞானத்துக்கான பல வாசல்களைத் திறந்து விடுகின்றது. இப்பிரபஞ்சத்தோடு தன்னைப் பிணைக்கும் உள்ளகக் கட்டுமானங்கள் பற்றிய சிந்தனையை அதனிடம் தூண்டுகிறது.

இந்த அம்சங்கள் பகுத்தறிவின் மூலமாக இன்றுவரை மனிதன் அடைந்து கொண்ட அனைத்தையும் விடச் சந்தேகமின்றி ஆழமானவை, பாரியவை. தினமும் ஒரு மறைவான அம்சத்தை நாம் புதிதாகக் கண்டுபிடிக்கிறோம். தொடர்ந்தும் அத்தகைய அம்சங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மையே இதற்குப் போதுமான சான்றாகும்.

12

அல்லாஹ்வின் எல்லையற்ற மகத்துவத்தை ஏற்றுக் கொள்வதானது மனிதனின் பெறுமதியைக் குறைப்பதாகவும் பிரபஞ்சத்தில் அவன் வகிக்கும் அந்தஸ்தைச் சிறுமைப்படுத்துவதாகவும் அமைகிறது என்று கருதுவோரும் இன்று இருக்கவே செய்கின்றனர். ஏதோ அல்லாஹ்வும் மனிதனும் தத்தமது மகத்துவத்தையும் பலத்தையும் ஸ்தாபித்துக்கொள்ளப் போட்டி போடும் இரு சம எதிர்ச் சக்திகள் என்பது போல!

அல்லாஹ்வின் எல்லையற்ற மகத்துவம் பற்றிய உணர்வு எம்மிடம் அதிகரிக்கும் போதெல்லாம் அந்த மகத்தான கடவுளின் சிருஷ்டி என்ற வகையில் எமது மகத்துவமும் அதிகரிக்கிறது என்றே நான் உணர்கிறேன்.

கற்பனையில் கடவுளைத் தாழ்த்தி நோக்கும்போது அல்லது நிராகரிக்கும்போது தாம் உயர்வடைவதாகக் கருதுபவர்கள் உண்மையில் குறுகிய பார்வை கொண்டவர்கள். கண்களுக்கு முன்னால் தெரிகின்ற தொடுவானத்துக்கு அப்பால் இவர்களின் பார்வை நீள்வதில்லை.

‘மனிதன் தன் பலவீனம், இயலாமை என்பவற்றின் காரணமாகவே கடவுளிடம் அடைக்கலம் புகுந்தான். ஆனால், இப்போது கடவுளின் தேவையற்ற அளவுக்கு அவன் சக்தி பெற்றுவிட்டான்’ என்று இவர்கள் கருதுகிறார்கள்.

‘பலவீனம் அறிவுக் கண்ணைத் திறக்காது. அதேவேளை பலம் அதனை குருடாக்கிவிடும்’ என்ற பொருளையே இது தருகிறது. மனிதனின் பலம் அதிகரிக்கும் போதெல்லாம் அல்லாஹ்வின் அளவிறந்த மகத்துவம் பற்றிய உணர்வைத் தன்னிடம் அவன் வளர்த்துக் கொள்வதே நியாயமானதாகும்.

ஏனென்றால், அறிதலின் மீதான அவனது ஆற்றல் அதிகரிக்கும் போதெல்லாம் அந்த ஆற்றலின் மூலத்தைக் கண்டு கொள்வதும் அவனுக்கு அதிகமதிகம் சாத்தியமாகிறது. அல்லாஹ்வின் அளவற்ற மகத்துவத்தை விசுவாசிப்போர் தங்கள் உள்ளங்களில் இழிவையோ பலவீனத்தையோ உணரமாட்டார்கள். இப்பிரபஞ்சத்தை ஆட்கொண்டிருக்கும் அந்த மாபெரும் சக்தியைச் சார்ந்திருப்பதன் காரணமாக உறுதியையும் கண்ணியத்தையுமே அவர்கள் உணர்வார்கள்.

தங்கள் மகத்துவம் என்பது இப்பூமியின் மீதும், சூழவிருக்கும் மனிதர்கள் மத்தியிலும்தான் என்ற வகையில், அது அல்லாஹ்வின் பிரபஞ்சம் தழுவிய கட்டற்ற மகத்துவத்தோடு மோதுவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.

தங்களைத் தாங்களே பலூன்களாக ஊதிக் கொள்வோருக்கு இந்த உணர்வுநிலை கிடைப்பதில்லை. இந்தப் பலூன்களின் வீக்கம் உலகத்தைப் பார்க்க விடாது கண்களை மறைத்து விடுகிறது.

13

 சில வேளைகளில் விடுதலை என்ற போர்வைக்குள் அடிமைத்தனம் மறைந்து கொள்கிறது. இத்தகைய விடுதலையானது மரபுகள், வழக்காறுகள், மனித இனம் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற நியதிகள் போன்ற அனைத்து விதத் தளைகளிலிருந்துமான விடுதலையாகவே தோற்றம் காட்டும். உண்மையில் இழிவு, பலவீனம், ஒடுக்குதல் ஆகிய விலங்குகளிலிருந்து விடுபடுவதற்கும், மனிதத்துவத்தின் கட்டுகளிலிருந்து விடுபடுவதற்குமிடையில் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு.

முதல் வகை விடுதலையே உண்மையான சுதந்திரமாகும். இரண்டாவது வகை விடுதலையோ மனிதனை மனிதனாக மாற்றி மிருகத்தனத்தின் பாரதூரமான தளைகளிலிருந்து அவனை விடுவிக்கக்கூடிய அடிப்படை பெறுமானங்களையே துறந்து விடுவதாகும். இவ்வாறான துறத்தல் நிச்சயமாய் ஒரு கடிவாளமிட்ட சுதந்திரமே.

ஏனெனில், இது அதன் உண்மைப் பொருளில், மிருகத்தனமான இச்சைகளுக்குப் பணிதலாகவும் அடிமைப்படலாகவுமே மாற்றம் பெறுகிறது. இத்தகைய இச்சைகளின் மூச்சுத் திணற வைக்கும் தளைகளிலிருந்து விடுபட்டு, சுதந்திரமான மனிதத்துவப் பெருவெளிக்கு வந்து விடுவதற்கான போராட்டத்திலேயே மனித இனம் தனது நீண்ட ஆயுளைக் கடத்தியிருக்கிறது.

மனிதன் தனது அவசியத் தேவைகளை வெளிப்படுத்த வெட்கப்பட வேண்டியதில்லை. எனினும் இத்தகைய தேவைகளோடு உயர்ந்து நிற்பதுதான் மனிதத்துவப் பெறுமானங்களில் முதன்மையானது என்பதுவும், இத்தேவைகள் ஏற்படுத்துகின்ற தளைகளிலிருந்து விடுபடுதலே சுதந்திரம் என்பதுவும் மனித இனத்தின் இயல்பான உணர்வுநிலையாகும்.

இரத்தமும் சதையும் உண்டுபண்ணும் தூண்டல்களை மிகைத்தலும், இழிவும் பலவீனமும் ஒடுக்குதலும் உருவாக்கி விடும் அச்சங்களை மிகைத்தலும் மனிதத்துவத்தின் பொருளை உறுதிப்படுத்துவதில் சமமே என்பது அதன் நம்பிக்கை.

14

மனிதர்களிலிருந்து விலகிநிற்கின்ற கொள்கைகளைப் பற்றிய கவிதையை நான் விசுவாசிப்பதில்லை. உத்வேகமும் உஷ்ணமும் கொண்ட நம்பிக்கைக் கோட்பாடொன்றைக் கொண்டிராத கொள்கை என்ன கொள்கை? இத்தகைய நம்பிக்கைக் கோட்பாடொன்று ஒரு மனிதனின் உள்ளத்திலில்லாமல் வேறெங்கு வாழ முடியும்?

உத்வேகமிக்க நம்பிக்கைக் கோட்பாடற்ற கொள்கைகளும் சிந்தனைகளும் உள்ளீடற்ற வெற்று வார்த்தைகளாகவோ உயிரற்ற பொருட்களாகவோதான் இருக்கும். ஒரு மனிதனின் உள்ளத்திலிருந்து சுடர்விடும் ஈமானியக் கிரணங்களால் மட்டுமே இவற்றை உயிர்ப்பிக்க முடியும். நம்பிக்கைக் கிரணங்கள் சுடர்விடும் உள்ளத்தில் தோன்றாமல், குளிர்ந்து உறைந்துபோன மூளையிலிருந்து கிளைக்கும் சிந்தனையை அல்லது கொள்கையை அடுத்தவர்கள் விசுவாசிக்கவே மாட்டார்கள்.

உனது சிந்தனையை முதலில் நீ நம்பு. உயிர்த்துடிப்பு மிக்கதொரு நம்பிக்கைக் கோட்பாடாக அதை விசுவாசி. அப்போது மட்டுமே அடுத்தவர்களும் அதனை விசுவாசிப்பார்கள். இல்லையெனில், உயிரோ ஆன்மாவோ அற்ற வெறும் வார்த்தை ஜாலமாக அது நின்றுவிடும். மனித ஆன்மாவோடு ஒன்றிக்காத, மனித உருவத்தில் பூமியில் நடமாடாத எந்தவொரு சிந்தனையும் நிலைத்து வாழ்வதில்லை.

புனிதத்தோடும் உண்மையோடும் விசுவாசிக்கத் தகுந்த சிந்தனையொன்றைத் தன் உள்ளத்தில் நிரப்பிக் கொள்ளாத மனிதனின் இருப்புக்கும் எந்தப் பொருளுமில்லை. சிந்தனையையும் மனிதனையும் பிரித்துப் பார்ப்பதென்பது, உடலையும் ஆன்மாவையும் அல்லது சொல்லையும் பொருளையும் பிரித்துப் பார்ப்பது போன்றது. சிலபோது இது சாத்தியமற்றதாக அமையும். இன்னும் சிலபோது அழிதற் பொருளைத் தரும்.

நிலைத்து வாழக்கூடிய எந்தவொரு சிந்தனையும் யாரோ ஒரு மனிதனின் உள்ளத்தை இரைகொண்டே வந்திருக்கிறது. இப்பரிசுத்த இரையைச் சுவைக்காத சிந்தனைகள் மரணித்தே பிறக்கின்றன. மானிடச் சமூகத்தை ஒரு சாண் அளவாவது இவற்றினால் முன்தள்ள முடிவதில்லை.

15

 தீய வழிமுறையை பயன்படுத்தி நல்ல இலக்கொன்றை அடைவதென்பதைக் கற்பனை செய்யவே எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. நல்ல இலட்சியம் நல்ல மனிதனின் உள்ளத்தில்தான் வாழும். தீய வழிமுறையை இந்த நல்ல உள்ளத்தால் எப்படிச் சகிக்க முடியும்?

சென்றடைய வேண்டிய இலக்கு சேற்றினால் சூழப்பட்டிருக்கும்போது பாதங்களில் சேறுபடிவது நிச்சயம். பாதையிலிருக்கும் அழுக்கு நம் பாதங்களிலும், பாதம் படும் இடங்களிலும் தன் அடையாளங்களை ஏற்படுத்தவே செய்யும்.

இவ்வாறுதான் தீய வழிமுறையைப் பின்பற்றுகிறபோது, அதன் அழுக்கு ஆன்மாக்களில் ஒட்டிக்கொண்டு தன் அடையாளங்களைப் பதித்து விடுகின்றது. இறுதியில் நாம் சென்றடையும் இலட்சியத்திலும் கூட இந்த அழுக்கு படிந்துவிடுகின்றது. வழிமுறை என்பது ஆன்மாவின் கணிப்பீட்டில் இலட்சியத்தின் ஒரு பகுதியாகும். ஏனெனில், ஆன்மாவின் உலகத்தில் வேறுபாடுகளோ பிரிவுகளோ இல்லை.

சாதாரண மனித உணர்வு கூட ஒரு நல்ல இலட்சியத்தைப் புரிந்து கொண்டு விட்டால் அதனை அடைவதற்குத் தீய வழிமுறையைப் பயன்படுத்துவதனைச் சகித்துக் கொள்ளாது. அத்தகையவொரு முடிவுக்கு இயல்பாக அது சென்றடைவதுமில்லை.

‘இலட்சியம் வழிமுறையை நியாயப்படுத்தும்’ என்பது மேற்குலகின் பெரிய தத்துவம். ஏனெனில், மேற்குலகம் தன் பகுத்தறிவால் மட்டுமே வாழ்கிறது. பகுத்தறிவின் பார்வையில் இலட்சியங்களுக்கும் வழிமுறைகளுக்கும் இடையில் வேறுபாடுகளும் பிரிவுகளும் தென்படுவது சாத்தியமே.

16

அடுத்தவர் உள்ளத்தில் ஆறுதல், திருப்தி, உறுதி, நம்பிக்கை, மகிழ்ச்சி போன்றவற்றை ஏற்படுத்த முடியும்போது நாம் பெறும் களங்கமற்ற அந்த ஆத்ம இன்பத்துக்கு நிகராக இந்த வாழ்வில் எதுவுமே இல்லை என்பதை அனுபவபூர்வமாக நான் உணர்ந்திருக்கின்றேன். அது தெய்வீகம் சார்ந்தவோர் அற்புத இன்பம். பூமி சார்ந்த எந்த அம்சத்திலும் அதைக் காண முடிவதில்லை.

எம் இயல்புடன் ஒன்றித்து நிற்கின்ற தூய ஆன்மீக உணர்வுடன் அது உறவாடுகிறது. புறநிலைப்பட்ட பரிசு எதனையும் அது எதிர்பார்ப்பதில்லை. ஏனெனில், அதற்குரிய பரிசு அதனுள்ளேயே அடங்கிக் கிடக்கிறது.

இந்த இடத்தில் எவ்விதத்திலும் இதனோடு தொடர்புபடாத அம்சமொன்றைச் சிலர் நுழைப்பதுண்டு. செய்யப்படும் உபகாரத்துக்கு அடுத்தவர் செய்யும் நன்றிக்கடன் பற்றிய அம்சமே அது. இத்தகைய நன்றியறிதலில் இருக்கின்ற சுய அழகையும், அது உபகாரம் செய்தோருக்குத் தருகின்ற மகத்தான மகிழ்ச்சியையும் நான் மறுக்க முயலவில்லை. ஆனால் அது முற்றிலும் வேறுபட்டதொரு விடயம்.

பிறர் நன்றி செலுத்தும்போது அவதானிக்கப்படும் அம்சம் யாதெனில், தான் செய்த நன்மைக்குப் புறவயப்பட்ட எதிரொலியொன்று அடுத்தவர் உள்ளத்தில் இருந்து வருவதைக் காண்பதால் ஒருவருக்கு ஏற்படும் ஆனந்தமாகும்.

இந்த ஆனந்தத்தின் பெறுமானமும், நான் கூறுகின்ற ஆனந்தத்தின் பெறுமானமும் மாறுபட்டவை. ஏனெனில், நான் கூறுகின்ற ஆனந்தம் அடுத்தவர் உள்ளத்தில் ஆறுதலை, திருப்தியை, உறுதியை, நம்பிக்கையை, மகிழ்வை ஏற்படுத்த முடிந்த அந்த நிமிடத்தில் அனுபவிக்கின்ற அகவயப்பட்ட ஆனந்தம். அதுதான் களங்களமற்ற தூய ஆனந்தம்.

எம் உள்ளத்திலிருந்தே ஊற்றெடுத்து, அங்கேயே மீண்டும் அது சென்றுவிடுகிறது. புறநிலையான எந்தத் தூண்டலும் அதற்குத் தேவைப்படுவதில்லை. தனக்குரிய பரிசை முழுமையாகத் தனக்குள்ளேயே அது பொதிந்து வைத்திருக்கிறது.

17

 மரணம் இப்போது வந்தாலும் நான் திடுக்கிட மாட்டேன்.

இந்த வாழ்க்கையில் நான் அதிகம் பெற்றிருக்கிறேன். அதாவது கொடுத்திருக்கிறேன். சில வேளைகளில் பெறுவதற்கும் கொடுப்பதற்கும் இடையில் வேறுபாடு காண்பது சிரமமாகிவிடுகிறது. ஏனெனில், இவ்விரு சொற்களுக்கும் ஆன்மாவின் உலகத்தில் பொருள் ஒன்றுதான். நான் கொடுத்த ஒவ்வொரு தடவையும் எடுத்துமிருக்கிறேன். யாரோ ஒருவர் எனக்குக் கொடுத்தார் என்பதல்ல. நான் யாருக்குக் கொடுத்தேனோ அவரது உள்ளத்தை எடுத்துக் கொண்டேன் என்பதே இதன் பொருள்.

கொடுத்ததன் மூலம் நான் பெற்ற மகிழ்ச்சி என்னிடமிருந்து எடுத்தவரின் மகிழ்ச்சியை விட எந்த விதத்திலும் குறைந்ததாக இருந்ததில்லை.

மரணம் இப்போது வந்தாலும் நான் திடுக்கிட மாட்டேன்.

என்னால் செய்யமுடிந்த அளவுக்குச் செய்திருக்கிறேன். ஆயுள் நீடித்தால் நான் செய்ய ஆசைப்படுகின்ற பல விடயங்கள் உள்ளன. அவை முடியாமற் போனாலும் கவலை என் உள்ளத்தை அரிக்கப் போவதில்லை. அடுத்தவர்கள் நிச்சயமாய் அவற்றைச் செய்வார்கள்.

நிலைத்து நிற்கத் தகுதிபெற்றிருந்தால், என்றுமே அவற்றுக்கு மரணமில்லை. இப்பிரபஞ்சத்தை அவதானித்துக் கொண்டிருக்கும் அந்தத் தெய்வீகக் கண்காணிப்பு, ஒரு நல்ல சிந்தனையைச் சாகவிடாது என்ற திருப்தி எனக்கிருக்கிறது.

மரணம் இப்போது வந்தாலும் நான் திடுக்கிட மாட்டேன்.

என்னால் முடிந்த அளவு நல்லவனாய் இருக்க முயன்றிருக்கிறேன். நான் விட்ட பிழைகளுக்காகவும் தவறுகளுக்காகவும் கைசேதப்படுகிறேன். அவற்றின் முடிவை அல்லாஹ்விடம் ஒப்படைத்து அவனது கருணையையும் மன்னிப்பையும் இறைஞ்சுகிறேன்.

அவன் தரும் முடிவுக்காக நான் கலங்கப் போவதில்லை. ஏனெனில், அது சத்தியத்தின்-நீதியின் முடிவு என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

என் செயல்களின் விளைவு எதுவாக இருந்தாலும், அதைத் தாங்கப் பழகிக் கொண்டுவிட்டேன். நான் விட்ட தவறுகளின் விளைவு அந்த விசாரணை நாளில் எனக்கு மோசமாக அமையப் போவதில்லை என்றே நம்புகிறேன்.

Related posts

One Thought to “ஆத்ம ஆனந்தங்கள் – சையித் குதுப்”

  1. Uka.Rahman

    அள்ளாஹ்வையும் மறுமையையும் றசூலையும் உண்மையாகவே நேசம் கொள்வோர் யாருக்கும் ஒருபோதும் பயப்பட மாட்டார்கள்.மரணம் அவருக்கு ஒரு நிலைமாற்றமேயன்றி வேறில்லை.

Leave a Comment