FIR முஸ்லிம்களுக்கு எதிரான திரைப்படமா?
மனு ஆனந்த் என்பவர் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் FIR. விஷ்ணு விஷால் நடிப்பில் ஒரு திரில்லர் படமாக இது வெளிவந்துள்ளது. இது அவ்வளவு ரசிக்கும்படியாகவோ நேர்த்தியாகவோ எடுக்கப்படவில்லை என்பதால் பார்வையாளர்களை எந்தளவுக்கு ஈர்க்கும் என்று தெரியவில்லை. ஆனால் முஸ்லிம்கள் மீது அச்சத்தை அதிகரிக்கச் செய்தல், ‘கெட்ட முஸ்லிம்களை’ அழித்தல் போன்றவை மூலம் அவர்களுக்கு ஒருவித கிளர்ச்சியூட்ட முயல்கிறது இப்படம்.
கதாநாயகனான இர்ஃபான் அஹ்மது (விஷ்ணு விஷால்) சென்னை ஐஐடியில் படித்து தங்கப் பதக்கம் பெற்ற ஒரு ரசாயனப் பொறியாளர். பெரும் கனவுகளுடன் ஒரு சிறு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அங்கிருந்துகொண்டு அவர் பல நிறுவனங்களில் வேலைக்காக விண்ணப்பிக்கிறார். எல்லா இடங்களிலும் அவரின் முஸ்லிம் பெயர் ஒரு பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. “நீங்கள் சமயப் பற்றுமிக்கவரா?” என்ற கேள்வி அவரைத் துறத்திக்கொண்டே இருக்கிறது. அவர் வேலை கிடைக்காத விரக்தியில் உழல்கிறார். அவரின் தாய் காவல்துறையில் பணிபுரிபவர்.
இப்படியாகத் தொடங்கும் கதை என்ஐஏ, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என்பதாக நகர்கிறது. பிறகு முழுக்கமுழுக்க இஸ்லாம் அச்சத்தை அழுத்தமாகப் பதிவு செய்யும் பல காட்சிகளும் கதாபாத்திரங்களும் திரைப்படம் நெடுக இடம்பெறுகின்றன. ஐஎஸ் தீவிரவாதிகளின் ஒரு முக்கியத் தலைவர் அபுபக்கர் அப்துல்லா தமிழ்நாட்டில் இருக்கிறார். அந்த மர்ம நபரைப் பிடிப்பது, தமிழகத்தை அழிவிலிருந்து மீட்பது என்ற மிஷனுடன் என்ஐஏ வேலை செய்கிறது. அதில் வெற்றி பெறுகிறார்களா, இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
இந்த FIR படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஜாஜி என்ற கதாபாத்திரம் மிக வெளிப்படையாக ஸாகிர் நாயக்கைக் குறிக்கிறது. டீவி சேனல் வைத்திருப்பது தொட்டு, அவர் சமயப் பேச்சாளராக இருப்பது, சமூக ஊடகத்தில் மில்லியன் கணக்கில் பின்பற்றாளர்களைக் கொண்டிருப்பது, தொண்டு நிறுவனம் வைத்திருப்பது, அவர் மலேசியாவில் குடியேற முனைவது போன்றவை வரை அந்தக் கதாபாத்திரம் ஸாகிர் நாயக்கைச் சுட்டுவதாக அமைகிறது. அவரின் பேச்சைக் கேட்டுதான் பலர் தீவிரவாதிகளாக உருவாகிறார்கள் என்ற அவதூறுப் பிரச்சாரத்தையும் பலமுறை இப்படம் பதிவு செய்கிறது. சிரியாவுக்கு அவர் ஆள் அனுப்புவது போல சித்தரிக்கப்படும் ஒரு காட்சியில், தீவிரவாதிகளை அவர் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்புவது போன்ற மனப்பதிவு நமக்கு ஏற்படுகிறது.
தேடப்படும் பயங்கரவாதி அபுபக்கர் அப்துல்லா என்று நினைத்து கதாநாயகன் இர்ஃபானை என்ஐஏ சித்திரவதை செய்கிறது. அதிலிருந்து தப்பித்து ஜாஜியின் மகன் ரியாஸிடம் சிக்குகிறார் நாயகன். ஒருகட்டத்தில் ஜாஜி தீவிரவாதியல்ல, அவரின் மகன்தான் ஐஎஸ் தீவிரவாதி என்று காட்டப்படுகிறது. அந்த கனத்தில் அபுபக்கர் அப்துல்லா இந்தப் பொடியன்தானா என்று பார்வையாளர்களை நினைக்க வைக்கிறார்கள்.
ஜாஜி தீவிரவாதத் தாக்குதலுக்கு ஒத்துழைக்காததால் அவரைக் கொடூரமாகக் கொல்கிறான் ரியாஸ். கொல்லும்போது, சிறு வயதிலிருந்தே உங்களின் பேச்சைக் கேட்டு வளர்ந்ததால்தான் இப்படி ஆகியிருக்கிறேன் என்று வசனம் பேசுகிறான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பார்களே அப்படியான எண்ணவோட்டத்தை அந்தக் காட்சி பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது. ஜாஜி கொல்லப்பட வேண்டியவர்தான் என்று எண்ண வைக்கிறது.
ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அப்துல்லா ரியாஸாக இருக்கக்கூடும் என்று நாம் நினைக்கும்போது, உண்மையான வில்லனை ரிவீல் செய்கிறார்கள். இர்ஃபான் அஹ்மது பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளருடைய மகன் கார்த்திக் தான் அந்த முக்கிய வில்லன். அவன் இந்துவாக இருந்து சிரியா சென்று முஸ்லிமாக மாறி பிறகு ஐஎஸ் தீவிரவாதியானவன். முஸ்லிம்கள் இந்துக்களை மதமாற்றம் செய்து தீவிரவாதிகளாக்குகிறார்கள் என்ற இந்துத்துவர்களின் தொடர் விஷமப் பிரச்சாரத்துக்கு வலுச்சேர்ப்பதாக இந்தப் பாத்திரம் அமைந்திருக்கிறது.
படத்தின் இறுதியில் கதாநாயகன் ஒரு என்ஐஏ உளவாளி என்பது தெரியவருகிறது. அவர் தன் உயிரையும் கொடுத்து சென்னையைக் காப்பாற்றுவதாகப் படம் முடிகிறது. இதற்கிடையில் நரேந்திர மோடி போன்ற கதாபாத்திரத்தையெல்லாம் கொண்டு வருகிறார்கள். அவரின் ஒப்புதலுடன் தீவிரவாதச் சதித் திட்டத்தை முறியடிக்க ஏவுகனை தாக்குதல் எல்லாம் நடத்தப்படுகிறது! இப்படித்தான் ஆடியன்ஸைக் குழப்பியடிக்கிறார்கள். இர்ஃபானைப் போன்ற ‘நல்ல முஸ்லிம்கள்’ நம்மைக் காப்பாற்ற வந்துகொண்டே இருப்பார்கள் என்கிற ரீதியில் என்ஐஏ உயரதிகாரி அஜய் தெவான் (கெளதம் மேனன்) வசனம் பேசி படத்தை முடித்து வைக்கிறார்.
இந்தத் திரைப்படத்தில் முஸ்லிம் அடையாளம் பிரச்னையாக்கப்படுவது குறித்து ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும், அடிப்படையில் இது ஒரு இஸ்லாமிய வெறுப்புத் திரைப்படம் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.