சனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்
மீனாட்சிபுரம் மதமாற்றத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற முனைவர் தொல். திருமாவளவன் தன் ஆய்வு குறித்து கடந்த 21.12.2018 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஆற்றிய உரை காணொளியாகவும் எழுத்து வடிவிலும் கீழே:
இஸ்லாத்தைத் தழுவினால் சாதியக் கொடுமையிலிருந்து விடுபட முடியும் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஓர் உண்மைதான். அப்படியானால் எதற்காக இந்த ஆய்வு என்கிற கேள்வி எழலாம். என் பெயருக்கு முன்னால் டாக்டர் பட்டம் போட்டுக் கொள்ளவேண்டும் என்கிற ஆசையில் இதைச் செய்யவில்லை. என்னுடைய அரசியல் களத்தில் எழுந்த பல கேள்விகளுக்கு விடை தேடவேண்டிய ஒரு தேவை.
மதிப்பிற்குரிய எஸ்.எம். பாக்கர் சொன்னதைப் போல ஒரு நிகழ்ச்சியிலே நான் ‘எனக்கு யானைக்குப் பிடிக்கும் மதம்தான் பிடிக்கும்’ என்று சொன்னது எந்த மதத்தினரையும் புண்படுத்தவேண்டும் என்பதற்காக அல்ல. புரட்சியாளர் அம்பேத்கர் தழுவிய மதமான பௌத்தத்தை நான் ஆதரித்தோ, பிறவற்றை எதிர்த்தோ பேசி அந்தக் கருத்தைப் பதிவுசெய்யவில்லை. பொதுவாக மதத்தின் மீது எனக்கொரு பார்வை இருந்தது. அதையே அன்றைக்கு எடுத்து வைத்தேன். அவர் சொன்னதுபோல அப்போது அரசியல் களத்திலே நான் சின்னஞ்சிறு பாலகன். அரிச்சுவடி கற்றுக்கொண்டிருந்த காலம். ஆகவே, மதங்களைப் பற்றிய அறிமுகமும் அனுபவமும் எனக்கு இல்லை. ஆனால் நான் உள்வாங்கிய கருத்துகளில் இருந்து, மதங்களின் மீது ஈடுபாடில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையிலே அந்தக் கருத்தைப் பதிவுசெய்தேன்.
அன்றைக்கு அந்தக் கூட்டத்தில் ஐயா வீரோட்டம் அடியார் அவர்களும் பெரியக்கா வீரபந்திரன் அவர்களும்கூட திருமாவளவன் இப்படிப் பேசியது வருத்தமளிக்கிறது என்கிற வகையில் சற்று உணர்ச்சிகரமாகவே பேசினார்கள். அதைத்தான் இங்கே பாக்கர் அவர்கள் நினைவுபடுத்தி, இந்த நீண்ட பயணத்தில் திருமாவளவன் எத்தகைய பக்குவத்தைப் பெற்றிருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
மக்கள்தான் நமக்குப் பாடம் புகட்டுகிறார்கள். மக்கள் களம்தான் நம்மைப் பக்குவப்படுத்துகிறது. இன்றைக்கு நான் மதங்களைக் குறித்து கொண்டிருக்கும் பார்வை அன்றைக்கு இல்லை. இன்று பௌத்தத்தையும் இந்துத்துவத்தையும் பற்றி கொண்டிருக்கும் பார்வைகூட அப்போது கிடையாது. இப்போது இஸ்லாத்தைப் பற்றிய எனது புரிதல், இந்த அளவுக்கு இஸ்லாமிய தோழர்களோடும் சமூகத்தோடும் நான் நெருக்கமாக இருப்பதற்கான வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. என்னுடைய புரிதலில் இருந்துதான் இந்த இணக்கம் உருவாகியிருக்கிறது.
2002ஆம் ஆண்டு நான் இந்த ஆராய்ச்சியைச் செய்யவேண்டும் என்று விரும்பினேன். அப்போது என்னுடைய நண்பர்களெல்லாம் இந்தத் தலைப்பில் ஆய்வு செய்ய உங்களுக்கு வழிகாட்டியே (Guide) கிடைக்கமாட்டார்கள். இதுவொரு சென்சிடிவான பிரச்சினை என்பதால் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றுகூட என்னிடம் சொன்னார்கள். நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை குற்றவியல் படித்தபோது எனக்குப் பேராசிரியராக இருந்தவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் கு.சொக்கலிங்கம். அவரோடு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த நேரத்தில் எனது விருப்பத்தைத் தெரிவித்தேன்.
அவருக்குச் சற்றுத் தயக்கம் இருந்தது. ஆனாலும், ஒரு சிறிய விவாதத்துக்குப் பிறகு தலைப்பை நாம் கடுமையாக வைக்காமல், அரசுக்கோ மற்றவர்களுக்கோ சங்கடம் ஏற்படாத வகையில் வைத்துக்கொள்ளலாம் என்றும் யோசித்து ‘பாதிக்கப்பட்டோரின் பார்வையில் மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்: ஒரு பார்வை’ என்று அவரே தலைப்பு தந்தார். எனது பேராசிரியர் இந்த ஆய்வுக்கு ஒப்புக் கொண்டதுதான் எனது முதல் வெற்றி.
மதம் மாறியவர்களின் பார்வைதான் இங்கு ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றது. இது சர்வே அல்ல. அதுபோல ஏற்கனவே நிறைய நடந்திருக்கிறது. ஒரு சமூகவியல் பற்றாளர் அங்கு சென்று அந்த மக்களைச் சந்தித்து ஆவணங்களைத் திரட்டி, நேர்காணல் செய்து ஒரு புத்தகத்தை எழுதிவிட முடியும். அங்கு வழிகாட்டி இருக்கமாட்டார். ஆராய்ச்சி முறை இருக்காது. வாய்மொழித் தேர்வும் இருக்காது. அப்படி நிறைய புத்தகங்கள் வந்துள்ளன.
அன்வர் பாலசிங்கம் என்பவர் கருப்பாயி என்கிற பெயரில் ஒரு நாவலே எழுதியிருக்கிறார். நான் முதன்முதலில் அங்கே தகவல் சேகரிக்கச் சென்றபோது, அந்த மக்கள் கருத்துரைக்க ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு இந்தப் புத்தகமே காரணம். அன்வர் பாலசிங்கம் என்பவர் எதிர்மறையாக இது குறித்து பதிவு செய்துவிட்டார். அதனால் ‘யார் யாரோ வருகிறார்கள்; பேட்டி எடுத்து எங்களுக்கு எதிர்மறையான கருத்தைப் பதிவு செய்துவிட்டுப் போகிறார்கள். நீங்கள் எந்த நோக்கத்தோடு வருகிறீர்கள்?’ என்கிற தயக்கம் அந்த மக்களிடம் இருந்தது. இதற்கு முற்றிலும் மாறாக நான் செய்தது கல்விப்புல ஆய்வு.
ஆய்வுக்காக நான் பதிவு செய்தவுடனேயே தொடர்ச்சியாக அங்கு ஆறு நாட்கள் தங்கியிருந்து அங்குள்ள மக்கள் அனைவரையும் சந்தித்திருக்கின்றேன். அதன்பிறகு அரசியல் சூழல்கள், தேர்தல், கட்சிப்பணி என இடைவெளி ஏற்பட்டது. சேகரித்த தகவல்களும் தொலைந்துபோய்விட்டது. ஒருகட்டத்தில் அந்த ஆய்வைத் தொடராமலேயே விட்டுவிட்டேன்.
ஒவ்வொரு முறையும் நான் புதுப்பித்துக்கொண்டே (renewal) இருந்தேன். ‘நீங்கள் இந்த ஆய்வைத் தள்ளிப்போட்டுக் கொண்டே செல்கின்றீர்கள். புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றீர்கள். இதுவே இறுதி. நீங்கள் இனி புதுப்பிக்க முடியாது’ என பல்கலைக்கழகத்திலிருந்து எனக்குக் கடிதம் அனுப்பிவிட்டார்கள். இனிமேல் தாமதிக்க முடியாது என்று மீண்டும் துரிதமாய் செயல்பட்டேன். மீண்டும் அங்கு சென்று மக்களைச் சந்தித்தேன். பத்திரிகைச் செய்திகள், புத்தகத் தகவல்கள், இஷாஅத்துல் இஸ்லாத்திலிருந்து பெற்ற தகவல்கள் என்பது இரண்டாம் நிலைத் தகவல்கள் (Secondary Sources). யார் மதம் மாறினார்களோ அவர்களையே நேரில் சந்திப்பதுதான் முதல் நிலை அடிப்படைத் தகவல்கள் (Primary Sources).
பொதுவாக ரேண்டம் சர்வே செய்வார்கள். இருநூறு குடும்பங்கள் என்றால் ஒரு முப்பது/ நாற்பது குடும்பங்களைச் சந்தித்து கருத்துக் கேட்பது. ஆனால் இந்தப் பிரச்சினை மிக முக்கியமானது என்பதால் சென்சஸ் நூறுவிழுக்காடு மக்களைச் சந்திக்க வேண்டும் என வழிகாட்டுப் பேராசிரியர் கூறினார். எனவே, இரண்டாவது முறையாக புது கேள்விப் பட்டியல் தயார் செய்தேன். 400 கேள்விகளை பேராசிரியர் 200 கேள்விகளாகச் சுருக்கித் தந்தார். ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து நேரில் அந்த கேள்விகளைக் கேட்டு எழுதவேண்டும். சிலர் இறந்துவிட்டார்கள், சிலர் ஊரைவிட்டு இடம் பெயர்ந்துவிட்டார்கள்.
உண்மையில், 200 குடும்பங்கள் மதம் மாறுவதற்கு முடிவு செய்தார்கள். ஆனால், 180 குடும்பங்கள்தான் மதம் மாறினார்கள். நான் சந்திக்க முடிந்தது 153 குடும்பங்கள். அங்கிருந்து அருகிலிருக்கும் மேக்கரையில் சில குடும்பங்கள் இருக்கின்றன. ஒரே கிராமத்தைச் சேர்ந்த மக்கள்தாம் அங்கு இருக்கின்றார்கள். நான் அங்கும் சென்று சந்தித்து புள்ளிவிவரங்களைத் திரட்டினேன். மேலோட்டமாக அந்த மக்களைச் சந்தித்து அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்று சொல்வது ஆய்வு அல்ல. இது அறிவியல் பூர்வமாக ஆய்வு (Scientific Study) செய்யப்பட்டது.
உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஆய்வுமுறை ஒன்று இருக்கிறது. புள்ளிவிவரங்களைச் சேகரித்து வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்து ஒப்பீடு செய்து இறுதி முடிவை எட்டுவது. ஏற்கனவே இருந்த உண்மையை அறிவியல் பூர்வமாக ஆய்வுக்கு உட்படுத்தி அதிலிருந்து கிடைக்கின்ற விடைகளின் மூலமாக அங்கு சமூக மாற்றம் நிகழ்ந்துள்ளது, சமூகத் தகுதி அவர்களுக்கு உயர்ந்திருக்கிறது என்று நாம் நிறுவியிருக்கின்றோம்.
அம்பேத்கரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் அம்பேத்கரைப் போல பௌத்தத்தைத் தழுவாமல் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்பது முக்கியமான வினா. அதுபோல, யார் மதம் மாறினாலும் உடனடியாகச் சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டு இவர்கள் பணத்திற்காக, பிரியாணிக்காக, வெளிநாட்டு வாழ்வுக்காக ஆசைப்பட்டு மாறிவிட்டார்கள் என்பதுதான். இவர்களை யாரோ தூண்டிவிட்டார்கள் என்பன போன்ற குற்றச்சாட்டுகள் வரும். அடுத்து, மதம் மாறியவர்கள் மீண்டும் பழைய மதத்திற்குத் திரும்பிவிட்டார்கள் என்பார்கள். இந்த வினாக்களுக்கு விடைகாண வேண்டும் என்பதற்காக நான் இந்த ஆய்வை மேற்கொண்டேன்.
இந்த ஆய்வு எளிய ஆய்வு அல்ல. அறிவியல் பூர்வமான ஆய்வு. இந்த ஆய்விற்கு வழிகாட்டியாக இருந்த சொக்கலிங்கம் அவர்கள் அகில உலக அளவில் புகழ்பெற்ற குற்றவியல்துறைப் பேராசிரியர். குற்றவியல்துறையில் ‘விக்டிமாலஜி’ எனும் புதிய கருத்தியலை உருவாக்கியவர். அகில உலக அளவில் அவர் பெயரில் விருதுகள் கொடுக்கின்றார்கள். இவர் பேராசிரியர் மட்டுமல்ல, துணைவேந்தர் இடத்திலிருப்பவர். நுட்பமான ஆய்வாளர். வரிவரியாகப் படித்தவர். இரவெல்லாம் உட்கார்ந்து பார்த்தவர். மிக நேர்மையானவர். ஓர் ஒழுங்கில் இயங்கிவருபவர். கட்டுப்பாடுடையவர். படிப்பதற்கு மட்டும் மூன்று மாதங்கள் கால அவகாசம் கேட்டார்.
அதன்பிறகே, ஆகஸ்ட் 24 அன்று வைவா (Viva) எனும் வாய்மொழித் தேர்வு நடந்தது. டெல்லியில் இத்தேர்வில் கலந்துகொண்டவர் நேஷனல் லா இன்ஸ்டிட்யூட்டின் ரிஜிஸ்டரார். இந்த ஆய்வு இருவருக்கு அனுப்பப்பட்டது. அதில் ஒருவர் டெல்லியைச் சேர்ந்த பாஜ்பாய். இவருக்கு தமிழும், இங்குள்ள சூழலும் தெரியாது. அவரிடம் அனுப்புவது இரகசியமாகத்தான் இருக்கும். அதனைப் படித்து அவர்கள் திருத்தம்செய்து கேள்விகள் எழுப்புவார்கள். நான் அரசியலில் இருப்பதை அறிந்த பாஜ்பாய் இரண்டுமுறை இதனைக் கூடுதல் கவனத்துடன் படித்ததாகக் குறிப்பிட்டார். மிகச் சிறப்பாக ஆய்வை மேற்கொண்டிருப்பதோடு, வைவாவிலும் சிறப்பாகப் பதில் சொல்லிருக்கும் இவர் முனைவர் பட்டம் பெறத் தகுதியானர் என்று அவர் அறிவித்தார். இதன் பின்னரே முனைவர் பட்டம் எனக்கு வழங்கப்பட்டது
நான் இஸ்லாமியச் சமூகத்தின் மீது பற்றுள்ளவன் என்று காட்டிக் கொள்வதற்காகவோ, இஸ்லாமியச் சமூகத்தை நான் சார்ந்திருக்கின்றேன் என்று இஸ்லாமியர்கள் என்னை அங்கீகரிப்பதற்காகவோ நான் இந்த முயற்சியை எடுக்கவில்லை. அத்தகைய தோற்றம் வந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாகவே இருந்தேன். ஏனென்றால், இது குறித்து விமர்சனங்கள் என்ற பெயரில் அவதூறுகளைப் பரப்புகின்றார்கள். இறுதியில் உண்மைதான் நிலைக்கும்.
அறிவியல் பூர்வமாகச் செய்த இந்த ஆய்வில் நான் கண்ட உண்மை, இஸ்லாம் அந்த மக்களுக்கு ஒரு சமூக சமத்துவத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை வெறும் வார்த்தையாக இல்லாமல் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நிறுவியிருக்கின்றேன்.
அறிவியல் பூர்வமாகச் செய்த இந்த ஆய்வில் நான் கண்ட உண்மை, இஸ்லாம் அந்த மக்களுக்கு ஒரு சமூக சமத்துவத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை வெறும் வார்த்தையாக இல்லாமல் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நிறுவியிருக்கின்றேன். மீண்டும் பழைய மதத்திற்குத் திரும்பியிருக்கின்றார்கள் என்ற கூற்று உண்மையல்ல. மதமாற்றத்திற்காக சற்றேறக்குறைய இருபது ஆண்டுகள் முயற்சித்திருக்கின்றார்கள். நீண்ட காலமாக இருந்த சாதிய இழிவு அதற்கு முக்கியக் காரணம்.
எல்லாப் பிரச்சினைகளிலும் அடிப்படைப் பிரச்சினை (Basic Factor), முதன்மைப் பிரச்சினை (Primary Factor) என இரு கூறுகள் உண்டு. சாதி, பொருளாதாரம், நாடு, சுற்றுச் சூழல், குடும்பம், தனிநபர் பிரச்சினை என்பது அடிப்படைப் பிரச்சினை. இது எல்லா இடங்களிலும் இருக்கின்றது. ஆனால், மீனாட்சிபுரத்தில் மதம் மாறுவதற்குத் தூண்டிய முதன்மைப் பிரச்சினை எது? சாதியின் பெயரால் ஏற்படுகின்ற இழிவு. சாதியின் பெயரால் நிகழ்த்தப்படுகின்ற வன்கொடுமைகள் எல்லா கிராமத்திலும் இருப்பதைப்போல் மீனாட்சிபுரத்திலும் இருந்தது. இது அடிப்படைப் பிரச்சினை.
ஆனால் இவர்களின் சிந்தனை மாற்றத்திற்கு வித்திட்டது எது? தனிநபர்கள் அங்கும், அதன் சுற்றுவட்டாரத்திலும் அவ்வப்போது மதம் மாறியிருக்கின்றார்கள். ஆனால், இந்தக் கிராமத்தில் ஒரே நேரத்தில் 200 குடும்பங்கள் மதமாறவேண்டும் என்ற முடிவு எந்த அடிப்படையில் வந்தது என்பதுதான் முதன்மைப் பிரச்சினை (Primary Factor).
இங்கு இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிட்டாக வேண்டும். தங்கராஜ் என்பவர் மறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். அங்கு சாதிப் பிரச்னை எழுகிறது. ஒருவரை மட்டுமே குறிவைக்காமல் ஒட்டுமொத்த கிராமத்தையே குறிவைப்பார்கள். இதுதான் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தனிநபர் தவறிழைத்தால் அவர்மீது புகார் கொடுக்கலாம். குற்றம் சாட்டலாம். ஆனால், இந்தியக் கட்டமைப்பு எப்படியென்றால் ஒரு தலித் இளைஞன் தவறு செய்துவிட்டால் அவனை மட்டும் அவர்கள் தாக்குவது கிடையாது. அந்தச் சேரியையே அடித்து துவம்சம் செய்துவிடுவார்கள்.
தங்கராஜ் பிரச்சினை அந்த ஊருக்கு ஓர் அச்சுறுத்தலாக மாறுகிறது. அது ஒரு காதல் திருமணம். அந்தப் பெண் சாராயம் விற்பவரின் மகள். அவள்தான் ஊற்றிக் கொடுப்பாள். தங்கராஜ் குடிக்கச் சென்றவர். அங்கு இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டிருக்கிறது. வெளியேறிச் சென்றுவிட்டார்கள். அவருடைய மைத்துனர் இன்னும் இருக்கின்றார். இவரை அவர் வெட்ட வரும்போது அவருடைய காலை இவர் வெட்டிவிடுகிறார். அவரையும் நான் சந்தித்துப் பேசினேன். பெண் பிரச்சினை மட்டுமல்ல, நிலப் பிரச்சினை என்று சொல்கிறார்கள். தங்கராஜ் கேரளா மலபாரிலுள்ள பொன்னானிக்குச் சென்றுவிடுகிறார். அங்கு மதம்மாறி யூசுஃபாகத் திரும்பிவருகிறார். மேக்கரைக்கு வருகிறார். அங்கு திருவாவடுதுறை ஆதினத்துக்குச் சொந்தமான இடத்தில் மக்கள் விவசாயம் செய்து பிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அங்கு ஒரு நிலம் சார்ந்த பிரச்சினை எழுகிறது.
ஆதினத்துக்குச் சொந்தமான 300 ஏக்கர் நிலம் இருக்கிறது. 1000 ஏக்கர் என்றும் சொல்கிறார்கள். திருவாங்கூர் மகாராஜா அந்தக் காலத்தில் திருவாவடுதுறை ஆதினத்திற்குத் தந்திருக்கின்றார். மகராஜாவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதற்கு மருத்துவம் செய்ததனால் அதற்குப் பகரமாக நிலத்தை அளித்ததாகச் சொல்கிறார்கள். மற்றவர்களும் அங்கு உழுது பயிர் செய்கிறார்கள். 29 ஏக்கர் நிலம் அங்கு தலித்களிடம் இருக்கிறது. இடம் லீசுக்கோ, இல்லை கைமாறியோ வந்திருக்கிறது. கேரளாவைச் சார்ந்த நிக்கோடஸ் கட்டுப்பாட்டில் இந்த நிலம் இருந்திருக்கிறது. அலெக்ஸாண்டர் இவருக்குக் கீழுள்ள மேலாளர். ஒருகட்டத்தில் நிக்கோடஸிடமிருந்து ராதாகிருஷ்ண ரெட்டியிடம் இந்த நிலம் மாறுகிறது. ரெட்டி இடத்தைக் காலி செய்யச் சொல்லும்போது அலெக்ஸாண்டர், மக்களை (யூசுஃப் உட்பட) ஒன்றுதிரட்டி எதிர்ப்பு தெரிவிக்கின்றார்.
ஏனெனில், 50 ஆண்டுகளாகச் சும்மா இருந்த தரிசு நிலங்களை வளம் கொழிக்கும் நஞ்சையாக மாற்றியிருக்கின்றார்கள். அருமையான, வளமான பகுதியாக அது இருக்கிறது. ரெட்டி பார்வதியாபுரத்தைச் சேர்ந்த இரண்டு மறவர்களை அவரது பண்ணை வீட்டிற்குப் பாதுகாப்புக்காகப் போடுகிறார். அவர்கள் மூலமாக இவர்களை அப்புறப்படுத்துவதற்கான வேலைகளைத் தீவிரப்படுத்துகிறார்கள். மோதல் முற்றுகிறது. ஒரு கட்டத்தில் பாதுகாப்புக்காக இருந்த இருவரும் காணாமல் போய்விடுகிறார்கள்.
காவல்துறை கவனத்திற்குச் செல்கிறது. இருவரும் கொல்லப்பட்டு ஆற்றின் அருகே பிணமாகக் கண்டெடுக்கப்படுகின்றார்கள். அப்போது அங்கு எஸ்.பியாக இருந்தவரும், டி.எஸ்.பியாக இருந்தவரும் தலித்கள்தாம். இன்ஸ்பெக்டராக இருந்தவர் மறவர். ஐ.ஜியாக இருந்தவரும் மறவர். இந்தக் கொலையில் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்கிறார்கள். இதில் 6 பேர் தலித்கள். யூசுஃபும் இதில் அடக்கம். எட்வர்ட் ராஜன் என்ற வழக்கறிஞரும் குற்றம்சாட்டப்படுகிறார். 11 பேரையும் காவல்துறை தேடுகிறது.
பொதுவாக ஒரு தலித் மீது நடவடிக்கை எடுப்பதென்றால் போலீஸ்காரர்கள் எவ்வளவு ஆவேசம் காட்டுவார்கள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இன்ஸ்பெக்டர் அவர்களிடம் ‘மறவனை வெட்டும் அளவுக்கு உனக்குத் துணிச்சல் வந்துவிட்டதா?’ என்று சொல்லியே அடித்துள்ளார். மனித உரிமை ஆர்வலர்கள் களத்தில் இல்லாத காலம் அது. சட்டவிரோதக் காவல் பற்றியயெல்லாம் விழிப்புணர்வு அன்றைக்கு இல்லை. காவல்துறை தலித்களை மிகக் கடுமையாக நடத்தியிருக்கிறது. ஒருமாதம் இருமாதம் உள்ளே வைத்து அடித்திருக்கின்றார்கள். ஒரு அம்மாவை ஐந்து நாட்கள் உள்ளே வைத்து அடித்திருக்கின்றார்கள். ஊருக்குள் சென்று யாரைவேண்டுமானாலும் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் ஆவேசம் காட்டியிருக்கிறார்கள். இது பெரும் மன உளைச்சலை அந்த மக்களுக்குக் கொடுத்திருக்கிறது. அப்போது தலித் இயக்கங்கள் இல்லாத காலம். 90களுக்குப் பிறகே அவையெல்லாம் வந்தன. அந்த ஊர்மக்கள் கூடி தங்களின் பாதுகாப்பின்மை பற்றி பேசியுள்ளார்கள். இஸ்லாமிய சபைகளை பலமுறை அணுகியிருக்கிறார்கள்.
1982ல் எ.எம். கான் என்பவர் நூல் எழுதியிருக்கின்றார். அதிலிருந்து இது குறித்த மேற்கோளை நான் எடுத்துக் காட்டியிருக்கின்றேன். மக்கள் பலவழிகளிலும் முயற்சி செய்கின்றார்கள். இஸ்லாமியத் தலைவர்களையும் சந்தித்து பேசியிருக்கின்றார்கள். தங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொள்ள நான்கு முறை முயற்சி செய்தும் அவர்கள் சரியான பதிலைத் தரவில்லை. அப்போதுதான், 1946ஆம் ஆண்டே மதமாற்றத்திற்கு இஷாஅத்துல் இஸ்லாம் சபை உதவியிருக்கின்றது என்ற தகவலைத் தெரிந்துகொள்கிறார்கள். படித்தவர்களும், வேலையில் இருப்பவர்களும் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுக்கின்றார்கள். இந்து மதத்தை விட்டு வெளியேறுவதற்கு அவர்கள் அம்மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்கிறார்கள். 1981 பிப்ரவரி மாதம் 19ஆம் நாள் மதம் மாறுகிறார்கள்.
அதற்கு முன்னர், 9ஆம் நாள் ஒரு கூட்டம் நடந்தது. ‘பள்ளன் என்ற இழிவு நீங்குவதற்கு இஸ்லாம்தான் வழி. என்னுடைய குழந்தைகளையும், என் பேரக்குழந்தைகளையும் இனி எவனும் பள்ளன் என்று அழைக்கக் கூடாது. அதற்காகத்தான் நாங்கள் இந்த முடிவை எடுக்கின்றோம்’ என்பதை அந்தக் கூட்டத்தில் தீர்மானம் செய்கின்றார்கள்.
அவர்களுடைய அடிப்படைப் பிரச்சினை சாதி இழிவு. முதன்மைப் பிரச்சினை காவல்துறையின் அத்துமீறல்.
திருநெல்வேலிக்குச் சென்று இஸ்லாத்தைத் தாங்கள் தழுவ வேண்டுமென்று இஷாஅத்துல் இஸ்லாம் அமைப்பை அணுகுகிறார்கள். இஸ்லாமியத் தலைவர்கள் இதனைத் திரைமறைவில் நிகழ்த்தாமல் எஸ்.சி., எஸ்.டி இயக்குநரை நேரடியாகச் சந்தித்து, ‘இந்த கிராமத்திலிருந்து எங்களுக்கு இதுபோன்ற கோரிக்கை வந்திருக்கின்றது’ என்று சொல்லி இதனை அதிகாரப்பூர்வமாக, வெளிப்படையாகவே செய்தார்கள். 1981 மே மாதம் 17ஆம் நாள் இது நடந்தது. முன்னாள் மக்களவை உறுப்பினராக அப்போதிருந்த ஏ.கே. ரிபாயி, ஹசீப் முஹம்மது, ஓய்வுபெற்ற டிஆர்ஓ ஜமால் முஹம்மது சாஹிப், எஸ்.எம். முஹையத்தீன் சாஹிப், கடையநல்லூர் எம்எல்ஏ.வாக இருந்த சாகுல் ஹமீது போன்றோரும் யூசுப் (தங்கராஜ்), உமர் ஷரீஃப் (துரைராஜ்), ராஜா ஷரீஃப் (ராஜேந்திரன்), காஜா முஹாய்யத்தீன் (கந்தசாமி) ஆகியோரும் முன்னணியில் நின்று இதனைச் செய்திருக்கிறார்கள்.
அவர்களுடைய அடிப்படைப் பிரச்சினை சாதி இழிவு. முதன்மைப் பிரச்சினை காவல்துறையின் அத்துமீறல். ஒரு பிரச்னை என்றால் காவல்துறைக்குச் செல்வோம். போலீசே சாதி அடிப்படையில் நடந்துகொண்டால் என்னவாகும்? இன்ஸ்பெக்டரும், அவருக்கு மேலிருந்த உயர் அதிகாரியும் மறவர் சமூகத்தினர் என்பதால் தமக்கு நீதி கிடைக்காது என்று மீனாட்சிபுரத்து மக்கள் கருதினர். எஸ்பியாகவும் டிஎஸ்பியாகவும் இருக்கும் இரு தலித் அதிகாரிகள் அம்மக்களின் பிரச்சினையைப் பொருட்படுத்தவே இல்லை. இது இந்தியா முழுக்க இருக்கின்ற சிக்கல். தலித்கள் அதிகாரிகளாக இருக்கும்போது ஒடுக்கப்படும் மக்கள் பாதிப்புக்கு ஆளானால், ஒன்று மெளனமாக இருப்பார்கள் அல்லது பாதிக்கப்பட்டோர் மீது அவர்களும் ஒடுக்குமுறையை ஏவுவார்கள். தங்களின் மேலதிகாரிகளுக்குத் தங்களை விசுவாசமாகக் காட்டிக்கொள்வதற்காக. இது ஓர் உளவியல் பிரச்சினை. இது தலித்களிடமும் இருக்கும், இஸ்லாமியர்களிடமும் இருக்கும். இதன் காரணமாக மேலதிகாரிகள் தங்களைக் கட்டம் கட்டிவிடக் கூடாது என்பதற்காக அவர்களே கூடுதலாக தலித்கள் மீது கடுமை காட்டுவார்கள்.
இப்படியான சூழலில்தான், 200 குடும்பங்கள் பட்டியலிடப்பட்டு திருநெல்வேலியிலிருந்த தென்னிந்தியா இஷாதுல் இஸ்லாம் அமைப்பிடம் வழங்கப்படுகிறது. 1981 பிப்ரவரி 19ஆம் நாள் நடந்த மதமாற்ற நிகழ்வின் முதல் செய்தியே ஒன்றரை மாதம் கழித்து, அதுவும் உருது இதழில் ஏப்ரல் 4ஆம் தேதி வெளிவந்தது. அதன்பிறகுதான் வெளி உலகிற்குத் தெரிந்தது. பண்பொழியில் ‘சுற்றுவட்டார இந்து சமுதாய வளர்ச்சி மன்றம்’ ஒன்றை உருவாக்குகின்றார்கள். சாமர்த்தியமாக அதற்கு துணைத்தலைவராக எஸ்சி சமுதாயத்தைச் சேர்ந்த சுப்ரமணியனை நியமிக்கின்றார்கள். இப்படி துணைத்தலைவரான பிறகும் அவர் முடிவெட்டச் சென்றபோது, அவர் எஸ்சி என்பதால் முடிவெட்ட மறுத்துவிடுகிறார்கள். இதுவும் நான் மேற்குறிப்பிட்ட நூலில் பதிவாகியுள்ளது.
மதமாற்றத்துக்கு ஒப்புக்கொண்ட இருநூறு குடும்பங்களில் இருபது குடும்பங்கள் மதம் மாறவே இல்லை. அதைத்தான் அந்த மக்கள் மீண்டும் இந்து மதம் திரும்பிட்டதாக அவதூறு செய்கிறார்கள்.
மதமாற்றத்துக்கு ஒப்புக்கொண்ட இருநூறு குடும்பங்களில் இருபது குடும்பங்கள் மதம் மாறவே இல்லை. அதைத்தான் அந்த மக்கள் மீண்டும் இந்து மதம் திரும்பிட்டதாக அவதூறு செய்கிறார்கள். அந்த இருபது குடும்பங்களும் ஏன் மாறவில்லை என்பதையும் கான் எழுதிய நூலின் வாயிலாக அறியா முடிகிறது. அந்த குடும்பங்களில் சிலருக்கு பக்கத்து கிராமங்களிலிருந்த அந்தச் சமூகத்தைச் சார்ந்தவருடன் திருமணம் நிச்சயமாகி இருந்தது. இப்போது மதம் மாறினால் திருமணம் தடைப்பட்டுவிடும் என்பதால் சிலர் மாறவில்லை. மற்றொரு காரணம், ஒருவேளை நாம் மதம் மாறிவிட்டால் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அந்த இடத்தின் குத்தகை உரிமை பறிபோய்விடும் என்ற அச்சத்தால் இவர்கள் பின்வாங்கி இருக்கிறார்கள். ‘இது மடத்துக்குச் சொந்தமான இடம். நீங்கள் மதம் மாறினால் இடம் உங்களுக்குக் கிடைக்காது’ என்று மிரட்டியதன் காரணத்தினால் சில குடும்பங்கள் தயங்கியுள்ளன.
பொதுவாக இஸ்லாமியச் சமூகத்திலுள்ள ஆண்களை அணுகுவது எளிது. பெண்களை எளிதில் அணுக இயலாது. இந்த ஆய்வில் பெண்களையும் பேட்டி காணவேண்டும் என்பதற்காக நாங்கள் சிறப்பு முயற்சி எடுத்தோம். அப்பொழுது ஒரு பெட்டிக்கடை வைத்துள்ள அம்மா, ‘நான் பள்ளிக்கூடம் போனதில்லை. ஆனா, ஆவன்னா தெரியாது. ஆனால், இப்போது குர்ஆன் படிக்கிறேன்’ என்று சொல்லி குர்ஆன் ஓதிக்காட்டினார்கள். ‘எனக்கு இது எப்படி வந்தது? எல்லாம் அல்லாஹ்வினால்தான்’ என்று கூறி பல விஷயங்களை எங்களோடு பகிர்ந்தார். சமூகத்தில் இஸ்லாம் தங்களை எப்படி மாற்றியிருக்கிறது என்றும் சொல்லிக் காட்டினார். அசல் முஸ்லிமாக அவர்கள் அங்கே அமர்ந்துப் பேசியது மகிழ்வளித்தது.
ஒரே வீட்டிலேயே மதம் மாறாதவர்களும் இருக்கின்றார்கள். மாமா முஸ்லிம், மச்சான் இந்து. அண்ணன் இந்து, தம்பி முஸ்லிம் என்று இருக்கின்றார்கள். கோவிலும் இருக்கிறது, மசூதியும் இருக்கிறது. ஆனால், அவர்களுக்குள் எவ்விதக் கருத்து மோதல்களும் இல்லை. ஒரு சிராய்ப்புகூட இல்லை. சிலருக்கு ரஹ்மத் நகராகவும், சிலருக்கு மீனாட்சிபுரமாகவும் ஒரே வாழிடமாகத்தான் அது இருக்கிறது.
மதமாற்றத்திற்கு அரபு நாட்டுப் பணம் காரணம் என்று எம்.ஜி.ஆர் எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுகிறார். அது சட்டப்பேரவையில் விவாதத்திற்கு வருகிறது. அப்போது அவை முன்னவராக இருந்த நெடுஞ்செழியன் ‘அரபு நாட்டுப் பணம் காரணம் அல்ல. சாதிக் கொடுமைகள்தாம் காரணம்’ என்று சொல்லி மறுத்ததும் சட்டமன்ற அவைக்குறிப்பில் பதிவாகி இருக்கிறது.
மதமாற்றம் நடந்த சமயத்தில் ஆரிய சமாஜம் இறங்கி வேகமாக வேலை செய்தது. அவர்களையும் நான் சந்தித்துப் பேசியிருக்கின்றேன். என்னுடைய ஆய்வில் உமர் ஷரீஃபின் நேர்காணலையும் இஸ்லாத்திற்கு மாறாமல் இன்னும் பிஷப்பாக இருக்கின்ற, பள்ளர் சமூகத்தைச் சார்ந்த எட்வர்ட் ராஜன் நேர்காணலையும் இணைத்திருக்கின்றேன். அந்தப் பகுதி மக்களுக்காகப் போராடுவதில் தென்காசி அருணாச்சலம், மறைந்த ஜட்ஜ் அசோக்குமார், வழக்கறிஞர் எட்வர்ட் ராஜன் ஆகியோர் முன்னணி வகித்தவர்கள். இதற்காக இவர்கள் மீது வேறு சில வழக்குகளை காவல்துறையினர் போட்டிருக்கின்றார்கள். கள்ள நோட்டு அச்சடித்ததாக வழக்குத் தொடுத்து நெருக்கடி கொடுத்துள்ளார்கள்.
10 அருந்ததியர் குடும்பங்கள், 25 மறவர் குடும்பங்கள், 280 பள்ளர் குடும்பங்கள் இருந்த அந்த பகுதியில் தலித் அல்லாதவர்களிடமும் நிலம் இருந்தது. தலித்கள் வாழிடம் தனியாகத்தான் இருந்தது. பண்ணை வேலைக்குச் சென்ற தலித் பெண்கள் மீதும் அங்கு பாலியல் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. அதுவும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. ஆனால், காவல்துறையின் அத்துமீறல்தான் முதன்மைக் காரணமாக இருந்திருக்கிறது. சாதிய வன்கொடுமைகள், அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி அங்கு தீவிரமான ஒடுக்குமுறைகளை நிகழ்த்தியது. அதில் முதலமைச்சர் உட்பட அந்த மக்களுக்கு எதிராக இருந்தார்கள்.
1980ல் பாஜக உருவாகிறது. அதற்கு முன் அது ஜனசங்கமாக இருந்தது. அப்போது எம்.பியாகவும் அதன் நிறுவனத் தலைவராகவும் இருந்த வாஜ்பாய் இங்கு வருகிறார். ஆர்ய சமாஜம், விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகள் ஒன்றுகூடி ஒரு யாகத்தை நடத்துகிறார்கள். (அப்போது இந்து முன்னணி இல்லை. மீனாட்சிபுரத்தின் தாக்கம்தான் இந்து முன்னணி போன்ற இந்துத்துவ அமைப்புகளின் உருவாக்கத்திற்கான காரணம்.) பண்பொழியிலிருந்து மீனாட்சிபுரத்திற்கு பேரணி நடத்தியுள்ளார்கள். இஸ்லாத்திற்கு மாறியவர்களை மீண்டும் மதமாற்றம் செய்ய முயற்சி செய்கிறார்கள். யாகத்தில் அருந்ததியர் குடும்பங்கள் கலந்துகொள்கின்றன. கோயில் கட்டித் தருகிறோம், வீடுகட்டித் தருகிறோம், பள்ளிக்கூடம் கட்டித் தருகிறோம், கழிப்பறை கட்டித் தருகிறோம் என்று ஆசை வார்த்தை காட்டினார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை . மீள் மதமாற்றத்திற்கான சூழல் அங்கு அமையவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களின் பார்வை எத்தகையது என்பதை ஆய்வு செய்வதற்காக எடுத்துக் கொண்ட இந்த முயற்சியால், இஸ்லாம் சமூகச் சமத்துவத்தை உறுதிப்படுத்தக் கூடிய அளவிற்கு ஆற்றல் வாய்ந்த ஒரு கோட்பாடாக இருக்கிறது என்கின்ற மிகத் தெளிவான நிலைப்பாட்டை என்னால் எடுக்க முடிந்திருக்கிறது. அதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. அன்று மதம் மாறியவர்களின் பிள்ளைகள் இன்று பிறப்பிலேயே முஸ்லிம்களாகத்தான் இருக்கின்றார்கள். அவர்களுடைய பேரப்பிள்ளைகளும் பிறப்பிலேயே முஸ்லிம்களாகத்தான் இருக்கின்றார்கள்.
பொருளாதார ரீதியில் அவர்கள் மேம்பட்டிருக்கின்றார்கள். இதைவிட சமூக மரியாதை அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பதுதான் அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல். மனப்பூர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் அவர்கள் சொல்வது, இன இழிவிலிருந்து எங்களுடைய பிள்ளைகள் விடுதலை பெற்றுவிட்டார்கள் என்பதுதான்.
உமர் ஷரீஃப் பண்பொழியில் ஒரு முக்கியமான இடத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டியிருக்கிறார். ‘நான் பள்ளராக இருந்திருந்தால் இதைக் கட்டியிருக்க முடியுமா? நான் பாயாக இருந்ததால்தான் இது முடிந்திருக்கிறது’ என்கிறார் அவர். ஆக, பொருளாதார ரீதியில் அவர்கள் மேம்பட்டிருக்கின்றார்கள். இதைவிட சமூக மரியாதை (Social Dignity) அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பதுதான் அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல். மனப்பூர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் அவர்கள் சொல்வது, இன இழிவிலிருந்து எங்களுடைய பிள்ளைகள் விடுதலை பெற்றுவிட்டார்கள் என்பதுதான். பணக்காரர்களாகவும் பாரம்பரிய முஸ்லிம்களாகவும் இருப்பவர்கள் இங்கே திருமண உறவு வைப்பார்களா என சிலர் கேட்பதுண்டு. அது எல்லாச் சமூகத்திலும் இருக்கும் ஒன்றுதானே! தலித்களுக்குள்ளேயே ஏழையாக இருப்பவர்களுக்கு பெண் தரமாட்டார்கள். தம் வீட்டுப் பிள்ளை நன்றாக வாழ வேண்டுமே என்தற்காக வசதி, வேலை என்பதையெல்லாம் பார்ப்பார்கள்.
மீனாட்சிபுரத்தில் மதரஸா வந்துவிட்டது. அரபி நன்றாக ஓதுகிறார்கள். அந்த மக்கள் முழுமையாக இஸ்லாமியச் சமூகமாக மாறியிருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் சந்தித்த சாதிக் கொடுமைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டிருக்கிறார்கள் என்பதுதான் இந்த ஆய்வில் நான் அறிவியல் பூர்வமாக நிறுவியிருக்கின்ற வரலாற்று உண்மை. இந்த ஒற்றைச் சம்பவத்தை வைத்து நீங்கள் மதமாற்றத்தை அறிவிப்பீர்களா என்று என்னிடம் கேட்டார்கள். இதற்கு ‘இன்ஷா அல்லாஹ்’ என்றுதான் பதில் சொல்ல முடியும்.
சனாதனத்தை அச்சுறுத்தக்கூடிய அளவிற்கு, பதற்றத்திற்குள்ளாகக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்ற ஒரு கோட்பாடு இஸ்லாம். அது அறிவியல் பூர்வமாகவும் மீனாட்சிபுரத்தில் நிறுவப்பட்டிருக்கிறது
புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவிய நிலையிலும் இந்த மக்கள் இஸ்லாத்தைத் தழுவியதற்குக் காரணம், இஸ்லாம் மட்டும்தான் சாதியை அறவே துடைத்தெறிகிறது. பழைய சுவடுகள், வடுக்கள், வலிகள் இல்லாமல் அடுத்தடுத்த தலைமுறை மகிழ்வாக சமூக அந்தஸ்தோடு வாழ்வதற்கு இஸ்லாம் வழிகாட்டுகிறது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள்.
அரிதாக அங்கு ஒருவர் இஸ்லாத்திற்கு மாறாமல் கிறிஸ்தவத்திற்கு மாறியிருக்கின்றார். 20 ஆண்டுகள் கிறிஸ்தவத்தில் இருந்து பின்னர் அவரும் கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்திருக்கின்றார். ராமையா என்பவர் ராஜையாவாக மாறி ராஜையா இப்ராஹீமாக மாறியிருக்கின்றார். இப்ராஹீம்தான் அந்தப் பள்ளியின் முதல் முத்தவல்லி. இருபது ஆண்டுகள் கிறிஸ்தவத்தில் இருந்து, அது மனநிறைவு அளிக்காத நிலையில் இஸ்லாமுக்கு மாறியிருக்கிறார். இது எனக்கு வியப்பாக இருந்தது. அந்த மக்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு, தொழில் புரியும் வாய்ப்பு எல்லாம் கிடைத்திருக்கிறது. அங்கே பெரும்பாலான வீடுகள் இப்போது கான்கிரீட் வீடுகளாகியுள்ளன. சமூக அந்தஸ்து அவர்களுக்குக் கிடைத்துள்ளது. இவையெல்லாம் என்னுடைய ஆய்வின் முடிவிலிருந்து பெறப்பட்டவை. இது குறித்து இன்னும் விரிவாகப் பேச முடியும். அதற்கு நேரமில்லை.
இவற்றையெல்லாம் நான் இஸ்லாமியச் சமூகத்தைத் திருப்திபடுத்தும் நோக்கில் சொல்வதாக எண்ணிவிட வேண்டும். எதார்த்தத்தில் இந்தச் சமூகக் கட்டமைப்பிலே இஸ்லாம் எந்த அளவுக்கு சாதியை ஒழிக்கும் மாமருந்தாக இருக்கிறது என்பதை உணர்த்த வேண்டியது என்னுடைய கடமையும்கூட. அப்படித்தான் இதனை நான் பார்க்கிறேன். இந்தியா முழுவதும் இருக்கின்ற இஸ்லாமியர்கள் இந்தியப் பூர்விகக் குடிகள்தாம். அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். அவர்கள் அரபுநாடுகளில் இருந்து வந்தவர்களல்ல. உண்மையில், இஸ்லாம் இந்திய மண்ணில் சனாதனிகளை அச்சுறுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் பத்து இலட்சம் பேரோடு பௌத்தத்தைத் தழுவினார். சனாதனிகளுக்கு அது வேதனையைத் தந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவர்கள் பதற்றப்படவில்லை. பத்து இலட்சம் பேர் மதம் மாறியபோதும் இந்தியாவில் பதற்றம் தொற்றிக் கொள்ளவில்லை. மீனாட்சிபுரத்திலே 180 குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவியதும் ஒட்டுமொத்த இந்தியாவே பதற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. சனாதனத்தை அச்சுறுத்தக்கூடிய அளவிற்கு, பதற்றத்திற்கு உள்ளாக்கக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்ற ஒரு கோட்பாடு இஸ்லாம். அது அறிவியல் பூர்வமாகவும் மீனாட்சிபுரத்தில் நிறுவப்பட்டிருக்கிறது என்று சொல்லி, வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.