மனிதனைப் பண்படுத்தும் மார்க்கம்
மனிதனின் விசித்திரமான ஒரு பண்பு, அவன் சக மனிதனுக்கு உதவவும் செய்வான்; அவன்மீது பொறாமை கொண்டு அவனுக்குத் தீங்களிக்கவும் முற்படுவான். அதிலும் அவன் தன்னை அண்மித்து இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீதுதான் அதிகம் பொறாமை கொள்வான். உறவும் நெருக்கமும் நட்பு பாராட்டக் காரணமாக இருப்பதுபோல பொறாமை கொள்ளவும் காரணமாகிவிடுகின்றன. நமக்கு உதவிசெய்யக்கூடிய அதே மனிதர்கள் ஒருசமயம் நம்மீது பொறாமை கொண்டு நமக்குத் தீங்களிக்கவும் முற்படலாம். இரண்டும் மனிதனின் பண்புகள்தாம். திருக்குர்ஆனில் எடுத்துரைக்கப்பட்டுள்ள ஆதமின் இரு மகன்களுடைய சம்பவமும் இறைத்தூதர் யூசுஃபின் சம்பவமும் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள்.
மனிதர்களிடம் காணப்படும் எதிர்மறையான அம்சங்களை மட்டும் நாம் பார்த்துக் கொண்டிருந்தால் எளிதில் நிராசையடைந்துவிடுவோம். வாழ்க்கை வாழ முடியாத அளவு நெருக்கடியானதாகிவிடும். எதிர்மறையான அம்சத்தின் தன்மைக்கேற்ப அதனைக் கண்டும் காணாமல் விட்டுவிடுவதில்தான் நன்மையிருக்கிறது. ஆனாலும் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட வியாபாரிகளிடம் மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அப்படிப்பட்டவர்களும் நண்பர்கள், நலன்விரும்பிகள் தோற்றத்தில் வெளிப்படத்தான் செய்வார்கள். ஒரு நம்பிக்கையாளன் ஒரே பொந்தில் இருமுறை கொட்டப்பட மாட்டான்.
பொறாமையோ காழ்ப்போ வெறுப்போ உச்சத்தை அடைந்துவிட்டால் அறிவு மழுங்கிவிடும். அவற்றைத் தணிப்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாகிவிடும். உறவினர்கள், உற்ற நண்பர்கள் என்றும் பாராமல் தங்களுக்கும் இழப்பு ஏற்படுமே என்பதையும் யோசிக்காமல் அவர்கள் தீங்கிழைக்க முற்படுவார்கள். மனித மனதில் நிகழும் இவ்வகையான கொதிநிலையை —அது ஏதேனும் ஒருவடிவில் வெளிப்பட்டாலே அன்றி— நம்மால் அறிந்துகொள்ள முடியாது. அவற்றினால் ஏற்படும் தீங்குகளிலிருந்து அல்லாஹ்விடம் மட்டுமே பாதுகாவல் தேட முடியும். அதனால்தான் திருக்குர்ஆன் நமக்குப் பின்வருமாறு அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருமாறு கற்றுத் தருகிறது:
“அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், இருள் பரவும்போது அதனால் ஏற்படும் தீங்கிலிருந்தும், சூனியக்காரர்களின் தீங்கிலிருந்தும், பொறாமைக்காரன் பொறாமைகொள்ளும்போது அதனால் ஏற்படும் தீங்கிலிருந்து நான் பாதுகாவல் கோருகிறேன்.”
யாரையும் முழுவதுமாக நல்லவர் என்றோ முழுவதுமாகக் கெட்டவர் என்றோ கூறிவிட முடியாது. நாம் நல்லவர் என்று நம்பும் சிலரிடமிருந்து வெளிப்படும் சின்னத்தனங்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம். நாம் தீயவர் என்று கருதும் சிலரிடமிருந்து வெளிப்படும் நற்செயல்கள் நம்மை ஆச்சரியப்படுத்தலாம். சில சமயம் நற்பண்புகள் மிகைக்கலாம். சில சமயம் தீய பண்புகள் மிகைக்கலாம். மனிதன் எந்தச் சமயத்தில் எப்படி மாறுவான் என்று யாருக்கும் தெரியாது.
இங்குதான் இஸ்லாம் செயல்படுகிறது. அது மனிதனின் தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்த அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறது. அவனுடைய தீய உணர்வுகளுடன் போராடும்படி அவனுக்குக் கட்டளையிடுகிறது. அது மனம் எல்லா வகையான உணர்வுகளும் பொங்குமிடம்தான் என்பதையும், ஒவ்வொன்றும் எல்லை மீறவே விரும்பும் என்பதையும் அவனுக்கு உணர்த்தி, அவற்றை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருப்பது என்பதற்கான சரியான வழிமுறைகளையும் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறது.
அது அவனது நற்பண்புகளை மெருகூட்டுகிறது. இயல்பாகவே நற்குணங்களைப் பெற்றிருப்பவர்கள் இஸ்லாத்தின் துணைகொண்டு இன்னும் பொலிவடைகிறார்கள். நற்செயல்களில் போட்டி போட்டுக் கொண்டு, முந்திக் கொண்டு செயல்படுங்கள் என்று அவர்களுக்கு ஆர்வமூட்டி அதனால் எந்த இழப்பும் ஏற்படாது என்று உத்தரவாதமும் அளிக்கிறது.
மார்க்கத்தின் களமே மனம்தான். மனதின் எண்ணங்கள்தான் செயல்களாக வெளிப்படுகின்றன. ஆகவே அது மனதில்தான் முதலில் செயல்படுகிறது. ஷைத்தானிய ஊசலாட்டங்களை, தீய உணர்வுகளை எதிர்த்துப் போராடிக் கொண்டேயிருக்கிறது. ஒருவனிடம் மார்க்கம் எந்த அளவு வலுவாக இருக்குமோ அந்த அளவு அவனிடமிருந்து நற்செயல்கள் வெளிப்படும். எந்த அளவு அது பலவீனமாக இருக்குமோ அந்த அளவு அவனிடமிருந்து தீய செயல்கள் வெளிப்படும்.
அது காரணமின்றி மனித மனதில் உருவாகும் பொறாமை, வெறுப்பு, குரோதம் போன்ற தீய உணர்வுகளை அடையாளம் காட்டி அவற்றின் பிடியிலிருந்து விடுபட வேண்டியதன் அவசியத்தை மனித மனதில் பதிய வைக்கிறது. அவை ஏற்படுவது இயல்புதான், அவற்றை அப்படியே விட்டுவைப்பதும் அவற்றின் அடிப்படையில் செயல்படுவதும்தான் தவறு என்பதை அவனுக்கு உணர்த்தி முதல்படியாக அவற்றின் பிடியிலிருந்து விடுபட அல்லாஹ்விடம் உதவிகோருமாறு அது அறிவுறுத்துகிறது:
“எங்கள் இறைவா! எங்களையும் நம்பிக்கைகொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக. எங்கள் உள்ளங்களில் நம்பிக்கையாளர்களைக் குறித்து எவ்விதக் குரோதத்தையும் ஏற்படுத்தி விடாதே. எங்கள் இறைவா! நீயே மிகுந்த பரிவுடையவனாகவும் இணையிலாக் கிருபையாளனாகவும் இருக்கின்றாய்.” (59:10)
நம்பிக்கையாளனின் மனதில் இவ்வகையான போராட்டம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இந்தப் போராட்டம்தான் அவனுக்கான சோதனையே. சாகும்வரை அவன் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டே தீர வேண்டும். அது நல்லெண்ணங்களுக்கும் தீய எண்ணங்களுக்கும் மத்தியில் நடக்கும் போராட்டம். அது மேலேழும்பி வரக்கூடிய தீய உணர்வுகளுக்கு எதிராக அவன் நடத்தும் போராட்டம். சில சமயங்களில் அவன் தடுமாறலாம். தடுக்கி விழலாம். ஆனாலும் அவன் அதே நிலையில் தொடர்ந்து நீடிப்பதில்லை. உடனே விழிப்படைந்துவிடுகிறான். அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுகிறான். செய்த தவறுகளுக்காக வெட்கப்பட்டு அவனிடம் மன்னிப்புக் கோருகிறான்.
“அவர்கள் ஒரு மோசமான காரியத்தைச் செய்துவிட்டால் அல்லது தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்டால் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து தம் பாவங்களுக்காக மன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு யார் அவர்களின் பாவங்களை மன்னிக்க முடியும்? அறிந்துகொண்டே தாம் செய்தவற்றில் அவர்கள் பிடிவாதமாக நிலைத்திருக்க மாட்டார்கள்.” (3:135)
இஸ்லாம் மனிதனை உள்ளபடியே அணுகுகிறது. அது அவனால் செயல்படுத்த முடியாத வெற்றுத் தத்துவங்களை அவனுக்கு அறிவுரைகளாக வழங்குவதில்லை. அவனால் செய்ய முடிந்த பொறுப்புகளையே அவன்மீது சுமத்துகிறது. எந்நிலையிலும் அது அவனைக் கைவிட்டுவிடுவதில்லை. அவன் பாவம் செய்துவிட்டு வெட்கப்பட்டு கூனிக் குறுகி நிற்கும்போது அவனை மேலும் மேலும் குற்றம் சாட்டாமல், அதுவும் நம்பிக்கையாளனின் ஒரு பண்புதான் என்று அவனுக்கு ஆறுதல் கூறி அவனை அரவணைத்துக் கொள்கிறது. அவன் எந்த நிலையில் சிக்கிக் கொண்டாலும் அவனை மீண்டும் சரியான திசையில் செலுத்த வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும்.
அது அவனது இயல்புகளுக்கேற்ப அவனை அணுகுகிறது. அவனால் யாரையும் வெறுக்காமல் பகைக்காமல் இருக்க முடியாது. அது வெறுப்பையும் பகைமையையும் உரிய இடத்தில் வைக்குமாறு அறிவுறுத்துகிறது. அது வெறுப்பையும் பகைமையையும் ஷைத்தானை நோக்கி, அவனுடைய தோழர்களை நோக்கி திருப்புமாறு கட்டளையிடுகிறது. ஷைத்தானை பகிரங்க விரோதியாக கண்முன்னால் நிறுத்துகிறது. அசத்தியவாதிகளை, அநியாயக்காரர்களை எதிரிகளாக அவனுக்குக் காட்டுகிறது.
எந்தக் கடிவாளமும் அற்ற, எந்த அறநெறிகளையும் வரையறைகளையும் பின்பற்றாத சுதந்திர மனிதன் மிக மிக ஆபத்தானவன். அவனது உணர்களைத் தணிப்பதே அவனது பிரதான நோக்கமாகிவிடும். அவனது மன இச்சையே அவனது கடவுளாக இருக்கும். சரியான மார்க்கத்தைக் கொண்டு தன்னைப் பண்டுத்திக் கொள்ளாத மனிதன் கொடிய விலங்காகிவிடுகிறான்.
நம்பிக்கையாளர்களும் மற்றவர்களும் இங்குதான் வேறுபடுகிறார்கள். நிச்சயம் நம்பிக்கையாளர்கள் —அவர்களின் நம்பிக்கை அவர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால்— வேறுபட்டே தீர வேண்டும். அவர்கள் தீய உணர்வுகளோடு, ஷைத்தானிய ஊசலாட்டங்களோடு இடைவிடாது போராடிக் கொண்டிருப்பதால் அவர்களிடமிருந்து மிகக் குறைந்த அளவே தீய செயல்கள் வெளிப்படும். அவர்களின் உள்ளத்தை ஆட்சி செய்யும் ஈமான் கண்காணிப்பாளனாக இருந்து அவர்களைச் சகதியில் விழுந்து விடாமல் பாதுகாத்துக் கொண்டேயிருக்கும். மனித மனதில் நிகழும் இவ்வகையான போராட்டத்தை, அதனை ஆட்சி செய்ய வல்ல சரியான மார்க்கத்தைக் கொண்டு மட்டுமே மனிதனால் எதிர்கொள்ள முடியும்.