நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

ஜனரஞ்சக நடையில் மாபெரும் தத்துவார்த்த விசாரணை – ‘திருமுகம்’ ஈரானிய நாவல்

Loading

திரில்லர், குடும்ப நாவல்களைப் போன்று ஜனரஞ்சக நடையில், மிகப்பெரும் தத்துவார்த்த விசாரணையை மேற்கொள்கிறது முஸ்தஃபா மஸ்தூரின் திருமுகம் நாவல். ஈரானிய திரைப்படங்களைப் போல் ஈரானிய நாவல்களும் சிறந்தவை என்பதை நிரூபிக்கும் திருமுகம் நாவல் ஈரான் அரசின் தங்கப் பேனா விருதைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நாவலின் பின்னட்டையில் குறிப்பிடப்பட்டிருப்பது போல் அறிவும் உணர்வும் கலந்த தனித்துவமான சமூக இயங்கியலொன்றை திடமான பாரசீகப் பட்டு நூல்களால் நெய்திருக்கிறார் முஸ்தஃபா மஸ்தூர். நாவலுக்கான இலக்கணத்தை மட்டுமல்ல, காதலுக்கான இலக்கணத்தையும் மீள் வரைவிலக்கணம் செய்வதனூடாக மனிதனையும் மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியில் ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.

நாவலில் கதா நாயகன் தன் ஆய்வுக்காக புகழ்பெற்ற பேராசிரியர் முஹ்சின் பாஷாவின் தற்கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியை மேற்கொள்கிறான். அதனூடாக நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்தே இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. நாயகனோ இறை நம்பிக்கை பலவீனமாக உள்ளவன். அவனைக் கைப்பற்றப் போகும் வருங்கால மனைவி சாயாஹ்வோ உறுதியான நம்பிக்கையுள்ளவள். யூனூஸ், அலீ, மஹர் தாது என்ற முக்கியக் கதாபாத்திரங்களோடு வேறு சிலரும் இருக்கும் இந்த நாவலின் முடிவை எப்படி ஆசிரியர் எடுத்துச் செல்லப் போகிறார் என்பது கணிக்க முடியாதபடி பல திருப்பங்களைக் கொண்டதாக இருப்பது அழகு. ஒன்றிரண்டு இடங்களில் வரும் தத்துவார்த்த விசாரணைகள் சற்றே அயர்ச்சியைக் கொடுத்தாலும் அவை நீளாதபடி கவனம் செலுத்தப்பட்டிருப்பது சிறப்பு.

தத்துவார்த்த பின்னணியில் சொல்லப்பட்ட ஒரு ஜனரஞ்சகமான பாரசீக நாவலை அறபி பிரதி வழியாகத் தமிழில் கொண்டு வருவது என்பது உண்மையில் மொழி பாண்டித்தியமும், நாவல் வரைவிலக்கணமும் தெரிந்த விற்பன்னராலே முடியும். ஏற்கனவே அதை கிரானடாவில் நிரூபித்த இர்ஃபான் இதிலும் மிக அழகாக வார்த்தைகளைக் கோர்த்து எழுதியிருக்கிறார். எழுதியிருக்கிறார் என்று சொல்வதை விட செதுக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். மொத்தத்தில் இது ஐயத்தையும் நம்பிக்கையையும் பற்றிய கதை. வேட்கையையும் தடுமாற்றத்தையும் பற்றிய கதை. காதலில் விழுதலையும் தொலைத்தலையும் குறித்த கதை. இது மனிதனின் கதை எனக் குறிப்பிடப்பட்டிருப்பது சாலப் பொருந்தும்.

ஆழமான செய்தியைக் கொண்ட ஜனரஞ்சக நாவல், அழகிய தமிழ்; ஒன்றிரண்டு தத்துவார்த்த விசாரணைகள் இன்னும் எளிமைப்படுத்தப்பட்டிருக்கலாம்.

🛒 ஆன்லைனில் ஆர்டர் செய்ய: https://www.commonfolks.in/books/d/thirumugam-iraniya-novel
📞 வாட்ஸ்அப்-ல் ஆர்டர் செய்ய: +91-7550174762 

Related posts

Leave a Comment