காஸாவின் மருத்துவமனைகளில்…
காஸாவின் கான் யூனுஸ் நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குஸாஆ கிராமத்தில் 1999இன் வசந்த காலத்தில் நான் பிறந்தேன். எனது குடும்பம் ஸலாமா என்ற கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டது. இது கடற்கரை நகரமான ஜாஃபாவிற்கு அருகில் உள்ளது. 1948இல் சியோனிச படைகளால் இங்கிருந்து எங்களின் குடும்பம் வெளியேற்றப்பட்டது. நகரின் மையப்பகுதியிலிருந்து தொலைவில் அமைந்துள்ள பச்சை வயல்களும் மலர்களும் நிறைந்த இக்கிராமம், இஸ்ரேல் மற்றும் காஸாவின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் பெரும்பான்மையினர் விவசாயம் மற்றும் பாரம்பரிய பொருட்களைச் செய்வதில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், நாங்கள் — மூன்று சகோதரிகள், ஒரு சகோதரன், நான் உட்பட ஐந்து குழந்தைகள் — நல்ல கல்வியைப் பெறுவதை எங்களின் குடும்பம் உறுதிப்படுத்தியது.
2008, 2012, 2014, 2021 என்று போர்களுக்கு மத்தியில் நாங்கள் வாழ்ந்தோம். சொந்த பூமிக்குத் திரும்பிச் செல்வதற்கான மிகப்பெரும் போராட்ட இயக்கத்தை (Great March of Return) 2018இல் இஸ்ரேலிய இராணுவம் வன்முறையால் ஒடுக்கியது. இப்போராட்டத்தின் முக்கியமான கேந்திரம் எங்கள் வீட்டிலிருந்து 350 அடி தொலைவிலிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண அமைப்பால் எங்களின் பள்ளிக்கூடம் நடத்தப்பட்டது. வேலிக்கு (எல்லை) அருகிலிருந்ததால் கவச வாகனங்களிலிருந்து வீசப்படும் குண்டுகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களிலிருந்து மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூடுகளால் எங்களின் வகுப்புகள் மணிக்கணக்கில் அல்லது சில சமயங்களில் நாள் கணக்கில் தடைப்படுவதுண்டு. அப்போதெல்லாம் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் அவர்களின் வாகனங்களில் எங்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வார்கள். எங்களின் சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலும் வேலிக்கு அருகிலுள்ள விவசாய நிலங்களில் அவர்களின் குடும்பத்தினருடன் வேலை செய்து கொண்டிருக்கும்போதுதான் அவர்கள் கொல்லப்பட்டனர். பள்ளிக்கூடத்தில் அவர்களின் காலி இடத்தில் மலர்களை வைத்து எங்களின் துக்கத்தை வெளிப்படுத்துவோம்.
2017இல் நான் பள்ளிக் கல்வியை முடித்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு நான் மாணவர் இயக்கத் தலைவராக இருந்தேன். காஸாவின் முதல் மார்பகப் புற்றுநோய் கருத்தரங்க ஒருங்கிணைப்புக் குழுவில் பணியாற்றினேன். மருத்துவ மாணவர்களின் கடன்களை அடைப்பதற்கான ஒரு பிரச்சாரத்தை ஒருங்கிணைத்தேன். என்னுடைய பல்கலைக்கழகம் இஸ்தான்புல்லிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் முதல் மாணவர் பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்படுவதற்கு வழிவகை செய்தேன். நான் கடந்த வருடம் (2023) எனது கல்வியை முடித்து எதிர்காலம்குறித்து திட்டமிடத் தொடங்கினேன். நண்பர்களும் அறிமுகமானவர்களும் நான் காஸாவை விட்டும் வெளியே சென்று கல்வி கற்று, அதன் பின் நாடு திரும்பி, பல குறைபாடுகளால் தவிக்கும் மருத்துவத் துறைகளில் ஒன்றில் வேலை செய்யுமாறு பரிந்துரைத்தனர். இங்கிலாந்தில் படிப்பதற்கு விண்ணப்பிக்க நான் தயாரானேன். (எனது சகோதரிகள் பல் மருத்துவம், மனோதத்துவம் மற்றும் ஊட்டச்சத்து துறைகளில் உள்ளனர். எனது சகோதரன் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார்). தொடர்ந்து திட்டமிட்டுக் கொண்டே இருப்பதுதான் காஸா மக்களின் அழகு. ஒரு இஸ்ரேலியப் படையெடுப்பு எங்களின் திட்டங்களை ஒன்றுமில்லாமலாக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். இருந்தபோதும் நாங்கள் நம்பிக்கையில் வாழ்ந்து, வளர்ந்து வந்தோம்.
இந்தப் போர் அனைத்தையும் மாற்றிவிட்டது. அக்டோபர் 8இல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் எங்களின் பகுதியில் கண்மூடித்தனமாகக் குண்டுகளை வீசியது. அவர்களைப் பாதுகாப்பு படைகள் என்று அழைப்பது பொருத்தமாக இருக்காது. அன்றைய தினத்தில் எங்களின் அண்டை வீட்டுக்காரரையும், அவரின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இடிபாடுகளுக்கு அடியில் நாங்கள் இழந்தோம். நானும், எனது பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் வேறுவழியின்றி நகரின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள பனீ சுஹைலா பகுதிக்குச் சென்றோம்.
காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள பெரிய மருத்துவமனையான நாசர் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் நான் தன்னார்வத் தொண்டராகப் பணிசெய்ய முன்வந்தேன். அங்கு நாங்கள் நோயாளிகளின் காயங்களின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப அவர்களை வகைப்படுத்தி ரத்தப்போக்கை நிறுத்துவது, காயங்களைத் தைப்பது, முறிவுகளைச் சரிசெய்வது, எக்ஸ் ரே மற்றும் மருத்துவச் சோதனைகளுக்கு அனுப்புவது என்று அவர்களுக்குச் சிகிச்சை அளித்தோம். எனது உறவினர்கள் வீட்டில் இடநெருக்கடி காரணமாகவும் மருத்துவமனையில் அதிக வேலைப்பளுவின் காரணமாகவும் நான் மருத்துவமனையிலேயே தங்கினேன். துண்டிக்கப்பட்ட கைகள், நொறுக்கப்பட்ட தலைகள், உரிக்கப்பட்ட தோல்கள், எரிக்கப்பட்ட முழு உடல்கள், துண்டாடப்பட்ட குழந்தைகள் எனக் காயங்களின் பல வகைகளை நாங்கள் கண்டோம்.
ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு நோயாளிகள் வந்ததாக எனக்கு நினைவில்லை. ஒவ்வொரு வான்தாக்குதலும் டஜன் கணக்கான மக்களைக் காயப்படுத்தியது. ஒருநாள் தலை காயம், இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு, பாதிக்கப்பட்ட நுரையீரலுடன் ஒரு கர்ப்பிணி வந்தார். அவர் மரணித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அனஸ்தீசியா இல்லாதபோதும் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஐசியூ மருத்துவர்கள் முடிவெடுத்தனர். பிறந்த அக்குழந்தை, குழந்தைகளுக்கான ஐசியூ பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டது. பத்து நாள்கள் போராட்டத்திற்குப் பிறகு அப்பெண்மணி மரணித்தார். வான் தாக்குதலில் அவரின் கணவனும் இறந்திருந்தார். அவர்களின் குழந்தை மட்டுமே தப்பித்தது.
அடையாளம் தெரியாத அளவிற்குச் சிதைக்கப்பட்ட நோயாளிகள் வருகை, ஒட்டுமொத்த குடும்பங்களில் குழந்தைகள் மட்டும் உயிர் பிழைத்திருப்பது, காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை கொண்ட ஒருவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மரணித்துக்கொண்டிருக்கும் மற்றொருவரை விட்டுவிடுவது … இவையெல்லாம் வழக்கமான நடவடிக்கைகளாக மாறின. அதே சமயம், குண்டுவெடிப்புகள் மற்றும் அவை மேற்கொள்ளப்பட்ட இடங்களைக் குறித்து அறிவதில் கவனமாக இருப்பது, நெருக்கமானவர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் தவிப்பது, அவசரச் சிகிச்சைக்கு வருபவர்களில் குடும்பத்தினரும் நண்பர்களும் உள்ளனரா என்ற அச்சத்தில் அவர்களை நோக்குவது என எங்களின் நாள்கள் நகர்ந்தன. பெரும்பாலும் அவர்களும் அதிலிருந்தனர். ஒருநாள் அதிகமான எண்ணிக்கையில் காயமடைந்தவர்கள் கொண்டு வரப்பட்டனர். அவர்களில் ஒருவர் எனது உறவினரான தாரீஃக்; குஸாஆவில் எங்களின் உறவினர். நான் அவருக்கு மருந்திட்டு, அவரின் பயங்களைப் போக்கி உறுதியளித்தேன். மறுதினம் ஒரு உயிரற்ற சடலம் கொண்டு வரப்பட்டது. இறப்புச் சான்றிதழை எழுதும்போது அது எனது கல்லூரி நண்பனும், மருத்துவமனையில் ஒன்றாகப் பணிபுரிந்தவனுமான அப்துர் றஹ்மான் என்பதை அறிந்துகொண்டேன். நான் அவரின் முகத்தைத் திறந்து பார்த்தேன். ராக்கெட்கள் ஏற்படுத்திய வடுக்கள் அதிலிருந்தன.
மருத்துவமனை தங்குமிடமாக மாறியிருந்தது. இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் கட்டடத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். மருத்துவமனையின் நடைபாதைகள், முற்றம், நோயாளிகளின் அறைகள் என எல்லா இடங்களிலும் அவர்கள் தங்கினர். கழிவறைகள் மற்றும் செல்போன்களை சார்ஜிங் செய்வதற்கு அவர்கள் வரிசையில் நின்றனர். எனது இரவு நேர பணியின்போது அவசரப் பிரிவிற்குச் செல்ல தூங்கிக் கொண்டிருக்கும் உடல்களைத் தாண்டி நான் செல்ல வேண்டியிருந்தது.
தினமும் மதியம் அரிசி சோறும் இரவில் பாலாடைக்கட்டியுடன் ஒரு துண்டு பிரட்டும் எங்களின் உணவாக இருந்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு பிரட் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. டின்களில் அடைக்கப்பட்ட பீன்ஸை நாங்கள் சாப்பிட்டோம். போர் தொடர்ந்து கொண்டிருக்க, அதிகமான மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அதிகமான மக்கள் இருந்ததால் தலையணை இல்லாமல் தரைகளில் நாங்கள் உறங்கினோம். இச்சூழலில் நோய்கள் பரவின. முதல் நாள் சுவாசக் கோளாறு, மறுநாள் வயிறு பிரச்சினை என்று மக்கள் எழுந்தனர்.
இதனிடையே எங்களின் விருப்பத்திற்குரியவர்களின் தேவைகளையும் நாங்கள் நிறைவேற்ற வேண்டியிருந்தது. வீட்டில் போதியளவு பிரட் இல்லை என்று மூத்த மகனான என்னை என் தாய் அழைப்பார். பிரட், தண்ணீர், சிலிண்டர் இவற்றைப் பெறுவதற்காக நான் பெரும்பாலும் எனது மருத்துவர் உடையுடன் வரிசையில் நிற்பேன். பனீ சுஹைலாவில் இருக்கும் எனது குடும்பத்தைச் சந்திப்பதற்காகத் தினமும் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் நான் செல்வேன். அவ்வாறான ஒரு வருகையின்போது எனது குடும்பத்தினர் தங்கியிருந்த கட்டடத்தின் மீது எஃப் 16 ராக்கெட்டிலிருந்து மூன்று ஏவுகணைகள் வீசப்பட்டன. அதிர்ஷ்டவசமாக அந்த ராக்கெட்கள் வெடிக்கவில்லை. ஆனால், நெருப்பு பற்றியதால் படிக்கட்டுகள் சிதிலமடைந்தன. மூன்றாவது மாடியிலிருந்து எனது மூன்று மருமகள்களையும் வீச, வெளியில் நின்ற அண்டை வீட்டினர் அவர்களைப் பிடித்துக் கொண்டனர். நான் அன்று அங்கிருந்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தினேன். நான் மருத்துவமனையில் இருக்கும்போது இச்சம்பவத்தைக் குறித்து கேள்விப்பட்டிருந்தால் உதவிசெய்ய முடியாத நிலையால் நான் முடங்கியிருப்பேன்.
போரின் நடுவே, லண்டனில் இரண்டு பல்கலைக்கழகம், ஸ்காட்லாந்தில் உள்ள அபர்தீன் பல்கலைக்கழகம் என மூன்று பல்கலைக்கழகங்களில் நான் முதுகலைப் பட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தேன். பிரிட்டன் துணை தூதரகத்தில் கல்வி உதவித்தொகைக்கும் விண்ணப்பித்திருந்தேன். நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேனா என்பதைத் தெரிந்துகொள்ள டிசம்பர் மாத குளிரில் வைஃபை சிக்னலுக்காகத் தெருவில் நான் உட்கார்ந்திருந்தது இப்போதும் என் நினைவில் இருக்கிறது. மூன்று பல்கலைக்கழகங்களிலும் நான் தேர்வு செய்யப்பட்டேன். எனது கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பமும் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், அதற்காகக் குறித்த காலத்தில் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும், நேர்முகத் தேர்விற்கும் செல்ல வேண்டும். (அதற்கான வாய்ப்புகள் எனக்கு இல்லாததால்) சில நாள்களுக்கு முன் எனது உதவித்தொகைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்த பின், டிசம்பர் 1 அன்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் வெறிபிடித்தது போல் செயல்பட்டனர். குண்டுவீச்சு அதிகமானதைத் தொடர்ந்து எனது பெற்றோர், உடன் பிறந்தவர்கள் மற்றும் உறவினர்கள் கான் யூனுஸிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பனீ சுஹைலாவில் உள்ள அனைவருமே இதே முடிவை எடுத்ததால் நகரம் நிரம்பி வழிந்தது. அவர்களுக்குத் தங்குவதற்கான இடத்தைத் தேடி நான் தோல்வியடைந்தேன். ஐந்து நாள்கள் ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் படுப்பதற்கும் போர்த்துவதற்கும் எதுவுமில்லாமல் அவர்கள் தரையில் உறங்கினர். அவர்கள் மிகக் குறைவாகவே உணவருந்தினர். கழிவறைகளின் வெளியே மக்கள் வரிசைகளில் நின்றனர். அடிக்கடி அங்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காகக் குறைவான தண்ணீரை அருந்தினர்.
இதனிடையே, அவசரப் பிரிவில் நோயாளிகளுக்குப் போதிய படுக்கைகளும் இல்லை. காயம்பட்டவர்களைக் கவனிப்பதற்குப் போதிய மருத்துவப் பணியாளர்களும் இல்லை. இடுபாடுகளுக்குக் கீழே சிக்கிய தனது மகனுக்காக ஒரு தந்தையின் அழுகுரல், தனது குழந்தையின் கரத்தை மட்டுமே மீட்க முடிந்த ஒரு தாயின் புலம்பல், மோசமான காயமடைந்து படுக்கையும் இல்லாமல் சிகிச்சை செய்வதற்கு மருத்துவப் பணியாளர்களும் இல்லாமல் தவிக்கும் ஒரு நோயாளியை நோக்கி ‘அவர் அமைதியாக மரணிக்கட்டும்’ என்று கூறும் மூத்த பணியாளர் … இந்தக் குரல்கள் எனது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன. ஆக்கிரமிப்பு படைகள் மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவப் பணியாளர்களைக் கைது செய்த பிறகு, மக்களின் காயங்களிலிருந்து புழுக்கள் வருவதை நான் கண்டுள்ளேன். நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தபோது, காயமடைந்தவர்களில் பெரும்பான்மையினரை இழக்கும் அதிகமான ஆபத்தை நாங்கள் எதிர்கொண்டோம். உரிய நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால் அவர்கள் பிழைத்திருப்பார்கள்.
நான் என்னை மிக மோசமாக உணர்ந்த தருணம் அது. மருத்துவமனையிலும் எனது குடும்பத்தின் முன்னும் நான் பலமில்லாதவனாக இருந்தேன். ஐந்தாவது நாளில், எனது பலவீனத்தின் உச்சக்கட்டமாக, எனது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. ஆபரேஷன் தளத்தின் ஒரு ஓரத்திற்குச் சென்று எனது குடும்பத்திற்கு ஒரு தங்குமிடத்தைத் தேடுவதற்காக எனது தொலைபேசியில் உள்ள எல்லா எண்களையும் அழைத்தேன். எனது ஒரு நண்பன் றஃபாவில் இருந்தான். ஐந்து வருடங்களாக நான் அவனிடம் பேசியதில்லை. அவனை அழைத்து நிலைமையை விளக்கினேன். எனது குடும்பத்தைத் தங்க வைப்பதற்குச் சம்மதித்தான். ஏனைய சில குடும்பத்தினரும் அவனுடன் இருப்பதால் நெருக்கடியின் காரணமாக என்னைத் தங்க வைக்க முடியாது என்று கூறினான். நான் மறுக்கவில்லை; எனது குடும்பம்தான் எனக்கு முக்கியம். பள்ளிக்கூட வளாகத்தில் தாக்குதல்களால் அவர்கள் கொல்லப்படலாம். அல்லது குளிர் அல்லது உணவு பற்றாக்குறையின் காரணமாக அவர்கள் மரணமடையலாம்.
ஆனால், என்னை விட்டுச் செல்வதற்கு எனது தாய் மறுத்துவிட்டார். தகவல் தொடர்பு முறைகள் சீர்குலைந்ததால் நான் அருகில் இருக்க வேண்டும் என்று அவர் நிர்ப்பந்தித்தார். மருத்துவமனையில் ஒரு மகனின் உடல்நலம்குறித்து அந்தத் தாய்க்கு நான் உறுதியளித்தேன். ஒரு தந்தைக்கு அவரின் பயத்திலிருந்து வெளியேற உதவி செய்தேன். நான் காப்பாற்றிய காயமடைந்த மக்கள் அங்கிருந்தனர். இவர்களை விட்டுவிட்டு எனது நண்பனின் வீட்டிற்கு அருகில் செல்வதா அல்லது பள்ளிக்கூட வளாகத்தில் எனது குடும்பத்தைவிட்டு நான் மருத்துவமனையில் இருப்பதா என்று முடிவெடுக்க வேண்டிய சூழலில் நான் இருந்தேன். நான் மருத்துவமனையை விட்டுச் செல்ல முடிவெடுத்தேன்.
நான் தற்போது றஃபாவில் உள்ள குவைது மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நான் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கிறேன். அதிகபட்சமாக ஒரு நாளில் குறுக்கீடுகள் நிறைந்த ஐந்து மணிநேரம் நான் உறங்குகிறேன். டின்களில் அடைக்கப்பட்ட உணவையே எப்போதும் சாப்பிடுகிறேன். எனக்குத் தசைப் பிடிப்பு ஏற்படுகிறது. எனது முதுகு வளைந்துவிட்டது. உதவிசெய்ய முடியாத அந்த கையறுநிலை இப்போதும் என்னை வாட்டுகிறது.
சிக்கல்களுடன் டயாலசீஸ் செய்ய வேண்டிய நோயாளி என்னிடம் வருகிறார். இன்சுலின் கிடைக்காததால் கோமா நிலையில் ஒரு நீரிழிவு நோயாளி வருகிறார். மருந்துகள் கிடைக்காததால் தனது மூளை வெடித்துவிடும் நிலையில் உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளி வருகிறார். மருந்து கிடைக்காததால் வலிப்பு நிலையில் ஒரு நரம்பியல் நோயாளி வருகிறார். ஒவ்வொரு இரவும் மூச்சுத் திணறலுடன் ஒரு ஆஸ்துமா நோயாளி வருகிறார். மின்சாரமோ, சிலிண்டரோ இல்லாத நிலையில் சமைக்கும்போதும் தண்ணீரைச் சூடாக்கும்போதும் வெளிவரும் புகையால் பாதிக்கப்பட்ட அவருக்கு இப்போது இன்ஹேலர் கிடைப்பதில்லை. இவர்களுடன், குண்டுவீச்சுகளால் காயமடைந்தவர்கள் நிரம்பி உள்ளனர்.
மருத்துவமனைகள் எங்களின் வீடுகளாக மாறியுள்ளன. நாங்கள் அவற்றின் கூரைகளின் கீழ் ஒன்று கூடினோம். அவற்றின் அறைகள் மற்றும் நடைபாதைகளில் உறங்கினோம். ஒவ்வொரு மூலையும் எங்களின் நினைவுகளால் நிரம்பியுள்ளது. தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களுக்கிடையே வேலை செய்வது, விழிக்கும்போதும் கண்களை மூடும்போதும் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்த உடல்களைக் காண்பது எனத் துன்பங்களுக்கு மத்தியில் இங்கு வாழ்வது எளிதல்ல. இவற்றைத் தாங்கிக்கொள்ள எங்களின் வலிமை அனைத்தையும் நாங்கள் திரட்ட வேண்டியுள்ளது. இந்த வலிமை எங்கிருந்து வரும் என்று தெரியவில்லை.
இந்தப் போர் எனக்கு என்ன செய்துவிட்டது? கனவுகள் நிறைந்த ஒரு மருத்துவப் பயிற்சியாளரிலிருந்து, இரவும் பகலும் நோயுற்றவர்களைக் காண்பது, நோயாளிகளின் மரணத்தை அறிவிப்பது, நான் நினைத்துக்கூடப் பார்க்காத அதிசிக்கலான கேஸ்களைப் பார்ப்பது என வேதனையை எதிர்கொள்ளும் ஒருவனாக என்னை மாற்றியுள்ளது. எனது எல்லாத் திட்டங்களும் காணாமல் போய்விட்டன. எனது தாய், தந்தை, சகோதரி மற்றும் சகோதரன் இன்னும் எனது நண்பனின் வீட்டில்தான் உள்ளனர். திருமணமான எனது சகோதரி அவளின் மூன்று பிள்ளைகளுடன் டென்டில் உள்ளார். ஆக்கிரமிப்பு படைகள் கான் யூனுஸ் நகரிலிருந்து வெளியேறும்வரை எங்கள் கிராமத்தின் நிலைகுறித்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் சமூக வலைத்தள கணக்குகளிலிருந்தே எங்களால் அறிந்துகொள்ள முடிந்தது. ஒரு விளையாட்டு போல் எங்களின் வீடுகள், தெருக்கள், விளையாட்டு மைதானங்கள், மற்றும் பள்ளிவாசல்களை அழிப்பதை ஆக்கிரமிப்பு படையினர் பெருமையடித்துக் கொண்டனர். இறுதியாக எங்களின் கிராமத்திற்குச் சென்றபோது, எங்களின் வீடு மற்றும் சுற்றுவட்டாரங்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, தரையோடு தரையாக்கப்பட்டு, வரைபடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதைக் கண்டேன். ஒரு கட்டடம் கூட விட்டுவைக்கப்படவில்லை.
எனது குடும்பத்திற்குத் தங்குவதற்கு ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பதே எனது இப்போதைய இலக்காக இருந்தது. எங்களின் வீட்டை மீண்டும் கட்டுவதற்காக இரண்டு மாதங்களுக்கு முன் கூட்டு நிதி திரட்டும் முயற்சியைத் தொடங்கினேன். ஆனால், துயரங்கள் என்னை அதிகமாக அழுத்துகின்றன. அக்டோபர் 17 அன்று அதிகமான எலும்பு முறிவுகள் கொண்ட ஒரு நோயாளியை எக்ஸ்-ரே எடுப்பதற்காக அழைத்துச் சென்றேன். ஒரு வீட்டை ஆக்கிரமிப்பு படைகள் தாக்கியதைத் தொடர்ந்து முப்பதிற்கும் அதிகமான காயமடைந்தவர்கள் வந்தனர். அல்அஹ்லி மருத்துவமனை எரிந்து கொண்டிருப்பதை மக்கள் கூட்டமாக நின்று தொலைக்காட்சியில் பார்ப்பதை நான் கண்டேன். நான் நிலை தடுமாறினேன். தரையில் விழுந்து ஒரு ஓரமாகச் சுருண்டு அழுது கொண்டிருந்தேன்.
அதன் பின் நாசர் மருத்துவமனை உட்பட காஸாவின் அதிகமான மருத்துவமனைகளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் தாக்குதல் நடத்தி, முற்றுகையிட்டன. மருத்துவமனையை ஆக்கிரமிப்பதற்கு முன், உள்ளே நகரும் அனைவரையும் ஆக்கிரமிப்பு படைகள் குறிவைப்பதாக எனது நண்பர்கள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு தொடங்கிய பின், மருத்துவர்கள் குறிப்பிட்ட இடங்களில் அடைக்கப்பட்டு, கட்டடத்தின் ஏனைய பகுதிகளில் உள்ள நோயாளிகளை அடைய முடியாமல் தடுக்கப்பட்டனர் என்பதை அறிந்து கொண்டேன். உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. வார்டுகளில் கழிவு நீர் நிரம்பி வழிந்தது. மின்சாரம் தடைப்பட்டது. ஒரு மருத்துவர் மற்றும் ஒரு மருந்தாளர் உள்ளிட்ட எங்களின் சக பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பின் அவர்களைக் குறித்து எதையும் நாங்கள் அறியவில்லை. எவ்வித மருத்துவச் சேவையும் வழங்க இயலாத சுகாதார ஆபத்தாக நாசர் மருத்துவமனை மாறியது.
போர் தொடங்கியதிலிருந்து காஸாவில் 485 மருத்துவப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 26 மருத்துவமனைகள் மற்றும் 62 சுகாதார மையங்கள் தற்போது சேவையில் இல்லை. பைத் லாஹியாவில் உள்ள இந்தோனேசியா மருத்துவமனை, ஜபாலியாவின் அல்அவ்தா, கான் யூனுஸ் நகரின் அல்அமல் மற்றும் காஸா நகரின் அஷ்ஷிஃபா மருத்துவமனை ஆகியவை இவற்றில் அடங்கும். அஷ்ஷிஃபா மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான சடலங்களை இராணுவம் பெரும் புதைகுழிகளில் விட்டுச் சென்றது. எத்தகைய ஆக்கிரமிப்பை நாம் எதிர்கொள்கிறோம்? குழந்தைகள், வயதான ஆண்கள், பெண்கள், காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் என்று யாரையும் அது விட்டுவைப்பதில்லை.
Source: In Gaza’s Hospitals, The New York Review, April 19, 2024
உமர் அந்நஜ்ஜார்
தமிழில்: ரியாஸ்