pakistan issue tamilகுறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

இம்ரான் கான் பதவி நீக்கம்: மகிழ்ச்சியில் சவூதி, யுஏஇ அரசுகள்

Loading

பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமர் பதவிலிருந்து விலக்கப்பட்டதை சவூதி அறபியா, ஐக்கிய அறபு அமீரகம் (யுஏஇ) மற்றும் மேற்குலக தீவிர வலதுசாரி சக்திகள் வரவேற்று மகிழ்கின்றனர். இந்த அறபு நாடுகள் தங்களை இஸ்லாம் நீக்கம் செய்துகொண்டிருக்கும் இச்சமயத்தில் இஸ்லாமுக்கு ஆதரவாக இம்ரான் கான் பேசுவதையும், முஸ்லிம் உலகில் அவருக்கு செல்வாக்கு அதிகரிப்பதையும் இவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

சவூதி அறபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான் தனது ராஜ்யத்தை இஸ்லாம் நீக்கம் செய்துகொண்டு, அதன் வெளியுறவுக் கொள்கையையும் அதற்குத் தோதுவாக அமைத்துக்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு அல்-அக்சா பள்ளிவாசலின் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தபோதும், கஸ்ஸா மீது அது குண்டு மழை பொழிந்தபோதும் அவை பற்றிய இஸ்ரேலியக் கதையாடலை வரித்துக்கொண்ட சவூதி ஊடகம், கூச்ச நாச்சமின்றி ஃபலஸ்தீனர்களைக் குற்றப்படுத்தியது. ஆனால் அந்தச் சமயத்தில் இம்ரான் கான் இஸ்ரேலின் அடக்குமுறையைக் கண்டித்தார்.

நபிகள் நாயகம் (ஸல்) குறித்து தவறாகச் சித்தரித்த கார்டூனை ஃபிரான்ஸின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் ஆதரித்துப் பேசியபோதும், அங்குள்ள முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவந்தபோதும் மேக்ரோனின் பக்கம் நின்றது ஐக்கிய அறபு அமீரகம். மட்டுமின்றி, அவ்வாறு சட்டங்கள் இயற்றப்படுவதற்கு தேசியப் பாதுகாப்புக் காரணம் இருப்பதாக வாதிட்டு அதை சரிகண்டது. அப்போதும் இம்ரான் கான் மேக்ரோனை விமர்சித்தார்; அவர் ஐ.நா.வில் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையில் இஸ்லாமோ ஃபோபியாவையும், அதை வளர்த்தெடுப்பதில் அரசுகளுக்கு உள்ள பாத்திரத்தையும் சுட்டிக்காட்டி கண்டித்தார்.

மலேசியாவில் கடந்த 2019ம் ஆண்டு முஸ்லிம் நாடுகளின் அரசியல் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் அறிஞர்களையும் கொண்டு மஹாதீர் முஹம்மது ஏற்பாடு செய்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பாகிஸ்தான், இந்தோனேசியா, துருக்கி, கத்தார் போன்ற நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சவூதி, யுஏஇ போன்ற சில நாடுகள் அதில் தவிர்க்கப்பட்டன. அந்த மாநாட்டில் பாகிஸ்தானும் இந்தோனேசியாவும் கலந்துகொண்டிருந்தால் உலக முஸ்லிம் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோரை அந்த மாநாடு பிரதிநிதித்துவம் செய்வதாக அமைந்திருக்கும். ஆனால் அன்றைக்கு சவூதி அறபியாவும் யுஏஇ-யும் அதைக் கண்டு பீதிக்குள்ளாகி, இம்ரான் கான் அதில் கலந்துகொள்வதைத் தடுத்து நிறுத்தின. அதற்காக தாங்கள் பாகிஸ்தானில் செய்துள்ள முதலீடுகளைத் திரும்பப் பெறுவோம் என்றும், பாகிஸ்தானியர்களைத் தம் நாடுகளிலிருந்து திருப்பி அனுப்புவோம் என்றும் கூறி இம்ரான் கானை மிரட்டின.

கஷ்மீர், ஃபலஸ்தீன் போன்ற விவகாரங்களில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பை (ஓஐசி) ஒரு நிலைப்பாட்டுக்குக் கொண்டுவர இம்ரான் கான் அழுத்தம் கொடுத்ததும் சவூதியையும் யுஏஇ-யையும் தொந்தரவுக்கு உள்ளாக்கியது. ஏனெனில், அவை இந்தியாவுடனும் இஸ்ரேலுடனும் நெருக்கமான உறவு பாராட்டுவதால் இவ்விரு நாடுகளையும் அவை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. இப்படி முஸ்லிம் விவகாரங்களிலிருந்து அவை தங்களை விலக்கி நிறுத்திக்கொண்டதோடு, தேச நலனிலிருந்தும் அந்த விவகாரங்களையெல்லாம் விலக்கி வைத்துப் பார்த்தன. ஆனால் அவை சார்ந்த பொதுமக்களின் கருத்துநிலையின் பக்கம் தொடர்ச்சியாக ஓஐசி-க்கு அழுத்தம் கொடுத்தார் இம்ரான் கான்.

ஐரோப்பாவின் தீவிர வலதுசாரிகளைப் பொருத்தவரை, இம்ரான் கானுக்கு முஸ்லிம் சமூகங்களிடையே அதிகரித்துவந்த செல்வாக்கும், தொடர்ச்சியாக இஸ்லாமோ ஃபோபியாவுக்கு எதிராக அவர் ஐ.நா.வில் செயல்பட்டதும் அவர்களை எரிச்சலடைய வைத்தன. இதன் காரணமாகவே பிரபல டச்சு நாட்டு இஸ்லாமோ ஃபோபியர் கீட் வில்டர்ஸ், “பிரதமரும் இஸ்லாமியத் தீவிரவாதியுமான இம்ரான் கான் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். தொலையட்டும். அவர் தீவிரவாத ஆதரவாளராகவும், சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானவராகவும் இருந்தவர்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

(அரசியல் விமர்சகர் சமீ ஹம்தியின் உரையைத் தழுவி எழுதப்பட்டது.)

Related posts

Leave a Comment