இந்து நாஜிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்!
“அவர்கள் எனைத் தேடி இன்னும் வரவில்லை, என் சகோதரனைத் தேடியும் இன்னும் வரவில்லை. அவர்கள் எனைத் தேடி வருவதற்குமுன் என் சகோதரனைத் தேடித்தான் வருவார்கள். எனவே, நான் என் சகோதரனைக் கொன்றுவிட்டேன். இல்லையென்றால், அவன் என்னைக் கொன்றிருப்பான்.”
மாபெரும் போதகர் நீமோலரின் சாகாவரம் பெற்ற அந்த வார்த்தைகளை1 இவ்விதம் அபத்தமாக உருச்சிதைப்பது ஏற்கத்தக்கது இல்லைதான். எனினும், இச்சந்தர்ப்பத்திற்கு அது மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது.
பாஜக-வும் சிபிஎம்-மும் ஒரே கருத்தை ஒரே குரலில் ஓலமிடும் விசித்திரத்தைப் பாருங்கள். “முஸ்லிம்களின் தலைமையில் நடத்தப்படும் பகுஜன் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்டையும் அதன் தாய் அரசியல் கட்சியான பாப்புலர் ஃப்ரண்ட்டையும் தடைசெய்யவேண்டும்!” என்பதே அவர்களின் ஓலம்.
கல்லூரிச் சுவரொன்றில் வரையப்பட்டிருந்த ஓவியத்தின் மீது எதிர்மறையான வாசகங்களைக் கிறுக்கியது தொடர்பாக எழுந்த தகராறில், இருபது வயதான எஸ்.எஃப்.ஐ. (SFI) மாணவச் செயல்பாட்டாளர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார். இதுவரை சுமார் இருநூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலரைக் கைது செய்வதற்கான போலீஸ் தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதையொட்டி, ஆளும் சிபிஎம்-மும் பாஜக-வும் ஓர் அரசியல் கட்சியைத் தடைசெய்யும்படிக் கோருகிறார்கள். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் புகழ்பெற்ற பேராசிரியர் பட்நாயக்கின் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றவரான கேரள நிதியமைச்சர் பேராசிரியர் ஐசக் ஜோசஃப், பாப்புலர் ஃப்ரண்ட் “துடைத்தழிக்கப்படும்” என்று உறுதிகூறுகிறார்.
இந்து நாஜிகளை எதிர்கொள்வதற்கு இந்தியக் கம்யூனிஸ்டுகளிடம் நிலையானதொரு உபாயம் இருக்கிறது. அதாவது, சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் இந்து நாஜிகள் இந்தியக் கம்யூனிஸ்டுகளுடன் இனி நட்பாய் இருக்கமுடியாது என்று மறுத்துவிட்டதையடுத்து, அவர்களை வீழ்த்துவதற்குத் தமக்கிருக்கும் ஒரே வழி, இந்து நாஜிகளைக் காட்டிலும் சிறப்பாக இந்து நாஜிசத்தைச் செயற்படுத்துவதுதான் என்று இந்தியக் கம்யூனிஸ்டுகள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தனியார்மயமாக்கத்தை ஆதரிப்பது, தொழிலாளர் வர்க்க அதிருப்திகள் திரண்டு ஒருங்கிணைக்கப்பட்ட போர்க்குணமாக மாறுவதைத் தடுப்பது, தலித்கள்-பகுஜன்கள் போன்ற பண்பாட்டு ரீதியில் கொள்கைவழிப்பட்ட, செயலூக்கமிக்க இந்து நாஜிச எதிர்ப்பாளர்களை அவதூறு செய்வது என்பவை தொடங்கி; அணுவாயுத ஒப்பந்த ஆதரவு, முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாத்துடன் தொடர்புடைய அனைத்தையும் திட்டமிட்ட வகையில் ஒதுக்குவது, இழிவுபடுத்துவது, கேவலப்படுத்துவது என்பது வரையுள்ள அனைத்தையும் கம்யூனிஸ்டுகள் தம்முடைய தலையாயக் கடமைகளாக ஏற்றுச் செயல்படுத்தி வருகிறார்கள். இது தவறாக நிகழ்ந்துவிட்ட ஒன்றோ, அல்லது அவர்களுடைய கொள்கையில் ஏற்பட்ட விலகலோ சமரசமோ அல்ல. இது அவர்களின் செயல்திட்டம்.
இந்து நாஜிகளின் வேலையை வேறு வழிமுறைகளில் நிறைவேற்றிக் கொள்வதுதான் இது என்று நீங்கள் நினைப்பீர்களென்றால், அதிலும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் இந்த வேலையை இந்து நாஜிகளை விடத் திறம்படவும், அதேவேளை குறைவான விமர்சனங்கள் மட்டுமே வரும் வகையிலும் செய்திட விரும்புகிறார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
நீங்கள் இதனை மேற்குவங்கத்தில் கண்டிருப்பீர்கள். கேரளத்திலும் இதனைக் காண முடியும். கம்யூனிஸ்டுகள் பாஜக-வின் பணியை அதனை விடத் திடமாகவும் செயலூக்கத்துடனும் செய்து கொண்டிருக்கிறார்கள்: முஸ்லிம்கள் -மத அடிப்படையில் மட்டுமின்றி வேறெந்தந்த அடிப்படையிலும் கூட- அமைப்பாகத் திரள்வதை அச்சுறுத்தித் தடுப்பதே அந்தப் பணி. இது அவர்களின் விடாப்பிடியான, இன்றியமையாத நடைமுறையாக இருந்து வருகிறது.
வாழ்வாதார வசதிகளுக்காக மனுஅளிப்பது முதற்கொண்டு அரசியல் கட்சிகள் தொடங்குவது வரை; அல்லது, ஏதேனுமொரு பொதுநிறுவனத்தில் கல்விசார் நிகழ்ச்சியை நடத்துவது என முஸ்லிம்களுடைய அமைப்புரீதியான முயற்சிகள் அனைத்துமே கம்யூனிஸ்டுகளின் பார்வையில் தீவிரவாத, அடிப்படைவாத நடவடிக்கைகள்தாம். குறைந்தபட்சம் அவ்வாறுதான் அவர்கள் அவற்றைச் சித்தரிகிறார்கள்.
ஆனால் இதே கம்யூனிஸ்டுகள் சதாம் ஹுசைனை வழிபடுவார்கள் (கம்யூனிஸ்டுகளை ஒழித்துக்கட்டும் கூலிப்படைக் கொலையாளியாகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர்தான் இந்த சதாம்), தாலிபான்களை ஆதரிப்பார்கள் (ஆஃப்கன் அதிபர் நஜிபுல்லாவை பொதுமக்கள் முன்னிலையில் வைத்துச் சித்திரவதை செய்து தூக்கிலேற்றியவர்கள் இந்தத் தாலிபான்கள்), ஹமாஸை ஆதரிப்பார்கள் -குறைந்தபட்ச விமர்சனம்கூட இல்லாமல்; மேற்கூறியவர்கள் அமெரிக்காவை எதிர்க்கும் வரை, அல்லது அமெரிக்கா அவர்களை எதிர்க்கும் வரை இந்தக் கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்கும்.
மேற்குவங்கத்தில் இடது முன்னணி தேர்தலில் தோற்றதற்கு அவர்களுடைய ஆணவமும், அரைச் சர்வாதிகார ஒடுக்குமுறையும், ஊழலும், கம்யூனிஸ்டு மதிப்பீடுகள் சரிந்து சந்தர்ப்பவாதம் பெருகியதும்தான் காரணமென்று பலரும் நம்புகிறார்கள். சிபிஎம்-மின் ஆட்சி பற்றிய இந்த மதிப்பீடு நிச்சயம் சரியானதுதான் என்றாலும், இது மட்டுமே முழுமையான விளக்கமாகாது. இடது முன்னணியின் தேர்தல் தோல்விக்கு முதன்மையான காரணம் மிக எளிய ஒன்று: அதாவது, மேற்குவங்கத்தின் முஸ்லிம்கள் இறுதியாக, சிபிஎம்-மின் அச்சுறுத்தலுக்கு இனியும் தாம் பணிந்துபோக முடியாது என்று முடிவெடுத்து அக்கட்சிக்கு வாக்களிப்பதை நிறுத்திக் கொண்டார்கள். ஏன் அப்படிச் செய்தார்கள்? சிபிஎம் ஒரு மதச்சார்பற்ற கட்சி இல்லையா? ஆம், சிபிஎம் ஒரு மதச்சார்பற்ற கட்சியாகத்தான் இருந்தது, இப்போதும் இருக்கிறது. ஆனால் அதன் மதச்சார்பின்மை இந்து வழியிலானது. இந்து உயர்சாதி வழியிலானது. முஸ்லிம் விரோதத் தன்மையிலானது.
அண்மைக்காலங்களில் மிகவும் பிரபலமான அரசு ஆய்வுக் கமிஷனாக அறியப்பட்ட ராஜேந்திர சச்சார் கமிஷன், முஸ்லிம்களின் சமூக-பொருளாதார நிலைமை குஜராத்தைக் காட்டிலும் மேற்குவங்கத்தில்தான் படுமோசமாக இருக்கிறது என்ற அதிர்ச்சிகரமான உண்மையைக் கண்டு வெளிப்படுத்தியது. ஆச்சரியம் ஆனால் உண்மை.
நாட்டிலேயே முஸ்லிம்கள் அதிகச் செறிவுடன் வாழும் மாநிலமான மேற்குவங்கத்தில் (அல்லது மேற்குவங்கத்தைச் சேர்ந்த) ஏதேனுமொரு முஸ்லிம் குறிப்பிடத்தக்க எந்தவொரு பதவியிலோ துறையிலோ இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். நான்கு தசாப்தங்களாக ஆண்ட இடது முன்னணி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்பு, முஸ்லிம்கள் அங்கு விளிம்புநிலையில் இருந்த ஒரு சமூகமாகவோ பண்பாட்டு ரீதியில் ஒதுக்கப்பட்ட ஒரு சமூகமாகவோ இருக்கவில்லை. ஆனால் இந்துக் கம்யூனிஸ்டுகள் முஸ்லிம்களை முழுவதுமாக ஓரங்கட்டி, அவர்களுடைய குரலை நசுக்கி, அவர்களை முற்றிலும் காணமால்போகச் செய்திருக்கிறார்கள். அதே சமயம், முஸ்லிம்களுக்கு எதிரான மதக் கலவரங்கள் என்று சொல்லப்பட்டவற்றையும் தீவிரமாகத் தடுத்துநிறுத்தினார்கள். அவர்கள் முஸ்லிம்களுடைய உயிர்களைக் காப்பாற்றினார்கள். ஆனால், கருத்து வெளிப்பாட்டிற்கான உரிமை உள்ளிட்ட அனைத்தையும் பறித்துக் கொண்டார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இந்துக் கம்யூனிஸ்டுகள் முஸ்லிம்களின் உயிர்களை அவர்களுக்கே திரும்ப விற்றிருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்குமேல் முஸ்லிம்கள் சிபிஎம்-மிற்கு வாக்களிக்க மறுத்ததும், தற்சமயம் வரை தமது அந்த முடிவில் உறுதியாக நிற்பதும் ஆச்சர்யத்துக்குரிய ஒன்றல்ல.
மேற்குவங்கத்தில் அக்கட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்தது என்ற ஒரு விசயம்தான் நாடெங்குமுள்ள நடுத்தரவர்க்க உயர்சாதியினர் மத்தியில் அதன் மீதிருக்கும் கவர்ச்சிக்கும் ஈர்ப்புக்குமான மூல காரணங்களில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. அனைத்து ஊடகங்கள் மற்றும் கல்விநிறுவனங்களிலும் அதன் முழு ஆதிக்கம் நிலவியதற்கும் இதனோடு தொடர்புள்ளது. சிபிஎம் கட்சியுடைய அதிகாரத்தின் மூல ஊற்று அதுதான். அந்த அதிகாரத்தை அது திரும்பப் பெறவேண்டுமென்றால், மீண்டும் முஸ்லிம்கள் சிபிஎம்-மிற்கு வாக்களித்தால்தான் முடியும். அதேபோல், நாட்டிலேயே தலித்கள் அதிகச் செறிவாக வாழும் மாநிலமும் மேற்குவங்கம்தான். சிபிஎம் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறவேண்டுமென்றால், தலித்களும் அதற்கு வாக்களிக்க வேண்டும். எனவே, சிபிஎம் தனது இயங்கியல் ஞானத்தின் அனுபவத்தில், முஸ்லிம்களை பயங்கரவாதிகள்/அடிப்படைவாதிகள்/மதவாதச் சக்திகள் என்பதாகத் தொடர்புபடுத்தி பாஜக-வை விட உரத்த குரலில் கூவிக் கொண்டிருக்கிறது. விளைவு, இந்தப் பண்புப் பெயர்கள் ‘முஸ்லிம்’ என்ற வார்த்தையின் இணைச்சொற்களாகி இருக்கின்றன. அல்லது ‘முஸ்லிம்’ என்பதன் கருத்துச் சாரமாகி இருக்கின்றன.
இவர்களுடைய அனுதாபிகளின் கரங்களிலும், சில இடங்களில் கட்சி உறுப்பினர்களின் கரங்களிலுமுள்ள ஊடகங்கள் இந்த விசயத்தில் தர்மசங்கடத்திற்கு உள்ளாகி, இதற்கு அதிக அழுத்தம் தருவதைத் தவிர்த்து வருகின்றன. பொதுவாக, முதிர்ச்சியற்ற ஆர்வக் கோளாறில் அந்தக் கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்யும் பொருட்படுத்தத் தகாத, தவறான ஏனைய விசயங்களை சிரமேற்கொண்டு பரப்புவதில் ஈடுபடுவது அந்த ஊடகங்களின் வழமை. தற்சமயம் சர்வ சக்திவாய்ந்த இந்து நாஜிகளும் கூடத் தமக்குரிய சொந்த ஊடக நிறுவனங்களை நிறுவி, ஊடகத் துறையில் இந்துக் கம்யூனிஸ்டுகளுக்கு உள்ள செல்வாக்கை மட்டுப்படுத்த தம்மாலான அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறார்கள். இந்திய ஊடகங்களில் நீங்கள் காண நேரும் இந்து நாஜிப் பிரச்சாரத் திரிபுகள் என்பவை, உண்மையில் அவர்கள் இடதுசாரிகளிடமிருந்து கற்றுக் கொண்டவைதாம். இங்கு நாம் விலைபோன, சரணடைந்த இடதுசாரிகளைப் பற்றிச் சொல்லவில்லை. இந்து இடதுசாரிகளின் கருத்துகளும் இதே விதமானவையே.
பல தசாப்தங்கள் தமக்கு விசுவாசமாக இருந்து அண்மையில் அந்நியப்பட்டுப் போய்விட்ட ஒரு சிறுபான்மை மதப் பிரிவை, எந்தவிதப் பிரதியுபகாரமும் செய்யாமல், மிரட்டியும் அவதூறு பேசியுமே தம் வசம் திரும்பக் கொண்டுவந்துவிட முடியும் என்றே சிபிஎம் அடிப்படையில் நம்புகிறது. ஒரு உபாயம் என்ற வகையில் இதுதான் அவர்களின் எண்ணமாக இருப்பின், அது தர்க்கத்திற்கும் இயல்பறிவுக்கும் முரணனானதாகத் தோன்றக் கூடும். ஆனால், முஸ்லிம் சமூகத்தினரின் கீழ்ப்படிதலையும் இணக்கத்தையும் கொடுங்கோலர்கள் ஏதோவொரு வழியில் பெற்றுவிடுகிறார்கள் என்பதையே வரலாறு நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. சிபிஎம் ஒரு விசயத்தை நம்புகிறது. பாஜக வளர வளர, அச்சத்தில் உறைந்துபோகும் முஸ்லிம்கள் எப்படியும் தனக்கு வாக்களிக்கும் கட்டாயத்திற்கு மீண்டும் உள்ளாவார்கள் என்று அது நினைக்கிறது.
தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருக்கும்போது அதிகார மமதை தோன்றுகிறது. எனவே, அதிகாரத்தில் இல்லாத நிலையில் எதிர்மறையான சூழல்களை எதிர்கொள்ளும்போது கட்சியிடம் அவசியமாக இருக்கவேண்டிய அடிப்படைக் கம்யூனிச அமைப்பாக்கத் திறன்கள் அதனிடம் மங்கிப் போகின்றன. எனினும், கேரளத்தின் நிலைமை சற்று வேறுபட்டது. கேரளத்தில் கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் குறிப்பிடத் தகுந்தளவு ஒடுக்கப்பட்ட சாதியினரும் பிற சிறுபான்மையினரும் இடம்பெற்றிருக்கின்றனர். அதோடு, நீண்ட பாரம்பரியம் மிக்க சமய நிறுவனங்களான மசூதிகள் மற்றும் தேவாலயங்களின் இருப்பை அங்கீகரிக்கும் பாங்கும் அங்கு நிலவுகிறது. இக்காரணங்களினால், சிபிஎம்-மின் வழக்கமான சர்வாதிகார வழிமுறைகள், கேரளத்தின் பெரும்பாலான பகுதிகளில் சற்று தளர்ந்தே காணப்படுகின்றன.
பல பத்தாண்டுகள் பழங்குடியினரை இனச் சுத்திகரிப்பு செய்து அழிவின் விளிம்பிற்குத் தள்ளிவிட்டு, அதைச் செய்ததற்காகப் பாராட்டு பெறுவதற்கு கேரளம் ஒன்றும் திரிபுரா இல்லை. முஸ்லிம்களையும் தலித்துகளையும் பூரணமாக ஒதுக்கிவிட்டு, மக்கள் தொகையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையினராய் உள்ள மூன்று சாதிகள் மட்டுமே அனைத்துத் துறைகளிலும் அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்க, அனைத்துப் பதவிகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, இது குறித்து எல்லோரும் பல தசாப்தங்களாகவே வாய்மூடி மௌனம் காத்தபடி இருக்க கேரளம் ஒன்றும் மேற்குவங்கம் இல்லை.
அது மட்டுமின்றி, கேரளத்தில் முஸ்லிம்கள் தமக்கென்று சுயாதீனமாகக் கட்சியொன்றை வைத்திருக்கிறார்கள். அதேபோல், தாம் எந்த அளவிற்கு இந்துமயமாகி இருக்கிறோம் என்று நிரூபிக்க ஓயாமல் முயற்சி செய்துகொண்டிருக்கும் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள முஸ்லிம் அமைப்புகளைப் போலல்லாமல், முஸ்லிம்களாக இருப்பதைத் தலைக்குனிவாகக் கருதாத இன்னபிற சிறிய முஸ்லிம் அரசியல், சமூக அமைப்புகளும் நிறுவனங்களும் கேரளாவில் பலமாக இருக்கின்றன. மேலும், உலகிலேயே அதிகம் கல்வியறிவு பெற்ற முஸ்லிம்கள் கேரளத்தில்தான் வாழ்கின்றனர் என்று சொல்லலாம்.
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கல்வி பெற்று அறிவுரீதியில் செழிப்பானதொரு சமூகமாகத் திகழும் கேரள முஸ்லிம்கள், தமக்கென்று சொந்தமாகக் கலாச்சார, சமய நிறுவனங்களையோ அரசியல் அமைப்புகளையோ வைத்துக் கொள்ளக் கூடாது என்று இந்துக் கம்யூனிஸ்டுகள் இப்போது வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். ஏன்?
“ஏனென்றால் அவர்கள் முஸ்லிம்கள். அத்துடன், அவர்களில் ஒரு பகுதியினரிடத்தில் வளைகுடாப் பணம் இருக்கிறது. அவர்களின் சுதந்திரமான இருப்பு, கம்யூனிஸ்டுகளின் பிடியில் இருக்கும் இந்து மக்களை ‘மதவாத’ கட்சிகளை நோக்கியும் முன்னுரிமைகளை நோக்கியும் திருப்பிவிட்டுவிடும். கம்யூனிஸ்டுகளின் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் இருக்கும் வரையில்தான் முஸ்லிம்கள் ஒழுங்காக நடந்துகொள்வார்கள்.”
‘முஸ்லிம்களாக இருந்து மனிதர்களாக மாறிய இடைநிலைக் கட்டத்தில் சிபிஎம் ஆற்றிய பாத்திரம்’ என்பது கனகச்சிதமான ஒரு பரிணாம வளர்ச்சிக்கான திட்டம்தான். (ஃப்ரெட்ரிக் எங்கெல்ஸ் எழுதிய ‘மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைக் கட்டத்தில் உழைப்பின் பாத்திரம்’ என்ற நூலின் தலைப்பை வாசிப்பதுபோல் இதனை வாசிக்கவும். – மொ.ர்.)
ஃப்ரெட்ரிக் எங்கெல்ஸ் அவர்களே, என்னை மன்னியுங்கள்! முடிக்கப் பெறாத அந்த மகத்தான நூலின் கையெழுத்துப் படிகளுக்கு நீங்கள் அத்தலைப்பைச் சூட்டவில்லை என்பதை நானறிவேன்.
கேரளாவில் எந்த ஒரு சமூகப் பிரிவினரையும் -குறிப்பாக இளைஞர்களை- அணிதிரட்ட வேண்டுமென்றால், இருபத்திநான்கு மணிநேரமும் பூரணமாகக் கண்காணித்துக்கொண்டும், எல்லாவற்றிலும் தலையீடு செய்துகொண்டும் இருக்கிற இரண்டு அதிபயங்கர சர்வாதிகாரச் சக்திகளை எதிர்கொண்டாக வேண்டும்: ஒன்று, இந்திய மாணவர் சங்கம் (SFI); மற்றது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI). இந்த “மார்க்சிஸ்டு” தொண்டர்களின் குணாதிசயங்களைப் பற்றி சிறு அறிமுகம் உள்ளவர்களுக்குக் கூடத் தெரியும், இவர்களில் ஒருவர் கூட கார்ல் மார்க்சின் கம்யூனிஸ்டு அறிக்கையைப் படித்திருக்க மாட்டார்கள்; ஆனால், அத்தனை பேரும் அதிகாரத் தொனியில், தமது பொலிட் பீரோ உறுப்பினர்களின் குரலில் பேசுவார்கள். தாம் மட்டுமே சரியானவர்கள் என்பதிலும், தமது அதிகாரம் நிரந்தரமானது என்பதிலும் அவர்கள் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை ஒரு தீவிர இஸ்லாமியவாதியையோ அல்லது இந்து நாஜியையோ கூட வெட்கித் தலைகுனிய வைத்துவிடும்.
இது ஒரு தீர்க்கமுடியாத முரண். சுயச்சார்புடன் பண்பாட்டு ரீதியில் அமைப்பாவதற்கும், அரசியல் ரீதியில் அணிதிரள்வதற்கும் முனையும் எந்தவொரு சிறுபான்மைச் சமூக அமைப்பாக இருந்தாலும் SFI-ன் சர்வ வியாபகமான அதிகாரப் பிடியை விட்டும், தெருக்களில் கொடுங்கோலாட்சி செய்யும் DYFI-யை விட்டும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இந்த இடத்தில்தான் முஸ்லிம் அமைப்புகள் அடிப்படையில் பலவீனமாக இருக்கின்றன. சிபிஎம்-மின் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளின் தொண்டர்கள் போல் அவர்கள் முழு வீச்சில் செயல்படுவது இல்லை. அவர்களுக்கு இருப்பதைப் போல் தேசிய அளவிலும் உலக அளவிலும் பிரச்சார வலைப்பின்னல்களோ, ஊடகங்களில் நண்பர்களோ தோழர்களோ இவ்வமைப்புகளுக்கு இருப்பதிலை. SFI மற்றும் DYFI அமைப்புகளின் சர்வாதிகாரப் பிடியை எல்லாக் களங்களிலும் எதிர்கொண்டு முறியடிப்பதற்குப் பதிலாக, அவ்வப்போது இப்படி வன்முறை மற்றும் கொலைச் செயல்களில் ஈடுபட்டு ஒரு குறுகிய வட்டத்துக்குள் ஒடுங்கிக் கொள்கிறார்கள்.
இந்த வகையில், அவர்கள் அரங்கேற்றிய அண்மைய சாகசச் செயலை எடுத்துக் கொள்ளுங்கள். SFI அமைப்பின் மாணவர் தலைவராகச் செயல்பட்ட இருபது வயது மட்டுமே ஆன மாணவர் ஒருவரை அவர்கள் கொலை செய்திருக்கிறார்கள். அவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இதற்கு முன்னர், ஒரு ஆசிரியரின் கையை வெட்டியிருக்கிறார்கள். முழு வீச்சிலான, தொழில்முறை தொண்டர் அமைப்பைக் கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபடுவதற்குப் பதிலாக, தம்மை நிறுவிக்கொள்ளும் நோக்கில் இத்தகைய சோம்பேறித்தனமான, தற்கொலைக்குச் சமமான உபாயமாக அமைந்துவிடக்கூடிய குரூர நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தமது பெயரைத் தாமே கெடுத்துக் கொள்கிறார்கள். அத்துடன் இவர்கள் அடிப்படைவாதிகள்-மதவாதச் சக்திகள் என்பதாகவும்; அதிதீவிர வஹாபி-சலஃபி நிதியுதவியால் தீவிரம்பெறும் ‘தேச விரோதச்’ சக்திகள் என்பதாகவும், இன்னும் பல விதமாகவும் தம்மை ஒடுக்குபவர்களாலேயே முத்திரை குத்தப்படுவதற்கான வாய்ப்பினையும் தாமே உருவாக்கித் தந்துவிடுகிறார்கள்.
ஆக, முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தப்படும் இத்தகைய பொறுப்பற்ற, குரூரச் செயல்களை சிபிஎம்-மும் அதன் முன்னணி அமைப்புகளும் அகில இந்திய அளவில், ஏன் உலக அளவில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். உலகமும் அவர்களை நம்புகிறது. எதிர்த் தரப்பினரைக் கொலை செய்வதை சிபிஎம் மட்டுமே ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருக்கிறது போலும். கேரள சிபிஎம் கட்சியும் அதன் முன்னணி அமைப்புகளும் செய்த எண்ணற்ற கொலைகளெல்லாம் ‘கம்யூனிசம்’ போலவும்; அவர்களுடைய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியவர்கள் செய்த சமயோசிதமற்ற, முட்டாள்தனமான கொலைகளெல்லாம் மதவாதம், பயங்கரவாதம் போலவும் சித்தரிக்கப்படுகின்றன.
அமைதிக்கு அழைப்பு விடுப்பதென்னவோ எளிதுதான், ஆனால் சாத்தியமற்றது. போதுமான அளவிற்குப் பலவந்தத்தைப் பிரயோகிக்காமல் மேற்குவங்கத்தில் சிபிஎம்-மைத் தோற்கடித்து வேரோடு பிடுங்கி எறிந்துவிட முடியுமென்று மம்தா பானர்ஜி கூட நம்புகிறார். இத்தவறான கொள்கை முடிவின் பலனாக அவர் கடுமையான பாதிப்பிற்கும் முடிவில்லாத அவதூறுகளுக்கும் ஆளாகி வருகிறார். சிபிஎம்-மின் மிருகத்தனமான அதிகார பலத்தை வன்மையுடன் எதிர்கொள்ளாமல் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தலித்துகளும் தமக்கான சுயேச்சையான அரசியலைக் கட்டியெழுப்புவதோ, பண்பாட்டு வெளிப்பாடுகளைக் கொண்டிருப்பதோ சாத்தியமே இல்லை.
சிபிஎம்-மின் குற்றங்களுக்குப் பழிவாங்க வேண்டுமெனும் நோக்கில், பலவீனமான சக விளிம்புநிலை மக்களைத் தாக்குவது முஸ்லிம் அமைப்பினரை கதாநாயகர்களாக ஆக்காது. பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்த எளிய சிறுவன் உயிர் வாழ்ந்திருந்தால், ஒரு பத்தாண்டுகளுக்கு உள்ளாகவே, இந்துக் கம்யூனிசத்திற்குள் ஒரு பழங்குடியினச் சிறுவனின் இடம் என்ன என்பதை உணர்ந்து, பகுஜன் அரசியலுக்கோ, அல்லது இந்துத்துவத்தால் பாதிக்கப்படுவோர் அனைவரின் ஒற்றுமையை வலியுறுத்தும் அரசியலுக்கோ திரும்பி வந்திருப்பான். கேரளத்தைப் பொறுத்தவரை இந்த அரசியலுக்குத் தலைமை தாங்குவது முஸ்லிம் சமூகம்தான்.
வன்முறை ரீதியில் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வழிமுறை அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று. இவ்விசயத்தில் அவர்களுக்கு வேறு தெரிவுகள் இல்லை. ஆனால், யாரை வன்முறை ரீதியில் எதிர்கொள்ளவேண்டும், யாரைக் குறிவைக்க வேண்டும் என்ற தெரிவு அவர்களின் கரங்களில்தானே இருக்கிறது. இந்துச் சர்வாதிகாரிகளுக்கு எதிரான போர்க்குணமிக்க போராட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை அரசியல் அறம் இது. இந்த விசயத்தில் அவர்கள் மிக மோசமாகத் தோற்றிருக்கிறார்கள், குற்றமிழைத்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
ஒரு அரசியல் கொலையைக் காரணம் காட்டி ஒரு மாணவர் அமைப்பையோ அரசியல் கட்சியையோ தடைசெய்வதற்கு நியாயம் கற்பிப்பதென்றால், ஒட்டுமொத்த நாட்டிலும் ஒரு கட்சி கூட சட்டபூர்வ அமைப்பாக நீடித்திருக்கத் தகுதிபெறாது. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் உள்ள ஐக்கிய ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (UDSF), ஐதராபாத் பல்கலைக் கழகத்தில் உள்ள அம்பேத்கர் மாணவர் கழகம் (ASA), ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (DSU), தேசிய அளவில் செயல்படும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) ஆகிய அமைப்புகளைத் தவிர இத்தகைய கொலைவெறி நடவடிக்கைகளில் ஈடுபடாத குறிப்பிடத்தகுந்த மாணவர் அமைப்பு ஒன்றுகூட நாட்டில் கிடையாது. இத்தகைய கோரிக்கையை எழுப்புவதே கூட ஆழ ஊறிய இந்துத்துவ மனநிலையின் வெளிப்பாடுதான்.
கூட்டாகச் சாராம்சப்படுத்தித் தண்டனைகள் வழங்குவது நவீன நீதிபரிபாலன முறைக்கு எதிரானது. குற்றம் புரிந்தவர்களையும், அதற்கு உடந்தையாக இருந்தவர்களையும், ஏன் அதைத் தடுக்க முயற்சிக்காதவர்களையும்கூடத் தண்டித்துக் கொள்ளுங்கள். ஆனால், ஒரு ஒட்டுமொத்தச் சிறுபான்மை மதப் பிரிவினரையே அரசியல் கட்சியாக இணையக்கூடாது என்று தடை விதிப்பதென்பது, ஏதேனுமொரு அல்லது சில தலித்துகளால் ஏற்படும் தொந்தரவுகளைக் காரணம் காட்டி (அவை உண்மையான தொந்தரவுகளாகவும் இருக்கலாம், அல்லது புனையப்பட்டவையாகவும் இருக்கலாம்) ஒரு ஊரைச் சேர்ந்த ஒட்டுமொத்த தலித்துகளையுமே கூட்டுப் படுகொலை செய்யும் இந்துக்களின் அதே மனநிலையைத்தான் பிரதிபலிக்கிறது.
ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர் அந்த ஒட்டுமொத்த சமூகத்தையுமே குறிப்பவர் என்ற கருத்தும், அவர்களில் ஒருவரது செயலுக்காக அந்த ஒட்டுமொத்தச் சமூகமுமே பொறுப்பேற்க வேண்டும் என்ற கருத்தும் இந்துத்துவத்திற்கும் இந்து நாஜிகளுக்குமே சொந்தமானது. ஒருபோதும் அது கம்யூனிசமாக முடியாது என்பதை இந்த இந்துக் கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்ள வேண்டும்; அல்லது நாம் அவர்களுக்கு அதைப் புரியவைக்க வேண்டும்.
கலந்துரையாடல்வழி கருத்துகளைச் செழுமைப்படுத்தியமைக்காக நண்பர்கள் உம்முல் ஃபாயிஸா, குரியகோஸ், அஷ்ரஃபுக்கு நன்றிகள் பல.
மூலம்: The Part Played By the Hindu Commies in the Transition from Muslims to Humans!
குறிப்புகள்:
1. மார்ட்டின் நீமோலரின் புகழ்பெற்ற கவிதை வரிகள் கீழே:
First they came for the Communists, and I did not speak out—
Because I was not a Communist.
Then they came for the Trade Unionists, and I did not speak out—
Because I was not a Trade Unionist.
Then they came for the Jews, and I did not speak out—
Because I was not a Jew.
Then they came for me—
and there was no one left to speak for me.